அமெரிக்கா துருக்கி உறவில் முரண்பாடு
ரஷ்ய அணியில் இணையுமா?
F-16 விற்பனையை அமெரிக்கா தடுத்தால் துருக்கி ரஷ்யா பக்கம் திரும்பலாம்: எர்டோகன்
F-16 போர் விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா பின்பற்றத் தவறினால் துருக்கி ரஷ்யா போன்ற நாடுகளின் பக்கம் திரும்பக்கூடும் என்று அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
2019 ல் நவீன ரஷ்ய ஏவுகணைகளை வாங்கிய பின்னர், நேட்டோ அணிகளின் பல்வேறு போர் மற்றும் தாக்குதல் விமானங்களை பரிமாறிக் கொள்ளும் திட்டத்திலிருந்து துருக்கி வெளியேற்றப்பட்டது.
ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கெதிராக அமெரிக்க-துருக்கிய உறவுகள் இணக்கம் கண்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூன் மாதம் எர்டோகனிடம், குறைவான அளவில் நவீன F-16 ஜெட் விமானங்களை பெறுவதற்கு உதவுவதாக கூறினார்.
துருக்கியின் பரம எதிரியான கிரேக்கத்திற்கு எதிரான அதன் கடுமையான விவாதங்களைப் பற்றி அமெரிக்க ஆளும் வர்க்கத்தினரிடையே வேறுபட்ட பார்வை இருப்பதால் காங்கிரஸில் இதற்கு உடன்பாடு எட்டப்படவில்லை.
“உலகில் போர் விமானங்களை விற்பனை செய்வது அமெரிக்கா மட்டுமல்ல. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவும் அவற்றை விற்கின்றன, ”என்று எர்டோகன் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
"மற்ற இடங்களிலிருந்து அவற்றை வாங்குவது சாத்தியம், மற்றவர்கள் எங்களுக்கு அழைப்பை விடுக்கிறார்கள்" என்று எர்டோகன் கூறினார்.
அடுத்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் பிராந்திய உச்சிமாநாட்டில் விளாதிமிர் புதினுடன் திட்டமிடப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாக எர்டோகன் ரஷ்யாவைப் பற்றி நேர்மறையான கருத்துக்களை வெளியிட்டார்.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் "தூண்டுதல்களை" ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். எரிசக்தி நெருக்கடிக்கு ஐரோப்பிய தடைகளை குற்றம் சாட்டினார்.
துருக்கி ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் இயற்கை எரிவாயுவுக்கு தள்ளுபடி வழங்குமாறு புதினிடம் கேட்டுக் கொண்டதாகவும் எர்டோகன் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான அங்காராவின் போர்த்தந்திர உறவுகள் முதல் எர்டோகனால் "பயங்கரவாதிகள்" என்று கருதப்படும் சிரியாவில் உள்ள குர்திஷ் படைக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு வரை, பல ஆண்டுகளாக துருக்கியின் மனித உரிமைகள் மோசமடைந்து வருகிறது.
செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் வருடாந்திர ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின் நடுவில் பைடனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், குர்திஷ் படைக்கு அமெரிக்க இராணுவ ஆதரவு குறித்து கேள்வி எழுப்புவேன் என்று எர்டோகன் கூறினார்.
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை : thedefensepost.com