அணு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தின் பொருத்தப்பாடுகள்
சு. அழகேஸ்வரன்
கடந்த மார்ச் 13, 2023 அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா (ஏ.யு.கே.யு.எஸ்-ஆக்கஸ்) ஆகிய மூன்று நாடுகள் ஆஸ்திரேலியாவிற்கான அணு நீர்மூழ்கிக் கப்பலைக் கூட்டாக தயாரிக்கவுள்ள விவரங்களை வெளியிட்டன. இதற்கு சீனா கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்தது. ஏன்? ஆஸ்திரேலியாவிலும் கூட ஊடகங்கள் மற்றும் கட்சிகளுக்கு இடையே கடும் விவாதங்கள் எழுந்தது. இந்த சர்ச்சைகளை ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பால் ஹீட்டிங் முன்னெடுத்தார். இந்தியாகூட இதே போன்ற அணு நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்க திட்டமிடவேண்டும் என்று சில பாதுகாப்பு நிபுணர்கள் வாதிட்டார்கள்.
இந்த ஆக்கஸ் ஒப்பந்தமானது தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள சீனக் கப்பல் படையை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. ஏற்கனவே பசிபிக் கடலில் அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாக ஆஸ்திரேலியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்து வரும் ஹீட்டிங் இது ஆஸ்திரேலியாவில் நலனிலிருந்து உருவானதல்ல என்று கூறினார். சீனாவோ, ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தது.
இவ்வாறு விமர்சனத்திற்குள்ளான இந்த ஒப்பந்தம் சொல்வதுதான் என்ன?
1. சிவிலியன் மற்றும் ராணுவ வீரர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி 2023 ஆம் ஆண்டில் துவக்கப்படும்.
2. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கு 2020 களில் கொண்டுவரப்பட்டு அந்நாட்டு கப்பற்படையினருக்கு பயிற்சி அளிக்கும்.
3. முதல்கட்டமாக மூன்று விர்ஜினியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களும் ஆஸ்திரேலியாவிற்கு விற்பனை செய்யப்படும்.
4. பிரிட்டனில் தயாரிக்கப்படும் அணு நீர்மூழ்கிக் கப்பல் ஆஸ்திரேலியாவிற்கு 2023-இல் வழங்கப்படும்.
5. ஆஸ்திரேலியாவில் கட்டப்படும் முதலாவது அணு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான பணிகள் 2040 களில் நிறைவடையும்.
இவற்றில் முக்கியமான விஷயம் ஒன்றை, இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு விமானந்தாங்கி போர்க்கப்பலை தயாரிக்கவில்லை. மாறாக அணு நீர்மூழ்கிக் கப்பலைத்தான் ஆக்கஸ் கூட்டணி தயாரிக்கவுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல் ஒன்றையும் இங்கே நினைவுகூற வேண்டியுள்ளது. 2015 ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானந்தாங்கி போர்க்கப்பலை துரத்திச் சென்றது. மேலும் கிட்டி ஹவாக் விமானந்தாங்கி போர்க்கப்பலைத் தாக்கும் தூரத்திற்கு நெருங்கிச் சென்றது. இந்த சம்பவங்களெல்லாம் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்த்திறன் குறித்த கேள்விகளை அப்போது எழுப்பியது.
மேலும் 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் கப்பற்படை வெளியிட்ட வேறு ஒரு செய்தியினையும் கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஃப்ளோரிடா கடலுக்கு அருகே சிறிய வகை நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் தியோடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கி போர்க்கப்பலின் தாக்குதல் குழுவை மூழ்கடித்தது. அப்போது சிறிய வகை கப்பலும், நீர் மூழ்கிக் கப்பலும், விமானந்தாங்கி போர்க்கப்பலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது என்பது கவனத்திற்குரியது. இந்த சம்பவத்தின் போது போர்க்கப்பல் மட்டுமல்லாமல், அந்தக் கப்பலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களும் மூழ்கடிக்கப்பட்டார்கள். இதற்குப் பின்னர் தாக்குதல் குழுவையும், கப்பல் எதிர்ப்பு பால்ஸ்டிக் ஏவுகணைகளையும் கொண்டு சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியாது என்ற புரிதலுக்கு அமெரிக்கா வந்தது.
ஆக்கஸ் ஒப்பந்தத்தின்படி 368 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஆஸ்திரேலியா கட்டவுள்ள நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானப் பணிகள் 2040 களில் நிறைவடையும் என்று சொல்லப்பட்டுள்ளதை முன்னர் பார்த்தோம். ஆனால் நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் அணு வகைப்பட்டதும், சிக்கலான தொழில்நுட்பத்தை கொண்டதுமாகும். எனவே கூடுதலான ஒருங்கிணைப்பு தேவை. மேலும் ஆஸ்திரேலியா தயாரித்துள்ள கொலின்ஸ் வகை நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிரிட்டன் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 12 சாதாரண நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பின் போது பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் மூலம் முக்கியமான சில படிப்பினைகளும் பெறப்பட்டது.
1. கட்டுமானப் பணியாளர்கள், பராமரிப்புப் பணியாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்பட்டது.
2. மேலும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வடிவமைப்பாளர்கள் ஆஸ்திரேலியாவில் வெப்பமண்டல கடல் பிரதேசத்தில் பணியாற்ற சிரமப்பட்டார்கள்.
3. வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ராக்வெல் நிறுவனத்தினர், மின் ஜெனரேட்டர்களை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வருவதில் பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள்.
4. தயாரிப்பிற்குத் தேவையான கருவிகளை ஒப்பதம் செய்துவிட்ட நிலையில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளில் காலதாமதம் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே ஒப்பந்தத்தின் மதிப்பீட்டை நிர்ணயம் செய்வது சாத்தியமற்றது.
5. நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பில் ஆரம்ப கட்டங்களில் கருவிகள் மற்றும் துணைப் பாகங்களைக் கொண்டு வருவதில் இருநாட்டு போக்குவரத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் பிரச்சனை ஏற்பட்டது.
6. அனைத்து முனைகளிலும் மனித ஆற்றலை ஈடுபடுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டது.
இது மட்டுமல்லாமல் முன்னதாக 12 நீர்மூழ்கிக் கப்பல்களை 90 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கட்டுவதென்ற பிரிட்டன் நிறுவனத்துடன் ஆஸ்திரேலியா கப்பற்படை ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் முதல்கட்டப் பணிகள் முடிந்து அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆஸ்திரேலியா கப்பற்படை ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக தெரிவித்தது. செப்டம்பர் 15, 2021-இல் அனுப்பப்பட்ட கடிதத்தில் கட்டப்படும் இந்தக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, ஆக்கஸ் திட்டம் ஆஸ்திரேலியாவிற்கு பொருத்தமானதல்ல என்பதை இந்த அனுபவங்களெல்லாம் உணர்த்துகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ கட்டுமான நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவில் திறம்பட செயல்படுவதற்கான கட்டமைப்புகள் அந்நாட்டில் இல்லை. உண்மையில் இந்தக் கட்டுமானப் பணிகளில் அந்நாட்டு நிறுவனங்களில் பங்கு முக்கியமானதாகும். எனவே திட்டமிட்டதற்கு மாறாக 2050 ஆம் ஆண்டில்தான் முதல் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.
ஆக்கஸ் திட்டமும் இந்தியாவும்:
இதுபோன்ற அணு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியாவில் தயாரிப்பதற்கு அமெரிக்கா உதவ முன்வராத பட்சத்தில் பிரான்ஸ் உதவியுடன் அவற்றை தயாரிக்க முயல வேண்டும் என்ற விவாதங்கள் இங்கே நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறிதும் கவலைப்படாமல் அமெரிக்க நிபுணர் ஆஸ்லி டெல்லீஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இதுகுறித்து எழுதி வருகிறார்கள். இதிலுள்ள பிரச்சனைகள்தான் என்ன? முதலாவதாக, இந்தியாவிற்கு நெருங்கிய நட்பு நாடு என்ற அந்தஸ்தை வழங்கி பல ஒப்பந்தங்களை செய்துள்ளதால் இந்தியாவின் மூலோபாய சுதந்திரம் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவ்வகையான முயற்சியானது ரஷ்யா மற்றும் சீனாவுடன் மோதல் ஏற்பட வழிவகுக்கும் குறிப்பாக சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தும்.
மேலும் அமெரிக்கா முன்வைத்து வரும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு குறித்த கண்ணோட்டமானது முற்றிலும் அமெரிக்க நலனை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும் அமெரிக்காவுடனான முதல் அணு ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருந்தது. எனவே இரண்டாவது ஒப்பந்தம் இந்திய அறிஞர்களின் எதிர்ப்பிற்குள்ளானதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் ஜஸ்வந்த் சிங்-ஸ்டோர்பி டால்போட் பேச்சுவார்த்தைகள் இந்தியாவில் நடைபெற்ற தெர்மோ நீயூக்ளியர் பரிசோதனையில் கிடைத்த அனுபவத்திற்குப் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. பிரான்ஸ் ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புகள் காரணமாக சாதாரன நீர்மூழ்கிக் கப்பல் செயல் திட்டங்களுக்கும்கூட வெளிநாடுகளின் உதவியை எதிர்நோக்கியுள்ளோம். எனவே ஆக்கஸ் வகை திட்டத்தை செயல்படுத்தினால் அது இந்தியாவை வெளிநாடுகளின் பினைக் கைதியாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்.
1997 ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் அணு நிர்மூழ்கிக் கப்பல் திட்டமானது விவாதத்தில் உள்ளது என்று அட்மிரல் விஷ்ணு பகவத் தெரிவிக்கிறார். ஆனால் இந்தியாவில் விஞ்ஞானம் மற்றும் தொழில்துறையில் திறன் இன்மையின் காரணமாக அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தற்போது இந்தியக் கப்பற்படையில் அணு உலை இல்லாத, பால்ஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல் மட்டுமே கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியக் கப்பற்படையோ விலை உயர்ந்ததும், அதிக கால அவகாசம் கோருவதுமான நீர்மூழ்கிக் கப்பலை இரண்டாவது முறையாக ரஷ்யாவிடமிருந்து வாடகைக்கு அமர்த்துவதற்கான பணிகளை மட்டும் செய்து வருகிறது. உலக நாடுகளின் கப்பற்படை பலத்தை ஆய்வு செய்யும் போது, அந்த நாடுகள் விமானந்தாங்கி போர்க்கப்பலை விட, அணு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பால்ஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களையே கூடுதல் எண்ணிக்கையில் வைத்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதை இந்தியக் கப்பற்படை இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
உண்மையில் இந்தியக் கப்பற்படையானது மூன்றாவது விமானந்தாங்கி போர்க்கப்பலை தயாரிப்பது குறித்து அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இது அணு நீர்மூழ்கி கப்பல் திட்டத்திற்கு இறுதிப்படுத்த அமைச்சர்கள் குழுவின் ஒப்புதல் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. சோவியத் யூனியன் கப்பற்படை பலம் குறித்த ஆய்வுகள் சொல்வது என்னவென்றால் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்கரை இலக்குகளையும் விமானந்தாங்கி போர்க்கப்பல்களையும் தாக்குவதில் இருந்து பாதுகாக்கிறது என்பதைத்தான். எனவேதான், அமெரிக்கா அணு நீதிமூழ்கிக் கப்பல்களை அதிக எண்ணிக்கையில் வைத்துள்ளது.
கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி இந்தியக் கப்பற்படை அதிகாரிகள் விமானந்தாங்கி போர்க்கப்பல்களே பொருத்தமானவை என்று சொல்லி வருகிறார்கள். மேலும் அமெரிக்காவில் உள்ளது போல் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்புக் கொள்முதல் விவகாரங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. உண்மையில் பாதுகாப்புத் துறை மற்றும் தலைமை ராணுவ தளபதி அலுவலகத்தினரை அணு நீர்மூழ்கிக் கப்பலின் முக்கியத்துவத்தை உணரச் செய்ய வேண்டும்.
சர்வதேச அளவில் நாடுகளின் ராணுவ பலம் குறித்து ஆய்வு செய்தால் ஏழை நாடுகள் கப்பல் மறுப்பு உத்தியை கையாண்டு வருவதை அறிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் உக்ரேன் அனுபவத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடல் தளத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளையும், கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ள கட்டுமானங்களால் கப்பல்களுக்கு சேதத்தை ஏற்படுத்த முடியும். இந்த வழிமுறையைக் கையாண்டதால்தான் ரஷ்யாவில் மாஸ்கா கப்பலை உக்கரேன் தாக்கி அளிக்க முடிந்தது.
முடிவாக, ஆக்கஸ் திட்டமானது சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள்தான் பொருத்தமானது என்பதை மேற்கத்திய நாடுகள் உணர்ந்துள்ளன. என்றபோதிலும் இத்திட்டத்தை நிறைவு செய்ய ஆஸ்திரேலியாவில் தொழில்துறையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது. பிரான்ஸ் உதவியுடன் அணு நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவில் தயாரிப்பது அல்லது இந்தியாவின் மூலோபாய சுயசார்புக்கும், இதர அணுத் திட்டங்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும். எனவே பால்ஸ்டிக் ஏவுகணை வசதி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை, அணு நீர்மூழ்கிக் கப்பல்களாக மாற்றுவதற்கு விரைவான நடவடிக்கைத் தேவை. அமெரிக்காவைப் போல் இந்தியா நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக் கொள்முதல் திட்டங்கள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும். மூன்றாவது, விமானந்தாங்கி போர்க்கப்பலை தயாரிப்பது என்ற யோசனையைத் தள்ளிப் போட வேண்டும்.
(ரஷ்யாவின் வடக்கு (ஆர்டிக்) ஃபெடரல் பல்கலைக்கழக வருகை பேராசிரியரும், சக்ரா-II ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலின் முன்னாள் தளபதியும் ஆவக பகவத், "The Mirage of AUKUS implications for India" என்ற தலைப்பில் எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி இதழில் (April 29, 2023 Vol LVII No:17) எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான மொழிப்பெயர்ப்பு)
சு. அழகேஸ்வரன், முன்னாள் பாதுகாப்புத் துறை ஊழியர்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு