1867 செப்டம்பர் 14 இல் வெளியிடப்பட்ட மூலதனம் முதல் நூலின் 159 ஆம் ஆண்டு!

துரை. சண்முகம்

1867 செப்டம்பர் 14 இல் வெளியிடப்பட்ட மூலதனம் முதல் நூலின் 159 ஆம் ஆண்டு!

" இந்நூல்-இதன் முதல் பாகத்தை நான் இப்போது பொதுமக்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!.."

     மூலதனம் நூலின் முதல் ஜெர்மன் பதிப்புக்கான முன்னுரையை இப்படி தொடங்குகிறார் காரல் மார்க்ஸ்.

 என்னா சத்தும் கெத்தும் இந்த மனிதருக்கு! இதோ மக்களிடம் ஒரு அரசியல் பொருளாதார விசையை, உலகளாவிய உண்மையை, வர்க்கப் போராட்டத்திற்கான சமூக விதிகள் பற்றிய பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடுகளை மக்களின் கையில் கொடுத்து விட்டேன்! முதலாளித்துவமே முடிந்தால் பார்! 

என்று இதுகாறும் மூடி மறைக்கப்பட்ட,  சமூக அறிவியல் மறுக்கப்பட்ட முதலாளித்துவத்தின் முழு கதையையும் தூக்கி போடுகிறார் மார்க்ஸ். 

தம்மை ஆராயும் அளவுக்கு பாட்டாளி வர்க்கத்துக்கு எங்கிருந்து அறிவு வரப்போகிறது? என இறுமாந்து இருந்த முதலாளித்துவத்தின் முகத்துக்கு நேரே" கதை உன்னை பற்றியது தான்! " என்று முதலாளித்துவ பொருளாதாரத்தை சமூக அறிவியல் படி பகுப்பாய்வு செய்து உழைக்கும் வர்க்கத்தின் கையில் மிகப் பெரும் ஆயுதமாக மூலதனம் எனும் நூலை கொடுத்துள்ளார் மார்க்ஸ். 

நவீன பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில் உண்மையில் உலகப் பொது நூல் மூலதனம்தான்!

சரக்கு, பயன் மதிப்பு, சரக்குகளில் உருக்கொண்டுள்ள உழைப்பின் இரட்டைத் தன்மை, பரிவர்த்தனை, சரக்கு பணம் சுற்றோட்டம், கூலி, வர்த்தகம் மூலதன திரட்சி... இப்படி கண்ணுக்கு புலப்படாதது போல் சமூக இயக்கத்தில் பொதிந்து இருக்கும் முதலாளித்துவப் பொருளாதார விதிகளை கடினமான அதன் பாறை அடுக்குகளை மிக நயமாக தொன்மம் இலக்கியம் மற்றும் மனித அனுபவங்களுக்கு உட்பட்ட அனைத்து சமூக தன்மைகளையும் கொண்டு ஒரு கலைப்படைப்பாக மூலதனத்தை படைத்திருக்கிறார் மார்க்ஸ்.

புரட்சி என்பது அறிவியலும் கலையுமாகும் என்று ஒரு சந்தர்ப்பத்தில் தோழர் லெனின் குறிப்பிடுவார். உலகப் பேராசான் மார்க்ஸ் மூலதனத்தில் தனது உயிர் அனைத்தையும் கொட்டி ஒரு வரலாற்றுக் காலப்பகுதிக்கு வாழ்ந்து தனது ஆளுமையை உள்ளோடும் ரத்தமாக செலுத்தி இருப்பார். 

இந்தப் பயன் மிக்க புகழ்மிக்க நூலை எழுதுவதற்கு அவர் பட்ட வலிகள் அனைத்தையும் முதலாளித்துவம் சாகும் வரைக்கும் அது அனுபவித்தே தீர வேண்டிய வலியாக அதற்கும் கொடுத்துச் சென்றிருக்கிறார் மார்க்ஸ்.

உலகம் அறிந்த கதைகளின் கதாபாத்திரங்களின் வழியாக மூலதனத்தின் இயல்புகளை அவர் இணைத்து சொல்லும் மேதமை 

தனிநபர் விருப்பமாக மட்டும் இல்லை. நவீன பாட்டாளி வர்க்கத்தை வர்க்கப்போராட்டத்தை நடத்திச் செல்வதற்கான அனைத்து அறிவோடும் உணர்வோடும் பயிற்றுவிப்பதற்கான சமூக தன்மை சார்ந்த தவிப்பும் போராட்டமும் தனது படைப்பை ஒரு ஆயுதமாக கூர் தீட்டித் தரும் பொறுப்பும் அதில் அடங்கியிருக்கிறது.

இறந்தவன் இருப்பவனை பிடித்துக் கொள்கிறான்! என்பதை 

ஒருவன் இறந்த பிறகும் அவனது சொத்துடமை வாரிசை பிடித்துக் கொள்ளும் சொத்துறவு முறையோடு எவ்வளவு நயமாக சொல்கிறார்.

அவர் முன்னுரையில் மிக அழகாக சொல்லுகிறார்,"  தொடக்கம் என்றாலே இடர்பாடுதான்! இது எல்லா விஞ்ஞானங்களுக்கும் பொருந்தும்!" 

     அடடா! ஒரு முன்னுரையில் எத்தனை விசயங்களை யோசிக்க வைக்கிறார். அவர்தான் மார்க்ஸ்! 

எந்த நிலையிலும் முதலாளித்துவ பேருருவைப் பார்த்து அஞ்சவில்லை அவர். போகிற போக்கில் ஒரு இடத்தில் சொல்கிறார், " ஆங்கிலேய அங்கீகார திருச்சபையானது தனது 39 வது விதிகளில் 38 மீதான தாக்குதலை மன்னித்தாலும் மன்னிக்குமே தவிர தனது வருமானத்தில் 1/39 பங்கின் மீதான தாக்குதலை மன்னிக்கவே மன்னிக்காது!"

   என்று தனிச் சொத்துடமை சுரண்டலின் மீது கட்டப்பட்டிருக்கும் முதலாளித்துவ புனிதத்தை எள்ளி நகையாடுகிறார். 

எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி எழுதக் கற்று இருக்கிறார் மார்க்ஸ்,

பொருளாதாரம் சுட்டு போட்டாலும் வரல! என்பவர்கள் மட்டுமல்ல இலக்கிய நய எழுத்து நடை பயில விருப்பம் உள்ளவர்களும் கற்க வேண்டிய நூல் மூலதனம். 

கம்யூனிசமாவது வர்றதாவது! என்று எப்போதும் முணகிக் கிடக்கும் தத்துவ கிழட்டு கட்டைகள்

அவநம்பிக்கை பரப்புவது இப்போதும் கூட இருக்கிறது.

அவர்களுக்கும் சேர்த்து சொல்கிறார் மார்க்ஸ், 

" நாளைக்கே ஏதோ அதிசயம் நடக்கப்போவதன் அறிகுறிகள் இவை என்று சொல்லவில்லை! ஆனால் இன்றைய சமுதாயம் மாறாத கல்லுருவம் அன்று மாற்றத்துக்குரிய உயிர் அமைப்பே அது! இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கிறது என்ற திகில் உணர்வு ஆளும் வர்க்கங்கள் மத்தியிலேயே உதித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவை காட்டுகின்றன!"

            என்கிறார் சமூக இயக்க விதிகளின் அறிவியல் அடிப்படையோடு.

     இங்கிருக்கும் புகழ்பெற்ற அறிவியல்வாதிகள் சீர்திருத்தவாத அறிவாளிகள் கூட அந்த திகிலோடுதான் மூலதனத்தை மென்று முழுங்குபவர்களாக முடித்துக் கொள்கிறார்கள். 

மூலதனத்தின் பகுப்பாய்வு முன்வைக்கும் வர்க்கப் போராட்டம் அவர்களையும் சேர்த்து அம்பலப்படுத்துவதால் தங்கள் வர்க்கத்துக்கே உரிய அரசியலோடு கணவான்கள் அடிப்படையில் மார்க்சியத்துக்கு எதிராக நின்று கொண்டு, மார்க்சுக்கும் ஒரு பறக்கும் முத்தம் கொடுத்து விட்டு பறந்து விடுகிறார்கள். 

பாட்டாளி வர்க்கத்தின் போர்வாளை உருவாக்கிய வர்க்கப் போராட்ட வீரன் மார்க்ஸ் அவர்களே! 

இந்த நாளில் நீங்கள் வழிகாட்டிய கடமையை உணர்கிறோம்!

   

துரை. சண்முகம்

https://www.facebook.com/photo/?fbid=1116113881095407&set=a.117409004299238

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு