2023: அமெரிக்க வேலைநிறுத்தங்கள் பற்றி
கனகராஜ்
கடந்த 2023ம் வருடம் அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைப் பெற்ற ஆண்டாக அமைந்துள்ளதென தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் அமெரிக்கா மூன்று மிகப்பெரிய வேலை நிறுத்தங்களை சந்தித்தது. இவை 1990களுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய வேலை நிறுத்தங்களாகும்.
இதன் விளைவாக 20% முதல் 32% வரையிலான ஊதிய உயர்வினைப் பெற்றுள்ளனர். குறிப்பாக கடைநிலை ஊழியர்கள் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலாக விளங்கும் ஹாலிவுட் கனவுத் தொழிற்சாலையின் 15000 கதாசிரியர்கள் புதிதாக வந்திருக்கும் AI தொழில்நுட்பத்தினால் தங்கள் எதிர்காலத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்திற்கு எதிராகவும், ஊதிய உயர்வுக்காகவும் தொடங்கிய வேலைநிறுத்தத்தில் பிற்பாடு 1லட்சத்து 60 ஆயிரம் நடிகர்களும் பங்கேற்று அந்த வேலை நிறுத்தம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, AI தொழில்நுட்பத் தாக்குதலிலிருந்து தங்களை காத்துக் கொண்டதோடு, ஊக்க ஊதியத்தையும் கணிசமாகப் பெற்றனர்.
1960லிருந்து இதுவரையில் நடந்ததில் இதுவே முதல் மிகப்பெரும் வேலைநிறுத்தம் என்று அமெரிக்க பொருளாதார நிபுணர்களும், தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன.
டெட்டராய்ட் எனப்படும் தொழில் நகரத்தில் மூன்று மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களில் 45000 தொழிலாளர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தங்களின் விளைவாக 20% முதல் 25 % வரையிலான ஊதிய உயர்வினைப் பெற்றுள்ளனர.
சுகாதாரப்பணியாளர்கள் சுமார் 75000 பேர் பங்கெடுத்துக் கொண்ட பெரும் வேலைநிறுத்தம் பெரிய வெற்றியைப் பெற்று, அத்துறையிலும் 25 % வரையில் ஊதிய உயர்வினைப் பெற்றுள்ளனர்.
சமையல் கலைஞர்கள் 40000 பேரின் வேலை நிறுத்தத்தின் விளைவாக 32 % ஊதிய உயர்வினைப் பெற்றுள்ளனர்.
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் 2022 ம் வருடம்தான் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிற்சங்கங்களில் தொழிலாளர்கள் பங்களிப்பு மிகமிகக் குறைவாக இருந்துள்ளது.
அமெரிக்காவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 10.1 % தொழிலாளர்கள் மட்டுமே சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளனர்.
இதற்கு முன் 1983 ல் அது 20.1 % மாக இருந்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு துவக்கத்திலேயே அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் அந்த ஆண்டை பொருளாதார மந்தம் தாக்கும் ஆண்டாக பிரச்சாரம் செய்தனர்.
அதோடு பணவீக்கமும் கூடுதலாக இருந்தது.
கடந்த ஆண்டில் பல வங்கிகளின் செயல்பாடு மிகப்பெரிய தோல்வியை கண்டது.
அதாவது தொழிலாளர்கள் சங்கங்களில் பங்கேற்பது மிகவும் குறைவாக இருந்த - நாடு பணவீக்கத்திலும் - பொருளாதார மந்த நிலையிலும் - இருந்த காலத்தில் தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் உறுதியாக நின்று போராடியதன் விளைவாக மிகப்பெரிய வெற்றியை ஊதியத்திலும், பணி நிலைமைகளிலும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இது போராடுவதற்கான காலமில்லை என போராட்டங்களைக் தள்ளிப் போட்டு, இறுதியில் போராட்டங்களே இல்லாமல் செய்கிற,
போராட்ட உணர்வை மழுங்கடிக்கிறவர்களுக்கும், தொழிலாளர்களுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலை மாறி, இழப்பதற்கு நிறைய சம்பாதித்து வைத்துள்ளனர் அதனால் போராட மாட்டார்கள் என்றும் தொழிலாளர்வர்க்கத்திற்கு எதிரான கருத்துக்கள் அனைத்திற்கும், அதை பிரச்சாரம் செய்பவர்களுக்கும், அமெரிக்காவின் தொழிலாளர்கள் புத்தியில் உறைப்பது போன்ற செய்தியைத் தந்துள்ளனர்.
கடந்த நான்காண்டுகளாக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்களின் சம்பளம் 40 % உயர்த்திவிட்டு, தொழிலாளர்களின் சம்பளம் வெறும் 6 % மட்டுமே உயர்த்திய நிறுவனங்களின் சுரண்டலை தொழிலாளர்கள் சரியாகப் புரிந்து வைத்திருந்ததும் இந்த வேலை நிறுத்தங்கள் வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்ததாக தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டங்கள் ஊதிய உயர்வினை மட்டும் பெற்றுத் தரவில்லை, மாறாக 2022 ல் சங்கங்களிலும், அதன் செயல்பாடுகளிலும் இருந்த மந்த நிலையையும் இத்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் உடைத்தெறிந்து தங்களின் கட்டுமானத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளன.
இந்தப் போராட்டங்களை அமெரிக்க மக்களில் 67 % பேர் ஆதரிப்பதாக ஒரு கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.
அதாவது தொழிலாளர்கள் போராட்டத்திற்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை என்ற வாதத்தையும் போராட்டங்கள் உடைத்தெறிந்திருக்கின்றன.
தொழிற்சங்கங்களோ, இடதுசாரி கட்சிகளோ தங்கள் பலவீனங்களை மாற்றியமைக்கவும், பலம் பெறவும் இருக்கும் ஒரே வழி போராட்டங்கள் மட்டுமே என்பதை உலக ஏகாதிபத்திய சுரண்டலின் தலைமையகமான அமெரிக்காவின் தொழிலாளர்களே கற்றுத் தருகின்றனர்,
அவர்கள்தானே கற்றுத்தரவும் முடியும், ஏனென்றால் அவர்கள்தானே முதலாளித்துவத்தின் அராஜக உற்பத்தியினால் தங்களைத் தாக்கும் சகல துன்ப, துயரங்களுக்கும் நேரடியாக ஆளாபவர்கள்.
அதே சமயம் அமெரிக்காவின் தொழிற்சங்க அமைப்புகளின் தன்மை, அதாவது நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் எவ்வாறு அமைப்பாக்கியிருக்கின்றன என்பது குறித்து பெரிய தகவல்கள் நம்மிடமில்லை, அவற்றையும் இதோடு சேர்த்துப் பார்த்தால் இன்னும் சற்று கூடுதல் தெளிவு பிறக்கும்
( இப்பதிவு Blue-collar workers won big in 2023, defying bleak predictions என்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது )
Kangaraj kanagu
(முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு