தேர்தல் முடிவுகளும் அம்பலமான திமுக - பாஜக கள்ளக் கூட்டும் - தவெக எதிர்ப்பாக திசைமாறிய பாசிச பாஜக எதிர்ப்பு

சமரன்

தேர்தல் முடிவுகளும் அம்பலமான திமுக - பாஜக கள்ளக் கூட்டும் - தவெக எதிர்ப்பாக திசைமாறிய பாசிச பாஜக எதிர்ப்பு

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் (மே) 4ம் தேதியன்று வெளியாகியது. யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களுக்குள்ளாகவும் முடங்கின. பெரும்பான்மைக்கு தேவையான குறைந்தபட்சம் 118 இடங்களை எந்தவொரு கட்சியும் பெறவில்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் மீது  மக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதுவே தவெக வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

திராவிட கட்சிகளின் படுதோல்வியும் தவெகவின் வெற்றியும்

கடந்த 5 ஆண்டுகால திமுக அரசின் கார்ப்பரேட் நல ஆட்சியால் மக்கள் அனைத்து வாழ்வுத்துறைகளிலும் துன்புற்றனர். ஒரு சில கண்துடைப்பு இலவசங்களைத் தவிர எவ்விதத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து அதானிகளுக்கும் டிவிஎஸ் ஐயங்கார்களுக்கும் பணிவிடைச் செய்தது. மாநகராட்சி, நகராட்சிகளை கார்ப்பரேட் மயமாக்கி துப்புரவு பணியாளர்களை நசுக்கியது. தொழிலாளர் சட்டத் திருத்தங்களை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கியது. வருடாந்திர மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு மூலம் நடுத்தர குடும்பங்களின் சேமிப்பில் கைவைத்தது. ஊரகவளர்ச்சி, நகர்புற மேம்பாட்டு துறை, மருத்துவத்துறை, கல்வித் துறை, மதுவிலக்குத் துறை, மின்சாரத் துறை, பத்திரப்பதிவுத் துறை, இந்துசமய அறநிலையத் துறை, தொழிற்துறை உள்ளிட்ட அனைத்திலும் அளவில்லா ஊழலில் திளைத்தது. பாஜக அரசுடன் மறைமுகமாக கைக்கோர்த்துக் கொண்டு எதிர்த்து போராடியவர்களை கடுமையாக ஒடுக்கியது. இது திமுக அரசின் மீதும் ஸ்டாலின் மீதும் கடுமையான அதிருப்திகளை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது. இந்த அதிருப்தியின் வெளிப்பாடே திமுக மற்றும் மு.க.ஸ்டாலினின் படுதோல்வி ஆகும். 

பல ஆண்டு காலமாக அதிமுக, பாஜகவின் இயற்கை கூட்டாளியாகச் செயல்பட்டு வருவது நாம் அறிந்ததே. முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பாஜகவின் எடுபிடி ஆட்சியாக இருந்தது. ஆனால் அதற்கு மாற்று எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசோ, பாஜக எதிர்ப்பு வேசம் போட்டுக் கொண்டே மத்திய அரசின் அதே அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையே அச்சுப்பிசகாமல் தானும் பின்பற்றியது. அதிமுக, நேரடி எடுபிடி ஆட்சி என்றால் திமுக ஆட்சியோ வெளியில் பாஜகவை எதிர்ப்பதாக நாடகமாடிக்கொண்டு - உள்ளே அதே அடிமை சேவகம் என்ற நிலையிலிருந்தே 5 ஆண்டுகாலமாக ஆட்சி புரிந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி மாநில உரிமைகளை மத்தியில் பறிகொடுத்து தமிழ்நாட்டை சுரண்டிக் கொழுத்த திராவிடக் கட்சிகள் மீது  மக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்ததே தவெக வெற்றிக்கும் முழுமுதற்காரணமாகும். அதனுடன் இணைந்த அம்சமாகவே விஜயின் பிரபல பிம்பம் அமைந்தது. எனவேதான் இரண்டு கட்சிகளின் வெற்றி பெற்ற தொகுதிகளைக் காட்டிலும் கூடுதலான இடத்தை புதியதாக வந்த தவெகவால் வெல்ல முடிந்தது. அதிமுக -திமுக கட்சிகளின் 106 தொகுதிகளின் வெற்றிகூட அதன் கூட்டணி கட்சிகளாலேயே கிடைத்ததே தவிர தனிப்பட்ட செல்வாக்கால் கிடைக்கவில்லை. ஒரு வேளை கூட்டணி இல்லாமல் அவர்கள் தேர்தலில் தனித்து பங்கேற்று இருந்தால், இன்னும் படுதோல்வி அடைந்திருப்பார்கள். தேர்தலுக்கு முன்புவரை திராவிட இனவாதத்தை எதிர்த்து  தொடர்ந்து சரியாக பேசி வந்த சீமானோ தேர்தல் சமயத்தில் அதை கைவிட்டு தவெக எதிர்ப்பை மையமாக்கினார். திராவிடக் கட்சிகளை விமர்சிக்கவே இல்லை. இதுவே நாம் தமிழரின் படுதோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. திராவிடக் கட்சிகளின் மீதான மக்களின் கோபத்தை  சீமான்  சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை -    

தவெக தேர்தலுக்கு முன்பே காங்கிரசுடன் கூட்டணி முயற்சிகளில் ஈடுபட்டது. அவை அமையவில்லை. தேர்தல் முடிவுகள் வந்த பின்னால் காங்கிரஸ் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தங்களுக்கு ஆட்சியளிக்க ஆதரவளிக்குமாறு கோரியது. காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக திமுக வின் தேர்தல் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆட்சியளிக்க ஆதரவளித்தது. அதைத் தொடர்ந்து சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவளித்தன. ஏறக்குறைய ஒரு வார காலம் இழுத்தடிக்கப்பட்டு மே 10 அன்றுதான் தவெகவால் பதவியேற்க முடிந்தது. இந்த ஒரு வார காலத்துக்குள் அரசியல் கூத்துகள் இந்த கட்சிகளின் பதவி மோகத்தையும் அவர்களின் வேசத்தையும் கலைத்தன. குறிப்பாக திமுகவின் பாசிச பாஜக எதிர்ப்பு என்ற முகமூடி கிழிந்து தொங்கியது.           

திமுக - அதிமுக கூட்டுபேர முயற்சிகள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக - அதிமுக என மாறி மாறி பதவியையும் ஆட்சியதிகாரத்தையும் ருசி பார்த்தவர்களால், தங்களை தாண்டி புதியதாக ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதை சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் பங்கெடுத்த முதல் தேர்தலிலேயே தவெகவின் இத்தகைய வெற்றியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெக ஆட்சியமைக்க நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என வெளியில் அறிக்கை விட்டார். ஆனால் திமுக - அதிமுக - பாஜக 3 கட்சிகளும் உள்ளுக்குள் கூட்டு சதிவேலைகளில் ஈடுபட்டுள்ளன. தவெக ஆட்சியமைக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியபோதும், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்  தவெகவை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு கடிதங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பேன் என்று பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டார். பாஜக - திமுக - அதிமுகவின் கூட்டுச் சதிவேலைகளுக்கு உறுதுணையாக இருந்தார். திமுக-அதிமுக இணைந்து ஆட்சியமைக்க கோரினால் அவர்களை அழைப்பேன் என்றும் பேசினார். காங்கிரஸ்  திமுகவின் தேர்தல் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக பக்கம் சென்று விடவும், அதுவரை மறைமுகமாக இருந்த திமுக - பாஜக உறவு திமுக - அதிமுக - பாஜக என்ற நேரடிக் கூட்டை நோக்கி நகரும் வாய்ப்பு உருவானது. தவெக ஆட்சியைப் பிடிப்பதைத் தவிர்க்க திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க பேரங்கள் நடத்தி வருவதாகச் சில முன்னணி ஊடகங்கள் கிசுகிசுத்தன. 

  • எடப்பாடி பழனிச்சாமி முதல்வர், உதயநிதி துணை முதல்வர்
  • உதயநிதி முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர்
  • எடப்பாடி பழனிச்சாமி முதல்வர், திருமாவளவன் துணை முதல்வர்
  • பொதுவாக திருமாவளவன் முதல்வர்

ஆகிய முன்மொழிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வந்தன. ஆனால் அவை உறுதித்தன்மையற்று இருந்தன. சிபிஎம் கட்சி தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தபின்பே பித்தலாட்டங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளி வர ஆரம்பித்தன. 

தேர்தல் பிரச்சாரத்தின் போதே, "திமுகவும் பாஜகவும் ஒருவருக்கு ஒருவர் எதிரி போல வெளிவேஷம் போட்டாலும், அமித்ஷா மகன் ஜெய்ஷாவும் திமுகவின் சபரீசன் உதயநிதி உள்ளிட்டோரும் எல்லாவித வணிக - வர்த்தக உறவுகளில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தவெகவின் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டினார். அதே போல எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனும், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் முதலாளியான பாஜகவின் அபினேஷும் ரியல் எஸ்டேட் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட கட்டுமான டென்டர்கள் உள்ளிட்டவற்றில் வணிக உறவு கொண்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.  அக்கூட்டு, தேர்தலுக்குப் பின்பும் ஆளுநரை இணைத்துக் கொண்டு நடந்ததாகவும் தற்போது ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். ஆளுநர் முன்னிலையில் திமுக - அதிமுக கூட்டாக ஆட்சியமைக்க பேரம் நடந்ததற்கு பாஷ்யம் அபினேஷ் தூதுவேலைப் பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதன் காரணமாகத்தான் ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைக்காமல் இழுத்தடிப்பதாகவும் பேசினார். 

சிபிஎம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரான பேபிதான் இதை முதலில் போட்டு உடைத்தார்: "காங்கிரஸ் வெளியேறிய பிறகு, நாங்கள் ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். அப்போது அதிமுக தலைமை தாங்கும் அரசை ஆதரிக்கப் போவதாக ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுகவை திமுக ஆதரிப்பதை இடதுசாரிகளும் பின்பற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். நாங்கள் திமுகவை எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள - இந்தியா கூட்டணிக்கு எதிராக செயல்படும் - அதிமுகவை ஆதரிக்க முடியாது என்று ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டோம்" என்றார்.  மேலும் அவர், "பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக தலைமையிலான அரசை பின்வாசல் வழியாக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனவும் அதற்கு எங்களுடைய எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்றும் ஆளுநருக்கு தெரிவிக்க உள்ளோம்" என்றார். தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம், அது குறித்து பேசுவதை ஆரம்பக்கட்டத்தில் தவிர்த்து வந்தார். மீண்டும் ஒரு தேர்தல் வந்துவிடக் கூடாது - ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது - இது பாஜக தமிழகத்தில் காலூன்ற வழிவகுத்துவிடும் என்றுதான் தவெகவுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற அளவில் மட்டுமே பேசி வந்தார். ஆனால் மூடி மறைக்கப்பட்ட உண்மை மேற்பூச்சுகளை உடைத்துக் கொண்டு வெளிவந்தது.     

அதேபோல முதற்கட்டத்தில் இது குறித்து பேச தயங்கிவந்த விசிக தலைவர் திருமாவளவனும் அடுத்த 10 நாட்களில், "திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க பேச்சு நடந்தது உண்மை; எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அழைப்பில் எங்களுடன் பேச்சு நடந்தது. விசிகவும், இடதுசாரிகளும் இதை நாங்கள் ஏற்காத நிலையில், 'திருமாவளவன் முதல்வர்' எனும் வாய்ப்பு என்னிடம் வைக்கப்பட்டது. நான் அதை மறுத்துவிட்டேன்" என்று வெளிப்படையாகவே பேசினார். 

திமுக கூட்டணியில் இருந்து தவெகவுக்கு ஆதரவளித்தபின் சிபிஐயும், முஸ்லீம் லீக்கும் திமுக-அதிமுக கூட்டுப்பேரம் நடந்ததாக ஒப்புக்கொண்டனர்.

அதிமுகவின் சி.வி. சண்முகமும் திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க முயன்றதாகவும், தங்களது எதிரி திமுகவை ஆதரிப்பது கொள்கை முரண் என்றும்  பேசினார். மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை முதல்வர் ஆக்க முயற்சிகள் எடுத்துவருவதைப் போல எடப்பாடி பழனிச்சாமி அவரது மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டு வந்து முதல்வராக்க முயற்சி செய்கிறார் என்றும் பேசினார். 

இவை அனைத்துக்கும் உச்சமாக திமுகவின் ஆர்.எஸ். பாரதியோ "அதிமுக என்ன தீண்டத்தகாத கட்சியா? அதனுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினால் என்ன தவறு" எனும் தொனியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். திமுகவின் ஆ.ராசாவும் அதே பாணியில் "அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சியமைப்பது ஜனநாயகமே" என்றும் பேசினார். 

தற்போது சிபிஎம்-ன் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும் "புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட்-கம்யூனிஸ்ட் கட்சியின்நிலைபாடும்" எனும் தலைப்பிட்ட அறிக்கையில் திமுக- அதிமுக கூட்டு பேரம் நடந்தது உண்மை என்பதை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்துள்ளது. தோல்வியடைந்த ஒரு கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன? எனவே, அதிமுக - திமுக அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடர வேண்டும் என்ற முறையில் அந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இவர்கள்தான், அதிமுகவை திராவிடக் கட்சி என்ற அளவுகோலில் வைக்க முடியாது என்று பல நேரங்களில் கூறியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறோம். மேற்கண்ட கருத்தின் நோக்கமென்ன? திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த விடக்கூடாது என்பதைத் தவிர இதில் தமிழ்நாட்டின் நலன் வேறு என்ன இருக்கிறது? இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டாலும் திமுக - அதிமுக இதே நிலைபாட்டை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை" என்று சண்முகம் கூறியுள்ளார்.

கூட்டணியிலிருந்து விலகிய வைகோவும் தற்போது, எம்.எல்.ஏ-க்களை குதிரைபேரம் நடத்தி திமுக விலைக்கு வாங்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இவ்வாறு திமுக- அதிமுக கூட்டுப்பேர முயற்சிகள் வதந்தி அல்ல; உண்மையில் தீட்டப்பட்ட சதி என்பதை ஒருவர் பின் ஒருவராக அவிழ்த்து வருகின்றனர்.

பாஜக - அதிமுகவுடன் கூட்டுபேரம் நடத்தியதை மறைக்க தனது கூட்டணி கட்சிகள் மீது அவதூறு பரப்பும் திமுக

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகளை சீட்டு பேரத்தில் அலைகழித்தது திமுக. குறிப்பாக சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகளை கடைசி வரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பதைப் போல காக்க வைத்து நான்கைந்து சீட்டுகளுக்காக அவர்களை அலைய விட்டது. அதற்கு மாறாக அதிமுக-பாஜக கூட்டணியிலும் திமுக கூட்டணியிலும் மாறிமாறி சீட்டு பேரம் நடத்தி வந்த - எந்த செல்வாக்குமில்லாத - தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது. ஆர்.எஸ்.எஸ்.சால் வழிநடத்தப்படும் முத்திரையர் சாதி கட்சிக்கும் கூட சீட்டு வழங்கி "திராவிட சமூக நீதியை" நிலைநாட்டியது(!!). ஆனால் "இந்தியா" கூட்டணிக் கட்சிகளை திண்டாட வைத்தது திமுக. மக்களிடம் மட்டுமல்ல - இத்தனை ஆண்டுகாலம் கூடவே இருந்த சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளிடம் கூட மோசமான அதிருப்தியை உருவாக்கினார் ஸ்டாலின். 

திமுக அரசின் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால் மு.க.ஸ்டாலின் படுதோல்வியடைந்து கோட்டையை விட்டு வீட்டுக்கு சென்றார். திமுகவின் மீதான அதிருப்தியால் "இந்தியா" கூட்டணியினர் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஓவ்வொருவராக வெளியேறி தவெகவுடன் ஐக்கியமாகினர். 

"எங்கள் கூட்டணியில் இருந்து எங்கள் அனுமதியுடன் தான் அவர்கள் சென்று தவெகவுக்கு ஆதரவளித்தார்கள், ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்று நாங்கள்தான் அனுப்பிவைத்தோம். தவெக பதவியேற்றாலும் நடப்பது எங்கள் ஆட்சிதான் - எங்கள் திட்டங்களைத்தான் தவெக பின்பற்றுகிறது" என்று முதலில் பேசிய திமுகவினர், பின்பு தவெகவின் அமைச்சரவையில் ஒவ்வொருவராக பங்கேற்க துவங்கியபின்பு அவர்கள் மீது வன்மத்தைக் கக்கத் துவங்கியது. 

விசிகவினருக்கு சோபாவுக்குள் பணம் அனுப்பி பேரம் பேசி வாங்கியதாகத் தாக்கியது. முஸ்லீம்லீக், சிபிஐ, சிபிஎம் போன்றவர்களை குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்கியதாகப் பேசியது. திமுகவின் ஆ.ராசா, காங்கிரஸ் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணியினரை சமூகவலைதளப் பதிவொன்றில் கொச்சையாகத் தாக்கினார். 

இதைத் தொடர்ந்து, சிபிஎம்-ன் பெ.சண்முகம், திமுக தலைமையில் எந்தவொரு கூட்டணியும் தற்போது இல்லை என்று பேசினார். அதுவரை காங்கிரசை தாக்கிவந்த திமுகவினர், அதன்பின் சண்முகத்தை குறிவைத்து தாக்க ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளங்கள் முதல் முரசொலி பத்திரிக்கை வரை அனைத்து தரப்பிலிருந்தும் திருமாவேலன், கொங்கு ஈஸ்வரன், மனுஷ்யபுத்திரன் போன்ற வாடகை வாய்களை இழுத்து வந்தும் தாக்க ஆரம்பித்துவிட்டனர். சிபிஎம்-மும் பதிலுக்கு பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது.  10 ஆண்டு காலத்திற்கும் மேலாக திமுக பற்றி வாய்பேசாமல் மௌனித்து கிடந்த சிபிஎம்-மினர் இப்போதுதான் வாயே திறக்கிறார்கள்.

சிபிஐ, முஸ்லீம் லீக், மதிமுக போன்றவர்களும் இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.           

பாஜக-அதிமுக உடனான தனது கூட்டுப் பேரத்தை மறைக்கவும் அது பற்றிய விவாதங்களைத் திசைதிருப்பவும் தனது கூட்டணியில் இருந்த கட்சிகளைத் தாக்கி வருகிறது. ஆனால் இந்த தாக்குதல்களே பிளவுகளை மேலும் அதிகரித்து வருகிறது. எது எப்படியாயினும் "இந்தியா" கூட்டணி ஒருபுறம் உடைந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிதைந்தே விட்டது. மறுபுறம் பாஜக+அதிமுக+திமுக கூட்டணிக்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்துள்ளதானது தற்போது அம்பலமாகியுள்ளது. 

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் "பாஜக+அதிமுக+திமுக கூட்டு என்ற எந்த கொள்கை புடலங்காயும் இல்லை" என்று கூறினார். அவர் கூறியது போல இவர்களுக்குள் எந்த "கொள்கை புடலங்காயும்" இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. 

"இந்தியா கூட்டணி பாஜகவின் பாசிசத்திற்கு மாற்று அல்ல" எனும் நமது நிலைபாடு நிரூபணம் ஆகி வருகிறது

எவ்வித கொள்கை ஒற்றுமையும் இல்லாமல் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து ஆட்சியதிகாரத்தை பிடிப்பது என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்டதுதான் "இந்தியா" கூட்டணி. அது உருவாக்கப்பட்ட போதே அதன் கூட்டணி கட்சிகளிடையே செயல் ஒற்றுமை என்பது கானல் நீராகவே இருந்தது. மாநிலத்திற்கு மாநிலம் அக்கட்சிகளிடையே பூசல்களும் முரண்பாடுகளும் நிலவின. அக்கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. அது கடந்த (2024) நாடாளுமன்ற தேர்தலில் கூட அது பல்வேறு மாநிலங்களில் வெளிப்பட்டது. 

தற்போதைய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் (2026) மோதல்களும் பிளவுகளும் முற்றியுள்ளதை வெளிப்படையாகக் காண முடிகிறது. குறிப்பாக மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாட்டில் இது அப்பட்டமாகியுள்ளது. 

  • மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்க காங்கிரசு பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினர்.
  • அதே போல தமிழகத்தில் திமுக - பாஜகவுடன் ரகசியக் கூட்டு வைத்துள்ளதால்தான் அதிகாரிகளை தமிழகத்தில் மாற்றவில்லை மேற்கு வங்கத்தில் மட்டும் தனக்கு எதிரானதாக மாற்றியுள்ளது என மம்தா திமுக மீது குற்றஞ்சாட்டினார். 
  • கேரளாவில் சிபிஎம் பாஜகவுடன் கைக்கோர்த்து காங்கிரசுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுவதாக ராகுல்காந்தி பேசினார்.
  • ராகுலுக்கு பதில் அளிக்கும் விதமாக பினராயி விஜயன், பாஜகவுக்கு மாற்றாக காங்கிரசை நம்புவதானது சிபிஎம்-ன் தற்கொலைப் பாதை என்று பேசினார். 
  • அரவிந்த் கெஜ்ரிவாலும் - மு.க. ஸ்டாலினும் கூட்டாகச் செயல்பட்டு ராகுல்காந்தியை தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ராகுலும் ஸ்டாலினும் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடவே இல்லை. ஆனால் கெஜ்ரிவாலும் ஸ்டாலினும் நெருக்கமா ஒரே மேடையில் தோன்றினர் - இது ராகுலுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதன் தொடர்ச்சியே ஆம் ஆத்மியும் - திமுகவும் கூட்டாக "இந்தியா" கூட்டணியைப் புறக்கணித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு கட்சிகளும் பங்கேற்கவில்லை; பங்கேற்க மாட்டோம் என்றும் ஏற்கெனவே அறிவித்துவிட்டன.

இவற்றைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி ஏறக்குறைய உடைந்தேவிட்டது. 

அது பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும் சரி, காங்கிரசின் "இந்தியா" கூட்டணியாக இருந்தாலும் சரி அதில் பங்கேற்றுள்ள கட்சிகள் அனைத்தின் நோக்கமும் கார்ப்பரேட் சேவைதான். புதிதாக ஆட்சியிலேறி இருக்கும் தவெகவுக்கும் இந்த அரசியலமைப்பில் வேறு மார்க்கம் இல்லை என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

முன்பாவது இந்துத்துவா, பெருந்தேசியவெறி, சமூகநீதி, முற்போக்கு என பல வேடங்கள் தரித்த ஆட்சி வடிவங்கள் இருந்தன. தற்போது அதுவும் மெல்ல மறைந்து வருகிறது. காங்கிரசு பொதுவாக மதச்சார்பின்மை - பாஜக எதிர்ப்பு பேசுகிறது. ஆனால் வட மாநில தேர்தல்களின் போது தீவிர இந்துத்துவாவைப் பேசுகிறது. அது ஆளும் மாநிலங்களில் பாஜகவைப் போன்றே இந்துத்துவக் கொள்கைகளை தானும் கடைபிடிக்கிறது. திமுக சனாதன எதிர்ப்பு என ஒருபுறம் பேசிக் கொண்டு, "திராவிட இந்துத்துவா" கொள்கைகளைக் கடைபிடிக்கிறது - ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை ஊட்டி வளர்ப்பது, முருகன் மாநாடு நடத்தியது; திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முயற்சித்த சங்பரிவாரங்களுக்கு துணைபோனது; இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் குருகுல கல்வியை வேறு வழிகளில் அமல்படுத்தியது என அடுக்கிக்கொண்டே போகலாம்... ஏன்(!!) கேரள மாடல் சிபிஎம் அரசு கூட ஐயப்பன் மாநாடு நடத்தி இந்துத்துவத்திற்கு சேவை செய்தது.

எனவே இக்கட்சிகளின் கொடியின் வண்ணம்தான் வேறு வேறே தவிர இவர்களின் கொள்கைகள் என்பது உலகமய-கார்ப்பரேட்மய-தாராளமயக் கொள்கைகள் என்ற வட்டத்திற்குள் சுத்தி சுத்தி வருகிறது. அதன் அடிப்படையிலான சில்லறை சீர்திருத்தங்களைத் தவிர மக்கள் நலன் என்பது துளியும் இல்லை. மக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் இவர்களிடையே வித்தியாசம் ஏதும் இல்லை. 

பாஜகவின் பாசிசக் கொள்கைகளை எதிர்ப்பது என்பது வெறும் தேர்தல் சீட்டுக்காகவும் தங்களை முற்போக்கு போல காட்டி ஏமாற்றவும்தான் என்பது இன்று அம்மணமாகி அம்பலப்பட்டு நிற்கிறது. குறிப்பாக திமுகவின் அதிமுக - பாஜகவுடனான கூட்டுப் பேர முயற்சிகள் என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம்; சதித்தனம் ஆகும். 

இது திமுக வரலாற்றில் புதிதல்ல என்பதை நாம் அறிவோம். ஜனசங்கம், ராஜாஜி ஆதரவுடன் ஆட்சியமைத்தார் அண்ணா. திக போல ஆர்.எஸ்.எஸ்.-ம் சமூக கலாச்சார இயக்கம்தான் என்று பேசியதுடன் வாஜ்பாய் தவறான கட்சியில் நல்ல மனிதர் என்றும் கூறி பாஜக நிலையான ஆட்சி அமைக்கவும் தமிழகத்தில் காலூன்றவும் பாதை அமைத்துக் கொடுத்தார் கருணாநிதி. மோடிக்கு வெள்ளைக் குடை பிடித்த மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாரிசு உதயநிதிக்காக அதிமுக-பாஜகவுடன் கொள்ளைப்புற வழியாக ஆட்சிபிடிக்கவுமான சதியில் ஈடுபட்டடார். இதுதான் "திராவிட மாடல் கொள்கை புடலங்காய்" எல்லாம். 

ஆனால் இப்போதும் திமுகவிற்கு அனாமத்தாக முட்டுக் கொடுப்பவர்களின் நிலைதான் இன்னும் மோசம்.         

தவெக எதிர்ப்பாக திசைமாறிய பாசிச பாஜக எதிர்ப்பு

பாசிச பாஜக எதிர்ப்பில் திமுகவை விட்டால் வேறு வழியில்லை என பேசியவர்கள், தற்போது தவெகவை எதிர்த்து அதிமுக-திமுக கூட்டணி சேர்ந்தால் என்ன தவறு என்று கேட்கும் இழிநிலைக்குச் சென்றுள்ளனர்.  பாஜகவின் "பி" டீம் என இவர்களால் முத்திரைக் குத்தப்பட்ட தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்க அதிமுக - பாஜகவுடனே கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிப்பது என்ற விசித்திரமான செயல்தந்திரத்தையும் விதந்தோதி முட்டுக் கொடுக்கின்றனர்.

திமுகவும் - அதிமுகவும், காங்கிரசு - பாஜக இரு பாசிசக் கட்சிகளின் தொங்கு சதைகள்; அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நாம் பேசியபோதெல்லாம்,  திமுகவுக்கும் - அதிமுகவுக்கும் ஆயிரக்கணக்கான வித்தியாசங்கள் உள்ளது என்று பேசியவர்கள்தான் இன்று இரண்டும் திராவிடக் கட்சிகள்தான் - இரண்டும் ஒன்று சேர்ந்தால் என்ன தவறு என்று பேசுகிறார்கள். பெரியார் மீதும் அவரின் ஏகாதிபத்திய விசுவாசம் மீதும் நமக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அவரது கடவுள் மறுப்புக் கொள்கைகளை அரைகுறையாகக் கைவிட்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று முழங்கிதான் அண்ணாதுரை திமுகவை தொடங்கினார். அதிலிருந்தே அவர்கள் பெரியாரை பூசைப் பொருளாக மாற்றிவிட்டனர். திமுகவிலிருந்து விலகிய அதிமுகவோ பெரியாரின் கடவுள் மறுப்பு - மூடநம்பிக்கை ஒழிப்புக் கொள்கைகளை முழுவதுமாகத் தூக்கியெறிந்துவிட்டு பாஜகவின் இயற்கை கூட்டாளியாகவே மாறியது. இதுதான் இவர்களுக்கு உள்ள ஒரே வேறுபாடு. கடந்தஆட்சியில் பாஜகவின் இந்துத்துவக் கொள்கைகளுக்கு திராவிட சாயம் பூசி செயல்படுத்தியது என்பதே நாம் மேலேயே பார்த்தோம். எனவே திமுக-அதிமுக கூட்டு என்பது ஆச்சரியத்தக்க ஒன்று அல்ல. ஆனால் பாசிச எதிர்ப்புக்கு எதிரான முற்போக்கு ஜனநாயக சக்தி என்று திமுகவை வரையறுத்தவர்கள் இத்தைகைய மக்கள்விரோத கூட்டணியை ஆதரிப்பதுதான் அவலமான ஒன்று. எவ்வளவு குறைகள் இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெகவை ஆட்சியமைக்கக் கோருவதுதான் இவர்களின் இந்த இத்துப்போன சட்டமன்ற ஜனநாயகத்திற்குள்ளாவது வரும். மாறாக பாஜகவின் சதிமுயற்சிகளுக்கு உட்பட்ட அதிமுக - திமுக கூட்டணியை ஆதரிப்பது என்பது நேரடியாகவே பாஜகவை ஆதரிப்பதாகும். 

திமுகவை காலி பெருங்காய டப்பா என்று முகந்தவர்கள்தான் இன்று அது பாஜகவின் மதவாத சாக்கடைக்குள் வீழ்ந்தாலும் இன்னும் கமகமவென மணக்கிறது என்கிறார்கள்.

ஏறக்குறைய பாஜக எதிர்ப்பை அறவே கைவிட்ட இவர்கள் தவெகவை முதன்மைப்படுத்தி தற்போது தாக்கி வருகிறார்கள். தவெகவை பாஜகவின் பி டீம் என்றவர்கள், தற்போது திமுக - அதிமுக - பாஜக ஒரே டீம் ஆக மாறியதை மூடி மறைக்க தவெக எதிர்ப்பை கையிலெடுத்துள்ளார்கள். இவர்களின் முகத்தில் திமுக கரியை பூசினாலும் இவர்களின் முட்டு அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. இவர்களின் வாதங்கள் முதலாளித்துவ சந்தர்ப்பவாதக் கட்சிகள் முன்வைக்கும் வாதங்களை விட அருவருப்பானவை. தவெகவை எதிர்க்க, பாசிச பாஜக எதிர்ப்பை கைவிட்டு விட்டார்கள் - அதனுடன் ஐக்கியமாகிவிட்டார்கள். இதுதான் இவர்களின் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி செயல்தந்திர(!!) லட்சணம்.    

பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் குறித்த பாட்டாளி வர்க்க நிலைபாடு

பாசிசத்தின் பொருளியல் அடிப்படையைப் பார்க்காமால் மதவாதத்தை மட்டுமே பாசிசமாக - ஆரிய மேன்மைக் கோட்பாட்டை மட்டுமே பாசிசமாக வரையறுத்து பார்ப்பதுதான் இவர்கள் செய்யும் மாபெரும் தவறு. அந்த அடிப்படையில் இருந்துதான் காங்கிரசையும் - திமுகவையும் பாசிசத்தை வீழ்த்தவல்ல சக்தியாக மதிப்பிட்டு ஆதரவளித்தனர்: அவர்களுக்கு வால் பிடித்தனர்.

இந்தியப் பாசிசத்திற்கான பொருளியல் அடிப்படை அமெரிக்க நிதிமூலதனம் மற்றும் அதற்கு சேவை செய்யும் பெரும்தரகுமுதலாளித்துவக் கும்பல்களின் நலன்களுக்காக உருவாக்கப்படும் உற்பத்தி முறையில் உள்ளது என்பதையும்; இதனால் உருவாகும் நெருக்கடியில் உள்ளதையும் இவர்கள் காண மறுக்கிறார்கள். இந்த நெருக்கடிக்கு சர்வதேசக் கூறு உள்ளது என்பதையும் மறுக்கிறார்கள். இந்தப் பார்வை அறவே இல்லாமல்தான் பாசிசத்தை வர்க்கப் பார்வையின்றி மதவகைப்பட்டதாக-இன வகைப்பட்டதாக அணுகுகிறார்கள். இந்து மதத்தை விமர்சிக்கும் அனைவரும் முற்போக்கு சக்திகள் எனவும்; ஆரியத்திற்கு எதிரான திராவிட இனவாதம் முற்போக்கானது என்ற நிலையும் எடுப்பதன் விளைவுதான் இது. 

காங்கிரசும் - பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இருமுகங்கள்; திமுகவும் - அதிமுகவும் அதன் தொங்குசதைகள் ஆகும். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பதற்கு ஆரிய-திராவிட இனவாதக் கொள்கைகள் மிகப்பெரும் தடையாக உள்ளன என்பதைத்தான் நாம் பல ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இரண்டு திராவிடக் கட்சிகளுமே மாறி மாறி பாஜக-காங்கிரசு ஆட்சிகளுடன் ஒத்துழைத்து இங்கும் அதே பாசிசக் கொள்கைகளை அமல்படுத்திய - அமல்படுத்திவரும் கட்சிகள்தான். பாசிச ஆட்சி நடைமுறைக்கு வருவது கட்சிகள் மாற்றத்தால் அல்ல. அது நிதிமூலதன நெருக்கடியால் கட்டியமைக்கப்படும் ஆட்சிமுறை. தற்போதைய சூழலில் காங்கிரசு மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தாலும் பாசிச ஆட்சியையே கட்டியமைத்திருக்கும். பெருந்தேசியவெறியுடன் கூடிய மென்மை இந்துத்துவா என்று வடிவத்தில் வேண்டுமானால் சற்று வேறுபட்டிருக்கலாம். உலகமய- கார்ப்பரேட்மய - தாராளமய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மாறாமல் ஆட்சிமுறையில் எந்த மாற்றமும் நடக்காது. அதை நிறுவும் விதமாகவே திமுகவின் 5 ஆண்டுகால கார்ப்பரேட் மாடல் பாசிச ஆட்சி அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். ஏன் சிபிஎம் கட்சியும் அமெரிக்கா-அதானிகளுக்கான ஆட்சியைத்தான் கேரளாவில் நடத்தியதை பார்த்தோம். தற்போது தமிழகத்திலும் புதிதாக ஆட்சியிலேறியிருக்கும் தவெகவும் அதே அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்குட்பட்டே பாஜகவின் பாசிசக் கொள்கைகளுக்கு உட்பட்டே ஆட்சி நடத்த துவங்கியுள்ளது என்பதற்கு மின்சாரத்துறையை முழுவதும் தனியார்மயமாக்க உள்ளதே முதல் உதாரணமாகும். 

சிறிய அளவில் வளர்ந்து வந்த தேசிய முதலாளி வர்க்கம் ஆளும் பெருந்தரகு கும்பலால் மிக மோசமாக சூறையாடப்பட்டுவிட்டது. தேர்தல் போட்டியில் உள்ள எந்தவொரு கட்சியாவது சுதேசிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்று யாராவது காட்ட முடியுமா? அப்படி ஒரு சுதேசிய உற்பத்தி முறையே இந்தியாவில் இல்லாத நிலையில் அனைத்து கட்சிகளும் ஏதோ ஒருவகையில் அமெரிக்காவை அண்டிபிழைக்கும் தரகுமுதலாளித்துவக் கும்பல்களையே சார்ந்துள்ளது. இவ்வாறிருக்கையில் பாசிசத்தை வீழ்த்த ஒரே வர்க்க பின்புலத்தால் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் இந்த ஓட்டரசியல் கட்சிகள் எப்படி தலைமை தாங்க முடியும்? அல்லது மாற்றாக அமையும்? அல்லது மூச்சு விட அவகாசம் கொடுக்கும்? இது எதுவும் நடக்காது என்பதைத்தான் இன்றைய கூட்டுப்பேர முயற்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன.

எனவே, பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான் பாசிசத்தை வீழ்த்தவல்லது. அதன் தலைமையில் அமைந்த வர்க்க ரீதியான - அதாவது விவசாயிகள், மிச்சமீதமிருக்கும் சிறுகுறு தேசிய முதலாளிகள், மாணவர்கள், ஜனநாயகத்தை நேசிக்கும் அறிவுஜீவிகள் இவர்களை உள்ளடக்கியதொரு - ஐக்கிய முன்னணிதான் பாசிசத்தை வீழ்த்தும் என்பதை நாம் மீண்டும் அழுத்தமாக இத்தருணத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில் அணிகளை திரட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பிளவுப்பட்டு கிடக்கும் மா.லெ. இயக்கங்களும், முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்ததொரு கூட்டமைப்பை உருவாக்குவது இன்றைய உடனடி கடமையாக உள்ளது.

சமரன் (ஜூன் - ஜூலை 2026 இதழ்)