பிரிக்ஸ் உச்சிமாநாடு: ரஷ்ய, சீன அதிபர்கள் புறக்கணிப்பு – கூட்டமைப்பின் முக்கியத்துவம் குறைகிறதா?

தமிழில்: விஜயன்

பிரிக்ஸ் உச்சிமாநாடு: ரஷ்ய, சீன அதிபர்கள் புறக்கணிப்பு – கூட்டமைப்பின் முக்கியத்துவம் குறைகிறதா?

பிரேசிலில் ஞாயிறன்று (ஜுலை - 6) தொடங்கவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு, ரஷ்யாவும் சீனாவும் தங்களது உயர்மட்டத் தலைவர்களை அனுப்பவில்லை. அண்மையில் புதிய நாடுகள் இக்கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர், இக்கூட்டமைப்பின் கொள்கை ரீதியிலான முக்கியத்துவம் குறைந்துவிட்டதற்கான ஓர் அறிகுறியாகவே இந்த புறக்கணிப்பு அமையக்கூடும்.

72 வயதான சீன அதிபர் ஷி ஜின்பிங், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பிரிக்ஸ் கூட்டங்களில் தவறாது பங்குபெற்று வந்தவர். எனினும், இவ்வாண்டு அவர் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருக்கிறார். அவருக்குப் பதிலாக, சீனா தனது இரண்டாம் நிலை உயர்பதவி வகிக்கும் பிரதமர் லி கியாங்கை அனுப்பி வைத்துள்ளது. ஷி ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து சீன அரசு எவ்விதத் தெளிவான விளக்கத்தையும் வழங்கவில்லை; மாறாக, அவருக்கு வேறு பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இம்மாநாட்டிற்கு வரவில்லை. அவருக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது ஆணை பிறப்பித்துள்ளதால், அவர் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். மாநாட்டை நடத்தும் பிரேசில், ஐ.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு என்பதால், அவரைக் கைது செய்வது குறித்த சங்கடமான சூழலைத் தவிர்க்கும் பொருட்டு புதின் இக்கூட்டத்தைத் தவிர்க்க முடிவெடுத்திருக்கக்கூடும்.

கடந்த 2023ஆம் ஆண்டு, புதின் மங்கோலியாவிற்குச் சென்றிருந்தபோது, கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் அவரைக் கைது செய்யத் தவறியதன் விளைவாக, மங்கோலியா ஐ.சி.சி. உடனான பெரும் சிக்கல்களை எதிர்கொண்டது.

அதேபோல, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டத்தையும் புதின் புறக்கணித்தார். அப்போது, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, புதின் கைது செய்யப்பட மாட்டார் என உறுதியளிக்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அக்காரணத்தினாலேயும்கூட புதின் அந்த மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்த்திருக்கலாம்.

உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக நாடுகடத்துவதற்கு புதின் முக்கிய கருவியாக செயல்பட்டுள்ளார் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரவலாகக் வளர்ந்த நாடுகளின் ஜி7 (G7) கூட்டமைப்பிற்குப் மாற்றாக, வளர்ந்து வரும் நாடுகளின் ஒருங்கிணைந்த குரலாகப் கருதப்படும் பிரிக்ஸ், வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. எனினும், அதன் இந்த வியத்தகு வளர்ச்சி, கூட்டமைப்பின் உள் ஒருமைப்பாட்டைக் குலைத்து, ஜி7 முன்னிறுத்தும் மேற்கத்திய முதலாளித்துவ முறைக்கு மாற்றானதொரு பாதையை வகுக்க வேண்டும் எனும் அதன் அடிப்படை நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பு 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளால் தொடங்கப்பட்டது. அப்போது அது 'பிரிக்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. 2010 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா இணைந்த பிறகு, இதன் பெயர் 'பிரிக்ஸ்'(BRICS) என மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு, இக்கூட்டமைப்பு மேலும் விரிவடைந்து, தன்னுடன் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துக்கொண்டது:

o இந்தோனேஷியா

o ஈரான்

o எகிப்து

o எத்தியோப்பியா

o சவுதி அரேபியா

o ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

புதிதாகச் சேர்ந்த இந்த நாடுகள் வெவ்வேறு பொருளாதார வளர்ச்சி நிலைகளில் உள்ளன. மேலும், மேற்குலக நாடுகளுடனான அவற்றின் உறவுகளும் வேறுபடுகின்றன — சில நாடுகள் மேற்குலகை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாடு கொண்டவை என்றால், வேறு சில நாடுகள் நடுநிலையைக் கடைப்பிடிப்பவையாக இருக்கின்றன.

உலகம் எவ்வாறு நிலைமாறி வருகிறது என்பதற்கும், புதியதோர் உலக ஒழுங்கு எவ்வாறு படிப்படியாக வடிவம் பெற்று வருகிறது என்பதற்கும் பிரிக்ஸ் ஒரு நேரடிச் சான்றாகவே திகழ்கிறது என்று பிரேசில் குறிப்பிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பின் “அமெரிக்கா முதன்மை” (America First) எனும் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்கா மட்டுமே உலகின் ஒரே வல்லரசு அதாவது அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கு என்ற கருத்தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மாறிச் செல்வதாக அண்மையில் அயலுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் உரையாற்றியபோது, பிரேசிலின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், இங்கிலாந்துக்கான தற்போதைய தூதருமான அன்டோனியோ பாட்ரியோடா  தெரிவித்திருந்தார். உலகளாவிய அதிகாரம் தற்போது பல நாடுகளிடையே சமமாகப் பரவத் தொடங்கிவிட்டதாகவும், இது ஒரு 'பல்முனை' உலக அமைப்புக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"சில குறிப்பிடப்பட்ட கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவதன் வாயிலாக — எடுத்துக்காட்டாக, இறக்குமதிகளின் மீது மேலதிக காப்பு வரிகளைச் சுமத்துவதும், தன் முடிவுகளைத் தன்னிச்சையாகவே எடுப்பதில் பிடிவாதமாக இருப்பதும் போன்றவை — அமெரிக்கா, பல்வேறு பரிமாணங்களில், பன்முக உலக ஒழுங்கு உருவாகும் நிலையை விரைவுபடுத்துகிறது," என்று அன்டோனியோ பாட்ரியோட்டா சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் உரைக்கையில், எதிர்காலத்தில் தேசங்களிடையே புதிய கூட்டணிகள் உருவாகக்கூடும் என்றும், இப்புதிய கூட்டணிகள், உலகில் தற்போது அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள முறையையே கேள்விக்குள்ளாக்கத் தலைப்படலாம் என்றும் தெரிவித்தார்.

"நவீன காலகட்டத்தில், வர்த்தகம், பாதுகாப்பு அல்லது ஜனநாயகத்தின் பாதுகாப்பைப் பேணுதல் போன்ற அதிமுக்கிய விவகாரங்களில் அமெரிக்காவிற்கு முழுமையான ஆதரவை ஐரோப்பா தங்குதடையின்றி வழங்குகிறது என்று வாயாரச் சொல்வது இயலாத காரியம். முன்னதாக, மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் அமெரிக்கத் தலைமையின் கீழ் ஒருமித்த பாதையில் பயணித்தன. ஆனால் இப்போதோ, இரண்டு தனித்த மேற்கத்திய நிலைப்பாடுகள் முனைப்படைந்துள்ளதாகத் தெரிகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கான வரவேற்பு பதாகைகள் கண்ணைக்கவருகின்றன. இந்த நிகழ்வில் ரஷ்ய மற்றும் சீனத் தலைவர்கள் கலந்துகொள்ளாதது, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பிரேசில் நாட்டிற்கு உண்மையில் வரவேற்கத்தக்கதொரு வாய்ப்பாகவே அமையலாம். ஏனெனில், உலகளாவிய முடிவெடுக்கும் நடைமுறைகளில், நியாயமான, அனைவரையும் உள்ளடக்கியதுமான மாற்றங்களை முன்னெடுத்துரைப்பதில் பிரேசில் தன் முழு கவனத்தையும் குவித்து வருகிறது.

வளர்ந்து வரும் நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான விவாதங்களில், பிரேசில் ஒரு முக்கியப் பங்களிப்பாளராகத் திகழும் இச்சூழலில், இந்த வார இறுதியில்(ஜுலை 6) நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீனத் தலைவர்கள் பங்கேற்காமல் இருப்பது, பிரேசிலுக்குச் சில தனித்துவமான அனுகூலங்களை வழங்கக்கூடும். வல்லரசு நாடுகளுக்கு மட்டுமின்றி, அனைத்து நாடுகளுக்கும் சர்வதேசத் தீர்மானங்களில் உரிய பங்கு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், உலகளாவிய அமைப்புகளைச் சீர்திருத்த வேண்டும் என்ற கருத்தை இந்த உச்சி மாநாட்டின் வாயிலாக பிரேசில் அழுத்தமாக வலியுறுத்த விரும்புகிறது. மேற்குலக நாடுகள் மத்திய கிழக்கையும் உக்ரைனையும் கையாளும் விதம் குறித்த ஒரு விவாதக் களமாக மட்டுமே இந்த உச்சி மாநாடு சுருங்கிவிடுவதை பிரேசில் ஒருபோதும் விரும்புவதில்லை.

உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கும் நாடான பிரேசில், சில தெளிவான செயல்திட்டங்களை முன்வைத்துள்ளது. அவை பின்வருமாறு:

தூய எரிசக்தி நோக்கிய பயணத்திற்கு வலு சேர்ப்பது.

தடுப்பூசிகளை உருவாக்குவதிலும், அவற்றைப் பகிர்வதிலும் ஒன்றிணைந்து செயல்படுவது.

உலக வர்த்தக கழகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சமமான வர்த்தக உரிமைகளை வழங்குவது. அதாவது வர்த்தகத்தில் சமநிலையான அணுகுமுறை என்று அழைக்கப்படும், "மிகவும் விருப்பமான நாடு" (most-favoured nation) அந்தஸ்தை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் வழங்குவது.

உலகில் தற்போது பலதரப்பட்ட நாடுகளின் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், இந்த புதிய பன்முக உலக ஒழுங்கு (multipolarity) இயல்பாகவே நிலையற்றதாக உள்ளது என்று அன்டோனியோ பாட்ரியோட்டா கூறினார். எனினும், இதனால் ஏற்படக்கூடிய தீங்குகளைவிட ஒரு நாடு தனித்துச் செயல்பட்டு, மற்றவர்களின் சார்பாகத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போதுதான் ஒற்றை வல்லரசின் கீழான உலக ஒழுங்கு(unilateralism) நீடிக்கும் போதுதான் உலக நாடுகள் மேலதிகமான சிக்கல்களை எதிர்கொள்கிறது என்பதே அவரின் வாதமாக இருந்தது.

""நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பைப் அதாவது பன்முக உலக ஒழுங்கை பேணுவதற்கு வலுவான ஆதரவு நிலவுகிறது," என்று அவர் கூறினார், "ஆனால், தற்போதைய உலக கட்டமைப்பு பன்முக உலக ஒழுங்கு உருவாவதற்கு உதவும் என்று சொல்ல முடியாது". "நடைமுறைகளை மாற்றுவதற்காக, ஒரு உலகப் போர் அல்லது மற்றொரு பெரும் பேரழிவு நிகழும் வரை நாம் காத்திருக்கக் கூடாது என பிரேசில் அழுத்தமாக நம்புகிறது" என்று அவர் மேலும் விளக்கினார். "இந்த அமைப்பை மேம்படுத்த நாம் இப்போதே உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இதைச் சீர்செய்வது மிகவும் கடினமாகிவிடும் ஒரு அபாயகரமான கட்டத்தை நாம் எட்டிவிடக்கூடும்".

சேதம் ஹவுஸ் ஆய்வு மையத்தின் (Chatham House) லத்தீன் அமெரிக்க விவகாரங்களுக்கான முதுநிலை வல்லுநர் டாக்டர் கிறிஸ்டோபர் சபடினி, பிரிக்ஸ் கூட்டமைப்பிற்குத் தலைமை ஏற்பதும், அதன் முதன்மையான நிகழ்ச்சி நிரலை வகுப்பதும் பிரேசிலுக்குப் பெருத்த சங்கடமாக அமையக்கூடும் என்று கருத்துரைத்துள்ளார். "பிரிக்ஸ் அமைப்பு புதிய நாடுகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு முன்னரேயே, அதனை நிர்வகிப்பது பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாகவே திகழ்ந்தது — ஆரம்பத்தில் அதன் இலக்குகள் உன்னதமானதாகவும், அத்தியாவசியமானதாகவும் இருந்தபோதிலும் கூட கூட்டமைப்பாக இயங்குவது சிக்கலுக்குரியதாகவே இருந்தது," என்று அவர் எடுத்துரைத்தார்.

ஐ.நா. சபையை விரிவாக்குவது ஒரு காலகட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் முதன்மை இலக்குகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. எனினும், இந்தியா நிரந்தர உறுப்பினராகப் பதவி ஏற்பதற்குச் சீனா ஒருபோதும் ஆதரவுக்கரம் நீட்ட வாய்ப்பில்லை என்றும் கிறிஸ்டோபர் சபடினி சுட்டிக்காட்டினார். மேலும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதாக பிரேசில் வழங்கிய உறுதிமொழி, சவுதி அரேபியா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளின் நலன்களுக்கு முரணாக அமையக்கூடும் என்றும் அவர் எடுத்துரைத்தார். காரணம், அந்நாடுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அடியொற்றியே இயங்குகின்றன. (இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், காலநிலை மாற்றம் குறித்து பிரேசில் அரசு அடிக்கடி வெளிப்படையாகப் பேசினாலும், அந்நாடு தமது எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது).

அமெரிக்க டாலருக்கு மாற்றாக அமையக்கூடிய புதிய பிரிக்ஸ் நாணயம் ஒன்றை உருவாக்கும் யோசனையை இந்தியாவும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

இந்தச் சூழலிலும் கூட, உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்காதது வியப்பையே ஏற்படுத்துகிறது. சமீப காலங்களில், உலகளாவிய தலைமைப் பொறுப்பிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ள நிலையில், சர்வதேச அளவில் தலைமைப் பொறுப்பில் வலிமையானதொரு இடத்தைப் பிடிப்பதற்குச் சீனாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியது. ஷீ இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வார் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர் — ஆயினும், அவர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என தீர்மானித்துள்ளார்.

சேதம் ஹவுஸின் உலகளாவிய ஆட்சிமுறை மையத்தின் (Centre for Global Governance) இயக்குநர் டாக்டர் சமீர் பூரி, புதியதொரு உலக ஒழுங்கு உண்மையில் உருவாகி வருகிறதா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார். "ஒரு உலக ஒழுங்கு முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்காக, புதியதொரு ஒழுங்கு உடனடியாகத் தோன்றிவிடும் என்று பொருள் கொள்ள முடியாது," என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்கா சர்வதேசத் தலைமைப் பொறுப்பிலிருந்தும், ஒத்துழைப்புப் பணிகளிலிருந்தும் பின்வாங்குகையில், அது விட்டுச் செல்லும் வெற்றிடத்தை மற்ற நாடுகள் தாமாகவே நிரப்பிவிடும் என்பதும் சாத்தியமல்ல என்றும் அவர் கூறினார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.theguardian.com/business/2025/jul/05/leaders-of-russia-and-china-snub-brics-summit-in-sign-groups-value-may-be-waning?CMP=share_btn_url&fbclid=IwY2xjawLXE05leHRuA2FlbQIxMQABHi_AWIxWQQuriNCl7OAnkUvM8r5kU8OGtBNiomDwsklNK6lNU_yGpTDTa0vS_aem_F6j0vH5npkGH6i_43oFd5A&sfnsn=wiwspwa