இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -3)

ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கிய முதலாளித்துவ நெருக்கடியே!

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -3)

(பகுதி -2 ன் தொடர்ச்சி)

 

இலங்கை - சீன வர்த்தக உறவுகள்:

 

ராஜபக்சே அரசு சீனாவுடன் கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் இலங்கையின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரித்தது. இறுதி யுத்த காலத்திற்குப் பிறகு 2009 - 2012 வரை சற்றே அந்நிய முதலீடும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்தன. ஆனால் 2012க்குப் பிறகு ஜி.டி.பி சரியத் தொடங்கியது. இதற்குக் காரணம், இலங்கையில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்பட்டு அதிகளவு வருமானம் ஈட்டிய ஜவுளித்துறை, ரப்பர் உற்பத்தியை முடக்கும் விதமாக சீனாவிலிருந்து ஆயத்த ஆடைகள், ரப்பர் முதலியவற்றை ராஜபக்சே அரசு இறக்குமதி செய்யத் துவங்கியது. மட்டுமின்றி, ஜவுளி (Textiles) மற்றும் ஆயத்த ஆடைகள் (Garments, Readymades) உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களான துணி நார் (Fibre), துணி வகைகள் (Fabric), சாயப்பொருட்கள் (dyes), போன்றவற்றை இந்தியாவை விட விலை குறைவாக சீனா தர முன்வந்ததால் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய துவங்கியது இலங்கை. நாட்டின் மொத்த வருமானத்தில் 45% வரை வருமானம் ஈட்டிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில்கள் நசிந்து உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஏற்கனவே வேளாண்துறையில் அமெரிக்காவின் மூலதனம், இரசாயன உரங்கள், இடுபொருட்கள் இறக்குமதி மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.  வேளாண்துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்க சீனாவின் இயற்கை வேளாண்மைத் திட்டத்திற்குச் (Organic farming) சேவை செய்யும் வகையில், சீனாவிடமிருந்து இயற்கை உரங்கள், இடுபொருட்களை இலங்கை அரசு இறக்குமதி செய்யத் துவங்கியது. இதனால் வேளாண் உற்பத்தி வீழ்ச்சியடையத் துவங்கியது. 2012ல் ஜி.டி.பி. 9.1% சதமாக இருந்தது. அதன் பிறகு 2013ல் 3.39%, 2014ல் 4.49%, 2015-16ல் 3.5%, 2017ல் 3.0%, 2018ல் 3.2%, 2019ல் 2.2%, 2020ல் (மைனஸ்) -3.5% என்ற விகிதங்களில் வீழ்ச்சியடைந்தது.

 

மேலும், சீனாவிலிருந்து மின் ஆற்றல் (electrical) மற்றும் மின்னணு சாதனங்கள் (Electronics), எந்திரங்கள், அணு உலைகள், கொதிகலன்கள், இரும்பு, பருத்தி, வேளாண்மைக்கு தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகள், இயற்கை உரங்கள், மோட்டார் வாகனம், மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்கள், எண்ணெய், உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. சீனாவிற்கு இலங்கையின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்தது. 2000ம் ஆண்டில் இலங்கையின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு 3.5% சதமாக இருந்தது; 2017-ம் ஆண்டு 20% சதமாக உயர்ந்தது. ஆனால் இலங்கை சீனாவிற்கு ஏற்றுமதி செய்த விகிதம் 4 மடங்கு  சுமார் 25% சதமாக குறைந்தது. இந்த வர்த்தகப் பற்றாக்குறை அந்நிய செலாவணி கையிருப்பை உறிஞ்சத் துவங்கியது. சீனப் பொருட்களைச் சீனாவின் யென் நாணய மதிப்பில் வாங்க வேண்டியிருந்ததால் இலங்கை ரூபாய் மதிப்பிழந்து பண வீக்கம் அதிகமானது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக் குறைக்கும் டாலர் வர்த்தகமே காரணமாக இருந்தது. 2005-ல் வர்த்தகப் பற்றாக்குறை ஜி.டி.பி யில் 2.5% சதமாக இருந்தது; ஆனால் 2018-ல் அது ஜி.டி.பி யில் 4.44% சதமாக உயர்ந்துவிட்டது. 2017-18ல் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் சீனாவின் பங்கு 40% சதம் ஆகும். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், யு.ஏ.இ (UAE) போன்ற நாடுகள் மீதமுள்ள 60% சத வர்த்தகப் பற்றாக்குறைக்கு காரணமாக இருந்தன. 2000ம் ஆண்டு துவங்கி 2015 வரை சீனாவிற்கு இலங்கை செய்த ஏற்றுமதியின் மதிப்பு 115.25 மில்லியன் டாலர்களை தாண்டவில்லை. 2000ம் ஆண்டு 39% சதமாக இருந்த ஜி.டி.பி - ஏற்றுமதி விகிதம் 2017ம் ஆண்டு 20% சதமாகக் குறைந்துவிட்டது. ஆனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதிப்பு 2000ம் ஆண்டில் சுமார்  (மைனஸ்)-800 மில்லியன் டாலர்களாக இருந்தது; 2015ம் ஆண்டில் அதன் மதிப்பு (மைனஸ்)-2463.71 டாலர்களாக உயர்ந்தது. ஆகவே சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை 2000ம் ஆண்டில் (மைனஸ்)-300 மில்லியன் டாலர்களாக இருந்ததது; அது 2015ம் ஆண்டில் (மைனஸ்)-2348.46 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது. அமெரிக்கா, சீனா, இந்தியாவுடனான இந்த வர்த்தகப் பற்றாக்குறையே இன்றைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் (2018-22) இந்தியா, அமெரிக்காவுடனான வர்த்தக உறவு பலவீனமடைந்து, சீனாவுடனான வர்த்தக உறவு பலமடைந்து முதல் நிலைக்கு வந்துள்ளது.  அதாவது சீனாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 60% க்கு மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்கா இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 40% சதமாக குறைந்துள்ளது.

 

உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் ஆதிக்கம்

 

சீன ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்க நலன்களுக்காக 2013-ல் ஒரு இணைப்பு ஒரு சாலை(BRI) திட்டத்தை துவங்கியது. சீனாவின் சந்தையை உலக நாடுகளுடன் தரைவழி (ரயில்வே, சாலை), கடல்வழி மற்றும் வான்வழியாக இத்திட்டம் இணைக்கிறது. துறைமுகங்கள், விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள், எட்டுவழிச்சாலைகள் போன்றவற்றை நிறுவி தொழில் மற்றும் வர்த்தக இணைப்பு முனையங்களை உருவாக்கி இணைத்து வருகிறது. இது மூன்று திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

1) சாலைகள் வழியாக ஆசியாவில் உள்ள 90% நாடுகளை சீனாவுடன் இணைக்கும் பட்டுச்சாலை பொருளாதார இணைப்புத் திட்டம் (Silk Road Economic Belt project)

2) கிழக்கு ஆசியாவிலிருந்து மேற்காசியா வழியாக ஆப்பிரிக்க நாடுகளைக் கடந்து ஐரோப்பிய நாடுகளையும் சீனாவுடன் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் கடல்வழி பட்டுச் சாலை திட்டம் (Maritime silk road project)

3) ரசியா வழியாக ஆர்க்டிக் கடல் பகுதியில் இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைக்கும் பனி பட்டுச்சாலை திட்டம் (Ice silk road project)

 

இதில் கடல்வழி பட்டுச்சாலை திட்டத்தின் அங்கமாக, இந்தியப் பெருங்கடலின் முத்து நகரம் (Pearl City) என்று அழைக்கப்படும் இலங்கையில் ஹம்பந்தோடா துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற இரு முக்கியமான திட்டங்களை சீனா துவக்கியது. இதன் மூலம் இலங்கையை மையமாக கொண்டு "முத்துகள் இணைப்பு" திட்டத்தை (String of pearls) நிறைவேற்றுவதும் சீனாவின் நோக்கம் ஆகும். பாகிஸ்தானில் க்வாடர் (Gwadar) துறைமுகம், பங்களாதேஷில் சிட்டகாங் துறைமுக முனையம், மியான்மரில் சீட்வி (Sitwe) துறைமுகம், இலங்கையில் ஹம்பந்தோடா துறைமுகம், மாலத்தீவில் மராவோ (Maravo) துறைமுகம் போன்ற கடல் வர்த்தக மையங்களை நிறுவி அவற்றை இணைப்பதே 'முத்துகள் இணைப்பு' திட்டமாகும். இதன் மூலம் இந்தியப் பெருங்கடல், தென்சீனக் கடலில் கடல் வழிகளை உருவாக்கி தனது பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களைப் பாதுகாத்து தெற்காசிய மேலாதிக்கத்தை நிறுவுவதை சீனா விரும்புகிறது. ஏற்கனவே தென் சீனக் கடல் வழியாக நடக்கும் எண்ணெய் வர்த்தகமானது (சுமார் 80%), மலாக்கா நீர்முனையை அமெரிக்கா ஆதரவு சிங்கப்பூர் அரசு அடிக்கடி மூடிவிடுவதால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த  "முத்துகள் இணைப்பு" திட்டத்தை முக்கியமான மாற்று திட்டமாக சீனா கருதுகிறது. இந்நாடுகளுக்கு தங்கப்பத்திரங்கள் மூலம் அதிக வட்டிக்கு கடன் தந்து, குறுகிய கால தவணைகளில் திருப்பிச் செலுத்துமாறு நிர்ப்பந்தித்து, கடன் கட்ட முடியாத நிலைமைக்குத் தள்ளி இந்த துறைமுகங்களைத் தானே கைப்பற்றிக் கொண்டது சீனா.

 

தெற்காசிய மேலாதிக்கத்திற்கான கேந்திர மையமாக இலங்கையை மாற்றும் பொருட்டு, மேற்கூறிய யுத்ததந்திர, வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்காக சீனா இலங்கையில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. 2008 லிருந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியாவின் முதலீடுகள் குறையத் துவங்கி சீனாவின் முதலீடுகள் (FDI) அதிகரிக்க துவங்கியது. சீன ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக ராஜபக்சே கும்பல் மாறியதன் விளைவே இது. 2007ல் கையெழுத்திட்ட பொருளாதார ஒப்பந்தத்தை நிறைவேற்ற ராஜபக்சே கும்பல் இலங்கை - சீன வர்த்தக ஒத்துழைப்பு கழகத்தை உருவாக்கியது. குறைந்தது 25 மில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்யும் எந்தவொரு சீன முதலாளியும் இலங்கையை 2-வது வீடாக கருதிக் கொள்ளும் வகையில் 'இரண்டாவது இல்ல கடவுச்சீட்டு'(Second Home passport) வசதியை ராஜபக்சே கும்பல் ஏற்படுத்தித் தந்தது. 2010 -2014ம் ஆண்டுகளில் சீனா இலங்கையில் முதலீடு செய்யும் முதல் நாடாகத் திகழ்ந்தது. உதாரணமாக, 2010 -14ம் ஆண்டுக் கால கட்டத்தில் சீனாவின் முதலீடு 828 மில்லியன் டாலர்களாகவும், பிரிட்டனின் முதலீடு  542 மில்லியன் டாலர்களாகவும், அமெரிக்காவின் முதலீடு 190 மில்லியன் டாலர்களாகவும் இருந்தது. முன்பு கூறியவாறு ஜி.டி.பி 2012-ல் லிருந்து வீழ்ச்சியடையத் துவங்கியதை இத்துடன் இணைத்துக் காண வேண்டியுள்ளது. 2013-ல் 3.39% சதமாக வீழ்ச்சியடையத் துவங்கிய ஜி.டி.பி 2020-ல் -3.5% (மைனஸ்) சதமாக வீழ்ந்தது. இதே காலகட்டத்தில் சீனாவிடமிருந்து பெற்ற அன்னியக் கடன் மொத்தக் கடனில் 37.2% சதம் இருந்தது. ஐ.எம்.எப், ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து பெற்ற கடன் 15.8% சதமாக இருந்தது.

 

பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அந்நிய முதலீட்டில் சீனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

1) நோரோச் சோலை (Norochcholai) ஆற்றல் நிலையம் (1400 மில்லியன் டாலர்)

2) மிரிகமாவில் (Mirigama) சிறப்புப் பொருளாதார மண்டலம் (28 மில்லியன் டாலர்)

3) உயர்நீதிமன்ற வளாகம் (3.58 மில்லியன் டாலர்)

4) கொழும்பு - கதுநாயக விரைவுச்சாலை (248.2 மில்லியன் டாலர்)

5) தாமரை கோபுரம் (30 மில்லியன் டாலர்)

6) மத்தாளா சர்வதேச விமான நிலையம் (210 மில்லியன் டாலர்)

7) போலோன்நருவா (Polonnaruwa) நீர் விநியோகம் மற்றும் சுகாதாரத் திட்டம் (32.93 மில்லியன் டாலர்)

8) ஹம்பந்தோடா துறைமுக திட்டம் (461 பில்லியன் டாலர்)

9) மொரகஹகன்டா (Moragahakanda) நீர்த்தேக்கத் திட்டம் (370 மில்லியன் டாலர்)

 

இவற்றில் ஹம்பந்தோடா துறைமுகத்தில் சீனாவின் முதலீடு சுமார் 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது. இத்திட்டங்களை அடுத்து கொழும்பு துறைமுக நகர் திட்டம் சுமார் 14 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. ஆக இன்றைய தேதியில் இலங்கையில் முதலீடு செய்யும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. மேற்கூறிய திட்டங்கள் ராஜபக்சே ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களாகும். இதுதவிர தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியிலும் சுரங்கத் திட்டம், எட்டுவழிச்சாலை திட்டத்தையும் சீனா அமல்படுத்தி வருகிறது.

 

2009-ம் ஆண்டு மகிந்த ராஜபக்சே தனது சொந்த தொகுதியான ஹம்பந்தோடாவில் துறைமுகம், விமானநிலையங்களை துவங்க (சீன முதலீட்டில்) அடிக்கல் நாட்டினார். 2014-ல் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை துவக்கினார். இவ்விரு திட்டங்களையும் அமெரிக்க-இந்திய ஆதரவு ரணில் விக்ரம் சிங்கே , ஸ்ரீசேனா உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகள் எதிர்த்தன. இவ்விரு திட்டங்களும் சீனாவின் ஒரு இணைப்பு ஒரு சாலை திட்டத்தின் அங்கமாக இருந்ததால் அவற்றில் அமெரிக்காவும் இந்தியாவும் முதலீடு செய்ய விரும்பவில்லை. எனவே தமது எடுபிடிகள் மூலம் இத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட அமெரிக்கா விரும்பியது. ராஜபக்சே கும்பல் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி செய்ததால் இத்திட்டங்கள் துவக்கப்பட்டன.

 

2010ம் ஆண்டில் 361 மில்லியன் டாலர் தொகையை தொடக்க மூலதனமாக கொண்டு துவங்கப்பட்ட ஹம்பந்தோட்டா துறைமுக திட்டத்திற்கு சீனாவின் எக்சிம் (Exim) வங்கியானது 85% பணத்தை அதாவது 306 மில்லியன் டாலரை 6.5% சத வட்டிக்கு கடனாக வழங்கியது. 2012க்குப் பின்னர் இரு தவணைகளாக 300, 600 மில்லியன் டாலர்களை கடனாக தந்தது. 2015ல் ராஜபக்சே கும்பல் தேர்தலில் தோல்வி அடைந்து ரணில் விக்ரம் சிங்கே - ஸ்ரீ சேனா கும்பல் ஆட்சிக்கு வந்தது. 2017ம் ஆண்டு நாட்டின் ஜி.டி.பியில் அந்நியக் கடன் 50% இருந்தது. எனவே சீனாவின் கடனை கட்டமுடியாமல் சீனாவின் கார்ப்பரேட் நிறுவனமான சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) என்ற நிறுவனத்திடம் 1.6 பில்லியன் டாலர்களைப் பெற்றுக்கொண்டு ஹம்பந்தோட்டா துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலபரப்பையும் 99 ஆண்டுகளுக்கு ரணில் அரசு சீனாவிற்கே குத்தகைக்கு விட்டது. ஆசிய-ஐரோப்பிய சர்வதேச கடல் வர்த்தகத்தின் வர்த்தக மையமாக இலங்கையை மாற்றும் பொருட்டு, ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக கட்டமைக்கும் சீனாவின் தெற்காசிய மேலாதிக்க திட்டத்திற்கு இலங்கை ஆளும் வர்க்கங்கள் இலங்கையை இவ்வாறு கூறுபோட்டு விற்றுவிட்டன. வர்த்தகப் பற்றாக்குறையை போக்கவும், வாங்கிய கடன்களை அடைக்கவும் துவங்குவதாக சொல்லப்பட்ட இத்திட்டத்தால் கிடைத்த வர்த்தக மற்றும் பொருளாதார பலன்களை சீனாவே அனுபவித்து வருகிறது. எனவே இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கவே செய்தது. இத் துறைமுகம் வழியாக ஆண்டிற்கு 36000 வர்த்தக கப்பல்கள் (4500 எண்ணெய் டாங்கிகளையும் சேர்த்து) பயணிக்கின்றன. மேலும் 3 நாட்கள் கடல் பயணம் மற்றும் எரிபொருள் (முந்தைய வழிகளான சூயஸ் கால்வாய், மலாக்கா நீர்முனையை விட) மிச்சமாகிறது. இதன்மூலம் கடல் வர்த்தகம் 136% அதிகரித்தாலும் சீனாவிற்கே அதன் பலன் சென்று சேர்கிறது. மேலும் ஹம்பந்தோட்டாவில் தனது இராணுவ தளத்தையும் (Naval base) நிறுவியுள்ளது சீனா.

 

அடுத்து, ராஜபக்சே -ஜிங்பிங் கையெழுத்திட்டு துவக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர் (சிறப்பு பொருளாதார மண்டலம்) திட்டம் ரணில் விக்ரம் சிங்கே ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2019ல் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே கும்பல் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த துவங்கியது. 14 பில்லியன் டாலர் மதிப்பிலான இத்திட்டத்தை சீனா 1.4 பில்லியன் டாலரை தொடக்க மூலதனமாகக் கொண்டு துவங்கியது. இலங்கையின் தலைநகரமான கொழும்புவின் கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில், 269 ஹெக்டேர் (660 ஏக்கர்) நிலப்பரப்பை மீட்டமைத்து (land reclamation - அதாவது கடலை நிலமாக்கி) அதில் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை உள்ளடக்கி ஒரு பிரம்மாண்டமான சிறப்பு பொருளாதார மண்டலத்தை (SEZ) நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் 2040ல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனத் துறைமுகப் பொறியமைப்பு நிறுவனம் (China Harbour Engineering Company - CHEC) எனும் சீன நிறுவனம் இந்த நிலமீட்டமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. "இந்த சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தால் ஆண்டிற்கு 11 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும்; இலங்கையின் கடன்கள் அடைக்கப்பட்டு நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்; துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் போல தெற்காசியாவின் மாபெரும் வணிக நகரமாக இலங்கை மாறி ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்" என்றெல்லாம் கோத்தபய அரசு வாய்ச்சவடால் அடித்து இதற்கு அனுமதி அளித்தது. ஆனால் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் (இந்தியாவில் செயல்படும் மண்டலம் போல) இலங்கையின் அரசியல் சட்டம் செல்லுபடியாகாத, சீனாவின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு செயல்படும் காலனியப் பிரதேசமாக- செல்வாக்கு மண்டலமாகவே இருக்கும்.

 

ஏற்கனவே நிலவி வந்த பொருளாதார நெருக்கடி கோவிட் முடக்கத்திற்கு பிறகு அதிகமானதால், நெருக்கடியை (ஜி.டி.பியில் 80% கடன்) காரணம் காட்டி, சீனாவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து பக்சே கும்பல் இத்திட்டத்தையும் சீனாவிற்கே தாரை வார்க்க முடிவெடுத்தது. அதற்காக மார்ச்-2021ல் 'கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைய மசோதா'வை பாராளுமன்றத்தில் கோத்தபய ராஜபக்சே கொண்டு வந்தார். ரணில் உள்ளிட்ட எதிர் கட்சிகள் இதற்கு பொது வாக்கெடுப்பு கோரின. அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் சரிபார்க்கப்பட வேண்டும். உச்சநீதி மன்றம் 1. பொது வாக்கெடுப்பு 2. மசோதாவிலுள்ள சில குறைகளை திருத்தி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கலாம் என்ற இரண்டு பரிந்துரைகளை முன்வைத்தது. கோத்தபயா இரண்டாவது பரிந்துரையை ஏற்று பெரும்பான்மையுடன் (149/225) மசோதாவை மேமாதம் சட்டமாக்கினார். இச்சட்டத்தின்படி 'கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணையம்' நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக உள்ள அதிபர், இதன் உறுப்பினர்களாக சீன முதலாளிகளை அனுமதிக்கவும், கொழும்பு துறைமுக நகரில் சீனாவின் யென் (Yen) நாணயமே புழக்கத்தில் இருக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இலங்கை அரசியலமைப்பின் மிக முக்கியமான 25 சட்டப்பிரிவுகளிலிருந்து இந்த ஆணையத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்றத்தால் இந்த ஆணையத்தை கேள்வி கேட்க முடியாது. இந்த துறைமுக நகருக்குள் இலங்கை குடிமகன் ஒருவர் செல்வதற்கு விசாவை ஒத்த சிறப்பு அடையாள அட்டை இந்த ஆணையத்திடம் பெற வேண்டும் எனவும், அவர் அங்கு சென்று வர கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை கடன் நெருக்கடியை காரணம் காட்டி 2020ல் (ஜிடிபியில் 80% சதம் கடனாக இருந்தது) குத்தகைக்கு கோரியது சீனா. பக்சே கும்பலும் 99 ஆண்டுகளுக்கு கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை சீனாவிற்கே தாரை வார்த்துவிட்டது.

 

இவ்வாறு, வர்த்தகப்பற்றாக்குறையால் உருவான அந்நியச் செலாவணி பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, சீனாவின் அந்நிய முதலீட்டை மேற்கூறிய உள்கட்டமைப்பு திட்டங்களில் அனுமதிப்பதாக கூறி சிங்கள ஆளும் வர்க்கங்கள் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்திவிட்டன. அந்நியச் செலாவனியை உயர்த்த சீனா, சர்வதேச பங்குச்சந்தை மற்றும் ஐ.எம்.எப் பிடம் மேலும் கடன் வாங்கி நாட்டை திவாலாக்கின.

 

 

(தொடர்ச்சி பகுதி -4 ல்)