பொது நீரோட்ட அரசியல் புரிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்!

துரை. சண்முகம்

பொது நீரோட்ட அரசியல் புரிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்!

பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் பக்கம்
 தலைவைத்தே படுக்காமல் முதலாளிகளுக்கான
 தனி நீரோட்ட  ' தலைமறைவு'அரசியல் செய்தவர்கள் 
முதலாளித்துவ கட்சிகள்!


ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் பக்கம் நின்று அரசியல் பேசுவதுதான் பொது நீரோட்டம். சிறுபான்மை முதலாளி வர்க்கத்தின் பக்கம் நின்று ஜனநாயக வேடம் கட்டுவது தான் மக்களை விட்டு விலகி நிற்கும் தனி நீரோட்டம். 

தமிழ்நாட்டில் இது அப்படியே தலைகீழ் பேசப்படுகிறது. 

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலகட்டத்திலேயே தமிழ்நாட்டில் அமீர் ஹைதர் கான்  போன்ற ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்கள்தான் தொழிலாளர் வர்க்க அரசியல் பொது நீரோட்ட அரசியலை முற்போக்கு திசையில் உருவாக்கியவர்கள்.

அப்போதும் பிரபல கவர்ச்சி வாத தலைமைகளை கொண்டவர்கள் முதலாளிகளுக்கான தனி நீரோட்டமாக சிறுத்துக் கிடந்தவர்கள்.

உழைக்கின்ற வர்க்க அரசியலுக்காக தங்களது தொடக்க கால தனிநபர் அழித்தொழிப்பு இயக்க அரசியலை பரிசீலனை செய்து வெகுமக்கள் அரசியல் இயக்கமாக வீச்சாக வளர்ந்தது நக்சல்பாரி இயக்கம்.

ஏதோ தலைமறைவு இயக்கமாக இருந்தவர்களைத்தான் அரசு ஒடுக்கியது மற்றபடி 'அவர்கள் சொல்லும்' பொது நீரோட்டத்திற்கு வந்த பிறகு அனுமதித்தது என்பதெல்லாம் நடக்கவில்லை. 

இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத் தாக்கம் பெற்ற குறிப்பாக சென்னை பெருநகரில் வீச்சாக தொழிற்சங்க அரசியல் செல்வாக்கை ஏ .எம் கோதண்டராமன் ( AMK )( மஜ இக) எனும் நக்சல்பாரி இயக்கத் தலைவர் ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய தொழிலாளர் வர்க்க பொது நீரோட்ட அரசியல் செல்வாக்கு பெற்றவுடன் தொழிற்சங்க இயக்கங்களுக்கு உள்ளேயும் தனி நீரோட்டமாக கருங்காலி தொழிற்சங்கங்களை திமுக உட்பட முதலாளித்துவக் கட்சிகள் முனைப்பாக உருவாக்கி வர்க்க அரசியலுக்கு எதிராக நின்றதும் வரலாறு.

முன்புதான் அழித்தொழிப்பு இயக்க அரசியல் பேசினார்கள் இப்போது வெகுஜன அரசியலுக்கு வந்து விட்டார்கள் என்று ஆதரித்தார்களா இவர்கள்? அப்போதும் நக்சல்பாரி கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒடுக்குவதற்கு எல்லா பிரிவுகளையும் ஏற்படுத்தினார்கள்.

வெகுஜன அமைப்பாக செல்வாக்கு பெற்ற RYL, மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற அமைப்புகளின் மீது தடா , பொடா மற்றும் மக்களிடம் சட்டப்படி ஜனநாயகப்படி இயக்கம் நடத்துவதையே தடுக்கும் அத்தனை வேலைகளையும் செய்தார்கள்.

திராவிட அரசியல் ஒட்டுக் குழுக்களை உருவாக்கியும் அழித்தார்கள்.

மக்கள் மத்தியில் கம்யூனிச அரசியல் எடுபட ஆரம்பித்த உடன் பாசிச வெறியோடு ஒடுக்கியவை தான் இங்கு உள்ள எல்லா ஆளும் கட்சிகளும். அவர்களையும் சேர்த்து ஒடுக்கிய ஆளும் வர்க்க பாசிச மிசா போன்றவை வந்தபோது மட்டும் தாங்கள் பாதிக்கப்பட்டதை வைத்து மக்களிடம் செல்வாக்கை நிலைநாட்ட பேசுகிறார்கள். 

உண்மையில் உழைக்கும் மக்களுக்காக தங்களது அழகான வாழ்க்கையை அர்ப்பணித்த ஏராளமான கம்யூனிச தோழர்களை பற்றிய வரலாறு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வீச்சாக சொல்லப்படவே இல்லை என்பதுதான் துயரம். 

அற்புதமான தோழர் அப்பு போன்றவர்கள் ஆளும் வர்க்க அரசு பொறியமைவால் எப்படி கொல்லப்பட்டார்கள் ? என்பது கூட இன்றுவரை தெரியாமல் போனது.

பாலன் சீராளன்  இன்னும் எண்ணற்ற கம்யூனிஸ்ட் தோழர்கள் பொது நீரோட்டத்தில் எழுந்து நின்றதால்தான் ஆளும் வர்க்கத்தின் தனி நீரோட்டம் படுகொலை செய்தது.

அரசியல் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் அர்ப்பணிப்பு மிக்க பல கம்யூனிச தோழர்கள் பல்வேறு குழுக்களாக சிதறுண்டு இருக்கின்ற சூழ்நிலையால் இவர்களையெல்லாம் ஒன்றுபட்ட முறையில் மக்கள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது.

உண்மையில் ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பொது நீரோட்டத்தில் கலந்து கரைந்த எண்ணற்ற கம்யூனிஸ்டுகள்தான் மக்களின் உண்மையான கதாநாயகர்கள்.

கம்யூனிசமும் கம்யூனிஸ்டுகளும் தான் பொது நீரோட்ட அரசியலில் நிற்பவர்கள். 

இந்த உழைக்கும் வர்க்க அரசியலுக்கு எதிராக நிற்கும் சிறுபான்மை முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அத்தனை கட்சிகளும்தான் பொது நீரோட்டத்திற்கு வராத எதிரான தனி நீரோட்டங்கள்! 

உழைக்கின்ற மக்களுக்கான தியாகிகளை அறிவோம்! 

உழைக்கின்ற மக்களுக்கு எதிரான துரோகிகளையும் அறிவோம்! 

செப்டம்பர் 12 தியாகிகளின் தினத்தில் உழைக்கும் வர்க்கத்துக்கான கம்யூனிச அரசியலை உயர்த்தி பிடிப்போம்!

துரை. சண்முகம்

https://www.facebook.com/share/p/19DmtyHcyF/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு