இணையத்தை ஆக்கிரமிக்கும் திமுக ITwing கூலிகளின் போலி ஆவணங்கள்

ர. முகமது இல்யாஸ்

இணையத்தை ஆக்கிரமிக்கும் திமுக ITwing கூலிகளின் போலி ஆவணங்கள்

ஊடகவியலில் போலிச் செய்திகளைக் கண்டறியும் போது அந்தச் செய்திகளை மூன்று வகைகளாகப் பிரிப்பர். Misinformation (எந்த உள்நோக்கமும் இல்லாமல் தவறான தகவலைப் பரப்புவது), Disinformation (தவறான தகவல் எனத் தெரிந்தே உள்நோக்கங்களுக்காக பரப்புவது), Malinformation (ஒரு தகவலை அது பயன்படுத்தப்பட்ட சூழலில் இருந்து பிரித்தெடுத்து தமது உள்நோக்கங்களை நிறைவேற்ற பரப்புவது). 

தமிழ்ச் சூழலில் முதல் இரண்டு வகைகளுக்குப் பஞ்சம் இல்லை - உபயம், சங்கிகள், தம்பிகள். மூன்றாவது வகையான Malinformation என்பது திமுகவின் இணைய வட்டாரத்தின் Modus Operandi. கோபி நயினாரின் முழு வீடியோவில் இருந்து ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு திடீரென பரப்பப்படும். அவர் அதை எதற்காக சொன்னார் என்பது விவாதப் பொருளாகாமல், அந்தக் குறிப்பிட்ட பகுதியை வைத்தே அவர் மீது இணையத்தில் இயங்குவதற்கென்றே சம்பளம் பெறும் கும்பல் ஒன்று digital lynchingஇல் ஈடுபடும். திமுகவுக்கு எதிராக யார் வந்தாலும் இதுதான் நிலைமை. 

நேற்று நடிகர் விஜய்க்கு எதிராக உத்தரப் பிரதேச இமாம் ஒருவர் பத்வா கொடுத்ததாக மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களில் பரப்பப்பட்டது. அந்த நபரே தொடர்ந்து பிஜேபி ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவர் என்பது எங்கேயும் பேசப்படாமல், விஜயிடம் இருந்து சிறுபான்மையின வாக்குகளை அந்நியப்படுத்துவது என்ற முதன்மை நோக்கம் வெளிப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்றைய ‘பேரலை’ வீடியோ. அப்பட்டமான Malinformation. 

வக்ஃபு தொடர்பான வழக்கில் எதற்காக கிறித்துவ தேவாலயம் பற்றி பேச வேண்டும் என்ற கேள்வி. தவெக தாக்கல் செய்திருக்கும் மனுவில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மத நிறுவனங்களின் சொத்துகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்ற ஒப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கத்தோலிக்கத் திருச்சபை, சீக்கியர்களின் Shiromani Gurdwara Parbandhak Committee (‘SGPC’), இந்து மதத்தின் Hindu Religious and Charitable Endowments (‘HR&CE’) Department ஆகியவற்றைக் குறிப்பிட்டு, சட்டப்பிரிவுகள் 25-26 ஆகியவை மூலமாக மத நிறுவனங்கள் இயங்குவதற்கான தன்னாட்சி அதிகாரங்களை அரசியலமைப்பு உறுதிப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்தப் பகுதி. ஒரு சட்ட ரீதியான மனு என்பது இப்படியான பகுதிகளை உள்ளடக்கி இருப்பது வழக்கமான ஒன்று. 

அடுத்ததாக, ’ஆர்கனைஸர்’ தளத்தில் வெளியான கத்தோலிக்கத் திருச்சபையின் சொத்து மதிப்பு தொடர்பான கட்டுரையில் இருந்து இந்தத் தகவல்கள் எடுக்கப்பட்டிருப்பதால், தவெக ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருக்கிறதாம். பிப்ரவரி 11, 2024 அன்று DNA India தளத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை, ’ஆர்கனைஸர்’ இணையதளம் கடந்த ஏப்ரல் 04, 2025 அன்று பயன்படுத்தி, கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்கிறது. ஆக, இந்த செய்தியின் வரிகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்போ, ஆர்கனைஸர் தளமோ கிடையாது; அது DNA Indiaவின் செய்தி. 

இந்த Malinformation வெளியிடப்பட்டிருக்கும் ஸ்டைலைப் பாருங்கள்: கையில் ஏதோ ரகசிய ஆவணம் ’சிக்கியதாக’ ஒரு சித்தரிப்பு, மோடியும், விஜயும் பத்தாண்டுகளுக்கு முன்பு எடுத்த ஒரு படம், 'RSS பிடியில் தவெக!’ என்று நேரடியாக தீர்ப்பு சொல்லும் முனைப்பு.. இவையெல்லாம் தான் Malinformation.  வீடியோவின் தொடக்கத்தில் விஜயை ‘ஜோசப் விஜய்’ என்று அழைத்துவிட்டு, ’நாம் அவரை மத ரீதீயாக குறிப்பிடவில்லை’ எனக் கூறுவது எதற்கு என்பதுதான் கேள்வி. 

இதன் நோக்கம் ஒன்று தான்.. சிறுபான்மைச் சமூகத்தினர் வாக்குகள் தவெக போன்ற கட்சிகளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதுதான். சிறுபான்மைச் சமூகங்களை திசைதிருப்புவதற்காக இத்தகைய போலிச் செய்திகள் மிகக் கவனமாக பரப்பப்படுகின்றன. சிறுபான்மையினர் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. நமது பெயரால் நம்மை வைத்து நிகழ்த்தப்படும் மற்றொரு அரசியல் நடவடிக்கை இது. 

இதுதொடர்பாக மற்றொன்று, வக்ஃபு சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுகவின் மனு தான் விசாரிக்கப்பட்டது என்று உபிக்களும், தவெகவின் மனுதான் விசாரிக்கப்பட்டது என்று அணில்களும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்ட மனுவின் பெயர்: Asaduddin Owaisi Vs Union of India. 

மீண்டும் அதே அவதூறு.. 

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தவெகவின் மனு குறித்த போலிச் செய்திகளைத் திமுகவின் யூட்யூபர்கள் திட்டமிட்டு ‘ஆர்.எஸ்.எஸ் சதி’ என்ற பெயரில் manipulate செய்வது குறித்து எழுதியிருந்தேன். U2Brutus என்ற நபர் மீண்டும் அதே பொய்யை முன்வைத்து தவெகவை ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு இணைத்துப் பேசுவது ஒரு அஜெண்டா. இப்போது திமுக தொடுத்திருக்கும் மனுவை வாசித்த போது, அதிலிருக்கும் சில பத்திகள் எங்கே இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் எனத் தோன்றியது. இதை வைத்து என்ன Thumbnail செய்வார்கள் என அறிய ஆவல். 

1. திமுக சார்பில் தொடுக்கப்பட்டுள்ள மனுவின் 10ஆம் பக்கத்தில்  ’வக்ஃபு வாரியத்தின் வரலாறு’ குறித்த பகுதி தொடங்குகிறது. அதில் ‘1839ஆம் ஆண்டு கிறித்துவ மிஷனரிகளின் எதிர்ப்பின் காரணமாக, மத நிறுவனங்கள் மீதான நேரடிக் கட்டுப்பாட்டை பிரிட்டிஷ் அரசு குறைத்தது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ’1839’ என்ற குறிப்பிட்ட ஆண்டு பற்றிய தகவல்களைத் தேடினால், அதனை OpIndia என்ற ஆர்.எஸ்.எஸ் தளம் மட்டுமே தன்னுடைய ‘வக்ஃபு வாரியத்தின் வரலாறு’ குறித்த இரண்டு கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறது. 

2. பத்திகள் 15 முதல் 22 வரை (பக்கங்கள் 11-14; Pdf ஆவணத்தில் பக்கங்கள் 37-41 வரை) முழுவதும் ஏபிவிபி (ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு) அமைப்பின் இணையதளத்தில் 'Waqf: History and Evolution' என்ற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரையில் இருந்து முழுவதுமாக Copy Paste செய்யப்பட்டிருக்கிறது. Plagiarism செய்யப்படும் கல்லூரி மாணவர்களின் assignmentகளில் ஆங்காங்கே paraphrase செய்வது போல சில இடங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணைய தளங்களில் இருந்து இந்தப் பத்திகள் நேரடியாக Copy Paste செய்யப்பட்டிருந்தாலும், இறுதியில் வக்ஃபு திருத்தச் சட்டம் எப்படி அடிப்படை உரிமைகளில் தலையிடுகிறது என்பதைத் தான் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. தவெகவின் மனுவும் அத்தகைய சுட்டிக்காட்டுதலையே ஒரு argument வழியாக, கத்தோலிக்க தேவாலயங்கள், சீக்கிய குருத்துவாராக்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றை வைத்து பேச முனைகிறது. 

இங்கே ஒரு சந்தேகம்... ஆர்.எஸ்.எஸ் இணையதளங்களில் இடம்பெற்ற கட்டுரைகள் பக்கம் பக்கமாக தவெக மனுவில் copy paste செய்யப்பட்டிருந்தால் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்? ஒரு வரி, அதுவும் அதற்கான source ஆர்.எஸ்.எஸ் தளம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய பிறகும், அவதூறு பரப்புபவர்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

இதை வைத்து ‘ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி திமுக’ என்று கூறினால் எவ்வளவு பெரிய அபத்தமோ, அப்படித்தான் இவர்களின் வீடியோக்களும் இருக்கின்றன. ஒரு வரியை வைத்து அவதூறு பரப்புவது தவறான போக்கு. அது வெகுமக்களுக்கு அளிக்கும் செய்திகளின் நம்பகத்தன்மைகைக் குலைப்பது; கண்டிக்கத்தக்கது. இதனை மூத்த பத்திரிகையாளர்கள் ஆதரிப்பது தமிழ் ஊடகவியலுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானகரமான இழுக்கு. கட்சி சார்பை மட்டுமே மையமாகக் கொண்டு Malinformationக்கு துணைபோவதை இத்தகையோர் நிறுத்த வேண்டும். 

அடுத்ததாக, ’கிறித்துவர்களைக் காட்டிக் கொடுக்கிறார்கள்’ என்ற வாதம். நாடாளுமன்றக் கூட்டுக்குழு அளித்த அறிக்கையிலும், திமுக தொடுத்திருக்கும் மனுவிலும், ‘இந்துக்களும் கிறித்துவர்களும் நடத்தும் மத நிறுவனங்களில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக நியமிக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் பொருள், முஸ்லிம் அல்லாதோர் நடத்தும் மத நிறுவனங்களில் முஸ்லிம்களை நியமிக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக, இந்த சட்டதிருத்தம் எவ்வாறு மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகளில் தலையிட முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக.. இதை இப்படி அணுகினால் சிக்கல் இல்லை. இதில் அரசியல் செய்வது அசிங்கமாக இருக்கிறது. 

இந்த விவாதங்களை இங்கே எழுப்புவதன் முக்கிய காரணம், இவை முஸ்லிம்கள் பற்றிய வழக்கு குறித்தவையாக இருப்பதோடு, ’நான் தான் உங்கள் பாதுகாவலன்’ என்ற நோக்கத்தோடு, மற்றொரு தரப்பின் மீதான அவதூறாக வெளிப்படுகிறது என்பதையும், அதில் முஸ்லிம்கள் பகடைகளாக திசைதிருப்பப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்காகத் தான். திமுக, தவெக ஆகிய இரண்டு கட்சிகளும் வக்ஃபு சட்டதிருத்ததிற்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பது வரவேற்பிற்குரியது.

- ர. முகமது இல்யாஸ்

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02kkPTdcZBAktF5ynjsN1QyA7U76KpCVikfpxkDZR18Fyy5VtiK73zQKFriAjHwBVZl&id=100013955505242&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f&_rdr

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0CFXpiE89hzMkFeCu61SnLhW4UeDBM4SoUXyTcfBtSrnvYJqKpFvHg6VW2SnUm76bl&id=100013955505242&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு