தூய்மை பணி நிரந்தரம் ஒடுக்கப்பட்ட மக்களை பாதிக்குமா?

பால முருகன்

தூய்மை பணி நிரந்தரம் ஒடுக்கப்பட்ட மக்களை பாதிக்குமா?

தூய்மை பணியாளர்களை நிரந்தரம் படுத்தவேண்டும் என்ற கோரிக்கை முழுக்க சட்டப்பூர்வமான ஒரு தொழிற்சங்க கோரிக்கை. தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் வருடம் 240 தொடர்ந்து பணி புரிந்து இரண்டு ஆண்டுகள் பணி புரிந்த தொழிலாளிகள் பணி நிரந்தரம் படுத்தப் படவேண்டும். இதை சட்டப் பூர்வமாக அணுகுவது அவசியம். 

ஆனால் சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களை போராட்டத்திற்கு பிறகு சில அமைப்புகள் துப்புரவு பணியை நிரந்தரம் படுத்துதல் அந்த தொழிலாளர்களை தொடர்ந்து அப் பணியிலேயே வைத்திருக்கும் என்றும் அது போன்ற கோரிக்கை சரியானதல்ல என்று ஒரு கருத்தை முன் வைக்கின்றனர். இந்த கருத்துக்கள் ஏற்புடையதல்ல. துப்புரவு பணி என்பதில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் பணி புரிகின்றனர். ஆனால் மற்ற சமூகத்தைச் சார்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் பணி புரிகின்றனர். 

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவை செயல்பாட்டாளர் பன்னீர்செல்வம் பெற்ற தகவலின் படி தமிழகம் முழுவதும் துப்புரவு பணியாளர்கள் சமூக நிலை குறித்து பெற்ற தகவலில் இது உறுதி செய்யப் படுகிறது. நிரந்தர படுத்தப் பட்ட தொழிலாளர் மாத ஊதியம் சுமார் ரூ.33000/ ஆனால் தற்காலிக பணியாளர் சம்பளம் ரூ 16000/.  வறுமை, சுரண்டல் , பணி பாதுகாப்பு இன்மை தற்காலிக பணியாளர்களுக்கு நீடிக்கும்.இதனால் அவர்களின் குழந்தைகள் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கும் வாய்ப்பு அதிகம். இது குடும்பத்தை  சூழலை மேம்படுத்த  உதவாது.

  ஒப்பந்ததாரர்கள் வசம் உள்ள துப்புரவு தற்காலிக  பணியாளர்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நீக்கம் செய்ய எந்த கொள்கை அல்லது வழிகாட்டி அரசிடம் இல்லை. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் கணிசமாக இப்பணிக்கு வறுமை காரணமாக செல்வது தொடரும். 

கடந்த 2019 ஆண்டு கோயமுத்தூர் மாநகராட்சியில் 325 நிரந்தர துப்புரவு பணியாளர்களை மாநகராட்சி பணி நியமனம் செய்தது. ஆனால் அப் பணியாளர்களில்  சுமார் 70 மட்டுமே துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர். மற்றவர்கள் இதர சாதி மற்றும் கல்வியை காரணம் காட்டி அலுவலக பணிக்கு பயன் படுத்த பட்டனர். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக செயல்பாட்டாளர்கள் பணியில் சேர்ந்த துப்புரவு பணியாளர்களை வெற்றிலை பாக்கு வைத்து துப்புரவு பணி செய்ய அழைத்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் துப்புரவு பணிக்கு திரும்பினர்.

 இப்போதும் நீதிமன்றம் மற்றும் அரசு நிறுவனங்களில் துப்புரவு பணியை செய்ய ஒடுக்கப்பட்ட மக்கள் இல்லாத பிற சாதியினர் பணியில் உள்ளனர். அரசு பணிகளில் இட ஒதுக்கீடுகள் கடைபிடிக்க படுகின்றன.நல்ல ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் என்பது இப் பணியை செய்ய முன் வர வைக்கிறது. 

எனவே துப்புரவு பணியை நிரந்தர படுத்தவேண்டும். நல்ல ஊதியம் தரவேண்டும். இட ஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டும்.அதுவே அந்த பணியில் பிற சாதியினரை உள்வாங்கும்.

தி.மு.க ஆட்சியில் கடைபிடிக்கும் அடிப்படை பணிகளான துப்புரவு, பாதுகாப்பு,கடைநிலை பணிகள் உள்ளிட்ட பலவற்றை தனியார் வசம் ஒப்படைப்பது என்ற கொள்கை மற்றும் அதற்காக போடப் பட்ட அரசாணை நீக்கப் படவேண்டும். அது முழுக்க சட்டம் மற்றும் சமூக நீதிக்கும் எதிரானது. ஆட்சியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கையான பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

பால முருகன்

https://www.facebook.com/100003603660700/posts/3547803858683035/?rdid=rpEvoNKl04JGLJYI

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு