சதிகார வீணர்களின் அதிகார ஆட்டம் இது!
அறம் இணைய இதழ்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதே ஒரு டுபாக்கூர் திட்டம் தான். இதை செயல்படுத்த முடியாது. அப்படி முயன்றால், குழப்பங்களே மிஞ்சும். சர்வாதிகார ஆட்சியை சாத்தியப்படுத்தும் சதிகாரத் திட்டமே இது. மாநிலங்களை அதிகாரமற்றதாக்கி, மக்களை அடிமைகளாக்கி, அதிகாரம் அனைத்தையும் ஒற்றைப் புள்ளியில் குவிக்கும் திட்டமே இது;
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கூறுகளாகிய ஐனநாயக தேர்தல் முறையையும், கூட்டாட்சி முறையையும் பாழ்படுத்தும் விதத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம் இத்தகைய செயற்கையான ஒழுங்கின் (artificial uniformity) அவசியம் என்ன என அறிவார்ந்த சமூகத்தினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே தேர்தலுக்கான உயர்மட்ட குழு (High -Level Committee on Simultaneous Elections) 191 நாட்களில் இந்த ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகளை நடத்தி 18,000 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை மோடி அரசிடம் கொடுத்துள்ளது.
இந்த உயர்மட்டக் குழுவின் முன்மொழிவை ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக் கொண்ட பொழுது, பிரதமர் மோடி இந்த திருத்த மசோதாவை நாடாளுமன்ற குட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மோடி பரிந்துரைத்தாக அமீத் ஷா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார் .
சட்ட திருத்தத்தை கொண்டுவர போதிய பலமோ, அங்கீகாரமோ இல்லாத பொழுது, அரசியல் சாசன அடிப்படை கூறுகளுக்கு எதிராக உள்ள இத்திருத்தம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்பதை தெரிந்த பின்னரும், பெரும்பான்மை மக்களின் ஆதரவோ, அல்லது அனைத்து மாநில அரசுகளின் ஒப்புதலோ இல்லாத இந்த திருத்தத்தை, நடைமுறை சிக்கல்கள் நிறைந்த, விரும்பத்தகாத, இந்த சட்ட மாற்றத்தை அறிமுகப்படுத்துவதும், அதை உடனே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்புவதும் எதற்காக?
இந்த சட்ட திருத்தத்தின் நோக்கத்தையும், அவசியத்தையும் ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளதை உற்று நோக்கினால், மக்கள் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்ட மன்றத்திற்கும் ஆக இரண்டு அடுக்கு அரசுகளை ஒரே நேரத்தில் தெரிவு செய்ய இச்சட்டம் விரும்புகிறது என்றும், ஆனால் வாக்குப்பதிவு வேண்டுமானால் பல கட்டங்களில் – பல நேரங்களில் – நடத்திக் கொள்ளலாம் என்ற பரிந்துரையை உயர்மட்டக்குழு முன் வைத்துள்ளது.
ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது ஏதோ விஷ்வ குரு மோடியின் மூளையில் உதித்த சிந்தனை அல்ல!
அரசமைப்பு சட்டம் அமலுக்கு 1951ல் வந்த பின்னர் , 1952ல் முதன் முதலில் நாடாளுமன்றத்திற்கும், அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது.
இந்த நடைமுறை 1952, 1957, 1962, 1967 வரை சீராக நடந்து வந்தது, 1968 க்கு பின் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றங்களால் சில மாநில அரசுகள் மக்களின் உத்தரவை (mandate) மீண்டும் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதை தொடர்ந்து, தேர்தல் அட்டவணை மாற்றத்தை சந்தித்தது, ஒன்றிய அரசும் சிக்கலான காலத்தில் மக்களின் உத்தரவை பெற 1971 -ல் தேர்தலை (1972க்கு பதிலாக) சந்தித்ததால், நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையும் குறிப்பிட்ட தேதியில் இருந்து மாறியது.
இந்த மாற்றங்களெல்லாம் இயற்கையாக, எழுந்த சூழல்களை எதிர்கொள்ள இந்திய ஜனநாயகம் வகுத்துக் கொண்ட உயிரோட்டமான மாற்றங்களே ஒழிய எந்த தனிநபரும்,கட்சியும் தனது ஆதாயத்திற்காக திட்டமிட்டதல்ல! அன்றைக்கு இருந்ததே இன்று கொண்டு வருவதற்கு ஏன் எதிர்ப்பு என்கிறார்கள். காலச் சூழலுக்கு ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கிச் சிந்திக்க முடியாமல் வீண் வாதம் செய்பவர்களை என்னென்பது?
நாட்டில் இன்றிருக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், தேர்தல்கள் அடுத்தடுத்து அங்குமிங்குமாக நடைபெறுவது தான் என்றும், இதை வெட்டி ஒட்டி சரி செய்து விட்டால் எல்லாம் சீராகி விடும் என்று கூறுவதும், சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல விஷமத்தானதுங்கூட! அரசாங்கங்கள் தேர்தலை பற்றி சிந்திக்காமல் ‘வளர்ச்சி’ பற்றியும், நாட்டின் ‘முன்னேற்றத்தை’ பற்றியும் மட்டுமே சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதெல்லாம் ஓவர் பில்டப்.
தேர்தல் பற்றி யோசிப்பதே அதாவது, மக்களின் அங்கீகாரம் பெற்று செயல்படுவதே கால விரயம், கடமை தவறுதல் என்று எண்ணுவது மக்கள் நலனுக்கு எதிரானது. இவர்கள் யாருடைய, எந்த “ வளர்ச்சி” பற்றி கதைக்கிறார்கள், மக்களை மேம்படுத்தாத வளர்ச்சி யாருக்கானது? யாருடைய நலனுக்காக அரசு கொள்கைகளையும், திட்டங்களையும் முன்னெடுக்கிறது?
வளர்ச்சி திட்டங்களுக்கான மக்களின் அங்கீகாரம் பெறுவதும், இது வரை நடந்த செயல்களுக்கு ஆள்பவர்கள் பொறுப்பேற்று பதில் சொல்லுவதும் ஜனநாயகத்தின் அடிப்படையான தேவையாகும்.
இதை ஆட்சியாளர்களோ, அரசியல்வாதிகளோ மறப்பதோ, இதற்காகும் செலவினங்களை விரயம் என்பதோ மக்களாட்சிக்கும் ஜனநாயக மாண்புக்கும் ஏற்புடையதல்ல.
மக்களுக்கு ஒன்றும் தெரியாது, அவர்களால் சீர்தூக்கி முடிவெடுக்க முடியாது என்ற அதிகார ம்மதையின் வெளிப்பாடே இத்தகைய சிந்தனையாகும்.
‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ ஆட்சி முறையை செம்மைபடுத்துகிறது என்றும், கொள்கை முடக்கத்தை தேர்தல் காலத்தில் அமலில் இருக்கும், தேர்தல் நன்னடத்தை விதிகளினால் ஏற்படும் அரசின் செயலிழப்பை ஒரே தேர்தல் தடுக்கிறது என்றும், நாட்டின் சக்திகள் விரையமாகமல் இருப்பதற்கு வழி வகுக்கும் என்றும், பிராந்திய கட்சிகளின் முக்கியத்துவத்தை பேணி காக்க உதவுகிறது என்றும் அரசியல் ஊழியர்களுக்கு (கட்சி தொண்டர்களுக்கு) சம்மான பரந்து பட்ட வாய்ப்புகளை வழங்க வழி செய்வதாகவும், தேர்தலுக்கான செலவினங்களை குறைக்க உதவுவதாகவும் மோடி அரசும், பாஜ கட்சியினரும் கதையளந்து வருகின்றனர்.
அவர்களது ஊடக நண்பர்களும், கோடி மீடியாவும் இதற்கு ஒத்து ஊதி வருகின்றனர்.
பதவிக்காக பாஜகவினருடன் கை கோர்த்து அலையும் தெலுகு தேசம், நிதிஷ் குமாரின் ஜனதா தளம், அகாலி தளம், ஷிண்டே, மற்றும் அஜீத் பவார் கூட்டம் இதை ஆமோதிக்கின்றனர்.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக் கேட்ட பின்னர் தான், இந்த முடிவுக்கு வந்ததாம்.
எத்தனை பேரிடம் கருத்து கேட்டார்கள், கருத்து கேட்கும் படிவம் என்ன மொழியில் இருந்தது ?
மொத்தம் 21, 500 நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும், கருத்து கேட்பு படிவம் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே இருந்தது என்ற உண்மை இத்தகைய கருத்துக் கணிப்பு எப்படிப்பட்ட கண் துடைப்பு வேலை என்பதை விளக்கும்.
இதற்கும் மேலே கருத்து கூறிய 21,500 நபர்களில் 80 % நபர்கள் ஒரே தேசம் ஒரே தேர்தல் முடிவை ஆதரித்தார்கள் என்று அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மொத்தம் 47-ல் 32 கட்சிகள் இந்த ஒரே நேரத் தேர்தல் முன்னெடுப்பை ஆதரித்தார்கள் என்றும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.
இதை எதிர்க்கும் 15 கட்சிகள் யார் யார் என்று பார்த்தால் அவை காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவார் காங்கிரஸ், தி. மு. க., உத்தவ் தாக்கரே கட்சி, ராஷ்ட்ரிய லோக்தளம், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் சில இந்தியா கூட்டணி கட்சிகள் ஆகும். ஆதரிக்கும் கட்சிகளின் எண்ணிக்கையை 32 ஆக காட்டினாலும் அவை , பாஜக, தெலுகு தேசம், ஜனதா தளம் போன்ற கட்சிகளை தவிர்த்த மற்றவைகளெல்லாம் மக்கள் செல்வாக்கற்ற லெட்டர் பேட் கட்சியாகவே தான் உள்ளன.
இதிலிருந்தே இந்த முயற்சி அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலோ, சம்மதமோ இன்றி மோடியின் விருப்பத்திற்கேற்ப எடுக்கப்பட்ட முயற்சி , அதில் தற்போது அரை கிணறு தான் தாண்டப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.
இரண்டு கட்டமாக ஒரே நேர தேர்தல்களை நடைமுறை சாத்தியமாக்க இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
முதலில் நாடாளுமன்ற தேர்தலையும் மாநில சட்ட மன்றங்களின் தேர்தல்களையும் ஒருங்கிணைப்பது அடுத்து இரண்டாவது கட்டமாக உள்ளாட்சி தேர்தல்களான நகர்ப்புற மற்றும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களை சட்டமன்ற தேர்தல்களோடு சேர்த்து நடத்துவது என்ற இரண்டு படிநிலைகளை இந்த குழு பரிந்துரைக்கிறது.
இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான ஒரு கருத்தை இக்குழு பரிந்துரைப்பதாக அரசு கூறுவது என்னவெனில் மாநிலங்களில் உள்ள தேர்தல் ஆணையங்கள் (state election commissions) வாக்காளர் சேர்க்கையிலும் , வாக்காளர் பட்டியலை திருத்தி அமைப்பதிலும் சரிவரச் செயல்படாத காரணத்தால் அவை (SEC) கலைக்கப்பட்டு அந்த பணியை ஒன்றியத்திலுள்ள தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டும் எனவும், EPIC என்ற புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பின் கீழ் வழங்கி, நாடு முழுவதற்கும் ஒரே வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும் என்ற முன்னெடுப்பு தான் ‘மோடியின் முத்திரையாக’ இங்கு திகழ்கிறது.
ஒரே முயற்சியில் மாநிலங்களின் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் பறித்துவிட்டு உள்ளாட்சி, பஞ்சாயத்து தேர்தலைக் கூட உள்ளூர் அதிகாரிகள் நடத்த விடாமல் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே , தான் நியமித்த தேர்தல் ஆணையத்திடம் குவிப்பது யாருடைய நலனுக்காக?
மாநிலங்களையும், அங்கு வாழும் மக்களின் தனித்தன்மையையும் , கணக்கிலெடுக்காமல் தனது கட்சியின் ஆளுமையை நீடித்து நிலைக்க வைக்க இந்த முயற்சியை மோடி எடுத்துள்ளார்.
பாராளுமன்றமும் சட்ட மன்றங்களும் தனித்தனி இறையாண்மை பெற்ற அமைப்புகள் , சட்டமன்றங்களை நாடாளுமன்ற ஆளுமைக்குட்படுத்துவது கூட்டாட்சி முறைக்கும், பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைக்கும் எதிரான செயல் . ஆனால், மாநிலங்களின் தனித் தன்மையை காப்பாற்றவே இம் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்று மோடி அரசு கதைவிடுவதை யாரும் நம்பத் தயாரில்லை.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்து அதை தள்ளிப் போட்டதை போல , ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு விடுவதன் மூலம் தனது இருப்பை மோடி உறுதிப்படுத்தும் அதே வேளையில், அதானி ஊழலை பற்றி மக்கள் சிந்திக்கவிடாமல் மடை மாற்றமும் செய்கிறார் என்பதும் உண்மையே!
ச. அருணாசலம்
- அறம் இணைய இதழ்