காலனியாதிக்கத்தின் ஆதரவாளரான ஈ.வே.ரா.வுக்கு புரட்சியாளர் பட்டம் கொடுக்கும் ஜனசக்தி!!
லிங்கம் தேவா

"பறவைகள்ன்னு சொல்றதால மட்டுமே அதெல்லாம் பறக்கும் ன்னு அர்த்தம் இல்ல. பறத்தலை கைவிட்ட சில வகையினங்களும் பறவைகள்ன்னு தான் இங்க வரையறுக்கப்படுது."
ஈமு, கேசவரி, நெருப்புக் கோழி மாதிரியான உயிரினங்கள் எல்லாம் பறவைகள் ன்னு தான் சொல்றாங்க. ஆனா அவை எதுவும் பறக்குறதில்லையே. எப்படி ?
அவையும் ஒரு கால கட்டம் வரைக்கும் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகளாகத் தான் இருந்திருக்கும். ஆனா, குறிப்பிட்ட கால கட்டத்தில் அதன் ஒரு பகுதி ஏதாவது தீவுல வந்திறங்கி இருக்கும்.
பறவைகள் அதிகப்படியான சக்தியை செலவு செய்றது பறக்கிறதுக்கு தான். அதனால தான் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறக்கிற பறவைகள் எல்லாம் காற்றோட ஓட்டத்தை பயன்படுத்தி பெருமளவு சக்தி விரயம் இல்லாம சக்தியை சேமிச்சுக்கற விதமா பயணிக்கின்றன. அதே போல குறிப்பிட்ட தீவில் இறங்கிய பறவை கூட்டத்துக்கு அங்க எதிரிகள் - அதாவது அவங்களை வேட்டையாடுற/உண்ணும் ஆட்கள் - இல்லாதபட்சம் படிப்படியாக பறப்பதை கைவிட்டு நடக்க ஆரம்பிக்கும்.
அவ்வாறு, பல தலைமுறைகள் கடக்கும் போது, இறகின் அமைப்பு பறக்கிற தன்மையை இழந்துட்டே வரும். கால்கள் நடப்பதற்கு ஏற்ற மாதிரி பரிணமிக்கும். பறக்காத பறவைகளோட இறக்கை மற்றும் இறகு அமைப்பு வச்சு அது எவ்வளவு காலம் முன்னாடியே பறத்தலை கைவிட்டிருக்கும்னு நாம புரிஞ்சுக்கலாம். நிற்க.
.
சீர்திருத்த வாதம் ன்றது இருக்குற அமைப்புக்குள்ளேயே அரசு அனுமதிக்கிற எல்லைக்குள்ளாக சிறு சிறு சமூக மாற்றங்கள் கோருவது. அதே நேரம் புரட்சி என்பதற்கான இலக்கணம் வேறு.
19 ஆம் நூற்றாண்டு ல பெரியார் மற்றும் அவரது இயக்கங்களுக்கும் கம்யூனிச இயக்கங்களுக்குமான முரண் ன்றது பல இடங்களில் வெளிப்படையாவே இருந்தது. அந்த கால கட்டங்கள் ல பெரியாரை விஞ்ஞானப் பூர்வமாக சரியான வர்க்கப் பார்வை கொண்டு தரவுகளோட விமர்சனம் செஞ்சது ஜீவா தான். அப்படியான அவரது விமர்சனங்களில் முக்கியமானது தான் "ஈரோட்டுப் பாதை சரியா?" ன்ற புத்தகம்.
படிக்கவும்: ஈரோட்டுப் பாதை சரியா? முழு நூலும் கட்டுரை மற்றும் Pdf வடிவில்
இன்னைக்கி வரைக்கும் பெரியாரை கம்யூனிசப் பார்வையில் இருந்து புரிந்து கொள்ள பெரிய அளவுல உதவும் காலத்துக்கு ஏற்ற ஒப்பற்ற படைப்பு அந்த புத்தகம். அந்தப் புத்தகத்தோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாட்டிலும் களத்திலும் பெரியாரிய கருத்து அலைகளைத் தாண்டியும் உறுத்தாக கம்யூனிச கோட்பாடுகளை முன்வைத்து அரசியல் செய்து வந்தது தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
100 ஆண்டுகள் எட்டியதைக் கொண்டாடும் நிலையில், அக்கட்சியின் இளைஞர் சங்க மாநில மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த மாநாட்டை ஒட்டிய "ஜனசக்தி" முகநூல் பக்கத்தின் பதிவில் தான் இப்படியாகப் போட்டிருக்கிறார்கள், "சமூக சீர்திருத்த புரட்சியாளர் பெரியாரை..."
https://www.janasakthi.in/social-reform-revolutionary-periyar/
இப்படியாக போட்டவர்கள் சீர்திருத்தவாதம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? சீர்திருத்த புரட்சி என்றால் என்ன? னு விளக்கினால் இந்த சமூகம் பயன் பெரும்.
பெரியாரைப் பற்றிய வர்க்கப் பார்வை இல்லாமல், பெரியாரை குறித்த எந்த ஒரு அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல், பெரியாரின் இன்றைய தேவை என்ன ? வர்க்க அரசியலுக்கு பெரியார் எங்கனம் தேவைப்படுகிறார் என்றும் சொல்லாமல், வெறுமனே 5 ஆம் வகுப்பு பேச்சுப் போட்டிக்கு சொல்லப்படும் பழைய பாயிண்ட்டுகளை வார்த்தை மாறாமல் அடுக்கிக் கொண்டு செல்கிறது அந்தப் பதிவு.
இறுதியில் முடிக்கும் போது பயங்கர உக்கிரமாக " பெரியார் ஈ.வெ.ரா மென்னெடுத்து தந்த சமூக சீர்திருத்த புரட்சியை முன்னிலும் உறுதியுடன் பரந்துபட்ட முறையில் எடுத்துச் செல்ல, அனைத்து பிரிவு இளைஞர்களையும் மாநாடு அறைகூவி அழைக்கிறது." என முடிகிறது.
உண்மையில் பெரியாரிய இயக்கங்கள் கூட இப்படி ஒரு மயிர் பிளக்கும் அறைகூவலை விட மாட்டார்கள் போல. விஞ்ஞான வழிப்பட்ட மார்க்சிய கொள்கையை ஏற்றுக் கொண்டதாகக் கூறும் ஒரு கட்சி, மார்க்சிய மூலவர்களின் வழிகாட்டுதல் படி நடப்பதாகக் கூறும் ஒரு கட்சி, தோழர் ப.ஜீவானந்தம் வழியில் செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கட்சி, இவை அனைத்துக்கும் மாறான, இவை அனைத்துக்கும் எதிரான கருத்து முதல்வாத/கொச்சை பொருள்முதல்வாத கருத்துகளை அடுக்கிக் கொண்டு செல்வது. மேலும், மேலே சொன்ன அத்தனையும் குழி தோண்டி புதைத்து விட்டு, அவற்றிற்கு எதிரான "சீர்திருத்த புரட்சியை" முன்னெடுத்து செல்வோம் என்று உரக்க கூறுகிறது. அதோடு மட்டுமல்லாமல், தான் விழும் படுகுழியில் மார்க்சியத்தை சிதைத்து கம்யூனிச கட்டுமானங்களை உடைத்து, இதுகாறும் பாடுபட்டு உயிர் நீத்த தோழர்களின் உழைப்பை கொன்றொழித்து, புரட்சிகர அடிமைச் சேவகம் செய்வதற்கு தன்னோடு மற்றவர்களையும் அறைகூவி அழைக்கிறது.
உள்ளடக்கமும் உருவமும் பொருந்தாமல் இருக்கிறது. இனி ஜீவாவின் படத்தையோ, மார்க்சின் படத்தையோ,லெனினின் படத்தையோ எங்கேயேனும் பயன்படுத்தாதீர்கள். எக்கேடும் கெட்டு புரட்சிகர அழிவுக்குள் செல்லுங்கள், அதை நல்லதென்று சொல்லுங்கள். ஆனால், ஒருக்காலும் அதை கம்யூனிசம் என்று சொல்லாதீர்கள்...
பதிவின் முதல் வரியை மீண்டும் ஒருமுறை பார்த்து விடவும்.
- லிங்கம் தேவா
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு