ஒப்பந்த பிணங்கள்!

துரை. சண்முகம்

ஒப்பந்த பிணங்கள்!

இந்தப் பிணங்கள்

 அரசியலாக்கப்படுவதற்கு 

எவர்க்கும் தேவைப்படவில்லை .

கரூர் சாவுக்கு கதறி

 எங்களுக்கும் இதயம்

 இருப்பதாய் காட்டிக்

 கொண்டவர்களுக்கு,

எண்ணூர் மரணத்தை 

இன்னொரு விபத்தாக 

எடுத்துக்கொள்ளும்

 மனப்பக்குவம் 

வாய்த்திருக்கிறது.

கரூர் நிகழ்வுகள் போன்றவை

 வட மாநிலங்களில்தான்

 நடக்கும்!

 முன்னேறிய தமிழகத்தில்

 இப்படி நடக்கலாமா?

என்று முழங்கியவர்கள்,

ஒருவேளை 

வடமாநில பிணங்கள்தானே

என்று 

வழக்கம் போல,

 'வடக்கன்ஸ்களுக்கு'

 அறிவில்லை எனும் 

ஆராய்ச்சி முடிவில் 

அமரர் ஆகியிருப்பார்கள் போல. 

"யார் பொறுப்பு? 

சேதாரங்களுக்கான

 ஆதாரங்கள்"

என்று அடுக்கடுக்காக 

புறப்படும் 

வேல்வீச்சுகளும் 

வாய் வீச்சுகளும் 

இந்தப் பக்கம் காணோம்! 

மற்ற ஆய்வுகள் எதற்கு?

உடற் கூராய்வு போதாதா?

எம்பிக்கள் குழுவோ

 எம்எல்ஏக்கள் குழுவோ

 அமைத்து ஆராய்ந்து 

யார் மீது நடவடிக்கை எடுக்க?

எதுவும் தேவையில்லை!

ஒப்பந்த தொழிலாளர்

 பிணங்களுக்கு

 கொடுத்தாயிற்று

பத்து லட்சம் இழப்பீடு !

வேறென்ன 

செய்ய முடியும் அரசு?

விபத்துதானே!

சிறப்பு பொருளாதார

 மண்டலத்தின் 

சிறப்பு நுழைவாயில்

 வேலையில்

உயிர் காக்கும் 

உறுதிப்பாட்டை சோதிக்க 

முன்னேறிய தொழில்நுட்பம்

 ஏதும் இல்லையோ! 

ஏறப்போவது 

தொழிலாளர்தானே!

எதற்கு சிறப்பு பாதுகாப்பு ?

முன்னே பத்து கார் 

பின்னே பத்து கார் 

பாதுகாப்பு 

பரிசோதனை 

ஒரு மேடைப் படி ஏறினால் கூட

 பக்கவாட்டில் பாதுகாப்பாக 

ஆட்களை நிறுத்துவதற்கு 

அவர்கள் என்ன 

முதல்வரா? 

பிரதமரா? 

அமைச்சர்களா?

ஒப்பந்த 

தொழிலாளர்கள்தானே!

"ஏதோ விதி முடிந்து விட்டது "

எனும் கணக்கைத் தவிர

 எண்ணுவதற்கு 

எண்ணூரில் என்ன இருக்கிறது 

நிரந்தரப் பணியாளர்களாக

 இருந்தால்

உரிய ஊதியம் 

நிச்சயம் 

இழப்பீடும் 

அவர் குடும்பத்திற்கான

 காப்பீடும் 

நிறைய தேவைப்படும். 

ஆகவே 

செத்தாலும் 

பணி நிரந்தரம் கிடையாது, 

ஏதோ இழப்பீடும் 

சடலங்களை 

நிரந்தரமாக ஒப்படைக்கவும் 

இந்த அளவுக்கு 

அரசு எந்திரத்திற்கு

இதயம் இருப்பது போதாதா?!

இதையெல்லாம் 

அரசியல் ஆக்கினால் 

யாருக்கு ஆதாயம்? 

தொழிலாளி வர்க்கத்துக்கான

 அரசியலைப் பேச 

அரசின் 

அடிப்பொடிகள் 

என்ன முட்டாள்களா?

தனியார்மயத்தின் 

தகைசால் அறிவாளிகள்!

விவரம் புரியாமல் 

தலையை திருப்ப 

அவர்கள் என்ன 

தற்குறிகளா? 

எங்கே 

வாயை திறக்க வேண்டும்

 எதற்கு 

கண்ணை திறக்க வேண்டும்

எனும்

வெவரமான

மெர்குரிகள்!

    - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/827210783319053/?rdid=jD97AAYPFivP4eQq

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு