வெண்மணி முதல் தூய்மை பணியாளர் செவிலியர் வரை - அரசியல் உரிமையை கருக்கும் ஆண்டைகள்
துரை. சண்முகம்
அமைச்சர் ஆரம்பத்தில் காலிப் பணியிடங்களே இல்லை என்றார் . கேளாத செவிகளின் செவுளில் அறையும்படி செவிலியர்கள் முழங்கிப் போராடி கைதாகி அல்லற்பட்டு சூழ்ந்த நியாயம் அரசை பணிய வைத்து இருக்கிறது.
ஆயிரம் செவிலியர் மட்டும் இப்போதைக்கு பணி நிரந்தரம் என்பது துவக்கமாக இருக்கட்டும் தொடர்ந்து அனைவரையுமே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பணி நிரந்தரமான செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரும் செவிலியர்களுடனான வர்க்க உரிமைக் குரலாக எப்போதும் இருக்க வேண்டும்.
ஒப்பந்த கூலி முறையை அரசுத் துறையில் இருந்து ஒழிக்க தொழிலாளர் வர்க்கம் போராடாமல் இந்த துயரம் தீர வழியில்லை. வெறும் 18000 ரூபாய் சம்பளத்தில் செவிலியர் தூய்மை பணியாளர் போன்ற அடிப்படை தொழிலாளர். வேலைகளை நிரந்தரமும் செய்ய மாட்டார்களாம்.
உயர்பதவி அதிகார வர்க்கத்திற்கு மட்டும் லட்சங்களில் சம்பளமாம் நிரந்தரமாம்! இது என்ன சமூக நீதி? இதுதான் தூசு துடைக்கப்பட்ட மனுநீதி! இந்த சனாதனத்தோடு ஒட்டுக்கட்சிகள் அனைத்தும் சமாதானம். கட்சிகள் தனியார் மயத்தின் காலாட்படைகளாக இருப்பதால் ஒவ்வொரு துறை தொழிலாளி வர்க்கமும் தனது சொந்தக் கால்களில் எழுந்து நின்று போராடுகிறது.
போதிய பணம் இல்லை என்று சாக்கு சொல்கிறது அரசு.
அப்படியானால் அரசுத்துறைகளில் உள்ள அவசியமற்ற அதிகார வர்க்க அதிக சம்பளப் பணிகளை முதலில் ஒழிக்க வேண்டும்.
கல்விப்புலத்தில் கூட அவசியமான அறிவியல் துறை சமூகவியல் துறை மொழி பயன்பாட்டுக்கான வளர்ச்சித் துறை தவிர இருக்கைகள் என்ற பெயரில் நாற்காலி தேய்க்கும் வேலைகளை ஒழித்துக் கட்ட வேண்டும். ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும்போது தனக்கு ஏற்ற ஜால்ராக்களை உருவாக்குவதற்காக வாரியங்கள் இருக்கைகள் என்று வெட்டித் துறைகளை உருவாக்கி கொட்டிக் கொடுக்கிறது. மக்களுக்கான அடிப்படைச் சேவையின் ஒரு துளி உழைப்பையும் தராத அலங்காரச் சம்பளம் முறை ஒழிக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் சட்ட முறைப்படி உழைக்கும் தொழிலாளர்களுக்கு 25 ஆயிரம் 30 ஆயிரத்திலிருந்து ஊதிய விகிதம் தொடங்க வேண்டும். இன்றைக்கு 18 ஆயிரத்தில் ஒரு அமைச்சரும் அதிகாரியும் குடும்பம் நடத்துவாரா? தொழிலாளிகள் என்றால் எப்படியோ தொலையட்டும் என்பதுதான் சமூக நீதிப் பார்வையா?
வெண்மணி முதல் தூய்மை பணியாளர் செவிலியர் வரை உழைப்பவர்கள் உரிமைகள் கேட்டால் கூலி உயர்வு என்பதை விட அவர்களின் அரசியல் உரிமையை கருக்குவதற்கு காத்திருக்கின்றன ஆண்டைகளின் அதிகாரங்கள்.
இந்த அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசாமல் சும்மா சமூக நீதி மண்! பெரியார் மண்! என்பதெல்லாம் பித்தலாட்டம்!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/896914243015373/?rdid=kiytKL2b83eL5P6U
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு