நாஜிமயமாக்கப்படும் இஸ்ரேல்

நாடற்றவர்களாக இருந்த யூதர்களை இன அழிப்பு போரின் மூலம் நாஜிக்கள் எங்களை நரவேட்டையாடியதால்தான், எங்களுக்கென்று தனியொரு நாடு உருவாக்கவேண்டும் என்ற தனியா வேட்கைதான் 1948ல் இஸ்ரேல் நாட்டை கட்டியெழுப்ப உந்துதலாக இருந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் இதே யூத-இஸ்ரேலிய அரசுதான் பலஸ்தீனத்தில் அடக்குமுறை முதல் ஆட்சிமுறை வரை நாஜிக்கள் வழியை வெட்கமின்றி அச்சு பிசகாமல் செயல்படுத்தி வருகிறது. இது பெரும்பான்மையான இஸ்ரேலிய மக்களின் ஆதரவுடனும், எவ்வித நிபந்தனையுமின்றி அமெரிக்காவால் வழங்கிவரும் ஆதரவுடனும், இருக்கக்கூடிய எல்லா நாஜி வடிவிலான படுகொலைகளையும் யூத அரசு செய்து வருகிறது. தமிழில் : விஜயன்

நாஜிமயமாக்கப்படும் இஸ்ரேல்

ஏப்ரல் 26, 2002 தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 5 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன .

பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்து, இடங்களை ஆக்கிரமித்து அங்குள்ள  பூர்வகுடி மக்களை விரட்டியடிப்பதன் மூலம் கட்டியெழுப்பப்பட்ட ஒரு அரசு என்ற நிலையிலிருந்த இஸ்ரேலிய அரசு தற்போது நாஜி ஜெர்மனியின் கொள்கை கோட்பாடுகளையும், நாஜிக்களின் கொலைபாதக நடைமுறைகளையும் அச்சு பிசகாமல் அப்படியே பின்பற்றும் ஒரு அரசாக உருவெடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை, இன சுத்திகரிப்பு மற்றும் நிறவெறி போன்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் செய்யும் நிலைக்கு மோசமடைந்துள்ளது. இந்த மாற்றம் படிப்படியாக நடந்து வருகிறதே என்றாலும் சரிசெய்ய முடியாதளவுக்கு இப்போது எவருமே மறுக்க முடியாதளவுக்கு முழு நாஜி அரசாகவே மாறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இனவெறியும், நிறவெறியும் எப்படி ஒரு ஆட்சிமுறையாக இருந்து வநத்தோ அதையேதான் இஸ்ரேலிய அரசு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பின்பற்றுகிறது. இஸ்ரேல் அரசும் மக்களை குடியேற்றி காலனியாக மாற்றப்பட்ட ஒரு அரசுதான்.  இஸ்ரேல் யூத மக்களுக்கு மட்டுமே சொந்தமானது, வேறு எந்த இன அல்லது மதத்தவருக்கும் உரிமையுடையது அல்ல என்று இஸ்ரேல் அரசு பிரகடனப்படுத்துகிறது. பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியுடன் மற்றுப் பிற அண்டை நாடுகளின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களுக்கு சொந்தமானவர்கள் யூதர்கள் மட்டுமே என்று கடவுள் கொடுத்த உரிமையின் பேரில்தான் அவர்களது எல்லைகளை விரிவுபடுத்தினார்களாம். அவர்களின் மத நூல்களின்படியும், மரபுகளின்படியும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் என்ற அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், விதிவிலக்கான அல்லது மேலான உரிமை கோருகிறார்கள். வெவ்வேறு இனங்களையும் மதங்களையும் கொண்ட பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதற்கும், பாகுபாடு காட்டுவதற்கும் இஸ்ரேல் தனது இனத்தையும் மதத்தையும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துகிறது. இஸ்ரேலிய ஆட்சிபரப்பிற்குள் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு சம உரிமைகளை மறுத்ததற்காகவும், இஸ்ரேல் தொடுத்த ஆக்கிரப்பு போர்கள் காரணமாக தங்களது ஊர்களையும், உடைமைகளையும் விட்டு விரட்டப்பட்டு அகதிகளாக மாற்றப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ அல்லது அவர்கள் தாயகம் திரும்புவதை அனுமதிக்கவோ இஸ்ரேல் தயாராக இல்லை. 

பாலஸ்தீனியர்களை இனத்தின் பேராலும், மதத்தின் பேராலும் பாகுபடுத்தி ஒடுக்கி வரும் ஒரு நாடு என்ற நிலையை உதறித்தள்ளிவிட்டு, மதச்சார்பற்ற, இனச்சார்பற்ற ஓர் அரசை கட்டியெழுப்புவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இஸ்ரேல் வசமிருந்தது. அதாவது, ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் சமஉரிமைபெற்ற குடிமக்களாக வாழ்வதற்கு வழிசெய்திருக்க முடியும். 1967 போருக்குப் பிறகு, பாலஸ்தீன விடுதலை இயக்கமும் (PLO) இதே கோரிக்கையைத்தான் அன்றையக் கட்டத்தில் எழுப்பியிருந்தது. இஸ்ரேல் இந்த கோரிக்கையை நிராகரித்ததோடு, தனது ஆக்கிரமிப்பு-காலனியாதிக்க மற்றும் இனவெறி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்ததோடு பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளையும், நியாயமான தேவைகளையும்கூட அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அதற்கும் ஒத்து வராதபோது, சிறிது காலங்கழித்துக்கூட காலங்காலமாக பாலஸ்தீனத்தில் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறும் இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இரண்டு சுதந்திர அரசுகளை அமைப்பதன் அடிப்படையிலான இறுதி சமாதான ஒப்பந்தத்தையாவது இஸ்ரேல் ஏற்றிருக்கலாம். இஸ்ரேல் அரசு பாலஸ்தீன அதிகார சபையின் தலைவராக இருந்த யாசர் அராபத்  என்பவரை ரமல்லா வீட்டுச் சிறையில் வைத்திருந்த போதிலும், அவரது நெருங்கிய கூட்டாளிகளைக் நரவேட்டையாடி கொண்டிருந்த சமயத்திலும்கூட, யாசர் அராபத், பிப்ரவரி 2002-இல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எழுதிய கருத்துரை பக்கத்தில் இதுபோன்றதொரு தீர்வை தான் வரவேற்பதாகவே வெளிப்படுத்தி எழுதியிருந்தார்.

மாறாக, நெல்சன் மண்டேலா "இன வெறியை விட, நிறவெறியை விட மோசமானது" என்று விவரித்த ஒரு கொள்கையை இஸ்ரேல் தொடர்ந்து பின்பற்றுகிறது;  கிரீஸ் பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமீபத்தில் "இனப்படுகொலை" என்று விமர்சித்திருந்தார். அரசாங்கம் இதை ஒரு போர் என்று அறிவிக்கக்கூடத் தயங்கவில்லை, மாறாக அவர்கள் உண்மையில் ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகளை படைபலத்துடன் நசுக்குகிறார்கள், இது நிறவெறி கோலோச்சிய தென்னாப்பிரிக்காவில் ஏழை கறுப்பின மக்களின் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளையினத்தவர்களின் காவல்துறை எவ்வாறு ஒடுக்கியது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்கிறார் பாசிசம் பற்றி ஆராய்ந்து வரும் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னணி நிபுணர் Ze'ev Sternhell. இஸ்ரேலிய அரசாங்கம் ‘சமாதன நடவடிக்கைக்கு’ ஒப்புக்கொண்டு 1993-ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்த போதிலும்வட பாலஸ்தின மக்களின் குடியிருப்புப் பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த படைபலமே பயன்படுத்துவது என முன்பே  தீர்மானித்திருந்தது. இஸ்ரேலிய அறிஞர் ஷ்லோமோ பென்-அமி என்பவர் எஹுட் பராக் அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு முன்பே, அதாவது 2000-ஆம் ஆண்டில் கோடை காலத்தில் கேம்ப் டேவிட்டில் உள்ள பராக்கின் முக்கிய பிரதிநிதியாக பொறுப்பேற்பதற்கும் முன்பே, குறிப்பாக 1998-ஆம் ஆண்டிலேயே இக்கருத்தை கூறியிருந்தார். "ஒரு தரப்பினர் நிரந்தரமாக மற்றொரு தரப்பினரை சார்ந்து வாழும் வகையில்- புதிய காலனியாதிக்க அடிப்படையில்தான் ஒஸ்லோ உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டது" என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார் பென்-அமி.

அப்போது இஸ்ரேலிய அரசின் ஆட்சி பீடத்திலிருந்த பராக் மற்றும் ஷரோன் ஆகியோரின் அத்துமீறல்களே அல்-அக்ஸா இன்டிபதா எனப்படும் பாலஸ்தீனிய மக்கள் எழுச்சி வெடித்து கிளம்புவதற்கு காரணமாக இருந்தது. பாலஸ்தீனியர்கள் கையில் ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் திட்டமிட்ட சதி வேலைகளை செய்து வந்தார்கள். "இஸ்ரேலின் கொலைக்களம்- Israel’s Killing fields" என்ற தலைப்பில் உள்ள பிரண்ட்லைட் கட்டுரையில் இதற்கான ஆதாரத்தை நீங்கள் காணலாம். எதிர்பார்த்தபடி பாலஸ்தீனியர்கள் ஆயுதம் ஏந்தியதை காரணம் காட்டி, பல அப்பாவி மக்களை அடித்து உதைத்தது இஸ்ரேலிய இராணுவம். இந்த மோதலின் போதுதான் இஸ்ரேலியர்கள் எவ்வளவு கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. பாலஸ்தீனியர்களுடனான போரில் இஸ்ரேல் மிகவும் கொடூரமான குற்றச் செயல்களைச் செய்து வருகிறது என்பதை உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான செய்தித்தாள்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தன. இந்த செய்தித்தாள்களில் ஹாரெட்ஸ் போன்ற சில ஊடகங்கள் இஸ்ரேலில் அமைவிடமாக கொண்டதாகவும் இருந்தது. மேலும் பிற நாடுகளைச் சேர்ந்த, பிரான்சில் இருந்து இயங்கிய Le Monde Diplomatique போன்ற சில ஊடகங்கள் 1949ல் ஜெனிவாவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போர் விதிகளை இஸ்ரேல் மீறியுள்ளதாகவும்கூட அவர்களது பத்திரிக்கையில் எழுதியிருந்தனர். பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள இஸ்ரேல் அரசு நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது என்று அடிக்கடி ஐ.நா.வின் பாதுகாப்ப கவுன்சிலும் எச்சரித்துள்ளது. நாஜிக்களின் பாசிச ஒடுக்குமுறையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட போர் விதிகளே ஜெனீவா உடன்படிக்கைகள் என அறியப்படுகிறது. பாலஸ்தீனியர்களுடனான போரில் இஸ்ரேல் இந்த விதிகளை மீறியதாக பலரும் கூறியுள்ளனர். இஸ்ரேலை நாஜிகளுடனும் ஜெர்மனியுடனும் ஒப்பிடுவதால் ஐ.நா.வின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை பற்றி அசாஃப் ஓரான் என்ற இஸ்ரேலிய இராணுவவீரர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தானும் தன்னுடனிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் இந்தப் போரில் சண்டையிடப் போவதில்லை என்று கூறினர். எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து யூதர்கள் எப்படி விடுதலையடைந்தார்கள் என்பதை நினைவுகூரும் பாஸ்கா பண்டிகை துவங்குவதற்கு முன்பு அமெரிக்க யூதர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். இரண்டாம் உலகப் போரில் இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்ற நாஜிகளைப் போல இஸ்ரேல் செயல்படுகிறது என்றார். ஒரு இஸ்ரேலிய அதிகாரி பாலஸ்தீனியர்களை நாம் நாஜிக்கள் அடிப்பது போல அடிக்க வேண்டும் என்று சொன்னபோது, அவர்களை எதிர்த்து மூச்சுக்கூட விடாத சிலர்  இந்தப் போரில் சண்டையிடமாட்டோம் என்று கூறிய எங்களிடம் மட்டும் கொந்தளிப்பது ஏன் என்று அவர் கேட்டார். நாஜிக்கள் எப்படி பல மக்களை அடித்து உதைப்பார்களோ, அச்சு பிசகாமல் அதை அப்படியே நாமும் செய்ய வேண்டும் என்று ஒரு இஸ்ரேலிய அதிகாரி தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்று பிரபலாமான ஒரு இஸ்ரேலிய செய்தித்தாள்(Ma'ariv) எழுதியிருந்தது பின்வருமாறு: “அகதிகள் முகாம் அல்லது Nablus Casbah(மேற்கு கரையிலுள்ள பழமையான நகரம்) போன்ற மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ஒரு பகுதியை கைப்பற்ற வேண்டுமெனில், ஒரு இஸ்ரேலிய அதிகாரி பழைய போர்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்; நாஜிக்கள் வார்சா கெட்டோவில் இருந்த யூதர்களை எவ்வாறு அடித்து உதைத்தார்கள் என்பதிலிருந்தும்கூட பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு சொல்வது அதிர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் ஒரு இஸ்ரேலிய அதிகாரி தனது வீரர்களை இழக்காமல் இருப்பதற்கு இதைச் செய்ய வேண்டும்.”

நாஜிகளால் இறந்த யூதர்களுக்காகத்தான் இதை நான் செய்கிறேன் என்று நியாயம் கூறும் ஒரு யூத அரசு அதிகாரி, மிக மோசமான நாஜி குற்றங்களில் ஒன்றைப் பயன்படுத்துவது பயங்கரமானது மட்டுமல்ல கொடூரமானதும்கூட. 1944 இல் வார்சா கெட்டோவில் நடந்த சம்பவம் - யூத வீரர்கள் இப்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும் என்றார். தனது வீரர்கள் நாஜிக்களின் பாதையையே பின்பற்ற வேண்டும் என்று கூறிய அதிகாரி உண்மையைக் நயவஞ்சகமான முறையில் சொல்லிக்கொண்டிருந்தார். ரமல்லா, ஜெனின், பெத்லஹேம், நப்லஸ் மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பலஸ்தீன இடங்களில் நாஜிக்கள் செய்த அதே செயல்களைத்தான் இஸ்ரேலியர்களும் செய்கிறார்கள். பாலஸ்தீனியர்களை சித்திரவதை செய்து ஒடுக்கி வருவதும், நாஜிக்கள் வார்சா கெட்டோவில் யூதர்களுக்கு செய்ததும் ஒன்றுதான்.

இஸ்ரேலிய பத்திரிகையான Ha'aretz இல் பணிபுரியும் ஒரு இஸ்ரேலிய பத்திரிக்கையாளர், 1945க்கு பிறகு எப்படி ஜெர்மனியில் நாஜி பாசிஸ்ட்கள் பூண்டோடு ஒழிக்கப்படுவதற்கான போராட்டம் துவங்கியதோ அதேபோல இஸ்ரேலிய அரசிலும் உள்ள பாசிஸ்ட்டுகள் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஒரு சிறிய பாலஸ்தீனிய கிராமத்தை இஸ்ரேலியர்கள் ஒரு நாள் காலையில் எப்படி தாக்கினார்கள் என்று அவர் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

சமவெளிக்கு அருகில் உள்ள மலைகள் மிதவெப்பமான காலநிலையைக் கொண்டு விடிந்திருந்தது; அடர் ஊதாநிற லூபின்கள் என்றழைக்கபடும் மார்ச் மலர்கள், அகதிகள் முகாமிலிருந்து அருகிலுள்ள குவாரி வரை சாலை நெடுகிலும் பூத்துக்குலுங்கியிருந்தன. அந்த இடத்தில் ஏராளமான இராணுவ வீரர்கள் இருந்தனர். அங்கிருந்த சோதனைச் சாவடியில் சோதனைப் பணியை மேற்கொண்டிருந்தார்கள். இஸ்ரேலிய படையினர் அப்பகுதியில் இருந்த ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக பிரித்தார்கள். ராணுவ வீரர்கள் ஆண்களின் மணிக்கட்டை கைவிலங்குளால் பூட்டி, அவர்களின் தலையை கருப்பு துணிகளால் மூடினார்கள். இராணுவ வீரர்கள் குவாரிக்கு ஆண்களை கடத்தி வந்து, அவர்களை அடிக்கிறார்கள், சுடுகிறார்கள் அல்லது சித்திரவதை செய்கிறார்கள். இராணுவத்தினர் இராட்சத புல்டோசர்களைக் கொண்டு வீடுகளையும் இடித்துத் தள்ளுகிறார்கள். அவர்கள் விடியற்காலை 8 மணிக்குள்ளாக இருபது பேரைக் கொன்றுவிட்டார்கள். பாலஸ்தீனத்தில் யூதர்களல்லாதவர்களை அவர்கள் பொதுவாக இப்படித்தான் கொலை செய்கிறார்கள். இன அழிப்பு நடக்கும் இன்னொரு விடியற் காலை –இதுவே பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை. இதற்கு மாறாக, இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களிடமிருந்து இருபது மைல்கள் தொலைவில் வசிக்கின்றனர். வழக்கம் போல ஷாப்பிங், பொழுதுபோக்கு, வேடிக்கை போன்ற குதூகலத்தை பெறுவதற்காக போக்குவரத்து நெரிசலை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு உருண்டோடும் வகையில் அவர்களின் விடியற்காலை அமைந்திருந்தது.

மேலும் அவர் தொடர்ந்து கூறுகிறார்:

தேசிய மற்றும் சர்வதேசிய அளவிலான இராணுவ விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து வரும் Jaffa இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பு பற்றி ஹாரெட்ஸ் பத்திரிக்கையில் பணிபுரியக்கூடிய அம்னோன் பார்சிலாய் என்பவரால் இன்று (மார்ச் 12, 2002) ஒரு செய்தி வெளியிடப்பட்டது. இஸ்ரேலிய யூதர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (46 சதவீதம்) பாலஸ்தீனியர்களை பலவந்தமாக வெளியேற்றுவதை (நாடு கடத்துவதை) ஆதரிப்பதாக இந்த புள்ளி விவரம் காட்டுகிறது. கேள்வி மிகவும் மென்மையாகவும், நாசுக்காகவும் முன்வைக்கப்படும் போது, பூண்டோடு பாலஸ்தீனியர்களை கொன்றொழிப்பதற்கான ஆதரவு 60 சதவீதமாக அதிகரிக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.

யூதர்களையும், ஜிப்சிகளையும் பூண்டோடு கொன்றொழிக்கும் திட்டத்தை நாஜிக்கள் ஒருபோதும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை, அவர்கள் தங்கள் 'இறுதி தீர்வை-கொன்றோழித்தலை' விவரிக்க 'நாடுகடத்தல்' மற்றும் 'வெளியேற்றம்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினர். 1938 இல் கூட, இந்த யோசனைகள் நாஜி ஜெர்மனியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இன்று இஸ்ரேலியர்களால் இக்கருத்து பரவலாக ஆதரிக்கப்பட்டு வருகிறது.

ஹார்வர்டில் உள்ள யூத அமெரிக்க சட்டத் துறைப் பேராசிரியரான ஆலன் டெர்ஷோவிட்ஸ், சர் கான்ராட் பிளாக்கிற்குச் சொந்தமான ஜெருசலேம் போஸ்ட் (மார்ச் 3, 2002) என்ற செய்தி ஊடகத்தில் தனது கருத்தை இவ்வாறு பரிந்துரைக்கிறார்: “தற்கொலைப் படைத் தாக்குதலோ ராக்கெட் தாக்குதலோ - எந்த ஒரு [பாலஸ்தீன] பயங்கரவாதச் செயலானாலும் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய கிராமத்தையும் பூண்டோடு அழித்தொழிக்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற ஒரு நாள் வேண்டுமானால் அவகாசம் வழங்கலாம், பின்னர் இராணுவ வீரர்கள் அங்கு வந்து கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்க வேண்டும். நாஜி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பிய பகுதிகளில் நாஜி படை வீரர்களின் வழக்கமான செயல் முறை இதுதான்.

பாலஸ்தீனிய அதிகார சபையின் கீழ் செயல்படும் அரசு  அலுவலகங்கள், மற்றுப்பிற சொத்துக்கள் நியாயதர்மமின்றி குறிவைத்து தகர்க்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செம்பிறை சங்க ஊழியர்கள் மற்றும் தேவாலய ஊழியர்களைக் இஸ்ரேலிய இராணுவம் ஈவிரக்கமின்றி கொன்று குவித்துள்ளது. கர்ப்பிணிகள் இஸ்ரேலிய சோதனைச் சாவடிகளில் பல மணி நேரம் காத்திருந்து மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டதால் இறந்த நிலையில் குழந்தைகள் பிரசவித்துள்ளன. ஒன்றன் பின் ஒன்றாக, கிராமங்களும் முகாம்களும் தண்ணீர், மின்சாரம் இன்னப்பிற அத்தியாவிய தேவைகளின் விநியோகங்களும்கூட பெரிய அளவில் துண்டிக்கப்பட்டுள்ளன. பெத்லகேமில் மட்டும், 140 டாங்கிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன; பல்கலைக்கழகம், நகரின் மையப் பகுதி அல்லது அங்கு வாழும் வெளிநாட்டினரைக் கூட விட்டுவைக்கவில்லை. ஏப்ரல் 4 அன்று, இஸ்ரேல் நப்லஸைக் கைப்பற்றியதோடு, கிட்டத்தட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மார்ச் 17, 2002 அன்று ஹாரெட்டஸ்(Ha'aretz) பத்திரிக்கையில் கிதியோன் லெவி எழுதியது இதுதான்:

"எல்லோரும் மிகவும் துன்பப்பட்டனர்: ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலேயே சிறை வைக்கப்பட்டனர், அவர்கள் மிகவும் பயந்திருந்தனர். சிலர் தங்கள் வீடுகளை இழந்தனர் அல்லது தங்களுக்கு நன்கு தெரியாத பல அண்டை வீட்டாரின் இடத்தில் ஒண்டி வாழ வேண்டியிருந்தது. பெரிய லாரிகளும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பலத்த சத்தம் எழுப்பிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிய வண்ணம் குழந்தைகளை பயமுறுத்திக் கெண்டிருந்தது. குழந்தைகளால் வெளியே சென்று விளையாட முடியவில்லை. இது ஒரு முழு நாட்டிற்கும் நடந்த ஒரு பெருந்துன்பமாகும் - அவர்கள் செய்யாத தவறுக்காக அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர்.”

நான் இஸ்ரேலிய செய்தித்தாள்களில் எழுதிய வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தினேன். ஏனெனில், இஸ்ரேல் நாஜிகளைப் போல மாறியதில் மோசமான விஷயம் என்னவென்றால், பாசிச நடவடிக்கைகளை அரசாங்கம் மட்டும் செய்வதில்லை. அதை ஒரு சில கெட்டவர்களோ அல்லது இராணுவ வீரர்களோ மட்டும் செய்யவில்லை. இஸ்ரேல் மக்களும் இதைப் பற்றி எல்லாம் அறிந்திருக்கிறார்கள், அவர்கள் அதை ஆதரிக்கிறார்கள். நாஜி ஜெர்மனியில் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் செய்தித்தாள்களோ டிவியோ இணையமோ இருக்கவில்லை. ஆனால் இஸ்ரேலிடம் இவை அனைத்தும் உள்ளன, அனைத்து கொலைபாதக செயல்களையும் இஸ்ரேல் நாட்டில் உள்ள பிரதான செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் வெளியிட்டு கொண்டுதான் வருகின்றன.

பெரிய வித்தியாசம் என்னவென்றால், நாஜி ஜெர்மனி ஒரு மோசமான நாடு, அங்கு ஒற்றை நபரின் சரிவாதிகாரமே அனைத்து மக்களின் விதியையும் தீர்மானித்தது. ஆனால் இஸ்ரேலோ யூத மக்களுக்கு ஒரு நல்ல நாடு, இங்கு தாங்கள் வாக்களித்து தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தும், பெரும்பாலான மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். இரு கட்சி கூட்டணியில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ள இஸ்ரேல் பிரதமாரான ஏரியல் ஷரோன் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மற்ற தலைவர்களுடன் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வழிநடத்துகிறார். இராணுவம் மற்றும் அயலுறவுத் துறைகளுக்கான இலாக்காக்கள் அந்நாட்டின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேலில் உள்ள சிறும்பான்மை எதிர் கட்சியினர் அவர்களுடன் உடன்படாமல் தொடர்ந்து அவர்களை எதிர்த்து வருகிறார்கள். பென் குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நெவ் கார்டன் என்பவரும் அதில் குறிப்பிடத்தக்கவராவார். அவர் மார்ச் 6 அன்று இவ்வாறு எழுதினார்:

"இங்கே விஷயங்கள் மிகவும் மோசமாக உள்ளன. பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்த சாலைத் தடுப்பை நகர்த்த முயன்றோம், போலீசார் எங்களைத் தாக்கினர். அவர்கள் மூன்று பெண்களின் கைகளை உடைத்துவிட்டனர், ஒருவரின் தலை உடைந்து இரத்தம் கொட்டியது. அவர்கள் என்னை கைவிலங்கில் கட்டியிருந்தபோது நானும் தாக்கப்பட்டேன். ஷரோன் இன்று காலை காசாவை குண்டுவீசித் தாக்கினார்.”

நாஜிகளைப் போல இஸ்ரேலை வழிநடத்தும் ஒரு மோசமான தலைவர் எங்களுக்கு தேவையில்லை, ஏனென்றால் இஸ்ரேலில் உள்ள பலரும் மனதளவில் குட்டி ஹட்லராகவே மாறியிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் இவர்களைப்போல எதிர்த்து வருகிறார்கள். சமாதானத்தை வலியுறுத்தி இயக்கம் நடத்தி வரும் ஷ்லோமோ அவினரி போன்ற செல்வாக்குமிக்கவர்கள் போர் எதிர்ப்பு இயக்கம் நடத்தி வருகிறார்கள். பாலஸ்தீனியர்கள் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள், ஏன் எதிர்த்துப் போராடுகிறார்கள் என்று தனது வாசகர்களிடம் கூறுவதற்காக மார்ச் 23 அன்று தனது சமாதான இயக்கமான குஷ் ஷாலோமுக்காக(Gush Shalom) இதை எழுதினார்:

பெரிய ட்ரக்குகள் நகரின் மத்தியில் வலம்வரும்போது, கார்களையும் சுவர்களையும் நொறுக்கி, சாலைகளை உடைத்து, நாலாப்புறமும் துப்பாக்கிச்சூடு நட்த்தும்போது, பாலஸ்தீனிய மக்கள் அனைவருக்கமே மரண பயத்தை தோற்றுவிக்கிறது - இது பாலஸ்தீனியர்களை வேறுவழியின்றி கொதித்தெழ வைக்கிறது… இராணுவ வீரர்கள் ஒரு குடும்பத்தின் வீட்டிற்குள் அடாவடியாக நுழையும் போது, குழந்தைகளையும் பெரியவர்களையும் பீதியடையச் செய்து, அவர்களின் பொருட்களை சூறையாடி. , அவர்களின் கடின உழைப்பால் சேர்த்த அத்தனை பொருட்களையும் நாசமாக்குகிறார்கள், அடுத்த வீட்டிற்குள் நுழைந்து அதையே செய்கிறார்கள் - இதுவே பாலஸ்தீனியர்களை வேறுவழியின்றி கொதித்தெழ வைக்கிறது…

நகரும் எதையும் இராணுவவீரர்கள் சுடும்போது - இராணுவ வீரர்கள் நினைதத்தையெல்லாம் செய்ய முடியும் என்பதால், அல்லது ஷரோன் அவர்களிடம் “அதிகமான சேதாரத்தை ஏற்படுத்துங்கள்” என்று சொன்னதாலும், மரண பயத்தை ஏற்படுத்துவதாலும் - பாலஸ்தீனியர்களை மேலதிகமாக கொதித்தெழ வைக்கிறது…

காயமடைந்தவர்களுக்கு உதவும் ஆம்புலன்சுகளை இராணுவவீரர்கள் சுடும்போது, உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கும் மருத்துவர்களையும், மருத்துவ உதவியாளர்களையும் கொன்று, இரத்த வெள்ளத்தில் கண்முண்ணே சாவதை பார்க்கும்போது - பாலஸ்தீனியர்களை மேலதிகமாக கொதித்தெழ வைக்கிறது… பின்னர் அவர்கள் இதை முடிவுக்கு கொண்டு வர ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். மனித வெடிகுண்டுகளாகவே மாறத் தயாராகுகிறார்கள், அவர்கள் ஒரு இஸ்ரேலியரையோ, ஒரு இராணுவ வீரரையோ அல்லது பாலஸ்தீன பகுதிக்குள் குடியேறியவரையோ, பேருந்தில் காணும் ஒரு பெண்ணையோ அல்லது கிளப்பில் காணும் ஒரு பையனையோ கொல்லும்போது, பாலஸ்தீனிய மக்கள் அனைவரும் அவர்களை தலைமேல் தூக்கி வைத்து மகிழ்ச்சிப்பொங்க கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

"எங்கள் கவிஞர் நாதன் ஆல்டர்மேன், ஜெர்மானியர்கள் மீது மிகவும் கோபமாக இருந்தபோது, 'ஜெர்மானியர்கள் மீதான பழிவாங்கல் உணர்ச்சியையும், வெறுப்பையும் கொட்டி நிரப்புவதற்கு கருஞ் சாம்பல் நிற கோனிப்பையை கொடுங்கள்' என்று எழுதினார். கருஞ்சாம்பல் நிற கோனிப்பை நிரம்ப வெறுப்பை சுமந்து கொண்டு உலாவி வருவோரை எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். கருப்பு முகமூடிகள் அணிந்தோ அல்லது அணியாமலோ (நீங்கள் கருப்பு முகமூடியை சந்தைகளில் 10 ஷெக்கல்களுக்கு வாங்கலாம்) துப்பாக்கி ஏந்திய ஆண்கள் கூட்டம் கூட்டமாக மேற்குக் கரையிலும் காசா பகுதியிலுள்ள அனைத்து நகரங்களையும், கிராமங்களையும் சுற்றி வருகிறார்கள். இந்தக் குழுக்கள் யாருக்காகவும் வேலை செய்யவில்லை. ஃபதா, ஹமாஸ் மற்றும் ஜிஹாத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து தாக்குதல்களைத் திட்டமிடுகிறார்கள், மேலும் அவர்கள் விதிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாலஸ்தீனிய தலைவர் அரபாத்(முகமது அப்பாஸ்) கையசைத்தால்போதும் இந்த மக்கள் போராளிகளை தடுத்துவிட முடியும் என்று நினைக்கும் எவரும் கனவு காண்கிறார்கள் என்றே சொல்ல முடியும்.

ஒரு சமாதானத்தை பெரிதாக விரும்பாத இஸ்ரேல் உளவு அமைப்பின் முன்னாள் தலைவரான அமி அயலோன் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளிடம் இவ்வாறு கூறினார், “பாலஸ்தீனியர்கள் 'பைத்தியம் பிடித்தவர்கள்' போல் செயல்படுகிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம், ஆனால் அது வெறித்தனம் அல்ல, ஆழ்ந்த நம்பிக்கையின்மை... பாலஸ்தீனியர்களின் தலைவர் எழுச்சியைத் திட்டமிடவோ தொடங்கவோ இல்லை. ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து நம்பிக்கைகளும் மறைந்துவிட்டதால், ஊழல்மலிந்த பாலஸ்தீனிய அதிகார சபைக்கு எதிராக, அதன் திராணியற்ற தன்மைக்கு எதிராக, இது இஸ்ரேலுக்கு எதிரான திடீர் கிளர்ச்சி ஆகும்.

அவர் மேலும் கூறினார், "நாம் எந்த நிபந்தனையும் இல்லாமல் பிரதேசங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன் - ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லதுதான், ஆனால் அது தேவையில்லை: பிராந்தியங்களில் இருந்து வெளியேறுவதோடு, உண்மையாலுமே, முற்றிலுமாக படையைத் திரும்பப் பெறுதல் என்பதுதான் மிக முக்கியமான விஷயமாகும். பாலஸ்தீனியர்கள் சொந்தமாக தனிநாட்டை உருவாக்கினால், இஸ்ரேல்தான் முதலில் அதை அங்கீகரித்து, எந்த நிபந்தனையும் இல்லாமல், அரசுகளுக்கிடையிலான பரஸ்பர பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும்."

மக்கள் மீதான இந்த அடக்குமுறையும் அவர்களின் நிலம் மற்றும் நீர் வளங்கள் மீதான தொடர் ஆக்கிரமிப்பும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்ற அரசாங்கத்தின் கூற்றுகள் பொய்யானவை என்பதை முன்னாள் பாதுகாப்புத் தலைவர் ஒருவரின் இந்த பேச்சு அம்பலப்படுத்துகிறது.

இஸ்ரேல் அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாதவர்கள், இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் - இளம் சிப்பாய்கள், அதிகாரிகள், ஜெனரல்கள் கூட - ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தங்கள் தேசிய இராணுவத்தில் பணியாற்ற மறுப்பதோடு, அவர்களை ஆதரிக்கும் மூத்த முன்னாள் அதிகாரிகளின் பேச்சையும் கேட்க மறுக்கிறார்கள். உதாரணமாக, 1993 முதல் 1996 வரை அட்டர்னி ஜெனரலாக இருந்த மைக்கேல் பென்-யாயர், ஹாரெட்ஸ் பத்திரிக்கையில் (மார்ச் 15, 2002) இவ்வாறு எழுதினார்:

"இன்டிபதா என்பது பாலஸ்தீனிய மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டமாகும்... இந்த எழுச்சி தேசிய விடுதலைக்கான ஒவ்வொரு மக்களின் போராட்டத்தின் பின்னும் உள்ள தார்மீக நியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது... ஆக்கிரமிப்பு ஆட்சியில் ஈடுபட்டுள்ள வேதனையான நிகழ்வுகளையும் அதை நீடிப்பதற்காக நாங்கள் தொடுத்துள்ள போரின் விவரங்களை மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பிற்காக ஓடும் சிறு குழந்தைகளைக் கொன்றது, பயங்கரவாதச் செயலில் ஈடுபடாத ஆனால் தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டவர்களை விசாரணையின்றி கொலை செய்தது, சுற்றிவளைப்புகள், ஊரடங்குகள் மற்றும் சாலைத் தடுப்புகள் போன்றவற்றை நினைவுபடுத்தினால் போதும். மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையையே ஒரு கெட்ட கனவாக இவை எவ்வாறு மாற்றிவிட்டது என்பது புரியவரும்."

இந்தப் பின்னணியில்தான் IDF ரிசர்வ் படையின் அதிகாரிகளும், இராணுவ வீரர்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றுவதற்கு எதிராக கலகம் செய்வதை ஒவ்வொருவரும் கவனமாக பார்க்க வேண்டும். அவர்களின் பார்வையில், ஆக்கிரமிப்பு ஆட்சி தீயது; ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவ சேவை செய்வது தீயது. அவர்களைப் பொறுத்தமட்டில், அவர்களை அநியாயமான செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தும் சூழ்நிலைக்கு இராணுவ வீரர்களை தள்ளும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவ சேவை புரிவது கொடியது; மேலும் அவர்களின் மனசாட்சியின்படி, அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட முடியாது என்கிறார்கள். எனவே, அவர்கள் மனசாட்சியின்படி சேவை செய்ய மறுப்பது ஒவ்வொரு ஜனநாயக ஆட்சியிலும் நியாயமான முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டிய செயலாகும்.

நாசிமயமாக்கப்பட்ட பெரும்பான்மைக்கு மாறாக, நாட்டின் முக்கிய அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு சிறுபான்மையினர், அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு போர்களில் பங்கேற்கத் தயாராக இல்லாத ரிசர்வ் படையினர் பலரும் சிறுபான்மையினராக உள்ளனர். இன்னும், ஷரோன் தொடுத்துள்ள ஆக்கிரமிப்பு போர்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை. ஜனவரி பிற்பகுதியில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய படையெடுப்பின் போது, 1982ல் அராஃபத்தை 'படுகொலை செய்யாமல் விட்டதற்கு' வருந்துவதாக அவர் கூறினார். மார்ச் மாத இறுதியில், அவர் இஸ்ரேலிய செய்தித்தாள் Yedioth Ahronoth க்கு பேட்டி அளித்தார், அதில் அவர் கூறினார்: "பின்னோக்கிப் பார்க்கும்போது, [புஷ்ஷிடம்] நான் ஏற்றுக்கொண்ட ஒரு உறுதிமொழி தவறு, அது அராஃபத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதுதான். "அதே நேர்காணலில், நான் பாலஸ்தீனத்தில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதைப் பற்றி உலகில் எவரும் அதன்பிறகு கவலைப்படவில்லை என்றும் அவர் பெருமையடித்துக் கொண்டார்: " A-பகுதியில் நுழைந்து 300 மீட்டர் பகுதியை ஆக்கிரமித்தபோது உலகமே அதிர்ச்சியடைந்தது. இப்போது செய்வதை அப்போது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இன்று நாம் என்ன செய்கிறோம்(போர்). இதுபோன்ற ஆக்கிரமிப்பு போர்களுக்கு நான் உலக மக்களை பழக்கப்படுத்திவிட்டேன். எல்லோரும் எங்களைப் புரிந்துகொள்கிறார்கள்."

"அவர் என்ன செய்தாலும் உலகம் கவலைப்படாது என்று ஷரோன் சொல்வது தவறு. அராபத்தையும் பாலஸ்தீனியர்களையும் காயப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் அவரிடம் கூறியுள்ளனர். சீனா மற்றும் ஜப்பான் நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மொராக்கோ மன்னர் அல்லது அவருடன் பணிபுரியும் பெரஸ் ஆகியோர் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்; அரபாத்தின் அலுவலகத்தில் இருந்து டாங்கிகளை திரும்பப் பெறுமாறு பிரிட்டன் வெளியுறவுத் துறை அதிகாரி ஜாக் ஸ்ட்ரோ கூறியுள்ளார்.ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஷ்கா பிஷ்ஷர் வெளியிட்டிருந்து ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: 'அராஃபத் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே ஜேர்மன் அரசாங்கம் இஸ்ரேலிடம் கேட்கிறது‘.

அராஃபத் சொல்வது போல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதியை நிலைநாட்டக் கூடிய வேறு சில நாடுகளைச் சேர்ந்த அமைதிப் படைகளோ, கண்காணிப்புக் குழுக்களோ நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் ஓராண்டு காலமாக கூறி வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ரோமானோ ப்ரோடி, அமெரிக்காவை 'விலகிச்செல்லுமாறு' கேட்டுக்கொண்டார், மேலும் பல நாடுகள் சமாதானத்தை ஏற்படுத்த உதவ முன்வர வேண்டும் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரத்துறை சார்ந்து பணியாற்றும் ஜேவியர் சோலானா, இஸ்ரேலின் 'போர் வெறி' தவறானது என்றும், 'பாலஸ்தீன அநீதிகளுக்கு' எதிராக வாடிகன் நாடும்கூட எச்சரித்துள்ளது என்று கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு கவுன்சிலில் முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் பாதுகாப்பான, தெளிவான எல்லைகளுடன் பரஸ்பரம் ஒன்றுசேர்ந்து வாழும் பிராந்தியம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனிய அகதிகளை என்ன செய்யப் போகிறீர்கள், எப்படி மறுவாழ்வு அளிக்கப் போகிறீர்கள் அல்லது எப்போது அவர்களை மீண்டும் தாயகம் திரும்புவதற்கு வழியமைத்துத் தரப்போகிறீர்கள் என்பன பற்றியெல்லாம் கூறாததால் இத்தீர்மானம் மிகவும் 'பலவீனமானது' என்று கருதியதால், சிரியா வாக்களிக்வில்லை. அவ்வகையில் 14 நாடுகளின் ஆதரவளித்தன் பேரில் இத்தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

எனவே ஷரோன் கூறியது ('உலகம் அந்தத் தாக்குதல்களுக்குப் பழகி விட்டது. எல்லோரும் எங்களைப் புரிந்துகொள்கிறார்கள்.') ஒன்று பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அவர் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு ஏன் இவ்வளவு வெறித்தனமும் வன்முறையும் அவரிடம் வெளிப்படுகிறது? முதலாவதாக, இஸ்ரேலில் பலர் அவரை ஆதரிப்பதால் - பெரும்பாலான தலைவர்கள் அவருடன் இருக்கிறார்கள் - அவரது அரசாங்கமும் அவரின் முடிவுகளுக்கு கட்டுப்படுகிறது - இஸ்ரேலில் உள்ள பலரும் நாஜிகளைப் போல இருப்பதோடு அவர்கள் பாலஸ்தீனியர்களை மேலும் மேலும் வெறுக்கிறார்கள். தங்களுக்கு சமாதானம் வேண்டும் என்று கூறும் மக்களில் சிலர் கூட அநீதிகளைப் பற்றி பேச விரும்பவில்லை: அகதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அல்லது கிழக்கு ஜெருசலேம் என்னவாகும் என்பது பற்றி பேச தயங்குகிறார்கள். இஸ்ரேல் ஒரு 'யூத நாடாக' இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.  உலகில் உள்ள ஒட்டுமொத்த அகதிகளில் நான்கில் ஒருவர் பாலஸ்தீனிய அகதிகளாக இருக்கிறார்கள் என்று ஐ.நா. கூறுகிறது. மேலும் அவர்களால் தாயகம் திரும்ப முடியாது என்பதையே ஐ.நா.வின் அறிக்கை காட்டுகிறது. (அவர்கள் வேறு எங்காவது புதிய வாழ்க்கையை தொடங்கிய பிறகு, மீண்டும் ஒரு 'யூத நாட்டிற்கு' எத்தனைபேர் வர விரும்புவார்கள் என்பது மற்றொரு கேள்வி). அகதிகள் பிரச்சனை பற்றி பேசுவேன், 'மக்களுடனான இஸ்ரேலின் தற்போதைய நிலை’ பற்றியும் யோசிப்பேன் என்று அராஃபத் சொன்னபோதும் - எல்லாரும் திரும்பி வர முடியாது என்பது அவருக்குத் தெரியும் - எவருமே அதை நம்பத் தயாரில்லை. ஷரோன் போன்ற ஆட்கள் 35 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் குடியேற்றியுள்ள 4,00,000 மத-இன வெறி கும்பலை யாரும் எதிர்த்துப் போராட முன்வரவில்லை. தங்களுக்கு அமைதி வேண்டும் என்று கூறும் மக்களில் பலர் உண்மையில் பாலஸ்தீனியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைதியை ஏற்கத் தயாரில்லை. இதனால்தான் ஷரோன் இஸ்ரேலில் பெரும் செல்வாக்குடன் விளங்குகிறார்.

"ஆனால் ஷரோன் பெரும் பலத்தோடு இருப்பதற்கு இரு வழிகளில் முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்காதான். ஒன்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா வரம்பின்றி நிதியுதவி, ஆயுதங்கள் மற்றும் அரசியல் ஆதரவை வழங்குகிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட நூறு பில்லியன் டாலர்களுக்கும் – எந்தவொரு நாடும் இவ்வளவு நிதியை வழங்கியதில்லை – அதிகமான நிதியுதவியை கொடுத்துள்ளது. எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற ஒப்புதலுடன்  இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து எந்தவொரு ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் பெற முடிகிறது. பாலஸ்தீனியர்களை பயமுறுத்துவதற்கும் தாக்குவதற்கும் F-16 போர் விமானங்களையும், அப்பாச்சி ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்த முடியும். இதுபோன்ற கொலைக் குற்றங்களை செய்ததற்காக எவரிடமும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் இஸ்ரேலுக்கு இல்லை.

இஸ்ரேலுக்குப் எதிராக உள்ள எந்தவொரு திட்டத்தையும் அல்லது தீர்மானத்தையும் தனது தடுப்பதிகாரத்தின் மூலம் அமெரிக்கா முறியடிக்கிறது அல்லது மாற்றுகிறது. அவ்வகையில் அந்நிய நாடுகளின் அரசியல் ரீதியிலான அழுத்தங்களிலிருந்து பாதுகாத்து இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கிறது. மூன்றாம் உலக நாடுகள் வழக்கமாக சந்திக்கும் நெருக்குதல்களைப் போல அல்லது அமெரிக்காவின் நட்பு நாடான பிரிட்டனைப் போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் அமெரிக்காவின் அழுத்தங்களில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயமில்லாமல் அமெரிக்காவின் சில திட்டங்களையும்கூட இஸ்ரேலால் முடக்க முடிகிறது. நிதியுதவி வழங்கும் நாடு திணிக்கும் கொள்கைகளை அப்படியே செய்ய வேண்டும் என்ற நிலைமைக்கு மாறாக இங்கு மட்டுமே நிதயுதவி பெறும் நாடு கொள்கைகளை முடிவு செய்யும் நிலைமையை இருக்கிறது எனலாம்.

இதுபோன்ற பிரத்யேகமான நட்புறவு 1950 கள் மற்றும் 1960 களில் தொடங்கியது, மேற்கு ஆசியாவில் பல கம்யூனிஸ்ட் அல்லது புரட்சிகர தேசிய விடுதலை இயக்கங்களும் அரசாங்கங்களும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த காலமது. இப்பகுதியில் இவர்களை எதிர்த்துப் போராடக்கூடிய தனக்கேற்ற ஒரு நட்பு சக்தியை அமெரிக்கா தேடிக்கொண்டிருந்தது. இஸ்ரேல் தனது அண்டை நாடுகளுடன் சேராமல், வெறுவழியின்றி மேற்கத்திய நாடுகளையே நட்பு நாடாக ஏற்க வேண்டிய நிலையில் ஒரு புதிய நாடாக தோன்றியிருந்தது. மேலும் பிரிட்டன் மற்றும் பிரான்சுக்குப் பதிலாக இப்பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா விரும்பியது; இதன் காரணமாகவே அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பிரத்யேகமான உறவு தோன்றியது. 1967 இல் எகிப்து மற்றும் சிரியாவை தோற்கடித்தபோது அமெரிக்காவுடனான இஸ்ரேலின் நட்பு மேலும் வலுவடைந்தது. அமெரிக்கா விரும்பியது போல இது அரபு தேசிய விடுதலை இயக்கத்திற்கு பெரும் பின்னடைவை உருவாக்கியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரானிலிருந்த அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் பறிபோனதால் அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக விளங்கிய எண்ணெய் வளங்கள் மீதான தனது பிடியை தொடர்ந்து தக்க வைப்பதற்காகவே இப்பிராந்தியத்தில் இஸ்ரேல் கிட்டத்தட்ட முக்கியமான  ஒரே இராணுவ கூட்டாளியாக உருவாக்கப்பட்டது. ஒரு பக்கம் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கும் மறுபுறம் இஸ்லாமிய தேசிய விடுதலை போராட்டத்தினை அழிப்பதற்கும் இஸ்ரேல் முக்கியமான இராணுவ கூட்டாளியாக பார்க்கப்பட்டது. போர் தொடுப்பது, ஆயுதம் வியாபாரம் செய்வதன் மூலம் கொள்ளை இலாபம் பார்க்கும் அமெரிக்கப் பொருளாதாரத்துடன் இஸ்ரேல் மேலும் இணைக்கப்பட்டது. அனைத்து மானியங்கள், நிதி உத்தரவாதங்கள் மற்றும் பல்வேறு பட்ஜெட் ஒதுக்கீடுகளிலிருந்து பெறப்பட்ட வரவுகளைச் சேர்த்தால் - அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு மொத்தமாக பரிமாற்றப்பட்ட நிதியளவு $10 பில்லியன் டாலர்களை எட்டிய வருடங்களும் இருந்திருக்கின்றன.

ரீகன் பச்சைக் கொடி காட்டியபோதுதான் 1982 இல் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நடந்தது; அப்போது ஷரோன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தை அமெரிக்கா 'பயங்கரவாத' குழு என்று கூறியது, ஏனெனில் இந்த இயக்கம்தான் தெற்கு லெபனானை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலை  விரட்டியடித்ததில் முக்கிய பங்காற்றியது; லெபனானை மீண்டும் கைப்பற்றுவது என்பது இஸ்ரேலின் இலக்குகளில் ஒன்றாக உள்ளது. அதேபோல், இஸ்ரேலின் தற்போதைய தாக்குதலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கு அமெரிக்கா தெளிவாக பச்சைக் கொடி காட்டியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கையால் உருவாகும் எதிர்மறையான விளைவுகளிலிருந்து அவை எங்கு நடந்தாலும் சரி அமெரிக்கா, இஸ்ரேலை எப்போதும் பாதுகாத்தே வருகிறது. எடுத்துக்காட்டாக, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆயுதம் ஏந்தாத ஐ.நா. சார்பில் கண்காணிப்புக் குழுவை அனுப்ப விரும்பிய பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை அமெரிக்கா மட்டுமே தடுத்து நிறுத்தியது. இத்தீர்மானத்திற்கு மற்ற அனைத்து உறுப்பினர்களும், ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மேரி ராபின்சன் உட்பட அனைவரும் ஆதரவுக் கரம் நீட்டியிருந்தனர். ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் என்ற அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஒருவர், எந்தக் குழுவை அனுப்புவதற்கும் இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இஸ்ரேலின் அனுமதியின்றி இப்பகுதியில் எதுவும் நடக்காது என்பதற்கு அமெரிக்காதான் பின்னணியில் செயலாற்றியிருந்தது. 

"சவுதி அரேபியாவின் புதிய திட்டம் பற்றி பரவலாக செய்திகளில் எழுதப்பட்டுள்ளது, அரபு செய்தித்தாள்கள் 'அமெரிக்கத் திட்டம்' என்று இதை அழைக்கின்றன, இது உண்மையில் புதியது அல்ல. 1967 இல் இஸ்ரேல் கைப்பற்றிய பகுதிகளை திரும்பக் கொடுத்தால், இஸ்ரேலுக்கு அமைதியும் அங்கீகாரமும் கிடைக்கும் என்ற பல முந்தைய சமாதான முன்மொழிவுகளைப் போலவே இது உள்ளது. பல பிற்போக்கான அரபு அரசாங்கங்கள் இந்த திட்டங்களை ஆதரித்தன. எடுத்துக்காட்டாக, ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் ஜனவரி 1976 இல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய போதும் அதையே கூறியது, அதைத் தொடர்ந்து 1981ல் முன்மொழியப்பட்ட ஃபஹத் திட்டமும் சவுதி ஆதரவைக் கோரியிருந்தது. ஆனால் இஸ்ரேலிய தலைவர்கள், ஷிமோன் பெரஸ் போன்ற "சமாதான புறாக்கள்" கூட, ஆக்கிரமிக்கப்பட்ட சில பகுதிகளை தனது பாதுகாப்பிற்காக இஸ்ரேல் வைத்திருக்க வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளனர். "சமாதான புறாக்கள்" (அலோன், ராபின் மற்றும் பிறர்) 22 சதவீத நிலங்களை தம்மிடமே வைத்திருக்க வேண்டும் எனக் கூறி வந்த நிலையல் ஷரோன் 58 சதவீத நிலத்தை வைத்துக்கொள்ள தீர்மானித்திருந்தார்.

அராஃபத் தன்னையும், நொறுங்கி விழும் நிலையில் உள்ள ‘பாலஸ்தீன அதிகார சபையையும்’ காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் இந்த அமெரிக்க-சவூதி திட்டத்தை ஏற்றுக்கொண்டது என்பது அவர் எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஆனால் சிரியாவும், இன்னும் சில தீவிர தேசியவாத குழுக்களும் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளனர். பாலஸ்தீனிய அகதிகள், சிரியாவில் இருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலன் குன்றுகள், இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து லெபனானுக்கான பாதுகாப்பு போன்ற பிற பிரச்சினைகளை தீர்க்கவும், குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விட்டு வெளியேறவும் ஒப்புக் கொள்ளாத வரை இஸ்ரேல் அரேபியர்களிடமிருந்து அங்கீகாரம், பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பெறக்கூடாது என்று அவர்கள் கோருகிறார்கள். 

இஸ்ரேல் 1967 இல் ஆக்கிரமித்த நிலங்களை கையகப்படுத்துவது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, மேலும் அவற்றை விட்டு வெளியேறும்படி கோரும் திட்டத்தைப் பற்றி அது கவலைப்படவில்லை. இது இஸ்ரேல் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்காமல் அதற்கு வேண்டிய பல நன்மைகளையே அளிக்கிறது என்பதாலேயே இதை ஒரு "அமெரிக்கத் திட்டம்" என்கிறார்கள்.  சவூதி அரேபிய திட்டமும் அதற்கு முன்பு கொண்டு வந்த பல திட்டங்களைப் போலவே தோல்வியடையும்.

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் போரில் அணிசேருவதற்காக அரபு அரசாங்கங்களை மகிழ்விப்பது என்ற ஒன்றை மட்டுமே அமெரிக்கா செய்ய விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவோ இஸ்ரேலின் செயல்பாடுகளால் அதிருப்தியில்தான் உள்ளது, ஏனெனில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அந்த போருக்குத் தேவையான நாடுகளின் அணிசேர்க்கையை கடினமாக்குகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவின் வரம்பற்ற ஆதரவே ஒரு தடையாக மாறியுள்ளது. எந்தவொரு சமாதானமும் துரிதமாக ஏற்படுவதை தடுப்பது என்ற நிலைக்கும்கூட இஸ்ரேல் செல்லும் அளவுக்கு இந்த வரம்பற்ற ஆதரவு வாய்ப்பளித்துள்ளது. ஆனால் சமாதானம் ஏற்படாமல் அமெரிக்காவால் இப்பிராந்தியத்தில் விரும்பியதைச் செய்ய முடியாது. டைம் (ஓர் இதழ்) வெளியிட்டிருந்த செய்தியில், கெய்ரோவில் உள்ள ஒரு அமெரிக்க அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டியிருந்தது: "இங்குள்ள மக்கள் பாலஸ்தீனியர்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள் என்று நாங்கள் அவர்களிடம் ஒரு வருடமாகச் சொல்லி வருகிறோம், ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்துவிட்டார்கள்... பாலஸ்தீனியர்களை அமெரிக்கா எவ்வாறு நடத்துகிறது என்பதில் அவர்கள் மாற்றத்தைக் காணாத வரை ஈராக்கைத் தாக்க எந்த எகிப்தியரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். " பின்னர் அம்மானில்(ஜோர்டான் தலைநகரம்) உள்ள மற்றொரு அமெரிக்க அதிகாரி கூறியதை அந்த இதழ் மேற்கோள் காட்டுகிறது: "எனக்குத் தெரிந்ததெல்லாம் ஈராக் மீது படையெடுத்தால், இந்த இடம் கலவர பூமியாகவே மாறிவிடும் என்பதால் நான் இங்கிருந்து கிளம்பும் முதல் விமானத்திலேறி அமெரிக்கா சென்று விடுவேன்." உலகின் மிக கொடூரமான இராணுவங்களில் ஒன்றிற்கு எதிராக தைரியமாக போராடுவதன் மூலம் குறைந்தபட்சம் இப்போதைக்கு, அவர்கள் ஈராக்கை காப்பாற்றி வருகிறார்கள் என்பது போரிடும் பாலஸ்தீனியர்களுக்கு தெரியாது. நமது காலத்திய ஏகாதிபத்தியமான அமெரிக்காவிற்கு இஸ்ரேலின் நாசி வகைப்பட்ட பாசிச சேவையின் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கும் வரம்புகள் உள்ளன.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://frontline.thehindu.com/editors-pick/the-nazification-of-israel/article30244551.ece