பிரிக்ஸ் நாடுகள் மாஸ்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, டாலர் நீக்கத்தின் புதிய கட்டத்தை எட்டியுள்ளன

வெண்பா (தமிழில்)

பிரிக்ஸ் நாடுகள் மாஸ்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, டாலர் நீக்கத்தின் புதிய கட்டத்தை எட்டியுள்ளன

டாலர் நீக்க பிரிக்ஸ் முயற்சிகள் பெரிய நகர்வை எடுத்து வைத்துள்ளன. உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் ரஷ்யாவில், தங்களது தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் அக்டோபர் 28, 2025 அன்று மாஸ்கோ நகர டூமாவில் (Moscow City Duma) கையெழுத்திடப்பட்டது, மேலும் இதில் மேயர்கள், நகர சபைத் தலைவர்கள், மற்றும் ஈரான் போன்ற புதிய உறுப்பினர்கள் உட்பட பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை குறைத்து, மேற்கத்திய ஆதிக்கம் நிறைந்த நிதி அமைப்புகளுக்கு வெளியே செயல்படும் பலமுனை உலகப் பொருளாதாரத்தை நிறுவுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை பிரிக்ஸ் நாடுகள் முன்னெடுப்பதை மாஸ்கோ ஒப்பந்தம் குறிக்கிறது.

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைநகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த நகர அதிகாரிகளின் பங்கேற்புடன் இறுதி செய்யப்பட்டது. தெஹ்ரான் நகர சபைத் தலைவரான (Chairman) மெஹ்தி சம்ரான், பிரிக்ஸ் மேயர்கள் உச்சி மாநாட்டிற்கு ஈரானிய தூதுக்குழுவின் சார்பில் தலைமை தாங்கினார். பிரிக்ஸ் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து கையெழுத்திடும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

சம்ரான் கூறினார்:

“அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஒருதலைப்பட்ச நிலையை எதிர்க்கும் நோக்குடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

பிரிக்ஸ் ஒப்பந்தம் டாலர் நீக்கத்தையும் பலமுனை உலகப் பொருளாதாரத்தையும் பலப்படுத்துகிறது

மாஸ்கோ ஒப்பந்தம் டாலரை மையமாகக் கொண்ட நிதி அமைப்புகளுக்கு சவால் விடுகிறது

டாலர் நீக்கத்திற்கான பிரிக்ஸ்-ன் நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு முழுவதும் வேகம் எடுத்துள்ளது. இது அடையாள நடவடிக்கையாக மட்டும் இல்லை. உறுப்பு நாடுகள் தற்போது உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. டாலர் அமைப்புக்கு வெளியே பரிவர்த்தனைகளை எளிதாக்க நாடுகடந்த பண பரிமாற்ற அமைப்புகளை உருவாக்கி வருகின்றன. ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், அக்டோபர் 2025 இல் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வெளியிட்டார். ரஷ்யா தனது முக்கிய கூட்டாளிகளுடன் டாலரை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகத்திலிருந்து மாறுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது என்று அறிவித்தார்.

நோவாக் கூறினார்:

“சந்தையே தேசிய நாணயங்களில் தீர்வு காண்பதற்கான தேவையைப் பூர்த்தி செய்கிறது. உதாரணமாக, எங்கள் நண்பர்களாகிய சீனாவுடனும் இந்தியாவுடனான வர்த்தகங்களுக்கு நாங்கள் ஏற்கனவே 90-95% வரை தேசிய நாணயங்களுக்கு மாறிவிட்டோம். எந்தவொரு குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் இது தானாக நடக்கிறது. ஏனெனில் ஆதிக்கம் செலுத்தும் நாணயத்திலான வர்த்தகம், அந்தந்த நாடுகளின் நாணயத்தை அனுமதிப்பதில்லை".

பலமுனை உலகப் பொருளாதாரம் உள்ளாட்சி மன்றங்கங்களிடமிருந்து ஆதரவைப் பெறுகிறது

பிரிக்ஸ் நாடுகள் இந்த நேரத்தில் உலக மக்கள் தொகையில் பாதியையும், உலக உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று சம்ரான் தனது உரையின் போது வலியுறுத்தினார். உலகம் ஒருதலைப்பட்ச நிலை கொண்ட சகாப்தத்திலிருந்து அவர் விவரித்த புதிய பலமுனை ஒழுங்கிற்கு மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் அரசாங்கங்கள் மட்டத்தில் மட்டுமல்ல, குடிமக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்கும் நகர சபைகளிலும் கூட அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இந்த கூட்டணி தற்போது உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கிறது, மேலும் வளர்ந்து வரும் பலமுனை உலகப் பொருளாதாரத்தின் தூணாக அதன் செல்வாக்கை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது.

டாலர் ஆதிக்கம் பிரிக்ஸால் முடிவுக்கு வருவது பற்றி விவாதித்ததுடன், உலகளாவிய சக்திகளைச் சார்ந்துள்ள சர்வதேச நிறுவனங்களையும் சம்ரான் விமர்சித்தார். பாரம்பரிய அதிகார கட்டமைப்புகளில் இருந்து மிகவும் சுதந்திரமாக செயல்படக்கூடிய சாத்தியமான குரல்களாக நகர சபைகளை அவர் நிலைநிறுத்தினார்.

சம்ரான் வலியுறுத்தினார்:

“துரதிர்ஷ்டவசமாக, பல சர்வதேச அமைப்புகள், உலகளாவிய சக்திகளைச் சார்ந்திருப்பதால், அநீதி மற்றும் நிர்பந்த கருவிகளாக மாறிவிட்டன. இத்தகைய சூழ்நிலைகளில், நகர சபைகள் நாடுகள் மத்தியில் பகுத்தறிவு, அமைதி மற்றும் ஒற்றுமையின் குரலாகச் செயல்பட முடியும்.”

பிரிக்ஸ் மாஸ்கோ ஒப்பந்தம், பொருளாதார சுயாட்சி மற்றும் மேற்கத்திய நிதி அமைப்புகளில் இருந்து சுதந்திரம் பெறுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. உறுப்பு நாடுகள் தற்போது தங்கள் நிதி இறையாண்மையை (financial sovereignty) அதிகரிக்கவும், வரலாற்று ரீதியாக பல்வேறு வழிகளில் தங்கள் பொருளாதாரங்களைப் பாதித்த அமெரிக்க மத்திய வங்கியின் (U.S. Federal Reserve) கொள்கைகளுக்குத் தாங்கள் ஆளாவதைக் குறைக்கவும் பாடுபடுகின்றன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு - பலமுனை உலகப் பொருளாதாரத்தை நிறுவுவதற்கான இந்த இயக்கம், தேசிய அரசாங்கங்களில் இருந்து நகர நிர்வாகங்கள் வரை பல மட்டங்களில் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதைக் குறிக்கிறது.

நகரங்களும் தேசிய அரசாங்கங்களும் நிதி சுதந்திரத்திற்காக இணைகின்றன

இந்த பிரிக்ஸ் ஒப்பந்தம், டாலர் நீக்கத்தின் தற்போதைய செயல்பாட்டில் ஒரு நடைமுறை நடவடிக்கையைக் குறிக்கிறது. இந்த நாடுகள் அனைத்தும் உள்ளூர் நாணயப் பரிமாற்றம், உள்ளூர் பணம் செலுத்தும் அமைப்புகள், மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank) போன்ற உள்ளூர் வங்கிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட பொருளாதார சுயாட்சியை நோக்கி செயல்படுகின்றன. அவை மொத்த மக்கள் தொகை மற்றும் உற்பத்தியுடன், டாலர் ஆதிக்கம் நிறைந்த தற்போதைய அமைப்புகளுக்கு சவால் விடுகின்றன.

எனவே, மாஸ்கோவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை, பிரிக்ஸ் டாலர் நீக்கத்தில் முக்கிய படியாகப் பலர் பார்க்கிறார்கள். இதில் நகரங்களும் உள்ளூர் அதிகாரிகளும் தேசியத் தலைமைகளுடன் இணைந்து சர்வதேச பொருளாதார உறவுகளைச் சுறுசுறுப்பாக மறுசீரமைக்கிறார்கள்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://watcher.guru/news/brics-capitals-sign-moscow-pact-mark-new-phase-of-de-dollarization

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு