அமெரிக்காவின் நிலவுடைமையில் ஆதிக்கம் செலுத்துவது யார்?
தமிழில் : விஜயன்
பில் கேட்ஸுக்கு அமெரிக்காவில் மிக அதிகளவிலான விவசாய நிலம் உள்ளதென்பது உண்மைதான் என்றாலும், பெரும்பான்மையான விவசாய நிலங்கள் அவரிடம் உள்ளது என்பது உண்மையல்ல.
பிப்ரவரி 18, 2022 அன்று முனிச் பாதுகாப்பு மாநாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், பில் கேட்ஸ் ஒரு விவாதத்தில் கலந்துகொண்டதைக் காணலாம். அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு பில் கேட்ஸே உரிமையாளர் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவல்கள் உண்மையல்ல; மாறாக அவரிடம் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிக நிலம் உடைமையாக இருக்கிறது என்றாலும், அது நாட்டிலுள்ள மொத்த நிலவுடைமையில் அதாவது கிட்டத்தட்ட 900 மில்லியன் ஏக்கர் விவசாய நிலத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே அவர் வசமிருப்பதை குறிக்கிறது.
பரப்பப்படும் தகவல்: மைக்ரோசாப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களைச் சொந்தமாக வைத்திருப்பதாகவும், முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் நாட்டில் உள்ள பெரும்பாலான தனி வீடுகளை உடைமையாக வைத்திருப்பதாகவும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
AP செய்தி நிறுவனத்தின் மதிப்பீடு: இத்தகவல் தவறானதே. தொழில்நுட்பத் துறையில் பெருங் கோடீஸ்வரராகவும், பெருங்கொடையாளியாகவும் அறியப்படும் பில் கேட்ஸ் நாடு முழுவதும் காணப்படும் 2,70,000 ஏக்கர் விவசாய நிலங்களை சத்தமில்லாமல் கையகப்படுத்தியிருக்கிறார். இருந்தபோதிலும், அமெரிக்காவில் உள்ள 900 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய அளவேயாகும். இதேபோல், நாட்டில் உள்ள 8 கோடி தனி வீடுகளில் பெரும்பாலானவை BlackRock நிறுவனத்தின் உடைமையாகவுள்ளது என்று கூறுவதிலும் உண்மையில்லை. அமெரிக்காவின் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு மையத்தின் தரவுகளின்படி, மொத்தமுள்ள தனி வீடுகளில் 20 சதவீத தனி வீடுகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளன, மேலும் அவ்வாறு வாடகைக்கு விடப்படும் வீடுகளில் கூட பெரும்பாலானவை தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கே சொந்தமானவையாக உள்ளனவே தவிர, பிளாக்ராக் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமானவையாக இருக்கவில்லை.
மற்றொரு உண்மைத்தகவல்கள்: டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கப்போவதாக எலான் மஸ்க் கூறியபோது, பல ஊடகங்களில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டதோடு, தொடர்ந்து தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டு வந்தது. அதே சமயத்தில்தான், சில பிரபலமான நபர்கள் எலான் மஸ்க் மட்டுமல்ல, அவரைப் போன்ற இன்னும் சில பணபலம் படைத்த நபர்களும், நிறுவனங்களும் இன்ன பிற கையகப்படுத்தல்களும், விலைக்கு வாங்குதல்களும் நடக்கப்போவதாக கூறினர்.
“அமெரிக்காவில் உள்ள மொத்த விளைநிலங்களில் பெரும்பகுதியை பில் கேட்ஸ் தனது பிடியின்கீழ் கொண்டு வருகிறார், பெரும்பாலான தனி வீடுகளை பிளாக்ராக் நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது, ஆனால், எனக்கு தெரிந்து டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு போவதுதான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கப்போகிறதோ?” என்று பதிவிடப்பட்ட ஒரு நபரின் டிவிட்கள் 2,50,000 முறை பகிரப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள நிலவுடைமையாளர்கள் குறித்தான ஆண்டறிக்கை லேண்ட் ரிப்போர்ட் 100 என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அதிலுள்ள தகவலின்படி பார்த்தால் அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களில் மைக்ரோசாஃப்டின் துணை நிறுவனராக இருக்கும் பில் கேட்ஸ்தான் அதிகளவிலான அதாவது, 2,69,000 ஏக்கர்களுக்கு மேலான நிலங்களைஉடைமையாக வைத்திருக்கிறார்.
அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான விவசாய நிலங்களை பில்கேட்ஸ் விலைக்கு வாங்கியிருக்கிறார் என்று பரப்படும் தகவல் போலியனது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதோடு, 2021ல் வெளியிடப்பட்ட அமெரிக்க விவசாயத்துறையின் அறிக்கையையும் ஆதாரமாகச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். நாட்டில் மொத்தமாக 895 மில்லியன் ஏக்கர் கணக்கிலான விவசாய நிலங்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறியிருக்கிறது.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆண்டுத் தரவரிசையின்படி பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 134 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸிடம் சதவீத அடிப்படையில் பார்க்கும் போது மொத்த விளைநிலங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான விளைநிலங்களே இருப்பதாக அப்பத்திரிக்கை கணக்கிட்டுள்ளது. அவ்வகையில், தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக விளங்கும் பில்கேட்ஸிடம் மிகப் பெரும் எண்ணிக்கையிலான நிலங்கள் உடைமையாக இருப்பது உண்மையென்றாலும், அதை நிச்சயமாக பெரும்பகுதியான, பெரும்பாலான விளைநிலங்களை உடைமையாக கொண்டுள்ளார் என்று சொல்ல முடியாது.
2021ல், என்னிடம் எதைவேண்டுமானாலும் கேட்கலாம் என்ற தலைப்பில் ரெட் இட் சமூக ஊடகத்தில் நிகழ்ச்சி ஒன்றை பில் கேட்ஸ் அறிவித்திருந்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது, பெருமளவிலான விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பது நான் மட்டுமல்ல, என்னுடன் கூட்டாக செயல்படும் பல்வேறு முதலீட்டாளர்களின் குழு முடிவு என்று கூறியதோடு, இந்த முதலீடுகள்கூட விதை உருவாக்கம், உயிரி எரிபொருள் தயாரிப்பு போன்றவற்றிற்காகவே செய்யப்படுகிறது என்பதையும் சேர்த்துக் கூறினார்.
“வேளாண் துறை முக்கியமானது என்பதை மறுக்க முடியாது” என்று கூறியவர், “அதிக உயிர்ப்பித் திறனுடைய விதைகளை உருவாக்குவதன் மூலம் நம்மால் காடழிப்பினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடிவதோடு, ஏற்கனவே காலநிலை மாற்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆப்பிரிக்க ஒப்பந்தத்தின் மூலம் உரிய தீர்வையும் வழங்க முடியும். உயிரி எரிபொருள் தயாரிக்கப்பட்ட பிறகு எந்தளவிற்கு மலிவாக விற்கப்படும் என்பதை இப்போதே நம்மால் தெளிவாகச் சொல்ல முடியாது என்ற போதிலும், நிச்சயமாக இந்த உயிரி எரிபொருள் பயன்பாட்டின் மூலம் விமானங்கள் மற்றும் சரங்குந்துகளால் வெளியேற்றப்படும் மாசுபாடுகளை குறைக்க முடியும்” என்றார்.
அதேபோல, நாட்டில் உள்ள பெரும்பாலான தனிவீடுகளை பிளாக் ராக் நிறுவனம் கையகப்படுத்தி வைத்துள்ளது என்று கூறுவதிலும் உண்மையில்லை.
அமெரிக்காவில் மொத்தமாக 8.5 கோடிக்கும அதிகமான தனி வீடுகள் இருக்கிறதென்றும், அவற்றில் தோராயமாக 1.5 கோடி தனி வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் வெளியான அமெரிக்க வீட்டுவசதி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த அறிக்கை அமெரிக்காவின் புள்ளிவிவரக் கணக்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வாடகைக்கு விடப்பட்டுள்ள தனி வீடுகளில் 33 சதவீத வீடுகளே அதாவது மூன்றில் 1 பங்குக்கும் குறைவான வீடுகளே பிளாக்ராக் போன்ற நிறுவன முதலீட்டாளர்களின் உடைமையாக உள்ளது என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் குடியிருப்பு குறித்தான ஆய்வுகளை செய்து வரும் கூட்டு நிறுவனம் 2022ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
இது குறித்து பிளாக் ராக் நிறுவனத்திடம் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்ட போது, அதன் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் பீட்டி இவ்வாறு கூறினார்:“தொழில் நடைபெறும் கடைகள், பணியடங்கள், தங்கும்விடுதிகள் மற்றும் அடுக்கு மாடி வீடுகளில் மட்டுமே எங்களது நிறுவனம் மூதலீடு செய்கிறதே ஒழிய தனி வீடுகளில் முதலீடு செய்வதில்லை” என்று கூறியதோடு, அதுபற்றி மேலதிகமான எந்தத் தகவலையும் அவர் தரவில்லை.
பிளாக் நிறுவனம் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் போலியானது என்று கூறி மறுக்கும் வகையில் அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனமே தங்களது டிவிட்டர் வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தனர்.
வேறொரு டிவிட்டர் பயணாளர் பதிவிட்டிருந்த டிவிட்டுகளுக்கு பதிலளித்திருந்த பிளாக்ராக் நிறுவனம் இவ்வாறு எழுதியிருந்தது: “தனி வீடுகளை கையகப்படுத்தும் பெரும் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக பிளாக் நிறுவனம் எப்போதும் இருந்ததில்லை”.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தாலஸ் எனுமிடத்திலிருந்து இன்விட்டேஷன் ஹோம்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் வாடகைக்கு விடப்படும் 80,000 தனி வீடுகள் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிளாக்ராக் நிறுவனம் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தனி வீடுகளை வாடகைக்கு விடும் தொழிலில் மிகப் பெரிய நிறுவனமாக இன்விட்டேஷன் ஹோம்ஸ் இருந்து வருகிறது என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இது சிறிய அளவையே தன் பிடியில் வைத்துள்ளது.
பிளாக்ராக் போன்றே முதலீடுகளை பராமரித்து வரும் இதையொத்த பெயரைக்கொண்டுள்ள பிளாக்ஸ்டோன் என்ற நிறுவனத்துடன் தங்களது நிறுவனம் அனேக நேரங்களில் மாறி மாறித் தவறுதலாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த பிளாக்ஸ்டோன் நிறுவனமே இன்விட்டேஷன் ஹோம்ஸ் நிறுவனத்தின் முந்தைய உரிமையாளராக இருந்தது. இது மட்டுமல்லாது, பிளாக்ராக் நிறுவனத்தில் பெரும்பகுதியான பங்குகளை முன்பொரு காலத்தில் பிளாக்ஸ்டோன் வைத்திருந்த நிலையில், 1990களில் தனது பங்குகளை கைமாற்றிவிட்டு வெளியேறியத் தகவல்கள் இந்த விவகாரத்தை தெளிவாக புரிந்து கொள்வதை மேலும் சிக்கலுக்குரியதாக மாற்றிவிடுகிறது.
“இன்விடேஷன் ஹோம்ஸ்’ன் முந்தைய உரிமையாளரான பிளாக்ஸ்டோனுடன், பிளாக்ராக் நிறுவனம் தவறுதலாக சில நேரங்களில் அடையாளப்படுத்தப்படுகிறது. இன்விடேஷன் ஹோம்ஸ் நிறுவனத்தின் முயூச்சுவல் ஃபண்ட்களை பராமரிப்பதோடு அவர்களுக்கும் எங்களுக்கமான தொடர்பு முடிந்துவிடுகிற நிலையில், அவர்களோடு சேர்ந்து தனிவீடுகளை வாங்குவதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று பிளாக்ராக் நிறுவனம் டிவீட் செய்திருந்தது.
விலைவாசி மிக அதிகமாக இருக்கும் நிலையில் கூட, மனை வணிகத்தில் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் இதுவரை இல்லாதளவிற்கான வீடுகளை உடைமைகளாக்கி வருகின்றனர். 2021ல் மட்டும் கடைசி மூன்று மாதங்களில் 18.4 சதவீத வீடுகள் விற்பனையாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை தனிவீடுகளே என்று மனை வணிக நிறுவனமான ரெட்ஃபின் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://apnews.com/article/fact-check-bill-gates-blackrock-788010130032