“நோ கிங்ஸ்”: ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள்

சிஎன்.என் - வெண்பா (தமிழில்)

“நோ கிங்ஸ்”: ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள்

அமெரிக்கா முழுவதும் நடந்த 'அரசர்கள் வேண்டாம் – நோ கிங்ஸ்' (No Kings) போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் ட்ரம்பிற்கு எதிராகப் பேரணி நடத்தினர். 

போராட்டக்காரர்கள் ஏன் கலந்துகொண்டனர் என்பதற்கான காரணங்களை ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பெக்கி கோல் இவ்வாறு கூறுகிறார்: அவர், தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாட, சனிக்கிழமை வாஷிங்டன், டி.சி.யில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மிச்சிகனில் உள்ள ஃப்ளிண்ட் என்ற தனது சொந்த ஊரிலிருந்து ஒரு நண்பருடன் கிட்டத்தட்ட 10 மணி நேரம் காரில் பயணித்ததாகக் கூறுகிறார். அமெரிக்கர்களுக்கு இது ஒரு “பயங்கரமான நேரம்” என்றும், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும் உணர்ந்ததால், இந்த முக்கியமான மைல்கல்லைப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் குறிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கோல் கூறினார். "நாம் சும்மா உட்கார்ந்திருந்து எதுவும் செய்யாவிட்டால், அவர் (ட்ரம்ப்) நம் அரசாங்கத்தையும், நம் ஜனநாயகத்தையும் துண்டு துண்டாக, மெதுவாக ஆனால் நிச்சயமாகக் கலைத்து விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது," என்று கோல் கூறினார்.

18.10.2025 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற 2,700க்கும் மேற்பட்ட "அரசர்கள் வேண்டாம்" பேரணிகளில் இதுவும் ஒன்றாகும். ட்ரம்பின் “சர்வாதிகார” நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகப் போராடினர். ட்ரம்ப் வாஷிங்டனில் இராணுவ அணிவகுப்பை நடத்தியபோது, அவரது ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் சுமார் 5 மில்லியன் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிய ஜூன் மாத நிகழ்வை விட இது நூற்றுக்கணக்கான மடங்கு அதிகம் ஆகும். 

சனிக்கிழமை பேரணிகளில் கிட்டத்தட்ட 7 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர் – இதில் நியூயார்க்கில் 1,00,000க்கும் அதிகமான மக்கள் இருந்தனர் என்று ஒருங்கிணைப்பாளர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர். பெரிய நகரங்களில் நடந்த மாபெரும் போராட்டங்களுடன், 'ரெட் ஸ்டேட்ஸ்' மற்றும் 'ப்ளூ ஸ்டேட்ஸ்' ஆகிய இரண்டிலும் உள்ள அதிக போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலைகள், சிறிய நகரச் சதுக்கங்கள், மாநகராட்சிப் பூங்காக்கள் என பல இடங்களில் "நோ கிங்ஸ்" போராட்டக்காரர்களின் குழுக்கள் ஆங்காங்கே தோன்றின.

அதிகபடியான குடியேற்றக் கட்டுப்பாடுகளின் அமலாக்கத்திற்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டங்கள், ஜனநாயகக் கட்சி ஆட்சி பகுதியிலுள்ள நகரங்களில் குவிக்கப்பட்ட தேசியப் படைகள் உருவாக்கிய கொந்தளிப்பான நிலை ஆகியவற்றை தொடர்ந்தே "நோ கிங்ஸ்” எனும் இந்த போராட்ட வடிவம் எடுத்தது. 

போர்ட்லாந்து மற்றும் நியூயார்க் நகர காவல்துறை, போராட்டங்கள் எந்தவிதமான கைதுகளும் இன்றி முடிவடைந்ததாகத் தெரிவித்தது. அன்றைய தினத்தின் பிற்பகுதியில் சில நபர்கள் போராட்டக்காரர்களை இலக்கு வைத்தபோது சிக்கல் ஏற்பட்டது: தென் கரோலினாவில் ஒரு பெண் ஆர்ப்பாட்டத்திற்கு அருகில் காரை ஓட்டிச் செல்லும்போது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்; மேலும் ஜார்ஜியாவில் ஒரு நபர் போராட்டக்காரரின் கொடியைப் பறித்து மற்றொரு ஆர்ப்பாட்டக்காரரைத் தரையில் தள்ளுவது காணொளியில் பதிவாகியிருந்தது.

ட்ரம்ப் ஆட்சி நிர்வாகமும் சில குடியரசுக் கட்சி (GOP) அதிகாரிகளும் இப்போராட்டங்களை "வன்முறை கொண்ட இடதுசாரி தீவிரவாதிகளின்" செயல் என்று சித்தரித்தாலும், " நோ கிங்ஸ்" போராட்டங்களுக்குப் பின்னணியில் உள்ள இன்டிவிசிபிள் ப்ராஜெக்ட் (Indivisible Project) அமைப்பு, தாங்கள் “அகிம்சை நடவடிக்கைக்கு” உறுதிபூண்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானோருக்குப் பாதுகாப்பு மற்றும் நிலைமையைச் சாந்தப்படுத்துதல் (de-escalation) குறித்துப் பயிற்சி அளித்துள்ளதாகவும் கூறுகிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் அரசியல் வன்முறைக்கு மத்தியில் இது மிகவும் முக்கியமானது என்று சில அமைப்பாளர்கள் தெரிவித்தனர். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருந்தனர் – இது ஒற்றுமையின் சின்னம் என்றும் பிற அகிம்சை வழியிலான எதிர்ப்பியக்கங்களுக்கான குறியீடு ஆகும் என்றும் அவர்கள் கூறினர். "அமெரிக்கா அதன் மக்களுக்கே சொந்தமானது, அரசர்களுக்கு அல்ல என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம் என்பதற்கான பிரகாசமான, சந்தேகத்திற்கு இடமில்லாத நினைவூட்டல் மஞ்சள்" என்று "நோ கிங்ஸ்" இணையதளத்தில் உள்ள ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

மற்ற போராட்டக்காரர்கள் காற்றடைக்கப்பட்ட கோழிகள், தவளைகள் மற்றும் டைனோசர்கள் போன்ற உடைகளை அணிந்திருந்தனர், இது ஆர்ப்பாட்டங்களின் அமைதியான தன்மையை வலியுறுத்துவதாக சிலர் கூறினர். இசையுடன் நடனமாடும் போது யூனிகார்ன் உடை அணிந்திருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக்காரர் ஒருவர், "நீங்கள் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும்போது அது ஒரு தெரு விழாவாகவும் ஹாலோவீன் உடையில் மக்கள் இருக்கும்போது, அதை ஒரு போர் மண்டலம் என்று அழைப்பது மிகவும் கடினம்," என்று கூறினார். போராட்டக்காரர்கள் உரத்த குரலில் உற்சாகப்படுத்துவதும், ஒலிபெருக்கிகள் மூலம் "ஜனநாயகம் என்பது இதுதான்," என்றும் "வெறுப்பு இல்லை, பயம் இல்லை, குடியேறியவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்" போன்ற முழக்கங்களை எழுப்புவதும் கேட்க முடிந்தது. அவர்கள் ஐ.சி.இ (ICE – United States immigration and customs Enforcement), சர்வாதிகாரம் மற்றும் பில்லியனர்களை எதிர்த்து எழுதப்பட்ட பலகைகளுடன் அமெரிக்கக் கொடிகளையும் அசைத்தனர்.

சிஎன்என் (CNN) ஊடகக் குழுக்கள் நாடு முழுவதும் உள்ள பேரணிகளில் கலந்துகொண்டவர்களுடன் பேசின. போராட்டக்காரர்கள் என்ன சொன்னார்கள் என்பது இங்கே: ‘நாம் அனைவரும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்’ – ட்ரம்ப் ஆட்சி அதிகாரத்தை விரிவாக்க எடுக்கும் முயற்சிகளால் அது அரித்துக்கொண்டு வருகிறது என பல போராட்டக்காரர்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். அட்லாண்டாவில் நடந்த ஒரு போராட்டத்தில் ஜோன் ப்ரெஸ் சிஎன்என்-னிடம் கூறுகையில், "நாம் ஒரு ஜனநாயகம். ஒரு ஜனநாயகத்தில், மக்கள் எழுந்து நின்று தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். நாம் வாயடைக்கப்பட மாட்டோம்," என்றார். அட்லாண்டா போராட்டத்தைத் தொடங்கி வைத்த பேரணி ஒன்றில் ஜார்ஜியாவின் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ரஃபேல் வார்னாக் உட்பட உயர்மட்டப் பேச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

"தனக்குச் சொந்தமில்லாத அதிகாரத்தைத் தானே எடுத்துக்கொள்ளும் ஒரு அதிபரையும் நிர்வாகத்தையும் நாம் பார்க்கும் இந்த நேரத்தில், எங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது," "இது அதிகாரத்தில் உள்ளவர்களைப் பற்றியது அல்ல, இது மக்களிடம் உள்ள அதிகாரத்தைப் பற்றியது" என்று வார்னாக் பின்னர் சிஎன்என் இடம் கூறினார். நாடு தழுவிய போராட்டங்களின் அலையை வழிநடத்த உதவிய இயக்கமான 50501-இன் ஜார்ஜிய பிரிவின் அமைப்பாளரும் தகவல் தொடர்பு இயக்குநருமான கிம்பர்லி டியேமர்ட், "அட்லாண்டா குடிமக்கள் உரிமை இயக்கத்தின் தொட்டில், அத்துடன் ஜனநாயகத்தின் தொட்டிலும் கூட... அதை நாம் இழக்க விரும்பவில்லை," என்று அந்நகரத்தின் குடிமக்கள் உரிமை மரபைப் பற்றி கூட்டத்தினருக்கு நினைவூட்டினார்.

நியூயார்க் நகரில், ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் ஆர்ப்பாட்டக்காரர் "நாங்கள் அமெரிக்காவை நேசிப்பதால் போராடுகிறோம், அது எங்களுக்கு மீண்டும் வேண்டும்," என்று எழுதப்பட்ட ஒரு பலகையை வைத்திருந்தார். 1960கள் முதல் தான் போராடி வருவதாகவும், ஆனால் இந்த முறை வேறுபட்டதாக உணர்வதாகவும் கூறினார். என்று அவர் கூறினார். "60களில் நாங்கள் உரிமைகளை விரிவாக்க விரும்பினோம் – பெண்களின் உரிமைகள், ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள், வாக்களிக்கும் உரிமைகள்" இவைகளுக்காக போராடினோம் - "ஆனால் இவை அனைத்தும் இப்போது பறிக்கப்படுகின்றன. இப்போது நம்முடைய ஒட்டுமொத்த ஜனநாயகமும், அடிப்படைத் தத்துவங்களான பத்திரிகை மற்றும் நீதித்துறையும் அச்சுறுத்தப்படுகின்றன,".  இவை "வருத்தத்தையும், எதையோ இழந்த உணர்வையும், பயத்தையும் அதிகரித்துள்ளது" என்று அவர் விவரித்தார். "நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் கூறினார். 

புரட்சிகரப் போர் காலத்து உடை மற்றும் செயற்கை முடிகளை அணிந்திருந்த 'ஆல் இன் ஃபார் டெமாக்ரசி' (All in for Democracy) குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாஷிங்டன், டி.சி.யில் நடந்த "நோ கிங்ஸ்" போராட்டத்தில் கலந்துகொண்டனர். கோட், செயற்கை முடி மற்றும் தொப்பி அணிந்திருந்த டி.சி. குடியிருப்பாளரான லீ அயர்ஸ் கூறுகையில், "நம்முடைய நிறுவனங்கள் அனைத்தும் மாறுவதை நான் பார்க்கிறேன், ஒரு நாடாக, மக்களாக நாம் இவ்வகை மாற்றத்தை விரும்பவில்லை". "சுதந்திரப் பிரகடனம் என்பது அரசர்கள் வேண்டாம் என்பதைப் பற்றியதுதான் என்பதை ஒட்டுமொத்த அமெரிக்காவும் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார். 

‘நம் கருத்துச் சுதந்திரம் அச்சுறுத்தப்படுத்துகிறது’ என்று பல ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.

நெப்ராஸ்கா - லிங்கன் என்ற தனது சொந்த ஊரிலிருந்து பல மணிநேரம் பயணித்து டி.சி.க்கு வந்து தனது முதல் போராட்டத்தில் கலந்துகொண்ட பாபி காஸ்டில்லோ கூறுகையில், "அரசு, பணியிடம், குடும்பம் ஆகியற்றிடமிருந்து எந்தவிதமான விளைவுகளுக்கும் பயப்படாமல், இப்போது நம்மால் அமைதியாகவோ அல்லது பாதுகாப்பாகவோ கூட நம் கருத்துக்களை வெளிப்படுத்த முடிவதாகத் தெரியவில்லை," என்றார். டி.சி. போராட்டத்தில் அவர், "தி சயின்ஸ் கை" என்று அழைக்கப்படும் பில் நை கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார். ட்ரம்ப்பும் அவரது கூட்டாளிகளும் "மாற்றுக்கருத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாது" என்று அவர் வாதிட்டார். 

முன்னாள் தொலைக்காட்சித் தொகுப்பாளரான நை கூறுகையில், "அவர்களுக்கு, நம் கருத்துச் சுதந்திரம் பயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் மக்களைக் கைது செய்கிறார்கள் - நீதிமன்றங்களில் சட்ட நடைமுறையை மறுக்கிறார்கள். தொலைக்காட்சித் தொகுப்பாளர்களை ஊமையாக்க முயல்கிறார்கள்" என்றார்.

ஆங்காங்கே சிறிய நகரங்கள் மற்றும் ஊர்களில் பங்கேற்றவர்கள், சனிக்கிழமை திரண்ட கூட்டத்தின் அளவால் தாங்கள் ஆச்சரியப்பட்டதாகக் கூறினர். ஓரிகானின் ஆஷ்லேண்டில், ஜோயல் லெஸ்கோ கூறுகையில், அந்த நாள் "அமெரிக்கா மீதான நம் அன்பை, கருத்துச் சுதந்திரத்தை, சமூகத்தின் முக்கியத்துவத்தை, பலதரப்பை உள்ளடகிய (diversity and inclusion) ஜனநாயகத்திற்காக நம் குரல்களைப் பயன்படுத்துவதைக் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான நாள்" என்றார். மிகவும் பின்தங்கியப் பகுதியான வட கரோலினாவின் ஹெண்டர்சன்வில்லில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, எழுத்தாளர் லின் அம்ஸ் சிஎன்என் இடம் கூறுகையில், "இந்த நாட்டை நீங்கள் நேசித்தால், அமெரிக்காவின் சின்னஞ்சிறு நகரம் உட்பட நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது முன்னுரிமையாகும் என்றார்.

குடியேற்ற ஒடுக்குமுறைகள் மற்றும் தேசியப் படையின் குவிப்பு 

பல போராட்டக்காரர்கள், தாங்கள் கலந்துகொண்டதற்குக் காரணம், தொடரும் குடியேற்ற ஒடுக்குமுறை மற்றும் சோதனைகளைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் முதலில் வெடித்த ஐ.சி.இ (ICE) எதிர்ப்புப் போராட்டங்களுக்கு எதிரான பெடரல் அரசின் அடக்குமுறைதான் காரணம் என்று கூறினர். இந்த ஆர்ப்பாட்டங்கள் அதன் பிறகு சிகாகோ, நியூயார்க், டல்லாஸ், போர்ட்லாந்து உள்ளிட்ட பல நகரங்களுக்கும் பரவியுள்ளன. 

மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் சட்டரீதியான வழக்குகளை எதிர்கொண்ட ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் தேசியப் படையை குவிக்க அவர் எடுத்த முயற்சிகளை – வன்முறையை அடக்கவும், குடியேறிகளை நாடுகடத்தவும் இது அவசியம் என்று வாதிடுகிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் கூட்டரசு குடியேற்றச் சோதனைகள் ஜூன் மாதம் பாரிய போராட்டங்களைத் தூண்டின, ஆளுநர் கவின் நியூசோம்-இன் விருப்பத்திற்கு எதிராக ட்ரம்ப் தேசியப் படையை அனுப்ப வழிவகுத்தன என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததோடு அவர்கள் அங்கு குடியேறியவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தினர். மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் நாடுகடத்தல் பிரச்சாரத்தை நிறுத்தக் கோரினர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மண்டபத்தின் முன் அமர்ந்திருந்த கில்பர்டோ பீஸ் சிஎன்என் இடம் கூறுகையில், இந்தப் போராட்டம் "ஐ.சி.இ (ICE) தான் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதற்கான ஒரு செய்தி" என்றார். லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்த மரியா ரிவேரா கம்மிங்ஸ் கூறுகையில், "நாம் அனைவரும் குடியேறியவர்கள்தான், இங்கு அனைவருக்கும் உரிமைகள் உள்ளன" என்றார்.

டி.சி.யில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில், குடியேறியவர்கள் மீதான “வெறுப்பு”, அமெரிக்க நகரங்களில் இராணுவத்தை குவிப்பது ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதாக மைக்கேல் லாங்பெல்ட் கூறினார். அவர் சிஎன்என் இடம் கூறுகையில், "பெடரல் அரசாங்கத்தில், குறிப்பாக நிர்வாகத் துறையில், அதிகார வரம்பை மீறுதல் அதிகம் இருப்பதாக நான் உணர்கிறேன்". "காங்கிரஸ் அதைப் பற்றி எதுவும் செய்வதில்லை". காற்றடைக்கப்பட்ட தவளை உடை அணிந்திருந்த 24 வயதான ஆர்ப்பாட்டக்காரரான ஹெய்லி, வாரக்கணக்கில் பெடரல் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து நின்ற போர்ட்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் தான் ஈர்க்கப்பட்டதாக சிஎன்என் இடம் கூறினார். அங்குள்ள போராட்டக்காரர்கள் ஐ.சி.இ (ICE) அலுவலுகத்துக்கு வெளியே நடந்த பேரணிகளில் காற்றடைக்கப்பட்ட ஆடைகளை அணிந்தனர் — இது, அந்த நகரத்தை “போரால் சீரழிந்த” நகரமாக ட்ரம்ப் சித்தரித்ததை மறுப்பதற்காகும் என்றார். மேலும் "நீங்கள் விரும்பும் ஒரு நாடு பாசிச அபாயத்திற்குள் வீழ்வதைப் பார்ப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன்," என்று ஹெய்லி சிஎன்என் இடம் கூறினார். 

ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் மையப்புள்ளியாக இருந்த சிகாகோவில், பலர் மெக்சிகன் கொடிகளையும், "எம் ஜனநாயகம் மீது கை வைக்காதே", "ஐ.சி.இ (ICE)யே வெளியேறு!" போன்ற பலகைகளையும் வைத்திருந்தனர். அமெரிக்க அரசாங்கத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுபவராக அறியப்படும் சிகாகோ குடியிருப்பாளரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் குசாக், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நகரத்தின் செய்தி: "நரகத்திற்குப் போங்கள்!". "நீங்கள் எங்கள் போராட்டப் படைகளை தடுக்க முடியாது. நீங்கள் அதிகாரத்தில் நீடிப்பதற்காகக் கலகச் சட்டத்தைக் (Insurrection Act) கோருவதற்குப் போதுமான குழப்பத்தை உங்களால் உருவாக்க முடியாது," என்றும் அவர் கூறினார்.

இல்லினாய்ஸின் கோல் சிட்டியைச் சேர்ந்த டகோட்டா இங்க்லெர்ட், அடிப்படை மனிதநேயத்திற்காக நிற்பதற்காகத் தான் வந்ததாகக் கூறினார். "நாம் அனைவருக்கும் ஒரே நிறத்தில்தான் இரத்தம் ஓடுகிறது... குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, தாக்கப்படுபவர்கள், கொல்லப்படுபவர்கள் ஆகியோருக்காக நான் வருந்துகிறேன்," என்று இங்க்லெர்ட் கூறினார். 

பெடரல் அரசின் மானிய வெட்டுக்கள் 

பெடரல் அரசின் திட்டங்களில் — குறிப்பாகச் சுகாதாரப் பராமரிப்பில் — ஏற்படும் மானிய வெட்டுக்கள் குறித்து மற்ற போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்கள், பெடரல் அரசாங்கம் மூடப்பட்டிருந்த நேரத்தில் நடந்தன. குடியரசுக் கட்சி (GOP) சட்டமன்ற உறுப்பினர்களும் வெள்ளை மாளிகையும் நிதி மசோதா தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருடன் மோதலில் சிக்கியிருந்தனர்.

இரண்டு குழந்தைகளின் தாயான டேனியல் குயின்டோ, மெடிக் எய்ட் (Medicaid) மற்றும் பிற சுகாதாரக் கொள்கைகளில் ஏற்படும் முக்கிய பெடரல் திட்ட மாற்றங்கள் தனது குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என்றும், அத்துடன் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு பற்றியும் கவலைப்படுவதாகக் கூறினார். சிகாகோ ஆர்ப்பாட்டத்தில் அவர் சிஎன்என் இடம் கூறுகையில், "மக்கள் வாயிலிருந்து உணவை எப்படிப் பறிக்க முடியும், மக்களை அவர்களின் வீடுகளிலிருந்துப் பிரித்து எப்படி வெளியேற்ற முடியும் என்று எனக்குப் புரியவில்லை," "கண்களில் பயத்துடன் இருக்கும் ஒரு குடும்பத்தைப் சுட்டிக்காட்டி, நீங்கள் அவர்களை எப்படி அழைத்துச் செல்லப் போகிறீர்கள்?" என்றார்.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் பணிபுரியும் - பணிநிறுத்தத்தைத் தொடர்ந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட பெடரல் ஊழியர்களுள் ஒருவரான ஆண்டனி லீ, பொதுச் சேவைகளைப் பாதுகாக்க இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததாகக் கூறினார். டி.சி.யில் உள்ள தேசிய கருவூல ஊழியர்கள் சங்கத்தின் (National Treasury Employees Union) பிரிவின் தலைவரான லீ, தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெட்ரல் ஊழியர்களின் குழுவுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். "நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அரசு ஊழியராக இருக்கிறேன், கடந்த பல மாதங்களாக நம் அரசாங்கத்தின், நம் பொதுச் சேவைகளின் அழிவைப் பார்ப்பது மிகக் கொடூரமாக இருக்கிறது," என்று லீ கூறினார். 

சஸ்பென்ட் செய்யப்பட்ட மற்றொரு பெடரல் அரசாங்க ஊழியர், ட்ரம்ப் நிர்வாகம் தனது வாழ்வாதாரத்தைப் பாதித்ததாலும், கூட்டரசு ஊழியர்களை "நசுக்கியதாலும்" டி.சி. போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறினார். அடக்குமுறைகளுக்குப் பயந்து தனது குடும்பப் பெயரைப் பகிர மறுத்த மோனிகா கூறுகையில், "இந்த வேலைப்பறிப்புகளானது மக்கள் தங்கள் வீடுகளைப் பராமரிக்கவும், ஒரு குடையின் கீழ் வாழவும், தங்கள் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பவும், அமெரிக்கக் கனவின் நம்பிக்கையைப் பெறவும் முடியாத அளவிற்கான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது,".

மேரிலாந்தைச் சேர்ந்த 25 வயதான சமூக சேவகர் எலிசபெத் நீ, பால்டிமோரில் தான் பணிபுரியும் மனநல மருத்துவமனையில் ஒரு தாக்கத்தைக் காண்பதாக சிஎன்என் இடம் கூறினார். "இங்கு நிறையப் பேர் வீடற்றவர்களாக வந்து கொண்டிருக்கிறார்கள், பலர் மெடிக் எய்ட் (Medicaid) திட்டத்தில் உள்ளனர். இப்போது எல்லாம் ஆபத்தில் உள்ளது," என்று அவர் கூறினார். 

டி.சி. போராட்டத்தில் பேசிய செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், ட்ரம்பையும் அவரது பில்லியனர் கூட்டாளிகளான எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்றோரையும் வெளிப்படையாகக் கண்டித்தார். "இந்தக் கணம் ஒருவரின் பேராசை, ஒருவரின் ஊழல் அல்லது அரசியலமைப்பிற்கு ஒருவரின் அவமதிப்பு பற்றியது மட்டுமல்ல," என்று சாண்டர்ஸ் கூறினார். "இது பூமியில் உள்ள மிகச் செல்வந்தர்கள் ஒரு சிலர், தங்களின் தீராத பேராசையினால், நாடு முழுவதும் உள்ள உழைக்கும் குடும்பங்களின் செலவில் தங்களைத் தாங்களே வளப்படுத்திக் கொள்வதற்காக, நம் பொருளாதாரத்தையும் நம் அரசியல் அமைப்பையும் கையகப்படுத்தியதைப் பற்றியது,".

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://edition.cnn.com/2025/10/19/us/protestors-voices-no-kings-trump

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு