உக்ரைன் போரில் ரஷ்யா தோற்பதை சீனா ஒருபோதும் ஏற்காது
ஐரோப்பிய ஒன்றியத்திடம் சீனா தெரிவித்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அயலுறவுச் செயலரிடம், உக்ரைன் போரில் ரஷ்யாவின் தோல்வியை சீனாவால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெளிவாகத் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. ரஷ்யா தோற்குமானால், அமெரிக்கா தனது முழு கவனத்தையும் சீனா மீது குவிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார் என்று உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். உக்ரைன் போர் குறித்து சீனா பொதுவெளியில் நடுநிலை வகிப்பதாக கூறிவந்த நிலைப்பாட்டிலிருந்து இந்தச் செய்தி முற்றிலும் மாறுபட்டதாகும்.
வாங் யி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைவர் காஜா கல்லாஸுடன் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நான்கு மணி நேரச் சந்திப்பின்போது இந்த முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அச்சந்திப்பில் இணையப் பாதுகாப்பு, அருமண் தனிமங்கள், வர்த்தகப் பிரச்சனைகள், தைவான் மற்றும் மத்திய கிழக்கு போன்ற பல தலைப்புகள் குறித்து பரஸ்பர மரியாதையுடன் கூடிய ஆழ்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
உக்ரைன் போர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என்று வாங் யியின் தனிப்பட்ட கருத்துரைகள் அமைந்திருந்ததாக சந்திப்பு விவரங்களை வெளியிட்ட அந்த உயர்அதிகாரி கூறியிருந்தார். இது அமெரிக்காவைத் தொடர்ந்து நிலை குலையச் செய்து வைத்திருக்க உதவுவதோடு, முழு கவனமும் சீனாமீது குவிவதைத் தடுக்கும். சீனா பொதுவெளியில் நடுநிலை வகிப்பதாக கூறிவருவதை விட, உக்ரைன் மோதலில் பெறுவதற்கும்/இழப்பதற்கும் சீனாவிற்கு நிறையவே உள்ளன என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்; மேலும் இக்கருத்தே உண்மை என்பதுபோலத்தான் வாங் யி’யின் பேச்சுகளும் அமைந்திருந்தன.
சீனா பொதுவெளியில் தொடர்ந்து நடுநிலை வகிப்பதையே வலியுறுத்தி வருகிறது. வழக்கமான செய்தியாளர் சந்திப்பின்போது, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங்கிடம் வாங் யியின் கருத்துக்கள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது கடந்த மூன்றாண்டு காலமாக உக்ரைன் போர் குறித்து என்ன கூறப்பட்டு வந்ததோ சீனாவின் அதே வழக்கமான நிலைப்பாட்டையே அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
உக்ரைன் மோதலில் தாம் நேரடியாகத் தலையிடவில்லை என்றும், உக்ரைன் நெருக்கடி குறித்த தமது நிலைப்பாடு எப்பொழுதும் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கே ஆதரவானது என்றும் சீனா கூறி வருகிறது. சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங், முடிந்தவரை விரைவில் ஒரு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், சீனா மற்ற நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும், இந்த இலக்கை அடைய ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்றும் கூறினார். உக்ரைனில் நீண்டகாலப் போர் எவருக்கும் பயன் தராது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், உக்ரைன் போர் குறித்த சீனாவின் வெளிப்படையான அறிக்கைகள் உண்மையான நிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை. ரஷ்யா உக்ரைன் மீது தனது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, சீனத் தலைவர் ஷி ஜின்பிங், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே "எல்லையற்ற" கூட்டணி இருப்பதாக அறிவித்தார். அதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் வணிக உறவுகள் உறுதி பெற்றுள்ளன.
அமைதியைக் கொண்டுவர விரும்புவதாகச் சீனா கூறினாலும், ரஷ்யா பலவீனமடைந்தால் சீனாவுக்குக் கணிசமான நலன்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் சீனாவுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்காளியாக ரஷ்யா விளங்குகிறது.
ரஷ்யாவிற்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைச் சீனா வலுவாக மறுத்து வருகிறது. ஆயினும், ட்ரோன்களுக்கான பாகங்கள் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யாவிற்கு வழங்கியதாகக் கூறப்படும் சில சீன நிறுவனங்கள் மீது உக்ரைன் தடைகளை விதித்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் ரஷ்ய ஆயுதங்களுடன் தொடர்புடையதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைனின் வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி சிபிகா, ரஷ்யாவின் ஜெரான் 2 ட்ரோனின் பாகங்கள் என்று அவர் அடையாளப்படுத்திய புகைப்படங்களைப் வெளியிட்டிருந்தார். அவற்றில் ஒரு பாகத்தில் ஜூன் 20 அன்று சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே நாள் இரவன்று ஒடேசாவில்(தெற்கு உக்ரைனில் உள்ள துறைமுக நகரம்) உள்ள சீனத் தூதரகக் கட்டிடம் ரஷ்யத் தாக்குதல்களால் சற்று சேதமடைந்ததாகவும் ஆண்ட்ரி சிபிகா குறிப்பிட்டார். வடகொரிய வீரர்கள், ஈரானிய ஆயுதங்கள் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட சில பொருட்களைப் பயன்படுத்தி ரஷ்யா போரை எவ்வாறு தீவிரப்படுத்துகிறது என்பதற்கும், பிற நாடுகளை எவ்வாறு இதில் ஈடுபடுத்துகிறது என்பதற்கும் இது ஒரு தெளிவான உதாரணமாகும் என்றும் அவர் கூறினார். ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளின் பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்றும் அவர் அழுத்தமாக பேசியிருந்தார்.
மேலும், இந்த ஆண்டு சில சீனர்கள் உக்ரைனில் ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து போரில் பங்கேற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சீன அரசாங்கம் இதில் தமது ஈடுபாட்டை மறுத்துள்ளதுடன், தமது குடிமக்கள் உக்ரைனில் எந்தச் போரிலும் பங்கேற்பதற்கு எதிராக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://share.google/TGkKT8XOFNhm8ZsBY