ஜப்பானும் இந்தியாவும் 'குவாட்' டை உறுதிபடுத்துவதை மீண்டும் வலியுறுத்துகின்றன

தி வயர் - தமிழில்: வெண்பா

ஜப்பானும் இந்தியாவும் 'குவாட்' டை உறுதிபடுத்துவதை மீண்டும் வலியுறுத்துகின்றன

டிரம்ப்பின் ஆசியப் பயணம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், குவாட் அமைப்பின் எதிர்காலம் குறித்து அமெரிக்கா தொடர்ந்து மௌனம் காத்து வரும் நிலையில், ஜப்பான் பிரதமர் சானே டகாய்சி, மோடியிடம் தொலைபேசியில் உரையாடினார். பிராந்தியத்தில் ஜப்பானின் யுத்தத்தந்திர நலன்களைப் பேணுவதற்கான வழிமுறையாக இந்திய-பசிபிக் கூட்டமைப்பிற்கு ஜப்பான் அளிக்கும் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் டகாய்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமரான பிறகு, இரு தலைவர்களும் நேற்று (29.10.2025) மதியம் தங்கள் முதல் உரையாடலை மேற்கொண்டனர்.

ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சக வெளியீட்டின்படி, ஜப்பானும் இந்தியாவும் "அடிப்படைக் கொள்கைகள் மற்றும் யுத்தத்தந்திர நலன்களைப்" பகிர்ந்து கொள்கின்றன என்று டகாய்சி மோடியிடம் கூறினார். ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா-அமெரிக்கா (குவாட்) மூலம் ‘சுதந்திரமான தடையற்ற இந்தோ-பசிபிக்’ பகுதியை உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றுவது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாதம் மோடி டோக்கியோவுக்கு சென்றபோது அறிவிக்கப்பட்ட “அடுத்த பத்தாண்டிற்கான ஜப்பான்-இந்தியா கூட்டுப் பார்வை”-யைக் குறிப்பிட்டுப் பேசிய டகாய்சி, பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு, புதுப்பிப்பு, மக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் போன்ற பலதரப்பட்ட துறைகளில் இந்தியாவுடனான கூட்டை ஜப்பான் மேலும் ஆழப்படுத்தும் என்று கூறினார். இந்திய-ஜப்பான் சிறப்பு யுத்தத்தந்திர மற்றும் உலகளாவிய கூட்டணியில் " ஒரு புதிய பொன் அத்தியாயத்தைத்" துவங்க - மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, டகாய்சியின் நியமனத்திற்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், "பல்வேறு துறைகளில் உறுதியான ஒத்துழைப்பை முன்னெடுப்பதன்" மூலம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

'X' தளத்தில் பதிவிட்ட மோடி, தங்களுக்குள் "அன்பான உரையாடல்" நிகழ்ந்ததாகவும், பொருளாதாரப் பாதுகாப்பு, தற்காப்பு ஒத்துழைப்பு, திறமையாளர்களின் பரிமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இந்திய-ஜப்பான் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதற்கான "பொதுவான பார்வை" குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்தார்.

"வலுவான இந்தியா-ஜப்பான் உறவுகள் உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு மிக அவசியம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.

டிரம்ப் தனது ஜப்பான் பயணத்தை முடித்த மறுநாள் இந்தத் தொலைபேசி அழைப்பு நிகழ்ந்தது. இது அவரது தற்போதைய ஆசியப் பயணத்தின் இரண்டாவது கட்டமாகும். அவர் தனது பயணத்தை கோலாலம்பூரில் ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சிமாநாடுகளில் தொடங்கினார். அதன்பின்னர், இரண்டு நாள் பயணமாக டோக்கியோவுக்குச் சென்று அங்கிருந்து ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்குப் புறப்பட்டார். வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உறுதி செய்வதற்காக தென் கொரியாவில் ஜின்பிங்குடன் டிரம்ப் ஒரு சந்திப்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசியாவில் டிரம்ப் பங்கேற்ற நிகழ்வுகள் முழுவதும், 'குவாட்' அமைப்பைப் பற்றி எந்தவொரு குறிப்பையும் வெளியிடவில்லை. இத்தனைக்கும், குவாட்டை மீண்டும் உயிர்ப்பிப்பதானது அவரது முதல் பதவிக்கால வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டங்கள் இருமுறை நடந்திருந்தாலும் – ஒன்று டிரம்ப்பின் பதவியேற்புக்குப் பிறகு ஜனவரியிலும் மற்றொன்று ஜூலையிலும் – அவரது வெளிப்படையான ஆர்வமின்மை தொடர்கிறது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருந்த குவாட் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள மோடி, டிரம்ப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார், ஆனால் இதுவரை அத்தகைய வருகை எதுவும் திட்டமிடப்படவில்லை. இது, டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் குவாட் அமைப்பும், பரந்த இந்தோ-பசிபிக் கூட்டமைப்பும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் இனி முக்கியத்துவம் பெறாமல் போகலாம் என்ற கவலைகள் இந்தியா, ஜப்பான் அரசுகளிடம் அதிகரித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸைச் சந்தித்தபோது, அப்போதும் குவாட் பற்றி வெளிப்படையாக எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, அந்த சந்திப்பு முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களுக்கான புதிய கூட்டணியில் கவனம் செலுத்தியது; ஆக்கஸ் (AUKUS) பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான தனது ஆதரவை டிரம்ப் அதில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அப்படியிருந்தும், டிரம்ப்பின் ஜப்பான் பயணத்தின்போது, டகாய்சி இந்தக் கூட்டமைப்பைப் பற்றி சொற்ப அளவிலான பொதுவான குறிப்புகளை மட்டுமே அளித்தார். ட்ரம்புடனான தனது இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது, “சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்தோ-பசிபிக்” என்பது தனது அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணாக இருக்கும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அந்த சந்திப்பு குறித்த ஜப்பானிய வெளியுறுத்துறை அமைச்சக வெளியீடு, சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்தோ-பசிபிக் கொள்கையின் கீழ், "ஜப்பான்-அமெரிக்கா-கொரியக் குடியரசு (ROK), ஜப்பான்-அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா-அமெரிக்கா போன்ற ஒத்த மனப்பான்மை கொண்ட பங்காளிகளுக்கு இடையேயான பிராந்திய வலைப்பின்னல்களை" வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/diplomacy/japans-takaichi-backs-quad-in-first-call-to-modi-amid-us-silence

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு