உலகை அச்சுறுத்தும் எல்-நினோ: ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பலியிடப்படும் பூகோளம்
சமரன் சிறப்புக் கட்டுரை
இயற்கையை சீரழித்து ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கான உலகை படைத்து வருகின்றன. அதில் எங்கு காணினும் வெள்ளம், வறட்சி, பேரிடர்கள், போர்கள், பஞ்சம், படுகொலைகள்... இந்த பூவுலகை சிதைத்து மனிதன் உள்ளிட்ட அதில் வாழும் அனைத்து உயிர்களின் கல்லறை மீது தங்களது மாட மாளிகைகளையும் சாம்ராஜ்ஜியங்களையும் கட்டி எழுப்புகின்றன இந்த பிணந்திண்ணி நிதியாதிக்கக் கும்பல்.
"இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல... நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில், வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது" என்பார் பேராசான் மார்க்ஸ்.
நிகழும் பேரழிவுகளைப் பற்றி வியாக்கியானம் செய்வது மட்டுமல்ல நமது பணி; அதை மாற்றியமைத்து மேலானதொரு புதிய உலகைப் படைப்பதுதான் நமது பணி. மார்க்ஸ் சுட்டிக்காட்டிய உயர்வானதொரு கடமையும் நமக்கு உள்ளது.
சமீப காலமாக இந்த பூவுலகை அச்சுறுத்தும் ஒன்றாக புவி வெப்பமயமாதலும் அதன் விளைவுகளின் முக்கியமான ஒன்றாக இந்த எல்-நினோவும் மாறியுள்ளது.
எல் நினோ என்றால் என்ன?1
எல் நினோ (El Nino) என்பது மத்திய மற்றும் கிழக்கு புவிநடுக்கோட்டுப் பகுதியில் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அசாதாரணமாக அதிகரிக்கும் உலகளாவிய காலநிலை மாற்றமாகும். இந்த வெப்பநிலை உயர்வானது வளி மண்டல அழுத்தத்தில் மாற்றத்தை உருவாக்குகிறது. இது காற்றின் திசையை மாற்றுவதோடு பருவமழைகளையும் வெகுவாக பாதிக்கிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு 1 °C வரையிலானது பொதுவான எல் நினோ என்றும்; அதுவே இது இயல்பை விட 2 °C க்கும் மேல் அதிகரிக்கும் போது 'சூப்பர் எல் நினோ' என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்த நூற்றாண்டில் பத்தாண்டுக்கு ஒருமுறை நிகழும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போதைய ஆண்டிலும் (2026) இந்த 'சூப்பர் எல் நினோ'தான் உருவாகியுள்ளது. இந்த சூப்பர் எல் நினோ என்பது தற்காலிக பருவநிலை நிகழ்வு அல்ல, அது உலகளாவிய புவி வெப்பமயமாதலின் (Global Warming) தீவிர விளைவாகும். ஏனெனில் இந்த ஆண்டின் இறுதியிலும் அடுத்த ஆண்டின் (2027) கோடைகாலத்திற்குள்ளாகவும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையானது 3 °Cக்கும் மேல் அதிகரிக்கும் என பருவநிலை ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகிறது. இது 'வரலாற்று எல் நினோ (Historic El Ninoஷீ)' என வகைப்படுத்தப்படுகிறது. இதனை சிலர் "காட்ஸில்லா எல் நினோ (Godzilla El Nino)" எனவும் பெயரிட்டு வருகின்றனர். கடந்த 500 முதல் 1000 ஆண்டுகளில் வரலாற்றில் பதியப்பட்ட வெப்பநிலை உயர்வுகளைவிட வரும் மாதங்களில் இந்த புவிக்கோளத்தில் நிகழப்போகும் மாற்றமானது வரலாறு காணாத அளவில் உலகை அச்சுறுத்தும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தில் இதன் தாக்கங்கள் கடுமையானதாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கங்களை தற்போதே நாம் எதிர்கொள்ள துவங்கிவிட்டோம்.
எல் நினோவினால் சமீபத்தில் ஏற்பட்டுள்ள உலகளாவிய பாதிப்புகள்
கடந்த சில வாரங்களாக ஆப்பிரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு நாடுகள் எல்-நினோவால் மிகக் கொடூரமான உணவுப் பஞ்சத்தையும், சில பகுதிகளில் திடீர் வெள்ளத்தையும் எதிர்கொண்டுள்ளன.
- ஜிம்பாப்வே-ல் கடுமையான வறட்சியின் காரணமாக தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 60 லட்சம் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் மடிந்துள்ளன.
- சாம்பியாவில் நீர்ஆதாரங்கள் மிக மோசமடைந்துள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 35 லட்சம் மக்கள் பசிப் பிணியால் வாடுகின்றனர்.
- சோமாலியா மற்றும் கென்யாவில் திடீர் மேகவெடிப்புகளால் மிகஆபத்தான வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்லாமல், ஆசிய, அமெரிக்க -ஐரோப்பிய நாடுகளும் கூட மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
- பங்களாதேசில் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதன் மூலம் பரவிய தொற்று நோய்களால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றியும் மின்சாரம் இன்றியும் தவிக்கின்றனர்.
- இந்தோனேசியாவில் பருவமழை முற்றிலும் பொய்த்து கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. முக்கிய உணவுப் பயிரான அரிசி உற்பத்தி 15% சதவிகிதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. காட்டுத்தீயினால் ஏற்பட்ட நச்சுப்புகையின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் சுவாச நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.
- பெரு நாட்டில் அதி தீவிர கனமழை - வெள்ளப்பெருக்குகளால் இருப்பிடங்கள் சிதைந்துள்ளன, போக்குவரத்து வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நூற்றுக் கணக்கானோர் மடிந்துள்ளனர். கோடிக்கணக்கான மீன்கள் மடிந்து, அந்நாட்டின் முக்கிய தொழிலான மீன்பிடித் தொழில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
- பிரேசிலில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அமேசான் காடுகள் மற்றும் அதன் ஊடே பாயும் நதிகள் வறண்டு வருகின்றன. காட்டுயிர்களும் பழங்குடி மக்களும் குடிநீர் இன்றி அவதியுறுகின்றனர்.
- சீனா, ரஷ்யா, கொலம்பியா, அமெரிக்கா, உக்ரைன், பிரேசில், தஜகிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
- கடுமையான வெப்ப அலை உயர்வால், கடந்த ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை 47 °C வரை தொட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட மிக அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. வெப்பநிலை உயர்வால் மட்டும் - ஜெர்மனியில் 11900, பிரன்சில் 5762, ஸ்பெயினில் 3001, பிரிட்டனில் 2877, இத்தாலியில் 2700, பெல்ஜியத்தில் 1747, நெதர்லாந்தில் 480க்கும் மேற்பட்டோர் என 30800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உலக வானிலை அமைப்பு மற்றும் சுகாதார நிறுவனங்கள் பட்டியிலிட்டுள்ளன. மேலும் ஐரோப்பாவின் முக்கிய நதிகளான தான்யூப், ரைன் நதிகளின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. மின்சார உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிரீஸ், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ பரவி வருகிறது.
- பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) எனப்படும் நில அதிர்வு மண்டலங்களில் ஏற்பட்டுள்ள பூமியின் உள்ளடுக்கு தட்டுகளின் தீவிர நகர்வுகளால்2, கடந்த சில நாட்களில் மட்டும் ரிக்டர் அளவுகோலில் 7.5 வரை பல சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும் உலுக்கியுள்ளன. வெனிசுலாவில் 7.5 அளவுக்கு இரட்டை நிலநடுக்கத்தால் சுமார் 7000 மக்கள் உயிரிழந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்க முடியாமல் காணாமல் போயுள்ளனர். லட்சகணக்கான மக்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சம் கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புகள் சிதைந்துள்ளன. உலகளவில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக வெனிசுலா நிலநடுக்கம் மாறியுள்ளது. மேலும் தொடர்ச்சியான நிலநடுக்கங்களும் பதிவாகி வெனிசுலா மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கொலாம்பியாவில் 7.4 அளவுக்கு அந்நாடு இதுவரை சந்திக்காத அளவுக்கு அதிபயங்கர நிலநடுக்கத்தை ஏற்படுத்தி நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது. தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மெக்சிகோவில் 5.9 அளவுக்கும், ஜப்பானில் 5 முதல் 6 அளவுக்கும், இந்தோனேசியாவில் 5.1 அளவுக்கு இரட்டை நடுக்கமும், பெரு, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட 11 நாடுகளில் 5 ரிக்டர் அளவுக்கும் மேலான நிலநடுக்கங்கள் ஆகஸ்ட் 10 அன்று 24 மணி நேரத்துக்குள் மட்டும் பதிவாகியது. கடந்த ஒரு மாதங்களுக்குள்ளாகவே உலகின் பல்வேறு மூலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகி உலகை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
- இந்த கட்டுரை வெளியிடப்படும் ஒரு சில தினங்களுக்கு முன்பாகக் கூட, இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை உடைவால் உண்டான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு நேபாளத்தையே உருக்குலைத்துள்ளது. குடியிருப்புகள், நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டுமானங்கள் இருந்த சுவடே இல்லாமல் காணாமல் போய்விட்டன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கொன்று புதைத்துள்ளது இந்த பனிப்பாறைச் சுனாமி. இன்னும் உயிர்பலிகள் கூடுதலாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எல் நினோவினால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நேரடி தாக்கங்கள்
- இந்தியாவின் ஒட்டுமொத்த மழையளவில் சுமார் 70% தென்மேற்கு பருவமழை (ஜூன் - செப்டம்பர்) மூலமே கிடைக்கிறது. சூப்பர் எல் நினோவால், 2026-ல் இந்திய வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்து, பருவமழைப்பொழிவு வழக்கத்தை விட 35% சதவிகிதம் முதல் 40% சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
- கடுமையான வெப்ப அலைகள் - பருவமழை தவறியதால், கோடைக்காலம் முடிந்த பிறகும் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 4 °C - 5 °C அதிகமாகப் பதிவாகி வருகிறது. குறிப்பாக வடமேற்கு, மத்திய இந்தியா, கங்கை சமவெளி மற்றும் இந்தியாவின் ஏனைய அனைத்து உள் மாவட்டங்களிலும் மிக நீண்ட வறண்ட காலங்கள் (Dry Spells) நீடிக்கின்றன.
- ஆனால் ஒரு சில பகுதிகளில் மேகம் வெடித்து தரை இறங்குவது போல, பருவம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே இரவில் கொட்டித் தீர்த்து ஒட்டு மொத்த ஊரையும் புரட்டிப்போட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல மும்பையில் வரலாறு காணாத அளவுக்கு ஜூலை மாத துவக்கத்தில் ஒரே இரவில் பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. பத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய கேரள வயநாடு கோர சம்பவத்திற்குப் பிறகு, மீண்டும் அதே பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு அங்கும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மறுபுறம் அசாமிலோ வழக்கமான பருவமழையின் மொத்த அளவை விட 5மடங்கு அதிகமான மழை குறிப்பிட்ட ஓரிரு நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. இது மொத்த அசாம் மாநிலத்தையும் சிதைத்துள்ளது. அங்கு வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் குடியிருப்புகள் மனிதர்களோடு சரியும் காணொளிகளைப் பார்கும்போது நெஞ்சம் படபடக்கிறது. 100க்கும் மேற்பட்ட மனித உயிர்களையும் சுமார் 10000 கால்நடைகளின் உயிர்களையும் காவு வாங்கியுள்ளது அசாமை உலுக்கிய இந்த பேய் மழை. சுமார் 35000 குடியிருப்புகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் உலக வரைபடத்திலே இல்லாத அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டுள்ளன. 40000 ஏக்கர் விவசாய நிலங்களும் அதன் பயிர்களும் பாழடைந்துள்ளன. 25000 குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மக்கள் தங்களது உடமைகளை இழந்து வீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- இந்தியாவின் முக்கிய நதிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவில் 30% சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இது குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்குவதுடன், நீர்மின் உற்பத்தி அமைப்புகளையும் முடக்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தென்மேற்கு பருவமழை மிகுந்த ஏமாற்றமளித்துள்ளது. மேட்டூர் அணை வழக்கமாக ஆகஸ்ட் மாதங்களில் நிரம்பி வழியும். ஆனால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையளவு குறைந்ததால், தற்போது அதன் மொத்த கொள்ளளவில் 3ல் ஒரு பங்கைக் கூட எட்டவில்லை. தமிழ்நாட்டின் ஏனைய முக்கிய அணைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. இது டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடியைக் கடுமையாகப் பாதித்துள்ளது; ஏனைய மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறி வருகின்றன.
- இந்தியாவின் முக்கிய குறுவை பயிர்களான அரிசி, பருப்பு வகைகள், கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பு 12.5 மில்லியன் ஹெக்டேர் குறைந்துள்ளது. மகசூலும் கணிசமாகக் குறைந்துள்ளது. போதிய மழையில்லாததால் விவசாயிகள் நிலத்தடி நீரையே அதிகமாக நம்ப வேண்டியுள்ளது, இது நீர்மட்டத்தை மேலும் ஆழத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகவும் மாறியுள்ளது. விவசாயத்திற்கு மின்சார பற்றாக்குறை நிலவுவதால், நிலத்தடி நீரை உறிஞ்ச டீசல் பம்புகள் பயன்படுத்தி வருவதனால் பயிர் உற்பத்திச் செலவு 25% சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
- போதிய நீர் இன்றி நிலங்கள் வறண்டு பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து வந்துள்ள இழப்பீட்டுக் கோரிக்கைகளின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.28,000 கோடியைத் தாண்டியுள்ளது.

- மேய்ச்சல் நிலங்கள் வறண்டு, தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் பாதிக்கப்பட்டு பால் உற்பத்தி குறைந்து வருகிறது.
- உணவுப் பணவீக்கம் (Food Inflation) - வேளான் உற்பத்தி குறைவினால் உணவுப் பொருட்களின் வரத்து குறைந்துள்ளது. நுகர்வோர் விலை குறியீடு (CPI) அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் அதிகரித்து அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது கிராமப்புற பொருளாதாரத்தை நேரடியாகப் பாதித்து மக்களின் வாங்கும் திறனை மேலும் குறைத்துள்ளது.
- உணவுப் பணவீக்கம் 7.5% சதவிகிதத்தை தாண்டியதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Rate) 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது கடன்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் அதிகரித்துள்ளது.
- பாசுமதி அரிசி தவிர்த்த அனைத்து ரக அரிசி வகைகள், சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஏற்றுமதிக்கான தடைவிதிக்கப்பட்டுள்ளதால் விவசாய ஏற்றுமதி வருவாயில் 4.5 பில்லியன் டாலர் (சுமார் 40,000 கோடி ரூபாய்க்கும் மேல்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
- உணவு பொருட்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க, அவற்றை கூடுதலாக இறக்குமதி செய்ய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கூடுதலாக 2.1 பில்லியன் டாலர் அளவுக்கு செலவிட வேண்டியுள்ளது, இது நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகரித்துள்ளது.
- விவசாயத் துறையின் மந்தநிலை மற்றும் கிராமப்புற நுகர்வு சரிவு காரணமாக, இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மதிப்பிடப்பட்ட ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.8% சதவிகிதத்திலிருந்து 5.9% சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் கிராமங்கள் வருவாயில் 60% சதவிகிதம் விவசாயத்தை நம்பியே உள்ளன. சாகுபடி குறைவால் கிராமப்புற நுகர்வு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 14% சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. இது ஏனைய அனைத்து உற்பத்தி துறைகளையும் மேலும் கடுமையாகப் பாதித்து வருகிறது.
- படித்த இளைஞர்கள் கூட கிக்(Gig) உழைப்பாளர்களாக மாறியுள்ள இன்றைய காலகட்டத்தில், கடும் வெயில் அவர்களை வாட்டி வதைக்கிறது. மேலும் விவசாயிகள், கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர் உள்ளிட்ட இந்தியாவின் பிரதான உழைப்பு சக்திகள் அனைவரும் கடும் வெயிலினால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதோடு வேலை இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.
- கடும் வெயிலும், வறட்சியும், வெள்ளமும் மாறிமாறி மனித ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதித்து அவர்களை மேலும் நோயாளிகளாக்கி வருகின்றன.
- ஏரிகள், குளங்கள், ஈரநிலங்கள், மாங்குரோவ் காடுகள் மற்றும் சதுப்புநிலங்களை நம்பி வாழும் பறவைகள் உணவு, தண்ணீர், இனப்பெருக்க இடங்களை இழக்கும் அபாயம் நிலவுகிறது. அரிய உயிரினங்கள், மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- ஆற்றல் நெருக்கடி (Energy Crisis) - கடுமையான வெப்பம் காரணமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் குளிரூட்டும் சாதனங்களின் (AC & Fans) பயன்பாடு அதிகரித்து, மின்சாரத் தேவை 260 ஜிகா வாட் அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. நிலக்கரி மற்றும் பிற வெப்ப ஆற்றல் நிலையங்கள் கூடுதல் உற்பத்திக்கு தள்ளப்பட்டுள்ளன. இவை வெப்பமயமாதலை மேலும் அதிகரிக்கின்றன.
இந்த நிலை வரும் சில மாதங்களில் மேலும் அதிகரித்து இந்தியாவையே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலும் சுற்றுச்சூழல் நெருக்கடியிலும் சேர்த்து தள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வறட்சி, வெள்ளம், சுனாமி, காட்டுத் தீ, நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளும் கூட இந்தியாவை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக காலநிலை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.
உலகளாவிய சுகாதார அமைப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக "சூப்பர் எல்-நினோ"
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பன்னாட்டு மருத்துவ இதழான 'தி லான்செட்' (The Lancet) ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கைகள், எல்-நினோவினால் ஏற்படும் தீவிர வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான நோய்த்தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஆளாகி வருவதாகத் தெரிவிக்கின்றன.
- எல்-நினோவினால் ஏற்படும் திடீர் வெள்ளம் மற்றும் தேங்கி நிற்கும் நீர்நிலைகள், கொசுக்கள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா, ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைப் பல மடங்கு அதிகரித்துள்ளன.
- கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது குடிநீர் விநியோகக் குழாய்களில் கழிவுநீர் கலப்பதாலும், வறட்சி காலங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் போவதாலும் காலரா, டயாரியா, டைபாய்டு போன்ற நோய்த் தொற்றுகள் ஆப்பிரிக்காவிலும் பங்களாதேஷ், இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் இதுவரை இல்லாத வகையில் உச்சம் தொட்டுள்ளன.
- ஆப்பிரிக்காவில் மட்டும் 2கோடி குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வைட்டமின் மற்றும் புரதச் சத்துள்ள உணவுகள் கிடைக்காததால், மூன்றாம் உலக நாடுகளிலுள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி மோசமடைந்து, சாதாரணத் தொற்றுகளாலும்கூட உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
- தீவிர வெப்ப அலைகளால் ஹீட் ஸ்ட்ரோக், இதய செயலிழப்பு போன்ற நோய்களும் அதிகரித்து வருகின்றன
- காட்டுத் தீ போன்றவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட கடுமையான சுவாசக் கோளாறு நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- காட்டு விலங்குகளின் இடப்பெயர்வால் பரவும் வைரஸ் தொற்றுகளால் கொரோனாவை விட கொடிய கொள்ளை நோய்கள் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.
இவ்வாறு உலகை அச்சுறுத்தி வரும் "சூப்பர் எல்-நினோ" உலகளாவிய சுகாதார அமைப்பிற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
ஆனால் ஏகாதிபத்திய நிதிமூலதன சிறு கும்பல் தங்களின் சுரண்டலுக்காக இந்த பூகோளத்தையே அழித்து நாசமாக்கி வருகின்றன.
பூவுலகை நாசமாக்கும் ஏகாதிபத்திய சுரண்டல் கும்பல்
ஏகாதிபத்தியவாதிகள் மூலப் பொருள்களுக்காகவும், மனித உழைப்பை கொள்ளையடிப்பதற்காகவும் காலனிகளை கைப்பற்றுவதற்காகவும் நடத்தும் மறுபங்கீட்டுப் போட்டிதான் புவிப்பந்தை சீரழிப்பதில் பிரதான பாத்திரம் வகிக்கிறது. ஆரம்பத்தில் தங்க வேட்டைக்காக ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளையும் ஏன் அமெரிக்காவையும் கூட ஐரோப்பிய நாடுகள் சூறையாடின. அவை வரலாறு காணாத இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு காலனி நாடுகளின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் சிதைத்தன. தங்களின் மூலதனத்தை காலனிகளை கொள்ளையடித்து திரட்டின. தாது வருட பஞ்சம் உள்ளிட்ட தொடர் பஞ்சங்களால் மக்கள் உணவின்றியும் நீரின்றியும் கொத்துகொத்தாக செத்து மடிந்தனர். மேலும், இரண்டு உலகப்போர்களும் கோடிக் கணக்கான மக்களை கொன்று குவித்ததோடு மனித சமூகம் உருவாக்கி வைத்திருந்த இயற்கைப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளையும் தகர்த்து நாசமாக்கின. தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வியட்நாம் போர், கொரியப் போர் உள்ளிட்ட நாசகரப் போர்களால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, காடழிப்பு, பெட்ரோலியம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் சுரண்டல் அதிகரித்தது. அமெரிக்காவுக்கும் - ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான பனிப்போர் இந்த சுரண்டலை தீவிரப்படுத்தியது; புவி வெப்பமயமாதல் அதிகரிப்பை தூண்டியது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பும் 90களுக்கு முன்பும் உருவாக்கப்பட்டிருந்த முதலாளித்துவ சீர்திருத்தக் கொள்கைகளான சமூக நல அரசு கோட்பாடுகளும் 90களின் ஆரம்பத்தில் முழுமையாக கைவிடப்பட்டன. அமெரிக்கா தலைமையில் உலகம் முழுவதும் திணிக்கப்பட்ட உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் இயற்கை வளங்களை தங்குதடையின்றி சூறையாட அனுமதித்தன. அமெரிக்க-ஐரோப்பிய கார்ப்பரேட்கள் சுரண்டி கொழுக்க இந்த புவிக் கோளத்தை பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்கான கதவை காலனிநாடுகளின் அரசுகள் அகல திறந்தன. இது புவி வெப்பமடைவதற்கும் கணிக்கமுடியாத காலநிலை மாற்றங்களுக்கும் இட்டுச் சென்றது. இதன் பின் புயல், வெள்ளம், வறட்சி, சுனாமி போன்ற பேரழிவுகள் தொடர் நிகழ்வுகளாகி உலக மக்களையே அச்சுறுத்தி வருகின்றன.
2008ம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை இன்னும் மோசமடைந்துள்ளது. ஷாங்காய் ஏகாதிபத்தியங்களின் (சீனா -ரஷ்யா) வருகையால் மறுபங்கீட்டுப் போட்டி தீவிரமடைந்து உலகளாவிய சுரண்டலும் ஆதிதிரட்டல் வடிவிலான கொள்ளைகளும் அதிகரித்துள்ளன. நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் உதவியுடன் அனைத்து காலனி நாடுகளிலும் உள்ள இயற்கை வளங்கள் பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் கண்டறியப்படுகின்றன. மனித நடமாட்டமே இல்லாத ஆழ்கடல் பகுதியில் இருந்தாலும் சரி, ஆர்டிக் - அண்டார்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் இருந்தாலும் சரி அவை கண்டறியப்பட்டு அமெரிக்க -ஷாங்காய் நிதியாதிக்க கும்பலால் சுரண்டப்பட்டு வருகின்றன. இதற்காக அவை அங்குள்ள இயற்கையான பாதுகாப்பு அரண்களை சீரழித்தும் பருவநிலை சுழற்சியை சிதைத்தும் நாசமாக்கி வருகின்றன. உக்ரைன், பாலஸ்தீனம் மற்றும் ஈரான் மீதான ஏகாதிபத்தியப் போர்களால் 270 மில்லியன் டன் அளவிற்கும் மேலாக கார்பன் டை ஆக்சைடு வெளியேறி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எல் - நினோ பாதிப்புக்கு காரணமான வர்த்தகக் காற்று (Trade wind)3 பலவீனமடைவதற்கு கார்பன் உமிழ்வும் முக்கியமானதொரு காரணமாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. போதாக்குறைக்கு வளிமண்டலத்தையே செயற்கைக்கோள் மண்டலங்களாக மாற்றி வருகின்றன. இவை இந்த பூவுலகை அதன் இயற்கையான இயக்கத்திலிருந்து பலவீனப்படுத்துகின்றன. அமெரிக்கா - சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட்டுகள் பூமியை நாசமாக்கியதோடு நிற்காமல் விண்வெளியை நாசமாக்கும் முயற்சிகளிலும் ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.
ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (ஏஐ), கிளவுட் கம்ப்யூட்டிங், கிரிப்டோகரன்சி, 5ஜி, 6ஜி உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால் உலகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு அத்தியாவசியமான அருமண் தனிமங்கள் முதல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அனைத்து கனிம வளங்களும் இயற்கையை சிதைத்து அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்குத் தேவையான சிப், செமி கண்டக்டர் உள்ளிட்ட பாகங்களின் உற்பத்தியும் அதன் கழிவுகளும் அதற்கான தொழிற்சாலைகளும் மூன்றாம் உலக நாடுகளின் உழைக்கும் மக்களின் தலையில் சுமத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் இந்த நவீன உற்பத்திகளுக்கான உற்பத்தி சக்திகளும் அவர்கள்தான்; இதனால் உற்பத்தியாகும் பொருட்களின் சந்தை நுகர்வோரும் அவர்கள்தான்; இதனால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளால் பெரிதும் பாதிக்கப்படுவதும் அவர்கள்தான். ஆனால் கொள்ளை லாபம் மட்டும் இந்த ஏகாதிபத்திய சிறுகும்பல்களுக்கு!. இது பொருளாதார சமமின்மையை மட்டும் அதிகரிக்கவில்லை. இயற்கையின் சமமின்மையையும் தூண்டி உலகை ஆட்டிப் படைக்கிறது.
குவாட், ஜி20, ஜி7, பிரிக்ஸ் என ஓவ்வொரு கூட்டமைப்பு மாநாடுகளிலும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது என்பது முக்கிய பொருளாக பேசப்பட்டாலும், இந்த ஏகாதிபத்தியவாதிகள் போடும் திட்டங்கள் புவி வெப்பமயமாதலை தணிப்பதற்கு மாறாக அதனை அதிகரிக்கவே செய்கின்றன என்பதையே தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத எல்-நினோ வெப்ப அலை சாட்சியம் கூறுகிறது.
புவி வெப்பமயமாதலை தணிக்க அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு மாறுவதாக இந்த கூட்டமைப்புகள் திட்டங்கள் வகுக்கின்றன. ஆனால் இத்தகைய திட்டங்கள் பசுமை எனும் பெயரில் உலகின் பசுமையை நாசமாக்கியே வருகின்றன. பசுமை ஆற்றல் திட்டத்தின் பெயரில் உருவாக்கப்படும் மின்சார வாகனங்கள் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வரை அனைத்தும் இயற்கையான காடுகளை அழித்து கனிமவளங்களை சுரண்டியே உருவாக்கப்படுகின்றன. கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது எனும் பெயரில் கார்பனை உறிஞ்சி ஆக்சிஜனின் தொழிற்சாலையாக செயல்படும் காடுகளை அழிப்பதுதான் பசுமைமயமாக்கலா? இல்லை இது வெப்பமயமாக்கலே!!
நவீன தொழில்நுட்பங்களுக்கு அத்தியாவசியமான டேட்டா சென்டர்கள் புவிவெப்பமயமாதலுக்கு எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது என்பதை எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.
புவி வெப்பமயமாதலில் டேட்டா சென்டர்களின் பங்கு
இந்த டிஜிட்டல் உலகில், நாம் பார்க்கும் - தேடும் - பயன்படுத்தும் அனைத்து தரவுகளும் மிகப் பெரிய கணினி மையத்தில் சேமிக்கப்பட்டும் செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. இந்த மையங்களே டேட்டா சென்டர்கள் (Data Centers) எனப்படும். இந்த 'டிஜிட்டல் உள்கட்டமைப்பே', தற்போது புவி வெப்பமயமாதலை வேகப்படுத்தும் முக்கியதொரு காரணியாக உருவெடுத்துள்ளது.
டேட்டா சென்டர்கள் 24 மணி நேரமும் இடைவிடாது இயங்கவேண்டியுள்ளதால், அதற்கு ஆற்றல் அதிகளவில் தேவைப்படுகிறது. சர்வதேச ஆற்றல் முகமையின் தரவுகளின்படி, டேட்டா சென்டர்கள் உலகளாவிய மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 2% சதவிகிதம் வரை நுகர்கின்றன. சாதாரண கூகுள் தேடலை விட, ஏஐ மூலமான தேடலுக்கு 10 மடங்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 4லட்சத்து 60ஆயிரம் கோடி யூனிட் மின்சாரத்தை இந்த டேட்டா சென்டர்கள் பயன்படுத்தியுள்ளன. இந்தாண்டுக்குள் ஏஐ-க்கான மின்சாரத் தேவை மட்டுமே 3 மடங்குக்கும் மேல் அதிகரிக்கும் என அந்த முகமை மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்படும் ராட்சத ஏர் கண்டிஷனர்கள், குளிரூட்டி அமைப்புகள், சர்வர்கள் போன்றவை வெளியிடும் வெப்பம் அப்படியே வளிமண்டலத்திற்குள் தள்ளப்படுகின்றன. இவை அப்பகுதிகளை வெப்ப மண்டலமாகவே மாற்றுகின்றன. ஒரு டேட்டா சென்டரின் குளிரூட்டிகளுக்காக மட்டும் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் குடிநீர்் நுகரப்படுகிறது. வறண்ட பகுதிகளில் அமைக்கப்படும் டேட்டா சென்டர்களால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. உலகளவில் பல டிரில்லியன் லிட்டர் கணக்கில் குடிநீரை இந்த டேட்டா சென்டர்கள் கபளீகரம் செய்கின்றன. அதாவது 130 கோடி மக்களின் அன்றாட நீர் தேவைக்கு இணையான நீரினை இந்த டேட்டா சென்டர்கள் தினந்தோறும் உறிஞ்சி வருகின்றன. மேலும் இந்த டேட்டா சென்டர்களில் இருந்து பயனற்று வெளிவரும் நச்சுத்தன்மை வாய்ந்த மின்னணு கழிவுகளும் மலைபோல குவிந்துவருகின்றன அதே போல, கார்பன் உமிழ்வில் டேட்டா சென்டர்களின் பங்கு மட்டும் 2.5% சதவிகிதம் வரை உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 8 கோடி மெட்ரிக் டன் அளவு கார்பனை டேட்டா சென்டர்கள் உமிழ்ந்துள்ளன. இது ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறை ஏற்படுத்தும் அல்லது நியூயார்க் போன்ற பெருநகரம் ஒட்டுமொத்தமாக வெளியிடும் கார்பன் உமிழ்வை விட அதிகமானது. இவை மட்டுமில்லாமல் இவற்றுக்கு தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது வெளிப்படும் கார்பன் உமிழ்வையும் கணக்கில் கொண்டால் புவி வெப்பமயமாதலில் இந்த டேட்டா சென்டர்களின் பங்கு முதன்மையானது என நாம் புரிந்து கொள்ள முடியும்.
2026 ல் மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கார்பன் உமிழ்வு 25% சதவிகிதம் அதிகரித்துள்ளது. கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களினால் ஏற்படும் கார்பன் உமிழ்வு 30% சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு நிதிமூலதனக் கும்பல் எவ்வித பொறுப்பும் ஏற்றுக் கொள்ளாமல் அதை காலனி நாடுகளின் மீதே சுமத்துகின்றன. புவிவெப்பமயமாதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்ற கியோட்டோ மாநாட்டின் தீர்மானங்களை அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் ஏற்கெனவே குப்பையில் தூக்கியெறிந்துவிட்டன.
1997ம் ஆண்டின் கியாட்டோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கான செலவுகளை - அதாவது பருவநிலை மாற்றத்துக்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக வெளியிட்டு வரும் அமெரிக்கா உள்ளிட்ட செல்வந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும். வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் அல்ல என்ற அடிப்படையான விஷயம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2015ம் ஆண்டின் பாரீஸ் மாநாட்டில் பசுமைக்குடில் வாயுக்களால் பாதிக்கப்படும் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் மற்றும் தீவு நாடுகளில் ஏற்படும் பேரழிவுகளுக்கும், பெரும் நாசங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகள் பொறுப்பேற்று இழப்பீடு வழங்கவேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டது. அத்துடன் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியிடுவதை தடுப்பதற்காக ஏழை நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அந்நாடுகளின் தலையில் 100 பில்லியன் டாலர் கூடுதல் கடன் சுமைகளை ஏற்றிவிட்டன.
குவாட், ஜி7, ஜி20 மாநாடுகளின் மூலம் புவி வெப்பமயமாவதற்கும் பருவநிலை மாற்றத்துக்கும் எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தேனொழுகப் பேசி, அதற்கான சுமைகள் அனைத்தையும் காலனிய வளரும்-ஏழை நாடுகள் தலையில் கட்டிவிட்டன. மேலும் புதிய புதிய கூட்டமைப்புகள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் காலனிய நாடுகளை புதிய காலனிய ஆதிக்கத்தின் பிடியில் இறுக்கி வருகின்றன. இவை மேலும் காலனிய நாடுகளை சுரண்டி புவி வெப்பமயமாதலையும் இயற்கைப் பேரழிவுகளையும் விரைவுபடுத்தி வருகின்றன. காலனிய நாடுகளின் அரசுகளோ தங்களின் ஆளும் வர்க்க நலன்களிலிருந்து இதை எதிர்த்துப் போராடாமல் தங்கள் நாட்டை காவு கொடுத்து வருகின்றன. பாஜக தலைமையிலான மோடி அரசும் இந்தியாவை அமெரிக்காவின் சுரண்டலுக்கு தாரை வார்த்து வருகிறது.
இந்தியாவை கார்ப்பரேட்களின் கொள்ளைக் காடாக மாற்றுவதில் போட்டிப் போடும் மத்திய - மாநில அரசுகள்
புதிய காலனிய தாசர்களான காங்கிரசு - பாஜக இரு கட்சிகளுமே நாட்டை மாறி மாறி ஆண்டு அமெரிக்காவின் காலடியில் கிடத்தின. டாட்டா, பிர்லா, கோயங்கோ போன்ற முந்தைய தலைமுறை முதலாளிகளுக்காகவும் அம்பானி, அதானி, டாட்டா, வேதாந்தா, மஹிந்த்ரா போன்ற தற்போதைய பெரும் முதலாளிகளுக்காகவும் நாட்டைக் கூறுபோட்டு விற்றன; விற்று வருகின்றன. 12 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்டு வரும் மோடி அரசோ முந்தைய ஆட்சியாளர்களை விட வேகமாக பொருளாதாரத்தை மையப்படுத்தி கார்ப்பரேட்களிடம் தாரை வார்த்து வருகிறது. நாட்டின் வளங்களையும் இயற்கையையும் பேணிக் காக்கும் கட்டமைப்பு மற்றும் மராமத்து திட்டங்களுக்கு துளியும் நிதி ஒதுக்காமல் பட்ஜெட்டில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை கார்ப்பரேட் நலன்களுக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும், அதற்காக உலக வங்கியில் வாங்கிய அநியாய அந்நிய கடன்களுக்காகவுமே ஒதுக்குகின்றது. போதாக்குறைக்கு அமெரிக்காவின் தெற்காசிய அடியாள்படையாக இந்திய இராணுவத்தை மாற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலான திட்ட செலவினங்களுக்கு 15% சதவிகிதத்திற்கும் மேல் ஒதுக்கி வருகின்றது. இயற்கைப் பாதுகாப்பு - மக்கள் நலன் - தேச இறையாண்மை என்பதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு அமெரிக்க எஜமானனுக்கும் - பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கும் இந்திய மக்களின் குருதியால் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது பாசிச மோடி அரசு.
காஷ்மீரின் லித்தியம் படிமங்கள் உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளையடிக்க, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரிகளையும் காஷ்மீரையும் கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது. மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வனங்களையும், குரோமைட் உள்ளிட்ட படிமங்களுக்காக பலியிட்டு வருகிறது. இதற்காக குக்கி உள்ளிட்ட பழங்குடி இன மக்களின் இரத்தம் குடித்து வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் 13 ஆயிரம் ஹெக்டேர் பெரு வனத்தை - மழைக் காட்டை அழிக்கும் வகையில் 'கிரேட் நிக்கோபார்' திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. கார்பன் உமிழ்வில் 'நெட் ஜீரோ 2070' இலக்கு என்று கதையளந்த மோடி அரசு, அமெரிக்கா-அதானிக்காக நிலக்கரி உற்பத்தி இலக்கை 1 பில்லியன் டன்னாக உயர்த்தி கார்பன் உமிழ்வை அதிகரித்துள்ளது. மேலும் இமயமலை தொடங்கி, ஆரவல்லி மலைத் தொடர் முதல் மேற்கு தொடர்ச்சி மலை வரை அனைத்தையும் கார்ப்பரேட்களின் கொள்ளைக் கூடாரமாக மாற்றி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நிலப்பரப்பு மற்றும் கடல்பரப்பில் கொட்டிக் கிடக்கும் நாட்டின் அனைத்து வளங்களையும் பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்கள் தங்குதடையின்றி சூறையாட அனைத்து சட்டங்களையும் பாசிச முறையில் திருத்தி வருகிறது. தடையாக இருந்த முந்தைய சரத்துகள் அனைத்தையும் நீக்கிவிட்டு புதிய சட்டங்களையும் சரத்துகளையும் கேள்விகேட்பாரின்றி திணித்து வருகிறது.
வனச் சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம், நில கையகப்படுத்தும் சட்டம், கனிம வளங்கள் சட்டம், விவசாய சட்டம் என பல பாசிச சட்டங்கள் மூலமும் - திருத்தங்கள் மூலமும் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதை சட்டபூர்வமாக்கியுள்ளது. எதிர்த்துப் போராடும் பழங்குடிகளை மாவோயிஸ்ட் முத்திரை குத்தி வேட்டையாடி வருகிறது. அவர்களை இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி அப்பகுதிகளுக்கு "ரெட் காரிடார்" என பெயரிடுகிறது இந்த கார்ப்பரேட் வேட்டைநாய் மோடி அரசு.
மேலும் இந்தியாவின் விவசாயத்தையும் விவசாயிகளையும் மொத்தமாக ஒழித்துக் கட்டும் வகையில் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு மின்சார சட்டம், விதை மசோதா, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்து விவசாயத் தொழிலை விவசாயிகளுக்கு பாரமாக மாற்றியுள்ளது. கூடவே தற்போது எல்-நினோ கடும் வறட்சியும் சேர்ந்து கொண்டது. விவசாய நிலங்கள்தான் இந்திய மக்களின் உயிர் ஆதாரம் என்ற நிலை மாறி அது இன்று விவசாயிகளின் மயானங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
"ஒரு மாவட்டம் ஒரு பொருள் உற்பத்தி (One District One product)" எனும் திட்டத்தை மேக் இன் இந்தியா திட்டத்தின் பகுதியாக செயல்படுத்த துவங்கியுள்ளது மோடி அரசு. பன்னாட்டு கார்ப்பரேட்களின் உற்பத்திக் கூடமாக இந்தியாவை மாற்றும் - மேக் இன் இந்தியா ஃபார் அமெரிக்கா திட்டம்தான் இது என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தொழிற்துறை உற்பத்தியை ஒன்றுகுவிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் மிச்ச மீதமீதமிருக்கும் நாட்டின் சிறுகுறு தொழில்களை முற்றாக ஒழித்துக் கட்டிவிடும். ஒன்றுகுவிக்கப்படும் இந்த உற்பத்தி முறை மனிதனின் பன்முக ஆற்றலையும் சீர்குலைத்து அவனை வெறும் உற்பத்தி கருவி அளவுக்கு சிதைத்து விடும். இது இயற்கையின் சமநிலை சீர்குலைவையும் துரிதப்படுத்தக் கூடும்.
ஆட்சியிலிருந்த இரு திராவிட கட்சிகளுமே பாஜக அரசின் - கார்ப்பரேட்களின் எடுபிடிகளாகவே செயல்பட்டன. அதிமுக அரசு பாஜக அரசுடன் கூட்டுச் சேர்ந்து வேதாந்தாவுக்கும் ஜிண்டால் குழுமத்துக்கும் சேவை செய்தது. எட்டுவழிச் சாலை திட்டங்கள் மூலம் ஜவ்வாது, கல்வராயன், சேர்வராயன் உள்ளிட்ட கிழக்கு மலைத்தொடர் மலைகளையும் வளங்களையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்க முயன்றது. அடுத்து வந்த திமுக அரசோ பாஜக எதிர்ப்பு நாடகமாடிக் கொண்டே முந்தைய அரசை விட வேகமாக கார்ப்பரேட் சேவை செய்தது. குவாட், கதிசக்தி உள்ளிட்ட பன்னாட்டு - உள்நாட்டு மோடி அரசின் திட்டங்களுக்கு உட்பட்டு தமிழகத்தை அவற்றின் உற்பத்திக் கூடாரமாகவும் கொள்ளையடிப்பதற்கான மண்டலமாகவும் மாற்றியது. நாம் மேலே பார்த்த அபாயம் வாய்ந்த டேட்டா சென்டர்களின் ஹப்பாக - தெற்காசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மையமாக (Digital Hub) சென்னையை மாற்றுவதற்கான திட்டங்களை கொண்டு வந்தது. அதற்காக தமிழ்நாடு டேட்டா சென்டர் கொள்கையையும் (Tamilnadu Data center Policy) கொண்டு வந்தது திமுக அரசு. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் டிஜிட்டல் ரியாலிட்டி நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து டிஜிட்டல் கனெக்சன் என்ற பெயரில் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்களை சென்னையின் அம்பத்தூரிலும் சிறுசேரியிலும் நிறுவியது. ஏற்கெனவே வெள்ளம், வறட்சி, சுனாமி போன்ற பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதி மக்களை இவை மேலும் கொடிய பேரழிவுகளுக்குள் தள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கார்ப்பரேட்களின் நலன்களுக்காக தமிழ்நாட்டிலும் விவசாயிகளையும், மலைவாழ் மக்களையும், பழங்குடிகளையும் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து தமிழக அரசுகள் விரட்டியடித்து வருகின்றன. சென்ற திமுக ஆட்சியில் பரந்தூர் பகுதியில் இருந்தும், மாஞ்சோலை கிராமங்களில் இருந்தும் மக்களை விரட்டியடித்தது மு.க.ஸ்டாலின் அரசு. பரந்தூர் விவசாயிகளின் காவலனாக காட்டிக் கொண்டார் விஜய். ஆனால், மேகமலை கிராமங்களில் இருந்து பழங்குடிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் விரட்டியடிக்கும் பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோகிறது தவெக அரசு. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை எனும் மொழியை நிரூபணம் செய்து வருகிறது. ஆட்சியைப் பிடித்த சிறிது காலத்திலேயே தானும் கார்ப்பரேட் சேவகன்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை புகுத்தி வருகிறார். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் முழுவதும் கார்ப்பரேட் நலனிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், முந்தைய ஆட்சிகளைவிட தனியார்மயத்தை தீவிரமாக நடைமுறைத்தும் அச்சத்தையும் விஜய் ஆட்சி உருவாக்கியுள்ளது.
தமிழக விவசாய நிலங்கள் கொத்துயிரும் கொலையுயிருமாக கிடக்கும் அவல நிலையில், கருநாடக காங்கிரசு அரசு காவிரி நீரை தர மறுத்து தமிழக விவசாயிகளை பேரிடியில் ஆழ்த்தியுள்ளது. இந்த போக்குக்கு ஆண்ட திராவிட கட்சிகளே முழுமுதற் காரணம் என்பதை மூடிமறைக்கின்றன. எதிர்கட்சியாக அமர்ந்துள்ள திமுகவும் - உதயநிதியும் கொஞ்சம்கூட பொறுப்பற்று அருவறுப்பான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. தவெக அரசும் திரளான போராட்டங்களை முன்னெடுக்காமல் கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவகிறது. எல்-நினோவை கண்காணிக்க நிபுணர் குழுவை ஏற்பாடு செய்திருப்பினும், இந்த பட்ஜெட்டில் தமிழக நீர்நிலை ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலோ அல்லது புதிய தடுப்பணைகளை உருவாக்குவதற்கான குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடோ துளியும் இல்லை. குறைந்த பட்சம் பெருநகர சென்னையை வெள்ளம் போன்ற இயற்கை அபாயங்களில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாடும் துளி கூட இல்லை. மாறாக, சேலம் நகர குடிநீர் விநியோகத்தை சூயஸ் கார்ப்பரேட்களிடம் ஒப்படைத்துள்ளது. இயற்கையை மேலும் சீரழிக்கும் வகையில் சிங்கார சென்னை, ஏஐ சிட்டி போன்ற கார்ப்பரேட் நலத்திட்டங்களுக்கே முன்னுரிமை அளித்துள்ளது இந்த "வெற்றி வறட்சி மாடல்" தவெக அரசு.
இவ்வாறு ஆளும் ஆண்ட மத்திய - மாநில அரசுகளும் கட்சிகளும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்காக இந்திய துணைக் கண்டத்தையும் தமிழகத்தையும் சீரழித்து உலக வெப்பமயமாதலின் விளைவுகளுக்கு காரணியாகவும் பலிகடாவாகவும் மாற்றி வருகின்றன.
எல்-நினோ போன்ற பேரழிவுகளில் இருந்து உலகை காக்க போராடுவோம்
எல்-நினோ போன்ற புவி வெப்பமயமாதலின் விளைவுகளால் ஏற்படும் வெள்ளம் உள்ளிட்ட பேரழிவில் இருந்து உலக மக்களை காக்க எந்த "நோவா பேழை"யும் வரப் போவதில்லை. ஏனெனில் இது ஊழிப் பெரு வெள்ளம் போன்ற காலனியாதிக்கவாதிகளின் கட்டுக்கதையல்ல; இது உலகை உண்மையில் அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாகும். இதற்கு முழுமுதற்காரணம் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலே!. அவர்களை வீழ்த்தாமல் பேரழிவற்ற புதிய உலகைப் படைக்க முடியாது.
ஏகாதிபத்திய நலன்களிலிருந்து மையப்படுத்தப்பட்ட அரசியல் - பொருளாதாரம் - உற்பத்தி முறை அனைத்தும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிப்பதே ஆகும். சோவியத் வடிவிலான கூட்டுறவு உற்பத்தி முறையும் - சுயசார்பு பொருளாதார வளர்ச்சியுமே மக்களையும் இயற்கையையும் பேணி பாதுகாக்கும். இது ரஷ்யாவிலும், சீனாவிலும் சோசலிச ஆட்சி காலத்தில் சாத்தியமானதை வரலாறு எடுத்துக் காட்டியது. சீனாவின் பெருந்துயரம் என கருதப்பட்ட
மஞ்சள் நதியின் ஆவேசத்தையே கட்டுப்படுத்தி அதை மக்களுக்கும் இயற்கைக்கும் மிகவும் பயனுள்ள ஒன்றாக மாற்றியமைத்தது செஞ்சீனம்.
கார்ப்பரேட் நலன்களுக்கான மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையை ஒழித்துக்கட்டி சுதேசிய உற்பத்தி முறையை வளர்த்தெடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் காடழிப்பு, கனிமவள சுரண்டல், விவசாய, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக திரண்டு போராட வேண்டும். இக்கொள்கைகளை உருவாக்கி கொடுக்கும் காட்ஸ், உலக வர்த்தக கழக ஒப்பந்தங்களை கிழித்தெறிய வேண்டும். நதிநீர் இணைப்பு, நீர் ஆதாரங்களை உருவாக்கி மராமத்து செய்தல், இயற்கையோடு இசைந்த நவீன தொழில்நுட்பங்களை விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உருவாக்குதல் போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை நிர்பந்திக்க வேண்டும். இவையே இயற்கை பேரழிவுகளை தடுக்கும் அல்லது அதிலிருந்து மக்களையும் ஏனைய உயிர்களையும் பாதுகாக்கும்.
ஆனால் இவற்றை தரகுமுதலாளித்துவ கும்பல்களின் சேவகர்களான ஆளும் மத்திய - மாநில அரசுகள் செய்யாது. மக்கள் ஜனநாயகக் குடியரசே நிறைவேற்றும். அவ்வகையான அரசை நிறுவ அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.
பின் இணைப்பு - குறிப்புகள்
1. எல் நினோவும் உலக வானிலையை மாற்றியமைக்கும் பசிபிக் பெருங்கடல் சுழற்சியும்
'எல் நினோ' (El Nino) என்பது ஸ்பானிஷ் மொழியில் "குழந்தை இயேசு" (The Little Boy) என்று பொருள்படும். 1600-களில் தென் அமெரிக்காவின் பெரு (Peru) நாட்டு மீனவர்கள், கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் பசிபிக் கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைவதை முதன்முதலில் கவனித்து இப்பெயரிட்டுள்ளனர். அதுவே வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியடைவதை தற்போது "லா நினா" (The Little Girl) என அழைக்கின்றனர்.
அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, இது ENSO (El Nino-Southern Oscillation) சுழற்சியின் ஓர் அங்கமாகும். இது பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையிலும், அதன் மேல் உள்ள வளிமண்டலக் காற்றின் அழுத்தத்திலும் ஏற்படும் மிகப்பெரிய உலகளாவிய மாற்றத்தைக் குறிக்கிறது.
எல் நினோவைப் புரிந்துகொள்ள, முதலில் பசிபிக் கடலில் நிலவும் இயல்பான நிலை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக, பூமியின் சுழற்சி காரணமாக பசிபிக் பெருங்கடலின் புவிநடுக்கோட்டுப் பகுதியில் பலமான "வர்த்தகக் காற்றுகள்" (Trade Winds) கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி - அதாவது தென் அமெரிக்காவிலிருந்து ஆசியா/ஆஸ்திரேலியா நோக்கி வீசுகின்றன. இந்த பலத்த காற்றானது, பசிபிக் கடலின் மேல்மட்டத்தில் வெப்பமடைந்த வெதுவெதுப்பான நீரை இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியப் பகுதிகளை நோக்கித் தள்ளுகிறது. இதனால் மேற்கு பசிபிக் பகுதியில் கடல் மட்டம் சற்றே உயர்ந்து, நீர் வெப்பமாக இருக்கும். அதே நேரத்தில், தென் அமெரிக்காவின் (பெரு) கடற்கரைப் பகுதியில் மேல்மட்ட வெதுவெதுப்பான நீர் நகர்வதால், கீழே உள்ள குளிர்ந்த, தாதுக்கள் நிறைந்த ஆழ்கடல் நீர் மேலே எழும்புகிறது. இதற்கு 'அப்வெல்லிங் (Upwelling)' என்று பெயர். இதனால் பெரு நாட்டில் மீன் வளம் பெருகும். ஆசியாவில் நல்ல மழை பொழியும். இதுதான் பசிபிக் பெருங்கடலில் நிலவும் இயல்பான பருவநிலை நிகழ்வாகும்.
ஆனால், எல் நினோ காலத்தில் இந்த முழு சுழற்சியும் தலைகீழாக மாறுகிறது. கார்பன் உமிழ்வு, புவி வெப்பமடைதல் போன்ற சில காரணங்களால் (இன்னும் முழுமையான காரணங்கள் பற்றி விஞ்ஞானிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்) வளிமண்டல அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் வர்த்தகக் காற்றுகள் திடீரென பலவீனமடைகின்றன. சில நேரங்களில் இவை எதிர் திசையிலும் (மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி) வீசக் கூடும். இதனால், பசிபிக் மத்திய பகுதிகளின் சூடான நீரை மேற்கு நோக்கித் தள்ள முடியாமல் கடலின் மேற்காற்று பலவீனடைகிறது, மேலும் ஆசியா/இந்தோனேசியா கடல்பகுதிகளில் குவிந்திருக்கும் மாபெரும் வெப்ப நீர் அடுக்கு, ஈர்ப்பு விசையினாலும் காற்றின் திசையினாலும் மெதுவாக கிழக்கு நோக்கி (தென் அமெரிக்காவை நோக்கி) நகரத் தொடங்குகிறது. இதனால், பெரு நாட்டு கடற்கரையில் குளிர்ந்த நீர் மேலேறுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கு கடல் நீர் மேலும் கடுமையான வெப்பமடைகிறது. கடல் நீர் வெப்பமடையும் இடம் மாறுவதால், அதன் மேல் எழும்பும் மேகங்கள் மற்றும் காற்றழுத்த மண்டலங்களும் இடம் மாறுகின்றன. வழக்கமாக ஆசியா குறிப்பாக இந்திய துணைக்கண்டம் / இந்தோனேசியாவில் உருவாக வேண்டிய குறைந்த காற்றழுத்த மண்டலமும் மழை மேகங்களும், பசிபிக் கடலின் மையப் பகுதி மற்றும் தென் அமெரிக்காவை நோக்கி நகர்கின்றன. வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் அதிவேகமாக வீசும் "ஜெட் ஸ்ட்ரீம் (Jet Stream)" காற்றின் பாதையும் கூட மாறுபடுகிறது. இது உலகெங்கும் உள்ள பருவமழைக் காற்றுகளை திசைதிருப்புகிறது. தொடர்ந்து எல் நினோ தீவிரமடையும் போது, அது உலகை இரண்டு வெவ்வேறு தீவிர நிலைகளுக்குள் தள்ளுகிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இது தென்மேற்கு பருவமழை மேகங்களை பலவீனப்படுத்தி கடுமையான வறட்சியை ஏற்படுத்துகிறது. தென் அமெரிக்காவின் பெரு, ஈக்வடார் மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் எல் நினோ காலத்தில் கொட்டித்தீர்க்கும் மழையால் பேரிடர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
சுருக்கமாகக் கூறின், எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் காற்றுக்கும் கடலுக்கும் இடையே நடக்கும் ஒரு 'வெப்பப் பரிமாற்றப் போர்' ஆகும். இது ஒரு குறிப்பிட்ட நாட்டின் வானிலை நிகழ்வு அல்ல; ஒட்டுமொத்த பூமியின் வெப்பச் சமநிலையைக் குலைக்கும் உலகளாவிய மாற்றமாகும். ஏகாதிபத்திய சுரண்டல் கொள்கைகள், காடழிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதல், இந்த எல் நினோ நிகழ்வுகளை முன்பை விட அதிக தீவிரமும் ஆபத்தும் நிறைந்ததாக மாற்றிக் கொண்டிருக்கிறது என அறிவியல் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
2. புவி வெப்பமயமாதல் பூமி தட்டுகளின் கட்டமைப்புகளில் உண்டாக்கும் மாற்றங்களும் பசிபிக் நெருப்பு வளையமும்
புவி வெப்பமயமாதல் (Global Warming) வளிமண்டலத்தையும் கடல்களையும் மட்டுமே பாதிக்கிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், தற்போதைய நவீன புவி-அறிவியல் (Geoscience) ஆய்வுகள், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிர காலநிலை மாற்றங்கள் பூமியின் ஆழமான உட்பகுதியில் உள்ள பூமி தட்டுகளில் (Tectonic Plates) அபாயகரமான அழுத்த மாறுபாடுகளை ஏற்படுத்தி வருவதை உறுதிப்படுத்தியுள்ளன.
கிரீன்லாந்து, அண்டார்டிகா மற்றும் இமயமலைப் பகுதிகளில் உள்ள பல பில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறைகள் புவி வெப்பமயமாதலால் வேகமாக உருகி வருகின்றன. பல கிலோ மீட்டர் தடிமனுள்ள பனிப்பாறைகள் உருகும்போது, அதன் கீழ் உள்ள பூமி தட்டுகள் மீதான மாபெரும் எடையில் இழப்பு ஏற்படுகிறது. எடை குறைந்தவுடன், அமுங்கியிருந்த பூமி தட்டுகள் மெதுவாக மேல்நோக்கி எழும்புகின்றன. இந்த திடீர் செங்குத்து இயக்கம், பூமி தட்டுகளில் உள்ள பலவீனமான பகுதிகளில் கடுமையான விரிசல்களையும் - நெரிசல்களையும் உருவாக்குகிறது.
இதன் காரணமாக, பனிப்பாறைகளுக்கு அடியில் உறங்கும் எரிமலைகள் வெடிக்கக் கூடும். கடுமையான நிலநடுக்கங்கள் உருவாகும். பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால், உலகளாவிய கடல் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கோடிக்கணக்கான டன் கூடுதல் தண்ணீர் கடலில் சேர்வதால், கடலுக்கு அடியில் உள்ள பூமி தட்டுகள் (Oceanic Plates) மீதான கீழ்நோக்கிய அழுத்தம் பன்மடங்கு அதிகரிக்கிறது. நிலப்பரப்பில் உள்ள தட்டுகளின் எடை குறையும் போது, கடலடி தட்டுகளின் எடை அதிகரிக்கிறது. இந்த இருவேறு மாறுபட்ட அழுத்தங்கள், பூமி தட்டுகள் ஒன்றோடொன்று மோதும் எல்லைகளில் (Subduction Zones) பெரிய அளவிலான உராய்வையும் சமநிலையின்மையையும் தோற்றுவிக்கின்றன. பூமி தட்டுகளின் சமநிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் நிலநடுக்கங்களின் அதிர்வெண்ணை (Frequency) அதிகரிக்கின்றன.
மேலும், வளிமண்டல வெப்பத்தால் நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சப்படுவதும், வறட்சியால் நீர்நிலைகள் வற்றுவதும் நிலப்பரப்பு தட்டுகளின் எடையில் நுட்பமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பூமி தட்டுகளின் நெரிசலான பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் அழுத்தம் (Tectonic Stress), இந்த மாற்றங்களால் மிக எளிதாகத் தூண்டப்பட்டு, ரிக்டர் அளவுகோலில் கடுமையான நிலநடுக்கங்களாக வெடிக்கக்கூடும். கடலடியில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் 'மெகா-சுனாமி' (Mega-Tsunamis) அபாயங்களை அதிகரிக்கும். பூமி தட்டுகளின் மேல் உள்ள பனி அல்லது நீரின் அழுத்தம் குறையும் போது, பூமியின் ஆழத்தில் உள்ள மாக்மா (Magma - உருகிய பாறைக்குழம்பு) மீதான அழுத்தமும் குறைகிறது. இதனால், மாக்மாவில் உள்ள வாயுக்கள் மிக எளிதாக விரிவடைந்து மேல்நோக்கி எழும்புகின்றன. இது எரிமலைகள் அடிக்கடி வெடிப்பதற்குக் காரணமாக அமைகிறது. ஐஸ்லாந்து (Iceland) போன்ற பனிப்பாறை பகுதிகளில் இந்த ஆபத்து ஏற்கனவே கண்கூடாகத் தொடங்கியுள்ளது.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள மாபெரும் பசிபிக் தட்டு (Pacific Plate), நாஸ்கா தட்டு (Nazca Plate), கோகோஸ் தட்டு (Cocos Plate) மற்றும் பிலிப்பைன்ஸ் தட்டுகள் ஒன்றோடொன்று மோதும் மண்டலங்கள் (Subduction Zones) பசிபிக் நெருப்பு வளையப் பகுதி (Pacific Ring of Fire) எனப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் நடப்பு மாதங்களில், பசிபிக் நெருப்பு வளையப் பகுதி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமான புவித்தட்டு நகர்வுகள் (Tectonic Shifts) மற்றும் அழுத்த மாறுபாடுகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலப்பகுதியில் இந்த வளைவுப் பாதையில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாகப் பெரிய அளவிலான நிலநடுக்கங்களும் எரிமலைச் சீற்றங்களும் பதிவாகி வருகின்றன.
3. வர்த்தகக் காற்றுகள்" (Trade Winds)
18, 19-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாலுமிகள் மற்றும் வணிகர்கள், இக்காற்றின் நிலையான திசையைப் பயன்படுத்தித் தங்களது பாய்மரக் கப்பல்களை (Sailing Ships) மற்ற உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். கடல்வழி வர்த்தகத்திற்கு இது பெரிதும் உதவியதால், இது வர்த்தகக் காற்று என்று அழைக்கப்படுகிறது.
- சமரன் (ஆகஸ்ட்- செப் 2026)