வீண்பழி சுமத்தி வெனிசுலாவை வேட்டையாடும் அமெரிக்கா
அறம் இணைய இதழ்
தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ ,அமெரிக்கா கடத்தப்பட்டு, அங்கு அமெரிக்கா குண்டு மழை பொழிந்து வருகிறது. அத்துடன் வெனிசுலாவின் வளமான எண்ணெய் கிணறுகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எடுத்து தருவாராம், டிரம்ப்; இதன் பின்னணியை அலசுகிறது இந்தக் கட்டுரை;
எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், வெனிசுலா நாட்டின் கப்பல்களை , படகுகளை தாக்கி அழித்து எண்ணற்றவர்களை கடந்த வாரங்களில் அமெரிக்க படைகள் கொன்றன. போதைப் பொருள் கடத்தும் தீவிரவாத கும்பலின் தலைவர் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ என அபாண்டமாக பொய் குற்றம் சாட்டி அவரையும், அவரது மனைவி சில்வியா அவர்களையும் , நாட்டிற்குள் புகுந்து சிறைபிடித்து அமெரிக்காவிற்கு கடத்தி சென்றுள்ளது.
மன்னர்கள் ஆட்சி செய்த பொழுது கூட இத்தகைய அட்டூழியங்கள் அரங்கேறவில்லை! நாகரீகம், ஜனநாயக ஆட்சி முறை என்றெல்லாம் கதை விடும் வெள்ளையர்கள் முடைநாற்றமெடுக்கும் தங்களது ஆதிக்கவெறியை, காட்டுவதன் மூலம் தாங்கள் கொள்ளைக் கூட்டமே என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது அமெரிக்கா. இதற்கு ஜனநாயக போர்வை ஒரு கேடா? என்ற பலர் கேட்கின்றனர்.
கோமாளி டொனால்டு டிரம்ப் , உலக அமைதிக்கும் சர்வதேச விதிகளுக்கும் அமெரிக்க அரசே வில்லனாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.
பிற நாடுகளில் மூக்கை நுழைத்து ஆட்சி மாற்றம் செய்வதில் இது வரை செஞ்சுரி அடித்த அமெரிக்கா இப்பொழுது தன் கொல்லை புறத்தில் உள்ள வெனிசுலா நாட்டில் அத்துமீறி புகுந்து அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்து , அவர் தம் மெய்க் காவலர்களை சுட்டுகொன்று அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது. இது ஏகாதிபத்தியத்தின் உச்சபட்ச அக்கிரமமாகும்.
அமெரிக்க நாடு இதுவரை தான் போர்த்தியிருந்த ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை,என்ற ஆடைகளை அவிழ்த்து தூக்கி எறிந்து விட்டு அம்மணமாக அதிகார ஆதிக்கம் என்ற ஒற்றை குறிக்கோளை நோக்கி நடைபோட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆதிக்க வெறி , அதனுடைய குரூர தன்மை இன்று உலகை மட்டுமின்றி அமெரிக்க மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 1829ம் ஆண்டின் மன்றோ கோட்பாடு சிதைக்கப்பட்டு இன்று கனடா ,மெக்சிகோ, மற்றும் தென் அமெரிக்க நாடுகள் அடங்கிய இந்த கண்டத்திற்கு அமெரிக்க நாடு மட்டுமே “தாதா” என்று டிரம்ப் நிருவாகம் புதிய இலக்கணத்தை படைத்துள்ளது.
அமெரிக்காவின் விருப்பப்படி தான் இந்த கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளும்-கனடா, மெக்சிகோ, பனாமா, ஹோன்டுராஸ், கொலம்பியா, பிரேசில்,அர்ஜெண்டினா,சிலி, உருகுவே,பராகுவே, பொலிவியா, வெனிசுலா,- நடந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா இங்குள்ள வளங்களை தங்கு தடையின்றி கொள்ளையடிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அமெரிக்க அரசின் நீண்ட நாள் பேராசை இப்போது டிரம்ப்பின் வடிவில் தனது சுய ரூபத்தை காட்டியுள்ளது.
இத்தகைய ஆதிக்க சுரண்டலை நடத்தவே எண்ணற்ற ஆட்சி மாற்றங்களை (regime changes ) அமெரிக்கா இதுகாறும் செய்துள்ளது. 1953-ல் ஈரானில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான மாசேடக்கை தூக்கியடித்தது முதல், 1954ல் கௌதிமாலா, 1964ல் பிரேசில்,1970ல வியத்நாம், 1974ல் சிலி , 2001ல் ஆப்கானிஸ்தான்,2003 ல் ஈராக், ஜியார்ஜியா, 2004ல் உக்ரைன் என நூற்றுக்கும் அதிகமான ஆட்சி மாற்றங்களை செய்துள்ளது அமெரிக்கா.
சாவோஸ்
இத்தகைய ஈனச்செயல்களை நியாயப்படுத்தும் வகையில் அவை, ஜனநாயகத்தை காப்பாற்ற, மனித உரிமையை மீட்டெடுக்க, அமெரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என கயிறு திரித்து வந்தது. அதை மேற்கத்திய ஊடகங்களும், அடிமை ஊடகங்களும் வரவேற்று ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பினர். இந்த பொய்யுரையில் இன்னுமொரு சரடாக போதைப் பொருள் பரவல் தடுப்பு நடவடிக்கையை அமெரிக்க நிருவாகம் சேர்த்துள்ளது.
1998ம் ஆண்டு வெனிசுலா தேர்தலில் 52.4 % வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்த ஹியூகோ சாவேஸ் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை நாட்டுடைமையாக்கி அதன் வருவாய் மூலம் அந்நாட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார். ஐந்தாம் குடியரசு என ஆரம்பிக்கப்பட்ட சாவேஸின் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அமெரிக்க நிறுவனங்களான எக்சான் மொபில்,போன்ற எண்ணெய் நிறுவனங்களின் சுரண்டல் முறியடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு வன்மத்தை கக்கியது, சாவேசை சி ஐ ஏ சதிகளால் தூக்கி எறிந்தது. இரண்டே நாட்களில் அதை முறியடித்த சாவேஸ் மீண்டும் ஆட்சியிலமரந்து மக்கள் சேவை புரிந்தார்.
அவர் காலத்தின் போது பொருளாதார தடைகளை அமெரிக்கா வெனிசுலா மீது சுமத்தியது, அந்நாட்டு பொருளாதாரத்தை முடக்கி மக்களை அரசுக்கெதிராக திருப்ப முயன்றது. இதே கதை சாவேஸிற்கு பிறகு வந்த மதுரோவின் ஆட்சியில் மேலும் தீவிரபடுத்தப்பட்டது. எதிர்கட்சிகளை சி ஐ ஏ கொம்பு சீவி விட்டது, தோற்றவர்களை கொண்டாடி வென்றவர்களை நிராகரித்தன மேலை நாடுகள். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நோபல் அமைதி பரிசும் வழங்கி பூரித்தனர் இந்த ஜனநாயக காவல் புனிதர்கள். போதைப் பொருளை அமெரிக்காவிற்கு வெனிசுலா அதிபர் அனுப்புகிறார் என்ற பொய் பிரச்சாரத்தை புதிதாக அமெரிக்க அரசு கட்டவிழ்த்து விட்டது. ஆனால், எல்லாவற்றையும் புறந்தள்ளி , துணிச்சலோடு ஆட்சி செய்தார் மதுரோ.
ஜனநாயகம், மனித உரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் பொருளுடைய ஆதிக்க சக்திகளின் மேலாடைகளே ஒழிய அவர்களின் உள்ளுணர்வு இல்லை. அவை ஆதிக்க சக்திகளின் வடிவங்களே ஒழிய உண்மையான உள்ளடக்கமல்ல என்பது தான்.
இது மீண்டும் ஒரு முறை வெனிசுலா விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது.
ஆனால், இன்று அமெரிக்கா உலகத்தின் காவல்காரன் என்ற முந்தைய பலத்தை இழந்து பிற வல்லரசுகளுடன் சமரசம் செய்து கொள்ள நிர்ப்பந்திக்க பட்டுள்ளது.
கனடா மீதான டிரம்பின் தாக்குதலும், கனடாவை அமெரிக்க நாட்டின் 51 வது மாகாணமாக சேர்த்து கொள்வேன் என மிரட்டுவதும், கிறீன்லாந்து கைப்பற்றப்படும் என்று எச்சரிக்கை விடுவதும், கோமாளித்தனமான டிரம்பின் கூத்துக்கள் அல்ல, அடிபட்ட புலியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளங்களை கொள்ளையிடும் வெறியின் வெளிப்பாடு ஆகும்.
வெனிசுலாவின் மீதான தாக்குதல் வெறும் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக நடத்தப்பட்டது என்று எந்த பாமரனும் நம்பத் தயாரில்லை. வெனிசுலா நாட்டின் எண்ணைய் வளங்களை சூறையாடத்தான் இந்த முஸ்தீபுகளெல்லாம் நடக்கின்றன.
இதை டிரம்ப் நிருவாகம் மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை!
ஆனால், ஜனநாயகப் போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் – பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகள்- ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் திணறுகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் , ஈரான் மீது, காசா மக்கள் மீது இஸ்ரேலின் வன்கொடுமையை , தாக்குதலை கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை. இதன் மூலம் தங்களது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். ஆனால், இப்பொழுது வெனிசுலாவின் “எதிர்கட்சி தலைவரான” “ மச்சாடோவிற்கு நோபல் பரிசு கொடுத்து மகிழ்ந்த ஐரோப்பிய தலைவர்கள் , டிரம்ப்
நாளைக்கு கிறீன்லாந்தை ஆக்கிரமித்து கைப்பற்றிக் கொண்டால் எங்கு போய் முகத்தை வைத்து கொள்வது என்ற பரிதவிப்பில் உள்ளனர். இவர்கள் அமெரிக்க பேரரசின் “சிற்றரசுகள்”, தங்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்காவிற்கு கப்பம் கட்டும் இந்த அரசுகள் சுதந்திரமான சுயேட்சையான வெளியுறவு கொள்கை உடையவர்களாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ஐ.நா கோட்பாட்டை, சர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறி மற்றொரு நாட்டின் தலைவரை , அந் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறை பிடித்து , கடத்தி செல்வது எந்த வகையில் நியாயம்? என்று கேட்க மோடி அரசிற்கு துணிவில்லை.
1989-ல் அமெரிக்க அரசு தென் அமெரிக்க நாடான பனாமாவில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்து அந்நாட்டு அதிபர் மானுவல் நொரீகாவை ஆட்சியிலிருந்து அகற்றியது, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டையும் அப்போது கூறியது. ஆனால் இத்தகைய செயலை அன்று இந்தியா கண்டித்தது. அன்று ஆட்சியில் இருந்தது முதுகெலும்புள்ள ஆட்சி, இன்று முதுகெலும்பில்லாத மோடியின் ஆட்சி!
இந்திய அரசு இரண்டுநாள் மவுனத்திற்கு பிறகு நேற்று “வெனிசுலா மக்களின் நல்வாழ்வு குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் “ என திருவாய் மலர்ந்துள்ளது. ஐ நா சபை கோட்பாடுகளை மீறிய அமெரிக்க செயலை, சர்வதேச விதிகளை மீறிய அமெரிக்க அரசின் காட்டு தர்பாரை கண்டித்து ஒரு வார்த்தை இல்லை! இவர்கள் விட்டுச்செல்லும் பாரம்பரியம் என்ன? இதனால் இவர்கள் அடையும் லாபம் என்ன?
பிரேசில்,சிலி, மெக்சிகோ, கியூபா என தென் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி சீனா, ரஷ்யா, ஈரான், தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா தவிர்த்த ஏனைய பிரிக்ஸ் நாடுகள், குளோபல் சௌத்
நாடுகள் என அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் அடாவடியை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர் . இது அமெரிக்க மக்களிடையேயும் பெருத்த பிளவுகளை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயக கட்சியினர் குறிப்பாக நியூயார்க் மேயர் மம்தானி டிரம்ப்பின் அத்துமீறிய செயலை சட்ட விரோதமான செயல் என கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் அமெரிக்கா இனி பிற நாடுகளின மீது போர் தொடுக்காது, அதற்கு உதவியும் செய்யாது என்ற டிரம்ப்பின் பொய்யான வாக்குறுதியை நம்பி டிரம்பிற்கு வாக்களித்தவர்கள் இன்று டிரம்ப்பை எதிர்த்து குரல் எழுப்பி உள்ளனர். இதில் கவனிக்கத்தக்க குரல் என்பது செனட்டர் மார்ஜோரி கிறீன் டெய்லர் என்பவரின் குரல் தான்.
வெனிசுலா அதிபர் கைதை எதிர்த்த இரு அமெரிக்க தலைவர்கள்
இவர் குடியரசு கட்சியின் நாடாளுமன்ற (செனட் சபை) உறுப்பினர் , டிரம்ப்பின் முன்னாள் ஆதரவாளர், மாகா இயக்கத் தூண்களில் ஒருவர். மாகா இயக்க கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க இளந்தலைமுறையினர் டிரம்ப்பின் நடவடிக்கைகளை கண்டு வெதும்பி உள்ளனர். இவர்களை மயக்க டிரம்ப் இந்த அத்துமீறல்களை அமெரிக்க டாலரை, உயிர்ப்பிக்கும் செயல் என்றும், அமெரிக்காவின் எண்ணெய் தன்னிறைவிற்கு இது அவசியம் என கூறினாலும் அமெரிக்க மக்கள் இதை நம்பவில்லை. அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்காவின் போக்கிரித் தனத்திற்கு முட்டு கொடுக்கும் வேலைகளையே செய்கின்றனர். எதிர்ப்புகளை முன்னிறுத்தாமல், ஒன்றிரண்டு வெனிசுலா வந்தேறிகளின் மகிழ்ச்சியை படம் பிடித்து ஒளி பரப்பி வருகின்றனர்.
இந்த கடத்தல் , அமெரிக்க அரசின் ராணுவ வலிமையை, தொழில்நுட்ப மேலாண்மையை, அதிகார வல்லமையை இன்று காட்டலாம். ஆனால் இதுவே ஒரு பேரழிவிற்கான் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை.
லத்தீன் அமெரிக்க மக்களின் சுதந்திர உரிமைகளுக்கும் , விடுதலைக்கும் போராடிய சைமன் பொலிவாரால் ஈர்க்கப்பட்ட தென் அமெரிக்க மக்கள், அவர்கள் பிரேசில்,சிலி, பொலிவியா,வெனிசுலா என எந்த நாட்டினரானாலும் தங்கள் நாட்டின் இறையாண்மை மேல், தங்களது சுதந்திரத்தின் மேல் அமெரிக்க அரசால் தொடுக்கப்படும் எந்த ஆதிக்கத்தையும் சகித்துக் கொள்ளப் போவதில்லை.
இன்று வெனிசுலா துணை அதிபர் டெல்சி ராட்ரிகுயஸ் ஆட்சி பொறுப்பை அந்நாட்டின் உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க ஏற்றுள்ளார். அவர் தங்கள் நாட்டின் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
டிரம்ப் நிருவாகமோ, ராட்ரிகுயஸ் அமெரிக்க அரசு கூறுவதை செய்யாவிட்டால் மதுரோவை விட கூடுதல் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.
திங்கட்கிழமை நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோ நிறுத்தப்படுவார் என செய்திகள் கூறுகின்றன. நாங்கள் நாயை சுடுவாதாக இருந்தாலும் சட்டப்படி தான் சுடுவோம் என்ற ஏகாபத்தியவாதிகளின் குரல் நமக்கு கேட்கிறது. இந்த போலி சட்டப் பூசாரிகளின் சட்டம் யாருக்கானது? மக்களுக்கானதா? அல்லது கொள்ளையர்களுக்கானதா?
இவர்களின் “ நியாயங்களுக்கு” எல்லாம் பதில் சொல்ல வேண்டியது வெனிசுலா மக்களல்ல. வெனிசுலா மக்களின், அமெரிக்க மக்களின், ஏன் உலகெங்குமுள்ள சாமான்ய மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் ஏகாதிபத்திய வெறியர்கள் தான் என்பது புரிய வரும், அதற்கு நாட்கள் பிடிக்கலாம். ஆனால், நீதி இறுதியில் வெல்லும்!
ச.அருணாசலம்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23696/venezuela-president-arrested/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு