இன்பத்தின் விலையை அறிய முடியாதவர்களால் ஒருபோதும் இன்புறவே முடியாது!

துரை. சண்முகம்

இன்பத்தின் விலையை அறிய முடியாதவர்களால்   ஒருபோதும் இன்புறவே முடியாது!

அங்கன்வாடி ஊழியர்கள் 

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 

பகுதிநேர ஆசிரியர்கள்

தற்காலிக ஒப்பந்த செவிலியர்கள்

அனைவரும் தெருவில் இறங்கி போராடி தங்கள் வாழ்வாதாரத்துக்கான பணி உரிமைகளையும் உரிய ஊதிய விகிதத்தையும் கேட்கும்போது இந்த அரசு என்ன சொல்கிறது? 

அரசிடம் பணம் இல்லை! 

ஒன்றிய அரசு தர வேண்டியதை தரவில்லை! என்கிறது. 

மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் தேர்தலுக்கு முன்பே கணக்கு தீர்ப்பதற்கு மட்டும் எப்படி முடிகிறது? கடன் எனில் 

எங்கிருந்து அடைக்கப் போகிறது?

கேட்டால், நீயா அடைக்கப் போகிறாய்? என பொருளாதார அறிஞர் ரேஞ்சுக்கு பாய வேண்டாம்!

நீ கேட்பதை தர முடியாது! 

நான் தருவதை வாங்கிக் கொள்! 

அதாவது போராடி உரிமையை கேட்டால் தரமாட்டோம்! நாங்களாக தருவதை கையேந்தி பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்! 

என்பதுதான் அரசின் சித்தாந்தம். 

இதில் மக்களை குறை சொல்லவோ இழிவு செய்யவோ ஏதுமில்லை. மக்களின் சமூக வாழ்நிலை பணத் தேவைகளையும் பல தேவைகளையும் கொண்டதாக இருக்கிறது. அதனால் கிடைக்கும் பணத்தில் மகிழ்ச்சி அடைவது ஒன்றே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கை நிலைமை. மகிழட்டும்!

திமுகவின் தந்திரமான தேர்தல் பண அடி! நிச்சயம் எதிர்க்கட்சிகளுக்கு வலிக்கும்! 

ஏனென்றால் ஏற்கனவே மக்களை இந்த நிலையில் வைத்திருக்கும் கட்சிகள்தான் இவைகளும். ஆஹா வட போச்சே! எனும் வயிற்றெரிச்சல் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.

வள்ளல் தன்மைக்கான வாய்ப்பு நமக்கு இல்லாமல் போய்விடுமோ!  எனும் சுரண்டலின் சோகம் அது. 

பல துன்ப அதிர்ச்சிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்!  

ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது எப்படி இன்ப அதிர்ச்சியாக இருக்க முடியும். 

ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மக்களை வர்க்க அரசியல் படுத்தும் வாய்ப்பை இழப்பதில் என்ன இன்பம் இருக்க முடியும்! 

மக்களுக்கு உள்ள நெருக்கடியில் எதையாவது கொடுப்பதெல்லாம் இன்பம் என்றால், 

அதையே ஆர்எஸ்எஸ் கூட செய்யும். இலவசமான கண் அறுவை சிகிச்சை முகாம்கள்,

மூன்று வேளை அன்னதானம், 

கட்சியில் சேர்ந்தால் லோன் வாங்கித் தருகிறகற்பிப்பது பல வடிவங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் உட்பட காருண்யம் காட்டுவதை மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதால் இதுவே இன்பம் என்று அவர்கள் பாதையில் சேர்ந்து கொள்ள முடியுமா? 

அரசு என்பதனாலேயே அது மக்களுக்கானது !அதனால் தப்பில்லை என கற்பிப்பது!

அல்ல நமது பணி! இது யாருக்கான அரசு! முதலாளிகளுக்கு கொடுப்பது எவ்வளவு? உழைக்கும் மக்களுக்கு கிடைப்பது என்ன? என்று! வர்க்க கணக்கையும் அரசியல் கணக்கையும் சொல்லித் தரும் பயிற்சிப் பள்ளியாக இருக்க வேண்டும். 

ஆளும் வர்க்கத்தால் அன்றாடம் தன்னிடம் கையேந்தும் நிலைக்கு பயிற்றுவிக்கப்படும் மக்களின் சிந்தனைக்கு எதிராகவும் சில வேலைகளில் சிந்திப்பதுதான் மார்க்சியப் பார்வை. 

ரஷ்ய கவிஞன் யெல்கனி

சொன்னது போல அரசியல் பொருளில்,

"இன்பத்தின் விலையை அறிய முடியாதவர்களால் 

ஒருபோதும் இன்புறவே முடியாது!"

    - துரை. சண்முகம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு