இலங்கையை தொடர்ந்து நெருக்கடியின் தறுவாயில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம்

இலங்கை, பாகிஸ்தான் மட்டுமல்ல; ஏகாதிபத்தியங்களின் புதிய காலனியப் பிடியில் உள்ள எந்தவொரு நாடும் அந்நிய நிதி மூலதனம் சாராத சுதேசிய பொருளாதாரத்தை கட்டி அமைத்தால் தான் நெருக்கடியிலிருந்து மீள முடியும்

இலங்கையை தொடர்ந்து நெருக்கடியின் தறுவாயில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் போராட்டம் அரசியல் தலைமையற்று நடந்ததாலும், நெருக்கடிக்கு ராஜபக்சேவின் குடும்ப ஆட்சியும் ஊழலும்தான் காரணம் என்ற மேலோட்டமான புரிதலில் நடந்ததாலும், ஐஎம்எப் தலையீட்டை கோரியதாலும் நெருக்கடிக்கு தீர்வு கிட்ட வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதைத்தான் அமெரிக்கா-இந்திய ஆளும் வர்க்கங்களும் விரும்பின. சீன எடுபிடி ராஜபக்சே கும்பலின் பாசிச ஆட்சிக்கு எதிரான மக்களின் வெறுப்புணர்வை அமெரிக்க - இந்திய ஆளும் வர்க்கங்கள் அறுவடை செய்ய முயன்று, அதில் வெற்றி கண்டுள்ளன. இலங்கையை மையமாகக் கொண்டு சீனா அமல்படுத்தி வரும் தெற்காசிய மேலாதிக்க முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்திலிருந்தும், இந்திய விஸ்தரிப்புவாத நலனிலிருந்தும் அமெரிக்காவும் மோடி அரசும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டு ஆட்சி மாற்றத்திற்கு முயன்று வந்தன. மக்களின் போராட்டங்களை பயன்படுத்திக்கொண்டு மகிந்தாவை ராஜினாமா செய்ய வைத்து தங்களது எடுபிடியான ரணிலை பிரதமராக அமர்த்தின. மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவைத் தொடந்து அண்மையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால் கோத்தபயாவும் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாலத்தீ விற்கு தப்பி ஓடிவிட்டார். பிரதமராக இருக்கும் ரணில் ஜனாதிபதியாகவும் தினேஷ் குணவர்த்தனே பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முன்னணிகள் ஐ.எம்.எப் தலையீட்டின் அவசியத்தை பேசுவதைக் காணும்பொழுது போராட்டத்தில் அமெரிக்க-இந்திய ஊடுருவல் இருப்பதை அறிய முடிகிறது. ஆனால் இன்னொரு பிரிவு ரணிலையும் பதவி நீக்கம் செய்யக் கோரி போராடி வருகிறது.

 

ரணில் பிரதமர் ஆனதும் அமெரிக்க இந்திய முதலீட்டாளர்களின் பங்குச் சந்தை உயர்ந்ததுடன் டாலர் உடனான இலங்கை ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியது. கோத்தபயா ராஜினாமா செய்யாதிருந்த நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடரும் பட்சத்தில் அமெரிக்க - இந்திய முதலீடுகள் வரம்பிற்கு உட்பட்டதாகவே இருக்கும். எனவே ரணிலை ஜனாதிபதியாக்க அமெரிக்க இந்திய ஆளும் வர்க்கங்கள் முயற்சித்தன. இலங்கையில் அதிகரித்து வரும் சீன முதலீடுகளை ஓரளவு கட்டுப்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனி ஆதிக்கத்தை அதிகப்படுத்த அமெரிக்காவின் இந்த ஆட்சி மாற்றம் (Regime change) பயன்படக்கூடும். ஆனால் இது நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை.

 

நாடு திவால் ஆனபிறகும் கூட, பக்சே கும்பல் கடன் மற்றும் வட்டி முறையை மாற்றியமைக்க முன்வைத்த கோரிக்கைகளை சீனா நிராகரித்துவிட்டது. ஐ.எம்.எப் நிறுவனமும் நெருக்கடியைத் தீர்க்க முன்வராத நிலையில் இலங்கையில் போராட்டங்கள் தீவிரம் பெற்றுவந்தன. அமெரிக்கா மற்றும் ஐ.எம்.எப் இலங்கையின் நெருக்கடியை தீர்க்க முன்வராத நிலையில் சிங்கள ஆளும் வர்க்கங்களின் இந்த அரசியல் நாடகங்கள் போராட்டத்தை நிறுத்தி விடவில்லை. ஆகவே தங்களது எடுபிடியான ரணில் ஜனாதிபதி ஆகும் வரை போராட்டங்களை அனுமதித்த அமெரிக்க இந்திய ஆளும் வர்க்கங்கள் ரணில் ஜனாதிபதியானதும் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான பாசிச ஒடுக்குமுறையை ஏவி போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. தற்காலிக கடனுதவிகள் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்த்தவும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளவும் இலங்கை முயன்றாலும் முதலாளித்துவ நெருக்கடியின் பொருளியல் அடிப்படை தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

படிக்க: இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -1)

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -2)

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -3)

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -4)

இலங்கையை தொடர்ந்து நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இம்மூன்று நாடுகளும் இலங்கையைப் போன்று கடந்த 15 ஆண்டுகளில் சீன மூலதனத்தை அதிக அளவில் அனுமதித்த நாடுகள் என்பதும் அந்நாடுகளில் அமெரிக்கா ஆட்சி மாற்றத்திற்கு முயற்சி செய்து வந்தது; வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது குறித்து காண்போம்.

 

பாகிஸ்தான்

அமெரிக்காவின் நிதி மூலதன ஆதிக்கத்தால், புதிய பொருளாதார கொள்கைகளால் சீரழிக்கப்பட்ட பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியும், ஏற்றுமதியும் கடந்த 15 ஆண்டுகளில் அதிகளவில் அனுமதிக்கப்பட்ட சீனாவின் நிதி மூலதன ஆதிக்கத்தாலும் புதிய பொருளாதார கொள்கைகளாலும் மேலும் சீரழிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு விசுவாசமாக இருந்த இம்ரான்கான் ஆட்சி அண்மையில் (ஏப்ரல் 2022) நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு செபாஷ் ஷெரிப் அரசு ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது. இலங்கையைப் போன்று பாகிஸ்தானில் நடந்த ஆட்சி மாற்றத்திலும் அமெரிக்காவின் தலையீடு இருப்பதற்கான வாய்ப்புண்டு. ஏனெனில் இத்தகைய ஆட்சிக்கவிழ்ப்புகள் மூலம் பொம்மை ஆட்சியை உருவாக்குவதில் அமெரிக்கா கைதேர்ந்த சதிகார நாடு என நாம் அறிவோம். அமெரிக்க - ஐரோப்பிய மூலதன ஆக்கிரமிப்பாலும் சீனாவின் மூலதன ஆக்கிரமிப்பாலும் சீரழிக்கப்பட்ட உற்பத்தியும், ஏற்றுமதி வர்த்தகமுமே நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. ஆனால் புதிய பிரதமர் ஷெரிப் அமெரிக்கா, சீனாவின் மூலதன ஆதிக்கத்திற்கு இடையில் சமநிலை பேணுவதையே விரும்புவதாக (ரணில் விக்ரமசிங்கே போன்று) தெரிகிறது. பிரதமரானதும் "பாகிஸ்தானை அன்னிய முதலீடுகளின் சொர்க்கபுரியாக மாற்றுவேன்'' என்று ஷெரிப் கூறினார். எனவே இலங்கையின் நிலைமை பாகிஸ்தானுக்கு ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

பாகிஸ்தான் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், ! உணவுப் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், வேதியியல் மற்றும் மருந்து பொருட்கள், தோல் பொருட்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கின்றது. ஏற்றுமதி விகிதம் முறையே அமெரிக்கா 19.6%, | சீனா 8%, ஜெர்மனி 5.9%, ஐக்கிய அரபு அமீரகம் 5.8%, நெதர்லாந்து 4.4%, ஆப்கானிஸ்தான் 3.8% என்ற விகிதங்களில் உள்ளன. பாகிஸ்தான் வேளாண்மை சார் பொருட்கள், எந்திரங்கள், உணவுப் பொருட்கள், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் போன்றவற்றை இறக்குமதி செய்கின்றது. இறக்குமதி விகிதம் முறையே சீனா 24.7%, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் 5.8%, அமெரிக்கா 4.5%, சவுதி அரேபியா 4.4%, ஜப்பான் 3.8%, இந்தோனேசிய 2.4% என்ற விகிதங்களில் உள்ளன. சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி விகிதம் முதலிடத்திலும், அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதி விகிதம் முதலிடத்திலும் பாகிஸ்தான் உள்ளது. சீனாவிற்கு பாகிஸ்தான் 8% அளவில் ஏற்றுமதியும், சீனாவிலிருந்து 27.7% அளவிற்கு இறக்குமதியும் செய்கிறது. சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடை யிலான வர்த்தகப் பற்றாக்குறை 16.7 சதவீதமாகும். அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் 16.6 சதவீத அளவில் ஏற்றுமதியும் அமெரிக்காவிலிருந்து 4.5 சதவீத அளவிற்கு இறக்குமதியும் செய்கிறது. அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 15.7 சதவீதமாகும். 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறை 1737.5 மில்லியன் டாலர்கள் ஆகும். 2022 முதல் காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை 556.4 மில்லியன் டாலர்களாக இருந்தது. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 2021ல் 3.6 பில்லியன் டாலர்களாகவும், 2022 முதல் காலாண்டில் 4 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது. இவ்வாறாக அமெரிக்கா, சீனாவின் வர்த்தக சந்தைக்கு ஏற்ப பாகிஸ்தானின் ஏற்றுமதியும் இறக்குமதியும் மாற்றியமைக்கப்பட்டு உற்பத்தி (GDP) வீழ்ச்சி அடைந்தது.

 

2004ஆம் ஆண்டில் 7.7 சதமாக இருந்த ஜிடிபி, அதன் பிறகு ஆண்டு தோறும் சரியத் துவங்கியது. 2019ல் 3.12 சதவீதமாகவும், 2020ல் 1 சதவீதமாகவும், 2021ல் 3.9 சதவீதமாகவும் ஜிடிபி விகிதம் இருந்தது. இதனால் பணவீக்கம் 2019 இல் 6.8 சதவீதமாகவும், 2020ல் 10.7 சதவீதமாகவும், 2021 8.9 சதவீதமாகவும், 2022ல் 15 சதவீதம் என்ற விகிதங்களில் இருந்தது. இதை ஈடுகட்ட ஐ.எம்.எப் மற்றும் சீனாவிடமிருந்து பாகிஸ்தான் கடன் பெற்றது. ஐ.எம்.எப் சுமார் 6.7 பில்லியன் டாலர்களும், சீனா சுமார் 6 பில்லியன் டாலர்களும் கடன் தந்துள்ளன. ஜிடிபியில் 2019 ஆம் ஆண்டு 67.4 சதமாக இருந்த கடன் மதிப்பு 2020இல் 69.9 சதமாகவும், 2021ல் 71 சதமாகவும் உயர்ந்துள்ளது. பிப்ரவரி 2022ல், 22.825 மில்லியன் டாலர்களாக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச்2022ல், 17.476 மில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

 

வர்த்தக உறவுகளில் மட்டுமின்றி அந்நிய முதலீடுகளிலும் சீனா முதலிடத்தில் உள்ளது.பாகிஸ்தான் சீன - ரஷ்யாவின் ஷாங்காய் கூட்டமைப்பில் இணைந்து ஆப்கானில் தாலிபான் வளர்ச்சிக்கு உதவிய காரணத்தால் அமெரிக்க பாகிஸ்தான் உறவில் விரிசல் விழத் துவங்கியது. சீனா தனது உலக மேலாதிக்க திட்டமான ஒரு இணைப்பு ஒரு சாலை (OBOR) திட்டத்தின் ஓர் அங்கமான முத்து வலை இணைப்பு திட்டத்தில் (String ofPearls) பாகிஸ்தானை முக்கிய கூட்டாளியாக இணைத்துள்ளது. இது சீன பாகிஸ்தான் பொருளாதார இணைப்பு (CPEC) சாலை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றாகும். போக்குவரத்து திட்டங்கள், ஆற்றல் திட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், குவாடர் (Gwadar) துறைமுகத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இத்திட்டத்தின்கீழ் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குவாடர் துறைமுகம் முத்து வலை இணைப்பு திட்டத்தின் கீழ் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம், பங்களாதேஷில் சிட்டகாங் துறைமுக முனையம், மியான்மரில் சிட்வி, மாலத்தீவில் மராவோ துறைமுகம் போன்ற சீனாவின் கடல் வர்த்தக மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சீன- பாகிஸ்தான் பொருளாதார இணைப்பு திட்டத்தின் மொத்த மதிப்பு 2020 இன் படி 62 பில்லியன் டாலர்களாகும். இத்திட்டத்திற்குச் சீன வளர்ச்சி வங்கி (CDB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), எக்சிம் வங்கி (EXIM Bank) சீனாவின் தொழில் மற்றும் வர்த்தக வங்கி (Industrial and Commercial Bank of China) போன்ற வங்கிகள் கடன் தந்துள்ளன. ஹம்பன்தோடா, கொழும்பு துறைமுக திட்டங்களைக் கைப்பற்றியதைப்போலவே பாகிஸ்தானில் துவங்கப்பட்ட திட்டங்களையும் கைப்பற்றியதோடு கடன் நெருக்கடியிலும் அந்த நாட்டை சீனா சிக்க வைத்துள்ளது. இத்திட்டம் (CPEC) சீனாவை பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசியாவுடன் கடல் வழியில் இணைக்கின்றது. தென்சீனக் கடல் வழியாக நடக்கும் தனது வர்த்தகத்திற்கு அமெரிக்க ஆதரவு நாடுகளால் மலாக்கா நீர் முனைய வழியில் தரப்படும் இடையூறுகளைத் தவிர்க்க இத்திட்டம் (CPEC) சீனாவிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குவாடர் துறைமுகத் திட்டம் எண்ணை வர்த்தகத்திற்கு மையமான வழியாக உள்ள அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதை முறியடிக்கும் விதமாகவே குவாட் திட்டம் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளை ‘கதிசக்தி திட்டம்' எனும் பெயரில் கைப்பற்ற திட்டமிட்டு மோடி மு.க.ஸ்டாலின் அரசு மூலம் அமெரிக்கா

 

செயல்படுத்தி வருகிறது.

சீன- பாகிஸ்தான் பொருளாதார இணைப்புச் சாலை திட்டத்தின் கீழ் பின்வரும் திட்டங்கள் பாகிஸ்தானில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன:

 

1. குவாடர் துறைமுகம் (Gwadar Port) 300 மில்லியன் டாலர்கள்.

2. குவாடர் டர்பட் - ஹோஷாப் சாலை (Gwadar Turbat Hoshab) (M-8) (193km) - 13 பில்லியன் டாலர்கள்

இச்சாலை (M-8 Motor way) சீனா-பாகிஸ்தான் பொருளாதார இணைப்புச் சாலையின் மேற்கு மத்திய மற்றும் கிழக்கு வழிகளை குவாடர் துறைமுகத்துடன் இணைக்கிறது.

3.சுரப் - ஹோஷாப் சாலை (Surab - Hoshab) (N-85) (449 Km) 17.97 பில்லியன் ரூபாய்.

இது சீன-பாகிஸ்தான் இணைப்பு சாலையின் மேற்கு வழியில் சோரப் (Sorab) பகுதியை ஹோஷா பகுதியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ் சாலை ஆகும்.

4. ஜோப்-க்யூட்டா சாலை (Zhob - Quetta) (N-50) 305Km - 66.8 பில்லியன் ரூபாய்.

5. கரகோரம் நெடுஞ்சாலை மறு சீரமைப்பு திட்டம் (Karakorum Highway) - 1315 மில்லியன் டாலர்கள்.

6. முல்தான் - சுக்கூர் மோட்டார் சாலை (Multan - Sukkur Motor Highway M-5392km) - 2889 மில்லியன் டாலர்

7. அப்துல் அக்கீம் லாகூர் மோட்டார் சாலை(Abdul Hakkim - Lahore Motorway M3 230 Km)

8.ஹக்வா டி.ஐ கான் மோட்டார் சாலை (Hakla D.I Khan Motorwar 285 Km - 122.2 பில்லியன் ரூபாய்)

இது சீன பாகிஸ்தான் இணைப்புச்சாலையின் - மேற்கு பகுதியில் ஓர் அங்கமாக செயல்படுகிறது.

9. குஜ்தார் பசிமா சாலை (Khuzdur-Basima Road N-30 110 Km) - 19.19 பில்லியன் ரூபாய்

10. ஆரஞ்சு சாலை (Orange Line-Lahore Matte, 1626 மில்லியன் டாலர்.

11. கராச்சி - பெஷாவர் சாலை (Karachi–Peshawar Line ML-I), I872 Km - 6808 மில்லியன் டாலர்கள்

12. ஹெவெல்லியன் அப்போட்டாபாத் உலர் துறைமுகம் (Havellian Abbottabad Dry Port - 65 மில்லியன் டாலர்கள்.

13. குவாடர் கிழக்கு விரைவுச்சாலை (Gwadar EastBay Expressway) - 168 மில்லியன் டாலர்கள்.

14. பாகிஸ்தான் - சீன நட்பு மருத்துவமனை - 110 மில்லியன் டாலர்கள்.

15. குவாடர் சர்வதேச விமான நிலையம் 230 மில்லியன் டாலர்கள் 16.பாகிஸ்தான் - சீன பைபர் ஆப்டிக் திட்டம் (Pak; -China Fibre Optic Project) - 37.4 மில்லியன் டாலர்கள்.

 

ஆற்றல்சார் திட்டங்கள் (Energy Projects)

1.கோஹாலா ஹைட்ரோபவர் திட்டம் (Kohala Hydropower Project) - 2400 மில்லியன் டாலர்கள்.

2. ஆசாத் பட்டான் ஹைட்ரோபவர் திட்டம் (Azad Pattan Hydopower Project) - 1600 மில்லியன் டாலர்கள்.

3. தாவூத் காற்றாலை திட்டம் (Dawood Wind Power Project) - 112.65 மில்லியன் டாலர்கள்.

4. கரோட் திட்டம் (Karot Hydropower Project) – 1698 மில்லியன் டாலர்கள்.

5. பாகிஸ்தான் துறைமுகம் ஃகாசிம் ஆற்றல் திட்டம் (Pakistan Port Qasim Power Project) 1912 மில்லியன் டாவர்கள்.

6.குவாய்ட் -இ -அஜாம் சோலார் பூங்கா (Quald e-Azan Solar Park) - 1301 மில்லியன் டாலர்கள்.

7. சஹிவால் நிலக்கரி ஆற்றல் திட்டம் 1912 மில்லியன் டாலர்கள்.

8. UEP காற்றாலை திட்டம் - 250 மில்லியன் டாலர்கள்

9. சச்சல் காற்றாலை (Sachal Wind Farm) - 134 மில்லியன் டாலர்கள்

10. கார்ஜஸ் காற்றாலைகள் (Gorges Wind Power Projects) - 150 மில்லியன் டாலர்கள் 11.ஹப்கோ நிலக்கரி ஆற்றல் திட்டம் 191 மில்லியன் டாலர்கள்

12. மட்டியார் - லாகூர் கடத்தி சாலை 1658 மில்லியன் டாலர்கள்

13. சுகி கினார் ஹைட்ரோபவர் திட்டம்1707 மில்லியன் டாலர்கள்

14. SSRL நிலக்கரி திட்டம் 1912 மில்லியன் டாலர்கள் - 1912 மில்லியன் டாவர்கள்

15. தார் நிலக்கரி வயல் (Thar Coal Field) - 630 மில்லியன் டாலர்கள்

16. இங்ரோ தார் வயல் (Engro Thar Block II) - 995 மில்லியன் டாலர்கள்

17. ஹப்கோ தார் நிலக்கரி ஆற்றல் திட்டம் – 498 மில்லியன் டாலர்கள்

 

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

 

1. ரஷாகாய் சிறப்பு பொருளாதார மண்டலம் (Rashakai Economic Zone SEZ) 702 ஏக்கர்

2. தபேஜி சிறப்பு பொருளாதார மண்டலம் (Dhabeji SEZ Zone) - 1530 ஏக்கர்

3. அல்லாமா இக்பால் தொழில் நகரம், பைஸலாபாத் (Allama Iobal Industrial City Faisal abad) - 3207 ஏக்கர்

4. போஸ்டன் தொழில் மண்டலம் (Boston Industrial Zone) - 1000 ஏக்கர்

 

மேற்கண்ட தகவல்கள் பாகிஸ்தானில் அந்நிய முதலீடு செய்யும் நாடுகளில் சீனா முதன்மை இடத்தில் உள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. சீனாவின் வங்கிகள் மூலம் கடுவட்டிக்கு கடன் தந்து அவற்றைத் திருப்பிச் செலுத்த முடியாதவாறு பாகிஸ்தானைக் கடன் நெருக்கடியில் தள்ளி (பாகிஸ்தானின் கடன் சுமார் 160 பில்லியன் டாலர்களாகும்) இத்திட்டங்களைக் கைப்பற்றியுள்ளது சீனா. அதாவது பாகிஸ்தானில் சீனாவின் புதிய காலனியாதிக்க பிடி இறுகி உள்ளது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆகவே பாகிஸ்தான் மீதான அமெரிக்கா, சீனாவின் புதிய காலனியாதிக்கம்தான் பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணமாகும். இந்த பொருளாதார நெருக்கடியே அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

 

சீன ஆதரவு இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ப்பு

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடியின் சுமைகளைத் தாள முடியாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலைமைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டன. 2022 ஏப்ரல் 3 அன்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து போது, இம்ரான்கான் துணை சபாநாயகரைக் கொண்டு அந்த தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு கொண்டுவராமல் தடுத்தார். துணை சபாநாயகர் அத்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கவில்லை. பிறகு பிரதமர் இம்ரான்கான் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல் நடத்த வேண்டும் என ஜனாதிபதியை வற்புறுத்தினார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தலையிட்டு இம்ரான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியது. கடந்த காலங்களில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை உச்சநீதிமன்றம் கள்ள மௌனத்துடன் அனுமதித்ததை நாம் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது.

 

இம்ரான்கான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி பெற்றது. ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் (PML-N) தலைவரான செபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவி ஏற்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தையும், புதிய பிரதமரையும் ஏற்க முடியாது என்று இம்ரான்கான் கூறினார். அவரும் அவரது கட்சியை சேர்ந்த (PTI- Tehreak -i- paki stan) 100 உறுப்பினர்களும் பதவியை ராஜினாமா செய்தனர். அதன் பிறகு தனது கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் " நமது அரசின் சுதந்திரமான அயலுறவுக் கொள்கைதான் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னணியிலுள்ள சூழ்ச்சியின் அடிப்படையாக அமைந்துவிட்டது என்றார். அதாவது அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்குப் பணியாத அரசு என்று கூறுகிறார். ஆனால் சீனா ஏகாதிபத்தியத்தின் அடிவருடி அரசு என்பதை இம்ரான் கூறாவிடினும் தொழிலாளி வர்க்கம் அதை அறியும். இதிலிருந்தே உக்ரைன் போரில் ரசியாவை ஆதரித்து மோடி அரசு எடுத்த நிலைப்பாட்டை இம்ரான் பாராட்டிப் பேசினார். இந்தியாவுடன் பாகிஸ்தானும் உக்ரைன் போரில் ரசியாவை ஆதரித்தது நாம் அறிந்ததே. தனதுஅரசு கவிழ்க்கப்பட்டதற்கு அமெரிக்காதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் இம்ரான். அதற்கான சாத்தியப்பாடுகளையும் நாம் மறுப்பதற்கில்லை. தாலிபான் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் உதவி செய்தது என்றும், ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பாதுகாத்தது என்றும் கூறி டிரம்ப் பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக அறிவித்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை தளவாடங்கள், தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்யத் துவங்கியது.

 

மார்ச் மாதத்தின் 2வது வாரத்திலேயே இம்ரான் அரசு மீது நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன. சிறிய கட்சிகளான முட்டஹிடா க்வாமி மூவ்மென்ட் (Muttahida Quami Movement - P), பலுசிஸ்தான் அவாமி பார்ட்டி (Baluch istan Awami Party) போன்ற கட்சிகளின் ஆதரவில்தான் இம்ரான் அரசு பிழைத்து வந்தது. பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரானின் பி.டி.ஐ கட்சியிலிருந்து வெறியேறத் துவங்கி விட்டனர். மேலும் முதன்மையாக பாகிஸ்தான் அரசில் செல்வாக்கு செலுத்தி வந்த இராணுவ தலைமையின் ஆதரவையும் இம்ரான் இழந்தார். பாதுகாப்புத் துறையில் (Defence) பெரும்தரகு முதலாளித்துவ கும்பல்களை உருவாக்கி தலைமை பதவிகளில் அமரவைத்து பாகிஸ்தான் அரசை அமெரிக்கா கட்டுப்படுத்தி வந்தது. இராணுவ சர்வாதிகார நாடாக பாகிஸ்தான் நீடித்து வருவதற்கும் இதுவே காரணம் ஆகும். முஷ்ரப் போன்றவர்களை பாகிஸ்தானில் உருவாக்கியதைப் போலவே, இலங்கையிலும் சரத் பொன்சேகா போன்றவர்களை உருவாக்கியது அமெரிக்கா. பாகிஸ்தானை இராணுவ சர்வாதிகார நாடாக உருவாக்கியது போன்றே இலங்கையையும் இராணுவ சர்வாதிகார நாடாக (இராணுவ துறையில் தரகு முதலாளிய கும்பலை உருவாக்குவது) மாற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இதே பாணியை மியான்மரில் சீனா பின்பற்றி இராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

 

இதுவரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பாகிஸ்தான் அரசும் ஆட்சியில் முழுமையாக நீடித்ததில்லை. இராணுவ ஆட்சி மூலம் பாராளுமன்ற ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. ஆனால் நம்பிக்கை யில்லா தீர்மானம் மூலம் ஒரு அரசு ஆட்சியிலிருந்த அகற்றப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். இராணுவ ஆட்சியை அமெரிக்காவால் இம்முறை கொண்டுவர முடியாததற்கான காரணம் அமெரிக்காவிற்கும் இராணுவ தலைமைக்கும் (பாகிஸ்தான் இராணுவம் தாலிபான்களுக்குப் பயிற்சி அளித்ததால்) ஏற்பட்ட முரண்பாடாகும். பாகிஸ்தான்   இராணுவ தலைமையில் சீனாவின் ஆதிக்கமும் உருவாகியுள்ளதை இது காட்டுகிறது. ஏனெனில் இதற்கு முன்புவரை இராணுவ ஆட்சி மூலமாக (அ) இராணுவ கார்ப்பரேட்டுகளின் நிர்ப்பந்தத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு மூலமாக பாராளுமன்ற ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. இம்முறை அது சாத்தியப்படவில்லை. இராணுவத் துறையில் அமெரிக்க ஆதரவு தளபதி (அ) கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் முடிந்துவிடவில்லை. மாறாகத் தொடர்ந்து நீடித்தே வருகிறது. இந்த உச்சநீதிமன்ற தலையீட்டின் பின்புலத்தில் அக்கும்பலின் நிர்ப்பந்தம் இருப்பதாக தெரிகிறது. இராணுவ தளபதி பஜ்வா அமெரிக்கா, சீனா இரண்டின் உதவியும் தேவை என்று கூறுகிறார். பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவின் ஏகபோக ஆதிக்கம் குறைந்து சீனாவின் ஆதித்ககம் வளர்ந்துள்ளதையே இது காட்டுகிறது.

 

ஆட்சிக் கவிழ்ப்பில் பாதுகாப்புத் துறையின் பாத்திரம்

 

கடந்த தேர்தலில் இம்ரான் கட்சி தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. இதில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்கு வகித்ததாக முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். சட்டவிரோதமான முறையில் இராணுவம் தேர்தல் முறையில் தலையீடு செய்வது பற்றி கேள்வி எழுப்பினார். 2017-ல் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரீப் (செபாஸ் ஷெரீப்பின் சகோதரர்) பனாமா ஊழல் பட்டியலில் (Panama Papers) இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக் காட்டி ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை விதித்தது. மேலும் அவர் வகித்து வந்த பிரதமர் பதவியையும் செல்லாது என்று அறிவித்தது. இதன்மூலம் மூன்றாவது முறையாக ஆட்சிக் காலத்திற்கு முன்பாகவே பதவியை இழந்தார்.

 

2018 தேர்தலில் இம்ரான் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு இராணுவத் தலைமை தனது செல்வாக்கைப் பயன்படுத்தியது. இருப்பினும் இம்ரான் ஆட்சி 3 ஆண்டு காலம் ஆட்சியில் நீடித்தது என்பது பாகிஸ்தான் அரசியலில் முதல்முறை ஆகும். பாகிஸ்தான் அரசியலில் இராணுவத் தலையீடு குறித்து இம்ரான் கேள்வி எழுப்ப துவங்கிய - திலிருந்து இராணுவத்திற்கும் இம்ரானுக்கும் முரண்பாடு வெடிக்கத் துவங்கியது. முதல் இரண்டு ஆண்டுகள் இம்ரான் ராணுவத்துடன் கைகோர்த்து அரசியல் சதுரங்கம் ஆடி வந்தார். ஆனால் கடந்த ஆண்டிலிருந்து முரண்பாடு உருவாகத் தொடங்கியது. ராணுவத் தலைமை இம்ரான் ஆட்சிக்கு தரும் ஆதரவைப் பரிசீலனை செய்வதாக தனது நடவடிக்கை மூலம் சமிக்ஞை தந்தது. ஐஎஸ்ஐ (ISI) உளவுத் துறையின் தலைவராக பதவி வகித்து வந்த பயஸ் ஹமித் (Faiz Hameed) என்பவரின் பதவிக் காலத்தை நீட்டிக்க இம்ரான் உத்தரவிட்டார். ஆனால் ராணுவ தளபதி பஜ்வா (Bajwa) நதீம் அஞ்சும் (Nadeem Anjum) என்பவரை அப்பதவிக்குப் பரிந்துரைத்தார். தனது தேர்தல் வெற்றிக்கு உதவிய ஹமீத்தை பதவியில் நீட்டிக்கும் உத்தரவைத் திரும்பப் பெற முடியாது என்று கூறி பஜ்வாவின் பரிந்துரையை இம்ரான் நிராகரித்தார். இம்முரண்பாடு பாதுகாப்புத்துறையில் அமெரிக்கா, சீனா தனது விசுவாசிகளை உருவாக்கி பாகிஸ்தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை தெளிவாக உணர்த்துகிறது.

 

இம்ரானுக்கும் பஜ்வாவிற்கும் இடையிலான முரண்பாடு பல மாதம் நீடித்தது. வரும் நவம்பர் மாதத்தோடு பஜ்வாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இம்ரானின் ஆதரவு பெற்ற ஹமீத்தை அடுத்த ராணுவ தளபதியாக பணியமர்த்த (Army Chief) இம்ரான் முடிவு செய்திருந்தார். ராணுவ தளபதி பனிக்காலத்தின் (Seniority) அடிப்படையில் அவரே அடுத்த தளபதி பதவிக்குத் தகுதியான நபர் ஆவார். மேலும் ராணுவத் தளபதியை நியமிக்கும் அதிகாரம் சட்டத்தின்படி பிரதமருக்குத்தான் உண்டு. எனவேதான் இம்ரான் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு உள்ளார். இம்ரானின் மத அடிப்படைவாத அரசியல் பாதுகாப்புத் துறையில் இளம் அதிகாரிகளிடம் செல்வாக்குப் பெற்று வந்ததும் முரண்பாடுகளை தோற்றுவித்தன. தன்னை பதவியிலிருந்து நீக்க ராணுவத் தலைமையின் மூலம் அமெரிக்கா முயற்சி செய்வதாக இம்ரான் கூறியது முரண்பாடு முற்றுவதற்குக் காரணமாக அமைந்தது. இம்ரானின் குற்றச்சாட்டை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் "தேசியப் பாதுகாப்பு கவுன்சில் இம்ரானின் குற்றச்சாட்டை ஏற்றதாகக் கூறுவது தவறான தகவல்" என்று கூறி மறுத்தார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையில் உருவான முரண்பாட்டின் பின்புலத்தில் பஜ்வா இருந்தார் என்பதையும் அவர் மறுத்தார். இம்ரான் பஜ்வாவிடம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்து புதிய தேர்தல் நடத்துவதற்கு உதவி கேட்டார் என்றும் அவர் கூறினார். மேலும் பஜ்வாவின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டதாகவும், பாகிஸ்தானில் (ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு) ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா ஏதும் கோரவில்லை எனவும் கூறினார். ஆனால் ஜோ பைடன் பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்க கோரிக்கை வைத்ததாக மேற்குலக ஊடகங்கள் வெளிப்படையாகவே எழுதி இருந்தன.

 

பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான ராணுவத் தளவாடங்கள் அமெரிக்காவிடமிருந்து பெற்றவையே. இதன் காரணமாகவே ராணுவம் அமெரிக்காவுடன் தொடர்ந்து நட்பு பாராட்ட விரும்புகிறது. ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில்தான் தாலிபான்கள் வளர்ச்சிக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் பாகிஸ்தான் அரசும் ராணுவம் மற்றும் உளவுத்துறையும் உதவி செய்ததாக கூறி 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானை இனியும் நம்பக் கூடாது என்று டிரம்ப் கூறினார். 2001இல் தாலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு அமெரிக்காவிற்கு உதவி செய்த பாகிஸ்தான், ஷாங்காய் கூட்டமைப்பில் இணைந்த பிறகு அமெரிக்க எதிர்ப்பு தாலிபான் ஆதரவு (இரசிய - சீன ஆதரவு) நிலைப்பாடு எடுத்ததால் அதிலிருந்து அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவில் விரிசல் விழத் தொடங்கியது. அமெரிக்காவும் பாகிஸ்தானை நம்பியிராமல் இந்தியாவை தனது முக்கிய கூட்டாளியாக மாற்றும் நோக்கில் குவாட்டில் இணைத்துக்கொண்டது. தனது ஆப்கான் தோல்விக்கு பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடுதான் காரணம் என அமெரிக்கா கருதுகிறது. பாகிஸ்தானின் தாலிபான் குழு (Pak- Taliban Group) உள்நாட்டில் வளர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமானதற்கும் அமெரிக்காவின் 'ஆப்கான் அரசியலுக்கு' துணை போனதே காரணம் என பாகிஸ்தான் கருதுகிறது.

 

அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுத்த இம்ரான்

இம்ரான் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்க எதிர்ப்பு சீன ஆதரவு நிலை எடுத்து இயங்கினார். ஆப்கான் -பாகிஸ்தான் எல்லைகளை அமெரிக்கா பயன்படுத்தி தாலிபான்களைத் தாக்கி வந்ததை கண்டித்தார். டிரம்ப் ஆட்சியில் கூர்மையடைந்த இந்த முரண்பாடு பைடன் ஆட்சியிலும் தொடர்ந்தது. பைடன் அதிபராகப் பதவி ஏற்றதும் நரேந்திர மோடியிடம் தொலைப்பேசியில் பேசினார். ஆனால் இம்ரானுடன் பேசாமல் புறக்கணித்தார்.

 

ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைத்து அதனை கண்காணிக்க அமெரிக்கா விரும்பியது. ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க இம்ரான் மறுத்துவிட்டார். இம்ரானின் இந்த அணுகுமுறையை சீனா பாராட்டியது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அமெரிக்காவின் ராணுவ தளம் பாகிஸ்தானில் அமைந்தால், சீனாவின் தெற்காசிய மேலாதிக்க திட்டத்தின் மையமான உள்கட்டமைப்பு திட்டமான சீன-பாகிஸ்தான் இணைப்பு சாலை திட்டத்திற்கும், குவாடர் துறைமுகத்தில் அமைந்துள்ள சீனாவின் ராணுவ தளத்திற்கும் (Naval base) பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த இணைப்புச் சாலை திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வருவதால் காஷ்மீர் மீதான பாகிஸ்தான் - சீனாவின் ஆதிக்கத்திற்கு பாகிஸ்தான் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சீனாவிற்கு விளங்குகிறது. இதை முறியடிக்கவே இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் அமெரிக்காவின் தலையீடு தொடர்கிறது. இது மட்டுமின்றி லடாக்கில் ராணுவ தளம் ஒன்றை அமைக்கவும் பைடன் மோடி கும்பல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

இம்ரான்கான் டிசம்பர் 2021ல் பைடன் நடத்திய ஜனநாயகத்திற்கான மாநாட்டில் (Summit for Democra gy) கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது மட்டுமின்றி உக்ரைன் போரில் ரஷ்ய - சீனாவின் நிலைப்பாட்டையும் ஆதரித்தார். இம்ரான்கான் தன் முடிவுகளை ராணுவ தளபதியுடன் கலந்து ஆலோசிக்காமலேயே எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புத் துறையின் தலைமை இம்ரான் முடிவிற்குக் கவலை தெரி வித்தது. உக்ரைனில் போர் பதற்றம் துவங்கிய போதே இம்ரான் ரஷ்யாவிற்குச் சென்று புதினை சந்தித்தார். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. புதினுடனான சந்திப்பிற்கு பிறகு அமெரிக்கா பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், பாகிஸ்தான் நடுநிலைமையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனவும் இம்ரான் வெளிப்படையாகவே கூறினார்.

 

ஊழல் ஒழிப்பு' முழக்கத்தை முன் வைத்து மோடி ஆட்சிக்கு வந்ததைப் போலவே இம்ரானும் அதே முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்தார். மோடியைப் போலவே அவரும் ஊழல் மலிந்த ஆட்சியைத்தான் நடத்தினார். அரசியல் எதிரிகள், ஊடகங்களை இலக்காக கொண்டு செயல்பட்டு ஊடகங்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கினார். இசுலாமிய மதவாத அடிப்படையிலான பாசிச ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டார் இம்ரான். இஸ்லாமிய மதத்தின் மாண்புகளை பாதுகாக்கும் இரட்சகன் என்று தன்னை அறிவித்துக் கொண்டார். '2021ல் ஒற்றை தேசிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இது இந்து மதவாத அடிப்படையிலான மோடி கும்பலின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்பானது. இக்கல்வி கொள்கையின் வடிவமாக இஸ்லாமிய மதவாதம் அடிப்படையாக உள்ளது. உள்ளடக்கத்தில் சீன ஏகாதிபத்திய நிதி ஆதிக்க கும்பல்களின் நலன்களும் பாகிஸ்தான் தரகு முதலாளிய நலன்களும் உள்ளன. பாடத் திட்டத்திலேயே இஸ்லாமிய மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கல்விக் கொள்கையில் உள்ள ஆங்கில வழி என்பது சிந்தனைத் துறையில் அடிமைத்தனத்தைப் போதிப்பதாகவும், பாகிஸ்தானின் பாரம்பரிய பண்பாடும் இஸ்லாமும் அதை போக்க வல்லது எனவும் கூறினார் இம்ரான். அனைத்து பாடத்திட்டங்களும் மதவாத உலிமா கழகத்தின் (Ulema Board) ஒப்புதலோடுதான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்த கல்விக் கொள்கை கூறுகிறது. பொருளாதார நெருக்கடியின் சுமைகளை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டங்களை இவ்வாறாகப் பாசிச முறையில் திசைத்திருப்பி ஒடுக்கினார் இம்ரான்.

 

தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஷெரிப் தனது சகோதரர் நவாஸ் ஷெரீப் போல அல்லாமல் ராணுவ தலைமையிடம் நட்பு பாராட்டுவார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் பேசுகின்றன. மட்டுமின்றி அமெரிக்காவுடன் ஏற்பட்ட முரண்களை சரி செய்வார் என்றும் கூறுகின்றன. பதவியேற்றதும் ஐஎம்எப்பிடம் 6 பில்லியன் டாலர் கடனுதவி கேட்டார் ஷெரிப். சமூக செலவினங்களை குறைப்பது; பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவது; ஏழைகளுக்கு தரப்படும் மானியங்களை ஒழிப்பது போன்ற 'கட்டமைப்பு மாற்றத்தை' (Structural adjustment) செய்தால் கடன் உதவி அளிப்பதாக ஐஎம்எப் கூறியுள்ளது. ஷெரிப் பிரதமராகப் பதவி ஏற்ற பின்பு பைடன் அவருடன் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவின் அரசு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் 75 ஆண்டுகால அமெரிக்க - பாகிஸ்தான் நட்புறவை ஷெரிப் பாதுகாப்பார் என நம்புவதாக கூறியுள்ளார். சீனாவும் ஷெரிப் அரசை வரவேற்றுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் பாகிஸ்தான் தனது வலுவான நட்பு நாடாக நீடிக்கும் (Ironclad Partner) என சீனா கூறியுள்ளது. நவாஸ் ஷெரீப்தான் சீன-- பாகிஸ்தான் இணைப்புச் சாலைத் திட்டத்தில் கையெழுத்திட்டு பாகிஸ்தான் மீது சீனாவின் புதிய காலனியாதிக்கத்தின் பிடியை இறுகச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆக, இலங்கையைப் போன்றே பாகிஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இவ்விரு ஏகாதிபத்திய நாடுகளின் புதிய காலனிய நலன்களே காரணமாக உள்ளன. எனவே இந்த ஆட்சி மாற்றங்கள் மூலதன ஆக்கிரமிப்புகளில் ஒரு சமநிலை பேணுவதற்கான முயற்சியாக இருக்குமே ஒழிய நெருக்கடியை தீர்க்க எவ்விதத்திலும் பயன்படாது. இலங்கை, பாகிஸ்தான் மட்டுமல்ல; ஏகாதிபத்தியங்களின் புதிய காலனியப் பிடியில் உள்ள எந்தவொரு நாடும் அந்நிய நிதி மூலதனம் சாராத சுதேசிய பொருளாதாரத்தை கட்டி அமைத்தால் தான் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதே உண்மை.

(தொடரும்...)

சமரன்

(மே – ஆகஸ்ட் மாத இதழிலிருந்து)