சிறப்பு கட்டுரை: பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை எதிர்ப்போம்! - மஜஇக

உலகெங்கும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள்தான் இவற்றையும் கூட சாத்தியமாக்கும். மாறாக ஏகாதிபத்தியங்களோ, ஐ.நா.வோ தானாகவே முன்வந்து செய்யும் எனும் மாயைகளில் கிடந்தால், பாலஸ்தீன போராட்டம் ஈழ விடுதலை போராட்டத்தைப் போல துடைத்தெறியப்படும்.

சிறப்பு கட்டுரை: பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின்  இன அழிப்பு போரை எதிர்ப்போம்! - மஜஇக

பாசிச இஸ்ரேல் ஆளும் வர்க்க கும்பல் அமெரிக்க-நேட்டோவின் வேட்டை நாயாக செயல்பட்டு பாலஸ்தீனத்தின் மீது அரை நூற்றாண்டிற்கும் மேலாக இன அழிப்பு போரை நடத்தி வருகிறது. இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது; 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை அகதிகளாக வெளியேற்றியுள்ளது. பாலஸ்தீன பகுதிகளில் யூதமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. கார்ப்பரேட் நலன்களில் இருந்து “அகண்ட இஸ்ரேல்” எனும் பெயரில் அகண்ட கார்ப்பரேட் ராஜ்ஜியத்தை உருவாக்கவே பாலஸ்தீனத்தையும், அண்டை நாடுகளையும் ஆக்கிரமித்து வருகிறது. அதன் பொருட்டே மத்திய கிழக்கில் அமெரிக்க-நேட்டோவின் மிகவும் நம்பிக்கைக்குரிய யுத்ததந்திர கூட்டாளியாக செயல்பட்டு வருகிறது. பாலஸ்தீன தேசிய இன ஒடுக்குமுறையை தனது அரசியல் வாழ்விற்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. மத ஐதீகத்தின் அடிப்படையில் “யூத தாயகம்” (அ) ஜியோனிசம் எனும் பிற்போக்கான மதவாத-மரபினவாத தேசியத்தை முன்வைத்து பாசிச அரசை நிறுவி வருகிறது. பாலஸ்தீன மக்களும் இந்த இன அழிப்பு, ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாகவே இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையை அணுக வேண்டும். 2022 டிசம்பர் மாதம் நெதன்யாகு கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பது; காசாவை முற்றாக அழிப்பது; பாலஸ்தீனத்தை அழித்து யூத நாடு உருவாக்குவது என்று அறிவித்து பாலஸ்தீன இனப்படுகொலைக்கு அறைகூவல் விடுத்தது. அரேபியர்களின் புனிதத் தலமான அல்-அக்‌ஷா மசூதியை இடிக்க திட்டமிட்டது. அதிதீவிர வலதுசாரி ஜியோனிச தீவிரவாத குழுக்கள் மூலம் ஜனவரி 2023 முதல் பாலஸ்தீன மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்து வந்தது. இதற்கு எதிர்வினையாக ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியது. அதில் 1400 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது ஏவுகனை மூலம் இதுவரை 6500க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை (இதில் பாதி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்) கொன்று குவித்துள்ளது. மேற்குக் கரையிலுள்ள ஜியோனிச குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களை கொல்வதற்கு துப்பாக்கிகளை வழங்கியுள்ளது. 

பாலஸ்தீன பகுதிகள் மீது “முழு யுத்தத்தை” அமெரிக்க-நேட்டோ ஆசியுடன் இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமெரிக்கா போர்கப்பல்களை அனுப்பியுள்ளது. மத்திய கிழக்கின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிக்க பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யும் பொருட்டு யுத்தவெறியுடன் அமெரிக்க- இஸ்ரேல் பாசிச கும்பல் அலைகின்றது. மத்திய கிழக்கிலும், பிற உலக நாடுகளிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வெகுண்டெழுந்து வரும் மக்கள் போராட்டங்கள் அமெரிக்க-இஸ்ரேல் கும்பலின் மத்திய கிழக்கு மேலாதிக்கத்திற்கான ‘அகண்ட இஸ்ரேல்’ ராஜ்ஜியக் கனவை ஆட்டங்காணச் செய்துள்ளது. சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான இத்தகைய உள்நாட்டு அரசியல் போர்களை ஆதரிப்பதும் இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி கும்பலை எதிர்த்து போராடுவதும் நமது உடனடிக் கடமையாகும்.

பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டதன் சுருக்கமான வரலாறு

முதல் உலகப்போரில் உத்துமானிய (ஓட்டோமான்) பேரரசை வீழ்த்தி அவற்றின் காலனிகளை பங்கிட்டுக் கொள்ளும் சதி திட்டத்துடன் பிரிட்டனும், பிரான்சும் யூத செல்வந்தர்கள், அரபு மன்னர்களின் ஆதரவை திரட்ட முயன்றன. ஏற்கனவே உலக ஜியோனிச அமைப்பு ஜியோனிச அடிப்படையில் “யூத தாயகம்” அமைப்பதற்கான நோக்கத்தில் 1897ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. அவை பிரிட்டன் ஆளும் வர்க்கங்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தன. ஆகவே சுதந்திர யூத நாடு, அரபு நாடு உருவாக்குவதாக அவர்களுக்கு வாக்குறுதி தந்து பெரும் நிதி ஆதாரத்தை பிரிட்டன் திரட்டியது. இதற்கான பிரிட்டனின் பெல்ஃபேர் பெல்ஃபேர் (Belfour) பிரகடனம்தான் (1917) இன்றுவரை நடந்துவரும் பாலஸ்தீன இன அழிப்பிற்கு அடிப்படையாக இருந்துவருகிறது. சுதந்திர யூத தேசம் மற்றும் சுதந்திர அரபு தேசம் உருவாக்கப்படும் என்று பெல்ஃபேர் பிரகடனம் கூறியது. பாலஸ்தீன மக்களின் சிவில், மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறியது. ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு இன்று வரை இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. இந்த பிரகடனத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்கவில்லை. அப்போது பாலஸ்தீன மக்கள் தொகை 60 ஆயிரம் யூதர்கள் உள்ளிட்டு மொத்த மக்கள் தொகை 12 லட்சம் ஆகும். 1890களிலிருந்து யூதார்களுக்கும் இசுலாமியார்களுக்கும் முரண்பாடுகள் நீடித்து வந்தன. பிரிட்டிஷ் காலனியாக பாலஸ்தீனம் மாற்றப்பட்ட பிறகு பிரச்சினை தீவிரமடைகிறது. இந்த பிரகடனம் அறிவிக்கப்பட்ட உடனேயே பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் தொடங்கிவிட்டது.  

முதல் உலகப் போரில் ஓட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்டது. நேச நாடுகள் கூட்டமைப்பு (League of Nations) ஒப்புதலுடன் காலனியாதிக்க ஆணையின் (British Mandate) மூலம் செப்டம்பர் 1923 முதல் அதிகாரப்பூர்வ பிரிட்டன் காலனியாதிக்கம் பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டனில் தொடங்கியது. இதில் பாலஸ்தீனத்திற்கான ஆணை 1948 மே 14வரை நீடிப்பதாக சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரிட்டன் யூதர்களை இலட்சக்கணக்கில் பாலஸ்தீன மண்ணில் குடியேற்றத் தொடங்கியது. பிரெஞ்சு காலனிய ஆணையின் மூலம் சிரியா மற்றும் லெபனான் அதன் காலனிகளாக மாற்றப்பட்டன. சுதந்திர தேசங்களை உருவாக்குவதாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கொடுத்த வாக்குறுதிகள் பொய் என்று தெரிந்த பிறகு அரபு நாடுகள் ஏமாற்றமடைந்தன. 

1936, 37, 39ம் ஆண்டுகளில் பாலஸ்தீன மக்களும், இயக்கங்களும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராகவும், வலிந்து திணிக்கப்படும் யூதக் குடியேற்றங்களுக்கு எதிராகவும் பெரும் போராட்டங்கள் நடத்தினர். அவற்றை பிரிட்டன் கடுமையாக ஒடுக்கியது. வீடுகள் இடிப்பு, படுகொலை, கைதுகள் என்று இரத்த வெறியுடன் பிரிட்டனும், அவற்றின் ஏவல்களான யூத செல்வந்தர்களும் செயல்பட்டனர். 1938ஆம் ஆண்டில் பிரிட்டன் இரகசியமாக செயல்பட்ட ஜியோனிச தீவிரவாத குழுக்களை தடை செய்ததால் அவை பிரிட்டன் அரசுக்கு எதிராகத் திரும்பின. 1946ஆம் ஆண்டு ஜெருசலமில் இருந்த கிங் டேவிட் ஹோட்டல் மீது இர்குன் (Irgun) எனும் ஜியோனிசக் குழு குண்டு வீசியது. அதில் பிரிட்டன் மக்கள் உள்ளிட்டு 90 பேர் கொல்லப்பட்டனர். இதன் பிறகு பிரிட்டனுக்கும் ஜியோனிச குழுக்களுக்கும் முரண்பாடு முற்றியது. 

2வது உலகப்போருக்குப் பிறகு நாஜிச ஹிட்லர் கும்பலால் மாபெரும் இனப்படுகொலைக்கு ஆளான (சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்) யூத உழைக்கும் மக்கள் இப்பகுதிகளில் அதிகளவில் குடியேற்றம் செய்யப்பட்டனர். 

1947ல் ஐ.நா பெல்ஃபேர் பிரகடனத்தை அங்கீகரிக்கும் வகையில் பிரிவினைத் திட்டத்தை முன்வைத்தது. பாலஸ்தீனம் அமெரிக்காவின் பிடிக்கு போவதை பிரிட்டன் ஏற்காததாலும், ஜியோனிச அமைப்புகளுடன் கடுமையாக முரண்பட்டதாலும் ஐ.நா.வில் அதற்கு எதிராக வாக்களித்தது. அமெரிக்கா ஆதரித்து வாக்களித்தது. அது ஒரு அநீதியான பிரிவினையாக இருந்தது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை அங்கீகரிப்பதாக இருந்தது. இஸ்ரேல் 56%; பாலஸ்தீனம் 41%; ஜெருசலம் 3% என்று நிலபரப்பு பிரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடற்கரை ஒட்டிய வளமான பகுதிகள் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்டது. யூதர்களைவிட இரண்டுமடங்கு அதிகமாக இருந்த பாலஸ்தீன மக்களுக்கு குறைவான நிலப் பரப்பு ஒதுக்கப்பட்டது. ஜெருசலம் சர்வதேச கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது என முடிவுசெய்யப்பட்டது. இதை பாலஸ்தீன மக்கள் ஏற்கவில்லை.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கான ஆணை (British Mandate) முடிந்தவுடன் 1948ம் ஆண்டு மே14ம் தேதி பிரிட்டன் வெளியேறியது. மே14ம் தேதி நள்ளிரவில் இஸ்ரேல் தன்னை ஒரு சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டாலும் அப்பகுதி பல்வேறு ஏகாதிபத்தியங்களின் காலனியாதிக்கத்திற்கான போட்டிக்களமாக மாற்றப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா இஸ்ரேலில் தனது எடுபிடி முதலாளித்துவ கும்பலை உருவாக்கி தனது புதிய காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வர துவங்கியது. இஸ்ரேலின் யூதமயமாக்கல் இராணுவமயமாக்கல் விரிவடைய துவங்கியது. 

மத்திய கிழக்கு நாடுகள் நேரடி காலனியாதிக்கத்திலிருந்து புதிய காலனிய வடிவிலான அரைக் காலனிகளாக மாற்றப்பட்டன. 1948-49 ஆண்டுகளில் நடந்த முதல் அரபு- இஸ்ரேல் போரில் காஸா பகுதியை எகிப்தும், மேற்குகரை மற்றும் கிழக்கு ஜெருசலத்தை ஜோர்டனும் கைப்பற்றிக் கொண்டன. அதே காலகட்டத்தில் பாலஸ்தீனப் பகுதிகள் மீதான உள்நாட்டு ஆக்கிரமிப்பு போரையும் இஸ்ரேல் நடத்தியது. உள்நாட்டில் 56% சதவிகிதத்திலிருந்து 78% ஆக நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொண்டது இஸ்ரேல். யூதக் குடியேற்றங்கள் தொடர்ந்தன. மீதமுள்ள 22% பகுதிகளில் மேற்கு கரை, காஸா என இரண்டு உள்நாட்டு காலனிகளாக நிலத் தொடர்ச்சியற்று பாலஸ்தீனம் பிளவுப்படுத்தப்பட்டது. பாலஸ்தீன தேசிய இனம் இரண்டாக உடைக்கப்பட்டது. இந்த கட்டத்தில் சுமார் 7,60,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். 15000 பேர் கொல்லப்பட்டனர். இதை மாபெரும் பேரழிவு காலம் என பாலஸ்தீன மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முதல் பனிப்போர் காலகட்டத்தில் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டணியும், ரசிய-ஜோர்டான் - எகிப்து கூட்டணியும் மறுபங்கீட்டுப் போரில் குதித்தன. அவற்றில் 1967ம் ஆண்டு 6 நாட்கள் நடந்த போர் “யோம்-கிப்பூர் போர்” (இரண்டாவது அரபு இஸ்ரேல் போர்) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க உதவியுடன் அதிகளவு இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்ட இஸ்ரேல் சிரியாவின் கோலன் குன்றுகளை கைப்பற்றியது. மேற்கு கரையை (கிழக்கு ஜெருசெலம் உள்ளிட்ட) ஜோர்டனிடமிருந்து மீண்டும் கைப்பற்றியது. எகிப்திடமிருந்து காசாவை மீண்டும் கைப்பற்றியதுடன் கூடுதலாக அந்நாட்டின் சினாய் தீபகற்பத்தையும் கைப்பற்றியது. இவ்வாறு அகண்ட இஸ்ரேல் திட்டத்திற்கான எல்லை பரப்புகளை விரிவுபடுத்தி எண்ணெய் -எரிவாய வயல்களை கொள்ளையடிக்க துவங்கியது. இக்கட்டத்தில் காஸா, மேற்குகரையில் யூதக் குடியேற்றங்களை அதிகப்படுத்தி தனது காலனியாதிக்கத்தை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி நிறுவியது. காஸாவை திறந்த வெளி சிறைச் சாலையாக மாற்றியது. மேற்கு கரை, காஸாவில் யூதக் குடியேற்றங்களுக்காக கட்டுமான பணிகளை தீவிரப்படுத்தியது. இக்கட்டத்தில் சுமார் 20,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இக்கட்டத்தை “பின்னடைவு காலம்” என பாலஸ்தீனர்கள் கூறுகின்றனர். பிறகு எகிப்து, இஸ்ரேல் நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்டது. இஸ்ரேலை அங்கீகரிப்பது; எண்ணெய் - எரிவாயு வர்த்தகம் உள்ளிட்ட விசயங்களில் ஒப்பந்தம் (1978 கேம்ப் டேவிட் ஒப்பந்தம்) எட்டப்பட்டு சினாய் தீபகற்பம் எகிப்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஜோர்டனுடன் சமரச ஒப்பந்தம் 1994ல் எட்டப்பட்டு இஸ்ரேலை அந்நாடு அங்கீகரிப்பதாக ஒத்துக் கொண்டது.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் தோற்றம்

1959ல் யாசர் அராபத் ஃபதா (Fatah) எனும் அரசியல் இயக்கத்தை துவக்குகிறார். 1964ல் ஃபதா உள்ளிட்ட பல குழுக்கள் இணைந்து பாலஸ்தீன தேசிய விடுதலை இயக்கம் (PLO) உருவாக்கப்பட்டது. அதற்கு தலைவராக அராஃபத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய விடுதலை, ஆயுதப் போராட்டம் எனும் அடிப்படையில் துவங்கப்பட்ட இவ்வியக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற துவங்கியது. 1967ம் ஆண்டு எகிப்தில் இயங்கிய “இஸ்லாமிய சகோதரத்துவம்” எனும் மதவாத தேசியம் பேசும் இயக்கத்திலிருந்து ஹமாஸ் தோன்றியது. அரபு நாடுகளில் இடதுசாரி, முற்போக்கு, தேசிய விடுதலை இயக்கங்கள் செல்வாக்கை ஒழிக்கும் பொருட்டு அமெரிக்கா வளர்த்துவிட்ட பல்வேறு அமைப்புகளில் அரபு வசந்தத்தில் பங்குபெற்ற இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பும் ஒன்று. 

பாலஸ்தீன விடுதலை இயக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற துவங்கியதானது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால், பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் முரண்பாடுகளை திட்டமிட்டு உருவாக்கியது. 

பெல்ஃபேர் பிரகடனத்தை அங்கீகரிக்கும் வகையில் ஐ.நா.வின் பிரிவினை திட்டம் 1947ல் அமைந்தது. அதாவது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசை அங்கீகரிப்பதாக இருந்தது. பிறகு இதன் அம்சங்கள் 1974ல் ஐ.நா.வால் முன்வைக்கப்பட்ட இருதேசக் கொள்கையில் இடம்பெற்றன. 1987ல் ஐ.நா மூலம் இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான நிர்பந்தம் தரப்பட்டு அதை பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவரான அராபத் ஏற்றுக் கொண்டார். 1993 மற்றும் 1995ல் இருதேச கொள்கையானது ஓஸ்லோ ஒப்பந்தங்களுடன் இணைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் இன ஒடுக்குமுறை இஸ்ரேல் அரசை அங்கீகரித்துக் கொண்டே பாலஸ்தீன சுயாட்சியை சந்தர்ப்பவாதமாக முன்வைத்தன. அராபத்தின் இந்த செயலால் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்து ஹமாஸின் செல்வாக்கு வளர துவங்கியது. ஹமாஸ் பல்வேறு ஆயுத குழுக்களை இணைக்கத் துவங்கியது.

பிறகு, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி; மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார உதவிகள் நிறுத்தப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் பி.எல்.ஓ பலம் இழக்க தொடங்கியது. முதல் பாலஸ்தீன எழுச்சி 1987ல் ஹமாஸ் தலைமையில் நடந்தது. ஹமாஸ் இயக்கத்தை வீழ்த்தவும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை சட்டவாதத்தில் மூழ்கடிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டது. இந்த நிலைமைகளை தனக்கு சாதகமாக மாற்ற விரும்பிய அமெரிக்கா தனது தலைமையின் கீழ் ஓஸ்லோ ஒப்பந்தத்தை முன் வைத்தது. இதில் இஸ்ரேல் பிரதமரும், யாசர் அராபத்தும் கையெழுத்திட்டனர். அராபத் ஆயுத போராட்டத்தை கைவிட்டு பாலஸ்தீன மக்களின் கருத்தறியாமல் இதில் கையெழுத்திட்டு ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்துகொண்டார். 1) 1993ல் முதல் ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் இன ஒடுக்குமுறை அரசை பி.எல்.ஓ அங்கீகரித்தது; இஸ்ரேல் பி.எல்.ஓ. வை அங்கீகரித்தது. 2) 1995ல் 2வது ஒப்பந்தம் மூலம் பி.எல்.ஓ தலைமையில் கட்டுப்படுத்தப்பட்ட - தற்காலிக - சுயநிர்வாக பாலஸ்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டது; மேற்கு கரையை மூன்று பகுதிகளாகப் பிரித்தது. பிறகு படிப்படியாக இன ஒடுக்குமுறை அரசின் கீழ் அதிகார சபையை அரசாக மாற்றியமைப்பது என்ற செயல்முறையைத் தொடர்வது என முடிவுசெய்யப்பட்டது. ஆனால் அது தொடரவில்லை. இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியது. இது சாரத்தில் 1) இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதிகளை சட்டபூர்வமாக்கியது; 2) இஸ்ரேலின் இன ஒடுக்குமுறை அரசின் கீழ், தற்காலிக-சுயநிர்வாக அதிகார சபை வடிவத்தில், ஒரு தரகு பாலஸ்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டது. அதிகார சபை வடிவத்தில் அமெரிக்கா-இஸ்ரேலை சார்ந்து இயங்கும் தரகு பாலஸ்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டது. அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் உள் ஒப்பந்தம் (sub contract) பெற்று இயங்குமாறு உருவாக்கப்பட்டது. 1996ல் நடந்த முதல் தேர்தலில் பி.எல்.ஓ அதிகார சபைக்கு பொறுப்பேற்றது. அதன் பிறகு பாலஸ்தீன பகுதிகளில் உலகமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. ஐ.எம்.எஃப்., உலக வங்கி மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் நிதி மூலதனம் அனுமதிக்கப்பட்டது.

1995 ஓஸ்லோ ஒப்பந்தம் மேற்கு கரை குடியேற்றங்களை மூன்றாக பிரித்து (Area A 18%, Area B 22%, Area C 60 %) பாலஸ்தீனர்களின் வெளியேற்றம், யூத குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை சட்டபூர்வமாக்கியது. Area A பாலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. Area B பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் அரசின் கூட்டுக் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. இப்பகுதியில் அதிகார சபைக்கு சிவில் பாதுகாப்பு உரிமை மட்டுமே வழங்கப்பட்டது. இராணுவ பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. Area C முழுவதும் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. சாரத்தில் Area A மட்டுமே பாலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மூன்றாவது செயல்முறை ஒப்பந்தம் என்பது இதன் தொடர்ச்சியாக அதாவது இன ஒடுக்குமுறை இஸ்ரேல் அரசின் கீழ் பாலஸ்தீன அரசு உருவாக்குதல் என்பதாக அமெரிக்காவும், அதன் பொம்மையான ஐ.நா. வும் கூறியது. அதாவது எவ்வித அதிகாரமும் இல்லாத சுயநிர்வாக பாலஸ்தீன அதிகார சபைக்கு அரசு அந்தஸ்து தருவது எனும் பெயரில் “அமைதி வழி” தேசிய விடுதலை என்ற திருத்தல்வாதம் முன்வைக்கப்பட்டது.

ஓஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேல் அரசின் இன ஒடுக்குமுறையை, அதிகார அடிப்படையை கேள்வி எழுப்பவில்லை. எல்லைப் பிரச்சினை, நிலப்பரப்பு மற்றும் இயற்கை வளங்களை பங்கிட்டுக் கொள்வது, அரசியல் மற்றும் பொருளாதார உரிமை, அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட எதையும் கணக்கில் கொள்ளவில்லை. ஐ.நா.வின் இந்த இருதேசக் கொள்கை 1967க்கு முந்தய நிலப்பரப்பு மற்றும் எல்லைகளை உத்தரவாதப் படுத்துவதாக கூறியது. அதாவது, 1947 பிரிவினை திட்டத்தை தீர்வாக வைத்தது. அது அநீதியான பிரிவினை என்று முன்பே பார்த்தோம். ஐ.நா.விற்கும் இரு ஏகாதிபத்திய முகாம்களுக்கும் அன்று முதல் இன்று வரை பாலஸ்தீனப் பிரச்சினை என்பது மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற, அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற பிரச்சினை மட்டுமே. அதை பாலஸ்தீனத்தின் தேசிய இனப் பிரச்சினையாக கருதவில்லை. 

அதிகாரமற்ற ஓஸ்லோ ஒப்பந்தம் செய்து கொண்டதை கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் இஸ்ரேல் பிரதமர் ரபின் (Rebin) ஜியோனிச தீவிரவாத குழுக்களால் கொல்லப்பட்டார். இஸ்ரேல் இன ஒடுக்குமுறை அரசை அங்கீகரிக்கும் பி.எல்.ஓவின் முடிவு மாபெரும் வரலாற்றுப் பிழையாகும். குறைந்தபட்ச உரிமைகளைக் கூட உத்தரவாதப்படுத்தாத இந்த ஓஸ்லோ ஒப்பந்தம் இறந்தே பிறந்த குழந்தையைப் (Dead Born Accord) போன்றது என்று பாலஸ்தீன அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது மிகவும் சரியானதே. ஓஸ்லோ ஒப்பந்தம் மூலமாக இஸ்ரேலுக்கு கட்டுப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டது என்பது துரோக ஒப்பந்தம் என நாளடைவில் உணரப்பட்டு பாலஸ்தீன மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் தூக்கியெறியப்பட்டது.

ஹமாஸ் இயக்கத்தின் தலைமையில் திரண்ட மக்கள் 1987-88 ஆண்டுகளில் எழுச்சி பெற்று போராடினார்கள். இது முதல் எழுச்சி எனப்படுகிறது. இஸ்ரேல் இராணுவ வீர்கள், இராணுவ டாங்கிகள் தாக்கி அழிக்கப்பட்டன. ஈரானும், லெபனானில் உள்ள ஹிஸ்புலா அமைப்பும் அனைத்துவித உதவிகளையும் ஹமாஸிற்கு செய்தது. மீண்டும் 2000ம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் அல்-அக்‌ஷா மசூதிக்கு வருகை தந்ததை எதிர்த்து 2வது எழுச்சி (Intifiada) இயக்கத்தை பாலஸ்தீன மக்கள் நடத்தினர். பிறகு 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. ஹமாஸ் காஸாவில் ஆட்சி அமைத்தது. ஹமாஸ் பி.எல்.ஓ. வை காசாவிலிருந்து வெளியேற்றியது. பி.எல்.ஓ வின் அதிகார சபை மேற்கு கரையுடன் சுருங்கிவிட்டது. ஹமாஸ் ஆயுத நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தியது. 

அதன் பிறகு தொடர்ந்து 2008, 2012, 2014 மற்றும் 2021 ஆண்டுகளில் இஸ்ரேல் அரசால் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவது; அகதிகளாக வெளியேற்றப்படுவது; வீடுகள் இடித்து தள்ளப்படுவது; கைதுகள், என்று ஆக்கிரமிப்பு, இனவழிப்பு போர் தொடர் நிகழ்வாகிப் போனது. 2007ம் ஆண்டுக்கு பிறகு, காஸா பகுதியை முழு கட்டுப்பாட்டிற்கு (Blockade) இஸ்ரேல் கொண்டு வந்தது. நீர், மின்சாரம், உணவு விநியோகம் போன்றவற்றை அவ்வப்போது நிறுத்தி மக்களை கொன்று குவிக்க துவங்கியது. மின்சார வேலி, ராடர் கண்காணிப்பு கருவி அமைத்து உலகின் மிகப்பெரிய ‘திறந்தவெளி சிறைச் சாலையாக’ காஸாவை ஜியோனிச மத-இனவெறி அரசு மாற்றியுள்ளது. மக்கள் இஸ்ரேலின் கட்டுப்பாடுகளைக் கடந்துதான் எகிப்திற்கு அகதிகளாக சென்று வரும் நிலைமை உள்ளது. எனவே சுரங்கப்பாதைகள் அமைத்து அதன் வழியாகத்தான் சென்று வருகின்றனர். இன்றுவரை இதுதான் நிலைமை.

இன்று மொத்த நிலப்பரப்பில் (22,145 சதுர கி.மீ.) சுமார் 90 லட்சம் யூதர்கள் 90 சதவிகித நிலத்தில் வாழ்கின்றனர். 10-15% நிலப்பரப்பில் (மேற்கு கரை மற்றும் காசா) சுமார் 20 லட்சம் பாலஸ்தீன மக்கள் காசாவிலும் (365 சதுர கி.மீ.) மேற்கு கரையில் (1400 சதுர கீ.மீ.) 17 லட்சம் பாலஸ்தீன மக்களும் வாழ்கின்றனர். மேற்குக் கரையில் குடியேற்றப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆகும்.

ஏகாதிபத்திய முகாம்களின் யுத்த களமாக மாறும் மத்திய கிழக்கு! பலியிடப்படும் பாலஸ்தீனம்!

அமெரிக்காவிற்கும், இஸ்ரேல் அரசுக்குமான உறவு உலகம் அறிந்த உண்மையாகும். 90% நிலப்பரப்பை கைப்பற்றியுள்ள இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் 15க்கும் மேற்பட்ட எரிவாயு, எண்ணெய் வயல்கள் உள்ளன. இவற்றை அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய கார்ப்பரேட்டுகள் பங்கு போட்டு வருகின்றன. அல்மா ஆயில், லெவியாதன், டமர் (Tamar) உள்ளிட்ட இந்த வயல்களை முழுவதுமாக இயக்க ஆரம்பித்தால் இஸ்ரேல் எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதியில் உலகின் 80வது இடத்திலிருந்து முதல் 30 இடங்களுக்குள் முன்னேறும் என்று கூறப்படுகிறது. இதற்காகவே பல்வேறு “குழாய் திட்டங்களை” உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் குழாய் திட்டம், யூரோ-ஆசியா இணைப்பு திட்டம், கிழக்கு மத்திய தரைக்கடல் எரிவாயு கூட்டமைப்பு போன்றவைகள் கையெழுத்தாகியுள்ளன. இந்த திட்டங்களின் கீழ்வரும் எரிவாயு மற்றும் எண்ணெய் வயல்களுக்கு லைசன்ஸ் கேட்டு சீனா, இரசியா மற்றும் இந்தியா விண்ணப்பித்துள்ளன. இஸ்ரேலின் பட்ஜெட்டில் 25% முதல் 40% வரை அமெரிக்காவின் நிதி பங்களிப்பு உள்ளது. மேலும் அணு ஆயுத நாடாக இஸ்ரேலை வளர்த்துள்ளது அமெரிக்கா. மத்திய கிழக்கு மேலாதிக்கத்திற்கான நம்பகமான கூட்டளியாக; துணை மேலாதிக்க சக்தியாக இஸ்ரேல் எனும் வேட்டை நாயை அமெரிக்க-நேட்டோ ஓநாய் கும்பல் வளர்த்துள்ளது.

ஆயுத ஏற்றுமதியில் இஸ்ரேல் உலகில் 10வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவும் ரசியாவும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. மத்திய கிழக்கில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் இரண்டாக உடைந்து ஒரு பிரிவு ரசிய முகாமிற்கு சென்றது; ஆப்கனிலிருந்து தாலிபான்களால் வெளியேற்றப்பட்டது; ஈரானின் ரசிய சார்பு வளர்ச்சி; உக்ரைன் போரில் ரசியா மீது விதித்த பொருளாதார தடை தோற்றுப் போதல்; அமெரிக்க - ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் எரிவாயு வர்த்தகம் வீழ்ந்துபோதல்; ஈரான் - இஸ்ரேல் எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்படுதல்; எகிப்து, துருக்கியுடனான முரண்பாடு; சவுதி சீனா-ரசியாவுடன் டாலரை மறுத்து எண்ணெய் வர்த்தகம் செய்தல் போன்ற காரணங்களால் மத்திய கிழக்கில் அமெரிக்க - நேட்டோவின் செல்வாக்கு வீழ்ந்துவருகிறது. எனவே அமெரிக்க - நேட்டோவிற்கு இஸ்ரேல் மற்றும் அதை சுற்றியுள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க வேண்டியுள்ளது. அண்மையில் காஸா, மேற்குக் கரை பகுதிகளில் 122 டிரில்லியன் கியூபிக் மீட்டர் (TCM) எரிவாயு, 17.5 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்குக் கரையில் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மெகட் (Meged) எண்ணெய் வயலையும் ஒரு எரிவாயு வயலையும் கைப்பற்றியுள்ளது. ஆகவேதான் பாலஸ்தீனத்தை முற்றாக அழித்து அகண்ட இஸ்ரேலை உருவாக்க அமெரிக்க இஸ்ரேல் கூட்டணி துடிக்கிறது. அதன் மூலம், மத்திய கிழக்கில் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயல்கிறது.

அகண்ட இஸ்ரேல் என்பது எகிப்து நீரோடை முதல் யூப்ரடீஸ் நதி வரை விரிவடையும் நிலப்பரப்பு என்று இஸ்ரேல் கூறுகிறது. இதற்கான வரைபடத்தை நெதன்யாகு ஐ.நாவில் வெளியிட்டார்.  அத்திட்டம் முழு பாலஸ்தீனம், எகிப்து, சிரியா, சவுதி, லெபனான், ஈராக் ஜோர்டான் மற்றும் அம்மான் போன்ற நாடுகளின் எல்லைகளையும் நிலப்பரப்புகளையும் ஆக்கிரமிக்கும் திட்டமாகும். இந்த திட்டம் மத்திய கிழக்கில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கொள்ளையடிக்கும் திட்டமாகும். மத்திய கிழக்கை மறுபங்கீடு செய்து அங்கு அமொ¤க்க -நேட்டோ - இஸ்ரேலின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் திட்டமாகும். யூதர்களுக்கு ஆண்டவனால் பைபிளில் வாக்களிக்கப்பட்ட பூமி எனும் பிற்போக்கான மத ஐதீகத்தை சாட்சியாக வைத்து மக்கள் ஆதரவை திரட்டவும், நியாயப்படுத்தவும் அமொ¤க்க - இஸ்ரேல் கூட்டணி முயல்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் அமொ¤க்க- இஸ்ரேல் கூட்டணிக்கு எதிராக திரும்புவதற்கான அரசியல் - பொருளியல் காரணம் இதுவே ஆகும்.        

இஸ்ரேல் அதிகளவில் அமெரிக்காவின் நிதியுதவி மற்றும் மூலதனத்தை பெறும் நாடாக உள்ளது. பிப்ரவரி 2022 வரை 150 பில்லியன் டாலர்கள் அமொ¤க்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் வருடத்திற்கு 2.67 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி அளித்து வருகிறது. அது 2009லிருந்து 3 பில்லியன் டாலராக உயர்ந்தது. 2019லிருந்து 3.8 பில்லியன் டாலராக உயர்ந்தது.

இஸ்ரேல் ரசியாவிடமிருந்து 2.14 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது. 2021ஆம் ஆண்டு மட்டும் உலோகம் (447 மில்லியன் டாலர்), அரிதான உலோகம் (393 மில்லியன் டாலர்), இயந்திரங்கள் (145 மில்லியன் டாலர்), உபகரணங்கள், கருவிகள் (127 மில்லியன் டாலர்) போன்றவற்றை இஸ்ரேலுக்கு ரசியா ஏற்றுமதி செய்தது. மேலும், ராணுவத் தளவாடம், போர்க் கருவிகள், உதிரி பாகங்கள் போன்றவற்றை சுமார் 24.3 மில்லியன் டாலர்கள் மதிப்பில் ரசியா இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ஐ.நா.வில் ரசியாவிற்கு ஆதரவாக வாக்களித்தது. அந்தளவிற்கு இஸ்ரேலும்-ரசியாவும் நெருக்கமான கூட்டாளிகளாக உள்ளனர். 

இஸ்ரேலுடன் ரசியா எண்ணெய் வர்த்தகம் செய்து வருகிறது. மேலும் 2010ம் ஆண்டு போடப்பட்ட ரசிய-இஸ்ரேல் இராணுவ தளவாட ஒப்பந்தம் அமலில் உள்ளது. அமெரிக்காவையடுத்து ரசியாவிடமிருந்துதான் அதிகளவில் இராணுவ தளவாடங்களை இஸ்ரேல் இறக்குமதி செய்கிறது. சீனாவின் புதிய பட்டுச்சாலை திட்டத்தில் இஸ்ரேல் இணைந்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்து சீனாதான் இஸ்ரேலின் 2வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகும். தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, விவசாய தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இஸ்ரேல்-சீனா இடையே 72 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அமலில் உள்ளன. ஹைஃபா பே (Haifa Bay), ஆஸ்தாத் போர்ட் (Ashdod Port) என்ற இரண்டு பெரிய துறைமுகங்களை இஸ்ரேலில் சீனா அமைத்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு சீனாவின் ஏற்றுமதி 17.7% அதிகமாகியுள்ளது. அதாவது 192 மில்லியன் டாலரிலிருந்து (1995) 13.28 பில்லியன் டாலராக (2021) உயர்ந்துள்ளது. சீனா, ரசியாவுடனான இஸ்ரேலின் அரசியல், பொருளாதார, இராணுவ உறவுகள் பலமடைந்து வருவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மறுபக்கம் பாலஸ்தீன பகுதிகளில் சீனா, ரசியாவின் நிதியுதவி, மூலதனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேற்குக் கரை அதிபர் அப்பாஸ் புதிய பட்டுச் சாலை திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். 

90% நிலப்பரப்பு, எண்ணெய் - எரிவாயு வயல்கள் என்று சந்தையை முழுக்க இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது. ஆகவேதான் “ஓஸ்லோ வழியிலான இருதேசக் கொள்கை” பேசி இன ஒடுக்குமுறை பாசிச இஸ்ரேல் அரசை அங்கீகரித்துக் கொண்டே “பாலஸ்தீன சுதந்திரம்” பற்றி சந்தர்ப்பவாதமாக ரசிய-சீன அணி பேசுகிறது. பாலஸ்தீனத்திற்கு 10% நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. அதற்கு எவ்வித வளங்களோ, மூலப்பொருட்களோ, எண்ணெய் எரிவாயு வயல்களோ இல்லை. வளங்கள் அதிகமாக உள்ள மத்திய தரைக் கடல் அதையட்டிய கடற்கரை அனைத்தும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. பி.எல்.ஓ மற்றும் ஹமாஸ் ஆட்சிக்கு இந்த வளங்கள் மீது எவ்வித அதிகாரமும் இல்லை; சந்தை இல்லை; குறிப்பிடத்தக்க அளவில் முதலாளித்துவ வளர்ச்சி இல்லை. எனவே “பாலஸ்தீன விடுதலை” என்ற சந்தர்ப்பவாதத்தின் மூலம் இஸ்ரேல் அரசுடன் சந்தையைப் பங்கிட்டுக் கொள்வதற்கான “பேரம் பேசும் பொருளாக” பாலஸ்தீன பிரச்சனையை பயன்படுத்தி வருகிறது. 

சவுதியுடனான தனது அணிச்சேர்க்கையை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆபிரகாம் ஒப்பந்தத்தை 2020ம் ஆண்டு அமெரிக்கா முன்வைத்தது. இதில் சவுதி-இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகள் தலைமை தாங்குகின்றன. சவுதியை நேட்டோ கூட்டாளியாக (Non-NATO alliance) மாற்றுவது; சவுதியை அணு ஆயுத நாடாக மாற்றுவது; சவுதி-இஸ்ரேல்-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்ற அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன. சவுதியை தனது முகாமிற்குள் இழுக்க சவுதி-ஈரான் 2023 ஒப்பந்தத்தை சீனா முன்வைத்து வெற்றி பெற்றுள்ளது. இதை ரசியா வரவேற்றுள்ளது. ஏற்கனவே ஒபெக் (OPEC) நாடுகளை இணைத்து கட்டுப்படுத்தி வரும் ரசியா இதனால் பலன் பெறும் என்பது கூறத் தேவையில்லை.

இவ்வாறு மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செய்வதற்காகவும், வளங்களை மறுபங்கீடு செய்து கொள்வதற்காகவும் அமெரிக்க - நேட்டோ - இஸ்ரேல் - பஹ்ரைன் (Bahrain) - ஜோர்டன் ஓர் அணியாகவும், ரசியா - சீனா - ஈரான் - சிரியா - லெபனான் - கதார் - குவைத் - ஏமன் ஓர் அணியாகவும், அப்பிராந்தியங்களை யுத்த களமாக மாற்றி வருகின்றன. காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு சவுதி ஆப்ரகாம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. எல்லையை திறக்குமாறு கேட்டுக் கொண்ட அமெரிக்காவின் கோரிக்கையை எகிப்து நிராகரித்து விட்டது. சவுதியும் எகிப்தும் இரண்டு முகாம்களுக்கிடையில் சமநிலை பேண முயற்சிக்கின்றன.

இலங்கையில் அமெரிக்க-இந்திய, சீன-ரஷ்ய முகாம்களின் செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டிக் களத்தில் தமிழீழம் பலியிடப்படுவதை அனுமதியோம் என்று நாம் முன்வைத்தோம். அதே போன்று இன்று அமெரிக்க-நேட்டோ, ரஷ்ய-சீன முகாம்களின் செல்வாக்கு மண்டலங்களுக்கான யுத்த களத்தில் பாலஸ்தீனம் பலியிடப்படுகிறது. அமெரிக்கா, சீனா, ரசியா உள்ளிட்ட எல்லா ஏகாதிபத்தியங்களும் சேர்ந்து ஈழ விடுதலைப் போரை நசுக்கியது போலவே இங்கும் பாலஸ்தீன விடுதலை நசுக்கப்படும். அது மதவாத தேசியம் என்ற பிற்போக்கு வடிவத்தில் இருக்கும் வரைதான் ஏகாதிபத்தியங்கள் அனுமதிக்கும். ஏனெனில் அது அவர்களுக்கு சாதகமானது. அது ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலை என்ற வடிவம் எடுக்கும்போது எல்லா ஏகாதிபத்தியங்களும் சேர்ந்து பாலஸ்தீன விடுதலையை நிச்சயம் பலி கொடுக்கும். 

அரபு நாட்டு ஆளும் வர்க்க அரசுகள் இஸ்லாமிய அடிப்படைவாத அரசுகளாக இயங்குகின்றன. எண்ணெய், எரிவாயு வர்த்தக நலன்களுக்காக ஏதாவது ஒரு ஏகாதிபத்திய முகாமின் எடுபிடிகளாக செயல்படுகின்றன. இது அந்த நாடுகளுக்கு மத்தியில் முரண்பாடுகளை உண்டாக்குகின்றன. இந்நாடுகளின் மக்கள் பொருளாதார நெருக்கடியினால் துன்புற்று வருகின்றனர். இந்த முரண்பாடுதான் பாலஸ்தீனத்திலும் எதிரொலிக்கிறது. பாலஸ்தீனத்தில் முதலாளித்துவ வளர்ச்சியடைந்து ஆளும் வர்க்க அரசு உருவாகுமாயின் சீன-ரசிய அணி பாலஸ்தீனத்தை தனி நாடாக்கி தனது காலனியாக மாற்றுமே ஒழிய சுதந்திர நாடாக அனுமதிக்காது. அனுமதித்தால் அவற்றிற்கு சந்தை கிட்டாது. உக்ரைனில் டொனட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk) மற்றும் கிரீமியாவை பிரித்து தனது காலனிகளாக ரசியா மாற்றியது. தாலிபான் அரசை சீன-ரசிய அணி தனது காலனியாக மாற்றிவருகிறது. அமெரிக்கா கிழக்கு ஐரோப்பாவில் கொசோவா உள்ளிட்ட பல தேசிய இன அரசுகளை தனி நாடாக்கி தனது காலனிகளாக மாற்றிக்கொண்டது. ஆகவே, ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலன்களுக்காக தேவைப் பட்டால் ஒரு தேசிய இனத்தை இரண்டாக உடைக்கும். மறுபுறம், தேசிய இனங்களை தனி நாடாக்கி தனது காலனிகளாக மாற்றிக் கொள்ளும். ஒரு நாளும் அவற்றை சுதந்திர அரசுகளாக இயங்க அனுமதிக்காது.

ஜியோனிச – இந்துத்துவ பாசிச கூட்டு

நாம் முன்பு கூறியவாறு ஜியோனிச குழுக்கள் மற்றும் பிரிட்டன் அரசுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான முரண்பாட்டினால் பிரிட்டன் காலனியாதிக்க அரசு பாலஸ்தீனத்திற்கான ஐ.நா. பிரிவினை திட்டத்திற்கான வாதங்கள் தொடங்கியவுடன் அதை மறுக்க ஆரம்பித்தது. மேலும், இஸ்ரேல் அமெரிக்காவின் காலனியாக மாற்றப்படுவதை அது விரும்பவில்லை. ஆகவேதான் பிரிட்டன் ஆதரவாளர்களான காந்தியும் நேருவும் இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்த்தார்கள். அப்போதே இஸ்ரேல் அரசை உருவாக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆதரவு தெரிவித்தது. 1947 அதிகார மாற்றத்திற்குப் பிறகு 1950ல் காங்கிரஸ் அரசு இஸ்ரேலை அங்கீகரித்தது. 1990களிலிருந்து காங்கிரஸ் ஆட்சியில் இஸ்ரேலுடனான இந்தியாவின் ராஜ்ஜிய உறவு தொடங்கியது.

மோடி கும்பல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளதில் வியப்பேதுமில்லை. காரணம் பைபிள் கதையை அடிப்படையாகக் கொண்ட ஜியோனிசமும் மோடி கும்பலின் இந்துத்துவமும் ஒரு புள்ளியில் சங்கமிக்கின்றன. ராமர் பிறந்த இடத்தை மையமாகக் கொண்டு மோடி கும்பல் பேசும் ராம ராஜ்ஜியமும், யூத மதக் கடவுள் பிறந்த ஜியோன் (Zion) மலைக் குன்றை மையமாகக் கொண்டு பேசப்படும் ஜியோனிசமும் பிற்போக்கான கருத்தியலை கொண்டுள்ளன. இரண்டும் மதவாத தேசியத்தை முன்வைக்கின்றன. மத அடிப்படையில் தேசம் அமைவதை கொள்கையாக கொண்டுள்ளன. மதம், மரபினம் என்ற இரண்டையும் ஒரே பொருளில் பயன்படுத்துகின்றன. யூத இனம், யூத மதம் என்றும், இந்து இனம், இந்து மதம் என்றும் பேசுகின்றன. நாஜிசத்தால் பாதிக்கப்பட்ட யூத மக்கள் இன்று யூத ஆளும் வர்க்கத்தின் புதிய வகைப்பட்ட யூத நாஜிசத்தால் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த பாசிச சித்தாந்த ஒற்றுமை இரு நாட்டு கார்ப்பரேட்டுகளின் பரஸ்பர சந்தை நலன்களால் “இயற்கை கூட்டாளிகளாக” (Natural Allaince) பலம் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சின் அலுவலகம் டெல் அவிவ்-ல் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரசியாவிற்கு பிறகு இந்தியா இஸ்ரேலின் 3வது இராணுவ தளவாட சந்தையாக உள்ளது. இஸ்ரேல்-இந்தியாவிற்கு இடையில் பல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி நடைமுறையில் உள்ளன. அண்மையில் நடந்த ஜி-20 மாநாட்டில் “இந்தியா-மத்திய கிழக்கு - ஐரோப்பிய யூனியன் பொருளாதார வழித்தடம்” (IMEC) கையெழுத்தாகி உள்ளது. இதில் இஸ்ரேல் முக்கிய உறுப்பினராக உள்ளது. இது அமெரிக்க-ஐரோப்பிய மேலாதிக்கத்திற்காக சீனாவின் ‘புதிய பட்டுச்சாலை திட்டத்திற்கு” போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச,  உள்நாட்டு உளவுத் தகவல்களுக்கு இஸ்ரேலின் பெகாஸஸ் மற்றும் மொசாட் உளவுத் துறையை நம்பியுள்ளது. இதன் காரணமாகவே இஸ்ரேலின் இனப்படுகொலையை மோடி கும்பல் ஆதரிக்கிறது. மணிப்பூர் மக்கள் பற்றி கவலை கொள்ளாத மோடி கும்பல் இஸ்ரேல் முதலாளிகளுக்காக கண்ணீர் வடிப்பது அம்பானி-அதானி நலன்களுக்காகவே என்பதை நாம் அறிவோம். பாசிச இஸ்ரேல் அரசின் இனப் படுகொலையை ஆதரிக்கும் மோடி ஆட்சியை தூக்கியெறிவது நமது தேசிய கடமையாகும்.

ராகுல் காந்தி ஹமாசின் தாக்குதலை பயங்கரவாத நடவடிக்கை என்று கண்டித்துவிட்டு பாலஸ்தீன உரிமைகள் பற்றி சந்தர்ப்பவாதமாக பேசுகிறார். இஸ்ரேலின் இறையாண்மைக்காக கண்ணீர் வடிக்கிறார். இந்தியா கூட்டணி வெறும் அறிக்கைகளோடு நின்றுவிட்டது. எந்தப் போராட்டத்தையும் நடத்த தயாரில்லை.

பாலஸ்தீன பிரச்சினை குறித்த பாட்டாளி வர்க்க நிலைப்பாடு!

இலங்கைக்கு ஈழம், இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம்! 

இலங்கை ஈழம் தேசிய இனச் சிக்கலில் சமரன் என்ன நிலைப்பாடு வைத்ததோ அதனடிப்படையில்தான் இஸ்ரேல் பாலஸ்தீன தேசிய இன சிக்கலுக்கும் தீர்வு காண முடியும். 

1) அமெரிக்க-இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தம் அநீதி யுத்தமாகும். இதை எதிர்த்த பாலஸ்தீன விடுதலை யுத்தம் நீதி யுத்தமாகும். எனவே பாலஸ்தீன விடுதலையை ஆதரிப்பது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும். 

அமெரிக்க-நேட்டோ-இஸ்ரேல் கூட்டணியும் சீன-ரசிய கூட்டணியும் மத்திய கிழக்கை மறுபங்கீட்டிற்கான யுத்த களமாக மாற்றிவருகின்றன. அதில் பாலஸ்தீன விடுதலை பலியிடப்படுகிறது. 

ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான (ஒடுக்குமுறையாளர்களுக்கு) மறுபங்கீட்டிற்கான யுத்தத்தில் நாம் இரண்டு முகாம்களையும் ஆதரிக்க முடியாது. இதில் எந்தப் பிரிவை ஆதரித்தாலும் அது ஒடுக்குமுறையை ஆதரித்ததாகவே பொருளாகும். முதல் உலகப் போரில் இரண்டு முகாமையும் சம அளவில் லெனின் எதிர்த்தார். ஆனால் காவுத்ஸ்கி இரண்டையும் சமப்படுத்துவது பிரிட்டனுக்கு ஆதரவானது என்று கூறி ஜெர்மனிக்கு வால்பிடித்தார். ஒடுக்குமுறையாளனுக்கும் ஒடுக்கப்படுபவனுக்கு இடையில் நடக்கும் யுத்தத்தில் நாம் ஒடுக்கப்படுபவன் பக்கம் நிற்க வேண்டும். இதில் நடுநிலை வகிப்பது அல்லது சமப்படுத்துவது ஒடுக்குமுறையாளனுக்கு துணை போவதாகும்.

2) இஸ்ரேல் ஓஸ்லோவின் இருதேசக் கொள்கையை எதிர்ப்பதன் பெயரில் “பாலஸ்தீனத்தை அழித்து இஸ்ரேல் தேசம்” என்ற ஒரு தேசக் கொள்கையை முன்வைக்கிறது. இந்த ஒருதேசக் கொள்கை முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். லெனின் கூறியவாறு ‘ஜியோனிச நாடு’ என்பது மிகமிக பிற்போக்கானதாகும்.

3) அமெரிக்கா முன்வைத்த ஓஸ்லோ ஒப்பந்தம் வழியிலான இருதேச கொள்கை காலாவதியாகிப்போன ஒன்று. அது பாலஸ்தீன மக்களால் தூக்கியெறியப்பட்ட ஒன்று. பி.எல்.ஓ.வின் தலைவர் அப்பாஸ் கூட அது காலாவதியாகிவிட்டது என்று கூறியுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்று ஒரு தேசக் கொள்கையைப் பேசுகிறது. அமெரிக்கா-ஐ.நா.வால் முன்மொழியப்பட்ட இருதேசக் கொள்கையைத்தான் சீனாவும் ரசியாவும் இன்று பேசுகின்றன. அது முன்பு ஹமாசை வீழ்த்துவதற்காகவும், சட்டவாத மாயைகளில் மக்களை மூழ்கடிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. இன்று சீனாவும் ரசியாவும் அதை இஸ்ரேலுடன் பேரம் பேசுவதற்கான கருவியாக பயன்படுத்தவே முன்வைக்கின்றன. ஆகவேதான் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இரண்டும் நண்பர்கள் என்று கூறி இன ஒடுக்குமுறை இஸ்ரேல் அரசை ஆதரிக்கின்றன. ஆகவே, இந்த இருதேசக் கொள்கை பாலஸ்தீன விடுதலைக்கு எதிரானது. நாம் இரண்டு தேசிய இனங்களின் சமத்துவம், சுயநிர்ணய உரிமை கொண்ட இரு ஜனநாயக அரசுகள் பற்றி பேசுகிறோம். இரண்டும் நேரெதிரானது.

4) ஒன்றுபட்ட இஸ்ரேல் அரசின் ஆதிக்கத்தின் கீழ் பாலஸ்தீன அரசு அமைவது என்று சிலரும்; அதற்கு மாற்றாக  ஒன்றுபட்ட பாலஸ்தீன அரசின் ஆதிக்கத்தின் கீழ் இஸ்ரேல் அமைவது என்று சிலரும் ஒரு தீர்வை முன்வைக்கின்றனர். இவ்விரண்டுமே மார்க்சியத்திற்கு எதிரானது. எந்தவொரு தேசிய இனமும் இன்னொரு தேசிய இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நாம் ஏற்க முடியாது. மேலும், சிலர் சீனாவை பின்பற்றி ஓஸ்லோவின் இருதேசக் கொள்கையை முன்வைப்பது அமெரிக்க-ரசிய-சீன ஏகாதிபத்தியங்களின் ஆதரவும் திருத்தல்வாதமும் ஆகும்.

5) ஹமாஸ் இயக்கம் ஓஸ்லோவின் இருதேசக் கொள்கையை எதிர்ப்பதின் பெயரில் “இஸ்ரேலை அழித்து பாலஸ்தீனம்” எனும் “ஒரு தேசக் கொள்கையை” முன்வைக்கிறது. இந்த ஒரு தேசக் கொள்கையை ஏற்க முடியாது. மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கொண்டு “இஸ்லாமிய அரசு” உருவாக்குவதாக கூறுகிறது. இதுவும் மதவாத தேசியமே; பிற்போக்கானதே. உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக அமெரிக்க - நேட்டோ ஏகாதிபத்தியம் விளங்குகிறது. இந்த எதிர் புரட்சிகர பயங்கரவாதமே ஹமாஸ் போன்ற இயக்கங்களின் மதவாத பயங்கரவாத நடவடிக்கைகளை உற்பத்தி செய்கிறது. ஆகவே இரண்டையும் சமப்படுத்த முடியாது. ஆனால் மதவாத பயங்கரவாதத்தால் அமெரிக்காவை அச்சுறுத்த முடியுமே ஒழிய அதை வீழ்த்த முடியாது. மா-லெ அடிப்படையிலான கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புரட்சிகர எழுச்சியே ஏகாதிபத்திய பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும்.

மேற்கு கரையிலுள்ள பி.எல்.ஓ அதிகார சபை சுத்தமாக வலது சந்தர்ப்பவாத சகதியில் வீழ்ந்து மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு விட்டது. அம்மக்களின் ஒரே பிரதிநிதியாக இன்று ‘ஹமாஸ்’ மட்டுமே உள்ளது. ஆகவே 1) இஸ்லாமிய அரசு, இஸ்லாமிய அடிப்படைவாதம், அக்டோபார் 7ல் நடத்தியதைப் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளையும்; 2) ரசிய- சீனாவை சார்ந்து நின்று வெல்ல முடியும் என்று நம்புவதையும் கைவிட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவ்வியக்கத்தை ஆதரிக்கலாம். ரசிய-சீன ஏகாதிபத்திய நாடுகளுக்கு “பாலஸ்தீன பிரச்சினை” இஸ்ரேலுடன் “பேரம் பேசும் பொருள்”! அவ்வளவே. ஆகவேதான் பாசிச இஸ்ரேல் அரசை ஆதரித்துக் கொண்டே “பாலஸ்தீன சுதந்திரம்” என்று பச்சோந்தித் தனமாக பேசுகின்றன. இஸ்ரேல், பாலஸ்தீனம் இரண்டுமே நண்பர்கள் என்கின்றன. ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஒரே பட்டியில் அமைதியாக வாழ வேண்டும் என்று வேதம் ஓதுகின்றன. பூனைக்குத் தோழனாக பாலுக்கு காவலாக ரசிய-சீன முகாம் இருக்கின்றது. பாலஸ்தீனத்திற்கான இந்நாடுகளின் உதவி நம்பக்கூடியதல்ல. அவை சந்தை நலனுக்கான அரசியல் பொருளாதார நிபந்தனைகளுடன்தான் உதவிகள் செய்கின்றன. இன்று வரை ரசியாவும், சீனாவும் பாலஸ்தீன பிரச்சினையை வீட்டோ அதிகாரம் வைத்திருந்தும் ஐநாவுக்கு கொண்டு சென்று நிர்ப்பந்திக்கவில்லை. இவற்றை பாலஸ்தீன மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

ஏகாதிபத்தியங்களின் தயவில் எந்தவொரு தேசிய இனமும் இதுவரை விடுதலை அடைந்தத்தாக வரலாறு இல்லை. இனியும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் ஏகாதிபத்தியம் சுதந்திரத்தை விரும்பாது. அடிமைத் தனத்தையும், ஒடுக்குமுறையையும் மட்டுமே விரும்பும் என லெனின் கூறுகிறார். 

ஹமாசிற்கு  பாலஸ்தீன விடுதலை எனும்  அரசியல் நோக்கம் இருப்பதில் அது அரசியலற்ற பிற பயங்கரவாத அமைப்புகளில் இருந்து  வேறுபடுகின்றது.  ஆகவேதான் அது அரசியல் கட்சியாக ஆட்சியில் உள்ளது. ஆனால் பிற்போக்கான மத வழி தேசியத்தின் மூலம் பாலஸ்தீனம் விடுதலை அடைய முடியும் எனும் தவறான நம்பிக்கையில் உள்ளது. 

மேலும் ஆயுதப்  போராட்டத்திற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் உள்ள அடிப்படை  வேறுபாட்டை அவ்வியக்கம் உணரவேண்டும். ஆயுத போராட்டம் என்பது எதிர¤யின் இராணுவத்தை,  படை பலத்தை  மோதி வீழ்த்துவது. அது ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டம் ஆகும். அதாவது ஆயுதப் போராட்டமும் வர்க்கப் போராட்டமே.  ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் மக்களை தாக்கி அழிப்பது ஆயுத போராட்டம் ஆகாது. அது பயங்கரவாத நடவடிக்கையாகும்.  ஹிட்லர¤ன் பாசிசத்தை வீழ்த்த 2 கோடி சோவியத் யூனியனின் மக்கள்  எதிர¤யின் இராணுவத்தை வீழ்த்த  உயிர்  தியாகம் புர¤ந்தனர். ஆகவே ஆயுதப் போராட்டம் குறித்த மார்க்சிய ஆசான்களின் வழி காட்டுதலே சர¤யானது. புரட்சிகர எழுச்சியின் ஒரு  பகுதி  நடவடிக்கையாக பயங்கரவாதம் தவிர்க்க முடியாதது என லெனின் கூறுகிறார்.  ஆனால்  அதுவே ஒரு செயல் தந்திர வழியாக இருப்பது லெனினியம் அல்ல.

மொழி அடிப்படையிலான தேசிய விடுதலை எனும் நோக்கில் மக்கள்  அரசியல் படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும். அதற்கு வியட் நாம் விடுதலையின் வெற்றி சிறந்த உதாரணம் ஆகும். அரசியல் படுத்தப்படாத ஆயுதப் போராட்டம் நீடித்து நிற்காது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலையில் எந்தளவு அவ்வியக்கம்  ஊன்றி நிற்குமோ அந்தளவு அதன் மத வழி தேசியத்தன்மை குறையும்.

எந்தளவிற்கு மதவாத  தேசியத் தன்மை குறையுமோ அந்தளவிற்கு அது ஆதர¤க்க தகுந்ததாய் மாறி வெற்றி பெறும். மத அடிப்படையில் தேசியம் அமைந்தால் அது தாலிபான் அரசைப் போல  ஏகாதிபத்திய சார்பு  பிற்போக்கு தேசியமாகவே  இருக்கும்.

எனவே ஹமாசின் மதவாத தேசியம் கைவிடப்பட்டு மொழி அடிப்படையில் “சுதந்திர பாலஸ்தீன தனிநாடு” எனும் நிலைப்பாட்டில் அங்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலை இயக்கம் கட்டியமைக்கப்பட வேண்டும். யூத உழைக்கும் மக்களை வென்றெடுக்கும் அனுகுமுறை பேணப்பட வேண்டும். பிற தேசிய விடுதலை இயக்கங்களை சார்ந்து நிற்கவேண்டும். ஈரான், லெபனான் போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் உதவிகளை அரசியல், பொருளாதர நிபந்தனைகள் இல்லாமல் பெறுவதை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு ஈழம் போல இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் என்பதை இரு தேசிய இன மக்களுக்கும் உணர்த்த வேண்டும். மத்திய தரைக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டியது அமெரிக்காவின் ஏவல் நாயான ஆளும் இஸ்ரேல் கார்ப்பரேட் பாசிச கும்பலே ஒழிய, “யூத மக்கள் அல்ல” என்பதை உணர வேண்டும். அமெரிக்காவும்-இஸ்ரேலும் பாலஸ்தீன விடுதலையின் பிரதான இலக்குகளாக திகழ்கின்றன என்பதை உணர வேண்டும். ஏகாதிபத்தியத்தியமும், இஸ்ரேல் முதலாளிகளும் வலிந்து திணித்த குடியேற்றங்களுக்கு, ஆக்கிரமிப்புகளுக்கு யூத உழைக்கும் மக்களை பலிகடாவாக்க முடியாது. அங்கு எவ்வாறாயினும் ஒரு தேசிய இனம் நிலைப்பெற்று விட்டது. அதை நாம் நிராகரிக்க முடியாது. அந்த தேசிய இனத்தின் நிலவுடைமையாளர்களும், தரகு முதலாளிகளுமே நமது எதிரிகள். யூத உழைக்கும் மக்கள் நமது நண்பர்கள் ஆவர். 

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன ஒடுக்குமுறைக்கு ஒடுக்கும் தேசிய இன மக்கள் (இஸ்ரேலியர்கள்) வாலாக மாறக் கூடாது. ஜியோனிசம் பாலஸ்தீனத்திற்கு மட்டுமல்ல, இஸ்ரேல் உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே என்பதை அம்மக்கள் உணர வேண்டும். தனது எதிரி ஆளும் இஸ்ரேல் பாசிச அரசுதானே ஒழிய பாலஸ்தீனம் அல்ல என்பதை உணர வேண்டும். இல்லையெனில் பாலஸ்தீனத்திற்கு இன்று நடப்பது நாளை அவர்களுக்கும் நடக்கும் என்பதை வரலாற்று அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

6) இன்றைய இஸ்ரேல் அரசு இன ஒடுக்குமுறையிலிருந்து பிர¤க்க முடியாதவாறு அத்துடன் கட்டுண்டு கிடக்கிறது. (யூதம் என்பது மதத்தைக் குறிக்கிறது. ஹீப்ரூ அதன் தேசிய மொழியாக உள்ளது)  உண்மையில் அமெர¤க்காவின் புதிய காலனிய அரசான  இஸ்ரேலின் தரகு முதலாளித்துவ அரசு அரபு மொழி பேசும்  தேசிய இனத்தின் மீது (பாலஸ்தீனம்) நடத்தப்படும் ஒடுக்குமுறையையே தனது வாழ்வின் ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆகையால் இன்றுள்ள இஸ்ரேல் அரசு அமைப்பிற்குள் இன மோதல்கள் தவிர்க்க இயலாதது. இதன் விளைவாக , இரு தேசிய இனங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும் வர்க்கங்களும் ஒன்று சேர்ந்து  வர்க்கப்  போராட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை. இந்நிலைமைகளின்  காரணமாக இஸ்ரேல் அரசின் வீழ்ச்சிக்கும் இஸ்ரேல்  மக்களின் விடுதலைக்கும் கூட பாலஸ்தீனத்தின் அரபு தேசிய இனம் தனி நாடு அமைத்துக் கொள்வது  ஒரு முன் நிபந்தனையாக ஆகிறது. 

இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனம், இனப்படுகொலையை நடத்தி வரும் மேலாதிக்க இனத்தோடு ஓர் அரசமைப்பிற்குள் சேர்ந்து வாழவே வழியில்லை. இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு தேசிய இனம் தனியாக பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொள்வது ஒரு ஜனநாயக தீர்வாகும். அதுவே இரு தேசிய இன உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை தூண்டும்; வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த உத்தரவாதப்படுத்தும்; ஆளும் வர்க்கமும், அதன் ஏகாதிபத்திய எஜமானர்களுமே பொது எதிரிகள் என்ற அரசியல் உணர்வை வழங்கும்; அது இரு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை சாத்தியமாக்கும். எனவே பாலஸ்தீனம் சுதந்திர தனிநாடு அமைத்துக் கொள்வது முதல் நிபந்தனையாகும். அதுதான் அடுத்தக்கட்டமாக புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் இரு தேசிய இனங்களின் சமத்துவம்-சுயநிர்ணய உரிமை அடிப்படையில் மக்கள் ஜனநாயக குடியரசுகள் உருவாவதற்கு களம் அமைத்து தரும். இதுவே இறுதித் தீர்வாகும்.

அதுவரை இடைக்கால தீர்வாக....

அ) காஸா, மேற்கு கரையிலிருந்து அமெரிக்க-நேட்டோவும் அதன் ஏவல் நாயான இஸ்ரேலும் வெளியேறக் கோரியும்;

ஆ) சமமான, தொடர்ச்சியான நிலப்பரப்பை உத்தரவாதம் செய்யவும், இயற்கை வளங்கள், மூலப் பொருட்களை சமமாக பங்கிடவும், இதுவரை எண்ணெய் மற்றும் இயற்கை வயல்களைக் கொண்டு இஸ்ரேலும் ஏகாதிபத்திய நாடுகளும் கொள்ளையடித்த பணத்தை பறிமுதல் செய்து பாலஸ்தீனத்திற்கு வழங்கவும்;

இ) இஸ்ரேலின் யூதமயமாக்கல், இராணுவமயமாக்கலை எதிர்த்தும்;

ஈ) அகதிகளாக பல்வேறு நாடுகளில் துன்புறும் பாலஸ்தீன மக்களை மீள் குடியேற்றம் செய்யவும் 

உ) இனப்படுகொலையாளிகளான அமெரிக்க-நேட்டோ-இஸ்ரேல் நாடுகள் மீது போர்க் குற்ற விசாரணை கோரியும் 

ஊ) இஸ்ரேலின் இராணுவ பலத்தைக் குறைக்கவும் ஏகபோக அதிகார அடிப்படையை தகர்க்கவும்;

நாம் போராட வேண்டும்.

உலகெங்கும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள்தான் இவற்றையும் கூட சாத்தியமாக்கும். மாறாக ஏகாதிபத்தியங்களோ, ஐ.நா.வோ தானாகவே முன்வந்து செய்யும் எனும் மாயைகளில் கிடந்தால், பாலஸ்தீன போராட்டம் ஈழ விடுதலை போராட்டத்தைப் போல துடைத்தெறியப்படும்.

ஜனவரி 2023 முதல் ஜூலை வரை பாசிச நெதன்யாகு ஆட்சிக்கு எதிராக இஸ்ரேல் மக்களும், சில இடதுசாரி பாலஸ்தீன அமைப்புகளும் ஒன்றிணைந்து டெல்-அவி இல் பெரும் போராட்டங்களை நடத்தினர். நீதித்துறை அதிகாரத்தை பறிக்கும் வகையில் நீதித்துறை சீர்திருத்த சட்டம் கொண்டுவந்து ஜியோனிச இன-மதவெறி பாசிச ஆட்சியை நிறுவ முயன்றார் நெதன்யாகு. இதை எதிர்த்தே பெரும் போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய போராட்டங்களும், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுமே இன்றைய தேவை. இவை தீவிரமாக்கப்பட வேண்டும். அமெரிக்க செனட்டை சுற்றி வளைத்து மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகின்றனர். “எங்கள் பெயரால் யுத்தத்தை நடத்தாதே” என்று அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் யூத மக்கள் முழங்க தொடங்கி விட்டனர். இவை அமெரிக்க-இஸ்ரேல் கும்பலின் “மத்திய-கிழக்கு கனவுகளை” ஆட்டம் காண செய்துள்ளது. காசா மீது யுத்தப் பிரகடனம் செய்த இஸ்ரேல் இன்றுவரை தாக்குதலை தொடங்கவில்லை. தக்க சமயத்திற்காக வெறிநாய் போல் காத்திருக்கிறது. ஆக, இத்தகைய மக்கள் போராட்டங்களே பாலஸ்தீனத்தின் மீதான இனப் படுகொலையை தடுத்து நிறுத்தும்; தேசிய விடுதலைக்கான சாத்தியப்பாடுகளை பெற்றுத் தரும்.

ஆகவே... பின்வரும் முழக்கங்களின்பால் அணிதிரளுமாறு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் அறை கூவி அழைக்கிறது. 

 • பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை எதிர்ப்போம்!
 • இலங்கைக்கு.. ஈழம்! இஸ்ரேலுக்கு… பாலஸ்தீனம்! பாலஸ்தீன விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்! 
 • அமெரிக்க நேட்டோவே! அதன் வேட்டை நாயான இஸ்ரேல் அரசே! பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை உடனே நிறுத்து! மேற்கு கரை, காஸாவில் இருந்து வெளியேறு! 
 • பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் யூதமயமாக்கல் இராணுவமயமாக்கலை எதிர்ப்போம்!
 • ஜியோனிச இன-மதவெறிப் பாசிசம் பாலஸ்தீனத்திற்கு மட்டுமல்ல யூத உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே! 
 • யூத-பாலஸ்தீன உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காக போராடுவோம்!! 
 • கார்ப்பரேட் நலன்களுக்கான ஜியோனிச, இந்துத்துவ பாசிசக் கூட்டை முறியடிப்போம்! இனப் படுகொலைக்கு ஆதரவு தரும் மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்! 
 • அமெரிக்க-நேட்டோ, ரசிய-சீன ஏகாதிபத்திய முகாம்களின் செல்வாக்கு மண்டலங்களுக்கான யுத்தகளமாக மத்திய கிழக்கை மாற்ற அனுமதியோம்!
 • ஓஸ்லோ ஒப்பந்தம் – இருதேசக் கொள்கை மூலம் பாசிச இஸ்ரேல் - இன ஒடுக்குமுறை அரசுக்கு துணைபோகும் ரஷ்ய-சீன கார்ப்பரேட் நலன்களை எதிர்ப்போம்!
 • உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கிளர்ந்தெழுவோம்! பாசிச இஸ்ரேல் அரசை மத்தியதரைக் கடலில் தூக்கியெறிவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

அக்டோபர் 2023