ரஷ்யாவிற்கு இந்திய விவசாயப் பொருட்கள் மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிக்க வலியுறுத்தும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
தமிழில்: செந்தாரகை

இந்தியா–ரஷ்யா உறவின் தனித்துவத்தையும் ஆழத்தையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் உறுதியுடன் செயல்படுகின்றன. இந்த உறவை சமநிலையுடனும் நிலைத்தன்மையுடனும் வளர்த்தெடுக்க, இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியை ரஷ்ய சந்தைகளில் பெருமளவில் அதிகரிப்பது அவசியம் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை வலியுறுத்தி பேசியிருந்தார்.
“இந்தியா–ரஷ்யா வர்த்தகத்தை நீடித்த, சம நிலையானதாக வளர்த்தெடுக்க வேண்டியது எங்களின் ஒருமித்த இலக்கு. இதனை நிறைவேற்ற, ரஷ்யாவுக்கு இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விரைவாகச் சரிசெய்வது மிக முக்கியம். குறிப்பாக விவசாயப் பொருட்கள், மருந்துகள், ஜவுளி போன்ற துறைகளில் ஏற்றுமதியை அதிகரிப்பது, தற்போதைய வர்த்தக இடைவெளியை குறைப்பதில் பெரிதும் துணைபுரியும்,” என அவர் விளக்கமாகக் கூறினார்.
மேலும், இரண்டாம் உலகப்போரின் முடிவிலிருந்து இந்தியா–ரஷ்யா உறவு உலகின் மிக வலுவான, நிலையான கூட்டுறவுகளில் ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது என ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவுடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பிற்குப் பின் வெளியிடப்பட்டது.
“இன்றைய சந்திப்பு எங்கள் அரசியல் உறவை விரிவாக மதிப்பாய்வு செய்வதற்கும், வர்த்தக மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை ஆழமாக ஆராய்வதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அரசியல், வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மட்டுமல்லாது இருநாட்டு மக்கள் தொடர்புகள் போன்ற பல துறைகளில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்,” என அவர் தனது தொடக்க உரையில் கூறினார்.
“எங்கள் நாட்டின் தலைவர்கள் கடந்த ஆண்டு ஜூலையில் 22வது ஆண்டு உச்சிமாநாட்டிலும், பின்னர் காசானிலும் சந்தித்தனர். இப்போது, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கான தயாரிப்பில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு உச்சிமாநாடும் எங்கள் சிறப்பான, போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணியின் திசைவழியை நிர்ணயம் செய்து, முன்னேற்றப் பாதையை எங்களுக்கு தெளிவாக காட்டுகின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையிலும், தற்போதைய மற்றும் எதிர்கால ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிமுறைகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
“நட்புறவை ஏற்காத நாடுகளின் அழுத்தத்தால் பாதிக்கப்படாத போக்குவரத்து, ஏற்பாட்டுத் திட்டமிடல், வங்கி மற்றும் நிதி அமைப்புகளை உருவாக்குவதென்பது இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. மேலும், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் தங்களது தேசிய நாணயங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,” என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், போக்குவரத்து, ஆற்றல், விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இணைந்து செயல்படும் புதிய வாய்ப்புகளையும் இக்கூட்டத்தில் ஆராய்வதாகவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான உறவில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நிலவும் சூழ்நிலையில் ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை 50 சதவீதமாக உயர்த்தியதோடு, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கொள்முதலுக்காக கூடுதல் 25 சதவீத அபராதத்தையும் விதித்துள்ளார்.
“இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், காலத்தால் சோதிக்கப்பட்டு உறுதியாக நிலைத்திருக்கும் இந்தியா–ரஷ்யா ‘சிறப்பு மற்றும் சிறப்புரிமை வாய்ந்த போர்த்தந்திர கூட்டணியை’ மேலும் வலுப்படுத்துவதாகும்,” என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) ஜெய்சங்கரின் மாஸ்கோ பயணத்தை அறிவிக்கும் போது தெரிவித்தது.
அதேவேளை, ரஷ்யா–உக்ரைன் மோதல் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிமுறைகள் மூலமே முடிவுக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
- செந்தாரகை (தமிழில்)\
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு