வேங்கைவயல்: திசை திருப்பப்படும் நீதி
எவிடென்ஸ் கதிர்
கடந்த 30 டிசம்பர் 2022 அன்று எழுதிய அறிக்கை. அங்கு நிலவும் தீண்டாமை வன்கொடுமையின் பின்னனியில் வழக்கு எடுத்து செல்லப்படவில்லை.
திசை திருப்பப்படும் நீதி
சோத்துல கைய வச்ச பீ ஞாபகம். தண்ணீ குடிச்சாலும் பீ ஞாபகம்.எங்கள் குடி நீர் தொட்டியில் பீயை கரைச்சு ஊற்றியதற்கு பதிலாக பால்டாயில் கரைச்சு ஊத்தி இருந்தால் எல்லோரும் நிம்மதியாக போய் இருப்போம்.இப்போது ஊரே அசிங்கப்பட்டு நிக்கது.எங்கள் மானமும் போச்சு .மரியாதையும் போச்சு என்று கூறிய மக்களை தேற்ற முடியாமல் தவித்து நின்றேன்.
புதுக்கோட்டை - இரையூர்,வேங்கைவயல் கிராமம் தலை குனிந்து நிற்கிறது.தமிழகமும் அவமானப்பட்டு போய் கிடக்கிறது.சாதி என்பது முத்திய மன நோய் .அது மாண்பினை சிதைக்கும்.மானுடத்தை வீழ்த்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.தலித் மக்கள் பயன் படுத்தும் குடிநீர் தொட்டியில் ஒரு வாளி அளவிற்கு மலத்தை எடுத்து சென்று கரைத்த கொடுமையை என்னவென்று சொல்லுவது? அது ஒரு ஆள் செய்த வேலை அல்ல.ஒரு கும்பல் செய்த வேலை .திட்டமிட்டு இத்தகைய பாதகமான செயலை செய்து இருக்கிறார்கள் என்றும் அப்பகுதி தலித் மக்கள் கூறுகின்றனர்.
எப்போது கரைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை.தலித் சமூகத்தை சேர்ந்த கனகராஜ், நாடக கம்பெனி ஒன்றில் இசை கலைஞராக பணியாற்றி வருகிறார்.கடந்த 24 டிசம்பர் 2022 இரவு 10 மணி அளவில் அவரது ஆறு வயது மகளுக்கு காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்டு இருக்கிறது.உடனடியாக அருகாமையில் உள்ள காவேரிநகர் - ஆரம்ப சுகாதர நிலையத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்ல அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.மறுநாள் 25 டிசம்பர் அன்று காலை 5 மணி அளவில் அந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்தும் செல்லப்பட்டு உள்ளார்.பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடிநீரில் தான் பிரச்னை என்று கூறியிருக்கின்றனர்.மேலும் அக்குழந்தையை போன்றே நான்கு குழந்தைகள் பாதிக்கப்பட மருத்துவர்கள் உங்கள் ஊர் குடி நீர் தொட்டியை பரிசோதனை செய்து பாருங்கள் என்று கூறியவுடன் குடி நீர் தொட்டியை திறந்து பார்த்தல் திட்டு திட்டாக கரைக்கப்பட்டும் கரைக்கப்படாமலும் குவியலாக மலம் கிடந்து உள்ளது.அந்த கிராமத்தில் 40 தலித் சமூகத்து மக்கள் அனைவருக்கும் பேர் அதிர்ச்சி.இந்த தண்ணீரை தான் குடித்து வந்தோமோ ? இந்த தண்ணீரைத்தான் சமையலுக்கும் குளிப்பதற்கும் பயன் படுத்தி வந்தோமா? என்று விவாதமாக மாற ஒரு ஊரே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தீண்டாமை கொடுமை சமூக வலை தளங்களில் வைரலாக விசுரூபம் எடுக்க கடந்த 27 டிசம்பர் அன்று மாவட்ட ஆட்சி தலைவரும் காவல் கண்காணிப்பாளரும் அப்பகுதிக்கு சென்று இருக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் இருவரும் ஆறுதல் கூறும்போது உங்களுக்கு என்ன என்ன பிரச்னை என்று கேட்கும்போது இங்கு உள்ள அய்யனார் கோவிலில் எங்களை உள்ளே செல்ல அனுமதி மறுக்கின்றனர்.இங்கு உள்ள தேநீர் கடையில் இரட்டை குவளை முறை இருக்கிறது என்று சொல்ல தலித் மக்களை கோவிலுக்கு அழைத்து சென்று உள்ளனர்.உடனடியாக மலம் கரைக்கப்பட்டு கொடுமை மறைக்கப்பட்டு கோவிலிலுக்கு அழைத்து செல்லப்பட்டது பெருமையாக பேசப்படுகிற சம்பவமாக மாறி போன தந்திரத்தை என்ன சொல்ல? இதுவரை மலத்தை கரைத்த கயவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை.மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் தோற்று போய் இருக்கிறது.இதுதான் உண்மை.அங்கு பல்வேறு தீண்டாமை கொடுமை நடந்து உள்ளது.இது எல்லாம் மாவட்ட ஆட்சி தலைவருக்கும் எஸ்.பி.க்கும்தெரியாதா? தீண்டாமையை தடுப்பது ஒழிப்பதுதானே அவர்கள் வேலை? இதில் என்ன புரட்சி ?சரி கடமையை செய்ததற்காக அவர்களை பாராட்டுவோம்.அப்படி என்றால் மற்ற மாவட்டங்களின் ஆட்சி தலைவர்களும் காவல் கண்காணிப்பாளர்களும் கடமையை செய்யவில்லை என்றுதானே அர்த்தம் .அதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
அந்த குடி நீர் தொட்டி கூட காவேரி நீர் தேக்க பணிக்காக 2014 ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்தது.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வரை அங்கு உள்ள இடைநிலை சாதிக்காரர்கள் இடத்தில உள்ள குடி நீர் தொட்டியிருந்துதான் தலித் மக்களுக்கு தண்ணீர் வந்து உள்ளது.அவர்கள் பிடித்தது போக மிகவும் குறைவான நீரையே தலித் மக்களுக்கு கொடுத்து உள்ளனர்.குடி நீருக்காக கடுமையாக கோடை காலங்களில் பாதிக்கப்பட்டு இருந்து உள்ளனர்.இந்நிலையில் 8 ஆண்டுகளாக இந்த காவேரி நீர் தேக்க குடி நீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.எங்களுக்காவது கொடுங்கள் என்று பஞ்சயாத்தில் கஞ்சி கேட்டு 8 மாதத்திற்கு முன்பு பெற்று இருக்கின்றனர்.இதுவரை இந்த தொட்டி சுத்தப்படுத்தப்படவும் இல்லை.இங்கு உள்ள அய்யனார் கோவிலில் தலித்துகள் அனுமதிக்கவும் படுவது இல்லை.கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு தரையில் இருக்க கூடிய மண்ணை தொட்டு விபூதியாக பூசி கொண்டு வந்த சம்பவமும் நடந்து இருக்கிறது.
தலித் மக்கள் குடியிருக்கு பின்பக்கம் பெரிய வாரி ஓடை ஒன்று இருக்கிறது.அந்த ஓடையை சுற்றி இப்பகுதி இடைநிலை சாதிக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.இதனால் ஓடை குறுக்கலாக்கபட்டு மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளில் புகுந்து விடுகிற கொடுமையும் நடந்து வருகிறது. .எல்லா வீடுகளும் பழுதடைந்து உள்ளன.கழிப்பறைகள் கிடையாது.இது போன்று பல கொடுமைகள்.
அய்யனார் கோவில் - சாமி முன்னோடியாக தலித் மக்கள் இருந்து உள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் மக்கள் தப்பு அடிக்க மறுப்பு தெரிவிக்க, இனிமேல் உங்களுக்கு கோவிலில் உரிமை கிடையாது என்று கூறி அனுமதி மறுத்து உள்ளனர்.அங்கு உள்ள பொறம்போக்கு கருவேல மரங்களை வெட்டி இடைநிலை சாதிக்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தலித்துகளுக்கு அனுமதி இல்லை.குளத்தில் மீன் பிடிக்கவும் அனுமதி இல்லை.
இந்த கிராமம் தாரை கிராமம்.அதாவது இங்கு உள்ள நிலங்கள் செட்டியார்களுக்கு சொந்தமாக இருந்து உள்ளது.உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்கிற அடிப்படையில் 20 ஏக்கர் நிலத்தை உழுது வந்த தலித் மக்கள் அந்த நிலத்தை தங்களுக்கு கேட்க அந்த நிலத்தை தலித்துகள் உழவில்லை என்று கூறி 20 கூட்டு பண்ணை ஏக்கர் நிலத்தையும் பறித்து உள்ளனர்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் குடி நீரில் மலத்தை கரைத்த சம்பவத்திற்கு வருவோம்.கடந்த 2002 ம் ஆண்டு திண்ணியத்தில் முருகேசன்,ராமசாமி என்பவரது வாயில் மலம் திணிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து 2003 ம் ஆண்டு முத்துமாரி என்பவரின் உடலில் மலம் ஊற்றப்பட்டது.சங்கன் என்பவரது வாயில் 2004 ம் ஆண்டு சீறுநீர் திணிக்கப்பட்டது.கொல்லிமலை என்பவரது வாயில் 2019 ம் ஆண்டு மலமும் சீறுநீரும் கொடுக்கப்பட்டு கொடுமையும் நடந்தது.ஆனால் வேங்கைவயல் கிராமத்தில் ஒட்டு மொத்த மக்களுக்கும் மலத்தை கரைத்து கொடுத்த கொடுமை நடந்து இருக்கிறது.இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.இத்தகை செயல் மனித குலத்திற்கே விரோதமானது.
எங்கே தேசிய அளவில் இந்த பிரச்னை பெரிய பிரச்னையாக மாறுமோ என்று கருதி தந்திரமாக இந்த பிரச்னையை அதிகாரிகள் ,சாமியாடி பெண் மற்றும் இரட்டைக்குவளை தேநீர் கடை உரிமையாளர் ஆகியோரை கைது செய்து திசையை மாற்றிவிட்டதாகவே தெரிகிறது.
ஆதிதிராவிடர் நல குழு ஆணையம் மாவட்ட ஆட்சி தலைவரையும் எஸ்.பி ஆகியோரையும் பாராட்டுவது இருக்கட்டும்.நீங்கள் எப்போது களத்திற்கு வர போகிறீர்கள்? வன்கொடுமை தடுப்பு சட்டம் மாநில அளவிலான கண்காணிப்பு குழுவிற்கு முதல்வர் தானே தலைவர்.நீங்கள் ஏன் கண்டித்து இதுவரை அறிக்கை கொடுக்கவில்லை.உங்கள் சார்பாக தலைமை செயலாளர் ,காவல் துறை தலைவர் ஆகியோரை சம்பந்த பட்ட இடத்திற்கு அனுப்பி வைத்து இருக்க வேண்டும்.அதுவும் செய்யப்படவில்லை.ஆதிராவிடர் நல துறை அமைச்சர் என்பவர் இருக்கிறாரா? அல்லது வெளிநாடு பயணத்தில் இருக்கிறாரா?
அன்பிற்குரிய முதல் அமைச்சருக்கு ஒட்டு அளித்தவன் என்கிற அடிப்படையில் உரிமையுடன் கேட்கிறேன்.எங்கள் மக்கள் மலம் கலந்த நீரை குடித்த சம்பவம் உங்களை தொந்தரவு செய்து இருக்கும் என்று நம்புகிறேன்.ஆகவே அந்த பகுதிக்கு நீங்கள் வந்தால் அம்மக்களுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருக்கும்.
இது சனாதன சாதிய வன்கொடுமை அல்லவா? பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை தொட்டு பார்த்தேன் அனலாக கொதித்தது.அந்த குழந்தைக்கு என்ன தெரியும்? சாதி அவர்களையும் விட்டு வைக்கவில்லை.
வேங்கைவயல் மக்கள் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர்.அங்கு யார் எல்லாம் செல்லவில்லையோ அவர்கள் எல்லாம் சனாதன வாதிகளே.சாதிய வாதிகளே.செல்லுவது செல்லாமல் இருப்பது உங்கள் விருப்பம்.எங்களுக்கும் ஒரு விருப்பம் உண்டு.உங்களை முற்றிலும் புறக்கணிப்பதே.ஆகவே உருட்டாமல் உருப்படியாக ஏதேனும் செய்யுங்கள்.
https://www.facebook.com/share/p/1XxQJozj82/
==========================================
கடந்த 14 ஜனவரி 2023 அன்று நான் எழுதிய அறிக்கையில் முத்துகிருஷ்ணன், சுதர்சன், முரளி ராஜா ஆகிய மூவரும் குடிநீர் தொட்டியில் ஏறி பார்த்தனர் என்று பதிவு செய்து இருந்தேன். ஏறி பார்த்தவர்களே குற்றவாளிகளாக சிபிசிஐடி சித்தரித்து உள்ளனர்.
அரசியல் சூழ்ச்சியும் சாதி சதியும் விசாரணை போக்குகளும்
தலித் மக்கள் மீது நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக நம்முடைய அரசு எந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன, வேங்கைவயல் வன்கொடுமை சம்பவத்தில் சட்ட ரீதியாக அரசு செய்த குளறுபடிகளை தெளிவு படுத்தவே இதை எழுதுகிறேன்.
கடந்த 24 மற்றும் 25 டிசம்பர் 2022 தேதிகளில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 5 தலித் குழந்தைகள் கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற உடல் ரீதியான பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர்.அதற்கு குடி நீர் தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.இந்த நிலையில் மறுநாள் 26 டிசம்பர் அன்று குடிநீர் அதிக துர்நாற்றமும் கலங்களாகவும் வந்து இருக்கிறது.இதனால் 26 டிசம்பர் அன்று காலை 7 மணிக்கு முத்துகிருஷ்ணன்,சுதர்சன்,முரளிராஜா ஆகிய இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறி பார்த்து இருக்கின்றனர்.மலம் மிதக்கப்பட்டு இருந்து இருக்கிறது.அந்த மலத்தை பிரபாகரன் என்பவரின் அலைபேசியில் புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.அந்த மலத்தை முரளிராஜா ஒரு கொட்டாங்குச்சியில் வாரி பிளாஸ்ட்டிக் கவரில் போட்டு எடுத்து வந்து உள்ளார்.இதனால் முத்துகிருஷ்ணன்(1) ,சுதர்சன்(2) ,முரளிராஜா(3),பிரபாகரன் (4) ஆகிய நான்கு பேரும் வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்படுகின்றனர்.
முத்துகிருஷ்ணன் முதலில் பார்த்தார் என்பதற்காக அவரது அண்ணன் கண்ணதாசனுக்கு (5) ஏதேனும் விபரம் தெரியும் என்று அவரையும் சேர்க்கிறார்கள்.மலத்தை நீரில் கலந்த கும்பலுக்கு எதிராக புகார் கொடுத்த கனகராஜ்(6) வழக்கில் சேர்க்கப்படுகிறார்.இந்த கிராமத்தில் விபரமாக பேசக்கூடிய முருகன் என்பவரின் மகன் உமேஸ்வரன்(7) மற்றும் 15 வயது சிறுவன் ராஜ்குமார் (8) ஆகியோரும் சாட்சிகளாக சேர்க்கப்படுகின்றனர்.
தற்போதைய பஞ்சாயத்து தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாவுக்கும் தலித் மக்களுக்கும் இடையே முரண்பாடு இருக்கிறது. தலித் மக்களுக்கு தற்போதைய பஞ்சயாத்து நிர்வாக ரீதியாக எந்த உதவியும் செய்யவில்லை என்கிற வருத்தம். முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் தற்போதைய ஒன்றிய கவுன்சிலர் ரேவதி கணவர் சிதம்பரத்திற்கும் தலித் மக்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது.
முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தூண்டுதல் பேரில் தலித் இளைஞர்கள் மலத்தை கலந்து இருப்பார்கள் என்று வழக்கினை முடிக்க போலீஸ் நினைக்கிறது.ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை.ஆகவே தலித் இளைஞர்களிடத்தில் அந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தூண்டுதல் பெயரில் செய்தோம் என்று சொல்லிவிடுங்கள்.உங்களை விட்டுவிடுகிறோம் என்று கூறி விசாரணையில் கடுமை காட்டி இருக்கின்றனர்.
சிறுவனை தவிர்த்து மற்றவர்களின் அலைபேசி எண்களை சைபர் கிரைம் கொண்டு ஆய்வு செய்து உள்ளனர்.அனைவரின் வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனை விபரங்களை பிரிண்ட் எடுத்து உள்ளனர்.ஆகவே போலீஸ் விசாரணையை முழூமையான கண்ணோட்டத்தில் பார்க்காமல் தலித்துகள்தான் செய்து இருப்பார்கள் என்று முடிவுக்கு வந்து அணைத்து விபரங்களையும் சேகரித்து உள்ளனர்.
குறிப்பாக முத்துகிருஷ்ணன் தனியார் நிறுவனம் ஒன்றில் கடனை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்தி உள்ளனர்.இவர்கள் எல்லோரும் யார் பணம் கொடுத்து உங்களை இயக்குகிறார்களா? என்று கேட்டதற்கு அவர்கள் எல்லோரும் கடன் வாங்கியவர்கள் என்று கூறி ஆதரங்களை கொடுத்து இருக்கிறார்.போலீஸ் அமைதியாகி போனார்கள்.அதே போன்று உமேஸ்வரனிடம் நீ 15,000 அனுப்பி இருக்கிறாயே .அது யாருக்கு மலத்தை கலந்த ஆட்களுக்கு கூலியா என்று கேட்க,அது இன்சூரன்ஸ் பணம் என்று கூறி இருக்கிறார்.அதற்கான ஆதாரம் கொடுக்க போலீஸ் கப்சிப்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவரோடு உங்களுக்கு ஏன் நெருக்கம்? அவர் வேறு சாதி காரர்தானே ? எதற்கு அப்பா என்று சொல்லி அழைக்கிறீர்கள்? வயதில் பெரியவர்.எந்த சாதி பாகுபாடும் காட்டாமல் பழகுவார்.ஆனால் தற்போதைய பஞ்சயாத்து தலைவர் மீது உங்களுக்கு என்ன கோபம்? அவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.கடந்த 15 ஆகஸ்ட் 2022 அன்று கிராம சபை கூட்டத்தில் குடிநீர்,சுடுகாட்டுக்கு பாதை போன்றவை கேட்டபோது எனக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை.அதனால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்றார்.எங்களிடம் சாதி பாகுபாடுடன் நடந்து கொண்டார்.அப்படி என்றால் முன்னாள் பஞ்சயாத்து தலைவரின் தூண்டுதல் பெயரில்தான் மலத்தை தண்ணீரில் கலந்தீர்கள் ? அப்படித்தானே ? எங்களை யாரும் மலத்தை கலக்க சொல்லவில்லை.நாங்களும் மலத்தை கலக்கவில்லை.மலத்தை கலந்தது யார் என்று தெரியாது.இதுதான் விசாரணையின் அடிப்படை கேள்விகள் மற்றும் பதில்கள்.
ஆனால் விசாரணையில் போலீஸ் நடந்து கொண்டதுதான் அத்துமீறல்.காலை 9 மணி என்று சம்மன் கொடுத்து வெள்ளணுர் காவல் நிலையத்திற்கு அழைத்து உட்காரவைத்துவிட்டு இரவு 9 மணிக்கு விசாரணை ஆரம்பிப்பது.தனித்தனி விசாரணை .6 - 10 போலீஸ் என்று சூழ்ந்து கொண்டு விசாரணை.வீடியோவை ஆன் செய்துவிட்டு விசாரிக்கும்போது மரியாதையாக பேசுவது.ஆப் செய்துவிட்டு சொல்லுடா நீதானே மலத்தை கலந்தாய் .அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று மிரட்டுவது ஆபாசமாக பேசுவது போன்ற மீறலில் ஈடுபட்டு இருக்கின்றனர். வீடியோ பதியும்போது 4 போலீஸ் பெண் போலீஸ் என்று இருப்பார்கள்.வீடியோ பதிவு செய்யாதபோது நிறைய போலீஸ் சூழ்ந்து கொண்டு மிரட்டி இருக்கின்றனர்.உண்மையை சொன்னால் உனக்கு 2 லட்சம் பணமும் அரசு வேலையும் கிடைக்கும் என்று எல்லாம் என்று எல்லாம் கூறி இருக்கின்றனர்.ஒரு இளைஞரை தலையில் தட்டி இருக்கின்றனர்.விசாரணை இரவு 12.30 வரை சென்று இருக்கிறது.அவன் உண்மையை சொல்லிவிட்டான்.நீதான் கலந்து இருக்கிறாய் என்று மாற்றி மாற்றி கேள்வி கேட்டு அழ வைத்து உள்ளனர்.
கடந்த 11 ஜனவரி அன்று நான் வெள்ளனுர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்றேன்.விசாரணையின் முதன்மை அதிகாரி உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.அவரிடத்தில் எதற்கு இரவு 12 மணி வரை விசாரணை செய்திர்கள்? என்றேன்.பதட்டமாக பேசிவிட்டு எழுந்து ஒரு அறைக்குள் சென்று விட்டார். இப்படி பதட்டத்துடன் இருக்கும் ஒரு அதிகாரி எப்படி புலன் ஆய்வு செய்ய முடியும்? எங்கள் மக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல.பாதிக்கப்பட்டவர்கள் / சாட்சிகள்.ஆகவே அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றேன்.அப்போது இரண்டு காவல் உயர் அதிகாரிகள்,கைகளை பிடித்து கொண்டு சார் இதை பெரிது படுத்தாதீர்கள் என்றார்கள்.அவர்களிடத்தில் நான்,சம்மன் அனுப்பி விசாரிக்கும்போது சரியான நேரத்தில் விசாரிக்க வேண்டும்.அதுதான் முறை.இப்படி மிரட்டினால் எப்படி உண்மை கிடைக்கும் என்று கேட்டதற்கு நாங்கள் மிரட்டவில்லை சார் என்றார்கள். அதன் பிறகு பாதிக்கப்பட்ட மக்களை கண்ணியமாக நடத்தினார்கள் என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறினார்கள்.
அண்ணா நீங்கள் மட்டும் வரவில்லை என்றால் நாங்கள்தான் தண்ணீரில் மலத்தை கலந்தோம் என்று கூறி வழக்கினை முடித்து இருப்பார்கள் என்று கூறி அழுதார்கள்.
இரண்டு பெண் போலீசார் தலித் குடியிருப்புக்கு சென்று அங்கு உள்ள தலித் பெண்களிடத்தில், உங்கள் குல சாமி கோவிலுக்குதான் சென்று வருகிறோம்.அங்கு சாமியாடி குற்றவாளிகள் உங்கள் இடத்தில்தான் இருக்கிறார்கள் என்று சொன்னிச்சு.விபதியை எடுத்து கொண்டு உண்மையை சொல்லுங்கள் என்று கூறி இருக்கின்றனர்.இதன் பெயர்தான் நேர்மையான வெளிப்படையான விசாரணையா?
விசாரிக்கப்பட்ட 15 வயது சிறுவனிடம் இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகளும் அன்புடன் நடந்து கொண்டனர்.பாராட்டுகிறேன்.ஆனால் அந்த சிறுவனை எதற்கு விசாரிக்க வேண்டும்? அய்யப்பன் என்பவரின் கிணற்று அருகே 4 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுவனும் இரண்டு ஆதிக்க சாதி சிறுவர்களும் காலை கடன்கள் கழித்தார்கள் என்கிற குற்றசாட்டு.அது உண்மையும் அல்ல.இருப்பினும் அதற்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்?
போலீசார் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும்.தலித் தரப்பில் வாக்குமூலம் அளிக்க வந்தவர்கள் சாட்சிகள்/ பாதிக்கப்பட்டவர்கள்.ஆகவே அவர்கள் குற்றவாளிகள் அல்ல.குற்றம் சாட்டப்பட்ட ஒருவரையே அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்த கூடாது என்கிற நிலையில் பாதிக்கப்பட்ட மற்றும் சாட்சிகளிடம் நீங்கள்தானே செய்திர்கள் என்று கூறுவது உச்சகட்ட விசாரணை மீறலாகும்.இதுபோன்ற கொடூர வன்கொடுமைக்கு இந்தியாவில் எங்கும் இப்படி யாரும் விசாரணை மேற்கொண்டது இல்லை.எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த குடி நீர் தொட்டி தலித் குடியிருப்பில் உள்ளது.ஆகவே இவர்கள்தான் செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகத்தின் பெயரிலும் பொலிஸாருக்கு இருந்த அழுத்தம் மற்றும் சாதிய மனோபாவம் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கினை எளிதாக முடித்துவிடலாம் என்று திட்டம்போட்டு இந்த விசாரணை நடந்தது.
உண்மையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி புதுக்கோட்டை டி.எஸ்.பி.அவர்தான் விசாரிக்க வேண்டும்.ஆனால் டி.எஸ்.பி.யை விட அந்த சிறப்பு தனி படை குழு எப்படி விசாரிக்கலாம்? சாட்சிகளை/பாதிக்கப்பட்டவர்களை தேச விரோதிகள் போன்று உட்கார வைத்து 6 - 10 போலீஸ் விசாரிப்பது நியாயமா? தனிப்படை விசாரணை குற்றவாளிகளுக்கா? பாதிக்கப்பட்டோருக்கா?
தலித் தரப்பிற்கு ஆதரவாக இருக்க கூடிய அந்த முன்னாள் பஞ்சயாத்து தலைவர் முக்குலத்தோர் சமுதாயம்.மிகவும் கண்ணியத்துடன் அன்புடன் தலித் இளைஞர்களிடம் பழகி இருக்கிறார்.அவர்களுக்கு நிறைய உதவிகளும் செய்து இருக்கிறார்.அனால் இவருக்கும் தற்போதைய பஞ்சயாத்து தலைவர் கணவருக்கும் பிரச்னை.அதற்காக தலித் தரப்பில் மலத்தை கலக்க சொல்லி நீங்களே குடியுங்கள் என்று சொல்லுவாரா?தலித்துகளும் அதை குடித்து இருப்பார்களா? தற்போதைய பஞ்சயாத்து தலைவரின் சாதி மக்கள்தான் அங்கு பெரும்பான்மையாக இருக்கின்றனர்.அதற்கு பயந்து கொண்டு போலீஸ் அச்சப்படுகிறதா என்று தெரியவில்லை.
சாமியாடி பெண் மற்றும் இரட்டை குவளை முறையை பயன்படுத்திய இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.தாசில்தார்தான் புகார்தாரர்.ஆனால் அவரே அங்கு தீண்டாமை இல்லை என்று அறிக்கை கொடுக்கிறார்.என்ன முரண் இது?
அவர்கள் இருவரும் பிணை கேட்கும்போது அரசு தரப்பில் எதிர்ப்பு இல்லை.நீதி மன்றமும் இரண்டு வழக்கறிஞர்களை நியமித்து நேரடியாக விசாரணை செய்து அறிக்கை கொடுங்கள் என்று கேட்டதற்கு உப்பு சப்பு இல்லாத அறிக்கை அது.
பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாக மாற்றி சமூகத்தில் அவர்களது பெயரை கெடுக்கும் சதி எங்களுக்கு தெரியாதா? இது எவ்வளவு பெரிய அநீதி? இந்த அரசியல் சாதி சதியைத்தான் நாங்கள் உடைத்து இருக்கிறோம்.இப்போதும் மட்டும் எப்படி பல கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.இது ஏன் ஆரம்பத்தில் செய்யப்படவில்லை.அப்பாவி மக்களிடம் இப்படி நடந்து கொள்ளுவது நியாயம் அல்ல.ஏற்கனவே அவமானப்பட்டு இருக்கும் அவர்களிடத்தில் கரிசனையும் நீதியின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.
தீண்டாமை இல்லை என்றால் கடந்த 29 டிசம்பர் 2022 அன்று தலித் மக்கள் கோவிலுக்கு சென்றதற்காக கோவிலை கழுவி விட்டார்களே ? அதன் பெயர் என்ன? அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதா?
அதே நேரத்தில் தற்போது விசாரணை பரந்த பட்ட அளவில் மற்ற கோணங்களையும் விசாரிப்பதாக அறியவருகிறேன்.வரவேற்கிறேன்.
விசாரணை என்பது சட்ட பூர்வமாக விஞ்ஞான பூர்வமாக இருக்க வேண்டும்.எஸ்.சி.எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டம் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களை சார்ந்து இருப்போருக்கும் சாட்சிகளுக்கும் அதிக உரிமைகளை வழங்கி இருக்கிறது.அவர்களை அச்சறுத்தல் செய்ய கூடாது.அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. குறிப்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அத்தியாயம் 4(A) பாதிக்கப்பட்டோர் சாட்சிகள் உரிமைகளை விபரங்களை விசாரணை அதிகாரிகள் படிக்க வேண்டும். இந்த விசாரணை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் நிலையிலிருந்து மேற்கொள்ளாமல் குற்ற வழக்கின் நிலையிலிருந்து மேற்கொள்ளுவது விசாரணை பிழை என்பேன்..ஒரு குற்றத்தை குறித்து சந்தேகம் கொள்ளுவது வேறு.அதற்கு உரிய ஆதரங்கள் சாட்சிகள் இருக்க வேண்டும்.ஆனால் நீதான் செய்தாய் என்று வற்புறுத்த கூடாது.அப்படி செய்தால் அது நேர்மையான விசாரணை அல்ல.வெளிப்படையான விசாரணையும் அல்ல.இறுதியாக பாதிக்கப்பட்டோர் பக்கம் நிற்பதுதான் அறம் . வழக்கினை திசை திருப்பி அவர்களை குற்றவாளிகள் கூண்டில் ஏற்றுவது மிக பெரிய பிழை.
இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.புரிந்து கொள்ளுவார்கள் என்று நம்புகிறேன்.
இறுதியாக பல்வேறு விதமான சாதி தீண்டாமை கொடுமைகள் இந்த கிராமத்தில் நடக்கின்றன.அதற்கு மாவட்ட ஆட்சி தலைவரும் எஸ்.பி.யும் நேரடி சாட்சிகள்.இப்படி இருக்க அதன் பின்னணியில் விசாரணை செய்யாமல் இருக்க உங்களை எது தடுக்கிறது?
https://www.facebook.com/share/p/166hW7guVJ
- எவிடென்ஸ் கதிர்
(14 ஜனவரி 2023 அன்று எழுதியது)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு