மார்க்சியர்கள் என்ற பெயரிலேயே மார்க்சியத்தை குறைகூறுபவர்கள் பற்றி

கனகு கனகராஜ்

மார்க்சியர்கள் என்ற பெயரிலேயே மார்க்சியத்தை குறைகூறுபவர்கள் பற்றி

மார்க்சிய வரையறையின்படி  பொருளாதார உற்பத்தி முறை, அதிலுள்ள உற்பத்தி சக்திகள், உறவுகள் போன்ற அடித்தளத்திலும், அரசியல், மதம், பண்பாடு, சட்டம் போன்ற மேல்கட்டுமானத்திலும் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் இருக்கும் கருத்துக்கள், முடிவுகளின் தொகுப்பை அம்பேத்கரியம், பெரியாரியம் என்பதாகக் கொள்ளலாம், இதை ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் அம்பேத்கரியர்கள், பெரியாரியர்கள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்களுக்குள் பல ஒற்றுமைகளும், முரண்பாடுகளும் உண்டு, இவர்களுக்கும் மார்க்சியர்களுக்கும் ஒற்றுமையும், முரண்பாடுகளும் உண்டு.

அதேசமயம் எந்த அம்பேத்கரியரும், பெரியாரியரும் தங்கள் கொள்கைகள், கருத்துக்கள், முடிவுகள் தவறு என்று ஏற்றுக் கொண்டு தங்களை மாற்றிக் கொண்டதாகவோ, தங்கள் தவறுகளை பொதுவெளியில் விவாதித்ததாகவோ, தங்கள் கொள்கைகளில் குறைபாடு இருக்கிறது அதை மார்க்சியத்தைக் கொண்டு நிரப்பவேண்டுமென்று குறிப்பிடுவதாகவோ எனக்குத் தெரிந்தவரையில் இல்லை. மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்குத் தெரிந்து இல்லை என்றுதான் கூறுகிறேன்.

மார்க்சியர்களோடு இணைந்து பணியாற்றுவது பற்றிய அவர்களுடைய கருத்தை நான் கூறவில்லை, கொள்கைகளில் அவர்களுடைய நிலைப்பாடு பற்றித்தான் கூறுகிறேன்.

ஆனால் மார்க்சியர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் பொதுவெளியில் மார்க்சியத்தில் பற்றாக்குறை இருப்பதாகவும், குறைபாடு இருப்பதாகவும், மார்க்சியர்கள் மீது தவறிருப்பதாகவும், இந்த நாட்டுக்கு மார்க்சியம் போதாது என்றும், பொருந்தாது என்றும் இன்னும் என்னென்ன வகையிலெல்லாம் மார்க்சியத்தின் மீது விமர்சனம் வைக்க முடியுமோ அதையே முழுநேரப் பணியாக செய்து வருகிறார்கள், இதை என்னவாகப் பார்ப்பது ? மார்க்சியத்தின் மீதுள்ள அக்கறை என்று இதற்குப் பெயர் சூட்டப்படுகிறது, ஆனால் உண்மையில் விமர்சனம், சுயவிமர்சனம் என்பதற்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை, இது திட்டமிட்டு மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்துகிற, குறை கூறுகிற, திரிக்கிற, சிதைக்கிற நோக்கம் கொண்டது என்பது எனது ஆணித்தரமான கருத்து, ஏனெனில் மார்க்சியம் என்ற கொள்கையை முழுமையாகப் படித்து, உள்வாங்கி அதை நடைமுறையோடு பொருத்திப் பார்த்து இந்த விமர்சனங்கள் வைக்கப்படுவதில்லை, கம்யூனிஸ்டு கட்சிகளின் திட்டங்கள், பணிகளை சீர்தூக்கிப் பார்த்தும் விமர்சனங்கள் வருவதில்லை, மாறாக முன்முடிவுகளோடு, தங்கள் விருப்பத்தை திணிக்கிற நோக்கோடு விமர்சனங்கள் வைக்கப்படுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

இதற்குப் பின்னால் வெறும் விமர்சன நோக்கமோ, மார்க்சியம் அல்லது மார்க்சியர்கள் மீதான வெறுப்போ மட்டும் இருப்பதாகவும் நம்ப முடியவில்லை மாறாக மார்க்சியத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட முதலாளித்துவ சதியாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

இதை அம்பேத்கரியர்கள், பெரியாரியர்கள் என்று பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டு செய்தால் அதை மார்க்சியர்கள் எதிர்கொள்வது சுலபம், மேலும் அம்பேத்கரிய, பெரியாரியர்களே அதை மறுக்கவும் வாய்ப்புள்ளது. 

ஆனால் மார்க்சியர்கள் என்ற பெயரிலேயே செய்யும் போது மேலும் மேலும் மார்க்சியர்கள் பிளவுபடுவது போன்றும், பிரிந்து நிற்பது போன்றும், ஒரு மார்க்சியரே மார்க்சியத்தை குறை கூறுவது போன்றும் தோன்றும், தோன்ற வேண்டும் என்ற நோக்கோடு திட்டமிட்டு நடத்தப்படுகிற நாடகமாகத்தான் இது தோன்றுகிறது.

காலங்காலமாக மார்க்சியர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைதான் இது என்பதோடு, இதற்கும் நமது ஆசான்களின் வழிகாட்டுதல் உள்ளது என்ற புரிதலோடும் எதிர்கொள்வோம்.

- kanagu kanagaraj (முகநூலில்)

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid09HC9yi7xRS91zxUMmu91MucStWYnSgCc9bh73KmZUtgBKFg7pkjbkKmqESEqcUZVl&id=100008199160657&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&paipv=0&eav=AfYHp6FQInSyGUOYh42qnlgQuvysBGTMFfjEsHfe6pZIcznIGb58mWN7TH0WPLlU6CA&_rdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு