சோசலிசத் தளத்தைக் கட்டிக்காத்த மாபெரும் தலைவர் ஸ்டாலின்
தெய்வசுந்தரம் நயினார்
ரசிய அக்டோபர் புரட்சிக்குத் தோழர் லெனினுக்கு வலது கரமாக நின்று செயல்பட்டவர் . . . ஸ்டாலின்!
அக்டோபர் புரட்சிக்குப்பிறகு சோவியத் ரசியாவின் வளர்ச்சியடையாத பொருளாதார அமைப்புச் சூழலில் வரலாற்றுக் கட்டாயத்தின் அடிப்படையில் தோழர் லெனின் 'புதிய பொருளாதாரக் கொள்கையை' செயல்படுத்தினார். இக்கொள்கையின் வழியே ரசியாவின் உற்பத்திசக்திகள் வளர்ச்சிபெற்று, ரசியாவில் சோசலிச பொருளாதார அமைப்பைக் கட்டுவதற்கு உதவும் என்று தோழர் லெனின் கருதினார்.
இக்கொள்கை முதலாளித்துவ, பணக்கார விவசாயிகளின் நலனகளுக்கும் பயன்படும் வகையில் அமைந்தது. இது வரலாற்றுத் தேவை . . . குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தக் கொள்கையினால் 'வளர்ச்சியடைந்த' முதலாளித்துவ சக்திகள், சோசலிசத்தைக் கட்டும் முயற்சிக்குத் தடையாக அமைந்தால், பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள சோவியத் அரசு அதிகாரம் அதைத் தகர்த்தெறிந்து சோசலிசத்தை நோக்கி நடைபோடும் என்று தோழர் லெனின் கருதினார்.
இக்கொள்கை செயல்படத் தொடங்கிய சில வருடங்களில் தோழர் லெனின் மறைந்தார். இச்சூழலைப் பயன்படுத்தி, பாட்டாளிவர்க்க அரசை வீழ்த்திவிடலாம் என்று முதலாளித்துவ சக்திகளும், அதற்கு உதவியாக நின்ற உலக ஏகாதிபத்தியமும் முயன்றன. இந்தக் கடுமையான சோதனைக் காலகட்டத்தில் தோழர் ஸ்டாலின் அவர்கள் தம்முடைய உறுதியான மார்க்சியப் பிடிப்பாலும், மார்க்சிய லெனினியத்தைச் சரியாக உள்வாங்கியிருந்ததாலும், தெளிவான மார்க்சிய நடைமுறையாலும் முன்கூறிய முதலாளித்துவ சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, ரசியாவைச் சோசலிசத்தை நோக்கி இட்டுச் சென்றார். அரசைக் கவிழ்க்கவும் நாட்டில் குழப்பம் விளைவிக்கவும் முயன்ற சக்திகளின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை முறியடித்தார்.
உள்நாட்டில் மட்டுமல்லாமல், ரசியாவுக்கு வெளியே உள்ள ஏகாதிபத்திய சக்திகளும் சோசலிசக் கட்டுமானப் பணிகளைத் தடுக்க முயன்றன. எனவே, சோசலிசப் புரட்சிக்கு முன்னர் மட்டும் அல்லாமல், சோசலிச அரசு - பாட்டாளிவர்க்க அரசு நிறுவப்பட்டபிறகும் அரசியல் அதிகாரத்தை இழந்த எதிர்ப்புரட்சி சக்திகள் வர்க்கப்போராட்டத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடரும்; எனவே பாட்டாளிவர்க்க அரசு வர்க்கப்போராட்டத்தைத் தொடரவேண்டும் என்பதைத் தோழர் ஸ்டாலின் நன்கு உணர்ந்திருந்தார். எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் அனைத்தையும் தோழர் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி முறியடித்தது.
கட்சியின் வழிகாட்டுதலில் தோழர் ஸ்டாலின் பல தெளிவான முடிவுகளை எடுத்தார். ஆனால் இந்த முடிவுகளையும் நடவடிக்கைகளையும் தோழர் ஸ்டாலின் அவர்களின் வெறும் தன்னலச் சர்வாதிகாரம் என்று எதிர்சக்திகள் பொய்ப்பிரச்சாரத்தை முன்வைத்தன. அதுபற்றிக் கவலைப்படாமல் தோழர் ஸ்டாலின் ரசியப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் சோசலிசப் பாதையையும் உள்நாட்டு, வெளிநாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளின் நாச நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றினார். அதுமட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளில் காலனி ஆதிக்க எதிர்ப்புப் புரட்சி, சோசலிசப் புரட்சி ஆகியவற்றிற்கு வழிகாட்டுதலும் அளித்தார். ரசிய சமுதாயத்தின் தலைவராகமட்டுமல்லாமல், ரசிய சோசலிசத் தளத்தை உலகெங்கும் விரிவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டார்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது. ரசியாவை வீழ்த்திவிடவேண்டுமென்று துடித்த ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி பாசிச அரசுகளின் முயற்சிகளை முறியடித்தார். இரண்டாம் உலகப் போரில் பாசிசச் சக்திகள் தோல்வி அடைவதற்கு மிக மிக முக்கியமான பாத்திரத்தைத் தோழர் ஸ்டாலின் மேற்கொண்டார். ரசிய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் வர்க்கப் போராட்டம், கட்சிக்கு வெளியே நீடித்த எதிர்ப்புரட்சிகளுடனும் வர்க்கப் போராட்டம், உலக அளவில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வர்க்கப்போராட்டம் என்று பலமுனைகளில் உறுதியாக நின்று போராடி . . . மார்க்சியக் கண்ணோட்டத்தில் உலகத்தை மாற்றி அமைக்கும் தமது பணியில் தமது உயிர் நீடிக்கும்வரை போராடிய தோழர் ஸ்டாலின் அவர்களின நினைவுநாள் இன்று! மார்க்சிய லெனினியத்தைத் தமது வாழ்க்கை முழுவதும் உறுதியாகப் பின்பற்றி வெற்றியடைந்த அவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!
தெய்வசுந்தரம் நயினார்
https://www.facebook.com/100004424580477/posts/3495638863926899/?rdid=dPo1ZGrm5aVdGAPi
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு