விவசாயிகள் தொழிலாளர்களுக்கு எதிரான மின்சார மசோதா
ஒன்றுபட்ட போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் - தீக்கதிர்
மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள வரைவு மின்சார (திருத்த) மசோதா, 2025 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) கண்டித்துள்ளது. அத்துடன் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த மசோதாவிற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டம் நடத்த அறை கூவல் விடுத்துள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆர்எஸ்எஸ்-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் முன்வைக்கப்பட்ட வரைவு மின்சார (திருத்த) மசோதா, 2025 இயல்பிலேயே விவசாயி களுக்கு எதிரானது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் உறுதியாகக் கருதுகிறது. இந்த மசோதா மின்சாரத் துறை கட்டமைப்பில் மிகத் தீவிரமான, பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையி லான அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரக்கூடியது என்று கார்ப்பரேட் ஊடகங்களால் கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்த மசோதா இந்திய மின்சாரத் துறையை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதுடன் மேலும் அதிகளவில் தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கும். இது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கூட்டாட்சிக் கொள்கைகளை மீறும். இந்த சட்டம் அமலாக்கப்பட்டால் விவசாயிகளும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவுகளும் கார்ப்பரேட்டுகளால் பிழிந்து கொள்ளையடிக்கப்படுவார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி விவசாயப் போராட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய முக்கியமான கோரிக்கைகளில், 2021 மின்சாரத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதும் ஒன்று. நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க 736க்கும் மேற்பட்ட தேச பக்த விவசாயிகள் அப்போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தனர். கொடூரமான விவசாயச் சட்டங்களை அரசு திரும்பப் பெற்ற போதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) C2+50 சதவீதம் என்ற ஃபார்முலா அடிப்படையில் சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் மின்சாரத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெறுவது போன்ற முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, உலக நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களின் வர்க்க நலன்களைப் பாதுகாக்கிறது. இது குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான மோசடி நடவடிக்கைகளிலிருந்தும், மின்சாரத்தை வர்த்தகப் பொருளாக்கி தனியார்மயமாக்க முனையும் சமீபத்திய முயற்சியிலிருந்தும் தெளிவாகிறது. இப்புதிய மசோதாவில் “குறுக்கு மானியத்தை” (Cross-Subsidy) நீக்குவதற்கான முன் மொழிவு விவசாயிகளுக்குப் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒரு விவசாயி தினமும் 6 மணி நேரம் 7.5 ஹெச்பி மோட்டாரைப் பயன்படுத்துவதாக கருத்தில் கொண்டால், அது நாளொன்றுக்கு 35 யூனிட் மின்சாரத்தையும், மாதத்திற்கு 1,050 யூனிட் மின்சாரத்தையும் நுகரும். தற்போது, பெரும்பாலான விவசாய மாநிலங்களில், விவசாயிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 2 முதல் 3 ரூபாய் என்ற மானிய விலையில் மின்சாரம் கிடைக்கிறது. இதன் மூலம், ஒரு விவசாயிக்கு மாதாந்திர மின்சாரச் செலவு 2,100 ரூபாய் முதல் 3,150 ரூபாய் வரை இருக்கும். குறுக்கு மானியம் நீக்கப்பட்டால், மின் கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, விவசாயி ஒரு மாத மின்சாரத்திற்காக 10,000 ரூபாய்க்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், இந்த மசோதாவானது மின்சேவை வழங்கப்படுவதற்கு முன்பே கட்டணத்தைச் செலுத்த வேண்டிய ‘ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை’ (முன் கூட்டிய பணம் கட்டுதல் திட்டம்) கட்டாயமாக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அழுத்தத்தின் பின்னணியில் இருந்து பார்க்கப்பட வேண்டும். உயர்ந்து வரும் மின் கட்டணங்களுடன், போதுமான பண இருப்பு இல்லை என்ற சாக்குப்போக்கினால் அதிகபட்ச பாசனக் காலத்தில் கூட விவசாயத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்பும் இதில் உள்ளது என்பதை தவிர்த்து விட முடியாது. அதிகரித்து வரும் செலவுகள், லாபமற்ற குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மிகக் குறைவான அரசு கொள்முதல் காரணமாக விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கைகள் விவசாயிகளை மேலும் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளும். “இணை உரிமம்” (Parallel Licensing) தொடர்பான விதிகளும் விவசாயிகளுக்கு ஆபத்தானவை. அதிக வருமானம் ஈட்டக் கூடிய பகுதிகளில் மட்டும் தனியார் ஏகபோக நிறுவனங்கள் கவனம் செலுத்தும் ஒரு சூழ்நிலையை இவை உருவாக்கும். குறைவான வருமானம் ஈட்டக்கூடிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பை பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும். இது பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சுமையை ஏற்படுத்தி, அவை நிலைத்து நிற்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். இதனால் விவசாயிகளும் பிற உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளுக்கு எதிரான இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுக்கிறது. மேலும், இந்த வரைவு மின்சார (திருத்த) மசோதா, 2025-க்கு எதிராக, விவசாயிகள், மின்வாரியத்துறை தொழிலாளர்கள், மின் நுகர்வோர் இணைந்து ஒன்றுபட்ட போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீக்கதிர்
https://theekkathir.in/News/tamilnadu/madurai/electricity-bill-against-farmers-and-workers
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு