சத்துணவுத் திட்டத்தில் கொத்தடிமைக் கூலி முறையை ஊக்குவிக்கும் திராவிட மாடல் அரசு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயாலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிடும் பத்திரிக்கை செய்தி.
கொத்தடிமைக் கூலி முறையை ஊக்குவிக்கும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கின்றோம்.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ரூ.3000/-திற்கு சமையல் உதவியாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது. கொத்தடிமைக் கூலி முறையை அரசுத் துறைகளில் நேரடியாக அறிமுகம் செய்ய நினைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேர்தல் காலத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி திமுக-வால் கொடுக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான முறையில் நிரப்புவதை ஏற்க இயலாதது.
பொருளாதார ரீதியாக பின் தங்கிய, மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக் கனவு எதிர்காலம் சிதைந்து விடக் கூடாது என்னும் உயரிய நோக்கில் அன்றைய தமிழக முதல்வர் காமராசர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தான் எம்ஜிஆர் அவர்களால் சத்துணவுத் திட்டமாக அறிவிக்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக்கத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு காரணமே அத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் தான். மிகவும் சொற்ப ஊதியத்தில் கடந்த 40 ஆண்டுகாலமாகப் பணியாற்றி வரும் அந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் சிறக்க வாழ்க்கைக்கான ஊதியம் வழங்கக் கேட்டு போராட்டம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் இந்த அரசு பொறுப்பேற்ற உடன் அறிமுகப்படுத்தப்பட்டு, அது ஏற்கனவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதிய, மதிப்பூதிய முறையை இரத்து செய்வோம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி கொடுத்து விட்டு தற்போது கொத்தடிமைக் கூலி முறையை அமல்படுத்தும் ஆட்சியாளர்களின் செயல் வேதனை அளிக்கிறது. ஏற்கனவே சமையல் உதவியாளர் நிலைக்கு கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களுக்கு என இருந்ததையும் தற்போது பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் என மாற்றியமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியராய் வந்தால் நம் வாழ்க்கையில் விடியல் வந்து விடும் என ஏக்கத்தோடு நிற்கும் அபலைப் பெண்களையும், அப்பாவி மக்களையும் வஞ்சிக்கும் பணி நியமன ஏற்பாடாகவே இதை நாங்கள் பார்க்கிறோம். தூய்மையான ஆட்சி நிர்வாகத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த இவர்களின் இந்த 42 மாத கால ஆட்சியில் அரசு நிர்வாகத்தில் பணி மாறுதல், பதவி உயர்வு என அனைத்து வகையான நிர்வாக விடயங்களில் தலையிடுவது தான் வாடிக்கையாகி விட்டது. 42 மாத காலத்தில் இந்த ஆட்சியாளர்கள் என்னென்னவற்றை எல்லாம் அரசு ஊழியர்கள். ஆசிரியர்களுக்குக் கொடுத்தார்கள் என்பதைக் குறிப்பெடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் எங்களுக்கு எதை எல்லாம் கொடுத்தார்களோ அவைகளை இரட்டிப்பாக திரும்பக் கொடுக்க அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தயாராகி வருகிறோம்.
எனவே, சத்துணவுத் திட்டத்தில் கொத்தடிமைக் கூலி முறையை நேரடியாக அமல்படுத்த வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்.95-யை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை முறையான அறிவிப்பின் மூலம் வெளிப்படைத் தன்மையோடும், நேர்மையாகவும் முயைான காலமுறை ஊதியத்தில் பணிக்கமர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
- சேரலாதன் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு