CAA -NRC- SIR க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பல் அண்மையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பீகார், அசாம் மாநிலங்களுக்கு மட்டுமே இந்த திட்டம் என சொல்லிவந்த இக்கும்பல் இன்று, தனது எடுபிடியான தேர்தல் ஆணையம் மூலம் 12 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. அதில் தமிழ்நாடும் ஒன்று.
தகுதியற்ற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவும், புதிய வாக்காளர்களை சேர்க்கவும் இத்திட்டம் அவசியம் என பாஜக சொல்லிவருகிறது. இது ஏற்கனவே உள்ள நடைமுறைதான். ஆனால் சிறப்பு தீவிர திருத்தம் என அவசர கோலத்தில் செய்ய வேண்டிய அவசியம் என்ன?? காரணம் என்னவெனில், அசாமில் NRC எனப்படும் தேசிய பதிவேடுகள் திட்டம் அமல்படுத்தப்பட்டபோது, பாஜகவின் இந்து ராஜ்ஜியக் கனவை நிறைவேற்றும் திட்டம் என சொல்லி கடும் எதிர்ப்பு எழுந்ததாலும், பொது நல வழக்கொன்றாலும் அத்திட்டம் பாஜக.வால் கைவிடப்பட்டது.அத்திட்டத்தையே தற்போது சிறப்பு வாக்காளர் திருத்தம் எனும் பெயரில் கொண்டுவந்துள்ளது. CAA- NRC -NPA வில் என்னென்ன அம்சங்கள் உள்ளதோ, எந்தெந்த கேள்விகள் கேட்கப்பட்டதோ, அவையனைத்தும் இந்த SIR கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ளன.
எனவேதான், வாக்குரிமையையும் குடியுரிமையையும் இணைத்து, இசுலாமியர்களையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களையும் நாடற்ற உள் நாட்டு அகதிகளாக்கும், இந்த குடியுரிமை திருத்தச்சட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேடு – சிறப்பு தீவிர திருத்தம் (CAA - NRC – SIR) எனும் முக்கூட்டு பாசிச திட்டத்தை தீவிரமாக எதிர்க்கவேண்டியுள்ளது.
பாஜகவிற்கு மாற்று என சொல்லிக் கொள்ளும் திமுக அரசு, இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுக்கும் ஒத்துழையாமை இயக்கத்தை கடைபிடிப்பதற்கு மாறாக, அதை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டே, தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
SIR எனும் பாசிச திட்டம்!
CAA - NRC திட்டம் மூலம் குடியுரிமையை நிரூபிப்பது குடிமகன்களின் கடமை என பாஜக கும்பல் சொல்லியது. தற்போது SIR திட்டம் , தான் ஒரு தகுதியான வாக்காளன் என நிரூபிப்பது வாக்காளர்களின் கடமை என்கிறது. இத்திட்டம் வாக்குரிமையையும் குடியுரிமையையும் இணைத்துள்ளது மட்டுமின்றி, வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பது எனும் முறைக்கு மாறாக , ஒரு அரசு தனது வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறையை அமல்படுத்தியுள்ளது பாஜக அரசு. இவ்விரண்டையும் பாஜக அரசு தனது பொறுப்பில் இருந்து நழுவி, தேர்தல் ஆணையும் மூலம் குடிமக்கள் தலையில் கட்டியுள்ளது.
ஒருவர் வாக்குரிமையை நிரூபிக்க ஆதார், ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் இல்லாமல் புதியதாக 11 ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நிர்பந்தித்து வருகிறது. பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் மிக முக்கியமாக NRC தேசிய பதிவேடுகள் சான்று ஆகியவற்றை சமர்பிக்கவேண்டும் என்கிறது.
பீகாரில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் 60% பேர் இசுலாமியர்கள் குறிப்பாக பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிமக்கள் ஆவர்.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினை மற்றும் வங்க தேசப் பிரிவினையின் போதும், அதற்குப் பிறகும் இங்கு வந்த இசுலாமியர்களை அடையாளம் கண்டு நாடற்ற அகதிகளாக்கவே இந்த சான்றுகள் கேட்கப்படுகின்றன. பிறப்பு மற்றும் கல்வி சான்றுகள் கேட்பது, ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடிகளை வாக்காளர் பட்டியலில் இருந்து கழித்துக்கட்டும் வேலையாகும். இந்து ராஜ்ஜியத்தின் எதிரிகளாக இம்மூன்று பிரிவினரும் வரையறுக்கப்பட்டுள்ளது நாமறிவோம். பாஜகவின் காவி பயங்கரவாத ஆட்சியால் பாதிக்கப்படும் இம்மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, தனக்கான இந்துமதவாத வாக்கு வங்கியை திடப்படுத்துவது, போலியான வாக்காளர்களை உருவாக்குவது என கேடுகெட்ட ஜனநாயக விரோத திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பொருளாதார நெருக்கடியால் இடம்பெயரும் தேசிய இனங்கள் :
பாஜக ஆட்சி கடைபிடிக்கும் உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகளால் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் உழைக்கும் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றனர். வேலை தேடி நாடெங்கும் இடம்பெயர்கின்றனர். குறிப்பாக வட மாநில உழைக்கும் மக்கள் தென் மாநிலங்களுக்கும், தென் மாநில மக்கள் இங்குள்ள மாநிலங்குள்ளேயும் இடம் பெயர்கின்றனர். இதனால் கூலி உழைப்பு சிதறி கார்ப்பரேட்டுகளின் மூலதன திரட்டல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெயரும் இந்த அத்துக்கூலிகளின் கூலி உழைப்பை நிறுவனப்படுத்துவதே CAA -NRC- SIR இன் பொருளியல் அடிப்படையாக உள்ளது.
CAA - NRC அமல்படுத்தப்பட்ட போது பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து செல்பவர்களுக்கு Detention centre எனப்படும் வதை முகாம்களை அமைக்கும் பணி தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது SIR மூலம் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இணைப்பதன் நோக்கமும் இதுவே ஆகும்.
இந்து ராஜ்ஜியம் என்பது சாரத்தில் ஏகபோக கார்ப்பரேட் ராஜ்ஜியம் எனபதை நாம் துவக்கத்தில் இருந்தே சொல்லிவருகிறோம். அது நிரூபிக்கப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் SIR!
தமிழகத்தில் மிக வேகமாகவும் தீவிரமாகவும் SIR பணிகள் கடும் எதிர்ப்பையும் தாண்டி திமுக அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இங்கு இடம்பெயரும் பீகார் உள்ளிட்ட வட மாநில உழைக்கும் மக்களை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இணைக்கும் நோக்கத்துடனேயே பீகாரிகளின் வாக்காளர் பட்டியல் பிரதி தமிழக SIR இல் கேட்கப்பட்டுவருகிறது.
இடம்பெயரும் மாநிலங்களில் இருந்தவாறு தமது சொந்த மாநிலத்து சட்டமன்ற தேர்தலில் பங்கெடுக்கும் வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதும் உருவாக்குவதுமே ஜனநாயகமாக இருக்கும். மாறாக இடம் பெயர்ந்து செல்லும் மாநிலத்து ஆட்சியை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்குவது என்பது பாஜகவிற்கான வாக்குவங்கியை உருவாக்கும் நோக்கம் கொண்டதே. அதாவது இடம்பெயர்வு கூடாது எனும் குறுகிய தேசியவாத நோக்கில் சொல்லவில்லை. இடம்பெயரும் மக்களின் வாக்குரிமை என்பது அவர்கள் சார்ந்த மாநிலத்தோடு இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்கிறோம்.
வட மாநிலங்களுக்குள்ளேயும், தென் மாநிலங்களிலும் இவ்வாறு பாஜகவிற்கான வாக்கு வங்கியை உருவாக்கும் தீய நோக்கம் கொண்ட இப்பாசிச திட்டத்தை நாம் நிச்சயம் முறியடிக்க வேண்டும்.
இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு :
இந்தியா கூட்டணி இதை எதிர்ப்பது சரியானதே. ஆனால் அதை வெறுமனே வாக்கு திருட்டு எனும் அளவில்தான் பேசி வருகிறது. அது ஒரு அம்சம் மட்டுமே. பிற பொருளியல் அம்சங்களையும், ஏன் இந்துத்துவ நோக்கங்களையும் கூட முழுமையாக , வலுவாக முன்வைத்து ஓர் இயக்கமாக முன்னெடுக்க தயாரில்லை. இவர்களின் சமரசம் மற்றும் சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.
ஹிட்லர் கும்பல் தேர்தல் முறையை ஒழித்துக்கட்டி பாசிசத்தை அரங்கேற்றியது. அவர்களின் இந்திய வாரிசான ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலோ அதைவிட ஒரு படி முன்னேறி, SIR மூலம் தேர்தலையே பாசிசமயமாக்கி வருகிறது. தேர்தலில் தனக்கான வாக்காளர்களை மட்டும் இணைப்பது, தனக்கு எதிரான வாக்காளர்களை நீக்குவது எனும் கொடூரமான பாசிச திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இவ்வாறாக CAA - NRC ஐ கள்ளத்தனமாக SIR மூலம் செயல்படுத்துகிறது. எனவே இதை அனுமதிப்பது என்பது நிரந்தரமாக பாஜக ஆட்சியை நிறுவும் பாசிச திட்டத்தை அனுமதிப்பதே.
இவ்வாறு விவசாயிகள் தொழிலாளர்களை உள் நாட்டு அகதிகளாக்குவது மட்டுமின்றி அவர்களை சவக்குழிக்குள் தள்ளும் நாசகர வேலைகளையும் வேகமாக செய்துவருகிறது பாஜக அரசு.
விவசாயிகள் தொழிலாளர்கள் மீதான பாசிச ஒடுக்குமுறை
கார்ப்பரேட் நலன்களுக்காக தொழிலாளர்களின் பணி நேரத்தை வரம்பின்றி உயர்த்துவதன் மூலம் சட்ட பூர்வமாக அவர்களை கொத்தடிமைகளாக்குவது, அவர்களின் சங்கம் சேரும் உரிமை, வேலை நிறுத்த உரிமை மற்றும் பிற பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் பறிப்பது ஆகிய பாசிச நோக்கங்களுடன் தொழிலாளர் நல சட்டங்களை 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. ஒரு புறம் தொழிலாளர்களை இவ்வாறு சட்டபூர்வமாக கொத்தடிமையாக்குகிறது. மறுபுறம் நெருக்கடியால் வேலை தேடி நாடெங்கும் இடம்பெயரும் கொத்தடிமைகளை CAA - NRC - SIR மூலம் வதை முகாம்களை நிறுவி சிதறும் கூலி உழைப்பை நிறுவனப்படுத்துவது; அதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் மூலதன திரட்டலுக்கு வழிவகை செய்வது என வரலாறு காணாத மிக கொடூரமான பாசிச சட்ட திட்டங்களை நம் மீது ஏவி வருகிறது பாஜக அரசு.
50 ஆண்டுகால மத்திய மாநில அரசுகளின் உலகமய கொள்கைகளால் பசி, பட்டினி, வேலையின்மை காரணமாக 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இந்த நிலைமையில் பாஜக அரசு அவர்களை மேலும் உயிரோடு புதைப்பதற்கான இரு மசோதாக்களை ( மின்சார சட்ட திருத்த மசோதா, விதை மசோதா) பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இவ்விரண்டும் சட்டமானால், இந்தியா மீண்டும் மத்திய கால சுரண்டல் காலத்திற்கு பின்னோக்கி செல்வது உறுதி.
மின்சார சட்ட திருத்த மசோதா, இந்திய மின்சார கட்டமைப்பை முழுவதுமாக கார்ப்பரேட்மயம், தனியார்மயம் மற்றும் வணிகமயமாக்கும் நோக்கம் கொண்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மின்சாரம் பெறுவதற்கான மானியம் அனைத்தையும் இம்மசோதா ஒழித்துக்கட்டுகிறது.
விதை மசோதா 2025 விவசாயத்தின் ஆதாரமான விதைகளை தனியார்மயம், வணிகமயம் மற்றும் கார்ப்பரேட்மயமாக்குகிறது; பாரம்பரிய விதைகளை ஒழிப்பதுடன் ,விதைகள் மீதான விவசாயிகளின் உரிமையையும் ஒழித்துக்கட்டுகிறது. விதைகள் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு செல்வதென்பது, விவசாயம் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதாகும். இது விவசாயிகள் இல்லாத விவசாயத்தை உருவாக்கும் பாசிச மசோதாவாக உள்ளது.
ஆகவே இந்த இரண்டு மசோதாக்களையும் முறியடிப்பது மிக மிக அவசர அவசிய கடமையாகும்.
எனவே பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு ம.ஜ.இ.க அறைகூவி அழைக்கிறது.
- CAA -NRC- SIR க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்!
- CAA - NRC -SIR :
- பாஜகவிற்கான வாக்கு வங்கியை மட்டும் உருவாக்கவே! தேர்தல் முறையை பாசிசமயமாக்கவே!
- ராம ராஜ்ஜியம் எனும் பேரில் அமெரிக்க மாமா ராஜ்ஜியத்தை நிறுவவே!
- தொழிலாளர்களை சட்டபூர்வ கொத்தடிமைகளாக மாற்றும் 4 சட்டத் தொகுப்புகளை எதிர்ப்போம்!
- விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றி படுகொலை செய்யும் மின்சார சட்டம், விதை சட்டங்களை எதிர்ப்போம்!
- பாசிச பாஜக ஆட்சிக்கு சவக்குழி வெட்டுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்