பாவ விமோச்சன பரிகாரமா? இடைக்கால பட்ஜெட்!

சாவித்திரி கண்ணன்

பாவ விமோச்சன பரிகாரமா?  இடைக்கால பட்ஜெட்!

அம்மாடியோவ்! எத்தனை சரவெடிகள்!

சில பேர் செய்த பாவங்களுக்கு எல்லாம் இறுதி காலத்தில் பிராயச் சித்தம் செய்வார்கள்!

பாவ விமோச்சன பரிகாரமா?  இடைக்கால பட்ஜெட்!

திமுக அரசின் ஆட்சி  நிர்வாக மூச்சு இன்னும் ஒன்றரை மாதத்தில் அடங்கவுள்ள நேரத்தில், ஆர்ப்பாட்டமாக ஒரு இடைக்கால பட்ஜெட்!

இது தேவையா..?

இதன் மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கான தீர்ப்பை மக்கள் திருத்தி எழுதிவிடுவார்கள் என பகல் கனவு காண்கிறார்களா.!

முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்த வரை அவர் அங்கே மோடியைப் போலவே இங்கு ஒரு தனி மனித ஒற்றை சாம்ராஜ்ஜியத்தையே நடத்தினார்.

நிதி அமைச்சர் என ஒருவர், பட்ஜெட் எல்லாம் சும்மா பம்மாத்து தான்.

நியாயப்படி இடைக்கால பட்ஜெட்டில் தான் மகளிர்க்கான உரிமைத் தொகை ரூ5,000 என்பதும் அதற்கான நிதி ஒதுக்கீடு 6,500 என்பதும் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட நொடியிலேயே அவரவர் வங்கி கணக்கில் போடும் செயல்திட்டம் கூட செய்திருக்கலாம். ஆனால், முன் கூட்டியே அறிவித்தால் பட்ஜெட் எதற்கு?

இப்படித் தான் காலை உணவுத் திட்ட அறிவிப்பும் நடந்தது.

அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 என்ற திட்டத்தையும் இப்படித்தான் அதிரடியாக அறிவித்தார். 

அரசு கல்லூரிகள் சிறப்பாக செயல்படுவதற்கான நிதியை முற்றிலும் குறைத்துக் கொண்டு, பேராசிரியர்கள் இல்லாமை, அடிப்படை கட்டமைப்பு இல்லாமையை வைத்துக் கொண்டு இந்த ஆயிரம் ரூபாய் தருவதால் என்ன பயன்?

காலை உணவு, மதிய உணவு..என இப்படியாக 15 இலவசங்களை மாணவர்களுக்கு தருவோம். ஆனால், தரமான கல்வியை தருவதற்கு போதுமான நிதியை ஒதுக்கமட்டோம் என்றால் எப்படி? அரசு பள்ளிகளில் 80,000 ஆசிரியர்பணியிடங்களை நிரப்பமாட்டோம் என பிடிவாதம் செய்து அந்த நிதியை இப்படி திசை திருப்பி ஓட்டுவங்கி அரசியலைத் தான் ஓங்கிச் செய்கிறீர்கள்!

ஆட்சியின் இறுதி காலத்தில் பள்ளிக் கல்லூரிகளில் 17,000 போதை பொருள் எதிர்ப்பு மன்றங்களாம்! 

அதுவும் மாநிலம் முழுவதும் 5 ஆண்டுகளில் போதைப் பொருளுக்கு எதிராக 5.17 லட்சம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளனவாம். அடக் கொடுமையே..! இதற்கு எவ்வளவு பட்ஜெட் பணம் ஒதுக்கி பணம் பார்த்தீர்கள்! இதனால் என்ன பலன் கண்டது நாடு? 

இந்த ஐந்து வருடங்களாக பள்ளி கல்லூரிகளில் போதை வஸ்துகள் புழக்கம் அதிகரித்து  வருவதைக் குறித்து என்னைப் போன்றோர் எத்தனை முறை கவனப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் உருப்படியாக இல்லை. மாறாக பள்ளி, கல்லூரிகளின் அருகில் டாஸ்மாக் கூடாது எனப் போராடியவர்களையும் காவல்துறை கொண்டு அடக்கினீர்கள்!

இந்த ஆட்சியில் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளானது கல்வித் துறையே!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் மத்திய பாஜக அரசின் சனாதனக் கல்வி திட்டத்தை சைலண்டாக இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் பல பெயர்களில் சாமார்த்தியமாக திணிப்பது நியாயமா? இவை பொதுக் கல்வியை பொசுக்கும் திட்டங்கள் அல்லவா?

முந்தைய தேர்தல் அறிவிப்பில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சகல துறை ஊழியர்களையும் தெருவில் இறங்கி போராட வைத்துவிட்டு இறுதி நேரத்தில் என்னென்னெவோ ஜால்ஜாப்பு அறிவிப்புகள்! நிதி ஒதுக்கீடுகள்!

எவ்வளவு பித்தலாட்டம்? அவ்வளவு முட்டாள்களாக மக்களை நினைக்காதீர்கள்.., மிஸ்டர் ஸ்டாலின்!

உங்கள் ஐந்தாண்டு ஆட்சி என்பது திராவிட மாடல் என்ற தித்திப்பு சொல்லாடலைக் கொண்டு, மத்திய பாஜக அரசின் சகலவித சட்ட விரோத சட்டதிட்டங்களையும் செய்து கொடுத்து, கொள்ளை அடித்து கப்பம் கட்டிய ஆட்சி தான்!

அதற்கு தோதாகத் தான் உங்கள் மருமகன் சபரீசன் நிழல் முதல்வராக ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு அணுக்கமாக இருந்தார். திமுகவின் வீழ்ச்சிக்கு வெளியில் இருந்து யாருமே தேவையில்லை.

என்ன ஒரு பிரச்சினை என்றால், உங்கள் மீது இவ்வளவு கடுமையாக என்னைப் போன்றோர் விமர்சனங்கள் வைத்தாலும், உங்களுக்கு சரியான மாற்றாக சொல்வதற்கு எதிரில் நம்பகத் தன்மையாக யாரும் இல்லாதது தான்!

ஆகவே வரும் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத தொங்கு சட்ட சபை அமையும் என்றே  தோன்றுகிறது!

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/100000227053317/posts/34854717150785743/?rdid=H5JhFwAxFq61iPXP

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு