திமுகவை ஜெயிக்க வைக்காவிட்டால் மார்க்சியம் ரத்தம் கக்கி சாகும்!!

துரை. சண்முகம்

திமுகவை ஜெயிக்க வைக்காவிட்டால் மார்க்சியம் ரத்தம் கக்கி சாகும்!!

" ஏதோ கம்யூனிச புரட்சிக்காக இவர்கள் போராடுபவர்கள் போல் உள்ளது !"  என்று தமிழ்நாட்டு மக்கள் நம்மை தவறாக கணித்து விடும் படி இருக்கக் கூடாது!"

ஏனென்றால், 

தமிழ்நாட்டு முதலாளியும் தொழிலாளியும் முரண்பாடு கொள்ளாத அளவுக்கு ஒரு திராவிட சமூகநீதி சமுதாயத்தை முதலில் அமைக்க வேண்டுமாம்! ஆகையால் கம்யூனிஸ்ட் என்பது தெரிந்து விட்டால் இந்த நோக்கத்திற்கு ஆபத்தாகி விடுமல்லவா?!

அதனால் இந்த தந்திர புரட்சி.

  இப்படியாக மருதமுத்து எனும் ஒரு பேராசிரியர் மடிப்பூனையாக வெளிப்பாய்ந்து இருக்கிறார்.

அன்றாடம் திமுகவை திராவிட புரட்சிக்கு ஜாக்கி வைத்து தூக்கும் பதிவாளரில் இவரும் ஒருவர் என்பதை பார்க்க முடிகிறது. 

சரி அது அவரது விருப்பம். 

ஆனால் இவர் அளந்து கொட்டுவதை எல்லாம் மார்க்சியம் என்றும், தோழர் தியாகுக்கே இவர் மார்க்சிய வகுப்பெடுத்தவர் என்ற பீடிகையுடன் இவர் வலம் வருவது தான் விமர்சனப்பூர்வமாக பார்க்க வேண்டி உள்ளது. 

இவருடைய சமீபத்திய பதிவு ஒன்றில் ( 15/4/2026)

" இங்குள்ள சாதிய சிக்கல் மற்றும் பல காரணங்களினால் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க தலைமை ஏற்பட முடியாது என்றும் இஙகுள்ள கம்யூனிச தொழிற்சங்கங்களில் உள்ளவர்கள் ஜாதிய உணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்"  என்றும் எழுதிச் செல்கிறார். 

சரி திராவிட திமுகவில் வெளிப்படையான சாதி வெறியர்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலிலேயே நிற்கிறார்களே! 

இது திராவிட தமிழ் தேசிய புரட்சி தடுக்காதா? 

இதைத் தடுப்பதற்கு இவர் வைக்கும் திட்டம்தான் என்ன? 

இதை வெளிப்படையாக அம்பலப்படுத்தி பேசுவதற்கு கூட இவர்களிடம் ஜனநாயகம் இல்லையே!

சாதி உட்பட எல்லா சமூகப் பிளவுகளும் அதன் தாக்கங்களும் இருக்கின்றன என்பது சமூக மெய்நிலை விவரம். விசயம் இதை ஒழிப்பதற்கான தத்துவ போராட்டமும் அமைப்பியல் போராட்டமும் நடக்கும் போதுதான் இது களையப்பட முடியும். இது நடக்காத போது இது பாட்டாளி வர்க்க விடுதலைக்கு மட்டுமல்ல தேசிய இன விடுதலை, இவர்களே சொல்லும் சமூக நீதிக் கொள்கை அனைத்துக்குமே தடைதான். 

இந்த சமூகப் பிளவுகளை ஒழிக்க கூடிய புறநிலை நிர்பந்தத்தையும் அகநிலை போராட்டத்தையும் தரக்கூடிய தத்துவம் வர்க்கக் கண்ணோட்டத்தில் எது சரி? என்பதுதான் பொருத்தப்பாடு

உடையது. 

கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரப் போராட்டத்தை முன்வைக்கிறார்கள் என்று ஒரு பக்க வாதத்தை எழுதி விட்டு 

இவர் முன்வைக்கும் திராவிட தமிழ் தேசிய விடுதலை போராட்டத்திற்கு பல்வேறு சாதிகளில் உள்ள முதலாளிகளை முதலில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று அறிவிக்கிறார். பல்வேறு சாதிகள் கூலித் தொழிலாளர்களாக நிரந்தரமாக பிரித்து வைப்பதில் சாதி இருப்பதால் ஒன்று சேர முடியாது எனும் இவர், பல்வேறு சாதிகள் முதலாளிகள் ஒன்று சேர்வதற்கான முதலாளித்துவ சுரண்டல் வர்க்கத்திற்கு மட்டும் சாதி தடையாகாது ஆகவே அனைத்து சாதிகளும் தமிழ் முதலாளிகளை ஆதரிப்பதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என பாட்டாளி வர்க்க ஓர்மைக்கு மட்டும் திட்டவட்டமாக "கா"விடுகிறார்.

முன்னெச்சரிக்கையாக" நம்மை யாரும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் என்று கருதிவிடக் கூடாது"  என வெளிப்படையான திராவிட முதலாளித்துவ சுரண்டும் வர்க்கத்தை தலையில் கட்டுகிறார். 

இதுதான் புரட்சிகர கண்ணோட்டம் 

இதுதான் மண்ணுக்கேத்த மார்க்சியம்

நம்புங்கள் நல்லோரே!

திமுகவை ஜெயிக்க வைக்காவிட்டால் மார்க்சியம் ரத்தம் கக்கி சாகும்!

ஐக்கிய முன்னணியில் ஒன்பது கிரகங்களும் ஒரே நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதால் இப்போதைக்கு இதையெல்லாம் விமர்சிப்பதற்கு 'நல்ல நேரமும்' இல்லை!

        - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/988732573833539/?rdid=FcWGXNUnntK9j3Ww

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு