சிறப்பு கட்டுரை: அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் – (பகுதி 1)

இந்த தரவுகள் அனைத்தும் உலகளவில் சீனா எப்படி உற்பத்தியில் ஆதிக்கம் செய்து வருகிறது என்பதை நமக்கு தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. அதேபோல ஏற்றுமதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான ஆதிக்கம் அதன் சொந்த தொழில்நுட்ப மற்றும் உள்நாட்டு கட்டமைப்பிலிருந்து வந்த ஆதிக்கம் ஆகும். ஏகாதிபத்திய ஏகபோகத்திற்கு தொழில் நுட்ப முன்னேற்றமும் உற்பத்தி ஒன்றுகுவிப்பும், அதற்கு தேவையான மூலதன திரட்சியும் தவிர்க்க முடியாத விதிகளாகின்றன. இன்றைய உலக மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய ஏகபோக போட்டியில் அதாவது அமெரிக்க X சீனா முரண்பாட்டில் அவர்களுக்கிடையிலான தொழில்நுட்பத்திற்கான போர் மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

சிறப்பு கட்டுரை: அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர்  – (பகுதி 1)

நவீன தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலப் பொருட்களின் ஆதிக்கத்திற்கான அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர்  

இன்று உலகம் முழுவதும் அமைதியின்மை பெருகி வருகிறது. இந்த அமைதியின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது நிதி மூலதன ஆதிக்கம் படைத்த ஏகபோக நிறுவனங்களின் உலகைப் பங்கிட்டுக்கொள்வதற்கான போட்டியே. ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, சீனா, ரசியா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான்  போன்ற நாடுகளின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியானது உலகத்திலுள்ள புதிய காலனிகளை பங்கிட்டுக் கொள்வதில் மறு வாசிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். 1990களில் சமூக ஏகாதிபத்தியமாக இருந்த சோவியத் யூனியன் இரசியா, கோர்ப்பச்சேவால் துண்டாடப்பட்ட பிறகு அமெரிக்காவின் செல்வாக்கு ஓங்கியது. அமெரிக்கா 1990களுக்குப் பிறகு ஏகபோகங்களின் ஏகபோகமாக திகழ்ந்து வந்தது. அதன் மேலாதிக்கத்திற்கு சவால்விடும் ஒன்றிரண்டு சூழல்கள் ஜப்பான் மூலமாகவும் ஐரோப்பிய ஒன்றியம் மூலமாகவும் ஏற்பட்டபோதும், அப்போட்டியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொண்டது. 2000த்திற்கு பிறகான இரசியாவின் மீட்டெழுச்சியும் 2008க்குப் பிறகான சீனாவின் எழுச்சியும் மீண்டும் அமெரிக்காவின் ஏகபோகத்திற்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. இந்த ஏகபோகங்கள் அனைத்தும் எந்தவித முதலாளித்துவ ஜனநாயக விதிகளையும் பின்பற்றாமல், நிதி ஆதிக்கத்தின் மூலம் உலக நாடுகளின் வளங்களையும், சொத்துக்களையும் அதன் மக்களையும் சூறையாடுகிறது. இந்த சூறையாடல் மூலமாகத்தான் ஏகாதிபத்திய நாட்டின் நிதி ஆதிக்க கும்பல்களும் அதன் ஆட்சியாளர்களும் வயிறு வளர்க்கின்றனர். ஒவ்வொரு நாட்டின் ஏகபோக கும்பல்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது உலக மறுபங்கீட்டிற்கான போராட்டம் தீவிரமடையும். அப்படிதான் இன்று மேலாதிக்கத்தை இழந்துவரும் அமெரிக்காவிற்கும், உற்பத்தியை ஒன்று குவிப்பதில் மேலோங்கியுள்ள சீனாவிற்கும் இடையில் கடுமையான வர்த்தகப் போட்டியும் அதன் மீதான புதிய காலனிய மறுபங்கீட்டுத் தேவையும் ஏற்பட்டுள்ளது.

இந்த மறுபங்கீட்டிற்கான போட்டியில் இந்த இரு ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் தீவிர போட்டியில் முன்னணியில் உள்ளனர். இந்த இரு ஏகாதிபத்திய நாடுகளும் தங்களின் ஏகபோக நிதி மூலதன ஆதிக்கத்தை காத்துக்கொள்ளவும் உலக மேலாதிக்கப் போட்டியில் முன்னிலை பெறவும் கடும் சிரத்தையுடன் போரிட்டு வருகின்றன. அரசியல்-பொருளாதார மேலாதிக்கப் போரில் வெற்றிபெறவும் ஏகபோகத்தை நிறுவவும் ஏகாதிபத்தியங்கள் தொழில்நுட்ப ஏகபோகத்தையும் நிறுவ வேண்டும். அதற்காகத்தான் இன்று அமெரிக்க-சீன நாடுகளுக்கிடையில் வர்த்தக ரீதியாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் போர் புரிந்து வருகிறார்கள். இந்த போர் இரண்டு ஏகாதிபத்தியங்களின் எதிர்காலத்தை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை.  இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போரானது உலகத்தை மீண்டும் தங்களின் பலத்திற்கேற்ப பங்கு போட நிர்ப்பந்திக்கப்படுகிறது. இந்த போரில் புதிய காலனிய நாடுகள் மட்டுமல்லாமல் மற்ற ஏகாதிபத்திய நாடுகளும் கடும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இப்படி நடந்துவரும் இந்தப் போரில் தொழில்நுட்ப பிரிவை மட்டும் எடுத்து அலசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். இந்த இரு நாடுகளில் எப்படி இந்த தொழில்நுட்ப போரை எந்தெந்த துறைகளில் நடத்தி வருகின்றனர் என்பதை நாம் தொடர்ந்து இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை (CIA) இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ், ஏப்ரல் 2022ல், "21ஆம் நூற்றாண்டில் சீனா, அமெரிக்காவின் மிக முக்கியமான புவிசார் அரசியல் சவாலாக மாறியுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் "சீனா சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருப்பதாகவும், 120 நாடுகளுடன் முன்னணி வர்த்தக கூட்டாளியாகவும், செயற்கை நுண்ணறிவு, 5ஜி, ட்ரோன்கள், ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பயன்பாடுகளில் முன்னணியில் உள்ளதாகவும்" பர்ன்ஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

250 மில்லியன் கணினிகள், 25 மில்லியன் வாகனங்கள் மற்றும் 1.5 பில்லியன் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து, அமெரிக்காவை விஞ்சி உலகின் தலைசிறந்த உயர் தொழில்நுட்ப உற்பத்தியாளராகத் திகழ்கிறது சீனா.

சீனாவின் தலைவரான ஜி ஜின்பிங் "தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்பது உலகளாவிய சந்தை போட்டியில் முக்கிய ஆயுதமாக மாறியுள்ளது.  மேலும் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கான போட்டி முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்காலத்தில் கடுமையான சவாலாக இருக்கும்" என்றும் அவர் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். "மேட் இன் சீனா 2025" (Made in China 2025) என்கிற திட்டம் பெரும் ஆரவாரத்துடன் மே 2015ல் வெளியிடப்பட்டது. மக்கள் குடியரசின் நூற்றாண்டு நிறைவு ஆண்டான 2049 ஆம் ஆண்டிற்குள் நாட்டை "உற்பத்தி ஜாம்பவானிலிருந்து, உலக உற்பத்தி கூடமாக" மாற்றும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது. அதாவது இப்போது சீனா உற்பத்தியில் ஜாம்பவானாக திகழ்வதாகவும், நாளைய சீனம் உலகத்திற்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யும் கூடமாக மாற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் "உள்நாட்டு திறன்களை வளர்த்தல், அந்நிய தொழில்நுட்ப சார்பை குறைத்தல், எதிர்கால தொழில்நுட்பத்தை முன்னேற்றுதல்" என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக ஏகபோக ஆதிக்கத்தை நிறுவுவதற்கான தேவைகளை வலியுறுத்தி சீன அரசாங்கத்தின் தற்போதைய ஐந்தாண்டு திட்டம் முக்கிய திறன்களை அடையாளம் கண்டு, அதன் முடிவுகளுக்கு காலக்கெடுக்கள் கொடுத்துள்ளது. அதன் வெற்றி தோல்விகளுக்கு உள்ளூர் மற்றும் பிராந்திய நிர்வாகங்களை பொறுப்பாக்கியுள்ளது. இதன் மூலம் சீனா துரிதமான வளர்ச்சியை சாத்தியப்படுத்தி அமெரிக்க - நேட்டோ நாடுகளின் உலக ஒழுங்கமைவுக்கு சவால் விடுக்கும் வகையில் வளர்ந்து வருவதைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். இதை சாத்தியப்படுத்திய முதல் காரணி உலகளாவிய அளவில் சீனாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் அதன் ஏகபோக நிதி மூலதன ஆதிக்கமும்.

உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி:

உலகளாவிய வர்த்தகத்தைக் கண்காணிக்கும் ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் தரவுகளின்படி, உலகளாவிய பொருட்களின் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு, பெருந்தொற்று காலத்திற்கு முன்னர் அதாவது 2019ல் 13%  இருந்த அளவு 2021ல் இறுதியில் 15% ஆக அதிகரித்துள்ளது.

அதே காலகட்டத்தில் உலகளாவிய ஏற்றுமதியில் முக்கிய போட்டியாளர்களின் பங்கு சரிந்துள்ளது. சீனாவின் இந்த ஆதாயம் அல்லது வளர்ச்சி மற்றவர்களின் சந்தையை கைப்பற்றியதிலிருந்து வந்ததாக அறிக்கை கூறுகிறது. உலக ஏற்றுமதியில் 2019 இல் 7.8% ஆக இருந்த ஜெர்மனியின் பங்கு 2021 இல் 7.3% ஆக குறைந்தது; ஜப்பானின் பங்கு 3.7% இலிருந்து 3.4% ஆக குறைந்தது; மற்றும் அமெரிக்காவின் பங்கு 8.6%லிருந்து 7.9%ஆக சரிந்தது.

உதாரணமாக, சீனாவின் உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 2019 இல் 38% இலிருந்து 2021 இல் 42% ஆக அதிகரித்துள்ளது; அதே நேரத்தில் ஜவுளி ஏற்றுமதியில் அதன் பங்கு 32% இலிருந்து 34% ஆக உயர்ந்துள்ளது என்று UNCTAD தரவு காட்டுகிறது.

படம்: - உலகளாவிய ஏற்றுமதியில் நாடுகளின் பங்கு

உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் பணவீக்க ஏற்றம், அதனால் உயரும் வட்டி விகிதங்கள் மற்றும் உக்ரைனில் போர் போன்ற காரணங்களால் உலகப் பொருளாதாரம் மந்தநிலையை எதிர் நோக்கியுள்ளதாக வல்லுநர்களால் கணிக்கப்பட்டாலும், சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி 2022லும் தொடர்கிறது.

சீனாவின் பொது சுங்க நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் குறியீட்டின் படி, 2022 ஜூன் மாதத்தில் சீன ஏற்றுமதிகளின் மதிப்பு முந்தைய ஆண்டை விட 22% அதிகமாக உள்ளது.

சீன ஏற்றுமதியானது பல பொருளாதார வல்லுநர்கள் கணித்ததைவிட சிறப்பாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.  குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள சீனாவின் அண்டை நாடுகளிலும் சீனாவின் ஏற்றுமதி மேலாதிக்கம் தொடர்ந்து கோலோச்சுகிறது. 2022ல் முதல் ஆறு மாதங்களில் சீனாவுடனான அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையானது, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% அதிகரித்து 222 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக அமெரிக்க கணக்கெடுப்புப் பணியகத்தின் தரவுகள் காட்டுகின்றன.

மேலுள்ள இந்த தரவுகள் அனைத்தும் உலகளவில் சீனா எப்படி உற்பத்தியில் ஆதிக்கம் செய்து வருகிறது என்பதை நமக்கு தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. அதேபோல ஏற்றுமதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான ஆதிக்கம் அதன் சொந்த தொழில்நுட்ப மற்றும் உள்நாட்டு கட்டமைப்பிலிருந்து வந்த ஆதிக்கம் ஆகும். ஏகாதிபத்திய ஏகபோகத்திற்கு தொழில் நுட்ப முன்னேற்றமும் உற்பத்தி ஒன்றுகுவிப்பும், அதற்கு தேவையான மூலதன திரட்சியும் தவிர்க்க முடியாத விதிகளாகின்றன. இன்றைய உலக மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய ஏகபோக போட்டியில் அதாவது அமெரிக்க X சீனா முரண்பாட்டில் அவர்களுக்கிடையிலான தொழில்நுட்பத்திற்கான போர் மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமான இந்த தொழில்நுட்ப போரானது கடந்த சில பத்தாண்டுகளாக நடந்து வந்தாலும், ஒரு சில ஆண்டுகளில்தான் மிக வீரியத்துடனும், மிக வெளிப்படையாகவும் மிக தீவிரமாகவும் நடந்து வருவதை உலகில் இருக்கும் இருதரப்பினரின் ஊதுகுழல் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக பத்தாண்டு காலமாக சீனாவின் உற்பத்தி ஒன்றுகுவிப்பும் ஏகபோக வளர்ச்சியும் இந்த தொழில் நுட்பப் போரை தவிர்க்க முடியாமல் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, 5ஜி/6ஜி தொழில்நுட்பம், குவாண்டம் அறிவியல் தொழில்நுட்பம், குறைகடத்திகள், ஹைபர்சோனிக் தொழில் நுட்பம், விண்வெளி துறை, அருமண் தனிம உற்பத்தி போன்ற துறைகளில் இரு ஏகாதிபத்தியங்களுக்கும் இடையில் கடுமையான மேலாதிக்க போட்டி நிலவி வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள இந்த துறைகள்தான் இன்றைய மற்றும் நாளைய உற்பத்தி மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான மிக முக்கிய தொழில்நுட்ப காரணிகளாக உள்ளன. இந்த இரு நாடுகளும் உலகளாவிய உற்பத்தியின் ஒன்று குவிப்பே இவர்களுக்கு இடையிலான தொழில்நுட்ப மேலாதிக்க போட்டியையும் தீவிரப்படுத்துகிறது. நாம் இங்கு ஒவ்வொரு துறையாக தரவுகள் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

செயற்கை நுண்ணறிவு:

சீனா செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவை ஏற்கெனவே முந்தி, முன்னணி நாடாக திகழ்கிறது. கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான எரிக் ஸ்மிட்த், "அமெரிக்காவிற்கு சீனா இப்போது ஒரு முழுப்பரிமாண சமப் போட்டியாளர்" என்று கூறியிருந்தார். சீனா பல துறைகளில் அமெரிக்காவை ஏற்கெனவே முந்தி முதல் நாடாக திகழ்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவில் முக்கிய குறியீடுகள், உற்பத்தி சந்தை சோதனைகள், நிதிச் சந்தை சோதனைகள், ஆராய்ச்சி பதிப்புகள், காப்புரிமைகள் மற்றும் சர்வதேசிய போட்டிகளினுடைய முடிவுகள் போன்றவை அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் பேச்சு (Speech) தொழில்நுட்பத்தில், சீன நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களை ஆங்கில மொழி உட்பட அனைத்து மொழிகளிலும் முந்தி வருகின்றன.  உலகத்தின் தலைச் சிறந்த தொடக்க நிறுவனமான சீனாவின் ஐ ஃப்ளை டெக் (iFlyTek), 700 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான 'சிரி'யுடன் (SIRI) பேசும் மக்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்காகும்.  'வீ சாட் பே' (We Chat Pay) என்ற திறன் கைப்பேசியின் கட்டண செலுத்து மென்பொருளை 900 மில்லியன் சீன பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். இது அமெரிக்காவிலுள்ள கட்டண செலுத்து மென்பொருளான 'ஆப்பிள் பே' பயனாளர்களின் எண்ணிக்கையான 44 மில்லியனை விஞ்சியதாகும். அதிலும் மூன்றில் இரண்டு மடங்கு அமெரிக்க பயனாளர்கள் கடன் அட்டையையே சார்ந்துள்ளபோது, சீனாவின் நகரப் பயனாளர்கள் முக்கியமாக அலைபேசி கட்டண செலுத்தியை (Mobile Payments) பயன்படுத்தி 2020ல் 42 ட்ரில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இங்கேதான் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தனிமனிதனின் செலவு பற்றிய துல்லியத் தரவுகள்தான் பெரும் பொக்கிஷமாக செயற்கை நுண்ணறிவு மாற்றுகிறது. இந்த தரவுகள்தான் பிற நிதி சார்ந்த தொழில்நுட்ப செயலிகளுக்கு பயனாளர்களை பெற்று தருவதாக மாற்றுகிறது. தனி நபர்களின் "கடன் தகுதிகளை" செயற்கை நுண்ணறிவு மூலம் மதிப்பீடுச் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக அடையாளம் காணும் (facial recognition) செயலிகளில் சீனாவிற்கு போட்டியே இல்லை. அமெரிக்காவின் தனி நபர் பாதுகாப்புச் சட்டத்தின் காரணமாக, அமெரிக்கா இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையில் சீனாவின் சென்ஸ் டைம் (Sense time) மற்றும் மெட்வீ (Metvy) நிறுவனங்கள் துல்லியமான மிக நவீன செயலிகளை உருவாக்கியுள்ளது. இந்த செயலிகளைக் கொண்டு சீனாவின் மக்கள் தொகையான 1.4 பில்லியன் மக்களில் சில நொடிகளில் ஒருவரது முகத்தை வைத்து கண்டுபிடித்து தேடிவிடும் அளவுக்கு உருவாக்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனாவின் செயற்கை நுண்ணறிவு சந்தை 23.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாக இருந்தது. மேலும் இதன் மதிப்பு 2025ம் ஆண்டிற்குள் 62 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று ஐ-மீடியா நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் கூறுகிறது. 2030ம் ஆண்டிற்குள், சீன அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு தொழில்துறையில் 155 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருடாந்திர வருவாயை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இதை சார்ந்த அல்லது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் மற்ற தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் ஆண்டுதோறும் 1.5 டிரில்லியன் டாலர்களை ஈட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2021 ஆம் ஆண்டில், சீனாவில் செயற்கை நுண்ணறிவு துவக்க நிறுவனங்களுக்கு 17 பில்லியன் டாலர் முதலீடுகளாக கிடைக்கப்பெற்றன, இது உலகளாவிய மொத்த முதலீட்டில் ஐந்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது.

நிதி சந்தையிலுள்ள செயற்கை நுண்ணறிவுப் போட்டி, நமக்கு எதார்த்த நிலையை நன்கு பிரதிபலிக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய இருபது நிறுவனங்களில் இரண்டு சீன நிறுவனமாக இருந்தது. ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவில் முன்னிலையிலுள்ள ஏழு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் சீன நிறுவனங்களாகும். கூகுள், அமேசான், பேஸ்புக், மைக்ரோசாப்ட் (அமெரிக்க நிறுவனங்கள்) பைடு, அலிபாபா, டென்செண்ட் (சீன நிறுவனங்கள்) போன்ற நிறுவனங்கள் இத்துறையில் முக்கிய 7 முன்னிலை நிறுவனங்களாகும். 2018ல் செயற்கை நுண்ணறிவின் மீதான முதலீடுகளில், துவக்க நிறுவன முதலீட்டாளர்கள் (Venture Capital) செய்யும் ஒவ்வொரு பத்து புதிய முதலீடுகளில் ஐந்து பங்கு முதலீடுகள் சீன தொடக்க நிறுவனங்களுக்கும், நான்கு பங்கு அமெரிக்க நிறுவனங்களுக்கும் சென்றுள்ளது.

அமெரிக்க போர்விமான படையின் முதன்மை மென்பொருள் அதிகாரி நிகோலஸ் சாய்லான், செயற்கை நுண்ணறிவு போட்டியில் சீனாவின் வெற்றி ஏற்கனவே சாதித்த ஒன்று என்று கூறியுள்ளார். கடந்த வருடம் ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவு காப்புரிமைகளில் 2019 உடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவைவிட சீனா 35% அதிகமாக பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு பிரிவில் உபப்பிரிவான ஆழக்கற்றல் (Deep Learning) என்பதில் சீனா அமெரிக்காவை விட ஆறு மடங்கிற்கு மேல் காப்புரிமைகளை பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் சர்வதேசப் போட்டிகளில் தங்களுடைய திறமையையும் திறனையும் காட்ட மிகவும் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் கூறுகின்றன. இப்படி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக உலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்த கணினி அறிவியல் போட்டி நடத்தப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஒலிம்பியாட் (The International Olympiad in informatics) போட்டியில் சீனர்கள் 88 தங்கப் பதக்கத்தை பெற்றனர். அதில் அமெரிக்கர்கள் வெறும் 55 பதக்கங்களை மட்டுமே பெற்றனர். இந்தப் போட்டியில் சீனர்கள் தொடர்ந்து முதல் இடம் உட்பட அடுத்து ஐந்து இடத்தையும் தக்கவைத்து வருகின்றனர்.

இந்த செயற்கை நுண்ணறிவு பிரிவில் இந்த இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் தொழில்நுட்ப போட்டியில், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது சீனாவிற்கு அதிகப்படியான சாதகங்கள் இருப்பதாகவே கணிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான மிகப்பெரும் தகவல் களஞ்சியமும், ஊற்றெடுக்கும் திறமைமிகு இளைஞர் பட்டாளமும், மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தையும், கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடிக்கும் மாணவ சக்திகளின் அளவும் என்று பெரும் சாதகங்களை சீனா பெற்றுள்ளது. சீனா 1990களை ஒப்பிடும்போது அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், கணிதவியல் பட்டப்படிப்பு (STEM – Science, Technology, Engineering & Mathematics Degree) முடிக்கும் இளநிலை பட்டம் பெறும் மாணவர்கள் நான்கு மடங்கு கூடியுள்ளது. இதே துறைகளில் ஆய்வு பட்டம் (Phd) பெறும் மாணவர்கள் இரண்டு மடங்கு கூடியுள்ளது. ஆனால் அமெரிக்காவிலோ 1990லிருந்து உள்நாட்டில் பிறந்த STEM பிரிவை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடவே இல்லை.

செயற்கை நுண்ணறிவுக்கு மிக முக்கிய சொத்து என்பது தரமான தரவுகளின் அளவுதான். 20ம் நூற்றாண்டின் உலக அரசியலைத் தீர்மானிக்கும் சந்தைப் பொருளாக திகழ்ந்த கச்சா எண்ணெய்யை போல அடுத்து வரும் தொழில்நுட்ப புரட்சியின் தொழில்நுட்ப யுகத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப்போவது இந்த தரமான தரவுகளின் களமும் சேமிப்பும்தான். எப்படி கச்சா எண்ணெய் ஊற்றுக்கு பெயர்போன இரசியா, சவுதி அரேபியா, ஈரான், வெனிசுலா உள்ளதோ அதேபோல தரமான தரவுகளின் ஊற்றாக சீன மக்கள் தொகையின் தரவுகள் மிக மதிப்பு வாய்ந்த சொத்தாக மாறியுள்ளது.

இருப்பினும் இந்த போட்டியில் அமெரிக்காவிற்கு இரண்டு சாதகமான சுழல்கள் உள்ளன. ஒன்று, உலகில் பரந்து விரிந்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் அந்தந்த நாடுகளிலுள்ள பல்வேறு முன்னணி சக்திகளை அந்தந்த நாடுகளில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்குள் இழுத்துக் கொள்கின்றனர். இரண்டாவதானது எந்த நாடுகளிலிருந்தும் தங்களுக்கு தேவைப்பட்டால் அமெரிக்காவில் நேரடியாக பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்களால் முடிகின்றது; ஆனால் சீனாவோ தங்கள் சொந்த மக்கள் தொகையிலிருந்து மட்டுமே பணியமர்த்துவதாக அமைகிறது.

ஆனால் தற்போதுள்ள போக்கு தொடர்ந்து நீடித்தால், சீனாவே அடுத்த பத்தாண்டுகளில் உலகத் தலைமையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அமெரிக்க செயற்கை நுண்ணறிவிற்கான தேசிய பாதுகாப்பு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு போட்டியின் தலைமையை தீர்மானிக்கப்போவது வன்பொருள் மற்றும் படிமுறை (Hardware and Algorithm) ஆய்வுகளின் முக்கிய வெற்றி விரிவாக்கமே. இதில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் கூடுதலாக உள்ளதால் சீனாவிற்கு தொய்வு ஏற்படவும் சாத்தியமுள்ளது.

செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் அதிகம் உள்ள துறை இராணுவ மற்றும் பாதுகாப்புத் துறையாகும்.  முன்னாள் கூகுள் தலைமை அதிகாரியான எரிக் ஷ்மிட்த் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மனிதர்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை கொண்டிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது எதார்த்தத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பெரும்பாலான நெறிமுறைகள் அவற்றைக் கையாளும் நாடுகளின் நெறிமுறைகளிலிருந்துதான் கொடுக்கப்படுகின்றன. இதனால் (செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி) எந்த நாடு மிக வேகமாக முடிவெடுக்கிறதோ, அந்த நாட்டிற்கு சாதகமாகவும். அதே நேரத்தில் மனிதனால் முடிவெடுக்க படும் நாடுகளுக்கு இது பாதகமாக அமையும்.

"உண்மையான பிரச்சினை நேரத்தின் அழுத்தம்," என்று அவர் கூறினார். "இந்த அமைப்பு (செயற்கை நுண்ணறிவு) மனிதர்கள் முடிவெடுக்கும் நேரத்தை விட வேகமாக முடிவுகளை எடுக்க போகிறது. அங்குதான் அதன் எல்லை இருக்கப் போகிறது. ஒரு சமூகமாக அதைப் பற்றி நாம் தீவிரமாக விவாதத்தை நடத்த வேண்டும் என்று கருதுகிறேன்" என்று மேலும் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இது உயிரியல் ஆயுதப் போரில் மிக முக்கிய பிரச்சனையை கொண்டு வரப்போகிறது என்று குறிப்பாக பேசியுள்ளார். எடுத்துக்காட்டாக, விரைவில் செயற்கை நுண்ணறிவால் வைரஸ்களினுடைய மிக பெரிய தரவுத்தளத்தை (Database) அடிப்படையாக கொண்டு ஒரு புதிய ஆபத்தான வைரசை உருவாக்க முடியும்.

அது மட்டுமல்லாமல் ஷ்மிட்த் 2 நாள் பயணமாக உக்ரேனுக்கு சென்றார். இதில் இரசியாவின் படையெடுப்புக்கு உக்ரேனிய இராணுவம் எப்படி பதில் தாக்குதல் கொடுக்கிறது என்று புரிந்துகொள்வது இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.

இதில் செயற்கை நுண்ணறிவிற்கான ஒரு அம்சமாக செய்தி அனுப்பும் செயலியை எப்படி பயன்படுத்துவது குறித்தானது. அதாவது ஒரு புதிய செய்தி அனுப்பும் செயலியை உக்ரேனிய மக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அந்த செயலி மூலம் மக்கள் இரசிய இராணுவத்தின் நகர்வுகளையும் இராணுவ வாகனங்களையும் படம் பிடித்து அனுப்பக் கோருகிறது. இதில் மக்கள் மிகப் பெரும் தொகையான படங்களை அனுப்ப நேரிடும்போது, அந்த பெரும் தொகையான தரவுகளை செயற்கை நுண்ணறிவின் மூலமாக  அலசி ஆராய்ந்து எந்த படங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை படங்களை பிரிக்கிறது. பிரித்த படங்களை மேலும் ஆராய்ந்து, எந்த இலக்கு உடனடித் தாக்குதலுக்கு உகந்தது என்பதை வேகமாகவும், துல்லியமாகவும் கணித்து அதை, அந்த இலக்கை உக்ரேனிய இராணுவத்தின் தாக்குதல் இலக்காக மாற்றப்படுகிறது. இதில் தாமதங்கள் குறைக்கப்படுவதோடு, மிக வேகமாகவும் மிகத் துல்லியமாகவும் முடிவெடுக்க உதவுவதுதான் செயற்கை நுண்ணறிவின் ஆகச் சிறந்த வேலையாகும்.

செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் சீனாவின் கையே ஓங்கியுள்ளது. சீனா பல்வேறு துறைகளில் அதை அமல்படுத்தி வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. அமெரிக்கா இந்த இடைவெளியை நிரப்ப மிகுந்த சிரத்தையுடன் முன்னேறி வருகிறது. அமெரிக்கா ஒரு பக்கம் வளர்வதற்கு முயலும் அதே வேலையில் சீனா செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைத் தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான சிப்களையும், அந்த சிப்களை வடிவமைத்து தருவதை தடை செய்து சமீபத்தில் பல தடைகளை விதித்துள்ளது. இப்படி தனது நாட்டு நிறுவனங்களான என்-வீடியா போன்ற நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. இன்னும் ஒரு படி மேலே சென்று செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைகடத்தி தயாரிக்கும் சீன நிறுவனங்களில் பணியாற்றும் அமெரிக்க ஊழியர்களையும், சேவை கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்களும் உடனடியாக திரும்பப் பெற ஜோ பைடன் அரசு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வலியுறுத்தியுள்ளது. அதன்படி அப்ளைட் மெட்டிரியல்ஸ் (Applied Materials Inc.), கே.எல்.ஏ (KLA Corp.) மற்றும் லாம் ரிசர்ச் (Lam Research Corp.) ஆகிய நிறுவனங்கள் சீனாவின் மிக மேம்பட்ட மெமரி சிப் தயாரிப்பாளரான யாங்சே மெம்மரி டெக்னாலஜி (Yangtze Memory Technologies Co.) யிலிருந்து ஊழியர்களை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன அல்லது தயாராகி வருகின்றன.

(தொடரும்...)

சமரன் – நவம்பர் (ஏ.எம்.கே. நினைவுநாள் சிறப்பிதழ்) 2022

அடுத்த பகுதியை படிக்க : அமெரிக்க - சீன தொழில்நுட்ப போர் – (பகுதி 2)