ட்ரம்ப்பின் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் இந்தியா-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து முன்னேறும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி
தி வயர் - தமிழில்: விஜயன்

ஆகஸ்ட் 1 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது: இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த காலத்தில் எத்தனையோ மாற்றங்களையும், சவால்களையும் கடந்து வந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இன்றும் உறுதியாகவே நிலைத்து நிற்கிறது. இந்த உறவு தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்பதில் தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது எனத் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவின் இறக்குமதி வரிகள் குறித்தும், ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததைத் தொடர்ந்தே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகம், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகளை "நிலையானது, பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும்" உறவு எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த நட்புறவு எந்தவொரு மூன்றாவது நாட்டின் கருத்தின் அடிப்படையிலும் மதிப்பிடப்படக் கூடாது என்றும் அது உறுதிபடத் தெரிவித்தது. ரஷ்ய எண்ணெய்யை கொள்முதல் செய்வதென்பது, சந்தையில் கிடைக்கும் தன்மை மட்டுமல்லாது சந்தை விலையின் அடிப்படையிலேயே அமையக்கூடியது என்றும் அமைச்சகம் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக வலியுறுத்தியிருந்தது.
இதற்கு முன்னதாக, புதன்கிழமை(ஜுலை 30) அன்று, இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்வதால், அபராதமும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்த புதிய வரி வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், வியாழக்கிழமை(ஜுலை 31) அன்று அதிபர் ட்ரம்ப் ஓர் ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையில் பல நாடுகளுக்கான புதிய வரிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன, மேலும் அது வரி அமலுக்கு வரும் தேதியை தற்போது ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு மாற்றி நிர்ணயித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களின் மீது புதிய வரிகளை அறிவித்தபோது, இந்தியா அமெரிக்காவின் “நண்பன்” என்றபோதிலும், அதன் இறக்குமதி வரிகள் “மிகவும் அதிகமாக உள்ளன” என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வரியல்லா வர்த்தகக் கட்டுப்பாடுகள் “உலகிலேயே மிகவும் கடினமானதாகவும் விரும்பத்தகாததாகவும்” உள்ளன என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியதுடன், ரஷ்யாவைப் போலவே இந்தியாவின் பொருளாதாரமும் “செயலிழந்துவிட்டது” எனப் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “நாங்கள் இந்தத் தடைகளைக் கூர்ந்து கவனித்து வருகிறோம்” என்றார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, பொதுவான நலன்கள், ஜனநாயகம், இருநாட்டு மக்களிடையேயான நெருங்கிய உறவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலுவான சர்வதேச கூட்டுறவு நிலவுகிறது என்று அவர் கூறியிருந்தார். கடந்த காலத்திலும் இக்கூட்டுறவு “பல மாற்றங்களையும் சவால்களையும்” எதிர்கொண்டதாகவும், இந்தியா “தொடர்ந்து முன்னேறும்” என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டிரம்ப் புதன்கிழமை தெரிவித்த கருத்துக்களையும், அதிபராகத் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியபோது அவர் வெளியிட்ட இதேபோன்ற அறிக்கைகளையும் கருத்தில் கொள்ளும்போது, நாடாளுமன்றத்திலும் சரி, பொதுமக்கள் முன்னிலையிலும் சரி, டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு இந்திய அரசு இன்னமும் மிகுந்த தயக்கத்துடன் பதிலளித்து வருவதையே இது எடுத்துக்காட்டுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் நிகழ்ந்த போர்நிறுத்தத்தை தானே முன்னின்று ஏற்பாடு செய்ததாக டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கூற்றுக்கு - மோடி அரசாங்கம் ஒருபோதும் ஏற்றிராத, எப்போதுமே மறுத்து வரும் கூற்றுக்கு - இந்தியா அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததா என்றும் ஜெய்ஸ்வாலிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
போர்நிறுத்த விவகாரம் தொடர்பாகப் பேசிய ஜெய்ச்வால், இந்தியாவின் நிலைப்பாடு கடந்த காலங்களில் பலமுறை மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதைச் செய்தியாளர்களுக்கு மீண்டும் வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் நிலைப்பாட்டை இதே இடத்தில் இதற்கு முன்னரும் வெளிப்படையாகவே விளக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா தனது எதிர்ப்பை ரகசியத் தூதரகச் செய்திகள் மூலம் அனுப்பாமல், தன் நிலைப்பாட்டைப் பகிரங்கமாகவே, உறுதியான குரலில் உலகறியச் செய்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்ப்பின் கடுமையான விமர்சனங்கள், குவாட் கூட்டனிக்குள் ஒருங்கிணைப்பைப் பாதிக்குமா அல்லது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குவாட் உச்சிமாநாட்டிற்கான அதிபரின் வருகை குறித்த எதிர்பார்ப்புகளில் சந்தேகங்களைத் தோற்றுவிக்குமா என்று கேட்டபோது, அமெரிக்காவுடனான தமது இருதரப்பு நட்பிலும், ஒத்துழைப்பிலும் இந்தியாவுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது என்று ஜெய்ச்வால் மீண்டும் அழுத்தந்திருத்தமாக அறிவித்தார்.
டிரம்ப்பின் கருத்துகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு குறித்த கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினர். வெவ்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் அவற்றின் உள்ளார்ந்த வலிமையையும் மதிப்பையும் அடிப்படையாகக் கொண்டவை என்றும், அவற்றை எந்தவொரு மூன்றாம் தரப்பு நாட்டின் கண்ணோட்டத்திலும் ஆராயப்படலாகாது என்றும் ஜெயஸ்வால் விளக்கினார். இந்தியாவும் ரஷ்யாவும் காலத்தால் அழியாத, நம்பிக்கைக்குரிய நட்புறவைப் பேணி வருகின்றன என்பதையும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
சில இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திவிட்டதாக வந்த செய்திகள் குறித்து, அரசின் நிலைப்பாட்டை ஜெயஸ்வால் மீண்டும் தெளிவுபடுத்தினார். எண்ணெய் கொள்முதலில் இந்தியா மூன்று பிரதான அம்சங்களைக் கருத்தில்கொண்டு முடிவெடுப்பதாக விளக்கமளித்தார்: முதலாவதாக, உலகளாவிய சந்தையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் வளங்கள்; இரண்டாவதாக, அந்தந்த தருணத்தில் கிடைக்கும் விலைச் சலுகைகள்; மூன்றாவதாக, விரிவான உலகளாவிய அரசியல் புவியியல் நிலை. செய்தியாளர் குறிப்பிட்ட அந்தச் சுத்திகரிப்பு ஆலை தொடர்பான விவரங்கள் தன்னிடம் இல்லை என்பதையும் அவர் சேர்த்துக் குறிப்பிட்டார்.
அமெரிக்கா பாகிஸ்தானின் எண்ணெய் வளத் துறையை மேம்படுத்திய பின்னர், வருங்காலத்தில் இந்தியா பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யவும் வாய்ப்புள்ளது என்று டிரம்ப் கூறியது குறித்து ஜெயஸ்வால் கருத்து எதனையும் தெரிவிக்காமல் மௌனம் காத்தார். பாகிஸ்தான் குறித்த வினாக்கள் எழுப்பப்படும்போதெல்லாம், அமைச்சகம் வழக்கமாக வழங்கும் தீவிரமான எதிர்வினைகளுக்கு இது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது.
எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் சலுகையை இந்தியா நிராகரித்துவிட்டதாகப் பரவிய செய்திகள் குறித்து கேட்டபோது, கடந்த பல பத்தாண்டுகளாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வந்துள்ளதாக ஜெயஸ்வால் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி பிப்ரவரியில் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது தொடங்கப்பட்ட "21 ஆம் நூற்றாண்டுக்கான இந்தியா-அமெரிக்கா காம்பாக்ட்" திட்டத்தின் கீழ், இவ்விரு நாடுகளின் உறவும் மேலும் வளர்ச்சி காணும் பெரும் வாய்ப்புகள் உண்டு என்றும் அவர் எடுத்துரைத்தார்.
எஃப்-35 போர் விமானங்கள் தொடர்பான குறிப்பிட்ட கேள்விக்கு, செய்தியாளரை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் கேட்குமாறு ஜெய்ஸ்வால் அறிவுறுத்தினார். பின்னர், வேறொரு வினாவிற்கு விடையளித்தபோது, இந்தியா தனது பாதுகாப்புக் கருவிகளை எங்குப் பெறுவது என்பதை, தேசியப் பாதுகாப்பு சார்ந்த கவலைகளையும், வியூக ரீதியான மதிப்பீடுகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கிறது என்று ஜெயஸ்வால் உறுதிபடத் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முற்பகுதியில், டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையையும், இந்தியா விதிக்கும் உயர்ந்த சுங்க வரிகளையும் சுட்டிக்காட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26% "பரஸ்பர" வரியை விதிப்பதாக அறிவித்தார். இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முழுமையடையும் வரை, இந்த உயர்த்தப்பட்ட வரியை அமல்படுத்துவதை அவர் ஒத்திவைத்துள்ளார்.
இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடர்கின்றன, ஆயினும், இந்தியாவின் பால் மற்றும் விவசாயச் சந்தைகளை அமெரிக்க ஏற்றுமதிக்காகத் திறப்பதற்குத் தயக்கம் காட்டி வருவதுதான் முக்கியமான கருத்து வேறுபாடுகளில் ஒன்றாக தொடர்கிறது.
2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது முதல், ரஷ்யாவின் கச்சா எண்ணெயைச் பெரும் அளவில் கொள்முதல் செய்யும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது. இத்தகைய எண்ணெய், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கடுமையான தடைகளுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த இறக்குமதிகள் டிரம்ப்பிற்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா மேற்கொண்ட கச்சா எண்ணெய் கொள்முதல், உலகளாவிய எண்ணெய் விலைகள் சீராக நிலைத்திருக்கப் பெரும் பங்காற்றியுள்ளது என இந்திய உயர் அதிகாரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். அத்துடன், ஐரோப்பிய நாடுகள்கூட இன்னமும் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்து வருகின்றன என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thewire.in/diplomacy/mea-response-trump-invective-says-ties-will-move-forward
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு