காசாவின் அழிவு: இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகாலத் தாக்குதல்

தி கார்டியன் - தமிழில்: வெண்பா

காசாவின் அழிவு: இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகாலத் தாக்குதல்

காசாவில் நடந்த பேரழிவு தரும் போர் அதன் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதற்குக் காரணமான 1948 மோதலுக்குப் பிறகு அந்நாடு நடத்திய மிக நீண்ட போராகும்.

காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களே. மேலும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை இப்போது 67,000ஐ தாண்டியுள்ளது. ஒரே வான்வழித் தாக்குதலில் மொத்த குடும்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே - ஒரு குழந்தை மட்டுமே  பெரும்பாலான குடும்பங்களில் உயிருடன் எஞ்சியுள்ளனர். கிட்டத்தட்ட 1,70,000 பேர் காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, போருக்கு முன்னர் காசாவின் மக்கள் தொகையான 2.3 மில்லியனில் சுமார் 10% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது காசாவின் பெரும்பகுதியை மூடியுள்ள இடிபாடுகளில் கணக்கிடப்படாத இறந்தவர்கள் இன்னும் பலர் இருக்கக்கூடும். சிகிச்சை அளிக்கப்படாத நோய்கள், மோசமான ஊட்டச்சத்து, தற்கொலை அல்லது போர் தொடர்பான பிற காரணங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. தொலைந்து போனவர்கள், எரிந்து சாம்பலானவர்கள், அல்லது வெடிப்புகளில் சிதறிப்போனவர்கள், அல்லது இஸ்ரேலால் ரகசிய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் காணாமலே போயுள்ளனர்.

காசாவுக்குச் செல்லும் விநியோகங்களை இஸ்ரேல் கட்டுப்படுத்தி தடை செய்துள்ளது, ஆனால் மார்ச் முதல் மே 2025 வரை விநியோகங்களுக்கு முற்றிலும் தடையை விதித்தது. ஹமாஸ் தனது இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதிதிரட்ட உதவிகளை திருடுவதாக இஸ்ரேல் கூறியது. சர்வதேச கொந்தளிப்புக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் இறுதியில் தளர்த்தப்பட்ட போதிலும், ஆகஸ்ட் மாதம் காசாவின் சில பகுதிகளில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது.

காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல், இனப்படுகொலை (genocide) குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளது, இதை இஸ்ரேல் மறுத்துள்ளது. செப்டம்பரில், ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையருக்காகப் பணிபுரியும் தனியார் நிபுணர்கள், காசாவில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் அழிவானது இனப்படுகொலை வரையறுக்குள் சென்றுவிட்டது என்றனர். இஸ்ரேல் இதையும் மறுத்துள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் (hostages) பிடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தூண்டுதலாகக் கொண்ட இந்த போர், காசாவை உடல் ரீதியாகவும் மனித ரீதியாகவும் அழித்துள்ளது. அப்பகுதியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பாலஸ்தீனியர்களும் பல முறை இடம்பெயர்ந்துள்ளனர். முழு நகரங்களும் தூசி மற்றும் உடைந்த கான்கிரீட்டுகளாக குலைந்துவிட்டன. தாக்குதல்களின் சாட்சிகள், சில உணவு விநியோக தளங்களைச் சுற்றியுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் இதனை “பூமியில் நரகம்” என்று விவரிக்கின்றனர்.

காசாவுக்கும் அதன் மக்களுக்கும் ஏற்பட்ட போரின் இழப்புகளின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்

காசாவில் 67,074 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

காசாவில் 1,68,716 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவிற்குள் 67,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களே. குறைந்தது 20,000 பேர் குழந்தைகள் – இது காசாவின் குழந்தைத் தொகையில் சுமார் 2% ஆகும்.

1,68,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலருக்கு போர்வீரர்களுக்கு ஏற்படும் அளவுக்கான கொடூரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய மருத்துவ ஆய்வின்படி தெரியவந்துள்ளது.

பட்டினி, தங்குமிடம் மற்றும் மருந்துகள் இல்லாமை, விபத்துகள், தொற்று நோய்களின் விரைவான பரவல் மற்றும் சுகாதார அமைப்பின் சரிவு ஆகியவற்றால் மேலும் பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற மருத்துவ இதழான 'தி லான்செட்'டில் (the Lancet) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, போரின் முதல் ஆண்டில் காசாவில் ஆயுட்காலம் பாதியாகக் குறைந்திருக்கலாம்.

ஹமாஸ் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதால், காசாவின் சுகாதார அதிகாரிகள் நம்பகமான புள்ளிவிவரங்களை வழங்க முடியாது என்று கூறி, காசாவில் உள்ள அதிகாரிகளால் வழங்கப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை இஸ்ரேலிய அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் செப்டம்பரில் இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் தளபதி ஹெர்சி ஹலேவி, காசா போரில் 2,00,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று கூறினார். இந்த ஆண்டு மே மாதம் வரையிலான உயிரிழப்புகள் குறித்த கசிந்த இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறைத் தரவுகள், இறந்தவர்களில் 80% க்கும் அதிகமானோர் பொதுமக்கள் என்று தெரிவித்தன. “இது மென்மையான போர் அல்ல. முதல் நிமிடத்திலிருந்தே நாங்கள் கையுறைகளை கழற்றிவிட்டோம்,” என்று ஹலேவி கூறினார்.

அழிவு மற்றும் இடப்பெயர்வு

4,36,000 வீடுகள் அழிக்கப்பட்டன (மொத்தத்தில் 92%)

காசாவில் 21 இலட்சம் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்தனர் (மக்கள் தொகையில் 95%)

இஸ்ரேலின் தீவிர வான்வழி தாக்குதல்கள் - கைப்பற்றிய பகுதிகளை வேண்டுமென்றே தரைமட்டமாக்கும் தந்திரோபாயம் காரணமாக, காசாவில் மதிப்பிடப்பட்ட 2,50,000 கட்டிடங்களில் 78% சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. இதனால் 61 மில்லியன் டன்கள் இடிபாடுகள் உருவாகியுள்ளன. இதில் சுமார் 15% கல்நார் (asbestos), தொழில்துறை கழிவுகள் அல்லது கன உலோகங்களால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம்.

காசாவின் நிலப்பரப்பில் 80% க்கும் அதிகமான பகுதி தற்போது இஸ்ரேலிய இராணுவ வெளியேற்ற உத்தரவின் கீழ் அல்லது போர் மண்டலத்தின் கீழ் உள்ளது அல்லது பாலஸ்தீனியர்களுக்கு வேறுவிதமாகக் தடை செய்யப்பட்டுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில், மற்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த ஏராளமான மக்கள் தஞ்சம் புகுந்திருந்த காசா நகரில் இஸ்ரேலிய தாக்குதல், இலட்சக்கணக்கான மக்கள் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்தமாக, சுமார் 21 இலட்சம் மக்கள், அதாவது மக்கள் தொகையில் 95% பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று உதவி நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன. "இது ஒரு அதிர்ச்சியூட்டும், வன்முறை நிறைந்த செயல், இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. முற்றிலும் எல்லாவற்றையும் இழந்த மக்கள் உள்ளனர்," என்று கடந்த வாரம் யுனிசெஃப் (Unicef) அமைப்பைச் சேர்ந்த ஜேம்ஸ் எல்டர் கூறினார்.

தெற்கில் உள்ள அல்-மவாசி உட்பட, நூறாயிரக்கணக்கான மக்கள் இப்போது கூடார நகரங்களிலும், மிகவும் நெரிசலான தங்குமிடங்களிலும் வாழ்கின்றனர். இங்கு சுகாதார வசதிகள் மற்றும் நீர் வசதிகள் மோசமடைந்துள்ளது.

தற்போது, 10 இலட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு ஆறு லிட்டர் நீர் கூட கிடைப்பதில்லை. அதே சமயம் 5,00,000 மக்கள் ஒன்பது லிட்டருக்கும் குறைவான நீரைக் கொண்டே வாழ்கின்றனர். இது போருக்கு முன் கிடைத்ததில் பத்தில் ஒரு பங்காகும்.

மசூதிகள், ஒட்டோமான் கால சந்தைகள், தேவாலயங்கள் மற்றும் பண்டைய தளங்கள் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் மற்றும் கல்வி

518 பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன (90% பள்ளிகள்)

7,45,000 குழந்தைகளும் பல்கலைக்கழக வயது மாணவர்களும் முறைசார் கல்வியை இழந்துள்ளனர்

அக்டோபர் 2023 முதல், காசாவில் உள்ள 7,45,000 மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிக்குச் செல்லவில்லை. இதில் 88,000 உயர் கல்வி மாணவர்கள் தங்கள் படிப்பை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

காசாவின் கல்வி உள்கட்டமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது: 90% க்கும் அதிகமான பள்ளி கட்டிடங்கள், 79% உயர் கல்வி வளாகங்கள் மற்றும் 60% தொழில் பயிற்சி மையங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஐ.நா.வின் யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ (Unrwa) நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளிகள் அவசரகால தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவை அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. ஆனால் அவற்றில் பல இஸ்ரேலால் குண்டு வீசப்பட்டுள்ளன, சில மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்களில் ஹமாஸ் போராளிகள் தஞ்சம் அடைவதாகவும், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் கூறி, தாங்கள் ஹமாஸ் போராளிகளை குறிவைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு

654 சுகாதார வசதிகள் தாக்கப்பட்டுள்ளன

1,700 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

கடந்த மாதம் வரை, காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் வெறும் 14 மட்டுமே ஓரளவு செயல்பட்டு வந்தன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களால் அமைக்கப்பட்ட தெற்கு காசாவில் உள்ள பதினாறு தற்காலிக மருத்துவமனைகள் (field hospitals) சில மாற்றுப் பராமரிப்புகளை வழங்குகின்றன, ஆனால் இவை பெரும்பாலும் நிரம்பி வழிகின்றன.

வட காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுக்கை நிரப்புதல் திறன் 240% சதவிகிதத்தையும், அல்-அஹ்லி மருத்துவமனையில் 300% சதவிகிதத்தையும் எட்டியதாக செப்டம்பர் மாத இறுதியில் அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட அனைத்து மருத்துவமனைகளும் இஸ்ரேலிய தாக்குதல்களால் சேதங்களைச் சந்தித்துள்ளன. அதில் ஒன்று இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பு (WHO) அக்டோபர் 7, 2023 முதல் ஜூன் 11, 2025 வரை காசாவில் சுகாதாரப் பராமரிப்பின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய 735 தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளது, இதில் 917 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,411 பேர் காயமடைந்தனர்.

மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர், தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

காசாவுக்குள் மருந்துகள் நுழைவதற்கு இஸ்ரேல் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக பல அத்தியாவசிய சிகிச்சைகள் கிடைக்கவில்லை. இது போரில் காயமடைந்தவர்கள், தங்குமிடம், உணவு மற்றும் நீர் பற்றாக்குறையால் தீவிரமடைந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க தயாரற்ற நிலையில் விட்டுள்ளது.

பசி மற்றும் உதவிப் பற்றாக்குறைகள்

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான 400 இறப்புகள்

ஐ.நா.வின் கூற்றுப்படி, போர் தொடங்கியதில் இருந்து ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான 400 இறப்புகள் (இதில் 101 குழந்தைகள் அடங்குவர்) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமீபத்திய மாதங்களில் நிகழ்ந்தவை. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இப்போது அவசரகால உணவுத் திட்டங்களில் உள்ளனர். ஆகஸ்டில், ஐ.நா ஆதரவு நிபுணர்கள் காசாவின் சில பகுதிகளில் பஞ்சம் (famine) நிலவுவதாக அறிவித்தனர்.

காசாவில் உள்ள பெரும்பாலான கர்ப்பிணித் தாய்மார்கள் நாளொன்றுக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்று அக்டோபரில் உதவிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

காசாவுக்குள் நுழையும் உதவிக்கு இஸ்ரேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், அப்பகுதிக்குள் விவசாய உற்பத்தியை அது அழித்ததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான குறுகிய கால போர்நிறுத்தத்தின் போது, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது ஏற்பட்ட எந்தவொரு முன்னேற்றமும், இஸ்ரேல் தடையை மீறி மீண்டும் போரைத் தொடங்கி, மே மாத நடுப்பகுதி வரை இரண்டு மாதங்களாக அனைத்து விநியோகங்களையும் தடுத்தபோது நிலைமை தலைகீழானது. அதன் பிறகு மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவுடைய காசா மனிதாபிமான அறக்கட்டளை உணவு விநியோகத்திற்காக அமைக்கப்பட்டது. ஆனால் இது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்தது.

காசாவிற்குள் வழங்கப்பட்ட பெரும்பாலான உதவிகள் நம்பிக்கையிழந்த, பசியுள்ள கூட்டத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டன. இப்போது சந்தைகளில் கிடைக்கும் விளைபொருட்களும் பொருட்களும் பெரும்பாலான மக்கள் வாங்க முடியாத விலையில் உள்ளன.

சுற்றுச்சூழல்

காசாவின் விவசாய நிலங்களில் பயிரிடக்கூடிய விகிதம் 1.5%

2023 ஆம் ஆண்டு முதல், காசா, அதன் மரப் பயிர்களில் 97%, புதர்க் காடுகளில் 95% மற்றும் அதன் வருடாந்திர பயிர்களில் 82% ஆகியவற்றை இழந்துள்ளது. இது பெரிய அளவில் உணவு உற்பத்தியை சாத்தியமற்றதாக்கியது.

இந்த அழிவானது சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்லுயிர், உணவுப் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சூழலியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஆகஸ்டில், 1.5% விவசாய நிலம் மட்டுமே அணுகக்கூடியதாகவும் சாகுபடிக்கு ஏற்றதாகவும் இருப்பதாக ஐ.நா. புள்ளிவிவரங்கள் காட்டின.

வெடிமருந்துகள் மற்றும் தீ விபத்துகளிலிருந்து வரும் நச்சுகள் மண் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தியுள்ளன.

‘மைன் ஆக்ஷன்’ (Mine Action) அமைப்பு, அக்டோபர் 2023 லிருந்து  132 வெடிக்கும் தாக்குதல் சம்பவங்களை (explosive ordnance incidents) ஆவணப்படுத்தியுள்ளனர். இதில் குறைந்தது 14 குழந்தைகள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 71 குழந்தைகள் உட்பட 249 பேர் காயமடைந்தனர்.

“நிலைமை மோசத்திலிருந்து மிக மோசமாகி வருகிறது. இது தொடர்ந்தால், காசா மக்களின் தலைமுறைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் அழிவின் பாரம்பரியத்தை விட்டுச்செல்லும்,” என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.theguardian.com/world/ng-interactive/2025/oct/07/the-ruin-of-gaza-how-israel-two-year-assault-has-devastated-the-territory?utm_source=whatsappchannel

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு