மோடி-ஜிங்பிங் சந்திப்பிற்குப் பிறகு ஏவிக் செங்டூவின் பங்கு விலை உயர்ந்தது
வெண்பா (தமிழில்)

ஏவிக் செங்டூவின் பங்கு விலை: மோடி- ஜிங்பிங் சந்திப்பிற்குப் பிறகு J-10 போர் விமான தயாரிப்பாளரின் பங்கு 6%-க்கு மேல் உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31 அன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, J-10 போர் விமான தயாரிப்பாளரான ஏவிக் செங்டூவின் பங்கு விலை, செப்டம்பர் 1 அன்று 5.89 சதவீதம் வரை உயர்ந்து 108.22 யுவானை எட்டியது. ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான இந்த சந்திப்பில், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது இந்தியா மற்றும் சீனாவின் பங்குச் சந்தை சூழலை நிலைப்படுத்த உதவியது.
சீனாவின் புளூ-சிப் CSI300 குறியீடு அன்றைய வர்த்தகத்தில் 0.60% உயர்ந்தது. இந்த நேர்மறையான சூழல், ஏவிக் செங்டூ உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பங்குகளிலும் எதிரொலித்தது.
சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று மோடி, ஜிங்பிங்கிடம் கூறினார். கிட்டத்தட்ட 99.2 பில்லியன் டாலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறை குறித்தும் அவர் குறிப்பிட்டார். 2020-ல் நடந்த மோதல், ஐந்தாண்டு கால இராணுவ மோதல் நிலைக்கு வழிவகுத்த எல்லை சர்ச்சையில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்தியா மற்றும் சீனா இடையேயான பதட்டங்கள் குறைவதானது, இராணுவ மோதல்கள் குறித்த சிக்கல்களைக் குறைத்து, குறிப்பிட்ட சில சீன பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஜிங்பிங்-மோடி சந்திப்பு
ஜி ஜின்பிங், SCO உச்சிமாநாடு 2025-ன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ரஷ்யா, மத்திய, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவின் தலைவர்களை ஒன்றுகூட்டும் இந்த இரண்டு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது தெற்குலக நாடுகளின் (Global South) ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ள நேரத்தில் இந்த SCO உச்சிமாநாடு நடைபெறுகிறது.
உலகளாவிய வரிக் கொள்கைகளில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்த மோடியும் ஜின்பிங்கும், இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, மாறாக வளர்ச்சிப் பங்காளிகள் என்று தெரிவித்தனர்.
ஏவிக் செங்டூ ஏர்கிராஃப்ட் பங்கு விலை நிலவரம்
இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, இந்த J-10 போர் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு கவனம் பெற்று வருகிறது. பாகிஸ்தான் விமானப்படை, இந்தியாவுக்கு எதிராக J-10 போர் விமானத்தை பயன்படுத்திய பிறகு, இந்த பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது; இருப்பினும், அது இந்தியாவின் இராணுவ வலிமையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது.
ஏவிக் செங்டூ ஏர்கிராஃப்ட் நிறுவனத்தின் பங்கு விலை, அன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 108.22 யுவானை எட்டியது. முந்தைய வர்த்தக முடிவில் அதன் விலை 101.95 யுவானாக இருந்த நிலையில், செப்டம்பர் 1 அன்று இந்த போர் விமானப் பங்கு 102.20 யுவானில் வர்த்தகத்தைத் தொடங்கியது.
ஏவிக் செங்டூவின் பங்கு சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து, முதலீட்டாளர்களின் செல்வத்தை அதிகரித்து வருகிறது. இந்த பங்கு ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 29 சதவீதமும், ஆறு மாதங்களில் 77 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கணக்கிட்டால், இந்த போர் விமானப் பங்கு 68.01 யுவானிலிருந்து தற்போதைய சந்தை நிலைக்கு உயர்ந்து, 56 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு