கிறிஸ்துமஸ் விழாக்களில் புகுந்து வன்முறை செய்யும் பஜ்ரங்தள் கும்பல்
துரை. சண்முகம்
அஸ்ஸாம் ஒடிசா போன்ற மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவ மக்களின் விழாக்கோலங்களில் புகுந்து வன்முறை செய்து வருகிறது இந்துத்துவ பஜ்ரங்தள் கும்பல்.
சாலையோரம் விற்கும் கிறிஸ்மஸ் தொடர்பான பொருட்களைக் கூட ஏழை இந்து தரைக்கடை வியாபாரிகள் விற்கக் கூடாது! என சட்டவிரோத தடைகளை அறிவித்து மிரட்டுகிறது.
பாஜக எதிர்ப்பு காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சிகள்
வடக்கில் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு முறியடிக்கும் ஒரு சமூக அரசியல் சக்தியாக கூட இல்லை. இப்படிப்பட்ட நடைமுறை பாசிசத் தாக்குதலை
எதிர்கொள்ளும் வேலைத்திட்டங்களை அதற்கான அரசியல் நகர்வுகளும் கூட இவர்களிடம் இல்லை.
ஏன்?
இந்தக் கட்சிகளின் அடித்தளமே கார்ப்பரேட் மயமாக்களின் தனியார்மய சமூக விரோத கொழிப்புகளை அனுபவிக்கும் வணிகவர்க்கம், நவீன தாராளமய பொருளாதாரத் திட்டங்களின் காண்ட்ராக்ட்கள் ஒப்பந்தங்கள் கனிம வள கொள்ளை தொழில்கள் நில அபகரிப்பு ரியல் எஸ்டேட் தொழில்கள் போன்ற சமூக அக்கறையற்ற தன்மை கொண்ட வர்க்கங்களை அடித்தளமாகக் கொண்ட கட்சிகளாக இருக்கின்றன.
இவைகளுக்கு நாட்டுப் பற்று மக்களைப் பற்றிய கவலைகளோ இயல்பிலேயே இல்லை. வெறும் அறிக்கை அரசியலை தாண்டி இந்த கட்சிகளின் அக்கறையும் இல்லை.
எனவேதான் சொல்கிறோம் பாசிச எதிர்ப்பின் தலைமை சக்தியாகவும் உந்து சக்தியாகவும் காங்கிரஸ் இந்தியா கூட்டணி ஒருபோதும் இருப்பதற்கு தகுதி படைத்தது அல்ல.
தேர்தலுக்கு மட்டும் வேலை செய்யாத இடதுசாரிகள் தலைமையிலான உழைக்கும் வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்ட ஐக்கிய முன்னணியால் மட்டுமே
பாஜகவின் இந்துத்து வெறியை எதிர்கொள்ளும் அடித்தளத்தை உருவாக்க முடியும்.
தாமதமானாலும் இதற்கு தயாராவதே அவசிய தேவை என்பதை ஒவ்வொரு சூழலும் உணர்த்துகிறது.
இங்கும் கூட பெரியார் மண் என்று இறுமாந்து இருக்க முடியாது. அவர் காலத்தில் உச்சத்தில் இருந்த அதிகார வர்க்க பார்ப்பனர் நலன்களை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதவரின் கல்வி பதவி அரசு உத்தியோக நலன்களுக்கான போராட்டங்களை அதற்குரிய வர்க்கங்களை கொண்டு அவரால் செய்ய முடிந்தது.
அந்த வர்க்கங்கள் அம்பேத்கருக்கு பாடம் கற்பித்தது போலவே வெறும் இட ஒதுக்கீடு வேலைவாய்ப்புக்கு மட்டும் தான் பெரியார் என்று சமூகப் பதட்டங்களை தணிப்பதற்கான வேலைகளில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் வக்க நலன்களோடு ஒதுங்கிக் கொள்கிறது.
ஏனென்றால் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை என்பது அடித்தட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நலன்களை பிரதிபலிக்கும் லட்சியத்தில்
அதற்கான வர்க்கப் போராட்ட வேலைத் திட்டத்தோடு இணைத்து கட்டப்பட்டது அல்ல.
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் நலன்களுக்கு உட்பட்டதாக அதன் சீர்திருத்தம் மையம் கொண்டிருந்தது.
இன்றைய நவீன தனியார்மய தாராளமய உலகமய காலகட்டத்தில் பார்ப்பனியத்தின் பாகுபாடு வேறுபாடு எனும் சித்தாந்தம் அரசின் பொருளாதாரக் கொள்கை வழியாகவே புகுத்தப்பட்டு நிலை நிறுத்தப்படுகிறது.
இதை எதிர்ப்பதற்கு இந்துத்துவ எதிர்ப்பை வர்க்க போராட்டத்துடன் இணைக்கும் பாட்டாளி வர்க்க அடிப்படை கொண்ட மார்க்சிய தத்துவத்தாலேயே இயலும்.
பெரியார் சிந்தனையாளர்கள் உட்பட பெரியார் தவறிய
பாட்டாளி வர்க்க அரசியல் வேலைத்திட்டங்களை கைக்கொள்ளும்போதுதான்
பார்ப்பனியத்தை இந்துத்துவ வெறியை நடைமுறையில் சமரசம் இல்லாமல் வெற்றி கொள்ளும் வர்க்க அடிப்படை ஆற்றலை பெற முடியும் .வெல்ல முடியும். கருத்துப் பிரச்சாரம் என்பது இந்த வர்க்க உள்ளடக்கத்தை கொண்டதாக அமைய வேண்டும்.
பார்ப்பனர் அல்லாத சுரண்டும் வர்க்கங்களையும் தனது சேவை ஆற்றலாக கொண்டிருக்கும் இந்துத்துவ மத வெறியை எதிர்ப்பதற்கு வர்க்க அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் வேறு வழியில்லை.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/896980783008719/?rdid=EnorGh6m53Jt15bi
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு