யமாஹா தொழிற்சாலை போராட்டம் பற்றி

அருண் கோமதி

யமாஹா தொழிற்சாலை போராட்டம் பற்றி

யமஹா உள்ளிருப்புப் போராட்டம் குறித்து கேள்வியுற்று இருப்பீர்கள். சமூக வலைதளங்களில் இயங்கும் முக்கால்வாசிப் பேர்களுக்கு அது சுவாரசியமான செய்தியாகவோ புரட்சியான செய்தியாகவோ இல்லாமல் போனதால் அது எல்லார்க்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

யமஹா தொழிற்சாலையில் சங்கத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் தொழிலாளர்களால் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. 8 நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு பின்னர் நிர்வாகம் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதிலும் நிரந்தர சங்கம் CITU தான் என ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று மாதங்களுக்குள் நிரூபிக்கும் சங்கத்தை ஏற்றுக்கொள்வதாக ஒத்துக்கொண்டு இருக்கிறது. Internal Union ஐ காசு கொடுத்து தொழிலாளர்களை விலைக்கு வாங்கி வலுவாக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு இருக்கலாம். 

இனி சங்கம் வாக்கெடுப்பில் நிரூபிக்கப்பட்டு அதற்குப் பின்னரே சம்பள பேச்சுவார்த்தை தொடங்கும். அது குறைந்தது 6 மாதம் இழுத்துக்கொண்டு போகும்.

இந்தியாவைப் பொருத்தவரை தொழிலாளர்களுக்கு சாதகமான எந்த சட்டங்களும் இல்லை. நிர்வாகத்துடன் பேரம் பேசி தொழிலாளர்களின் தேவைகளை சமரசம் செய்து கொண்டுதான் சங்கங்களால் ஒப்பந்தம் போடப்படுகிறது. தொழிற்சங்கங்களுக்கும் வேறு வழியில்லாத நிலை தான் இருக்கிறது. இதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.

போனஸ், சம்பள உயர்வு போன்ற பொதுவான பிரச்சனைகள் தாண்டி அடிப்படையாக ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும், உரிமைகளுமே பெரும்பாலான தொழிற்சாலைகளில் கிடையாது.

24×7 ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலைகள் என்றால் சொல்லவே வேண்டாம். 30 நிமிடம் உணவு இடைவேளை என்றால் உங்களுடைய உணவு, இயற்கை உபாதை எல்லாவற்றையும் அந்த 30 நிமிடத்திற்குள் முடித்து லைனிற்கு திரும்ப வேண்டும். நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் கன்வேயர் நகரத் தொடங்கும். இப்படியான இயந்திரத்தனமான வேலை தான் உற்பத்தி தொழிற்சாலை வேலை. சரியான உணவு, தேநீர் கிடைப்பதற்கும் சண்டை போட்டுதான் பெற வேண்டி இருக்கிறது. தேநீர் அருந்தும்போது உட்காருவதற்கு கூட நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். இப்படியான நிர்வாக கொடுமைகளை தாங்க முடியாத நிலை வரும்போதுதான் தொழிலாளிகள் சங்கம் அமைக்கும் முயற்சிக்கு செல்கிறார்கள். 

ஒரு தொழிற்சாலையில் சங்கம் அமைப்பது என்பது அரசு துறையில்  சங்கம் அமைப்பது போல எளிதான காரியம் அல்ல. பலரை வேலையிலிருந்து நீக்குவார்கள். மன உளைச்சல் கொடுப்பார்கள். தினமும் மிரட்டல்கள் நடக்கும். வேலைப்பளு அதிகமாக்கப்படும். சங்கம் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும் வரை நிம்மதியாக வேலை செய்ய முடியாது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நடந்து முடிந்த யமஹா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு no work no pay என்றிருக்கிறார்கள். அந்த காலங்களில் internal Union தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை நிர்வாகம் ஓரளவிற்கு ஈடு செய்திருக்கும். அதே சமயம் போராடிய தொழிலாளர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம் கிடைக்காது. இப்படி நம்முடைய எல்லா அடிப்படை உரிமைகளுக்கும் நிர்வாகம் நாம் எதையாவது இழக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும். அப்படி நமக்கு இழப்பின்றி எந்த நலத்திட்டமும் நிகழ்ந்து விடாது. 

தற்காலிக தொழிலாளிகள் பாடு இதில் இன்னும் திண்டாட்டம். Neem trainee என்ற பெயரில் 10009,13000 சம்பளத்திற்கு கொத்தடிமைகளாக வேலை வாங்குவார்கள். (Neem scheme என கூகுள் செய்யவும்). சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இந்த neem trainee, apprentice, contract என வெவ்வேறு பெயர்களில் 60% மேற்பட்ட தொழிலாளர்களை நிரப்புகிறார்கள். அதிலும் neem scheme வந்தவுடன் 2017 முதல் 80% மேல் தற்காலிக neem trainee களால் தொழிற்சாலைகள் நிரம்பி வழிகிறது. இவர்களை சங்கத்தில் சேர்க்க முடியாது. இவர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம், esi, pf, அவர்களின் வருங்காலம் குறுத்து அரசிடம் எந்த திட்டமும் இல்லை. 

இன்றைக்கு 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் அதிகமாக neem trainee களாக இருக்கிறார்கள். இன்னும் பத்து வருடத்தில் இவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்து சரியான வேலையில்லாமல் நிராதரவாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இது குறித்தெல்லாம் எந்த அரசும் சிந்தித்ததாக தெரியவில்லை.

ஊதிய உயர்வுக்கான போராட்டமோ, நிர்வாகத்திற்கெதிரான தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டமோ எது நடந்தாலும் அதிகபட்ச எல்லையை அடைந்து நிர்வாகத்திற்கு பிரச்சனை ஏற்படும் தருணம் வரை அந்த போராட்டங்களையும் தொழிலாளர் நலனையும் அரசு கண்டுகொள்வதில்லை. 

ஸ்மார்ட் சிட்டி, வேலை வாய்ப்பை பெருக்குகிறோம், தொழிற்சாலைகளை சென்னையில் உருவாக்க வெளிநாட்டு முதலாளிகளிடம் ஒப்பந்தம் போடுகிறோம் என்பதெல்லாம் தொழிலாளர் நலன் அல்ல. ஒரு தொழிலாளிக்கு சரியான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், பணி நிரந்தரம் உள்ளிட்டவை குறித்த சரியான திட்டம் வகுப்பதே தொழிலாளர் நலன்.

ஃபாக்ஸ்கார்ன் பெண் தொழிலாளர்கள் 3000 பேர் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்வதாக குற்றம் சாட்டினார்களே! அதுகுறித்து அரசு செவி மடுத்ததா? Ford இல் செட்டில்மெண்ட் பிரச்சனை அவ்வளவு முற்றும் வரை ஏன் அரசு தலையிடவில்லை? ஏனென்றால் முதலாளிகள் தான் அரசுக்கு படியளப்பவர்கள். அவர்களுக்கு எதிராக அரசு என்றைக்கும் நிற்காது. 

தொழிலாளர் நலனுக்கென்று எந்த திட்டமும் இல்லாமல் வளர்ச்சி, வளர்ச்சி என்று யாருக்கு கூப்பாடு போடுகிறீர்கள்?

வேலை நிறுத்தத்தில் வெயிலில் நின்று கோஷம் போடும் தொழிலாளியிடம் சென்று மாநில வளர்ச்சிக்காகத்தான் இதெல்லாம் என்று சொல்லிப்பாருங்களேன்! பின்புறம் வழியாக சிரிப்பான். 

ஆலைத் தொழிலாளர்களின் பணிச்சூழல் எப்படி இருக்குமென்றே கண்ணில் கூட பார்த்திராமல் சென்னையில் தொழிற்சாலைகளை உருவாக்குகிறோம், வளர்ச்சியை உருவாக்குகிறோம் என  கண்டமேனிக்கு கருத்து சொல்லும் மலுமட்டித் தனங்களை சார்ந்தோர் குறைத்துக் கொள்வது நல்லது. 

ஏனென்றால் சட்டைக் கசங்காமல் வளர்ச்சி கருத்து பேசுவதெல்லாம் ரொம்ப எளிது.

- அருண் கோமதி

(முகநூலிலிருந்து)

கட்டுரையாளரின்  முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/100073068834680/posts/pfbid027i9osXtLQ6Hg3zoujKGKjYYrGrJFg32bcwXvG9Y5musht2mqrKdBHzBhJrpfDTZol/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு