தைவான் சீனாவின் இறையாண்மை பிரச்சனையா?

பங்கு போட துடிக்கும் அமெரிக்க சீன ஏகாதிபத்தியங்கள்

தைவான் சீனாவின் இறையாண்மை பிரச்சனையா?

பிராந்திய அளவிலான போர்கள் பிராந்திய அளவில் உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்கானது. 1860களின் பிற்பகுதியில் தோன்றி வளரத் துவங்கிய ஏகபோகங்கள் அன்று முதல் இன்று வரை உலகை தங்கள் காலனிகளாக பங்கு போடுவதற்காக அல்லது மறுபங்கீடு செய்வதற்காகவே போர்களுக்கான தயாரிப்புகளையும், போர்களையும் நிகழ்த்தியுள்ளது. அவ்வகையில் நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரும், அடுத்து நடத்த தயாராகி கொண்டிருக்கும் தைவான் மீதான போரும் தைவான் மறுபங்கீட்டிற்கானதே. இந்த தைவான் பிரச்சினை, தென்சீனக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள செல்வாக்கு மண்டலங்களை மறுபங்கீடு செய்வதற்கான துவக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

தைவானில் உள்ள ஜனநாயக ஆட்சியை பாதுகாப்பது என்ற பெயரில் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை துவங்கப் போவதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்துள்ளது. சீன ஏகாதிபத்தியம் தொடர்ச்சியாக தைவான் தனது ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட பகுதி என்று கூறி வருவதோடு தனது இறையாண்மையை பாதுகாப்பதற்காக தேவையான எந்த நடவடிக்கையையும் எடுப்போம் என்று ஆகஸ்ட் 18 அன்று எச்சரித்திருந்தது.

புதிய காலனியாதிக்கமா?

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சீனா ஒரு போர் ஒத்திகையையே நடத்தி முடித்துள்ளது. அமெரிக்காவும் அதனுடைய கப்பற்படையைச் சேர்ந்த ரோந்து கப்பலை தென்சீனக் கடல் ஒட்டிய பகுதியில் அனுப்பி தனது எதிர்ப்பையும் காட்டி வருகிறது. இரண்டு முகாம்களின் புதிய காலனியாக தைவான் இருந்து வந்தாலும், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டி தீவிரமடையும் பொழுது அரசியல் வழிகளையெல்லாமல் உதறித் தள்ளிவிட்டு பரஸ்பரம் இரானுவ நடவடிக்கைகளை கையிலெடுக்கின்றனர். அமெரிக்க சீன ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் நடக்கும் பனிப்போரின் தீவிரத்தன்மையால் ஏற்பட்ட நெருக்கடியே தற்போது தைவான் விவகாரத்தில் போருக்கான தயாரிப்பாக வெடித்துள்ளது. தைவானிற்கு வெளியுறவுக் கொள்கையே இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலே சீனா தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டு இயங்கும் நிர்வாக அமைப்பாக தைவான் அரசை இயங்க அனுமதிப்பதாக சொல்கிறது. இவ்வாறு வெளிப்படையாக தனது காலனியாதிக்கத்தை அறிவித்திருக்கிறது. அமெரிக்கா அவ்வாறு வெளிப்படையாக அறிவிக்கவில்லை அவ்வளவே. பொதுவாகவே, எல்லா ஏகாதிபத்திய வல்லரசுகளும் தங்களுக்கான செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கும் போட்டியில் ஈடுபடும் போது, புதிய காலனிய நாடுகளின் வெளியுறவுக் கொள்கையை வலுவாக கட்டுப்படுத்த முயலுகின்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் உள்ள சிறு சமஸ்தானங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு “ரிங் பென்ஸ் – Ring Fence” யுக்தியின் மூலம் தனது ஆட்சிப்பகுதிக்கு அருகாமையில் உள்ள சமஸ்தானங்களின் வெளியுறவுக் கொள்கையினை கட்டுப்படுத்த தனது போட்டி ஏகாதிபத்தியமான பிரெஞ்சு வல்லாதிக்கத்தின் செல்வாக்கிற்குள் சென்றுவிடாமல் பார்த்துக் கொண்டது. அன்றைய காலக்கட்டத்தில் நேரடியான இரானுவ நடவடிக்கையின் மூலமாக இதைச் செய்தார்கள். இன்றோ நிதி மூலதன ஆதிக்கத்தின் (Foreign Direct Investment, Foreign Portfolio Investment, Foreign Institutional Investment) மூலமாகவும், உக்ரைனில் நடந்தது போன்று ஆக்கிரமிப்புப் போர் மூலமாகவும், மியான்மரில், ஈரான் ஈராக்கில் நடந்தது போன்ற ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற வழிகளிலும் இன்ன பிற புதிய காலனிய வழிகளிலும், தங்களுக்கான செல்வாக்கு மண்டலங்களை (Sphere of Influence) உருவாக்குவதற்கான போட்டியில் ஈடுபடுகின்றனர். தைவான் விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறை இராணுவ நடவடிக்கையாக  இருக்குமென்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஏகாதிபத்தியமோ “தைவானுக்கு ஆதரவாக அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்த சாசுவாதமான அதே நேரத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்என்று அறிவித்துள்ளது. அதாவது உக்ரைனில் நேட்டோ படைகளின் மூலம் மறைமுகமாக இராணுவ உதவிகள் செய்து மக்களை படுகொலை செய்தது போல இரண்டு ஏகாதிபத்தியங்களும் தற்போது தைவானை வேட்டைக்காடாக மாற்றுவதற்கு தயாராகி வருகின்றன என்பது உறுதியாகிறது.

நிதி மூலதன பிணைப்பு

தைவானின் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளது. அங்கு ஏற்றுமதி செய்யும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக சீன ஏகாதிபத்தியம் இறக்குமதி செய்கிறது. தைவானில் உள்ள தரகு முதலாளிகள் கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சீனப் பெருமுதலாளிகளின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர் என்று தைவான் அரசாங்கமே குறிப்பிடுகிறது. 1,58,000 தைவான் நாட்டைச் சேர்ந்த முதலாளிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிறர் சீனாவில் வாழ்ந்து வருவதாக சீனாவின் 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

2014லிலிருந்தே தைவானின் முதன்மையான ஏற்றுமதியாளராக சீனா உருவானது. அது வரையிலும் ஹாங்காங் இருந்து வந்தது. 2014 முதல் தைவானிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா முதன்மையானதாக விளங்கியது. இயந்திரங்கள், கருவிகள், நெகிழிகள், இரப்பர் பொருட்கள், இரசாயனப் பொருட்கள் போன்ற சரக்குகளே பிரதானமாக தைவானிலிருந்து சீனா தனது ஏகபோகத்தின் மூலமாக அபகரித்துக் கொள்கிறது.

சீன நிதிமூலதன கும்பல்கள் தைவானில் உள்ள மின்சார உதிரி பாகங்கள் உற்பத்தித் தொழில் (சிப் தயாரிப்புகளையும் உள்ளடக்கிய), மொத்தம் மற்றம் சில்லறை வணிகம், வங்கிகள்/நிதி நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். 

சீன வணிக அமைச்சகத்தின் கூற்றுப்படி தைவானும் அதே போல சீனாவில் உள்ள மின்சார உதிரி பாகங்கள் உற்பத்தி, மொத்த மற்றும் சில்லறை வணிகம், வங்கிகள்/நிதி நிறுவனங்கள, காப்பீட்டுத் துறைகளில் தைவானில் உள்ள பெரும் தரகு - முதலாளிகள் முதலீடு செய்துள்ளனர்.

சிப்களை(Chips) தைவான் தயாரித்துத் தந்தால், சீனா அதை வாங்கிக்கொண்டு சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கான பொதிகளில் அடைக்கும் பணிகளை செய்கிறது (Packaging and Labelling). தொகுப்புச் சுற்றுகளை (ICs or Integrated Circuits) அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் சீனா 2005ஆம் ஆண்டிலிருந்தே முதல்நிலை வகிக்கிறது. இது தொழில்மயமாக்கப்பட்ட சீனாவில் பெரும்பாலான மின் சாதனங்களை மலிவு விலையில் தயாரிப்பதற்கு வழிகோலியது.

அரசியல் துறையில் மட்டுமல்ல பொருளாதார துறையிலும்  “ஒரே சீனாகொள்கைதான். சீன பெரு முதலாளிகளுக்கும் தைவான் தரகு முதலாளிகளிகளுக்குமிடையிலான கள்ளக் கூட்டு புதிய காலனிய உறவுகளையே எடுத்துக் காட்டியது.

DPP கட்சியினர் ஆட்சியமைத்தப் பிறகு சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இரு நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. டிசம்பர் 2016ல் அமெரிக்க ஏகாதிபத்திய அதிபர் டிரம்ப் நேரடியாக தொலைபேசியில் உரையாடியதன் வாயிலாக பல பத்தாண்டுகளாக நடைமுறையில் இருந்த இராஜதந்திர ரீதியான நடைமுறை உறவுகள்  மாற்றியமைக்கபட்டது. இதன் தொடர்ச்சியாகவே சீனாவிற்கும், தைவான் பிரதேசத்திற்கும் இடையிலான அரசியல்-பொருளாதார உறவுகளில் விரிசல்களும் கடுமையான தடைகளும் ஏற்பட்டது. சிப்(Chip) தயாரிப்புகளுக்கு தேவையான பொருட்களில் ஒன்றாக விளங்கக்கூடிய இயற்கை மணலையும் சீனா வழங்குவதை நிறுத்திக் கொண்டது.

தைவான் பிரதேச பொருளுற்பத்தி முழுவதையும் தனது நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ள தரகு முதலாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்குகளும் இந்த பதற்ற நிலைக்கு அகக் காரணியாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக ‘ஒரே சீனாஎன்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு சீனத்து ஏகபோக முதலாளிகளிடம் மட்டும் தரகர்களாக இருக்கலாமா அல்லது சுதந்திர தன்னாட்சியான தைவான் என்ற சொல்லிக்கொண்டு அமெரிக்க முதலான ஏகாதிபத்தியங்களின் தரகர்களாக இருக்கலாமா என்பதில் ஏற்பட்ட தகராறுதான் ஆளும் வர்க்க உறவுகளில் ஏற்பபட்ட மாற்றத்திற்கான காரணம்.

சமீபத்திய நிகழ்வு போக்குகள்

2017 ஆம் ஆண்டு 1.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா தைவானிற்கு விற்றுள்ளது. அமெரிக்க அதிகார வர்க்க அதிகாரிகள் கூட தைவானிற்கு சென்று வரலாம் என்றிருப்பது போல தைவானைச் சேர்ந்தவர்களும் அதே போல அமெரிக்காவிற்கு வரலாம் என்று மார்ச் 2018ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. செப்டம்பர் 2018ல் அமெரிக்க உள்விவகாரத் துறை F-16 போர் விமானம் மற்றும் இன்னும் பிற போர் விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்களை 330 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு விற்றுள்ளது. சீனாவின் படைகள் தைவானில் இருப்பது போல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் படையும் அங்குள்ளது. “அமெரிக்காவின் சிறுபடை தங்களது இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்குவதற்காக இங்கு நிறுத்தப்பட்டுள்ளதுஎன்று Tsai கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரு ஏகாதிபத்தியங்களுமே போருக்கான தயாரிப்புகளை செய்த வண்ணமே இருக்கின்றன.

சிப் தொழில்நுட்பத்தில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘Chip 4 Alliance’ எனும் பெயரில் ஜப்பான், தென் கொரியா, தைவான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மூன்றாவது தொழிற்புரட்சியின் அடித்தளமாக விளங்கியதே இந்த தொகுப்புச் சுற்றுகள்(ICs)தான். இதன் விளைவாகவே 70களில் மின்சாதனங்கள், தொலைத்தொடர்புகள், கணிணிகள், உயிரி தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்த்தெடுக்கப்பட்டது. வழக்கம்போல ஏகபோக நிதிமூலதனக் கும்பல்கள் இதை பயன்படுத்திக் கொண்டு உபரியை ஈட்டுவதற்கான முயற்சியில் இறங்கியது. அதுவே தற்போது சிலிக்கான் மூலப்பொருள்களுக்கான கடுமையான போட்டியாக தைவான் விவகாரத்தில் வெடித்துள்ளது.

2016ல் ஆட்சிக்கு வந்த Tsai சீனாவுடனான அரசியல் – பொருளாதார சார்புநிலையை குறைக்கும் நோக்கில் பிற நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களைப் போட ஆரம்பித்தார். தற்சமயம் சிங்கப்பூர், நியூசிலாந்து உள்பட 9 நாடுகளுடன் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை தைவான் கொண்டுள்ளது. இதில் உள்ள எந்த நாடும் தைவானை சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை.

கடந்த ஜீன் மாதம் தைவானச் சேர்ந்த அதிகார வர்க்கம் தைவான் – அமெரிக்கா இடையிலான 21 ஆம் நூற்றாண்டுக்கான வர்த்தக முன்னெடுப்பு எனும் கூட்டு வர்த்தக யுக்தியை அறிவித்திருந்தது. இது அறிவித்திருந்த போது வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் ஏதும் துவக்கப்படவில்லை. சீனா இராண்டாவது போர் ஒத்திகையை துவக்கியிருக்கக்கூடிய சமயத்தில் திட்டமிட்டே தற்போது அமெரிக்கா அதற்கான பேச்சுவார்த்தையை ஆகஸ்ட் 18 அன்று தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Massachusetts மாநிலத்தின் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினர்(ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்) Ed Markay தலைமையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஞாயிறு தைவானிற்கு வருகை தந்து Tsai  அவர்களை சந்தித்து சென்ற பிறகு சீனா இரண்டாவது போர் ஒத்திகையை அறிவித்தது.

2 கோடியே 36 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட தைவானும் தனது பங்கிற்கு எதிர்-இரானுவ ஒத்திகை ஒன்றையும் நடத்தியது. “வேளாண் கொள்கை, தொழில் கொள்கை, சுற்றுச்சூழல் கொள்கை, டிஜிட்டல் தொழில்நுட்பம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிலை மற்றும் சந்தை சாராத கொள்கை தொடர்பாக அமெரிக்காவிற்கும் தைவான் பிராந்தியத்திற்கும் இடையில் பேசப்பட்டதுஎன்று அமெரிக்க வர்த்தக துறைக்கான பிரதிநிதி கூறியுள்ளார். எனினும் இவர்களின் நோக்கம் சீனாவிடமிருந்து தைவானில் இயற்கை வளங்களையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதல்ல. மாறாக சீனாவின் செல்வாக்கு மண்டலத்திற்குட்பட்ட  தைவானை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வர மீட்பர் வேடமணிந்து வருகிறது.

எப்படியிருந்த போதிலும் ஏகபோக நிதி மூலதனத்தின் நெருக்கடி மக்கள் மீது சுமத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் தேசிய வெறியும் ஆளும் வர்க்கத்தால் ஊட்டப்படுகிறது. ஏகாதிபத்தியம் என்றாலே போர் என்ற ஆசான் லெனினின் ஆய்வுரைகள் இன்றளவும் மெய்யாகவே உள்ளன. தைவான் அந்நாட்டு உழைக்கும் மக்களுக்கே உரியது. அதை பங்கு போட அமெரிக்கா பின்னால் வரிசைகட்டி நிற்கும் ஏகாதிபத்தியங்களுக்கோ அல்லது சீன-ரஷ்ய ஏகாதிபத்தியங்களுக்கோ எந்த உரிமையும் இல்லை.

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

- செந்தளம் செய்திப் பிரிவு