இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -4)

ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கிய முதலாளித்துவ நெருக்கடியே!

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -4)

(பகுதி -3 ன் தொடர்ச்சி)

 

'கடன்பொறியில்' இலங்கை

 

முதலாளித்துவ பத்திரிக்கைகளும், திருத்தல்வாதிகளும் இலங்கை நெருக்கடியை வெறும் 'கடன்' பிரச்சனையாக சுருக்குகின்றன. அமெரிக்கா, சீனாவின் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கம் அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அழித்ததால் உருவான வர்த்தகப்பற்றாக்குறைதான் அந்நியச் செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தியது எனவும், இதை ஈடுகட்டவே கடன் பெற்று நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது எனவும் பேச மறுக்கின்றன. இலங்கை பொருளாதார நெருக்கடி என்பது, ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கிய முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியே.  

ஐ.எம்.எப், உலக வங்கியிடம் கடன் வாங்கும் இலங்கை அரசின் கடன் கொள்கை, 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பாக 2007ம் ஆண்டிலிருந்து ராஜபக்சே கும்பல் ஆட்சி காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஆதிக்கத்தை தவிர்ப்பதற்காக ஐ.எம்.எப் பிடம் கடன் வாங்குவதை குறைத்து, சீனா மற்றும் சர்வதேச பங்குச்சந்தையிடம் கடன் பெற ராஜபக்சே ஆட்சி துவங்கியது. அதன் மூலம் ஐ.எம்.எப், உலக வங்கி கடன்களை அடைக்க துவங்கியது.

 

சர்வதேச மூலதனச் சந்தையில் கடன் பத்திரங்கள் மூலம் (சர்வதேச தன்னாட்சி பத்திரம் – International soverign bonds) இலங்கை 2007முதல் கடன் பெற துவங்கியது. மொத்தக் கடனில் 2.5% சதமாக இருந்த இந்த கடன் மதிப்பு 2019ல் 56% சதமாக உயர்ந்துள்ளது. 2019க்குப் பிறகு இந்த முறையில் இலங்கை அரசு கடன் பெறவில்லை. இந்த சர்வதேச மூலதனச் சந்தை என்பது அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ரசியா மற்றும் சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஊகமூலதன கும்பல்களின் பங்குச்சந்தையை குறிக்கிறது. ஐ.எம்.எப்., உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளின் ஏகபோக நலன்களுக்குச் சேவை செய்யும் வகையில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு (அதிக வட்டி விகிதத்தில் 2-4% வரை, திருப்பிச் செலுத்தும் காலம் 15-20 ஆண்டுகள் வரை) கடன் தந்து அந்நாடுகளை அவற்றின் சந்தையாக மாற்றுகின்றன. ஆகவே இதை தவிர்க்கவே இலங்கை போன்ற நாடுகள் சர்வதேச ஊகமூலதன கும்பல்களின் சந்தையில் கடன் பெறுகின்றன. இவற்றில் ஐ.எம்.எப்.பை விட அதிக வட்டி விதிக்கப்பட்டாலும் (6-8% வரை) திருப்பிச் செலுத்தும் காலம் (ஆண்டிற்கு 5-10 ஆண்டும் வரை) குறைவாக இருந்தாலும், வாங்கிய கடனை சுதந்திரமாக பயன்படுத்தும் வசதி இருப்பதால் ஒடுக்கப்பட்ட நாடுகள் அதிகளவில் இச்சந்தையில் கடன் பெறுகின்றன. இதில் நிதி தன்னாட்சி உரிமை இருப்பதால் இதற்காக வழங்கப்படும் கடன் பத்திரம் தன்னாட்சி பத்திரங்கள் எனப்படுகின்றன.  மேலும் எவ்வித நிபந்தனையும் (அதாவது ஐ.எம்.எப். நிபந்தனைகளைப் போன்று) அவை விதிப்பதில்லை. கந்துவட்டி நிறுவனத்திடம் கடன் வாங்குவதைப் போன்றதுதான் இது. அதாவது, ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள ஊகவணிக முதலாளிகளிடம் கடன் பத்திரங்கள் மூலம் நேரடியாக கடன் வாங்கும் முறையாகும். நாட்டிலுள்ள சொத்துகள், வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய கையிருப்பு போன்றவற்றை அடமானம் வைக்கும் விதத்தில் கடன் பத்திரங்கள் தந்து இவ்வகை கடன்கள் பெறப்படுகின்றன. ஆனால், ஆண்டுதோறும் கடன் முதிர்வுத் தொகையும், வட்டித் தொகையும் கட்டி நாடு திவாலாக நேரிடும். கடன் கட்ட தவறும்போது வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய கையிருப்புகளிலிருந்து கடன் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறுதான் இலங்கை கடன் பெற்று விழிபிதுங்கி நிற்கிறது. சர்வதேச மூலதனச் சந்தைக்கு இலங்கை ஆண்டுதோறும் 6.5 - 7 பில்லியன் டாலர் வரை கடன் முதிர்வு தொகையும் வட்டியும் கட்ட வேண்டியுள்ளது.  உற்பத்தி வீழ்ச்சியால் உருவான வர்த்தகப் பற்றாக்குறையை அனுமதித்துக் கொண்டே இவ்வாறு கடன் பெறுவது மிகவும் ஆபத்தானது என ராஜபக்சே கும்பல் உணரவில்லை. தற்போதுள்ள மொத்த அந்நியக் கடனில் (51பில்லியன் டாலர்) இதன் பங்கு 56% ஆகும். ஏற்றுமதியும் குறைந்து கொண்டே போக, இறக்குமதி செய்ய வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க பணம் இல்லாமல் இவ்வாறு கடன் வாங்குவதாக கூறியது. இதனால் அந்நியச் செலாவணி பற்றாக்குறை மேலும் அதிகமடைந்தது. காரணம், வாங்கிய கடனில் பெருமளவு சுருட்டிக் கொண்டு வயிறு வளர்த்ததால் ஒரு கட்டத்தில் கடன் முதிர்வு, வட்டி செலுத்தவே மேலும் மேலும் கடன் வாங்க வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவும் கூட நிதி கையிருப்பு வற்றியது. எனவே நிதி நெருக்கடியைச் சமாளிக்க 2018லிருந்து சீனாவிடம் கடன் பெற துவங்கியது.

 

உலக வங்கி, ஐ.எம்.எப். நிறுவனங்களுக்குப் போட்டியாக, சீனா ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை (AIIB – Asian Infrastructure Investment Bank) துவக்கியது. இது சீனாவின் 'உலக வங்கி' என்று அழைக்கப்படுகிறது. 4 - 6% வட்டி விகிதத்தில் குறுகிய கால திருப்பிச் செலுத்தும் கால அளவுகளில் (3-8 ஆண்டுகள்) கடன் தந்து ஒடுக்கப்பட்ட நாடுகளை திவாலாக்குகின்றது சீனா. இந்த வங்கியுடன் சீன வளர்ச்சி வங்கி (CDB – China Development Bank), மக்கள் சீன வங்கியும் (PCB – Peoples China Bank) இணைந்து ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு கடன் தந்து வருகின்றன.

 

சர்வதேச மூலதனச் சந்தையில் வாங்கிய கடனை அடைக்கவும், அந்நியச் செலாவணியை உயர்த்தவும் சீனாவிடமிருந்து இலங்கை 2018முதல் கடன் பெற்றது. 2018ல் சீன வளர்ச்சி வங்கியிடமிருந்து 'அந்நிய கடன் வசதி' எனப்படும் எப்.சி.டி.எப்.எப். முறை மூலம் (FCTFF – Foreign Currency Term financing facility) 1 பில்லியன் டாலர் மதிப்பில் கடன் பெற்றது. இதே முறையில் 2019-20ல் 500 மில்லியன் டாலர் மதிப்பில் கடன் பெற்றது. அதே ஆண்டு மக்கள் சீன வங்கியிடம் 1.5 பில்லியன் டாலர் கடன் பெற்றது. 2018ல் வாங்கிய கடனை சரிப்படுத்த இந்த கடன் வாங்கப்படுவதாக இலங்கை அரசு கூறியது. 2021ம் ஆண்டு இதே கடன் முறையில் 2 தவணைகள் கடன் பெற்றது. ஏப்ரல் 2021-ல் 500 மில்லியன் டாலரும், ஆகஸ்ட் 2021ல் 2பில்லியன் யென் (yen) மதிப்பிலும்  கடன் பெற்றது. யென் மதிப்பில் பெற்ற கடன்களை கொண்டு டாலரில் பெற்ற கடன்களை முழுவதும் அடைக்க முடியவில்லை. காரணம் டாலருக்கும் யென்னுக்கும் இடையிலான நாணய மதிப்பிலிருந்த வேறுபாடு மட்டுமின்றி இவற்றுடனான இலங்கை ரூபாய் மதிப்பும் பணவீக்கம் காரணமாக பணமதிப்பிழப்பு அடைந்து வந்ததது.  இந்த கடன் மூலம் அந்நியச் செலாவணியை உயர்த்த முடியவில்லை. கடன், வட்டி இரண்டும் சேர்த்து சீனாவிற்கு தர வேண்டிய கடன் 8 பில்லியன் டாலர்களாக இன்று உயர்ந்துள்ளது. மொத்தக் கடன் 51பில்லியன் டாலரில் 14% ஆக (2017ல்) இருந்த சீனக் கடன் இன்று 20% வரை உயர்ந்துவிட்டது. இது தவிர ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வாங்கியுள்ள கடன் மதிப்பு மொத்தக் கடனில் 24% சதமாக உயர்ந்துள்ளது.

 

2019ல் ஆட்சிக்கு வந்த ராஜபக்சே கும்பலின் பொருளாதார நடவடிக்கைகள்

 

ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதார நெருக்கடி பற்றிய அக்கறையின்றி மேலும் பொறுப்பற்று செயல்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு வாட் வரிவிகிதக் குறைப்பு போன்ற சலுகைகளை வழங்கியது. வாட் வரி (VAT) விகிதம் 15%லிருந்து 8% ஆக குறைக்கப்பட்டது. மேலும் தேசிய வளர்ச்சி வரி, வருவாய் பெறும்போதே வரி செலுத்தும் திட்டம், பொருளாதார சேவைகளுக்கான வரி ஆகியவற்றை மொத்தமாக இரத்து செய்தது. இதன் மூலம் நடுத்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம் சில சலுகைகளைப் பெற்றாலும் கார்ப்பரேட்டுகள்தான் அதிகளவில் பயன் பெற்றனர்.   இதனால் ஜிடிபியில் 2% வருவாய் இழப்பு ஏற்பட்டது. தவிர ஜிஎஸ்டி வரி வருவாயும் 2020ல் பாதியாக குறைந்துவிட்டது. 2019 ஏப்ரல் மாதம் ஈஸ்டர் குண்டு வெடிப்பால் 269 பேர் கொல்லப்பட்டதையடுத்து முக்கிய வருவாய் ஈட்டிய சுற்றுலாவும் முடங்கியது. சுற்றுலா மூலம் ஆண்டுதோறும் 4 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வந்தது. இந்த வருவாயும் குறைந்து விட்டது. கோவிட் பொது முடக்கத்திற்கு பிறகு நெருக்கடி ஆழப்பட்டது. மொத்த ஜிடிபியில் கோவிட் நிவாரணத்திற்கு 2% வரை செலவிட வேண்டியிருந்தது. ஜிடிபியில் கடன் தொகை 2019ல் 94% ஆக இருந்தது; 2020ல் 119% ஆக உயர்ந்தது. கோவிட் பொதுமுடக்கம்தான் நெருக்கடிக்கு காரணமென ராஜபக்சே கும்பல் கூறுவது மோசடியான பொய்ப்பிரச்சாரம் என்பது பற்றி முன்பே பார்த்தோம். உண்மையில், கோவிட் பொதுமுடக்கம் இலங்கை பொருளாதார நெருக்கடியை அம்பலப்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

ஏற்கனவே, வேளாண் துறையில் சீனாவின் இயற்கை உரங்களை பயன்படுத்தி வந்த இலங்கை அரசு 2021ம் ஆண்டு மே மாதம் வேளாண் துறை முழுவதிலும் சீனாவின் உரங்களை மட்டுமே பயன்படுத்துவது என்று முடிவெடுத்தது. அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் ரசாயன உரங்களுக்கு ஆகும் செலவான 26 கோடி டாலர்களை மிச்சப்படுத்தி அந்நியச் செலாவணியை அதிகப்படுத்தவும், சீனாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்தும் இரசாயன உர இறக்குமதியை முற்றிலும் ராஜபக்சே அரசு தடை செய்தது. இயற்கை வேளாண்மைக்கு ஒரே நாளில் மாற வேண்டுமென்ற ராஜபக்சே அரசின் முடிவு அறிவியலற்ற முடிவு என வேளாண் விஞ்ஞானிகள் கூறியதையும் ராஜபக்சே அரசு பொருட்படுத்தவில்லை. ஒரே நாளில் வேளாண்மைத் துறை இனி சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யும் இயற்கை உரங்கள் மூலம் இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கான உத்தரவை  ராஜபக்சே அரசு பிறப்பித்தது. இதை வந்தனா சிவா போன்றவர்கள் ஆதரித்தார்கள். சீனாவின் குயிங்டோ சீவின் பயோ டெக் (Quingdo seawin Biotech) நிறுவனத்திடமிருந்து 99000 டன் இயற்கை உரங்கள் இறக்குமதி செய்ய சீனாவுடன் ஒப்பந்தம் போட்டது. முதல் கட்டமாக 20000 டன்கள் இறக்குமதி செய்ய 6.7மில்லியன் டாலர்களை அந்நிறுவனத்திற்கு வழங்கியது. சீனாவின் உரத்தில் எர்வீனியா (Erwinia) என்ற நச்சுத் தன்மை வாய்ந்த பாக்டீரியா கலந்துள்ளதாக இலங்கையின் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்தது. இது தவறான தகவல் என சீனா அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது. பிறகு இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் அது வேளாண்துறை உற்பத்தியை முற்றிலுமாக முடக்கிவிட்டது. நெல் சாகுபடி 25%, தேயிலை 35%, தென்னைச் சாகுபடி 30% அளவுகளில் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஜவுளித்துறைக்குப் பிறகு தேயிலை தொழில் அதிக வருவாய் ஈட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே ஜிடிபி எதிர்மறையில் அதாவது -16% என்றளவில் 2022ல் வீழ்ந்துபோனதால், இறக்குமதியை அதிகப்படுத்த வேண்டியிருந்தது. அந்நியச் செலாவணி வற்றிப் போனதால் இறக்குமதியும் செய்ய முடியவில்லை. இதனால் பணவீக்கம் நவம்பர் 2021ல் 11.10%, டிசம்பர் 2021ல் 14%, ஜனவரி22 ல் 16.8%, பிப்ரவரி22ல் 17.5% என உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை திவால் நிலைக்குச் சென்றுள்ளது.

 

கடந்த மார்ச் மாதம் நிதிநெருக்கடியை தீர்க்க ஐ.எம்.எப். உதவியை நாடலாம் என்று ரணில் கூறியதை ஏற்க மறுத்துவிட்டது பக்சே ஆட்சி. மீண்டும் அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என்று பக்சே கும்பல் கூறியது. மேலும் ஸ்ரீசேனா - ரணில் ஆட்சியில் 2019ம் ஆண்டு, இலங்கை - ஜப்பான் - இந்திய முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தில் 'கிழக்கு சரக்குப் பெட்டக முனையம்' அமைக்கத் திட்டம் துவங்கப்பட்டது. அதையும் பக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா இலங்கை வர்த்தகப் பொருட்களுக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி (GSP) எனப்படும் பொது விருப்பத் தேர்வு ஒழுங்கமைப்பு வரிச் சலுகையை ரத்து செய்தது மட்டுமின்றி ஐரோப்பிய யூனியன் வழங்கி வந்த 66% சலுகையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

 

நெருக்கடி முற்றி போராட்டங்கள் வெடித்த பிறகு, சீனாவிடம் கடன் மற்றும் வட்டி முறையை மாற்றியமைக்க கோரியது பக்சே கும்பல். ஆனால் சீனா அதற்கு மறுத்துவிட்டது. அவசரக்கால கடனாக சுமார் 1.5 பில்லியன் டாலர் அளித்துள்ளதே தவிர கடன் முறையை மாற்றியமைக்க மறுத்துவிட்டது. இந்தியாவும் 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் கடன் தந்துள்ளது. இதற்குப் பதிலீடாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் சரக்கு பெட்டகத்தை அமைக்க அதானி குழுமத்துடன் பக்சே ஆட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. சீனா உதவி செய்ய மறுத்துவிட்ட நிலையில் வேறு வழியின்றி மீண்டும் ஐ.எம்.எப்.பிடம் உதவி கோரியுள்ளது பக்சே ஆட்சி. ஆனால் ஐ.எம்.எப். அவசரக்கால கடன் உதவி (Bailout) வழங்க முந்தைய கடன்களை மறுசீரமைக்க நிபந்தனை விதித்துள்ளது. இலங்கை அரசு ஐ.எம்.எப். உதவியை நாடியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடி நிலையிலும் கூட அமெரிக்காவும் சீனாவும் இலங்கையின் மீது தமது காலனியாதிக்கப் பிடியை மேலும் அதிகப்படுத்தவே போட்டியிடுகின்றன. திருத்தல்வாதிகள் சீனா-ரஷ்யாவின் பல்துருவ ஒழுங்கமைப்பு ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு அரை ஜனநாயகம், அரைக்கால் ஜனநாயகம் வழங்கும் என்று கூறி வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீன மூலதனத்தை அனுமதித்த இலங்கையில் எந்த ஜனநாயகமும் உருவாகவில்லை. மாறாக, நெருக்கடி முற்றி பட்டினிச்சாவுகளும் தற்கொலைகளும்தான் பெருகியுள்ளது.

 

இன்றைய தேதியில், இலங்கையின் மொத்தக் கடன் 51 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் ஆண்டுதோறும் சர்வதேச மூலதனச் சந்தை மற்றும் சீனாவிற்குச் செலுத்த வேண்டிய (கடன் முதிர்வு மற்றும் வட்டித் தொகை சேர்த்து) கடன் தொகை 6.5 முதல் 7 பில்லியன் டாலர்கள் ஆகும். இறக்குமதிக்கு 20பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி - ஏற்றுமதி (கோவிட் பொதுமுடக்க நீக்கத்திற்குப் பிறகு) 2 - 3 பில்லியன் டாலர் மதிப்பில் மட்டுமே நடக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு 1 பில்லியன் டாலருக்கும் கீழே வற்றிவிட்டது. இராணுவத்திற்கு ஆண்டுதோறும் 1.5 - 2 பில்லியன் டாலர்கள் செலவிடுகிறது. ஜிடிபியில் கடன் விகிதம் 119% ஆக உள்ளது. அதாவது வருவாயை விட 119% சதம் அதிகமாக கடன் உள்ளது. ஆகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றைக் கூட இறக்குமதி செய்யமுடியாத நிலைமைகள் நீடிப்பதாலேயே பெருமளவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. பக்சே ஆட்சி கடன் தொகை முழுவதையும் தற்காலிகமாகக் கட்டமுடியாது (Default) என அறிவித்துள்ளது. இதனால் முதலீடுகள் வெளியேறுவது மட்டுமின்றி புதிய முதலீடுகள் வருவதும் நின்றுவிடும். பக்சே கும்பல் நெருக்கடியை உற்பத்தி செய்த ஏகாதிபத்திய ஓநாய்களிடமே சரணடைந்து உதவி கேட்டு வருகிறது.

 

தொகுத்துக் கூறுவதெனில் நெருக்கடிக்கு காரணமாக,

 

அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நெருக்கடி; நெருக்கடியை எதிர்த்த போராட்டத்தை ஒடுக்கவும், தமிழின ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் சிங்களப் பேரினவாத பாசிசம் கட்டியமைக்கப்படுதல்; புலிகள் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் பொருட்டு இலங்கைப் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்படுதல்; சீனாவின் புதிய காலனியாதிக்கத்திற்கு இலங்கை திறந்துவிடப்படுதல்; அமெரிக்க-இந்திய, சீன-ரசியாவின் செல்வாக்கு மண்டலங்கள்-மறுபங்கீட்டிற்கான போட்டிக் களமாக இலங்கை மாற்றப்படுதல்; அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச ஊகமூலதனப் பங்குச் சந்தை மற்றும் சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்குதல்; கழுத்தை நெறிக்கும் கடன் தொகையால் அந்நியச் செலாவணி வற்றி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்படுதல்; கோவிட்டிற்கு பிறகு நெருக்கடி தீவிரமடைதல்; வேளாண்துறையை சீனாவின் இயற்கை வேளாண்மை திட்டத்திற்காக சீரழித்தல்; முற்றிலும் திவால் அடைதல்; போன்றவற்றைக் கூறலாம்.

 

நெருக்கடிக்கு தீர்வு என்ன?

 

1. அநியாய அந்நியக் கடன்களை ரத்து செய்து ஒடுக்கப்பட்ட நாடுகளிடம் கடன் பெறுவது;

2. ரணில், ஸ்ரீசேனா, பக்சே கும்பல் மற்றும் தமிழின துரோக நாடாளுமன்றவாத தமிழ்த்தேசிய கட்சித் தலைவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல்;

3. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்வது;

4. பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டங்களை ரத்து செய்வது;

5. பக்சே கும்பலின் எமர்ஜென்சி ஆட்சியை அகற்றுவது

 

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவதன் மூலம் உடனடி நிவாரணங்கள் பெறமுடியும். ஆனால் அமெரிக்க-சீனாவின் புதிய காலனியாதிக்கத்திற்குச் சேவை செய்யும் இலங்கை தரகு முதலாளிய வர்க்கங்களை தூக்கியெறிந்து அந்நிய நிதி மூலதனம் சாராத ஒரு சுதேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்.

 

ஆனால் இலங்கையில் நடந்துவரும் போராட்டங்கள் ஊழல் மலிந்த கோத்தபயா - மகிந்த ராஜபக்சே கும்பலின் குடும்ப ஆட்சியை அகற்றுவது என்ற கோரிக்கைகளோடு நிற்கின்றன. இவற்றை பிற ஆளும் வர்க்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி ஆட்சியமைக்க முயன்று வருகின்றன. அமெரிக்க - இந்திய ஆதரவு ரணில் - ஸ்ரீசேனா கும்பலின் ஆட்சியானது, ரசிய-சீன ஆதரவு பக்சே கும்பலின் ஆட்சிக்கு மாற்றாக இருக்காது. ஏனெனில் இவ்விரு கட்சிகள்தான் இலங்கையை இரு ஏகாதிபத்திய நாடுகளின் வேட்டைக்காடாக மாற்றியமைத்தன. எனவே இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

 

இலங்கையில் உள்ள சிங்கள மக்களோடு, இசுலாமியர்கள், பௌத்த பிக்குகள் இணைந்து போராடுகின்றனர். இலங்கை வாழ் தமிழர்கள் குறைந்த அளவில்தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வடக்கு - கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் ஈழத்து மக்கள், மலையகத் தமிழர்கள் இப்போராட்டங்களிலிருந்து விலகியே உள்ளனர். காரணம் கடந்த 15 ஆண்டுகளாகவே இந்த பொருளாதார நெருக்கடியில்தான் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்கள் இன ஒடுக்குமுறையையே பிரதானமாக கருதுகின்றனர். சிங்களர்களோடு தமிழர்கள் இணக்கமாக இணைந்து போராடும் சூழல் இன்னும் உருவாகவில்லை. தமிழினப் படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சே கும்பல் மற்றும் அதற்கு உதவிய அமெரிக்க-இந்திய, சீன - ரசிய நாடுகள் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை பெறாமல், இராணுவமயமாக்கல் - சிங்களமயமாக்கல் - பௌத்தமயமாக்கலை திரும்பபெறாமல், பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல் தமிழர் - சிங்களர் ஒற்றுமை என்பது சாத்தியமே இல்லை. எனவே இதற்கான கோரிக்கைகள் சிங்கள மக்களிடையே தோன்ற வேண்டும். இலங்கையில் ஒரு தேசிய விடுதலை இயக்கமோ அல்லது பாட்டாளி வர்க்க இயக்கமோ உருவாகி தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்கும்போதுதான், தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரும்போதுதான் தமிழர்களிடமிருந்து ஒற்றுமைக்கான குரல் ஒலிக்கும். எனவே, சிங்கள மக்கள் பக்சே கும்பலின் ஆட்சி நீக்கத்திற்குப் போராடும் அதே வேளையில், தமிழின ஒடுக்குமுறைக்காக இலங்கைப் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டதும் நிலவி வரும் நெருக்கடிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை உணர வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாத பாசிசம் தமிழீழ மக்களுக்கு மட்டுமின்றி சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே என்பதை தற்போது வரலாறு நிரூபித்துவிட்டது. எனவே தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு சிங்கள மக்கள் குரல் கொடுக்க வேண்டியது இன்றைய போராட்ட வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். தமிழின ஒடுக்குமுறையை தனது அரசியல் அடித்தளமாக கொண்டு செயல்படும் இலங்கை ஆளும் வர்க்கங்களின் பாசிச ஆட்சியை வீழ்த்துவதற்கு அது ஒரு முக்கிய துவக்கப் புள்ளியாக அமையும்.

 

(முற்றும்)