செஞ்சூரியன் ஸ்டாலினைப் பார்த்து ஊளையிடும் நவீன டிராட்ஸ்கிய ஓநாய்கள்
சமரன்
மாபெரும் மார்க்சிய-லெனினிய வாதியும், மிகச் சிறந்த ஜனநாயகவாதியும், பாசிசத்தை வீழ்த்தி உலக மக்களை காப்பாற்றியவரும், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் தலைவரும் ஆசானுமான தோழர் ஸ்டாலின், ஓர் எதேச்சதிகாரி; உலகப் புரட்சியின் எதிரி; கொலைகாரர்; தேசியவாதி; எதிர்ப் புரட்சியாளர் என்றெல்லாம் நவீன டிராட்ஸ்கியர்கள் ஓயாமல் ஊளையிடுகிறார்கள். நவீன டிராட்ஸ்கியம் என்பது லெனினியத்தால் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட பழைய டிராட்ஸ்கியத்தின் முடை நாற்றமெடுத்த வடிவமாகும். சர்வதேச நிதி மூலதனத்தின் புதிய காலனியாதிக்கத்திற்குப் பிறந்த இந்த நவீன டிராட்ஸ்கியம் குருசேவ் கும்பலின் நவீன திருத்தல்வாதம் முதல் கோர்பசேவ் கலைப்புவாதம் மற்றும் புதிய இடது கலைப்புவாதம் - பின் நவீனத்துவம் வரையிலான அனைத்துவித மார்க்சிய விரோத கருத்துகளுக்கும் மேடை அமைத்து தருகிறது.
நவீன டிராட்ஸ்கியர்கள், மார்க்சிய லெனினியத்தின் கொடிய விரோதியான டிராட்ஸ்கியை மார்க்சியவாதி எனவும், புரட்சியாளர் எனவும் வீண் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். தங்களை வெளிப்படையாக டிராட்ஸ்கியர்கள் என்று அறிவித்துக் கொண்டு செயல்படும் இவ்வகை நான்காம் அகிலம் எனும் ஏகாதிபத்திய ஐந்தாம் படையைச் சேர்ந்த டிராட்ஸ்கியர்களை விடவும் நயவஞ்கமான டிராட்ஸ்கியர்கள் சிலர் மார்க்சிய முகமூடியுடன் உலா வருகின்றனர். இவர்கள் நான்காம் அகிலத்தின் சோசலிச சமத்துவக் கட்சியினரைப் போலவே ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்திவிட்டு, மாவோ வழியில் விமர்சனம் வைப்பதாக கூறி, மார்க்சிய-லெனினிய அமைப்புகளில் இருக்கும் குட்டி முதலாளிய சக்திகளை ஏமாற்றி வருகின்றனர். புதியதொரு நய வஞ்சகப் போக்கான இது, உண்மையில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர். போன்ற புதிய இடதுகளின் அழுகிப்போன வடிவமாகும். டிராட்ஸ்கி, ஸ்டாலின் இருவரிடமுள்ள சரி-தவறுகளை நடுநிலைப் புத்தியோடு அணுகுவதாக வேடமிட்டு, மார்க்சியத்தையும் கலைப்புவாதத்தையும் சமப்படுத்துவதன் மூலம், இவர்கள் முதலாளிய ஜனநாயகவாதிகளாகவும், பாட்டாளி வர்க்க துரோகிகளாகவும் விளங்கிவருகின்றனர்.
நான்காம் அகிலத்து டிராட்ஸ்கியர்களின் அணுகுமுறையும், புதிய இடது கும்பல்களின் அணுகுமுறையும் வெவ்வேறாக தோன்றினாலும், ஸ்டாலின் மீதன விமர்சனம் எனும் பெயரில், டிராட்ஸ்கி பற்றிய ஆய்வு எனும் பெயரில் ஸ்டாலினை தாக்கிவிட்டு, டிராட்ஸ்கியை ஆதரிக்கும் துரோகச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், இவர்கள் நான்காம் அகிலத்து டிராட்ஸ்கியர்களுடன் ஒன்றுபடுகிறார்கள். ஸ்டாலினின் சாதனைகளை உயர்த்திப் பிடிப்பதையே வழிபாடு என்று கூறுவதன் மூலம் ‘ஸ்டாலின் நீக்கம்’ எனும் ‘லெனினிய நீக்கத்தை’ முன்வைக்கிறார்கள். ஸ்டாலின் மீதான தாக்குதல் ஐயத்திற்கிடமின்றி மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை மீதான தாக்குதலே ஆகும். ஸ்டாலினின் சர்வாதிகார எதிர்ப்பு எனும் பெயரில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பதன் மூலமும், தனியொரு நாட்டில் புரட்சியையும், சோசலிசக் கட்டுமானத்தையும் மறுப்பதன் மூலமும் லெனினியத்தை மறுக்கும் கலைப்புவாத, எதிர் புரட்சிகரப் புள்ளியில் இயல்பாகவே இவர்கள் ஒன்றுபடுகிறார்கள்.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தாலும், திருச்சபை மற்றும் தொண்டு நிறுவனங்களாலும் ஊட்டி வளர்க்கப்படும் இந்த டிராட்ஸ்கிய கருத்துகள், முற்போக்கு முகமூடியுடன் மார்க்சிய-லெனினிய அமைப்புகளுக்குள் ஊடுருவ முயற்சித்து வருகின்றன. அவ்வாறு எமது சமரன் (ஏ.எம்.கே) அமைப்பிற்குள் ஊடுருவ முயன்ற காவுத்ஸ்கிய - டிராட்ஸ்கியவாதிகளை லெனினிய வழியில் ஊன்றி நின்று சமரன் அமைப்பு எவ்வாறு முறியடித்தது என்பதே இக்கட்டுரையின் உள்ளடக்கமாகும்.
டிராட்ஸ்கியிசம் என்றால் என்ன?
உண்மையில் சொல்வதெனில், டிராட்ஸ்கியிசம் என்று எந்தவொரு ‘இசமும்‘ இல்லை. டிராட்ஸ்கி, தனது எழுத்துகளுக்குத் தானே ‘டிராட்ஸ்கியிசம்‘ என்று (எவ்வித கூச்சமுமின்றி) பெயரிட்டுக் கொண்டான். டிராட்ஸ்கியின் எழுத்துக்கள் அனைத்தும் லெனினியத்திற்கு விரோதமாகவே இருந்தன. டிராட்ஸ்கிக்கென்று எந்தவொரு கொள்கையும் இல்லை. லெனினையும் லெனினியத்தையும் தாக்குவதை மட்டுமே டிராட்ஸ்கி தனது ஒரே வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருந்தான். “மார்க்ஸ்தான் தத்துவ மேதை; லெனின் வெறும் நடைமுறையாளர்; சர்வாதிகாரி” என்று மார்க்ஸிற்கு எதிராக லெனினை நிறுத்தினான். பிறகு ஸ்டாலின் வெறும் நடைமுறையாளர் என லெனினுக்கு எதிராக ஸ்டாலினையும் முன்நிறுத்தி வரலாற்றில் தோற்றுப்போனவன் டிராட்ஸ்கி. டிராட்ஸ்கியவாதிகள் தற்போது இதே பாணியில்தான் லெனினுக்கு எதிராக ஸ்டாலினையும், ஸ்டாலினுக்கு எதிராக மாவோவையும் முன்நிறுத்துகிறார்கள். ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் நிழலில் இளைப்பாறும் இந்த நவீன டிராட்ஸ்கியவாதிகள், புதிய இடது மற்றும் பின் நவீனத்துவ சூன்யவாத முகாமில் இருந்து கொண்டு மார்க்சிய - லெனினிய விஞ்ஞானத்தை மறு பரிசீலனை செய்யக் கோருகின்றனர். மார்க்சிய லெனினியம் என்பது அழிக்க முடியாத சமூக விஞ்ஞானம் என்பதை அந்த எண்ண முதல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
லெனின் “கலைப்புவாதிகளுடன் கூட என்னால் வாதம் நடத்த முடியும், ஆனால் தனக்கென்று எந்தவொரு கொள்கையுமற்ற டிராட்ஸ்கியுடன் வாதம் நடத்த முடியாது” என்றார். ஆம்! உண்மைதான் டிராட்ஸ்கியிசம் இருவழிப் போராட்டத்திற்கு தகுதியற்ற வாதமே; வாதம் நடத்துவதற்கு டிராட்ஸ்கியர்கள் தகுதியற்றவர்களே. ஏனெனில் தோழர் லெனினாலும், ஸ்டாலினாலும் டிராட்ஸ்கியிசம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு நூறாண்டுகள் ஆகிவிட்டன. மார்க்சியத்தால் கணக்கு தீர்க்கப்பட்ட இந்த டிராட்ஸ்கிய எலும்புத் துண்டுகளை சவக்குழியிலிருந்து தோண்டி எடுத்து வந்து “டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி வெல்லும்; நல்ல காலம் வரும்” என்று ஜக்கம்மா சோதிடம் கூறுகிறார்கள். நவம்பர் புரட்சி அன்றே செத்துப்போன டிராட்ஸ்கியத்தை பிணக்கூறாய்வு செய்யும் இந்த திருப்பணிக்கு ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆசீர்வாதம் நிரம்ப உண்டு.
லெனின் டிராட்ஸ்கியைப் பற்றி எழுதிய பல்வேறு கட்டுரைகளிலிருந்து ‘டிராட்ஸ்கியிசம்’ என்றால் என்ன? என்பதை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
டிராட்ஸ்கியிசம் என்பது...
கோஷ்டிவாதம்; பாராளுமன்றவாதம்; மூலதனம் நிதி மூலதனமாக மாறியதை பார்க்க மறுக்கும் இயக்க மறுப்பியல் வாதம்; திருத்தல்வாதம்; நிதி மூலதன முரண்பாடுகளையும் தனி நாட்டில் புரட்சி சாத்தியம் என்பதையும் மறுக்கும் கலைப்புவாதம்; இடது சாகசவாதம்; போலிப் புரட்சியின் சாரம்; ‘நிரந்தரப் புரட்சி’ எனும் பெயரில் ஏககால உலகப் புரட்சி பேசும் எதிர்ப்புரட்சிகர வாதம்; சிண்டிகலிச திரிபு; கதம்பக் கோட்பாட்டு வாதம்; சட்டவாதம்; இடது சாகசவாத வேடமிட்ட வலது சந்தர்ப்பவாதம்; இடது சந்தர்ப்பவாதம்; அராஜகவாதம்; தோல்வி மனப்பான்மையின் சாரம்; தற்புகழ்ச்சி; பிழைப்புவாதம்; ஏகாதிபத்திய நிதி மூலனம் மற்றும் அதன் பாசிசத்திற்கு தலைவணங்கும் கோழைத்தனம் மற்றும் இன்னும் பல.
உலக ஓடுகாலிகளைக் கொண்டு டிராட்ஸ்கி உருவாக்கிய நான்காம் அகிலம் சிதறுண்டு போனதால் கலைக்கப்பட்டது. ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல், தொண்டு நிறுவனங்களின் மூலம் நான்காம் அகில கலைப்புவாதிகளை மீண்டும் ஒருங்கிணைத்து இயக்கி வருகிறது. அதன் நோக்கம், உலகெங்கிலும் உள்ள மா.லெ. அமைப்புகளுக்குள் டிராட்ஸ்கிய கருத்துகளை திட்டமிட்டு ஊடுருவிப் பரப்புவதேயாகும். குட்டிமுதலாளித்துவ சித்தாந்தமான டிராட்ஸ்கியத்தின் இலக்கும் குட்டி முதலாளித்துவ சக்திகளே ஆவர். ஊதிப் பெருக்கப்பட்ட டிராட்ஸ்கியின் சாகசவாதத்திற்கு குட்டிமுதலாளித்துவ ஊசலாட்ட சக்திகள் எளிதில் பலியாகிவிடுகின்றனர். நான்காம் அகிலத்தின் கீழ் இயங்கும் சோசலிச சமத்துவக் கட்சி, இத்தகைய ஊடுருவல் முயற்சிகளை செய்துவருகின்றது. இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியினர் டிராட்ஸ்கிய விஷத்தை மா.லெ. அமைப்புகளுக்குள்ளும் சமூக வலைதளங்களிலும் பரப்ப முயற்சித்து வருகின்றனர்.
ருஷ்யாவில் தோழர் ஸ்டாலின் மறைவிற்கு பிறகு, ‘ஸ்டாலின் எதேச்சதிகார எதிர்ப்பு’ எனும் பெயரில், ‘ஸ்டாலின் நீக்கம்’ (De-stalinism) என்ற லெனினிய விரோத செயல்களை குருச்சேவ் கும்பல் துவக்கிவைத்தது. ஸ்டாலின் காலத்தில் நடந்த சில பிழைகளை, வரலாற்று ரீதியாக தொகுக்காமல் அவர் மீது தனி நபர் தாக்குதல் நடத்தி, ‘ஸ்டாலின் சர்வாதிகார எதிர்ப்பு’ எனும் பெயரில், ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகார எதிர்ப்பு’ பிரச்சாரத்தைக் கட்டியமைத்தது. இதன் மூலம் நவீன திருத்தல்வாதத்தை முன்வைத்து, முதலாளித்துவ மீட்சிக்கு வித்திட்டது குருச்சேவ் கும்பல். ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்யுரைகள் அனைத்தும், ஸ்டாலின் மீதான டிராட்ஸ்கியின் அவதூறுகளிலிருந்தே புனையப்பட்டன. ஆகவேதான், ஓடுகாலி டிராட்ஸ்கியின் உண்மையான சீடனாக குருச்சேவ் விளங்கியதாக மாவோ குறிப்பிடுகிறார். குருச்சேவின் நவீன திருத்தல்வாதம் கோர்பச்சேவின் கலைப்புவாதமாக முடிவுற்று, சோவியத் யூனியன் சிதறுண்டுபோனது. குருசேவ் கும்பலின் சீனத்து வாரிசுகளான டெங் கும்பலின் ‘நான்கு நவீனப்படுத்துதல்கள்’ எனும் திரிபுவாதம், சீனாவிலும் முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்தது. ரசிய, சீன சோசலிச நாடுகளில் முதலாளித்துவ மீட்சிக்கு ஏகாதிபத்திய நாடுகள் பின்புலமாக இருந்தன. அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டுதான் சோசலிசம் தோற்றது, வரலாறு முடிந்தது என அறிவித்தான் கோர்பசேவ். கோர்பசேவ் கலைப்புவாதத்திற்கும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கும் பிறந்ததே “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” எனும் மார்க்சிய விரோத கோட்பாடாகும்.
ரசியாவிலும் சீனாவிலும் ஏற்பட்ட இந்த பின்னடைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின் அடிவருடி அமைப்பான பிராங்பர்ட் பள்ளியும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மார்க்சியத்தையும் முதலாளிய பிற்போக்கு கருத்துகளையும் ஒன்றிணைக்கும் கலைப்புவாதத்தைப் பரப்பி, கம்யூனிச அமைப்புகளைப் பிளவுபடுத்தின. இது, புதிய இடது மற்றும் பின்நவீனத்துவ சூனியவாதப் பிரச்சாரம் பலப்படுவதற்கு வழி வகுத்தது. இவை அனைத்திற்கும் ஸ்டாலின் எதேச்சதிகாரி என்ற பொய் பிரச்சாரமே துவக்கப் புள்ளியாக இருந்தது.
ஸ்டாலின் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒவ்வொரு எலும்புத்துண்டை வீசுகிறது ஏகாதிபத்தியம். அதை வாயில் கவ்விக் கொண்டுதான் டிராட்ஸ்கியர்கள் ஸ்டாலின் சர்வாதிகாரி என பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஸ்டாலின் சர்வாதிகாரத்தை எதிர்ப்பது எனும் பெயரில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பதே புதிய இடது அரசியலின் அடி நாதமாகும்.
நவீன டிராட்ஸ்கியமும் புதிய இடது கலைப்பு வாதமும் பல இழைகளில் பிண்ணிப் பிணைந்துள்ளது. அடித்தளம், மேல்கட்டுமானம் இரண்டும் ஒருங்கிணைந்த வரலாற்று முழுமை (Historical Block), கலாச்சார மேலாதிக்கம் (cultural hegemony) போன்ற கிராம்சியின் மார்க்சிய விரோத கருத்துகளையும், பாசிசம் பற்றிய கிராம்சிய கருத்தான “பாசிசம் என்பது எதுவுமில்லை (Fascism is nothing); பின்தங்கிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் சர்வாதிகாரம்; ஒவ்வொரு அரசும் ஒரு சர்வாதிகாரம்” போன்ற மார்க்சிய-லெனினிய விரோதக் கருத்துகளையும், மார்க்சிய வட்டத்துக்குள் வைத்தே பார்க்க வேண்டும் என்று புதிய இடது கும்பல் பிரச்சாரம் செய்கிறது. அதைப் போலவே டிராட்ஸ்கி ஒரு மார்க்சியவாதி எனவும் டிராட்ஸ்கியின் கருத்துகள் மார்க்சிய வட்டத்துக்குள் வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை எனவும் புதிய இடது கும்பல் பிரச்சாரம் செய்துவருகிறது. தமிழகத்தில் எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ஆர், கோவை ஞானி, அ.மார்க்ஸ், ந.முத்துமோகன் போன்றவர்களின் புதிய இடது கருத்துகள் ஏகாதிபத்திய சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. பாசிசம் என்பது நிதி மூலதன சர்வாதிகாரத்தின் பிற்போக்கான அரசு வடிவம் என்ற மார்க்சிய வரையறையை மூடிமறைத்து, பாசிசம் என்பது போனபார்ட்டிசம் - அதாவது தனி நபர் சர்வாதிகாரம் என்ற டிராட்ஸ்கியின் கருத்துகளை புதிய இடது கும்பல் எடுத்தாள்கிறது. மேலும் பாட்டாளி வர்க்கத்திற்கென்று தனியாக கலை இலக்கியம் ஏதும் இல்லை என்ற டிராட்ஸ்கியின் கருத்துகளை வரித்துக்கொண்டு, கலை இலக்கியம் பற்றிய மார்க்சிய கருத்துகளை புதிய இடதுகள் திரித்துப் புரட்டுகின்றனர்.
இவ்வாறே, ஸ்டாலினின் எதேச்சதிகார எதிர்ப்பு என்ற பிரச்சாரத்திற்கும் டிராட்ஸ்கியின் அவதூறுகளையே புதிய இடதுகள் பயன்படுத்தி வருகின்றன.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் டிராட்ஸ்கிய கருத்துகள் மார்க்சிய வேடத்தில் எம்-எல் அமைப்புகளுக்குள் ஊடுருவ முயற்சிப்பது ஏன்?
ஏகாதிபத்தியவாதிகள் குருச்சேவின் திருத்தல்வாதம், கோர்பச்சேவின் கலைப்புவாதம், புதிய இடது, பின்நவீனத்துவக் கருத்துகளை கருவியாகப் பயன்படுத்தி கம்யூனிச அமைப்புகளை பிளவுபடுத்தினர். தற்போது அக்கருவிகள் அம்பலப்பட்டு வருவதால் டிராட்ஸ்கியம் என்ற இடது சாகசவாத - இடது சந்தர்ப்பவாதக் கருத்துகளை கருவியாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆகவேதான் டிராட்ஸ்கிய வாதிகள் மார்க்சிய வேடம் தரித்துக்கொண்டு மா-லெ அமைப்புகளில் ஊடுருவி கலைக்கின்றனர். மீண்டும் ஸ்டாலின் வேண்டும் என்று ருஷ்யாவில் துவங்கி உலகெங்கிலும் மக்கள் முழங்கத் துவங்கியுள்ளதைக் கண்டும், ருஷ்யா முழுவதும் ஸ்டாலின் சிலைகள் நிறுவப்படுவது ஒரு இயக்கமாகப் பரவி வருவதைக் கண்டும் அஞ்சி நடுங்கும் ஏகாதிபத்திய காகிதப் புலிகள் ஸ்டாலின் எனும் பாட்டாளி வர்க்க ஆயுதத்தை வீழ்த்துவதற்கு டிராட்ஸ்கி என்ற பாட்டாளி வர்க்க துரோகச் சக்திகளின் ஆயுதத்தையே உகந்த கருவியாக கருதுகின்றனர். ஆனால் அவர்கள் தோற்பது உறுதி.
சர்வதேச நிதி மூலதனம் மீள முடியாத நெருக்கடியில் சிக்குண்டதால் ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலகை மறுப்பங்கீடு செய்வதற்கான ‘பனிப்போர்’ நிலைமைகள் உருவாகியுள்ளன. மூலப் பொருட்களுக்கான தேவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக உருவாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு காலனிய நாடுகள் சூறையாடப்படுவதும் உக்கிரமடைகின்றன. மூலப்பொருட்களும், இயற்கை மற்றும் கனிம வளங்களும் மனித வளங்களும் எங்கெல்லாம் கொட்டி கிடக்கிறதோ அங்கெல்லாம் மறுபங்கீட்டிற்கான யுத்தம் தீவிரமடைகின்றன. வெனிசுலா, சிரியா, ஈரான் தொடங்கி தற்போது காஷ்மீர் வரை மறுபங்கீட்டிற்கான யுத்த களமாக அவை மாற்றப்படுவதன் அரசியல்-பொருளாதாரம் இதுவே ஆகும்.
ஏகாதிபத்திய நிதி மூலதனம் தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இராணுவத்தை பலப்படுத்தி பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது; இது நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துகிறது. இந்த போர்வெறியும், பாசிசமும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் அழுகலில் இருந்தே உதிக்கிறது. போரும் பாசிசமும் நிதி மூலதனத்தின் பலவீனத்தையே குறிக்கிறது; பலத்தை அல்ல. ஏகாதிபத்திய நிதி மூலதனச் சுரண்டலால் ஏகாதிபத்திய நாடுகளிலும், காலனிய நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்கள் சொல்லொன்னா துயரத்தில் உழன்று வருகின்றனர். எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் உலகெங்கும் பலம்பெற்று வருகின்றன.
முன்பு நவீன திருத்தல்வாதம், வலது சந்தர்ப்பவாதம், கோர்ப்பச்சேவ் கலைப்புவாதம், புதிய இடது கலைப்புவாதம், பின்நவீனத்துவம் போன்ற பாட்டாளிவர்க்க விரோதக் கொள்கைகளை கருவியாகப் பயன்படுத்தி உலக கம்யூனிச அமைப்புகளைப் பிளவுபடுத்தின. தற்போது அக்கருவிகள் அம்பலப்பட்டு வருவதால் ‘டிராட்ஸ்கியம்’ எனப்படும் இடது சாகசவாத - கலைப்புவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி உலகெங்குமுள்ள மார்க்சிய-லெனினிய அமைப்புகளுக்குள் ஏகாதிபத்தியங்கள் ஊடுருவி பிளவுபடுத்தி வருகின்றன.
உலக சமூக மாமன்றம் - மும்பை எதிர்ப்பு 2004
ஏகாதிபத்திய உலகமயம் மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து 2000ஆம் ஆண்டுகளில் மாபெரும் கிளர்ச்சிகள் ஏகாதிபத்திய நாடுகளிலேயே வெடித்தன. இவை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களாக மாறாமல் தடுக்கவே ‘உலக சமூக மாமன்றத்தை (WSF) உருவாக்கினர். இதில் இந்தியாவிலுள்ள சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற வலது சந்தர்ப்பவாத கட்சிகள் பங்குபெற்றன. இந்த மன்றம் உலகமயத்தையும், ஆக்கிரமிப்புப் போர்களையும் மட்டுமே எதிர்ப்பது என்ற பெயரில் ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்தையும், அமைதி வழியிலான நிதி மூலதன மறுபங்கீட்டையும் மூடிமறைத்து, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தது. முதலாளித்துவ ஜனநாயகம் பேசியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை காலனியாதிக்க எதிர்ப்பு தேச விடுதலை இயக்கங்களாக மாறவிடாமல் தடுத்து யுத்த எதிர்ப்பு இயக்கங்களாக மடை மாற்றியது. ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள், ஃபோர்ட் பவுன்டேஷன், ஆக்ஸ்ஃபாம் போன்றவற்றின் நிதி உதவியில் இவை நடந்தேறின.
உலக சமூக மாமன்றத்திற்கு மாற்றாக மும்பை எதிர்ப்பியக்கத்தை (MR-2004) தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகள், டிராட்ஸ்கியக் குழுக்கள், புதிய இடதுகள், உலக திருச்சபை கவுன்சில் மற்றும் ஐரோப்பிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தின. இவ்வமைப்பு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்ப்பது என்ற பெயரில் ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாமை மறைமுகமாக ஆதரித்தது. ‘ஏகாதிபத்திய முரண்பாடுகளைப் பயன்படுத்துவது’ என்ற பெயரில் அமைதி வழியிலான நிதி மூலதனச் சுரண்டலை ஆதரித்தது. ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாட்டைக் கைவிட்டு காவுத்ஸ்கியத்தை முன்வைத்து சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற கட்சிகளின் நிலைபாட்டுடன் ஒன்றிப் போயின. தன்னியல்பு போராட்டங்களையே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களாக வரையறுத்தது. தொண்டு நிறுவனங்களுடன் ஒற்றுமை - போராட்டம் எனும் பெயரில் சமரசம் செய்து கொன்டு அருந்ததிராய், அ.மார்க்ஸ், எஸ்.வி. இராஜதுரை போன்ற ஏகாதிபத்திய ஏஜெண்டுகளை மேடை ஏற்றி வருகின்றன. நேபாள மற்றும் இந்திய மாவோயிஸ்ட் கட்சிகள் ‘தொண்டு நிறுவனங்களைத் தனிமைப்படுத்துவது’ என்ற மார்க்சிய அனுகுமுறைக்கு மாறாக அவற்றுடன் உறவாடத்துவங்கின; மேலும் இக்கட்சிகள் ஏகாதிபத்தியம் பற்றிய நிலைபாட்டில் சமரசவாதப் போக்கையும், தொண்டு நிறுவனங்கள் பற்றிய நிலைபாட்டில் இரட்டைத் தன்மையையும் கொண்டிருந்தன. உலக சமூக மாமன்றத்திற்கு வலது சந்தர்ப்பவாதம் தலைமை தாங்கியது எனில், மும்பை எதிர்ப்பியக்கத்திற்கு இடது சாகசவாதம் - இடது சந்தர்ப்பவாதம் தலைமை தாங்கியது. மும்பை எதிர்ப்பியக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் எய்ம் (AIM - ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம்) போன்ற தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
டிராட்ஸ்கியிசத்தை காவுத்ஸ்கிவாதம் என்றார் லெனின். காவுத்ஸ்கியிசம் என்பது ‘அதீத ஏகாதிபத்தியம்’ பேசி, ‘தனி நாட்டில் புரட்சி’ என்ற லெனினியத்தை மறுத்து, உலகு தழுவிய புரட்சியை முன்வைக்கும் கலைப்புவாதக் கோட்பாடாகும். டிராட்ஸ்கியிசத்தின் ‘நிரந்தரப் புரட்சியும்’ உலகப்புரட்சி பேசி தனி நாட்டு புரட்சியை மறுக்கும் லெனினிய விரோத கலைப்புவாத நிலைபாடாகும்.
டிராட்ஸ்கிய ஊடுருவலை முறியடித்தோம்! மார்க்சிய-லெனினியத்தை பாதுகாத்தோம்!!
மேற்கூறிய உலகுதழுவிய போக்கின் ஒரு பகுதியாக சமரன் அமைப்பிற்குள் டிராட்ஸ்கிய, காவுத்ஸ்கிய கருத்துகள் ஊடுருவ முயற்சித்தன. கடந்த ஆண்டு எய்ம் தொண்டு நிறுவனத்தின் டிராட்ஸ்கிய கருத்துகள் ரவீந்திரன் மூலம் அமைப்பிற்குள் ஊடுருவ முயற்சித்தன. எய்ம் ஊடுருவலுக்கு ஞானம்-பிரதீப் கும்பல் அமைப்பின் கதவுகளை திறந்துவிட முயற்சித்தது. ஏ.எம்.கே. மறைவிற்குப் பிறகு நான்காம் அகிலத்தின் சோசலிச சமத்துவக் கட்சியின் டிராட்ஸ்கிய கருத்துகள் மனோகரன் மூலம் ஊடுருவ முயற்சித்தன. இவ்விரு கும்பல்களின் டிராட்ஸ்கியக் கருத்தை, இருவழிப் போராட்டத்தின் மூலம் அமைப்பு முறியடித்து இவர்களை வெளியேற்றியது.
ஞானம்-பிரதீப்-ரவீந்திரன் கும்பலின் டிராட்ஸ்கியவாதம்
மனோகரனின் எதிச்சதிகாரத்தை எதிர்ப்பது எனும் பெயரில் பிரதீப்-ஞானம் கும்பல் தங்களது எதேச்சதிகாரத்தை மூடிமறைத்துக்கொண்டு கோஷ்டி வாதத்தில் ஈடுபட்டது. கோஷ்டி கட்டிக்கொண்டே கோஷ்டி இல்லை என்ற டிராட்ஸ்கியத்தை முன்வைத்தது. இது எய்ம் தொண்டு நிறுவன ஊடுருவலுக்கு வழிவகுத்தது. இவர்கள் பரப்பிய, பரப்பி வருகிற திருத்தல்வாதக் கருத்துகள் வருமாறு:
1. ஸ்டாலின், இட்லர் இருவரும் சர்வாதிகாரிகள் என்று பேசினர். இதை கருத்துச் சுதந்திரம் என்றனர்;
2. ஸ்டாலின் சர்வாதிகாரி என்ற டிராட்ஸ்கியத்தில் துவங்கி ஏ.எம்.கே. சர்வாதிகாரி, பண்ணையார், நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையாளர் என்று முடித்தனர்;
3. லெனின் டிராட்ஸ்கியை கையாண்டது போல ஏ.எம்.கே. எங்களை ஜனநாயகமாக கையாளவில்லை என்கின்றனர். அமைப்பில் எதேச்சதிகாரம் நீடிக்கும்வரை கோஷ்டிவாதம் தவிர்க்கமுடியாது என்று டிராட்ஸ்கி முன்வைத்த அதே வாதத்தை முன்வைக்கின்றனர். மிகச் சிறந்த மார்க்சியவாதியும், ஜனநாயகவாதியுமான ஸ்டாலினை எதேச்சதிகாரவாதி என்று சொல்லி, அவரின் எதேச்சதிகாரத்தால்தான் டிராட்ஸ்கி கோஷ்டி கட்டினான் என்று டிராட்ஸ்கிய வாதிகள் கூறுகின்றனர். இதே போன்ற கருத்தையே ஞானம் கும்பலும் முன்வைக்கிறது. எதேச்சதிகாரம், கோஷ்டிவாதம் இரண்டும் அந்நிய வர்க்க போக்குகள் என்றாலும் இரண்டுக்குமான காரணமும் தீர்வுகளும் வெவ்வேறானவை என மார்க்சியம் முன்வைக்கிறது. அதாவது எதேச்சதிகாரத்திலிருந்து கோஷ்டி உருவாவது இல்லை. எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது நீண்டகால போராட்டம் எனவும், கோஷ்டிவாதம் நிபந்தனையின்றி உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் லெனினியம் கூறுகிறது.
கம்யூனிஸ்ட் அமைப்பில் கோஷ்டிவாதம் பற்றிய கோட்பாட்டு வரையறையை லெனின்தான் முதன்முதலில் முன்வைத்தார். அதனடிப்படையில் கோஷ்டிவாதத்திற்கு அமைப்பு ரீதியாக, வரலாற்று ரீதியாக 1921ஆம் ஆண்டு பத்தாவது மாநாட்டில்தான் தீர்வு காணப்பட்டது. “கோஷ்டிவாதம் கட்சியின் சித்தத்தின் ஒற்றுமைக்கு எதிரானது. பெயரளவில் ஒற்றுமை பேசி தனிக் குழுவாக இயங்குவது... ...குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதிகளின் அணிசேர்க்கையே கோஷ்டிவாதத்திற்கு அடிப்படை. கோஷ்டியை நிபந்தனையின்றி கலைக்க மறுக்கும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை கட்சி தன் மத்தியிலிருந்து கழிப்பதனால் பலமடைகிறது” என்கிறார் லெனின். ஆகவே வரலாற்றில் தீர்வுகாணபட்ட அதே அனுகுமுறையை அதுவும் குறிப்பாக கலைப்புவாத எதிர்புரட்சிகரக் கட்டத்தில் கையாளவேண்டும். ஏனெனினில் இன்று கலைப்புவாதமே ஏகாதிபத்தியங்களின் போர்த்தந்திரமாக மாறியுள்ளது.
4. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆழமான உள் முரண்பாடுகளையும் பனிப்போரையும் மறுத்து காவுத்ஸ்கியம்-டிராட்ஸ்கியம் பேசுகின்றனர்; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் மறுபங்கீட்டிற்கான போரை மறுப்பது அரசியல்துறையில் கலைப்புவாதம் என்ற ஏ.எம்.கே.வின் நிலைபாட்டை மறுக்கின்றனர்;
5. ஒருபுறம் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மூடிமறைத்தனர், மறுபுறம் சந்தர்ப்பவாதமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தலாம் எனவும், அதே போன்றே ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தலாம் எனவும் பேசினர். இவ்வாறு எய்ம் நிலைபாட்டை முன்வைத்தனர்;
6. இவர்களின் 2019 மே தினப் பிரசுரத்திலும் காவுத்ஸ்கியம்-டிராட்ஸ்கியம் வெளிப்பட்டது. வெனிசுலாவின் நெருக்கடிக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பே பிரதானக் காரணம் என்று கூறி அமைதி வழியில் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களையும் வேளாண்மைத் துறையையும், மூலப் பொருட்களையும் சுரண்டும் ரஷ்ய- சீன நிதிமூலதன ஆதிக்கத்தை மூடிமறைத்து மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர். அதாவது ஆக்கிரமிப்பு யுத்தம் (பிரதேசக் கைப்பற்றல்) நடத்துவது மட்டுமே ஏகாதிபத்தியம் என்ற காவுத்ஸ்கியத்தை முன்வைத்து லெனினியத்தை மறுக்கின்றனர். சி.பி.எம்., புதிய ஜனநாயகத்தின் (மக்கள் அதிகாரத்தின்) திருத்தல்வாத நிலைபாட்டை முன்வைக்கின்றனர்.
7. உலகில் சோசலிச முகாம் எங்கும் இல்லாத சூழலில் ஏகாதிபத்திய முரண்பாடுகளை பயன்படுத்துவது என்பது கோட்பாடு ரீதியாக திருத்தல்வாதம் எனவும், உலகப் போரை உள்நாட்டு போராக மாற்றவேண்டும் எனவும் முதலாம் பனிப்போரில் ஏ.எம்.கே. லெனினிய வழியை முன்வைத்தார். இது இன்றைய இரண்டாவது பனிப்போர் காலத்திற்கும் பொருந்தும் என்ற ஏ.எம்.கே. நிலைபாட்டை துறந்து ஓடுகின்றனர்.
8. அண்மையில் 1988ஆம் ஆண்டு சிறப்புக்கூட்ட அறிக்கையை மறுபதிப்பு செய்து அதன் முன்னுரையில் 70 திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளனர். 1970 திட்டம் அடிப்படையில் சரி என்பதும், அதன் அடிப்படையில் செயல்தந்திரம் வகுத்து செயல்படுவது என்பதும்தான் சிறப்புக் கூட்ட அறிக்கையினுடைய முக்கிய முடிவாகும். இந்த முடிவின் அடிப்படையில் இத்தனை ஆண்டுகள் இயங்கிவிட்டு தற்போது முழுவதையும் மீளாய்வு பற்றி பேசுவது எவ்வித சுயவிமர்சனமும் அற்ற சந்தர்ப்பவாதமாகும். 1970 திட்டம் அடிப்படையிலேயே தவறு என்ற சூன்யவாதத்தை முன்வைத்துள்ளனர்.
9. காஷ்மீர் பற்றிய நிலைபாட்டிலும் கூட 370 இரத்தை திரும்பப் பெறு என்ற சி.பி.எம்., காங்கிரஸ் நிலைபாட்டையே முன்வைக்கின்றனர். மேலும், 370 இரத்து செய்ததின் மூலம் காஷ்மீர் இந்தியாவிலிருந்து துண்டிக்கப் பட்டதாகவும், அவ்வாறு துண்டித்ததால் காஷ்மீர் மீது இந்தியா தற்போது ஆக்கிரமிப்பு அரசாகவே நீடிக்கிறது. தற்போது யுத்தம் நடத்துவதாகவும் எழுதுகின்றனர். அவ்வாறெனில் காஷ்மீர் தனிநாடாகிவிட்டதா? இதுவரையில் இந்தியா ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தவில்லையா? 370 இரத்தை திரும்பப் பெறு என்ற கோரிக்கை காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான கோரிக்கையா? பாகிஸ்தானை திருப்திபடுத்தவே சீனா காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டது என்று கூறி காஷ்மீரில் சீன நிதி மூலதன ஆதிக்கத்தை மூடி மறைக்கிறார்கள். இந்திய ஆக்கிரமிப்பு பற்றி மட்டும் பேசுவதிலும், ஏகாதிபத்திய நிதிமூலதனங்களுக்கிடையில் மறுபங்கீட்டிற்கான யுத்தக் களமாக காஷ்மீர் மாற்றப்படுவதற்கான நிலைமைகள் உருவாகிவருவது அறிந்தும் கூட அதை மூடி மறைப்பதிலும் தாங்கள் காவுத்ஸ்கிய-டிராட்ஸ்கியர்கள் என மீண்டும் நிரூபித்துள்ளனர்.
10. ‘கார்ப்பரேட்-காவி பாசிசம்’ என்ற செங்கொடி (ரெட் ஸ்டார்), மக்கள் அதிகாரத்தின் நிலைபாட்டையே இவர்களும் முன்வைக்கின்றனர். ஏகாதிபத்திய நிதி மூலதன எதிர்ப்பை கார்ப்பரேட் நிறுவன எதிர்ப்பாக சுருக்குகின்றனர். காவி பாசிசம் என்று மட்டும் சொல்வதின் மூலம் கதர் பாசிசத்திற்கு முட்டுக் கொடுக்கின்றனர். காவி பாசிசம் என்பதை மட்டும் குறிப்பிடுவது சாராம்சத்தில் பார்ப்பனிய பாசிசத்தை வர்க்க உள்ளடக்கம் இல்லாமல் பேசுவதாகும். அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் பாசிசம் என்பதும் இதில் காங்கிரசும், பி.ஜே.பி.யும் ஒன்றே; இந்திய பாசிசத்தின் இரு முகங்களே என்பதுதான் சமரன் (ஏ.எம்.கே.) நிலைபாடாகும்.
11. அமைப்பிற்குள் தங்கள் கருத்துகள் சிறுபான்மையாக இருந்த ஆத்திரத்தில் இருவழிப் போராட்டத்தை சீர்குலைத்தனர். பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்பட்டு செயல்படுவது என்ற ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை தூக்கியெறிந்தனர். கோஷ்டிவாதத்தை நியாயப்படுத்துவது, இருவழிப் போராட்டம், ஜனநாயக மத்தியத்துவத்தை மறுப்பது போன்ற டிராட்ஸ்கிய வாதங்களை முன்வைத்தனர்.
அமைப்பை கோஷ்டிவாதத்தின் மூலம் பிளவுபடுத்தியதற்கும், எய்ம் தொண்டு நிறுவன ஆதரவிற்கும், ஓராண்டிற்கும் மேலான இருவழிப் போராட்டத்திற்குப் பிறகும் சுயவிமர்சனம் வர மறுத்ததால் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் அமைப்பு அவர்களை நீக்கியது. அதன் பிறகும் சமரன் பெயரையும், சமரன் உழைப்பையும் திருடி பிழைப்பிற்காக பயன்படுத்துகிறார்கள். துரோகி டிராட்ஸ்கி லெனின் சொன்னதாக திருத்தல்வாத, கலைப்புவாதக் கருத்துகளைக் கட்சியில் பரப்பியது போல் இவர்களும் சமரன் பெயரில் திருத்தல்வாதக் கருத்துகளைப் பரப்புகிறார்கள்.
இவ்வாறு சமரன் நிலைபாட்டை கைவிட்டு ஓடிப்போய் சமரனைத் தாக்கிய ஞானம்-பிரதீப்-ரவீந்திரன் கும்பல் சமரன் பெயரை எவ்வித கூச்சமுமின்றி, மானவெட்கமின்றி, ஈனத்தனமாக பயன்படுத்துகின்றது. சமரன் பத்திரிகை, சமரன் வெளியீட்டகம் மற்றும் புதுமை பதிப்பகம் போன்றவற்றை அமைப்பு விரோதமாக பயன்படுத்தி வருகிறது; மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி என்ற பெயரில் இயங்கிக்கொண்டு ம.ஜ.இ.க.வின் கொடி மற்றும் அமைப்பின் பெயர் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் சமரனால் ஸ்தாபிக்கப்பட்டவை ஆகும். இவை அமைப்பு பெரும்பான்மைக்கு உரிமையுடையதாகும். சிறுபான்மையினரான இக்கும்பலுக்கு இவற்றை பயன்படுத்துவதற்கு எவ்வித அதிகாரமும் தார்மீக உரிமையும் இல்லை. அவ்வாறு பயன்படுத்துவது கேடுகெட்ட பிழைப்புவாதம் மற்றும் அரசியல் வேசித்தனமாகும்.
மனோகரனின் டிராட்ஸ்கிய வாதம்
ஏ.எம்.கே மறைவிற்குப் பிறகு, நான்காம் அகிலத்தில் சோசலிச சமத்துவக் கட்சி எனப்படும் டிராட்ஸ்கிய கும்பலைச் சேர்ந்த பொன்னையா வீரபாகு, ஜரதுஷ்டிரா, டிராட்ஸ்கி ஓஷோ மற்றும் இவர்களுடன் உறவாடும் காலன்துரை, ஏலகிரி இராமன், அனுப்பூர் செல்வராஜ் போன்ற டிராட்ஸ்கியர்களின் கருத்துகள் மனோகரன் மூலம் அமைப்பிற்குள் ஊடுருவ முயற்சி எடுத்தது. மனோகரன் ‘டிராட்ஸ்கி பற்றிய ஆய்வு’ எனும் பெயரிலும், ‘ஸ்டாலின் மீதான விமர்சனம்’ எனும் பெயரிலும், அப்பட்டமாக டிராட்ஸ்கி ஆதரவு - ஸ்டாலின் எதிர்ப்புக் கருத்துகளை சதித்தனமாக பிரச்சாரம் செய்து கோஷ்டி கட்டி, பிறகு தனி அமைப்பு கட்டி அமைப்பை பிளவுபடுத்தினார். மனோகரனையும் அவரது ஆதரவாளர்களையும் அமைப்பு களையெடுத்தது. தற்போது ‘பாட்டாளி வர்க்க சமரன் அணி’ எனும் பெயரில் டிராட்ஸ்கிய அணியாக செயல்பட்டு வருகிறது.
மனோகரன் டிராட்ஸ்கியர்கள் பேசும் கருத்துகளையே அமைப்புக்குள்ளும் பேசினார். மனோகரன் தனது அறிக்கையில் டிராட்ஸ்கிய ஆதரவு, ஸ்டாலின் எதிர்ப்பு கருத்துகளை நயவஞ்சகமாக ‘ஆய்வு’ எனும் பெயரில் புதிய இடது பாணியில் முன்வைத்துள்ளார். அறிக்கை மீதான வாதத்தில் அப்பட்டமாக நான்காம் அகிலத்தின் கருத்துகளை முன்வைத்தார். ஆனால் மாவோ வழியில் ஸ்டாலினை விமர்சிப்பதாகக் கூறி மாவோவை இழிவுபடுத்தி தாக்கினார். வாதத்தில் அவர் முன்வைத்த மார்க்சிய விரோதக் கருத்துகள் பின்வருமாறு:
1. ஸ்டாலின் இந்தியப் புரட்சியின் எதிரி; சீனப் புரட்சிக்குத் தடையாக இருந்தார்; அவர் உலகப் புரட்சியின் எதிரி.
2. ஸ்டாலின் அகிலம் கலைத்தது தவறு; அவர் கலைப்புவாதி; அகிலம் கலைத்ததால்தான் கம்யூனிச அமைப்புகள் பிளவுண்டன; அகிலம் கலைத்ததற்கு ஸ்டாலின் சொன்ன காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை.
3. ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் தவறு; அதில் இடது வலது விலகல் போக்குகள் ஏற்பட்டன.
4. சோசலிசக் கட்டுமானத்தில் ஸ்டாலின் செய்த கடுமையான மார்க்சிய விரோத தவறுகளே ருஷ்யாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டதற்கு காரணம். கலைப்புவாதத்தை எதிர்த்தப் போராட்டம் என்பது கூட முதலாளித்துவ மீட்சி பற்றிய இந்த ஆய்விலிருந்தே துவங்க வேண்டும். ஸ்டாலின்தான் கலைப்புவாதத்தின் தொடக்கம். அவர் சர்வாதிகாரி; பலரைக் கொன்ற கொலைகாரன்.
5. ஸ்டாலின் வெறும் துப்பாக்கி; தத்துவவாதி இல்லை.
6. காந்தி கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்தார். ஸ்டாலின் வழிகாட்டுதலால் தான் இந்திய பொதுவுடைமை இயக்கம் ஏகாதிபத்திய ஆதரவு நிலையெடுத்தது.
7. மாவோ அகிலம் கலைத்ததை ஆதரித்தார்; அகிலம் கட்ட முயற்சிக்கவில்லை; அவர் சர்வதேச பாத்திரம் ஆற்றவில்லை.
8. மாவோ-லின்பியோ கூட்டணியே இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் அழிந்து போனதற்கு காரணம்.
9. மாவோவின் கலாச்சாரப் புரட்சி தோல்வி அடைந்தது. கலாச்சாரப் புரட்சி முதலாளித்துவ மீட்சியைத் தடுக்க முடியவில்லை. சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட மாவோதான் காரணம்.
10. ஸ்டாலின்-மாவோவை விமர்சிக்காமல் கட்சி கட்ட முடியாது. ஸ்டாலின் வழியில் சென்று அழியப் போகிறோமா? ஸ்டாலினை மறுத்து கட்சி கட்டப் போகிறோமா? இதுவே நம்முனுள்ள கேள்வி.
11. லெனின் சொன்னவாறு ஏன் ஐரோப்பா முழுதும் புரட்சி நடக்கவில்லை? தனிநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று டிராட்ஸ்கி முன்பே சொன்னார்.
12. டிராட்ஸ்கியின் ‘நிரந்தரப் புரட்சி’ பரிசீலனைக் குரியது. அவர் மா-லெ வாதி. புரட்சியில் பங்கு பெற்றார். டிராட்ஸ்கி ஸ்டாலினின் எதேச்சதிகாரத்தால்தான் கோஷ்டிவாதியாகவும் எதிர்ப்புரட்சியாளனாகவும் மாறினான். (இது மாவோவின் விமர்சனம் என்கிறார். ஸ்டாலினை எதேச்சதிகாரி என்றும் ஸ்டாலினால்தான் டிராட்ஸ்கி எதிர்புரட்சியாளனாக மாறியதாக மாவோ கூறினாரா?) லெனின் டிராட்ஸ்கியைத்தான் வாரிசாக பார்த்தார். ஸ்டாலினை எதிர்த்தார். லெனின் உயிலை இவ்வமைப்பு ஏற்கிறதா? இல்லையா? என்று கேட்டார்.
13. ஸ்டாலின்-மாவோவை மறுபரிசீலனை செய்ய இந்த அமைப்பு அனுமதித்தால்தான் இந்த அமைப்பில் இருப்பேன்.
14. மார்க்சிய-லெனினியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் மீதான விமர்சனம் எனும் பெயரில் டிராட்ஸ்கியவாதிகளின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் மீது மனோகரன் கடும் தாக்குதல் தொடுத்தார். டிராட்ஸ்கியை எதிர்ப்பது என்பதே மாவோ சிந்தனையைக் கைவிடுவது என்றும், அது தொண்டு நிறுவன அரசியல் என்றும், கலைப்புவாதம் என்றும் பேசுகிறார்.
மனோகரன் பாசிச காலகட்டத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி பேசுவது டிராட்ஸ்கியம் என்கிறார். ஆனால் இது புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிட்டு ஓடுவதும், அப்பட்டமான முதலாளித்துவ தேசியவாதமும் ஆகும் .
ஞானம் கும்பலைப் போலவே, மனோகரன் கும்பலும் ஏ.எம்.கே மீது தாக்குதல் நடத்தியது. டிராட்ஸ்கியத்தை ஞானம் கும்பல் துவக்கி வைக்க, மனோகரன் கும்பல் முடித்து வைத்தது. ஏ.எம்.கே. மீதும் அவர் நிலைபாட்டின் மீதும் மனோகரன் நடத்திய தாக்குதல் வருமாறு:
1. ஏ.எம்.கே தத்துவ அறிவு இல்லாதவர்; அவர் வெறும் நடைமுறையாளர்; 30 ஆண்டுகளாக செயல்தந்திர கண்ணோட்டம் இல்லாமல் இருந்தார்; ஏதும் எழுதி வைக்கவில்லை; அவர் எதேச்சதிகார வாதி; குறுங்குழுவாதி; அவர் நிரூபிக்கப்பட்ட தலைவர் இல்லை;
2. ஏ.எம்.கே-வின் காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள் என்ற கோட்பாடு பொருந்தாது; காங்கிரஸ்-திமுக அணிக்கு நிபந்தனைகளுடன் வாக்களிக்க மக்களைக் கோரலாம்; புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிடவேண்டும்; பாசிச எதிர்ப்பு அரசாங்கம் அமைப்பதும், அதில் காங்கிரசை அமர்த்துவதும் அவசியம்; பாஜக மட்டுமே பாசிசக் கட்சி;
3. நிரந்தரமாக பாராளுமன்றத்தில் பங்கேற்க வேண்டும்; தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும்; தலைமறைவு அமைப்பு தேவையில்லை; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் பனிப்போர் இல்லை; ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தும் ஏகாதிபத்தியத்தைத்தான் முதன்மையாக எதிர்க்க வேண்டும். தாய்நாட்டை காப்பது என்ற பெயரில் அமைதி வழியில் நிதி மூலதன ஆதிக்கத்தில் ஈடுபடும் ஏகாதிபத்தியத்தை ஆதரித்தார்; வெனிசுலா பிரச்சினையில் அமெரிக்காவை எதிர்த்து சீன-ரஷ்ய முகாமை ஆதரிக்க வேண்டும் என்றார்;
4. காஷ்மீரை ஆக்கிரமிப்பதால் டெல்லிக்கு ஏகாதிபத்திய குணாம்சம் உண்டு. இந்தியா துணை ஏகாதிபத்தியம்; பிரபாகரன் பாசிஸ்ட்;
5. ஆறு மாத கால போராட்டத்திற்குப் பிறகும் சுயவிமர்சனம் வர மறுத்து டிராட்ஸ்கிய கருத்துகளைக் கொண்டு தனி அமைப்பு கட்டி பிளவுபடுத்தினார். எனவே, அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அமைப்பு பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் களையெடுத்தது. தற்போது தனது அமைப்புக்கு பாட்டாளி வர்க்க சமரன் அணி என பெயரிட்டுள்ளார். பாட்டாளி வர்க்க சமரன் பெயரில் பத்திரிகையையும் சமரன் வெளியீட்டகத்தையும் தன் பெயருக்கு அமைப்பிற்குத் தெரியாமல் கள்ளத்தனமாக பதிவுசெய்துகொண்டார். சமரன் நிலைபாட்டை விட்டு ஓடிவிட்டு, சமரனை தாக்கிவிட்டு ஞானம் கும்பலைப் போலவே மனோகரனும் சமரன் பெயரை வைத்து ஈனத்தனமாக பிழைப்பு நடத்துகிறார்.
இவ்வாறு, ஏ.எம்.கே மீதும் அவரது நிலைபாடுகள் மீதும் தாக்குதல் நடத்தினார். எய்ம் எதிர்ப்பு போராளி என்று தன்னையே பெருமையாகக் கூறியவர், இறுதியில் ஏகாதிபத்தியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய எய்ம் நிலைபாட்டையே அவரும் முன்வைத்தார்.
தொகுத்துச் சொல்வதெனில்,
ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாடுகளைக் கைவிட்டு காவுத்ஸ்கிய-டிராட்ஸ்கிய வாதத்தை முன்வைப்பது; ஆனால் டிராட்ஸ்கிய எதிர்ப்பு வேடம் போடுவது;
தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தலாம் என்பது;
கார்ப்பரேட் காவி பாசிசம் என பேசுவது;
ஜனநாயக மத்தியத்துவத்தை, இருவழிப் போராட்டத்தை மறுப்பது;
கோஷ்டி கட்டுவதை நியாயப்படுத்துவது;
பாராளுமன்றவாதத்தை முன்வைப்பது, தலைமறைவு அமைப்பை துறந்து ஓடுவது;
அமைப்பை முதலாளிய நிறுவனமாக, திருத்தல்வாத அமைப்பாக மாற்ற முயற்சிப்பது;
தாங்களே கலைப்புவாதிகளாக மாறிவிடுவதால், மா-லெ அமைப்பின் பிளவுகளுக்குக் காரணம் கலைப்புவாதம் என்ற சமரன் நிலைபாட்டை மறுத்து சமரனையே (ஏ.எம்.கே.) கலைப்பு வாதியாக, குறுங்குழுவாதியாக மாற்றி விடுவது;
சமரன் மீது தாக்குதல் தொடுப்பது; சமரன் நிலைபாட்டை கைவிட்டு ஓடுவது; ஆனால் சமரன் பெயரில் பிழைப்பு நடத்துவது;
என எல்லாவற்றிலும் ஞானம் கும்பலும் - மனோகரன் கும்பலும் ஒரே நிலைபாட்டில் பிண்ணிப் பிணைந்துள்ளது. திருத்தல்வாதமும் பிழைப்புவாதமும் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது.
கலைப்புவாதம் பற்றி ஏ.எம்.கே.
தோழர் ஏ.எம்.கே மா-லெ அமைப்புகளை பிளவுபடுத்திவரும் கலைப்புவாதப் போக்குகளாக நான்கு கலைப்புவாதப் போக்குகளை வகைப்படுத்தியுள்ளார். அவை வருமாறு:
1. மண்ணுக்கேற்ற மார்க்சியம் எனும் பெயரில் மார்க்சியத்தோடு எண்ணமுதல்வாத, முதலாளித்துவ பிற்போக்குத் தத்துவங்களை (உ.ம்-பெரியாரியம், அம்பேத்கரியம், கிராம்சியம், அத்வைதம், துவைதம் முதலியன) கலப்பது தத்துவத் துறையில் கலைப்புவாதமாகும்.
2. ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் மறு பங்கீட்டிற்கான போர் இல்லை என்றும்; எனவே தனி நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்றும் கூறி காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியத்தை முன்வைப்பது அரசியல் துறையில் கலைப்புவாதமாகும்.
3. முதலாளித்துவ நாட்டு பாராளுமன்றங்களைப் போலவே காலனி நாட்டுகளின் பாராளுமன்றங்களையும் பயன்படுத்தலாம் என்று கூறி நிரந்தரப் பங்கேற்பு பேசுவதன் மூலம் அமைப்பை பாராளுமன்றவாத அமைப்பாக மாற்றியமைக்க முயற்சிப்பதும் பாராளுமன்ற சோசலிசம் பேசுவதும் செயல் தந்திரத்துறையில் கலைப்புவாதம் ஆகும்.
4. தலைமறைவு ஸ்தாபனத்தை மறுப்பதும்; இருவழிப் போராட்டத்தை மறுப்பதும் அமைப்புத் துறையில் கலைப்புவாதம் ஆகும்.
டிராட்ஸ்கியிசம் இந்த நான்கு கலைப்புவாதப் போக்குகளையும் தன்னகத்தே தழுவி நிற்கிறது. ஆகவே டிராட்ஸ்கியிசத்தை முறியடித்து சவக்குழிக்கு அனுப்புவது மார்க்சியர்களின் இன்றியமையாதக் கடமையாகும்.
ஏகாதிபத்தியவாதிகளும், புதிய இடதுகளும், திருச்சபை-தொண்டு நிறுவனங்களும், பிராங்க்பர்ட் பள்ளியும் ஒன்றிணைந்து மா-லெ அமைப்புகளுக்குள் தற்போது ‘மார்க்சிய வேடம் தரித்த டிராட்ஸ்கிய கருத்துகள்’ ஊடுருவ முயற்சிக்கின்றன. கம்யூனிச அமைப்புகளில் உள்ள குட்டி முதலாளித்துவ ஊசலாட்ட சக்திகளை இலக்காகக் கொண்டு அவை செயல்படுகின்றன. டிராட்ஸ்கி ஆதரவு-ஸ்டாலின் எதிர்ப்பு கருத்துக்களை விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகின்றன. அவற்றை இனங்கண்டு முறியடிப்பதும், டிராட்ஸ்கிய சவங்களை லெனினிய எரிதழல் கொண்டு சாம்பலாக்குவதும், மாபெரும் மார்க்சிய-லெனினிய வாதியும் நம் ஆசானுமான ஸ்டாலினின் சாதனைகளை உயர்த்திப் பிடிப்பதும், மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனையைக் காப்பாற்றுவதும் நமது உயிர் மூச்சான கடமையாகும்.
1) டிராட்ஸ்கி பற்றிய மனோகரனின் மதிப்பீடு
மனோகரன் கூறுவதாவது: டிராட்ஸ்கி 14 ஆண்டுகள் (1903 - 1917) லெனினுடைய நிலைபாடுகளுக்கு எதிராகவும் போல்ஷ்விக் கட்சிக்கு எதிராகவும் போராடினார். முதலில் மென்ஷ்விக் பக்கம் நின்றார், நடுநிலை நாடகம் போட்டார், கோஷ்டிவாதியாக செயல்பட்டார், லெனின் கடுமையாக விமர்சித்தார், கெட்டவார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். ஆனால் போல்ஷ்விக் கட்சியில் டிராட்ஸ்கி சேர்ந்த பிறகு லெனின் அவரை கோஷ்டிவாதி என்று விமர்சிக்கவில்லை என்கிறார்.
தோழர் லெனின் டிராட்ஸ்கியை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார் என்கிறார். ஆனால் டிராட்ஸ்கி மீது லெனின் முன்வைத்த அரசியல், தத்துவ விமர்சனங்களை பற்றி மனோகரன் ஏதும் பேசவில்லை. இது லெனினை இழிவுபடுத்துவதாகும். மேலும் டிராட்ஸ்கியை லெனின் கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்துள்ளார் என்று கூறி லெனின் மீதே வன்மத்தை கக்குகிறார்.
டிராட்ஸ்கி மீதான லெனினின் அரசியல் விமர்சனம் வருமாறு:
கோஷ்டிவாதம் பற்றி என்ற கட்டுரையில் லெனின் கூறுவதாவது:
-டிராட்ஸ்கி 1901-03 இல் தீவிர இஸ்க்ராவாதியாக இருந்தார். 1903 இறுதியில் டிராட்ஸ்கி தீவிர மென்ஷ்விக் ஆனார். அதாவது இஸ்க்ராவாதிகளைக் கைக்கழுவி விட்டு “பொருளாதாரவாதிகள்” பக்கம் தாவினார். பழைய இஸ்க்ராவுக்கும் புதிய இஸ்க்ராவுக்கும் இடையே ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது என்று அவர் கூறினார். 1904-05 இல் மென்ஷ்விக்குகளைத் துறந்த ஓர் ஊசலாட்டமான நிலையை மேற்கொண்டார். ஒரு சமயம் மார்த்தினவுடன் (பொருளாதாரவாதி) ஒத்துழைத்தும் இன்னொரு சமயம் தனது அபத்தமான இடதுசாரி நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை பிரகடனம் செய்தும் ஊசலாடினார். 1906-07இல் போல்ஷ்விக்குகளை அனுகினார். 1907 வசந்த பருவத்தில் ரோசா லுக்சம்பர்க்குடன் தான் உடன்பாடு கொள்வதாக அறிவித்தார்.
சீர்குலைவு நாட்களில் நீண்ட கோஷ்டி சார்பற்ற ஊசலாட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் வலதுசாரிகள் பக்கம் சென்றார். 1912 ஆகஸ்டில் கட்சிக் கலைப்புவாதிகளைக் கொண்ட ஒரு கூட்டணியில் பிரவேசித்தார். இப்போது மீண்டும் அவர்களை விட்டு நீங்கினார். எனினும் சாராம்சத்தில் அவர்களது போலிக் கருத்துகளை ஆதரிக்கிறார். (LCW 20, Page 327-332, 346-347)
இவ்வாறு லெனின் டிராட்ஸ்கியின் மீது துல்லியமான அரசியல் சித்தாந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளபோது அவர் டிராட்ஸ்கியை வேசி மகன் போன்ற கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளதாக கூறுகிறார். அரசியல் விமர்சனங்கள் வைத்ததைப் பற்றி எழுதாமல் லெனினை இழிவுபடுத்துகிறார். டிராட்ஸ்கியின் மீது அன்பைப் பொழிகிறார்.
மனோகரன் கூறுவதாவது: டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்த பிறகு லெனின் அவரை கோஷ்டிவாதி என்றோ, கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்றோ கூறவில்லை:
டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்த பிறகும் கடுமையான அரசியல் விமர்சனங்களை லெனின் முன்வைத்துள்ளார். இதைப் பற்றி பேசாமால் லெனினை மேலும் இழிவுப் படுத்துகிறார். டிராட்ஸ்கியை கோஷ்டிவாதி என்றும், கோஷ்டியை கலைக்க வேண்டும் என்றும் லெனின் கடுமையாக எச்சரித்தார்.
“மீண்டும் தொழிற்சங்கங்கள் பற்றியும், இன்றைய நிலை பற்றியும், டிராட்ஸ்கி, புகாரின் ஆகியோரின் தவறுகள் பற்றியும்” என்ற கட்டுரையில் லெனின் டிராட்ஸ்கியை கோஷ்டிவாதி என்று விமர்சித்துள்ளார். தொழிற்சங்கம் பற்றிய விஷயங்களில் லெனினியத்தை டிராட்ஸ்கி தாக்கினான். தொழிலாளர் எதிர்ப்பு கோஷ்டியை உருவாக்கினான்.
அது குறித்து லெனின் கூறுவதாவது: கோஷ்டிவாதப் பிரகடங்களால் கட்சிக்கு ஆபத்து என்ற (மேற்கண்ட கட்டுரையின்) துணைதலைப்பில் பின்வருமாறு கூறுகிறார். “தொழிற்சங்கங்களின் பாத்திரமும் பணிகளும் என்ற டிராட்ஸ்கியின் பிரசுரம், ஒரு கோஷ்டிவாத பிரசுரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பி “இந்தப் பிரச்சினையைப் பற்றி வாய்ப் பேசாதிருப்பது மாஸ்கோ கமிட்டி உறுப்பினர்களுக்கு மிகவும் மனதிற்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கிறது” என்று டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதத்தை அம்பலப்படுத்தினார். மேலும் அவர் கூறுவதாவது “பத்தொன்பது பேரில் ஒருவர் (டிராட்ஸ்கி) மத்தியக் கமிட்டிக்கு வெளியே ஒரு கோஷ்டி அமைக்கிறார். அதன் கூட்டு உழைப்பை (பிரசுரம்) சமர்ப்பிக்கிறார்”.
அப்பிரசுரம் பற்றி லெனின் கூறுகிறார்: “ இன்று 25.01.1921 தேதியோடு டிராட்ஸ்கியின் கோஷ்டிவாத பிரசுரம் வெளியிடப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. வடிவத்தில் பொருத்தமற்றதும், சாரம்சத்தில் தவறானதுமான இந்த பிரசுரம், கட்சியில் அதன் நடைமுறை, பொருளாதார, உற்பத்தி முயற்சியிலிருந்து அரசியல் சித்தாந்த தவறுகளை திருத்தும் பணிக்கு திருப்பிவிடப்பட்டது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. ஆனால் ஒரு முதுமொழி கூறுவது போல இது கெட்ட அறிகுறியாகும்” என்கிறார்.
அதே கட்டுரையில் டிராட்ஸ்கியின் தொழிற்சங்கக் கண்ணோட்டம் இயக்கவியல் கதம்ப கோட்பாட்டு வாதம் என்று பின்வருமாறு விமர்சிக்கிறார்: “டிராட்ஸ்கி முதலில் சுத்திகரிப்பை விரும்பினார்; ஆனால் இப்போது அந்த யோசனையை கைவிட்டுவிட்டார் என்று புக்காரின் தனது ஜனவரி 3ம் நாள் பேச்சில் கதம்ப கோட்பாட்டுவாத தவறுகளில் மற்றொன்றைச் செய்துள்ளார். இது நடைமுறைக் கண்ணோட்டத்தில் கேலிக்கூத்தானது. தத்துவார்த்த ரீதியில் ஒரு மார்க்சிஸ்ட் விசயத்தில் அனுமதிக்க முடியாதது.”
“அவருடைய கதம்ப கோட்பாட்டுவாத அணுகுமுறை அவரை குழப்பி சிண்டிகலிசத் திரிபிற்கு இட்டுச் சென்றுள்ளது. ஒருவழிச் சிந்தனை, நிர்ப்பந்த போக்கு, மிகைப்படுத்துதல், பிடிவாதம் ஆகியவை டிராட்ஸ்கியிடம் காணப்படும் பலவீனங்கள்” என்கிறார். (LCW 32, Page 70-107)
டிராட்ஸ்கி தனது கோஷ்டியை கலைக்க வேண்டும் என பத்தாவது காங்கிரசு பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றியது: “6வது தீர்மானம்: எனவே ஏதேனும் ஒரு கொள்கையின் அடிப்படையில் அமைந்த எல்லா கோஷ்டிகளும் (தொழிலாளர் எதிர்ப்பு கோஷ்டி, ஜனநாயக மத்தியத்துவ கோஷ்டி) எத்தகைய விதிவிலக்குமின்றி கலைக்கப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கிறது. அவற்றை உடனடியாக கலைக்கும்படி உத்திரவிடுகிறது.
(LCW 32, Page 241-244)
ஆனால் பத்தாவது காங்கிரஸ் தீர்மானம் டிராட்ஸ்கிக்காக போடப்பட்டது இல்லை எனவும், கோஷ்டியை அடக்குவதற்கு லெனின் டிராட்ஸ்கியையே அனுப்பினார் எனவும் மனோகரன் கூறுகிறார். டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதத்தை மூடி மறைக்கிறார்.
மனோகரன் கூறுவதாவது: லெனின் பாட்டாளிவர்க்கம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஏப்ரல் கொள்கையை வெளியிட்டார் ஆனால் போல்ஷ்விக் கட்சி அதை ஏற்க மறுத்தது. 1917 மே மாதம் மாஸ்கோ வந்த டிராட்ஸ்கி, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று முழங்கினார். பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற இந்த நிலைபாட்டில் லெனினும் டிராட்ஸ்கியும் ஒன்றிணைந்தனர். இந்த நிலைபாட்டின் அடிப்படையில்தான் போல்ஷ்விக் கட்சி போராடித்தான் (ஏப்ரல் கொள்கை) பெரும்பான்மைப் பெற்றது. பல குழுக்களை வென்றெடுத்து டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்தார். அதனடிப்படையில் 1917 ஜூலை மாதம் ஆறாவது மாநாட்டில் டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் இணைக்கப்பட்டார். லெனினுடைய ஆணைப்படி 1917 அக்டோபர் புரட்சியில் ஒரு பிரிவு சோவியத் செம்படைக்கு (டிராட்ஸ்கி) தலைமைத் தாங்கி புரட்சி முடிக்கப்பட்டது.
லெனின் முன்வைத்த ஏப்ரல் கொள்கையை மத்தியக் கமிட்டி ஏற்க மறுத்தது என்பது வரலாற்று புரட்டாகும். ஏப்ரல் கொள்கையை மத்தியக் கமிட்டி பெரும்பான்மையாக அங்கீகரித்தது. அப்போது டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேரவேயில்லை. ஜூலை மாதம்தான் கட்சியில் சேர்ந்தான். ஆனால் டிராட்ஸ்கியால்தான் ஏப்ரல் கொள்கை பெரும்பான்மை பெற்றதாக மனோகரன் கூறுவது டிராட்ஸ்கிவாதிகளின் கருத்தாகும்.
இது பற்றி போல்ஷ்விக் கட்சி வரலாறு பக்கம் 274-278 (பாரதி புத்தகாலயம்) கூறுவதாவது: “1927 ஏப்ரல் 24ஆம் தேதியன்று போல்ஷ்விக் கட்சியின் ஏழாவது மாநாடு கூடியது. .... அன்றைய அரசியல் நிலைமை யுத்தம், தற்காலிக சர்க்கார், விவசாயப் பிரச்சினை, தேசிய இனப் பிரச்சினை முதலிய அடிப்படையான பிரச்சினைகளை யுத்தத்தையும் புரட்சியையும் பற்றிய பிரச்சினைகளை மாநாடு விவாதித்து கட்சிக் கொள்கையை வரையறுத்தது. லெனின் ஏப்ரல் கொள்கையை வகுத்து ஏற்கெனவே கூறியிருந்த முடிவுகளை இந்த மாநாட்டில் சமர்பித்த அறிக்கையில் முன்பைவிட விரிவாக விளக்கிக் கூறினார்.
...இந்த மாநாட்டில் காமினோவ், ரைகோவ் இருவரும் லெனினை எதிர்த்தனர். மென்ஷ்விக் கோஷத்தை எதிரொலி செய்து சோசலிசப் புரட்சிக்கு இன்னும் ரஷ்யா பக்குவப்படவில்லை என்று கூறினார்.
...இவ்விதம் “காமனெவ், ஜினோவீவ், பியாடகோவ், புக்காரின், ரைகோவ் ஆகியோருடைய லெனினியத்திற்கு விரோதமான சந்தர்ப்பவாதக் கொள்கையை ஏப்ரல் மாநாடு அம்பலப்படுத்தி முறியடித்தது.”
ஏப்ரல் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது டிராட்ஸ்கி அமெரிக்காவில் இருந்தான். இருப்பினும் அவன் ஏப்ரல் கொள்கையை எதிர்த்ததில் அவனது கூட்டாளிகளோடு மானசீகமாக நின்றான். அதாவது ஏப்ரல் கொள்கையை டிராட்ஸ்கி ஏற்கவில்லை.
லெனின் டிராட்ஸ்கியை கட்சியில் சேர்த்தார் எனவும், லெனினினுடன் இருந்ததால் அவர் லெனினியவாதி எனவும் மனோகரன் போன்ற டிராட்ஸ்கியவாதிகள் பொய்பேசி வருகின்றனர். டிராட்ஸ்கி கட்சியில் சேர்ந்த வரலாறு வருமாறு:
டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் சேருதல்:
டிராட்ஸ்கி போல்ஷ்விக்குகளின் பரம விரோதியாக இரசியாவிற்கு 1917 மேமாதம் திரும்பினான். அந்த சமயத்தில் அங்கீகாரம் பெற்ற தலைவர்களைக் கொண்டிருந்த கடுமையான நெருக்கடியின் பிடிப்பிலிருந்த எந்தவொரு மென்ஷ்விக் ஸ்தாபனத்திலும் கலந்துவிட மறுத்துவிட்டான் டிராட்ஸ்கி. சமரசத்தன்மை வாய்ந்த மத்திய நிலை மேற்கொண்டிருந்த, இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் பிராந்தியங்களுக்கு இடையிலான ஐக்கிய அமைப்பில் டிராட்ஸ்கி உறுப்பினராக சேர்ந்தான். இந்த ஸ்தாபனத்தின் மாநாடு 1917 மே மாதம் நடைபெற்றபோது லெனின் இந்த அமைப்பு போல்ஷ்விக்குகளுடன் சேர்ந்துவிட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த மாநாட்டில் கணிசமான செல்வாக்குப் பெற்றிருந்த டிராட்ஸ்கி லெனின் முன்வைத்த ஆலோசனையை தோற்கடித்தான். எல்லா சமூக சனநாயகவாதிகள் ஒற்றுமைக்கும் போராடுபவன்போல பாவனை செய்த டிராட்ஸ்கி, பிரதேச ரீதியிலான அமைப்பு மட்டுமின்றி அப்பட்டமான மென்ஷ்விக்குகளையும் கொண்ட ஒற்றுமை மா நாடு நடத்தப்பட வேண்டும். கட்சி ஒரு டிராட்ஸ்கிய வழியில், மென்ஷ்விக் பாதையில் ஒருமுகப்படுத்தப் படுவதையே டிராட்ஸ்கி வலியுறுத்தினான். போல்ஷ்விக் கோட்பாடுகள் அடிப்படையிலான ஒற்றுமையை அவன் ஆதரிக்கவில்லை.
1917 ஜூலை ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, இடைக்கால அரசாங்கம் டிராட்ஸ்கியை கைது செய்தது. அவன் சிறையில் இருந்தபோது, டிராட்ஸ்கி அங்கம் வகித்த பிராந்திய அமைப்பு போஷ்விக் கட்சியுடன் இணைந்துவிட்டது. ஆகவே, டிராட்ஸ்கியும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு கட்சியில் சேர்க்கப்பட்டான்.
போல்ஷ்விக்குகள் சர்வாதிகார செயல்களில் ஈடுபடுவார்கள் என்று பிராந்திய அமைப்பினை அச்சுறுத்தி, போல்ஷ்விக் கட்சியில் தனிக் குழுவாகவே இயங்கும்படி டிராட்ஸ்கி வலியுற்றுத்தியதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறினார். பின்னாட்களில் லெனினை எதிர்த்தப் போராட்டத்தில் பயன்படும் என்று கருதிய டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சிக்குள் தனது சொந்த அமைப்பான அந்த பிராந்திய குழுவை தனியாகவே வைத்து இயக்கினான் எனவேதான் இந்த பிரதேச அமைப்பு, போல்ஷ்விக் கட்சியுடன் சேர்ந்த பிறகு வெகு சனங்களுடன் உணர்வு பூர்வமாக வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை டிராட்ஸ்கி தொடர்ந்து நிராகரித்து வந்தான்.
1917 அக்டோபரின் சோதனையான நாட்களில் உலக வரலாற்றின் திருப்பு முணையில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் உணர்வைச் சோர்வடைய செய்ய டிராட்ஸ்கி இயன்றதனத்தையும் செய்தான். புரட்சி என்பது தன்னியல்பான வெகுஜன எழுச்சியின் வடிவத்தை எடுக்கும்போதுதான் சாத்தியம் என்றும், அதன் நோக்கம் தற்போதுள்ள அரசாங்கத்தை அகற்றுவது என்பதைவிட, அதன் மீது ஆயுதமேந்திய நிர்பந்த்தம் கொடுத்தால், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரம் “கொடுத்துவிடும்படி” அரசை கட்டாயப்படுத்தலாம் என்றான்; அதாவது ஆயுதம் ஏந்திவிட்டாலே, பூர்ஷ்வா அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை தானாக முன்வந்து பாட்டாளி வர்க்கத்திடம் ஒப்படைத்துவிடும் என்று பேசினான் டிராட்ஸ்கி. லெனின் வலியுறுத்திய ஆயுத எழுச்சி இராணுவத் தொழில் நுட்ப தயாரிப்புகள், இராணுவ யுத்த தந்திர உத்திகள் அனைத்தையும் ‘சதித் தன்மை வாய்ந்த சூழ்ச்சிகள்’ என்றான். புரட்சி நடைபெறும்பொழுது முற்றிலுமான இராணுவ நடவடிக்கைகள் ‘தற்காப்பு’ அடிப்படையிலும், ஒரு வரையறைகுட்பட்ட அளவிலும் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது டிராட்ஸ்கியின் கருத்தாகும். அவன் பிரதானமாக சட்டப்பூர்வ போராட்ட முறைகளையே சார்ந்து நின்றான். குறிப்பாக முற்றிலும் ‘பாராளுமன்ற முறைகளையே’ சார்ந்து நின்றான்.
1917 அக்டோபர் புரட்சியின் துவக்க நாட்களில், காங்கிரசு கூட்டப்பட வேண்டும் எனவும், புரட்சிகர அரசியல் அதிகாரம் பற்றி முடிவு செய்யும் உரிமையுடைய புரட்சிகர மக்களை திரட்டுவது அவசியம் அல்ல எனவும் கருதினான்.
1917 அக்டோபரில் ஆயுதம் தாங்கிய புரட்சி ஏற்பட்ட சமயமும், அதற்கு சிறிது முன்பும் தான் எழுதிய எண்ணற்ற கடிதங்களில் லெனின் டிராட்ஸ்கியின் போலிப் புரட்சிகர சாரத்தை எதிர்ப்புரட்சிகர கொள்கைகளை அம்பலப்படுத்தினார். லெனின் எழுதினார்: “இந்தக் கடமையை (அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் கடமையை) சோவியத்துகளின் காங்கிரசுடன் இணப்பதும், அதை காங்கிரசுக்கு கீழடக்குவதும், திட்டவட்டமான தேதியை முன்கூட்டியே நிர்ணயித்துவிட்டு அரசு படைகளை தயார் செய்து கொள்ளவும், மக்கள் காங்கிரசு தீர்மானம் ஒன்றே, வன்முறை மூலம் புரட்சி நடத்தும் பாட்டாளிவர்க்கம் தீர்வு காண வேண்டிய பிரச்சானைக்கு தீர்வு கண்டுவிடும் என்ற பிரமை மூலம் வெகுஜனங்களைக் குழப்புவதும் புரட்சி விளையாட்டு விளையாடுவதாகும்.” (LCW Vol.26, P-143).
டிராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சியில் இணைக்கப் பட்டது பற்றி போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூலில் பக்கம் 288-89 (பாரதி புத்தகாலயம்) கூறப்படுவது: “ஆறாவது காங்கிரஸ் மெஸ்ராயோண்ட்ஸிகளையும், அதன் தலைவன் டிராட்ஸ்கியையும் கட்சியில் சேருவதற்கு அனுமதித்தது. அவர்கள் ஒரு சிறு பிரிவினர். 1913ம் வருடத்திலிருந்து பெட்ரோகிராடில் இருந்து வந்தனர். டிராட்ஸ்கிய மென்ஷ்விக்குகளும், முன்பு கட்சியை விட்டு வெளியேறிய சில போல்ஷ்விக்குகளும், அக்கோஷ்டியில் உறுப்பினர்களாயிருந்தனர். யுத்த காலத்தில் மெஸ்ராயோண்ட்ஸி, ‘மத்தியத்துவ வாதிகளின் அமைப்பாக இருந்தது. அதாவது, அவர்கள் போல்ஷ்விக்குகளை எதிர்த்தனர்; எனினும் அநேக விஷயங்களில் மென்ஷ்விக்குகளோடு ஒத்துக்கொள்ளவில்லை. போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக்கும் இடையில் “மத்தியத்துவ” வாதிகளாக ஊசலாடும் நிலையில் நின்றிருந்தனர். ஆறாவது கட்சிக் காங்கிரஸ் நடைபெற்றபோது சகல விஷயங்களிலும் போல்ஷ்விக் கொள்கையைப் பரிபூரணமாக ஆதரித்து ஒப்புக்கொள்வதாக அவர்கள் கூறினார்கள். ஆகவே போல்ஷ்விக் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். காலப் போக்கில் அவர்கள் திருந்தி உண்மையான போல்ஷ்விக்குகளாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில், ஆறாவது காங்கிரஸ் அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதித்தது. அவர்களில் சிலர், உதாரணமாக வோலோடார்ஸ்கி, உரிட்ஸ்கி முதலியோர் கட்சியின் நம்பிக்கைக்கு ஏற்ப உண்மையான போல்ஷ்விக்குகளானார்கள். ஆனால் டிராட்ஸ்கியும் அவனுக்கு மிகவும் நெருங்கிய சகாக்களும் கட்சியின் நலன்களுக்காக வேலை செய்யும் பொருட்டு கட்சியில் சேரவில்லை என்பது போகப் போக வெட்ட வெளிச்சமாயிற்று. கட்சிக்குள் புகுந்து உள்ளிருந்தே கட்சியை சீர்குலைத்து அழிப்பதற்காக அவர்கள் கட்சியில் சேர்ந்தனர்”.
அதாவது டிராட்ஸ்கி கட்சியை கைப்பற்றி முதலாளித்துவ கட்சியாக மாற்றுவதற்காக ஊடுருவும் நோக்கத்துடன் கட்சிக்குள் சேர்ந்தான் என்று போல்ஷ்விக் கட்சி வரலாறு கூறுகிறது. புரட்சி நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கட்சியில் வந்து சதித்தனமாக ஒட்டிக்கொண்டவன் டிராட்ஸ்கி. வாழ்நாள் முழுதும் கட்சி கட்டுவதற்கும், புரட்சிக்காகவும், சோசலிச நிர்மாணிப்பிற்கும் தன்னையே அர்ப்பணித்த ஸ்டாலினின் பங்களிப்பு பற்றி பேச மறுத்து, டிராட்ஸ்கியை புரட்சியாளர் என்றும் அவனால்தான் புரட்சி நடந்ததாகவும் டிராட்ஸ்கியவாதிகள் ஈனத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள்.
டிராட்ஸ்கி தனிநாட்டில் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை என்றும் நிரந்தரப் புரட்சி என்ற ஏககால ஐரோப்பிய புரட்சிதான் சாத்தியம் என்று பேசியவன். லெனினால் காவுத்ஸ்கிவாதி என்று விமர்சிக்கப்பட்டவன். அதாவது காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியக் கோட்பாடும் டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடும் ஒன்றுதான் என்றார் லெனின். இரண்டுமே தனிநாட்டில் புரட்சி சாத்தியம் என்ற லெனினியத்தை மறுப்பவையே. எனவே டிராட்ஸ்கியும் லெனினும் ஒரே நிலைபாட்டின் அடிப்படையில் ஒன்றிணைந்ததால் கட்சியில் சேர்க்கப்படவும் இல்லை, அவனால் ஏப்ரல் கொள்கை நிறைவேற்றப்பட்டு புரட்சி நடக்கவும் இல்லை. இது டிராட்ஸ்கியவாதிகள் பரப்பும் கட்டுக்கதையே.
போல்ஷ்விக் கட்சியில் டிராட்ஸ்கி சேர்க்கப்பட்டது குறித்தும் அவனால்தான் புரட்சியே நடந்தது என்பது பற்றியும் மனோகரன் கூறும் தகவல்கள் எதுவும் போல்ஷ்விக் கட்சி வரலாற்று நூலில் இல்லை. லெனின் முன்வைத்த அரசியல் வழியை போல்ஷ்விக் கட்சியும் ருஷ்ய மக்களும் பிரதிநிதித்துவப் படுத்தி புரட்சியை சாதித்துக் காட்டினர். டிராட்ஸ்கியால் அல்ல. போல்ஷ்விக்குகளால் நீடித்து அரசாள முடியுமா என்ற கட்டுரையில், தொழிலாளர்கள் விவசாயிகள் சோவியத்துகளின் ஆட்சியை லெனின் டிராட்ஸ்கி ஆட்சி என்று பிரச்சாரம் செய்யப்படுவதை கண்டித்தார் லெனின்.
மனோகரன் கூறுகிறார்: ஸ்டாலின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து 46 பேர் கொண்ட எதிர்ப்பு அணி லெனினுடைய மனைவி குரூப்ஸ்கயாவையும் உள்ளடக்கி செயல்பட்டது. அதில் கொஞ்சகாலம் டிராட்ஸ்கி சேர்ந்து செயல்பட்டார்.
இது பொய்யான தகவலாகும். இது டிராட்ஸ்கிய வாதிகள் கூறும் மற்றுமொரு கட்டுக்கதை. 46 பேர் கொண்ட எதிர்ப்பு அணி லெனின் நோய்வாய்ப் பட்டிருந்த நேரத்தில் தலைமையைக் கைப்பற்றுவதற்கு டிராட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட கோஷ்டியாகும். லெனின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்க்க உருவானதல்ல. இதில் தோழர் குரூப்ஸ்கயா செயல்படவும் இல்லை. குரூப்ஸ்கயா டிராட்ஸ்கியை ஜெர்மன் பாசிசத்தின் ஒற்றன் என்றும், ஸ்டாலினை லெனினின் உண்மையான சீடர் என்றும் கூறியவர்.
இது பற்றி போல்ஷ்விக் கட்சி வரலாறு கூறுவதாவது: பக்கம் 385 (பாரதி புத்தகாலயம்)
“சோவியத் அரசு கஷ்டமான நிலையிலிருந்த இந்தச் சந்தர்ப்பத்தில்தான், கட்சியின் தலைவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்த சமயத்தில், டிராட்ஸ்கி தன் தாக்குதலை போல்ஷ்விக் கட்சி மீது தொடுத்தான். அவன் லெனினிஸ்ட்களுக்கு விரோதமான சக்திகள் யாவற்றையும் ஒன்று திரட்டினான். கட்சியையும், அதன் கொள்கையையும், அதன் தலைமைப் பதவியையும் எதிர்த்து ஒரு அரசியல் அரங்கத்தை உருவாக்கினான். “46 எதிர்ப்புக்காரர்களின் பிரகடனம்” என்று இந்த அரசியல் அரங்கத்திற்குப் பெயர். இதில் டிராட்ஸ்கியவாதிகள், “ஜனநாயக மத்தியத்துவ வாதிகள்” மிஞ்சி நின்ற “இடதுசாரி கம்யூனிஸ்டுகள்,” “தொழிலாளரின் எதிர்ப்புக் கோஷ்டியினர்” முதலிய எதிர்ப்புக் கோஷ்டிவாதிகள் யாவும் லெனினியக் கட்சியை ஒழிப்பதற்காக ஐக்கியப்பட்டன. “மிக, மிக அபாயகரமான பொருளாதார நெருக்கடி வந்துவிட்டது சோவியத் ஆட்சி சரிந்து வீழ்வது திண்ணம்” என்று இவர்கள் தங்களுடைய பிரகடனத்தில் “தீர்க்க தரிசனம்” கூறினர். “இந்த நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கு, கட்சிக்குள் தனித்தனி கோஷ்டிகள் அமைத்து வேலை செய்வதற்கு உரிமையளிப்பது ஒன்றுதான் வழி” என்று கூறினார்.
மனோகரன் கூறுவது: தனிநாட்டில் சோசலிசத்தை கட்டியமைப்பது என்ற பிரச்சினையில் ஸ்டாலினுக்கும் டிராட்ஸ்கிக்கும் அரசியல் முரண்பாடு ஏற்பட்டது.
டிராட்ஸ்கியைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சி முடிந்தப் பிறகுதான் ரஷ்யாவில் சோசலிசத்தைக் கட்ட முடியும் என்று ஒரு நாட்டில் சோசலிசம் கட்டியமைக்க முடியாது என்ற நிலையை எடுத்தார். தொழிலாளர்கள் விவசாயிகள் சோவியத் என்பதை மறுத்தார். பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கம் என்ற நிலையை எடுத்தார்.
மாறாக, ஸ்டாலினோ ரஷ்யாவில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் துணையின்றி சோசலிசத்தை கட்டியமைக்க முடியும் என்ற நிலையை எடுத்தார். தொழிலாளர்கள் விவசாயிகள் சோவியத்துகளை முதன்மைப்படுத்தினார்.
இந்த கருத்து முரண்பாடுகள் தான் கோஷ்டியாக வெளிப்பட்டது. பின்னர் 1927 டிசம்பரில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1928ல் நாடுகடத்தப்பட்டார்.
மேலும் டிராட்ஸ்கியையும் அ.மார்க்ஸ் கும்பலையும் ஒன்றாக பார்க்க முடியாது. டிராட்ஸ்கி மார்க்சியத்தையும் லெனினியத்தையும் ஏற்பதாக கூறியவர். ஒரு நாட்டில் சோசலிசம் படைக்க முடியாது. மாறாக உலகு தழுவிய புரட்சி என்றக் கோட்பாட்டை முன்வைத்தவர்.
(பக்கம் 6ல்) நிரந்தரப் புரட்சி எனும் கோட்பாடு டிராட்ஸ்கி கோட்பாடு அல்ல. மாறாக அது மார்க்ஸ்-எங்கெல்ஸ் வகுத்தளித்த கோட்பாடு. அதை லெனின் ஏற்றுக் கொண்டார். அதனடிப்படையில்தான் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியை தொடர வேண்டும் என்று கூறினார். ஒரு தனி நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க வேண்டும் என்ற நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை லெனின் சூழ்நிலைக்கேற்றவாறு இயங்கியல் ரீதியாகக் கையாண்டார். இதுபற்றி நாம் பயில வேண்டும் என்றே கருதுகிறேன்.
லெனின் உயிரோடு இருக்கும்போது டிராட்ஸ்கி கட்டிய அனைத்து கோஷ்டிகளும் லெனினுடைய இறப்புக்கு பிறகும் தொடர்ந்து டிராட்ஸ்கி தலைமையில் இயங்கின. ‘ஸ்டாலினின் எதேச்சதிகாரத்தால் டிராட்ஸ்கி கோஷ்டிவாதி ஆனான்’ என்று மனோகரன் கூறுவது வரலாற்று உண்மைக்கு மாறானதாகும். இது ஸ்டாலினை தாக்குவதும் டிராட்ஸ்கியை ஆதரிப்பதுமாகும். மேலும் எதேச்சதிகாரம் கோஷ்டிகளை உருவாக்கும் என்பது கோஷ்டிவாதம் பற்றிய மார்க்சிய லெனினிய நிலைபாட்டிற்கு எதிரானதாகும் என்பது நால்வரணியை எதிர்த்த போராட்டத்தில் ஐவரணி அறிக்கை 2ல் விளக்கப்பட்டுள்ளது.
தனிநாட்டில் சோசலிசத்தை கட்டியமைப்பது சாத்தியமில்லை என்பதும் உலகுதழுவிய புரட்சியே முதலில் சாத்தியம்; அதுவே தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் காப்பாற்றும் என்பதும் டிராட்ஸ்கி நிலைபாடாகும். ஆனால் இது அபத்தமான இடது நிலைபாடு என்றும், காவுத்ஸ்கி வாதம் என்றும் லெனின் விமர்சித்தார். இது திட்டத் துறையில் கலைப்புவாதம் என்று ஏ.எம்.கே. கூறியுள்ளார். டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிப் பற்றி லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூலில் கோட்பாடு என்ற தலைப்பில் ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார்.
“இவ்வளவு கூறிய பிறகும், சிலர் கேட்கலாம், “நீங்கள் சொல்கிறதுதான் உண்மை என்றால், ‘நிரந்தரப் (தடைப்படாத) புரட்சி’ என்ற கருத்தை எதிர்த்து ஏன் லெனின் போராடினார்?”
ஏனெனில் விவசாயிகளின் புரட்சிகரமான ஆற்றலை “எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு” பயனப்டுத்த வேண்டும் என்று லெனின் சொன்னார். ஜாரியத்தை அடியோடு ஒழிப்பதற்கும், தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு மாறிச் செல்வதற்கும் அவர்களுடைய புரட்சி ஆற்றலைப் பரிபூரணமாக உபயோகப்படுத்த வேண்டும் என்றும் லெனின் சொன்னார். ஆனால், “நிரந்தரப் புரட்சி” என்று தத்துவம் பேசியவர்கள், ரஷ்யப் புரட்சியில் விவசாயிகள் வகிக்கும் முக்கியமான பாத்திரத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை. விவசாயிகளின் புரட்சிகரமான உறுதியின் பலத்தை அவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள். அதோடு, விவசாயி மக்களுக்குத் தலைமை வகித்து நடத்திச் செல்ல ரஷயத் தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கும் பலத்தையும், ஆற்றலையும் குறைத்து மதிப்பிட்டார்கள். இதன் வழியாக, முதலாளிய வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்து விவசாய மக்களை மீட்கும் வேலைக்கு விலங்கிட்டனர். தொழிலாளி வர்க்கத்தின் கீழ் விவசாயிகளைத் திரட்டும் வேலைக்கு விலங்கிட்டனர்.
மேலும் ஒரு காரணம் உண்டு: தொழிலாளி வர்க்கத்தின் கைக்கு அதிகாரம் மாறுவதானது உச்சியையெட்டிவிட்ட புரட்சிக்கு மகுடமிட்டதாக அமையவேண்டும் என்று லெனின் சொன்னார். “நிரந்தரப் புரட்சி” தத்துவ ஆசாமிகள் கூரியது என்ன? முதலில், எடுத்த எடுப்பில், தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் புரட்சியைத் தொடங்க வேண்டும் என்றார்கள். இப்படிச் சொன்னபோது, பண்ணையடிமை முறையின் அழிக்கப்படாத மிஞ்சிய சின்னங்கள் போன்ற அவர்கள் கருத்துப்படி, “அற்பமான விசயங்களை” அவர்கள் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்கிறோமே என்றோ, ரஷ்ய விவசாயி வர்க்கம் போன்றமிக மிக முக்கியமான ஒரு சக்தியை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லையே என்றோ உணரத் தவறினர். இத்தகைய கொள்கை, தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் விவசாயிகளைத் திரட்டும்படி செய்வதில் இடையூறு செய்யும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறினர்.
நடுவில் தடைபடாமல் புரட்சி நடந்தேற வேண்டும் என்ற கருத்துக்காக “நிரந்தர” புரட்சிவாதிகளை லெனின் எதிர்க்கவில்லை. அந்த கருத்தை லெனினே வற்புறுத்தி வந்திருக்கிறார். தொழிலாளி வர்க்கத்துக்கு மிகவும் சக்தி வாய்ந்த துணை பலமாக விளங்கக் கூடிய விவசாயிகள் வகிக்கும் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டதற்காகவும், தொழிலாளி வர்க்கம் புரட்சியில் மேலாதிக்கம் பெறுவது என்ற கருத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததற்காகவுமே, அவர்களை லெனின் எதிர்த்தார்.
“நிரந்தரப்” புரட்சி என்ற கருத்து புதியது அல்ல. இது 1850ல் மார்க்ஸ் வெளியிட்ட ஒரு கருத்தேயாகும். அவ்வருடத்தில், கம்யூனிஸ்ட் லீக்கில் செய்த பிரசங்கம் என்ற நூலில் இக்கருத்தை முதல் முதலாக மார்க்ஸ் முன்வைத்தார். அந்த ஆவணத்திலிருந்து தற்கால “நிரந்தரப் புரட்சிவாதிகள்” அக்கருத்தை எடுத்தார்கள். மார்க்சிடமிருந்து எடுத்தது ஒரு பக்கமிருக்க, அப்படி எடுத்துக் கையாண்டவர்கள் அந்த கருத்தைத் திரித்துக் கூறினார்கள். இந்தப் புரட்டின் விளைவாக அந்தக் கருத்தைக் கெடுத்து அடியோடு காரியத்துக்குப் பயனற்றதாக ஆக்கிவிட்டார்கள். இந்த தத்துவப் புரட்டை உடைத்து நேர் செய்வதற்கு அனுபவம் முதிர்ந்த லெனினின் உதவி அவசியமாயிற்று. மார்க்ஸ் கருத்தை, அதன் துல்லியமான வடிவத்தில், அர்த்தத்தில், கிரகித்துக்கொண்டு, புரட்சியைப் பற்றி தான் வரையறுத்த தத்துவத்துக்கு அச்சாணியாக லெனின் அமைத்துக் கொண்டார்.
அந்த (கம்யூனிஸ்ட் லீக்) சொற்பொழிவில் மார்க்ஸ் சொன்னதென்ன? கம்யூனிஸ்ட்டுகள் எந்தெந்த புரட்சிகரமான-ஜனநாயகக் கோரிக்கைகளை வெல்லவேண்டும் என்று அதில் வரிசையாக மார்க்ஸ் வகுத்துக் கூறுகிறார். அதன் பிறகு தடைப்படாது நடந்தேறவேண்டிய புரட்சியைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“மேலே நான் குறிப்பிட்ட கோரிக்கைகளில் கூடுமானவரை எல்லாவற்றையும் பெற்றவுடன் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் புரட்சியை முடித்துவிட ஜனநாயக மனப்பான்மையுள்ள மத்தியதர வர்க்கம் விரும்பும். ஆனால், நம் நலன்களும், கடமையும் அந்த புரட்சியை நிரந்தரமானதாக ஆக்குவதில்தான் அடங்கியுள்ளது. உடமை வர்க்கங்கள் யாவும் ஆதிக்கபீடத்திலிருந்து வீழ்த்தப்படும் வரையில், தொழிலாளி வர்க்கம் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில், ஒரு நாட்டில் மட்டுமல்லாமல் உலகில் முக்கியமான நாடுகள் அனைத்திலும் தொழிலாளிகளுக்கு இடையில் போட்டி இல்லாதவாறு செய்து, பிரதான பொருளுற்பத்தி சக்திகள் யாவும் தொழிலாளிகளின் கையில் திரண்டு சேரும் நிலைமை உண்டாகும் அளவுக்கு தொழிலாளிகளின் கூட்டுறவு முன்னேறும் வரையில் புரட்சி நீடித்து நடத்தப்படவேண்டும்”
இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்:
1.1850-60ல், ஜெர்மனியில், உடனடியாக தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலம் புரட்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று மார்க்ஸ் கூறவில்லை. தற்கால “நிரந்தரப் புரட்சி ஆசாமிகள்” போடும் திட்டத்துக்கு நேர் மாறாகவே கூறினார்.
2.ஒன்றுக்குப் பின்னொன்றாக முதலாளிய வர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியையும், படிப்படியாக அதிகாரப் பீடத்திலிருந்து தூக்கியெறிந்து புரட்சியின் காரியத்துக்கு முடிவாக மகுடமிட்டதுபோல் தொழிலாளி வர்க்கத்து அரசியல் அதிகாரம் ஸ்தாபிதம் ஆகவேண்டும் என்று மட்டுமே மார்க்ஸ் தனது அபிப்பிராயத்தை வரையறுத்தார். இதன் நோக்கம் என்னவென்றால், தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிக் கனலை மூட்டி விடுவதற்காகத்தான் என்றும் மார்க்ஸ் நிர்ணயிப்பு செய்தார். ஏகாதிபத்தியம் நிலவிய நிலைமைகளில் தொழிலாளி வர்க்கப் புரட்சியைப் பற்றி தாம் வகுத்த தத்துவத்தை நமது புரட்சியின் போக்கில் கடைபிடித்த காலத்தில் லெனின் போதித்து நிறைவேற்றிய அத்தனை போதனைகளும் மார்க்சின் மேற்சொன்ன கருத்துக்கு முற்றிலும் பொருத்தமாயிருந்தன.
ஆக, இதிலிருந்து தெரிவதென்ன? ரஷ்யப் புரட்சியில் விவசாயிகள் வகிக்கும் பாத்திரத்தைப் பற்றியும், தொழிலாளி வர்க்கத்தின் மேலாதிக்கம் என்ற கருத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நமது ரஷ்ய “நிரந்தரப் புரட்சி”வாதிகள் குறைத்து மதிப்பிட்டார்கள் என்பது மட்டுமல்ல, மார்க்சினுடைய “நிரந்தரப்” புரட்சி கருத்தைக் திரித்து நடைமுறை காரியத்துக்கு உபயோகப்படாதபடி பாழ்படுத்திவிட்டனர் என்பது விளங்கும்.
இதனால்தான் நம் ‘நிரந்தரப் புரட்சிவாதிகளின்’ தத்துவத்தை லெனின் பரிகசித்தார். “ஒரிஜினர்” என்றும் ‘அபூர்வமானது’ என்றும் கிண்டல் செய்தார். “இந்த அபூர்வமான தத்துவம் பத்து வருடங்களில் ஒரு பலனையும் உண்டு பண்ணவில்லையே! இதற்கு காரணம் என்ன என்று அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்!” என்று அவர்களின் பேரில் லெனின் குற்றம் சாட்டினார். (ரஷ்ய ‘நிர்ந்தரப் புரட்சி’ ஆசாமிகளின், தத்துவம் வெளியாகி பத்து வருடங்கள் கழிந்த பிறகு, 1915ல் லெனின் கட்டுரை எழுதினார். (லெ.தே.நூ. 18, பக்கம் 317 காண்க)
அதனால்தான் இந்த தத்துவத்தை, ‘பாதி மென்ஷ்விக்’ தன்மை வாய்ந்தது என்று பின்வருமாறு கூறினார் லெனின்:
“புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் போல்ஷ்விக்குகள் வெளியிட்ட முழக்கத்தை அவர்களிடமிருந்து அந்த தத்துவம் கடன் வாங்கி இருக்கிறது. மறுபக்கத்தில், விவசாயிகள், புரட்சியில் வகிக்கும் பாத்திரத்தை “நிராகரிக்கும்” மென்ஷ்விக்குகளின் கருத்தை அந்த தத்துவம் மென்ஷ்விக்குகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறது.” (லெனினின் புரட்சியின் இரண்டு பாதைகள் என்ற கட்டுரையைக் காண்க. லெ.தே.நூ. 18)
இதுதான், முதலாளிய ஜனநாயகப் புரட்சி, தொழிலாளி வர்க்கப் புரட்சியாக மாறிச் செல்வது பற்றி லெனின் விளக்கிய கருத்து. தொழிலாளி வர்க்கப் புரட்சியை நோக்கி “உடனடியாக” முன்னேறுவதற்காக முதலாளியப் புரட்சியைப் பயன்படுத்துவது என்கிற லெனின் கருத்தும் இதுதான்.
மேலே கவனிப்போம்.
இதற்கு முன்பு ஒரு தனி நாட்டில் மட்டும் புரட்சி நடந்து வெற்றியடைய முடியாது என்று கருதப்பட்டு வந்தது. ஏனெனில், முதலாளிய வர்க்கத்தை முறியடிப்பதற்கு, ஒரு நாட்டில் உள்ள தொழிலாளிகள் மட்டும் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போதாது. எல்லா நாடுகளிலும் அல்லது குறைந்தபட்சம், தொழில் வளர்ச்சி உள்ள பெரும்பாலான நாடுகளில் ஒரே சமயத்தில் தொழிலாளிகள் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்ற இந்தக் கருத்து உண்மைக்குப் பொருத்தமாக இல்லை. இப்போது தனிநாட்டில் நடக்கும் புரட்சி வெற்றியடையும் என்று கவனித்து நாம் காரியங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில், ஏகாதிபத்தியம் நிலவும் நிலைமைகளின் கீழ் பல்வேறு நாடுகளிலும் முதலாளித்துவ வளர்ச்சி நாட்டுக்கு நாடு ஏற்றத்தாழ்வுடையதாக அப்போதுக்கப்போது நெருக்கடிகளில் விழுந்து, எழுந்து விழுந்துகொண்டே போகும் தன்மை பெற்றிருப்பதனாலும், ஏகாதிபத்தியத்திற்குள்ளேயே நாசகரமான முரண்பாடுகள் வளர்ந்து அவை தவிர்க்க முடியாதவாறு யுத்தங்களை மூட்டுவதனாலும் உலக நாடுகள் அனைத்திலும் புரட்சி இயக்கங்கள் வளர்வதினாலும் - இவையனைத்தின் விளைவாக தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் புரட்சி வெற்றியடைவது சாத்தியமே என்பது மட்டுமல்லாமல், தனித்தனியான நாடுகளில் தொழிலாளி வர்க்கம் வெற்றி பெறுவது அவசியமும் கூட என்றாகிறது. ரஷ்ய புரட்சியின் சரித்திரம் இதற்கு நேரடியான ஆதாரமாகும். எனினும், அதே சமயத்தில், இதை மனதில் வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக நிலவவேண்டிய சில அத்தியாவசிய நிலைமைகள் நாட்டில் நிலவினால் மட்டுமே, முதலாளிய வர்க்கத்தை வெற்றிகரமாக வீழ்த்த முடியும். அந்த நிலமைகள் நிலவாதபோது தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பிரச்சினையே எழாது.”
எனவே, டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு மார்க்ஸ் முன்வைத்த கோட்பாடு, அதை லெனின் ஏற்றுகொண்டு இயங்கியல் ரீதியாக கையாண்டார் என்று மனோகரன் கூறுவது டிராட்ஸ்கிவாதிகளின் கருத்தாகும். டிராட்ஸ்கியவாதிகள் டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை மார்க்சியக் கோட்பாடு என்றும் அதையே லெனின் ஏற்று செயல்படுத்தினார் என்றும் கதையளக்கின்றனர்.
ஸ்டாலின் ரஷ்யாவில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் துணையின்றி சோசலிசத்தை கட்டியமைக்க முடியுமென்ற நிலையெடுத்தார் என்று மனோகரன் கூறுகிறார். ஆனால் ஸ்டாலின் இவ்வாறு சொல்லவில்லை. லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற நூலில் பக்கம் 56 (கீழைக்காற்று) ஸ்டாலின் கூறுவதாவது: “பிறநாடுகளின் புரட்சி வளர்ச்சியடைவதற்கு ஆதரவளிப்பது என்பது, வெற்றிபெற்ற புரட்சியின் இன்றியமையாத கடமையாகிறது. எனவே, ஒரு நாட்டில் வெற்றி பெற்ற புரட்சியானது, பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு விரைவுபடுத்த உதவும் ஒரு சாதனமாகவே தனது புரட்சியைக் கருத வேண்டும்” என்றார். ஆனால் லெனினியத்தை உயர்த்திப் பிடித்த ஸ்டாலின் மீதான டிராட்ஸ்கிவாதிகளின் அவதூறை மனோகரன் வழிமொழிகிறார்.
“டிராட்ஸ்கியையும் அ.மார்க்ஸ் கும்பலையும் ஒன்றாக பார்க்க முடியாது. டிராட்ஸ்கி மார்க்சியத்தையும் லெனினியத்தையும் ஏற்பதாக கூறியவர். ஒரு நாட்டில் சோசலிசம் படைக்க முடியாது. மாறாக உலகு தழுவிய புரட்சி என்றக் கோட்பாட்டை முன்வைத்தவர்” என்று மனோகரன் கூறுவது டிராட்ஸ்கியினுடைய நிரந்தரப் புரட்சியை ஆதரிப்பதாகும். அதாவது தனிநாட்டில் புரட்சியை மறுப்பதும் உலகப் புரட்சி பேசுவதுமாகும். லெனின் சொன்னவாறு இது காவுத்ஸ்கி வாதமாகும். ஏ.எம்.கே. சொன்னவாறு இது திட்டத் துறையில் கலைப்புவாதமாகும். இதனால்தான் லெனின் சொன்னவாறு ஐரோப்பா முழுவதும் ஏன் புரட்சி பரவவில்லை என்று லெனினியத்தை மனோகரன் கேள்விக்குள்ளாக்குகிறார்.
மனோகரன் கூறுகிறார்: ஸ்டாலினச எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது என்ற பேரில் ஏகாதிபத்திய சதிவலையில் வீழ்ந்து (டிராட்ஸ்கி) எதிர்ப்புரட்சியாளனாக சீரழிந்தார்.
டிராட்ஸ்கி சோசலிசப் புரட்சி முடியும்வரை புரட்சிக்கு எதிரான கருத்துகளை பேசிவந்தான். பிப்ரவரி புரட்சியை ஏற்கவில்லை. சோசலிசப் புரட்சியை ஜனநாயகப் புரட்சி என்றான். 1917 அக்டோபர் புரட்சியை சோசலிசப் புரட்சி இல்லை என்றான். சோசலிசப் புரட்சி முடிந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் தனிநாட்டில் சோசலிசத்தை கட்டியமைப்பதற்கான லெனினியக் கோட்பாடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தான். டிராட்ஸ்கி எப்போதும் எதிர்ப்புரட்சியாளனாகவே இருந்தான். ஸ்டாலினால் எதிர்ப்புரட்சியாளன் ஆகவில்லை. அவ்வாறு கருதுவது எண்ணமுதல்வாதம் ஆகும்.
மேலும் ஸ்டாலினால் டிராட்ஸ்கி ஏகாதிபத்திய சதிவலையில் வீழவில்லை. அவன் எப்போதும் ஏகாதிபத்திய ஆதரவாளனாகவே இருந்தான். இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் பக்கம் டிராட்ஸ்கி இருந்துகொண்டு மத்தியத்துவம் பேசினான். இது சொல்லில் சோசலிசம், நடைமுறையில் ஏகாதிபத்திய சேவை, சமூக தேசியவெறி என்றார் லெனின். போல்ஷ்விக் கட்சி வரலாறு (பக்கம் 240) கூறுவதாவது: “பாட்டாளிகளின் லட்சியத்திற்குக் குந்தகம் விளைவிப்பதில் மறைமுக சமூக தேசிய வெறியினர்கள். அதாவது “மத்தியத்துவம்” என்று பேசிய பேர்வழிகள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. இந்தப் பேர்வழிகள் - காவுட்ஸ்கி, டிராட்ஸ்கி, மார்டாவ் முதலியவர்கள் சமூக தேசிய வெறியினர்கள். செய்த காரியங்களைப் பகிரங்கமாக “சரியானவைதான்” என்று சாதித்தனர். அவர்களை ஆதரித்துத் தாங்கிப் பேசினர். இவ்விதம் பாட்டாளி வர்க்கத்திற்குத் துரோகம் செய்வதில் சமூக தேசிய வெறியினருடன் சேர்ந்துகொண்டனர்.”
முதல் உலகப் போர் சமயத்தில் ‘உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுக, சொந்த அரசின் தோல்வியை நாடுக’ என்று லெனின் முழங்கினார். ஆனால் காவுத்ஸ்கியும் டிராட்ஸ்கியும் ‘தந்தையர் நாட்டைப் பாதுகாப்போம்’ என்று கூறி பிற்போக்கான ஜார் ஆட்சியையும் கெரன்ஸ்கி அரசாங்கத்தையும் ஜெர்மன் ஏகாதிபத்தியத்தையும் ஆதரித்தனர். இதை லெனின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத் தாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டில் சோசலிசத் தாயகத்தை பாதுகாப்பதற்கு ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தலாம் என்ற லெனினியக் கோட்பாட்டின் அடிப்படையில் (சோசலிசமும் போரும்) ஸ்டாலின் இரண்டாம் உலகப் போரில் சோசலிச சோவியத்தை பாதுகாக்க ஏகாதிபத்திய முரண்பாடுகளை கையாண்டு பாசிசத்தை வீழ்த்தினார். சோவியத்தையும் உலக மக்களையும் காப்பாற்றினார். இந்த நிலைபாட்டை டிராட்ஸ்கி எதிர்த்தான். நடைமுறையில் ஜெர்மன் பாசிசத்திற்கு சேவை செய்தான்.
இவ்வாறு டிராட்ஸ்கி முதலிலிருந்தே ஏகாதிபத்திய ஆதரவாளனாகவே இருந்தான். அவன் ஸ்டாலினால் ஏகாதிபத்திய சதி வலையில் வீழ்ந்தான் என்று மனோகரன் கூறுவது டிராட்ஸ்கியை ஆதரிப்பதாகும். இது ஏகாதிபத்திய ஆதரவு நிலைபாடு ஆகும். லெனினியத்திற்கு எதிரானதாகும்.
மனோகரன் கூறுவதாவது: டிராட்ஸ்கி மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக்கொள்வதாக கூறியவர்.
டிராட்ஸ்கி இயக்க மறுப்பியல்வாதி, திருத்தல்வாதி. கலைப்புவாதி, எதிர்ப்புரட்சியாளன். மூலதனம் நிதிமூலதனமாக வளர்ச்சியடைந்ததை பார்க்க மறுத்தவன். ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாட்டை மறுத்தவன். டிராட்ஸ்கிய மார்க்சியம் (டிராட்ஸ்கியை மார்க்சியவாதி என்பது) என்பது இயக்க மறுப்பியலையும், இயக்கவியலையும் கலக்கும் சித்தாந்த கலைப்புவாதமாகும். ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சி சகாப்தத்தின் லெனினியக் கோட்பாடுகளை வாழ்நாள் முழுதும் தாக்கியவன். அவன் மார்க்சிய லெனினியத்தின் கொடிய விரோதியாவான். இவனை மார்க்சியவாதி என்று மனோகரன் கூறுவது அப்பட்டமான டிராட்ஸ்கிவாதிகளின் கருத்தாகும்.
மேலும் அ.மார்க்ஸ் கும்பலையும் டிராட்ஸ்கியையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்கிறார் மனோகரன்
லெனினுக்கு பிறகு லெனினியத்தை அனைத்து துறைகளிலும் உயரத்திப் பிடித்தவர் ஸ்டாலின். லெனின் போலவே உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாத்து, கூட்டுத் தலைமை முறையில் கட்சியை வழி நடத்தியவர். மிகச் சிறந்த மார்க்சிய லெனினியவாதியாக திகழ்ந்த ஸ்டாலினை எதேச்சதிகாரவாதி என்பது மார்க்சிய விரோத நிலைப்பாடாகும். ஸ்டாலின் ஒரு எதேச்சதிகாரவாதி என்றும் இதை எதிர்ப்பதே கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய கடமை என்றும் குருசேவ் தனிநபர் தாக்குதல் நடத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குழி தோண்டிப் புதைத்தான். நவீன திருத்தல்வாததை கொண்டு வந்து முதலாளித்துவ மீட்சிக்கு வழி வகுத்தான். நம் ஆசான் ஸ்டாலினை தாக்குவதற்கு குருசேவ் டிராட்ஸ்கியின் கருத்துகளையே பயன்படுத்திக் கொண்டான். குருசேவின் பொய்யுரைகள் அனைத்தும் டிராட்ஸ்கியின் கருத்துகளே என வரலாற்றாசிரியர் குரோவர் பர் தனது ‘குருசேவின் பொய்யுரைகள்’ எனும் நூலில் எழுதியுள்ளார். டிராட்ஸ்கி லெனினையும், ஸ்டலினையும் வெறும் நடைமுறையாளர்கள் எனவும், சர்வாதிகாரிகள் எனவும் கூறியவன். ஓடுகாலி டிராட்ஸ்கியின் சீடனே குருசேவ் ஆவான். டிராட்ஸ்கியின் வழியில், குருசேவின் வழியில் புதிய இடது கலைப்புவாதிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தாக்குவதற்கும், மார்க்சியம் தோற்றது என பிரச்சாரம் செய்யவும், மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசுவதற்கும் “ஸ்டாலின் எதேச்சாதிகாரவாதி” எனும் அவதூறில் இருந்துதான் துவங்குகின்றனர். டிராட்ஸ்கியின் வரலாற்றுப் புரட்டுகளையும், குருசேவின் பொய்யுரைகளையும் புதிய இடதுகள் பரப்புகின்றனர். எம்.எல் இயக்கங்களில் ஊடுருவி சீர் குலைக்க ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களின் அடிவருடிகளாக செயல்படுகின்றன.
தமிழகத்தில் அ.மார்க்சு கும்பலும், எஸ் வி ஆர், கோவை ஞானி கும்பலும் ஸ்டாலின் எதேச்சாதிகார எதிர்ப்பு எனும் பெயரில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்க்கிறார்கள். மார்க்சியம் தோற்றது என்று கூறி மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசுகிறார்கள். டிராட்ஸ்கியையும் குருசேவையும் ஆதரிக்கிறார்கள். அ. மார்க்சு கும்பல் ஸ்டாலின் எதேச்சாதிகாரவாதி என்று தாக்குவதற்கு டிராட்ஸ்கியின் அவதூறுகளையே பயன்படுத்துகின்றது; நிறப்பிரிகையிலும், மேடைகளிலும் பேசி ஏகாதிபத்திய சேவை செய்து வருகின்றது.
எஸ்.வி. ராஜதுரை தனது “ ருஸ்யப் புரட்சி “ எனும் நூலில் ஸ்டாலின் சர்வாதிகாரமாக நடந்து கொண்டார் என எழுதுகிறார். எதிர் புரட்சிக்காரர்களை நசுக்கினார் என்கிறார். எதிர் புரட்சியாளர்களை ஜன நாயக ரீதியாக உரிய விசாரணையுடன் சோவியத் அரசு தண்டித்தது என்பதை மூடிமறைத்து ஸ்டாலினை தாக்குகிறார், டிராட்ஸ்கியை ஆதரிக்கிறார்.
ஸ்டாலின் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது என்ற பேரில் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை எதிர்ப்பதுதான் புதிய இடது அரசியலின் அடிநாதமாகும்.
ருஷ்யப் புரட்சி எனும் நூலில் டிராட்ஸ்கி புரட்சியில் முக்கிய பங்கு பெற்றதாக எஸ் வி ராஜதுரை பின்வருமாறு எழுதுகிறார். பக்கம் 24 (விடியல் பதிப்பகம் ருஷ்யப் புரட்சி): “டிராட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் அக்டோபர் புரட்சியில் சிறப்புப் பாத்திரம் வகித்ததாகவும், அதற்கு அவர்தான் உந்துதல் தந்ததாகவும் சொல்லப்படுவதை விமர்சிக்கும் ஸ்டாலின், டிராட்ஸ்கி புரட்சியில் சிறப்பு பாத்திரம் வகித்ததாக தம்மைத் தாமே முன்னிறுத்திக் கொள்வதுடன் கட்சி மத்தியக் கமிட்டி, கட்சியின் பெட்ரோகிரேட் மத்தியக் கமிட்டி ஆகியவற்றின் தலைமைப் பாத்திரத்தை பற்றி ஏதும் சொல்வதேயில்லை என்றும் கூறுகிறார்”.
ஆக, புரட்சியில் டிராட்ஸ்கி முக்கிய பங்கு வகித்ததாகவும், அதை ஸ்டாலின் மூடி மறைப்பதாகவும் எஸ்.வி. ராஜதுரை வரலாற்றை புரட்டுகிறார். இதையே டிராட்ஸ்கியவாதிகளும் பேசுகின்றனர். மனோகரனும் இதையே பேசுகிறார். டிராட்ஸ்கி போலவே ஸ்டாலினும் புரட்சியில் பங்கு பெற்றார் என ஒப்புக்கு சொல்வது புதிய இடது பாணியாக உள்ளது. அந்த பாணி இந்த நூலில் உள்ளது. ஸ்டாலின் எதிர் புரட்சியாளர் என்பது நவீன டிராட்ஸ்கியவாதிகளின் பாணியாக உள்ளது. இந்த பாணியிலேயே மனோகரனும் ஸ்டாலினை எதிர் புரட்சியாளர் என்கிறார். மனோகரன் ஸ்டாலின் புரட்சியில் பங்கு பெற்றதை பற்றி ஏதும் பேசவில்லை. டிராட்ஸ்கி புரட்சியில் பங்குபெற்றதாக பேசுகிறார். லெனினுக்கு எதிராக ஸ்டாலினை நிறுத்துவது, பிறகு லெனினை கேள்விக்குள்ளாக்குவது, ஸ்டாலினைத் தாக்க மாவோவை பயன்படுத்துவது, பிறகு மாவோவையும் தாக்குவது, அதைத் தொடர்ந்து ஏ.எம்.கே.வைத் தாக்குவது என்ற மனோகரனின் அனுகுமுறை டிராட்ஸ்கியவாதிகளின் அனுகுமுறையாகும். ஆனால் மாவோ வழியில் விமர்சனம் வைத்ததாக கூறுகிறார்.
பக்கம் 36 இல், புரட்சிகர எழுச்சியை டிராட்ஸ்கி ஆதரித்ததாக பொய்யான தகவலைக் கூறுகிறார். சோவியத்தின் இரண்டாவது காங்கிரசு துவங்குவதற்கு முன்பு டிராட்ஸ்கி எழுச்சியை துவக்க கூடாது என டிராட்ஸ்கி சொல்லவில்லை என்கிறார். இது பொயான தகவல் என முன்பே பார்த்தோம்.
அதே நூலில் பக்கம் 67ல் எஸ்.வி.ஆர் கூறுவதாவது: “கோவை ஞானி வெளியிட்டு வந்த பரிமாணம் ஏட்டில் வெளிவந்த நேர்க்காணலில் (தாமோதரன்) டிராட்ஸ்கி பற்றி அவர் கூறியவை பின்வருமாறு: ஸ்டாலினே நமது பேராசான், வழிகாட்டி, அவரே சோவியத் நாட்டில் சோசலிசம் கட்டுகிறார், உலக சோசலிசத்தின் தலைவர் அவரே என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. நான் கம்யூனிசத்திற்கு புதியவன். மேலும் மார்க்சிய லெனினியத்தை அதிகம் கற்றுத் தேராதவன். எனவே எனக்கு சொல்லப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொண்டேன். அரசியல் குருமார் பாமர மக்களுக்கு ஞான ஒளி புகட்டுவது இந்திய அரசியல் மரபு. இந்த மரபுடன் ஸ்டாலனியம் சரியாக பொருந்தியது.”
புதிய இடது தாமோதரன் ஸ்டாலினிசம் என்று கூறுவதை எஸ்.வி.ஆர். எடுத்துக் காட்டுகிறார். ஸ்டாலினசம் என்பதன் பொருள் ஸ்டாலின் சர்வாதிகாரி, ஸ்டாலின் பலரை களையெடுத்தார் என்பதாகும். இதிலிருந்தே ஸ்டாலின் நீக்கம் (Destalinism) பேசி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கிறார்.
“மாஸ்கோவிலிருந்து வந்த படுகொலை செய்த செய்திகளைக் கேட்டு தோழர்கள் மிகவும் கலங்கினர்... ...இரஷ்யப் புரட்சியும் சோவியத் சாதனைகளையும் பேசிய காங்கிரஸ்காரர்களில் ஒருவரான நேருவே 1938ல் நடந்த களையெடுப்புகள் பற்றி தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டார். ஆனால் கம்யூனிஸ்டுகளாகிய நாங்களோ டிராட்ஸ்கி வாதிகளும் பாசிசமும் ஒன்றே என்றோம். ஸ்டாலினின் களையெடுப்புகளுக்கு பலியாகிய புக்காரின், ஜினோவிவ், ராடக் போன்றோர் சோசலிசத்தின் எதிரிகள் என்றும், ஏகாதிபத்தியத்திற்கும் பாசிசத்திற்கும் சேவை செய்த ஒற்றர்கள், நாசகாரர்கள் என்றும் நானும்தான் நம்பினேன்... ....இன்று திரும்பிப் பார்க்கும்போது இதெல்லாம் எங்களுக்கு மட்டுமல்ல கம்யூனிச இயக்கம் முழுமைக்குமே நன்மை பயக்கவில்லை என்று உணர்கிறேன். டிராட்ஸ்கி பாசிசத்தை கடுமையாக எதிர்த்தார். ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் பாசிச பொறியில் விழுந்துவிடக் கூடாது என எச்சரித்தார். இந்த டிராட்ஸ்கியைதான் நாங்களும் எங்களைப் போன்ற ஆயிரக் கணக்கானோரும் பாசிஸ்டுகள் என முத்திரைக் குத்தினோம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஸ்டாலினிசத்தை காப்பதுதான் ரஷ்யப் புரட்சியை காப்பதாக நாங்கள் உண்மையாக நம்பினோம்......உண்மையில் ஸ்டாலினசத்தை நாங்கள் மார்க்சிய லெனினியம் என்று நம்பிக்கொண்டிருந்தோம்......நான் டிராட்ஸ்கியன் அல்ல. ஸ்டாலினே எனது வழிபாட்டு தெய்வமாக இருந்தார். அந்த விக்கிரகம் சுக்குநூறாக உடைந்து போனது. அதற்குப் பதிலாக புதிய விக்கிரகம் வேண்டுமென விரும்பவில்லை. ஏனெனில் இப்போது சிலை வழிப்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. டிராட்ஸ்கி, புக்காரின், ரோசாலுக்சம்பர்க், கிராம்சி, லூக்காஸ் இன்னபிற மார்க்சியரை எல்லா கம்யூனிஸ்டுகளும் சிரத்தையாய் படித்து விமர்சனபூர்வமாய் மதிப்பிட்டுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றிலிருந்து இவர்களைக் கழித்துவிட்டால் மார்க்சியம் ஏழ்மைபட்டுப்போகும். டிராட்ஸ்கி ஏகாதிபத்திய ஒற்றன், பாசிசக் கைக்கூலி என்ற ஸ்டாலினிய வரலாற்றுத் திரிபை நான் நம்பவில்லை”என்று தாமோதரனின் கருத்துகளை எஸ்.வி.ஆர். எடுத்துக்காட்டுகிறார்.
ஸ்டாலின் எதேச்சதிகாரவாதி, பாசிச முறையில் அவர் பலரை களையெடுத்தார் என்று டிராட்ஸ்கியும் குருசேவும் கூறிய அதே பொய்யுரைகளை தாமோதரன், எஸ்.வி.ஆர். போன்ற புதிய இடது கலைப்புவாதிகள் இவ்வாறு பேசுகிறார்கள். டிராட்ஸ்கி ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர் என்று லெனின் கூறியதையும், குருசேவ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்று மாவோ கூறியதையும் இந்தக் கலைப்புவாதிகள் திட்டமிட்டு மூடிமறைக்கிறார்கள். வரலாற்று ஆசிரியர் குரோவர் ஃபர் டிராட்ஸ்கி கும்பலுக்கும் ஜெர்மன் பாசிச கும்பலுக்கும் இடையிலான உறவுகள் பற்றி ஆதாரபூர்வமாக ஜெர்மன் பாசிசத்துக்கும் டிராட்ஸ்கிக்கும் இடையிலான உறவு பற்றிய நூலில் எழுதியுள்ளார். மேலும் டிராட்ஸ்கி புகாரின் கும்பல் ஜெர்மன் பாசிசத்திற்கு உளவுவேலை பார்த்தது பற்றி போல்ஷ்விக் கட்சி வரலாறு பின்வருமாறு கூறுகிறது. நூல் பக்கம் 505 “4. புக்கரின், டிராட்ஸ்கி கோஷ்டியைச் சேர்ந்த உளவாளிகள், நாசவேலைக்காரர்கள், தேசத்துரோகிகள் முதலிய சதிகாரக் கும்பலிலிருந்து மிஞ்சி நின்றவர்கள் பரிபூரணமாக ஒழிக்கப்படுதல் - சோவியத் யூனியனின் சுப்ரீம் சோவியத்துக்கு தேர்தல்.
புக்காரின் - டிராட்ஸ்கி கும்பல் செய்த கொலைகார காரியங்களைப்பற்றி 1937-ம் வருடத்தில் பல புதிய உண்மைகள் வெளிப்பட்டன. பியாடகோவ், ரடேக் ஆகியவர்கள்மீது நடந்த வழக்கும், துக்காசெல்ஸ்கி, யாகிர் முதலியவர்கள்மீது நடந்த வழக்கும், இறுதியில், புக்கரின், ரைகோவ், கரெஸ்டின் ஸ்கி, ரோஸன் கோல்ட்ஜ் முதலியவர்கள் மீது நடந்த வழக்கும் இந்தப் புதிய உண்மைகளை வெட்டவெளிச்சமாக்கின. புக்காரினைச் சேர்ந்தவர்களும், டிராட்ஸ்கியைச் சேர்ந்தவர்களும் நெடு நாட்களுக்கு முன்பே ஒன்று சேர்ந்துவிட்டார்கள்; “வலதுசாரியினர் - டிராட்ஸ்கீயவாதிகள் ஐக்கிய அணி” என்ற பெயரில் பொதுமக்கள் விரோதிகளின் கோஷ்டியை அமைத்து வேலை செய்து வந்தனர் என்ற அந்த வழக்கு விசாரணைகள் நிரூபித்தன.
மனித வர்க்கத்தில் கழிக்கப்பட்ட இந்தக் குப்பை கூழங்களெல்லாம், டிராட்ஸ்கி, ஜினோவீவ், காமெனெவ் முதலிய பொதுமக்கள் விரோதிகளுடன் சேர்ந்து, அக்டோபர் சோசலிசப் புரட்சி நடந்த நாளிலிருந்து லெனினுக்கு விரோதமாகவும், சோவியத் கட்சிக்கும், சோவியத் சர்க்காருக்கும் விரோதமாகவும் சதிசெய்து வந்தனர் என்று அந்த வழக்குகள் காட்டின. பிரெஸ்ட்-லிட்டோல்ஸ்க் சமாதான ஒப்பந்தத்தை முறிப்பதற்கு 1918-ம் வருடம் கோடையில் “இடது சாரி” சோசலிச புரட்சிக்காரர்களுடன் சேர்ந்து செய்யப்பட்ட சதி; 1918-ம் வருடம் கோடையில் லெனினைத் துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்தியது; 1918-ம் வருடம் கோடையில் “இடதுசாரி” சோசலிச புரட்சிக்காரர்கள் கலகம் செய்தது; உள்ளிருந்தே லெனினுடைய தலைமைப் பதவியைப் பலவீனப்படுத்துவது என்ற லட்சியத்தைக்கொண்டு 1921ம் வருடத்தில் கட்சிக்குள் வேற்றுமைகளை வேண்டுமென்றே திட்டமிட்டு உண்டுபண்ணி தீவிரப்படுத்தியது; லெனின் நோய்வாய்ப்பட்டபோதும் காலமான பிறகும் கட்சியின் தலைமைப் பதவியை வீழ்த்துவதற்கு முயற்சி செய்தது; அந்நியநாட்டு சர்க்கார்களின் உளவு ஸ்தாபனங்களுக்கு சோவியத் சர்க்காரின் இரகசியங்களை அனுப்பியது; தோழர் கிராவை கொடூரத்தனமாக படுகொலை செய்தது; தேசத்தில் பல இடங்களில் தொழிற்சாலைகளை உடைத்தது; வெடிவைத்துத் தகர்த்தது பயங்கொண்ட மிருகம்போல் தோழர்கள் மெஸின்ஸ்கி, குயிபியவ், கார்க்கி ஆகியவர்களை கொலை செய்தது - இவையாவும், இது போல் இருபது வருடகாலத்தில் அவர்கள் செய்த வேறு பல காரியங்களும், அந்நிய முதலாளித்துவ சர்க்காரிகளின் உளவு ஸ்தாபனங்கள் இட்ட கட்டளைகளின் பேரில், டிராட்ஸ்கி, ஜினோவ், காமெனெவ், புக்காரின், ரைகோவ் முதலியவர்களாலும், அவர்களுடைய கைக்கூலிகளாலும - அவர்கள் நேராகவோ, அல்லது மறைமுகமாகவோ பங்குகொள்ள - செய்யப்பட்டன என்று வழக்கு விசாரணைகள் நிரூபித்தன.”
ஸ்டாலின் காலத்தில் எதிர்ப்புரட்சியாளர்கள் மக்கள் நீதிமன்றம் முன் மிகவும் ஜனநாயக முறையில் விசாரிக்கப்பட்டு ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்ட பிறகு, அவர்களே குற்றங்கள் ஒப்புக்கொண்ட பிறகு தண்டிக்கப்பட்டனர். இந்த விசாரணைப் பற்றி குரோவர் ஃபர் மாஸ்கோ விசாரணை என்ற தனது ஆங்கில நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
டிராட்ஸ்கி, புகாரின் போன்றவர்களை மார்க்சியவாதிகள் என்று தாமோதரன் எஸ்.வி.ஆர். போன்றவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் மார்க்சிய லெனினிய விரோதிகள் என்று முன்பே பார்த்தோம். இதிலிருந்து புதிய இடதுகள் டிராட்ஸ்கியை தனது ஆசானாகவும் ஸ்டாலினை எதேச்சதிகாரவாதியாகவும் சித்தரிக்கின்றனர் என்பது தெளிவு. மனோகரனும் டிராட்ஸ்கியை மார்க்சியவாதி என்று சொல்வதன் மூலம், ஸ்டாலினிடம் இடது, வலது விலகல் உள்ளது என்று சொல்வதன் மூலம் அவர் எதேச்சதிகாரி என்று சொல்வதன் மூலம் புதிய இடதுகளின் கருத்தை ஆதரிக்கிறார்.
அதே நூலில் பக்கம் 71ல் “எஸ்.வி.ஆர் எழுதுகிறார். ஸ்டாலினுக்குப் பதிலாக டிராட்ஸ்கி ஆட்சிக்கு வந்திருந்தால்? இப்படிப்பட்ட யூகங்களுக்கு பதில் சொல்வது கடினம் டிராட்ஸ்கி விஷயங்களின் நிர்வாக அம்சத்தின் மீது அதிக கவனம் செலுத்தியதாக லெனின் கூறியது நினைவுக்கு வருகிறது. தொழிற்சங்கங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இராணுவ ரீதியான கட்டுப்பாட்டுடன் பொருளுற்பத்தி மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அவரது ஆலோசனை லெனினால் நிராகரிக்கப்பட்டது.” என்கிறார்.
லெனினுக்குப் பிறகு டிராட்ஸ்கிதான் சிறந்த தலைவர் என்றும் ஸ்டாலின் தகுதியானவர் இல்லை என்றும் எஸ்.வி.ஆர். கூறுகிறார். மேலும், டிராட்ஸ்கியின் மீதும் விமர்சனம் வைப்பதைப் போல புதிய இடதுகள் நாடகமாடுகிறார்கள் என்பது இதன் மூலம் அம்பலமாகிறது. இந்த அனுகுமுறையையே மனோகரனும் மேற்கொள்கிறார்.
II. ஸ்டாலின் பற்றிய மனோகரனின் மதிப்பீடு
“ஸ்டாலின் இந்தியப் புரட்சியின் எதிரி, சீனப் புரட்சியின் எதிரி, உலகப் புரட்சியின் எதிரி என்றெல்லாம் ஸ்டாலினை எதிர்ப்புரட்சியாளர் என்று டிராட்ஸ்கி வாதிகளைப் போல 20.01.2019 சீரமைப்புக் கமிட்டியில் நடந்த வாதத்தில் கடுமையாக மனோகரன் தாக்கி பேசினார்.
அறிக்கையில் மனோகரன் கூறுவதாவது: ஸ்டாலினின் எதேச்சதிகாரப் போக்கும், பாசிசத்தை எதிர்த்த ஐக்கிய முன்னணி செயல்தந்திரத்தில் அவர் இழைத்த தவறுகளும் இடது வலது விலகலைக் கொண்டதேயாகும்.
ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் பற்றி ஸ்டாலின் பற்றிய நினைவு நீடூழி வாழ்க! என்ற சமரன் கட்டுரையில் (ஜனவரி 1979) ஏ.எம்.கே. பின்வருமாறு கூறுகிறார்: “மகத்தான மார்க்சிய - லெனினிய வாதியான ஸ்டாலின் லெனினுடைய போதனைகளை துணிச்சலுடனும், திடமாகவும் பாதுகாத்தார். லெனினுடைய போதனைகளுக்கு தனது அப்பழுக்கற்ற அர்பணிப்பையும், விசுவாசத்தையும் காட்டினார். தனது எண்ணற்ற தத்துவ நூல்களின் மூலம் மார்க்சிய-லெனினிய கருவூலத்திற்கு அழியா பங்கினை வழங்கியுள்ளார்.
தோழர் ஸ்டாலின் ஒரு மகத்தான பாட்டாளி வர்க்க சர்வ தேசிய வாதியுமாவார். ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் புரட்சிகர போராட்டங்களுக்கு அவர் ஆதரவு தந்து, ஊட்டமளித்தார். இந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கப் பேருதவி புரிந்தார். 1943-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அகிலம் கலைக்கப்படும் வரை அதற்கு அவர் தலைமை தாங்கினார். அது கலைக்கப்பட்ட பிறகு கம்யூனிஸ்ட் தகவல் அகலத்தின் (Communist Information Bureou) பணிகளுக்கு வழிகாட்டினார். பட்டாளி வர்க்கத்தையும் மக்களையும் பாதுகாக்கும் ஒரு போராளி என்ற முறையில் ஹிட்லரின் பாசிசத்தை தோற்கடிப்பதற்கு தலைமை தாங்கினார்.
அவர் சோவியத் மக்களின் மாபெரும் சுய தியாகத்தை வளர்த்ததாலும், சோவியத் மக்களுக்கும் உலகத்திலுள்ள போராடும் அனைத்து மக்களுக்கும் இடையில் ஒரு நெருக்கமான கூட்டுறவை ஏற்படுத்தியதாலும், இத்தோடு அல்லாமல் பாசிச முகாமிற்கும் பிற ஏகாதிபத்திய முகாமிற்கும் இடையிலான முரண்பாட்டை சரியாக பயன்படுத்தி ஒரு சரியான பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கியதாலும் அவரால் இரண்டாவது உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்தை முறியடிக்க முடிந்தது. ஏகாதிபத்திய விருந்திற்கு கடைசியாக வந்த விருந்தாளியாக ஹிட்லரின் பாசிசம் இருந்தது. எனவே அது அப்போருக்கு ஊற்றுக் கண்ணாகவும், அப்போரில் ஆக்கிரமிப்பாளனாகவும் இருந்தது. இதை ஸ்டாலின் சரியாகப் பகுப்பாய்வு செய்து ஒரு பாசிச எதிர்பு முன்னணியை அமைத்து அதற்குத் தலைமைத் தாங்கினார். ஹிட்லரின் பாசிசத்தை எதிர்த்து பிற ஏகாதிபத்தியங்களுடன் சேருவது சரியா என வினாவெழுப்பிய வறட்டுத் தத்துவ நிலையை அவர் மேற்கொண்டிருந்தால், ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியை அமைத்து அதற்குத் தலைமை தாங்குவதற்கு அவர் தவறியிருந்தால் சோசலிஸ்ட் சோவியத் யூனியனுக்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்கும் என்ன கதி நேர்ந்திருக்கும்? சோவியத் யூனியன் சீரழிந்து இரட்டை அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டிருக்கும்; ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைப் புரட்சியும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும். எனவே ஹிட்லரின் பாசிசத்தைத் தோற்கடித்தது. மனித குலம் முழுவதற்கும் அவர் ஆற்றிய அருமையான, அழியாத் தொண்டாய் அமைந்தது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தோழர் ஸ்டாலின் சோவியத் யூனியனைப் புதுபிக்கும் பணிக்குத் தலைமைத் தாங்கினார். சோசலிச முகாமைச் சேர்ந்த புதிதாகத் தோன்றிய மக்கள் ஜனநாயக குடியரசுகளுக்கு தக்க நேரத்தில் உதவியளித்து வழிகாட்டினார். மற்ற நாடுகளின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு பேராதரவைத் தந்தார்.”. இவ்வாறு தோழர் ஏ.எம்.கே ஸ்டாலின் அகிலத்திற்கு வழிகாட்டியது பற்றியும் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் பற்றியும் மார்க்சிய லெனினிய நிலைபாடு என்றும் கோட்பாடு ரீதியாக முன்வைத்துள்ளார்.
மக்கள் புரட்சி ஜூன் 2005 இதழில் மே 9, பாசிசத்தை எதிர்த்த ஸ்டாலின் தலைமையில் மூன்றாம் கம்யூனிச அகிலத்தின் வெற்றி... சோவியத்தின் வெற்றி விழா என்ற தலையங்கக் கட்டுரையில் ஏ.எம்.கே. பின்வருமாறு கூறுகிறார்:
“சோவியத் யூனியனின் நுழைவு யுத்தத்தின் தன்மையை மாற்றிவிட்டது
…1941 ஜூன் 22இல் ஜெர்மனியின் பாசிச ஆட்சியாளர்கள் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.
முதலில் நிலமைகள் சோவியத் யூனியனுக்கு சாதகமற்றதாகத்தான் இருந்தன. யுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் ஜெர்மன் துருப்புகள் சோவியத் யூனியனுடைய பிரதேசங்களின் கணிசமான பகுதியை கைப்பற்றிவிட்டது. உக்ரேனின் மிகப்பெரிய பகுதியைக் கைப்பற்றிய பிறகு மற்றும் பைலோ ரஷ்யா, மால்டோவியா, லித்துவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு எதிரி டோம்பாசின் மீது படை எடுத்து லெனின்கிராடை முற்றுகையிட்டு மாஸ்கோவின் மீது பயங்கரமாகத் தாக்கினான்.
யுத்தநிலைமைகள் இவ்வளவு கடினமாக இருப்பினும் சோவியத் யூனியனின் நுழைவு, யுத்தத்தின் தன்மையை அடிப்படையிலேயே மாற்றிவிட்டது. சோவியத் யூனியனின் நுழைவே அந்த யுத்தத்தை முற்போக்கான, ஜனநாயக ரீதியான மற்றும் பாசிச எதிர்ப்புதன்மை கொண்ட யுத்தமாக மாற்றிவிட்டது. இக்காலத்திற்கு முன்னர் இந்த யுத்தம் மேற்கத்திய ஜனநாயக அரசுகள் உள்ளிட்ட ஏகாதிபத்திய வாதிகளின் கைகளில் இருந்தது; மற்றும் அவர்களின் வர்க்க நலன்கள் மேம்படுத்துவதற்காக மட்டுமே இயக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலைமைகளில், இந்த யுத்தம் பாசிச எதிர்ப்பு யுத்தமாக இல்லை; இருந்திருக்கவும் முடியாது. சோவியத் யூனியனின் நுழைவு யுத்தத்தின் தன்மையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. யுத்தத்திற்கு ஒரு திட்டவட்டமான பாசிச எதிர்ப்பு தன்மையை மட்டுமே வழங்கவில்லை. அத்துடன் மேற்கு ஜனநாயக நாடுகளுக்கு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் கொடுத்தது.
பாசிஸ்டு ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றோடு பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு இருந்த முரண்பாடுகளின் காரணமாகவும் மற்றும் அவர்களுடைய சொந்தமக்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் பிரிட்டனும் அமெரிக்காவும் சோவியத் யூனியனோடு ஒரு கூட்டணி வைத்துக் கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டன. ஜெர்மனிக்கு எதிராக குவிந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு உடன்படிக்கையை 1941 ஜூலையில், பிரிட்டனுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டது. ஜெர்மனிக்கு எதிரான யுத்தத்தில் பரஸ்பர உதவிக்கான ஒரு உடன்பாடு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே 1942 ஜூனில் செய்து கொள்ளப்பட்டது.
1930வது ஆண்டுகளின் இடைப் பகுதியில் சோவியத் அரசாங்கம் பாசிச எதிர்ப்பு முன்னணி அமைக்க வேண்டுமென அறைகூவல் விட்டது. அதை ஏற்று ஒரு சமாதான முன்னணி அமைக்கப் பட்டிருந்தால் யுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்; ஆரம்பகட்டத்திலேயே பாசிசம் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் உலகமுதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உலகை யுத்தத்தின் மூலம் மறுபங்கீடு செய்யவேண்டும் என்ற வெறிகொண்டிருந்த காரணத்தால் அன்று அந்த கருத்தை நிராகரித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல சோசலிச நாட்டை (சோவியத் யூனியனை) ஒழிக்க விரும்பியது மிக முக்கியமான காரணமாகும்.
பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதைகுழியில் சிக்கிக் கொண்ட பிறகுதான், பயங்கரமான இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தங்களை வெளியே கொண்டுவருவதற்கு கம்யூனிஸ்டுகளுடன் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துக் கொள்ள முன்வந்தார்கள். ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில் முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சி, காலனி மற்றும் அரைக்காலனி நாடுகளில் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் திட்டத்திற்குக் குறைவான பாசிச எதிர்ப்பு ஜனநாயகம், தேசிய விடுதலைத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் ஐக்கிய முன்னணி என்ற அரசியல் வழியை முன்வைத்துப் போராடியது சரியான மார்க்சிய லெனினிய நிலைபாடாகும். பாசிசத்தை எதிர்த்து முழுசக்தியுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச முன்னணி அமைப்பது என்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் (கமின்டர்ன்) ஏழாவது மாநாட்டின் அரசியல்வழி இரண்டாம் உலகயுத்ததின் பொது யுத்ததந்திரமாக ஆகிவிட்டது. இது உலக கம்யூனிஸ்டு இயக்கத்தின் அரசியல் தலைமை முறையின் சிறப்புக்கு உதாரணமாகும்.”
இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின் வகுத்த பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் மார்க்சிய லெனினிய அடிப்படையில் மிகச் சரியானது என்றும் அது மூன்றாம் கம்யூனிச அகிலத்தின் வெற்றி என்றும் இது ஸ்டாலினின் மிகச் சிறந்த பாட்டாளிவர்க்க சர்வதேசிய வழிகாட்டுதல் என்றும் இதன் மூலம் பாசிசத்தை வீழ்த்தி சோவியத்தையும் உலக மக்களையும் காப்பாற்றினார் என்றும் ஏ.எம்.கே. தெளிவாக நிறுவியுள்ளார்.
ஆனால், மனோகரனோ ஸ்டாலின் அகிலம் கலைத்தது தவறு என்றும் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தில் ஸ்டாலின் இழைத்த தவறுகள் இடது வலது விலகலைக் கொண்டது என்றும் கூறுகிறார். இது ஏ.எம்.கே நிலைபாட்டை கைவிட்டு ஓடுவதாகும். டிராட்ஸ்கியவாதிகளின் கருத்தாகும். டிராட்ஸ்கிதான் ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் தவறு என்ற பிரச்சாரத்தை முதலில் துவங்கியவன். இவ்வாறு கூறி ஜெர்மன் பாசிசத்திற்கு உளவு வேலை பார்த்தவன். டிராட்ஸ்கியவாதிகளின் பொய்களையே மனோகரனும் கூறுகிறார்.
ஒருபுறம் மனோகரன் “தோழர் ஸ்டாலின் தனி நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியும் என்ற லெனினிசத்தின் அடிப்படை நிலைப்பாட்டில் ஊன்றி நின்று சோவியத் சோசலிச நாட்டை பாதுகாத்தது மட்டுமல்ல இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்தி உலக மக்களைக் காப்பாற்றினார். அதுவே அவரது சாதனை. சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்கு அவர் அளித்த கொடையும் அதுவே ஆகும்” என்று கூறுகிறார். மறுபுறம் அதில் இடது வலது விலகல் இருப்பதாக சந்தர்ப்பவாதமாக கூறுகிறார்.
20.01.2019 நடந்த வாதத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஸ்டாலின் சரியாக வழிகாட்டவில்லை என்றார் மனோகரன். இது குறித்து ஏ.எம்.கே. ஸ்டாலின் பற்றி சமரன் கட்டுரையில் கூறுவதாவது: “தோழர் ஸ்டாலின் ஆசிய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் மீது மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்தினார். அந்த நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு பாட்டாளி வர்க்க முன்னணியை உருவாக்குவதற்காக பெருமளவு பாடுபட்டார். தோழர் ஸ்டாலினால் வகுக்கப்பட்ட தேசிய இனக்கொள்கை தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும், தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையை ஒழிப்பதற்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்தது.” என்று ஸ்டாலின் சரியாக வழிகாட்டியதாகவே கூறுகிறார்.
ஸ்டாலின் தலைமையிலான மூன்றாவது அகிலம் காலனிய, அரைகாலனிய நாடுகளுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி அமைக்கவும் பாசிச நாடுகளில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அமைக்கவும் மிகச் சரியாக வழிகாட்டியது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியையே எப்போதும் பின்பற்றியது.
மனோகரன் கூறுவது: ஸ்டாலினின் எதேச்சதிகாரப் போக்கும், பாசிசத்தை எதிர்த்த ஐக்கிய முன்னணி செயல்தந்திரத்தில் அவர் இழைத்த தவறுகளும் இடது வலது விலகலைக் கொண்டதேயாகும்.
அதன் விளைவாக போல்ஷ்விக் கட்சிக்குள்ளும், சோவியத் ஒன்றியத்திலும், உலக அளவிலும் கடும் பாதிப்புகளை கொண்டுவந்தது. வர்க்கப் போராட்டம் உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் நடத்துவதில் ஏற்பட்ட விலகல் போக்குகள் சோசலிசத்தை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் தடைகளை ஏற்படுத்தியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ சக்திகள் பலம்பெற்று முதலாளித்துவ மீட்சியை சோசலிச நாடுகளில் கொண்டுவந்தன.
இவை மாவோ மற்றும் ஏ.எம்.கே. நிலைபாட்டிற்கு எதிரானதாகும். மாபெரும் விவாதம் நூலில், ஸ்டாலினைப் பற்றிய பிரச்சினையின் மீது என்ற கட்டுரையில் பக்கம் 326-328இல் மாவோ கூறுவதாவது:
“ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஸ்டாலினை முழுமையாக மறுதலித்ததின் மிகக் கடுமையான பின்விளைவுகளை ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசுக்குப் பிறகு நடந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டுகின்றன.
அது ஏகாதிபத்தியவாதிகளுக்கும், அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களுக்கும் மிதமிஞ்சிய வரவேற்கத்தக்க ரசிய எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு தோட்டாக்களை வழங்கியுள்ளது. ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசுக்குப் பிறகு வெகு குறுகியகாலத்திலேயே குருச்சேவின், ஸ்டாலின்-எதிர்ப்பு ரகசிய அறிக்கையை ரசிய நாட்டிற்கும் கம்யூனிசத்திற்கும் எதிராக ஒரு உலகு தழுவிய பேரலையை உசுப்பிவிட ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஏகாதிபத்தியவாதிகளும் அனைத்து நாடுகளின் பிற்போக்காளர்களும், டிட்டோ கும்பலும், பல்வேறு ரகமான சந்தர்ப்பவாதிகளும் ரசிய நாட்டைத் தாக்குவதற்கும், சோசலிச முகாமைத் தாக்குவதற்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தாக்குவதற்கும் இந்த வாய்ப்பைத் தாவிப்பிடித்துக் கொண்டார்கள்; இவ்வாறு பல சகோதரக் கட்சிகளும். நாடுகளும் கடும் சங்கடங்களில் தள்ளப்பட்டன.
“ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களால் ஸ்டாலினுக்கு எதிராகச் செய்யப்பட்ட வெறித்தனமான பிரச்சாரத்தினால் நீண்ட காலமாக அரசியல் சவங்களாகக் கிடந்த டிராட்ஸ்கியவாதிகள் மீண்டும் உயிர்பெற்று டிராட்ஸ்கிக்கு “புனர்வாழ்வு” கொடுக்கக் கூக்குரலிடுகின்றனர். 1961 நவம்பரில் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது பேராயத்தின் முடிவில் சொல்லிக் கொள்ளப்படும் நான்காவது அகிலத்தின் சர்வதேசச் செயலகம் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது பேராயத்திற்கும் அதன் புதிய மத்தியக் கமிட்டிக்கும் எழுதிய கடிதத்தில் ஸ்டாலினால் கொலை செய்யப்பட்டவர்களைக் கௌரவித்து ஒரு நினைவு சின்னம் எழுப்பப்படும் என்று 1937இல் டிராட்ஸ்கி சொன்னார் என்று குறிப்பிட்டிருந்தது. அது மேலும் தொடர்ந்து “இன்று இந்தத் தீர்க்கத் தரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு உங்கள் கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிட்டது. இந்தக் கடிதத்தில், ஸ்டாலினால் பலி கொள்ளப் பட்டவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிறுவப்படும் நினைவுச் சின்னத்தின் மீது டிராட்ஸ்கியினுடைய பெயர் “பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பாகவே கோரப்பட்டுள்ளது. டிராட்ஸ்கியவாதிகள் தங்கள் மகிழ்ச்சியை மறைக்கவில்லை. ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் துவங்கப்பட்டுள்ள ஸ்டாலின் எதிர்ப்புப் பிரச்சாரம் “டிராட்ஸ்கியிசத்துக்கு கதவு திறந்து விட்டுள்ளது” என்றும் “டிராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காவது அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாபெரும் உதவியைச் செய்திருக்கிறது” என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், ஸ்டாலினை முழுவதுமாக மறுத்ததற்கு வெளியில் சொல்ல முடியாத உள்நோக்கம் இருக்கிறது.
ஸ்டாலின் 1953இல் இறந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு 20-வது பேராயத்தில் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அவரை மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். அவர் மறைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 22-வது பேராயத்தில் மீண்டும் அதே போல் செய்தனர். அவரது பூத உடலை எடுத்து எரித்தனர். ஸ்டாலின் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலைத் திரும்பவும் தொடங்குவதன் மூலம் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உலகெங்கிலுமுள்ள மக்கள் மத்தியிலும் ரசிய நாட்டிலுள்ள மக்கள் மத்தியிலும் அந்த மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளன் பெற்றுள்ள அழிக்கமுடியாத செல்வாக்கினைத் துடைத்தெறிய முனைகிறார்கள் இதன் மூலம் திருத்தல்வாதப் பாதையை நடைமுறைப்படுத்துவதற்காக, ஸ்டாலின் பாதுகாத்து வளர்த்த மார்க்சிய - லெனினியத்தை மறுத்துவிட முனைகிறார்கள். அவர்களுடைய திருத்தல்வாதப் பாதை குறிப்பாக 20-வது பேராயத்தில் தொடங்கி 22-வது பேராயத்தில் முழுமையாக முறைப்படுத்தப்பட்டு விட்டது. ஏகாதிபத்தியம், யுத்தம் மற்றும் சமாதானம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், காலனி, அரைக் காலனி நாடுகளில் புரட்சி, பாட்டாளிவர்க்கக் கட்சி இன்ன பிறவற்றின் மீதான மார்க்சிய-லெனினியக் கொள்கைகளை அவர்கள் திருத்தியது ஸ்டாலினை அவர்கள் முழுவதுமாக மறுதலித்ததுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப் பட்டிருப்பதை நிகழ்ச்சிகள் மேலும் தெளிவாகக் காட்டுகின்றன.
“ஸ்டாலின் ஒரு எதேச்சதிகாரவாதி என்று கூறுவது மார்க்சியத்திற்கு எதிரானது, அவர் காலத்தில் நடந்த தவறுகளுக்கு அவரை மட்டும் பொறுப்பாக்குவது தனி நபர் தாக்குதல் என்றும் மார்க்சிய லெனினியத்திற்கு விரோதமானது” என்றும் தோழர் ஏ.எம்.கே. குணாளன் கலைப்புவாதம் குறித்த 07.02.2014 அமைப்பு தீர்மானம் தீர்மானத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
“ரஷ்யாவில் ஸ்டாலின் மீதான தனிநபர் தாக்குதல் நடத்திதான் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியை முதலாளித்துவ கட்சியாக குருச்சேவ் கும்பல் மற்றியமைத்தது.ஸ்டாலின் மரணத்திற்குப்பிறகு இருந்த சூழ் நிலைமைகளைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட குருச்சேவ் கும்பல், ஸ்டாலின் காலத்தின் களையெடுப்பு சம்பவத்தில் நடந்த சில தவறுகளை சாக்காக வைத்துக்கொண்டு தனி நபர்வழிபாடு மற்றும் ஸ்டாலின் வரட்டுவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லி, குருச்சேவ் கும்பல் 1956இல் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20-வது காங்கிரசின் மூலம் முதலாளித்துவப் பாதையை சோவியத் யூனியனில் திறந்துவிட்டது”.
குருச்சேவ் கும்பலின் அத்தகைய தனி நபர் மீதானத் தாக்குதல் பற்றி தோழர் மாவோ பின்வருமாறு விமர்சனம் செய்தார்.
“பாட்டாளி வர்க்கக் கட்சியின் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அணுகு முறைகளுக்கு மாறாக ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அனுபவங்களை தொகுப்பதற்கு மாறாக, ஸ்டாலினை மட்டுமே குற்றம் சுமத்தி, ஸ்டாலினை எதிரியாக்கினார்” என்று மாவோ விமர்சனம் செய்தார்.
அதாவது சோவியத் யூனியனில் தோழர் லெனினுக்குப்பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட விலகல் போக்குகளை வரலாற்று ரீதியாக பரிசீலனை செய்து, விலகல்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதை போக்கும் வழி முறைகளுக்கு மாறாக ஸ்டாலின் என்ற தனி நபரின் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டு குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ பாதையை கட்டவிழ்த்துவிட்டது.
இவ்வாறு தனிநபர்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட விளைவுகள் பாட்டாளிவர்க்க இயக்கத்திற்கு மிகப்பெரும் கேடுகளைக் கொண்டுவந்தது.
குருச்சேவ் கும்பலின் எதிர்புரட்சிகர தத்துவங்களான “சமாதான சகவாழ்வு”, “அமைதிவழி போட்டி”, “அமைதிவழி மாற்றம்” போன்றவற்றின் மூலம் தங்களது திருத்தல்வாதத்தை வளர்த்தது மட்டுமல்லாது, “எல்லோருக்குமான அரசு” மற்றும் “எல்லோருக்குமான கட்சி” போன்றத் தத்துவங்களின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோவியத் யூனியனுக்குத் தேவையில்லாத ஒன்று என்ற போலிக் கம்யூனிஸ்டுக் கொள்கை ஒன்றையும் குருச்சேவ் கும்பல் 22-வது மாநாட்டில் முன்வைத்தது.
முதலாளித்துவப் பாதையை மீண்டும் கொண்டுவந்து, சோவியத் யூனியன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலிருந்து முதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு மாற்றப்பட்டது. 1964இல், கிட்டத்தட்ட அனைத்து வகையிலும் திருத்தல்வாதக் கட்சியாக கட்சி மாற்றப்பட்டுவிட்டது. சோவியத் யூனியன் சோசலிச நாடாக மாறுவது தடுக்கப்பட்டு சமூக -ஏகாதிபத்திய நாடாக மாற்றப்பட்டது.
ஸ்டாலினின் வரட்டுவாத மார்க்சியத்துக்கும் தனி நபர் வழிபாட்டுக்கும் எதிரான போராட்டம் என்ற பெயரிலும், ஸ்டாலினிசத்தை ஒழிப்பது என்ற பெயரிலும் மார்க்சிய - லெனினியத்தின் மீது நவீன திருத்தல்வாதமும் ஈரோ கம்யூனிசம் மற்றும் புதிய இடதுகள் தொடுத்தத் தாக்குதல் சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தில் பிளவுக்கும், கலைப்பு வாதத்துக்கும் வழிவகுத்தது.
மேற்கூறப்பட்ட இரண்டு போக்குகளுமே -1) குருச்சேவ் திருத்தல்வாதம், 2) புதிய இடது கலைப்புவாதம்-முதலாளித்துவ சித்தாந்தங்களாக இருந்த போதிலும் முதலாவது போக்கு நவீன திருத்தல்வாதமாக துவங்கி கலைப்புவாதத்தில் முடிந்தது. இரண்டாவது போக்கு ஆரம்பத்திலிருந்தே கலைப்புவாதமாக தொடர்கிறது.
ஸ்டாலின் எதிர்ப்பின் பெயரால் குருச்சேவ் திரிபுவாதிகள் வர்க்கப்போராட்டம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மீது நடத்திய தாக்குதல்களை முதலாளித்துவ அறிவுஜீவிகள் பெரிதும் வரவேற்றனர். இவர்கள் சித்தாந்தத் துறையில் வர்க்கப் போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் எதிராக ‘சுதந்திரம்’, ‘மானுடத்துவம்’ மற்றும் ‘அன்னியமாதல்’ ஆகியவற்றை முன்னுக்கு கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
குருச்சேவ் கும்பல் “அனைத்து மக்களின் அரசு” என்ற போர்வையில் இரசியாவின் கம்யூனிஸ்டுக் கட்சியின் பாட்டாளிவர்க்க குணாம்சத்தை மாற்றியது. பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிக்கட்சிக்கு பதிலாக “அனைத்து மக்களின் கட்சி” என்ற போர்வையில் பாட்டாளி வர்க்கக் கட்சியை முதலாளித்துவக் கட்சியாக மாற்றியமைத்தது.
“முழுமையான கம்யூனிஸ்டுக் கட்டுமானம்” என்ற போர்வையில் முதலாளித்துவத்தை மீட்டமைக்க வழிசெய்தது. பழைய திருத்தல்வாதிகளைப் போலவே புதிய திரிபுவாதிகளும் லெனின் வரையறைத்துச் சொன்னது போல்....
“யதார்த்தத்தில் அவர்கள் முதலாளித்துவத்தின் ஒரு அரசியல்பிரிவு...தொழிலாளி வர்க்க இயக்கத்தில் அதன் செல்வாக்கை பரப்புகின்றவர்களும், அதன் ஏஜெண்டுகளுமாவர்”.
மாநாடு நடத்துவதற்கான காரணத்திற்கு தனிநபரை பொறுப்பாக்குவது எத்தகைய தீய விளைவுகளை உருவாக்கும் என்பதை சோவியத்தில் ஸ்டாலின் மீதான குருச்சேவ் கும்பலின் தனிநபர் தாக்குதல் நல்ல பாடமாக அமைந்துள்ளது. அத்தகைய போராட்டம் திருத்தல்வாதத்திற்கும் கலைப்புவாதத்திற்குமே வலுசேர்க்கும்”.
எனவே ஸ்டாலினின் எதேச்சதிகார எதிர்ப்பு என்ற பேரில்தான் ரஷ்யாவில் முதத்துவ மீட்சியை குருசேவ் கும்பல் கொண்டுவந்தது. ஆனால் மனோகரன், ஸ்டாலினின் எதேச்சதிகாரமும் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தில் அவர் இழைத்த தவறுகளும்தான் முதலாளித்துவ மீட்சிக்குக் காரணம் என்கிறார். இது ஏ.எம்.கே நிலைபாட்டிற்கு எதிரானதாகும். இது குறித்து கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைபாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும் என்ற கட்சி ஆவணத்தின் முன்னுரையிலும் எழுதியுள்ளார். (பக்கம் வீஜ்)
மனோகரன் ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சிக்கான ஆய்வை ஸ்டாலினிடமிருந்து துவங்குகிறார். ஆனால் மாவோவும், ஏ.எம்.கே.வும் டிராட்ஸ்கியிடமிருந்தும் குருசேவிடமிருந்தும் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டிலிருந்தும் துவங்குகிறார்கள். ஸ்டாலின் பற்றிய நினைவு நீடூழி வாழ்க! என்ற சமரன் கட்டுரையில் டிராட்ஸ்கியின் முதலாளித்துவ மீட்சிக்கான குழிபறிப்பு சதிகள் பற்றி ஏ.எம்.கே. கூறுவதாவது: “எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்டாலின் திரிபுவாதத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் இடது சந்தர்ப்ப வாதத்தையும், எதிர்த்துப் போராடிய ஒரு மாபெரும் போராளியாவார். மார்க்சிய-லெனினியத்தின் தூய்மையையும், பட்டாளி வர்க்க சர்வதேசிய கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்காகப் போராடினார். அவர் எப்போதும் கொள்கைகளுக்காகப் போரிட்டார். எனவே தான் அவர் மார்க்சிய-லெனினிய வாதிகளின் நினைவில் நீங்கா நிலை பெற்றார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியையும், சோவியத் நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் பலவீனப்படுத்தி அழித்துவிட்டு முதலாளித்துவத்தை மீட்பதற்காக டிராட்ஸ்கி புகாரின் காமினோவ், ராடெக் போன்றோர் செய்த குழிபறிப்பு வேலைகளையும், சதிகளையும் அவர் தகர்த்தெறிந்தார். ஸ்டாலின் கட்சியைக் கட்டியமைப்பதற்கானக் கோட்பாடுகளைப் பாதுகாத்தார். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டையும், பாட்டாளி வர்க்கத் தொகையின் அதிகரிப்பையும், கட்சியைப் போல்ஷ்விச மயமாக்குவதையும் அவர் ஆதரித்தார். உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதற்கும், வளர்ப்பதற்கும் கவனமாக உதவிபுரிந்தார். நவீன திரிபு வாதத்தை எதிர்த்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரௌடர் என்பவரின் திரிபு வாதத்தை நிராகரிப்பதற்கான தத்துவப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு டிட்டோவின் திரிபு வாதம் தலை தூக்கிய போது அதை எதிர்த்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தலைமைத் தாங்கினார்”. என்கிறார்.
மேலும் அதே கட்டுரையில் “லெனினினுடைய சீடரும், உண்மையாகப் பின்பற்றி வரும், அவருடைய லட்சியப் பயணத்தை தொடர்ந்தவருமான ஸ்டாலின் 1924ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் நாள் லெனின் மறைந்த பிறகு ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவ்வாண்டிலேயே தோழர் ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள் (Foundation of Leninism) என்னும் ஒரு முக்கியமான தத்துவ நூலைப் படைத்து வெளியிட்டார். சோவியத் அதிகாரத்தை உருகுலையச் செய்து முதலாளித்துவத்தை மீட்டு, சோவியத் மக்களை அடிமைப்படுத்தும் முயற்சியில் டிராட்ஸ்கியம் தொடுத்த தாக்குதலிலிருந்து மார்க்சிய லெனினியத்தின் தூய்மையை பாதுகாக்க தோழர் ஸ்டாலினின் அந்நூல் பேராயுதமாக விளங்கியது.
1926-ம் ஆண்டில் தோழர் ஸ்டாலின், லெனினியத்தின் பிரச்சினைகளைப் பற்றி (On the Problems of Leninism) என்ற ஒரு தத்துவ நூலை வெளியிட்டார். அந்நூல் டிராட்ஸ்கியத்தையும் அதன் மிச்ச சொச்சங்களையும் தரமட்ட மாக்குவதற்காக தொடர்ந்து நடத்திய தத்துப் போருக்கு பேருதவியாய் அமைந்தது.
1938-ம் ஆண்டில், தோழர் ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) யின் வரலாறு என்னும் நூலை வெளியிட்டார். இப்புத்தகம் சர்வ தேசிய பாட்டாளி வர்க்கத்திற்கு கிடைக்கப் பெற்ற அரியதொரு போராட்டத்தின் அனுபவத் தொகுப்பான களஞ்சியமாகக் கிடைக்கப் பெற்றது. இப்புத்தகத்தின் வெளியீடு போல்ஷ்விக் கட்சியின் தத்துவ வாழ்விலும், சர்வ தேசிய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கூட ஒரு மைல் கல்லாக அமைந்தது. புதிய சூழ்நிலைமைகளில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமாக மார்க்சியம் வளர்ந்ததையும், மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றியால் மார்க்சியம் பரவி வளர்ந்ததையும், ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியின் சகாப்தத்தின் மார்க்சியத்தையும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்னும் புத்தகம் எடுத்துக் காட்டிற்று”.
மேலும், மாபெரும் விவாதம் நூலில், தோழர் மாவோ லெனினியமா? சமூக ஏகாதிபத்தியமா? என்ற கட்டுரையில் கூறுவதாவது:
“உலகின் முதலாவது சோசலிச நாடான ரசியாவில்,முதலாளித்துவ மீட்சி எப்படி நடந்தேறியது? அது சமூக-ஏகாதிபத்தியமாக எப்படி மாற முடிந்தது? நாம் மார்க்சிய- லெனினியக் கருத்தை, குறிப்பாகப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்ந்து நடத்துவது பற்றிய தோழர் மாசேதுங் சிந்தனையைக் கொண்டு, இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து பார்த்தால், அது பிரதானமாக ரசியாவில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு விளைவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ரசியாவில், கட்சியில் அதிகாரத்தில் இருந்து முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் கட்சி மற்றும் அரசு தலைமையை அபகரித்ததன் விளைவாகும். அதாவது, ரசியாவின் முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை அபகரித்ததன் விளைவாகும். அதே வேளையில், அது உலக ஏகாதிபத்தியம் அழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றுவதற்காக, ரசியத் திரிபுவாதத் துரோகக் கும்பலின் மூலம் ரசியாவில் “சமாதானப் பரிணாம” கொள்கையை முன் நடத்தியுள்ளதன் விளைவாகும் என்றும் புரிந்து கொள்ள முடியும்.”…
…“முதலாவது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார நாடாக ரசியா இருந்ததால், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தி, முதலாளித்துவ மீட்சியைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றிய அனுபவம் அதற்குக் குறைவாயிருந்தது. இத்தகைய நிலைமைகளில், ரசியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பதுங்கியிருந்து அதிகாரத்தில் இருந்த முதலாளித்துவப் பாதையாளரான குருசேவ், ஸ்டாலின் மறைவுக்குப்பின் விஷம் கக்கும் முறையில் ஸ்டாலினை அவதூறு செய்யும், ரகசிய அறிக்கை ஒன்றைத் திடீர்த்தாக்குதல் தொடுக்கும் முறையில் வெளியிட்டு, பல்வகை வஞ்சகத்தனமான சூழ்ச்சி நடவடிக்கைகளையும் கையாண்டு, ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு அதிகாரத்தை அபகரித்தார். இது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முதலாளி வர்க்கச் சர்வாதிகாரமாக மாற்றிய எதிர்ப்புரட்சி ஆட்சிக் கவிழ்ப்பாகும்; சோசலிசத்தைத் தூக்கியெறிந்து, முதலாளித்துவத்துக்குப் புத்துயிர் அளித்த எதிர்ப்புரட்சி ஆட்சிக் கவிழ்ப்பாகும்”.
மாவோ முதலாளித்துவ மீட்சிக்கு ஸ்டாலின்தான் காரணம் என்று சொல்லவில்லை. ஸ்டாலினிச எதிர்ப்பு எனும் பேரால் குருசேவ் கும்பல் நவீன திருத்தல்வாதத்தை கொண்டுவந்து ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சிக்கு வழிவகுத்தார்கள் என்றே கூறுகிறார். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்தது என்று கூறுகிறார். ஆகவேதான் குருசேவ் கும்பலை புதியகாலனிய தாசர்கள் என்கிறார்.
மனோகரன் கூறுகிறார்: டிராட்ஸ்கியின் கோஷ்டிவாதப் போக்கையும், எதிர்ப்புரட்சிகர போக்குகளையும் எதிர்த்துப் போராடுவது முதன்மையான கடமையே ஆகும். அத்தகையப் போராட்டமானது ஸ்டாலினுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகவும், சுய பரிசீலனை அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாவோ கூறியது போல தோழர் ஸ்டாலின் 70 சதவீதம் புரட்சியாளராக இருந்தார். 30 சதவீதம் தவறிழைத்தார் என்ற நிலைபாட்டிலிருந்து படிப்பினைகளைத் தொகுத்து செயல்பட வேண்டும். அத்தகைய அணுகுமுறைதான் இன்று பல்வேறு சந்தர்ப்பவாதப் போக்குகளை முறியடித்து பாட்டாளிவர்க்க கட்சியைக் கட்டியமைக்க உதவும் என்பதே சரியான பாதையாகும். அதுவே எனது நிலைபாடாகும்.
டிராட்ஸ்கியை எதிர்த்துப் போராடுவதே ஸ்டாலினின் தவறுகளிலிருந்து பாடம் கற்பதாக இருக்க வேண்டும் என்கிறார் மனோகரன். அதாவது டிராட்ஸ்கியிசத்தை எதிர்ப்பதைவிட ஸ்டாலினின் தவறுகளிலிருந்து பாடம் கற்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு வழிவகுக்கும் என்கிறார். இது அப்பட்டமான டிராட்ஸ்கிய ஆதரவும் ஸ்டாலின் எதிர்ப்புமாகும். கலைப்புவாதத்தை முறியடிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டமுடியாது என்ற ஏ.எம்.கே நிலைபாட்டை மூடிமறைப்பதாகும்.
லெனினியத்தின் பெயரால் ஸ்டாலின் மீதும் மாவோ மீதும் ஏ.எம்.கே.வின் மீதும் மனோகரன் நடத்தும் தாக்குதல் மார்க்சிய லெனினியத்தின் மீதான தாக்குதலாகும்.
டிராட்ஸ்கியம் என்பது போலிப் புரட்சியின் சாரம்; தோல்வி மனப்பான்மையின் சாரம்; புரட்சிகர வாய்ச்சவடால்; திருத்தல்வாதம்; கலைப்புவாதம்; எதிர்ப்புரட்சிகரவாதம்; சிண்டிகலிச திரிபு; ஏகாதிபத்திய அடிமைத் தனம்; பாசிச ஆதரவு; கதம்பக் கோட்பாட்டு வாதம்; பாராளுமன்றவாதம்; சட்டவாதம்; இடது வலது சந்தர்ப்பவாதம்; எண்ணமுதல்வாதம்; தற்புகழ்ச்சி; கோழைத்தனம்; அராஜகவாதம்; துரோகத்தனம்; மார்க்சிய லெனினியத்தின் கொடிய விரோதி. இந்த மார்க்சிய விரோத குப்பைக்கூளங்களை சவக்குழிக்கு அனுப்ப வேண்டியது நமது முதன்மையான கடமையாகும்.
* ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்கும் டிராட்ஸ்கியத்தை சவக்குழிக்கு அனுப்புவோம்!
* மாபெரும் மார்க்சிய-லெனினிய ஆசான் ஸ்டாலின் சாதனைகளை உயர்த்திப் பிடிப்போம்!
* மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை ஏ.எம்.கே.போதனையை உயர்த்திப் பிடிப்போம்! அமைப்பை பாதுகாப்போம்!!
- சமரன் மாத இதழ், தொடர் (அக்டோபர் 2019 - மார்ச் 2020)