பீகார் தேர்தல் முடிவுகளை திட்டமிட்டபடி மாற்றியமைத்த எஸ்.ஐ.ஆர் - கட்டுரை தொகுப்புகள்

வெண்பா (தமிழில்)

இந்தியாவின் மௌனப் புரட்சி: தேர்தல் கையாளுதலுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி எப்படி மோடியின் பிம்பக் கதையை முடிவுக்குக் கொண்டு வரும்

ஒரு தசாப்த காலமாக, இந்தியா அரசியலின் மூலம் மட்டுமல்ல, பிம்பங்களின் கட்டுக்கதைகள் மூலமாகவும் ஆளப்பட்டு வருகிறது: வெல்ல முடியாதவர், தவிர்க்க முடியாதவர், வெற்றி முன்பே எழுதப்பட்டவர், எதிர்ப்பாளர்கள் தோல்வி அடைய விதிக்கப்பட்டவர் என்ற பிம்பம் அது. ஆனால் எந்தவொரு கட்டுக்கதையும் நிரந்தரமல்ல என்று வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அமைப்பின் புனிதத்தன்மையை மக்கள் சந்தேகிக்கத் தொடங்கும் போது, ஆட்சியின் மிக சக்திவாய்ந்த ஆயுதம் – அதாவது சட்ட அங்கீகாரம் – உடையத் தொடங்குகிறது.

இன்று, குஜராத், அஸ்ஸாம், பீகார் மற்றும் பெருகிவரும் ஹிந்தி பேசும் மையப் பகுதிகள் முழுவதும், அந்த விரிசல் அகலமாகி வருகிறது. மக்கள் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுத்து வாக்களித்திருக்கலாம், ஆனால் அவர்கள் ஆழமான ஒன்றையும் உணர்ந்து வருகிறார்கள்: தேர்தல் களம் பல ஆண்டுகளாக சமமாக இல்லை. ஒரு காலத்தில் அசைக்க முடியாத சுதந்திரமான அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாக இருந்த தேர்தல் ஆணையம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பொது ஆய்வுக்கும் நம்பிக்கையின்மைக்கும் உள்ளாகியுள்ளது. இது கல்வி சார்ந்த விவாதம் அல்ல. இது பாஜகவோ மோடியோ எதிர்பார்த்ததை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அரசியல் மாற்றத்தின் ஆரம்பப் புள்ளி.

தேர்தல் தந்திரங்கள் இனி கண்களுக்குத் தெரியாதவை அல்ல

ஆண்டுக்கு ஆண்டு நடந்த தேர்தல்கள் பல ஆண்டுகளாக ஒரு பழக்கமான முறையைப் பின்பற்றின: கடைசி நிமிட செயல்முறை மாற்றங்கள், விதிமீறல்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமலாக்கம், வெளிப்படையற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) நடைமுறைகள், விளக்கப்படாத வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புகள், மத்திய படைகளின் சீரற்ற அணிதிரட்டல், மற்றும் ஆளும் கட்சியின் அரசியல் தேவைகளுக்கு வசதியாக ஒத்துப்போகும் ஊடகக் கதைக்களம் போன்றவற்றை பல சாதாரண குடிமக்கள் ஏதோ தவறு என்று உணர்ந்தனர், ஆனால் அதை வெளிப்படுத்த அவர்களுக்குத் தேவையான சொற்கள், ஆதாரம் அல்லது நம்பிக்கை இல்லை.

இனிமேல் அப்படி இல்லை. மாநிலங்கள் முழுவதும், மக்கள் வெளிப்படையாகச் சொல்கிறார்கள்: “நாங்கள் வாக்களித்தோம் – ஆனால் அது முடிவுகளில் பிரதிபலிக்கவில்லை”. இந்த உணர்வு புதியது. பயம் சந்தேகத்தால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் சந்தேகம் கோபமாக முதிர்ச்சியடைந்துள்ளது. தங்கள் ஜனநாயகத் தெரிவு மீறப்பட்டுவிட்டது என்று மக்கள் எண்ண தொடங்கியவுடன், சமூக நிலை சிதைகிறது. தேர்தல்கள் தங்கள் தார்மீக அதிகாரத்தை இழக்கின்றன. மேலும் ஒரு அரசாங்கம், எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், தனது செல்வாக்கை இழக்கிறது.

கிளர்ச்சி மறுப்பில் தொடங்குகிறது

ஒரு கிளர்ச்சி எப்போதும் வீதிகளில் தொடங்குவதில்லை. அது அமைதியாகத் தொடங்குகிறது – முதலில் அவநம்பிக்கையுடன், பிறகு தெளிவுடன், பிறகு மறுப்புடன். இந்த உடனடி மறுப்பு நிலையில், நாம் பார்ப்பது என்னவென்றால், மோடியின் தவிர்க்க முடியாதவர் என்ற கட்டுக்கதையை ஏற்க மறுப்பது, திரைக்குப் பின்னால் இயங்கும் நிறுவனங்களை நம்ப மறுப்பது, மக்களின் விருப்பம் ஆட்சியாளர்களின் விருப்பத்துடன் ஒத்துப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏற்க மறுப்பது. மிக முக்கியமாக, அமைதியாக இருக்க மறுப்பது.

இப்போது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பாஜகவின் மிகப்பெரிய பலம் மோடியை தோற்கடிக்க முடியாது என்ற பிம்பம்தான். ஆனால் மக்கள் அவரை வெல்ல முடியாதவராகப் பார்ப்பதை நிறுத்தியவுடன், அவரது அதிகாரம் முழுமையானதிலிருந்து நிபந்தனைக்குட்பட்டதாக மாறுகிறது. நிபந்தனைக்குட்பட்ட அதிகாரம் பலவீனமானது.

மக்கள் வெறுமனே கோபமாக இல்லை — அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்

குஜராத்தும் அஸ்ஸாமும் ஒரு காலத்தில் பாஜகவின் கோட்டைகளாக இருந்தன. பீகார் 2020-இல் கூர்மையாக மாறியது. இவை பாஜக விசுவாசத்தையும், கணிக்கக்கூடிய தன்மையையும் கொண்ட மாநிலங்கள். இருப்பினும், அங்குள்ள பொது மனநிலை நிலையற்றதாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் பாஜகவுக்கு வாக்களித்த மக்கள் இப்போது வெளிப்படையாகச் சொல்கிறார்கள்: "அரசாங்கம் நியாயமாக வெற்றி பெறட்டும் – கையாளுதல் மூலம் அல்ல". இதுவே ஆட்சிக்கு மிகவும் ஆபத்தான உணர்வு. திருப்தியின்மையை நிர்வகிக்க முடியும். ஏமாற்றத்தை நிர்வகிக்க முடியும். ஆனால் ஏமாற்றப்பட்ட உணர்வு என்பது புரட்சிகரமானது.

ஏனெனில், ஏமாற்றப்பட்ட மக்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. அவர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்த தருணம் ஏன் வேறுபட்டது

இந்தியா இதற்கு முன்னும் அதிருப்தியைக் கண்டிருக்கிறது – விவசாயப் போராட்டங்கள், CAA-NRC எதிர்ப்பு, தலித் எழுச்சிகள், பழங்குடிகளின் போராட்டங்கள், தொழிலாளர் பேரணிகள், மீனவர் இயக்கங்கள், மாணவர் போராட்டங்கள். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட கொள்கை சார்ந்தவை.

பெரிய வித்தியாசம் என்னவென்றால், இப்போது வெளிப்படுவது அரசியலமைப்பு ரீதியானது. மக்கள் ஒரு கொள்கைக்கு எதிராகப் போராடவில்லை. தங்கள் வாக்கு — அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமை — கவிழ்க்கப்படுகிறது என்ற கருத்துக்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள்.

ஜனநாயகம் சந்தேகிக்கப்படும்போது, எதிர்ப்பு ஆழமான தார்மீக அங்கீகாரத்தைப் பெறுகிறது. தார்மீக அங்கீகாரம் அரசியல் செய்தியிடலை விட வேகமாகப் பரவுகிறது.

இது காட்டுத்தீ போல் பரவ முடியுமா? முழுவதும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், இந்த காட்டுத்தீ உரையாடல்களில் உள்ளது: தேநீர்க் கடைகள், வாட்ஸ்அப் குழுக்கள், பேருந்து நிறுத்தங்கள், வளாக இருக்கைகள், தொழிற்சாலை வரிசைகள், சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற சந்தைகள், ஓய்வூதிய வரிசைகள், மகளிர் சங்கங்கள், சிறுபான்மை சமூகங்கள், தலித் குடியிருப்புப் பகுதிகள், புலம்பெயர்ந்தோர் வலைப்பின்னல்கள் என அது ஏற்கனவே பரவி வருகிறது.

மக்கள் இனி கிசுகிசுக்கவில்லை. அவர்கள் அதை அறிவிக்கிறார்கள்:

“தேர்தல் ஆணையம் சமரசத்தில் ஈடுபட்டுள்ளது.” “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளிப்படையானவை அல்ல.” “மோடி வரம்பை மீறிவிட்டார்.” “இந்த அரசாங்கம் மக்களுக்கு அஞ்சுகிறது.”

இந்திய அரசியலில், சாதாரண மக்கள் கட்டமைப்புச் சிதைவு என்பதை உச்சரிக்கத்  தொடங்கும் தருணமே, ஆட்சியாளர்கள் தங்களது களத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கும் தருணமாகும்.

பாஜகவின் முரண்பாடு: முழுமையான அதிகாரம், பூஜ்ஜிய நம்பிக்கை

கைப்பற்றப்பட்ட தேசிய ஊடகங்கள், பலவீனப்படுத்தப்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள், கருவிகளாக்கப்பட்ட முகமைகள், மறுசீரமைக்கப்பட்ட அதிகார மையங்கள், கட்டுப்படுத்தப்பட்ட வருவாய் இயந்திரம், முன்முடிவு கொண்ட நீதித்துறை, நசுக்கப்பட்ட கருத்து வேறுபாடுகள், குற்றவாளிகளாக்கப்பட்ட எதிர்க்கட்சிகள், வணிகமயமாக்கப்பட்ட பிரச்சாரம்,  கார்ப்பரேட்களிடம் செல்வங்களை குவித்தல் என சுதந்திர இந்தியாவில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவிற்கு மோடியின் கீழ் பாஜக அதிகாரத்தை மையப்படுத்தியது.

இப்படியான கட்டுப்படுத்தப்பட்ட கட்டமைப்பு இருந்தபோதிலும், ஒரு சக்தி பிடிவாதமாக கணிக்க முடியாததாகவே உள்ளது: அது மக்கள் சக்தி.

மோடி அரசு அச்சுறுத்துவதற்கு போதுமான வலிமையானதொரு கட்டமைப்பை உருவாக்கியது, ஆனால் என்றென்றும் ஏமாற்றுவதற்கு போதுமான வலிமையுடையதல்ல அது. அதிகாரம் அதிகளவில் முழுமையானதாக மாறும்போது, அதன் அத்துமீறல்கள் நன்றாக புலப்படுகின்றன. அத்துமீறல் புலப்படும்போது, எதிர்ப்பு தவிர்க்க முடியாததாகிறது.

மக்கள் கிளர்ச்சி செய்தால், அடுத்து என்ன நடக்கும்?

இந்தக் கிளர்ச்சி ஆழமடைந்தால் – வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக இல்லாவிட்டாலும், கூட்டு ஒத்துழையாமை, தேர்தல் புறக்கணிப்பு, கதைக்கள நிராகரிப்பு மற்றும் தார்மீக மாற்று மூலமாக – மோடி சகாப்தம் இயல்பானதொரு, ஜனநாயக முடிவைச் சந்திக்க நேரிடும்.

மூன்று சூழ்நிலைகளும் விளைவுகளும் சாத்தியமாகும்:

வெல்ல முடியாதவர் என்ற கட்டுக்கதை உடையும். பாஜகவை தோற்கடிக்க முடியாது என்று மக்கள் நம்புவதை நிறுத்தியவுடன், ஒவ்வொரு தேர்தலும் போட்டியாகிறது. ஒவ்வொரு இருக்கையும் பாதிக்கப்படக்கூடியதாகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒரு போர்க்களமாகிறது. மனோரீதியான அனுகூலம் மறைந்துவிடுகிறது – மனோரீதியான அனுகூலமே மோடியின் வெற்றியில் பாதியாக இருந்தது.

பிராந்திய சக்திகள் கூர்மையாக வளரக்கூடும். மத்திய நிறுவனங்கள் மீதான நம்பிக்கை சரியும்போது, பிராந்தியத் தலைவர்கள் அரசியலின் புதிய தார்மீக மையங்களாக மாறுகிறார்கள். இது இந்திய ஜனநாயகத்தை மையப்படுத்துவதிலிருந்து விலக்குகிறது – மேலும் பாஜகவின் தேசிய ஆதிக்கத்தை பலவீனப்படுத்துகிறது.

ஆட்சியாளர்கள் கதைக்களத்தின் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மோடியின் அதிகாரம் கதைக்களத்தால் இயக்கப்படுகிறது. அவர் வலிமையானவர், நிலையானவர், வெல்ல முடியாதவர், தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற கதைக்களம் கைநழுவிப் போனால் — பாஜக தேர்தல் வெற்றிகளை மட்டுமல்ல, அதன் அடையாளத்தையும் இழக்கும். அத்தகைய சூழலில், சர்வாதிகாரப் போக்கைக் கொண்டதொரு அரசாங்கத்தின் வீழ்ச்சி சாத்தியமாவது மட்டுமல்ல, கணிக்கக்கூடியதாகவும் மாறுகிறது.

கிளர்ச்சி ஏன் பகுத்தறிவு சார்ந்தது — தீவிரமானது அல்ல

இந்தக் கிளர்ச்சி சித்தாந்தத்தால் இயக்கப்படவில்லை. இடது அல்லது வலதுசாரி அல்ல. சாதி அல்லது வர்க்கத்தால் மட்டும் அல்ல. இது மிகவும் அடிப்படையான ஒன்றால் இயக்கப்படுகிறது: நீதிக்கான ஒரு கோரிக்கை.

மக்கள் சித்தாந்த வேறுபாடுகளை மன்னிக்க முடியும். ஆனால் தங்கள் குரலின் திருட்டை அவர்களால் மன்னிக்க முடியாது. ஒரு ஜனநாயகம் பொருளாதார நெருக்கடி, அரசியல் துருவமுனைப்பு, ஊழல் ஆகியவற்றை கூட தாங்கிக்கொள்ள முடியும் – ஆனால் தேர்தல்கள் கையாளப்படுகின்றன என்ற நம்பிக்கையால் அது பிழைக்க முடியாது. மக்கள் வாக்குச் சீட்டின் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, அவர்கள் நீதியை வேறு இடங்களில் தேடுகிறார்கள். அங்கேதான் மோடியைப் போன்ற அரசாங்கங்கள் தங்கள் மிகப்பெரிய பலவீனத்தை எதிர்கொள்கின்றன.

மோடி கதை முடிவுக்கு வரக்கூடும்.

மோடியின் கதை மூன்று தூண்களின் மீது கட்டப்பட்டது:

வெல்ல முடியாத தன்மை

நிறுவனங்களின் கட்டுப்பாடு

மக்களின் சம்மதம்

முதலாவது உடைந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது அத்துமீறுகிறது. மூன்றாவது ஆவியாகி வருகிறது. மக்கள் கிளர்ச்சி செய்யும் போது – வன்முறையாக அல்ல, ஆனால் உணர்வுபூர்வமாக – ஆட்சியாளர்கள் வீழ்ச்சியடைகிறார்கள். இந்தியா இதற்கு முன்னர் சக்திவாய்ந்த அரசாங்கங்களை கவிழ்த்துள்ளது. அது மீண்டும் அவ்வாறு செய்ய முடியும். சாதாரண குடிமக்கள் தங்கள் பயத்தை இழந்து, தங்கள் குரலைக் கண்டுபிடித்து, ஏமாற்றப்படுவதை மறுத்த தருணமாக, இந்த தருணம் சிதைவின் ஆரம்பமாக நினைவில் வைக்கப்படலாம்.

மக்கள் கட்டுக்கதையை நம்புவதை நிறுத்தும் போது, அந்தக் கட்டுக்கதை உடைகிறது. மேலும் கட்டுக்கதை உடையும்போது, ஆட்சியாளரின் கதை முடிவடைகிறது.

https://countercurrents.org/2025/11/indias-silent-uprising-how-popular-revolt-against-electoral-manipulation-could-end-the-modi-narrative/

அரசியல் ஆலோசகர் சகாப்தத்தின் வீழ்ச்சி

பிரசாந்த் கிஷோர் இறுதியாகத் தோல்வியைத் தழுவினார் (bites the dust) கொள்கை (சித்தாந்தம்) இல்லாத ஒரு சந்தர்ப்பவாதியாக, லட்சியத்தை உத்தியாகவும், அணுகலை அதிகாரமாகவும் தவறாகப் புரிந்துகொண்டு, கட்சிக்குக் கட்சி தாவி சென்றார். தன்னை ஒரு முடிசூட்டும் மன்னராக (kingmaker) அவர் கற்பனை செய்து கொண்டார். ஆனால் இறுதியில், அவர் ஒரு அரசியல் ஏழையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளார் – பணத்தால் செழித்தவர், ஆனால் மன உறுதியில் (அல்லது நிலைப்பாட்டில்) திவாலானவர். அவரது அவமானகரமான அரசியல் வீழ்ச்சி வெறும் தனிப்பட்ட ஆணவக் கதை மட்டுமல்ல; இது இந்தியாவின் அரசியலை சந்தைப்படுத்தல் நடைமுறையாக மாற்ற முயன்றதொரு மாடலின் மிகப்பெரிய சிதைவுக்கு அடையாளமாகும். மக்களாட்சியை (ஜனநாயகத்தை) ஆலோசகர்கள், ஒப்பந்தக்காரர்கள், கருத்துக் கணிப்பாளர்கள் மற்றும் பெருநிறுவனப் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களிடம் அவுட்சோர்ஸ் செய்ய முடியாது என்பதை நாடு நேரடியாகவே கண்டுள்ளது. அரசியல் என்பது தொண்டர்கள் (cadres), சமூகங்கள் மற்றும் போராட்டங்களில் வேரூன்றிய மக்கள் பணியாகும். அது அவ்வாறே இருக்கவும் வேண்டும்.

பல ஆண்டுகளாக, கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு –  தேர்தல்கள் வெறும் நிர்வாகப் பயிற்சிகள், கொள்கை என்பது ஒதுக்கி வைக்க வேண்டிய பழமையான விஷயம், அரசியல் விருப்பத்தை தரவு தளங்கள் மூலம் மாற்ற முடியும்,  கார்ப்பரேட் நிதி அமைப்பு  அத்தகைய குறைபாடுகளை ஈடுசெய்ய முடியும் - என்ற மாயையை விற்க முயன்றார். இந்த மாடலில், மக்களாட்சி  நாடகமாக மாறியது, வாக்காளர்கள் ஒரு நுகர்வோர் தளமாக மாறினர், தேர்தல்கள் ஒரு உற்பத்தி பண்டமாகின. அரசியல் மேதையாக அவர் கட்டமைத்த ஒளிவட்டம், ஒரு கட்சியின் சமூக ஆழமின்மையை ஈடுசெய்ய முடியும் என்று அவர் பலரை நம்ப வைத்தார். இது சிறிது காலம் வேலை செய்தது. பொது கோபம், ஊடக விவரிப்புகள், அல்லது ஆட்சிக்கு எதிரான மனநிலை (anti-incumbency) ஆகியவை, அவரது புத்திசாலித்தனத்தை அவர் உரிமை கோருவதற்கு சரியான சூழலை உருவாக்கியபோது இது வெற்றி பெற்றது. ஆனால் எந்த மாயையும் என்றென்றும் நீடிக்காது.

உண்மை என்னவென்றால்: ஆலோசகர்கள் சகாப்தம் முடிந்துவிட்டது. அது கிஷோரின் பயணம் முடிவடைந்த இடத்திலேயே முடிகிறது—அது மாபெரும் தோல்வியுடன், பூஜ்ஜிய இடங்களுடன், ஒரு காலத்தில் அவரை இன்றியமையாதவர் என்று புகழ்ந்தவர்களின் திடீர் மௌனத்துடன் முடிந்துவிட்டது. பீகாரில் ஏற்பட்ட தோல்வி வெறும் தேர்தல் தோல்வி மட்டுமல்ல; அது ஒரு தத்துவார்த்த தோல்வி. சித்தாந்த ஈடுபாடு இல்லாமல், மக்களுடன் இயற்கையான பிணைப்புகள் இல்லாமல், சமூகப் போராட்டங்களின் பட்டறையில் தீட்டப்பட்ட தொண்டர்கள் இல்லாத எந்தவொரு அரசியல் திட்டமும் வீழ்ச்சியடையவே செய்யும் என்பதை இது நிரூபித்தது. மக்களாட்சியை ஷாம்பு போல விற்க முடியாது, விளம்பரம் போலத் திரைக்கதை அமைக்க முடியாது, அல்லது ஒரு கார்ப்பரேட் யுத்தியை போல வடிவமைக்க முடியாது. அது வாழப்பட வேண்டும், போராடி வெல்லப்பட வேண்டும், திரட்டப்பட வேண்டும்.

கிஷோரின் ஆட்களை எனது வீட்டில் சந்தித்துப் பேச எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைக்கப்படாத அவர்கள் – மன உறுதி என்பது ஒரு பண்டம் போலவும், அரசியலை ஒரு விலைப்பட்டியல் மற்றும் பவர்பாயிண்ட் விளக்கம் மூலம் வாங்கிவிட முடியும் என்பது போன்றதொரு - சித்தாந்தத்தை "விற்க" வீட்டிற்கு வந்தனர். அவர்கள் எண்களை (பணத்தை) ஆயுதங்களாக ஏந்தி வந்தனர்.  அவர்கள் நிஜ வாழ்க்கை, வறுமை, சாதி, சமூகத் துயரம் அல்லது மக்களின் அவநம்பிக்கை ஆகியவற்றிற்குத் தொடர்பில்லாததொரு ஆலோசனை மொழியில் அடித்து பேசினார்கள். வியர்வையை (உழைப்பை) எக்செல் கணக்கீடுகள் (spreadsheets) மூலம் மாற்ற முடியும் என்று நம்புபவர்களின் ஆணவம் அவர்களிடம் இருந்தது.

அவர்களிடம் பணமும் இருந்தது. கோவாவில் டி.எம்.சி-க்காக லாபி (lobby) செய்ய ரகசியமாக பணியமர்த்தப்பட்டனர். எங்களிடம் சில்லரைத்தனமான பேரங்களில் ஈடுபட்டனர். நாங்கள் செல்வந்தர்கள் அல்ல, ஆனால் அவநம்பிக்கை கொண்டவர்களும் அல்ல. அந்த பணம் எங்கிருந்து வந்தது என அறிந்த பின்னும் அதை  ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாங்கள் நிச்சயமாக அவநம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. முற்றிலும் சில்லரைத்தனமான நடைமுறைதான் பிரசாந்த் கிஷோர் தந்திரங்களின் மையமாக இருந்தது. சில பில்லியனர்கள், அந்த திட்டத்திற்காக அமைதியாக நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் என்ன சதிசெய்யத் திட்டமிட்டார்கள் என்பது சற்றுத் தெளிவில்லாதது, ஆனால் அது நிச்சயமாக சந்தேகத்திற்குரியது. ஆலோசகரின் ரோட்ஷோ (roadshow) வெறும் அரசியல் சூழ்ச்சி மட்டுமல்ல; அது அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் முகமூடியணிந்த கார்ப்பரேட் நிதியுதவி பெற்ற சமூக சூழ்ச்சியாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவாவில், கிஷோர் தன் சொந்த ஊரிலிலிருந்தே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டவராகவே இருந்தார். அவர் 5-நட்சத்திர ஆடம்பரத்தைத் தேர்ந்தெடுத்தார்; அவரைச் சந்திக்கவும் கேள்விகள் கேட்கவும் கோரியவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். பீகாரில், அவர் தனது பாதயாத்திரையை மேற்கொண்டார் (அது கடினமானதோ அல்லது விரிவானதோ அல்ல), ஆனால் வேலையில்லாத இளைஞர்களின் கவலைகள், விவசாயிகளின் மனகுமுறல்கள், தேர்தல்களை வடிவமைக்கும் மூல பிரச்சனைகள் ஆகியவற்றிலிருந்து விலகியவராகவும் அந்நியராகவும் மக்கள் அவரைக் குறிப்பிட்டனர். அவருக்கு விருப்பமானதையே அவர் செய்தார் – ஆழ்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் ஈடுபடுவதற்குத் தேவையான ஆழமோ அல்லது சாரமோ தன்னிடம் இல்லை என்பதை உறுதியாக அறிந்து தூரத்தை தக்க வைத்துக் கொண்டார். அவரது அரசியல் பாணி, பீகார் சாலைகளின் வெப்பம், மழை மற்றும் கடினமான நிலப்பரப்பை மறுத்து, தனிமையில் இருந்து உறுதிமொழிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கும், கட்டளை மைய அரசியலாக (command centred) இருந்தது. அவரது அரசியல், அனுதாபம் இல்லாத ஆணவம், ஆன்மா இல்லாத உத்தி, தியாகம் இல்லாத லட்சியம் ஆகியவற்றின் அரசியலாகும்.

இது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு முற்றிலும் மாறாக இருந்தது – அது நேர்மை, தைரியம் ஆகியவற்றுடன் நிரம்பியிருந்தது. அது தியாகத்தின் பணிவைக் கொண்டிருந்தது. கிஷோர் அஞ்சிய புழுதி நிறைந்த சாலைகளில் அவர் நடந்தார். கிஷோர் பார்க்காத கைகளை அவர் குலுக்கினார். தோல்வியாக இருந்தாலும் கூட, ராகுலின் தோல்வி மரியாதைக்குரியதாக இருந்தது. கிஷோரின் தோல்வி அவமானகரமானது. ராகுல் நிச்சயமாக முடிவுகளை எதிர்த்துப் போராடுவார். பீகாரில், கிஷோர் போட்டியை கெடுப்பவராகவே (utter spoiler) இருந்தார், ஏனெனில் அவரது பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்தனர், இது அவர் மீதான நம்பகத்தன்மையின்மையைக் காட்டுகிறது. அவர் ஆணவமாக, "நான் ராஜ்யத்தை உருவாக்குபவனாக இருக்க மாட்டேன், ஆனால் நான் ராஜாக்களை உருவாக்குபவனாக இருப்பேன்" என்று அறிவித்திருந்தார்.

இப்போது, ​​அப்படிச் சொல்லப்பட்ட ராஜாவை உருவாக்குபவர், இலக்கு இல்லாதவர், இலக்கு இல்லாத திட்டங்கள் கொண்டவர், அரசியல் இலக்கு இல்லாதவர் என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளார். அவரது மாடல் ஆவியாகிவிட்டது. அவரது முறைகள் மதிப்பிழந்துவிட்டன. அவரது பெருமைகள் சாம்பலாகிவிட்டன. பூஜ்ஜிய இடங்கள். தெளிவான, மன்னிக்க முடியாத, எண்ணியல் தோல்வி. சித்தாந்தத்தால் செய்ய முடியாததை அவமானம் செய்தது—அது அவரது அபிலாஷைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. அவரது சுய-புராண (self-mythology) பலூனிலிருந்து இறுதியாகக் காற்று அகற்றப்பட்டுள்ளது. அவர் மீண்டு வருவாரா? அவர் மனதினை சமநிலைப் படுத்த உளவியல் மருத்துவரை அணுகலாம். அகந்தை (Ego) தன்னாலேயே தாங்க முடியாத அளவுக்கு உப்பி இருந்தது; இந்த வீழ்ச்சி கவனிக்க முடியாத அளவுக்கு சத்தமாக இருந்தது. யாராவது மாயைகளின் மீது ஏதேனுமொன்றை கட்டமைக்கும்போது, அதை அழிப்பது மட்டுமே தோல்வி அல்ல – அது மாயை அம்பலப்படுத்தப்படுவதே ஆகும்.

பிரசாந்த் கிஷோர் இப்போது இந்தியாவின் அரசியலில் ஒரு காலிடப்பா (empty vessel). இது பொருத்தமான உவமை. அவர் எப்போதும் உள்ளீடற்றவராகவே இருந்தார். அவர் ஏற்படுத்திய சத்தம் மட்டுமே அவரை நிரம்பியவர் போலக் காட்டிக் கொண்டது. அவரது வீழ்ச்சி இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: உங்களால் மன உறுதியை வாடகைக்கு வாங்க முடியாது. உங்களால் சித்தாந்தத்தை அவுட்சோர்ஸ் செய்ய முடியாது. உங்களால் அரசியல் ஆழத்தை வாடகைக்கு எடுக்க முடியாது. கார்ப்பரேட் வியாபாரிகளின் ஆதரவுடன் கட்சிக்குக் கட்சி தாவி செல்லும் லாபியிஸ்ட்கள் மூலம் நம்பகத்தன்மையை உருவாக்க முடியாது. அரசியல், மக்களிடையே வாழ்பவர்களுக்குச் சொந்தமானது – வந்து, பணம் பெற்றுக்கொண்டு, நகர்ந்து செல்பவர்களுக்கு அல்ல.

இந்தியாவுக்கு பயிற்றுவிக்கப்பட்ட தொண்டர்கள்தான் தேவை, மாறாக தேர்தல் தொகுப்புகளை விற்கும் முன்னாள் MBA-க்கள் மற்றும் IIT மாணவர்கள் அல்ல. இதற்கு இயக்கங்கள் தேவை, சந்தைப்படுத்தல் அல்ல. ஹோட்டல் லாபிகளின் வாசனையை அறிந்த ஆலோசகர்கள் அல்ல, மண்ணின் மணத்தை அறிந்த அரசியல் ஊழியர்கள் தேவை. வணிகப் பள்ளிகளின் மொழியில் பேசும், ஆனால் ஒருபோதும் பசியுள்ள விவசாயியுடன் உணவைப் பகிர்ந்து கொள்ளாத பளபளப்பான மேலாளர்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். கிஷோரின் படுதோல்வி, மக்களாட்சியின் தெளிவுக்கானதொரு தருணம். எவ்வளவு புகழப்பட்டாலும், எந்த ஆலோசகரும் அரசியலின் கடின உழைப்பை மாற்ற முடியாது என்பதை இது நினைவூட்டுகிறது. இது அதன் அடித்தளங்களைச் சிறிது காலம் மறந்ததொரு அமைப்பில், பகுத்தறிவை மீட்டெடுப்பதாகும். இது பெருநிறுவன ஆதிக்க (corporate capture) காலத்தில், அரசியல் நெறிமுறைகளுக்கான ஒரு சிறிய வெற்றி.

*பிரசாந்த் கிஷோர் ஒரு அதிர்ஷ்டத்தை (பெரும் செல்வத்தை) ஈட்டியிருக்கலாம், ஆனால் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததான நாணயத்தை - நம்பகத்தன்மையை அவர் இழந்துவிட்டார். நம்பகத்தன்மை இல்லாமல், அவர் தோற்கடிக்கப்பட்டவர் மட்டுமல்ல – அவர் மதிப்பற்றவர்.

https://countercurrents.org/2025/11/prashant-kishor-bites-the-dust-the-era-of-political-consultants-is-over/

"பீகார் 2025: திருடப்பட்ட  தேர்தலின் போஸ்ட்-மார்ட்டம்" 

2025 பீகார் சட்டமன்றத் தேர்தல், அதன் அதிக வாக்காளர் பதிவுக்காகவோ, நிர்வாகத்தின் சீருக்காகவோ, அல்லது "பீகார் முதலில்" என்ற சீர்திருத்தங்களுக்காகவோ  நினைவுகூரப்படப் போவதில்லை. மாறாக, அது இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் வீழ்ச்சியை முன்னெப்போதும் இல்லாத தெளிவுடன் வெளிப்படுத்தியதற்காக நினைவுகூரப்படும். புள்ளிவிவரங்கள் கேள்விகளை மட்டும் எழுப்பவில்லை – அவை குற்றம் சாட்டுகின்றன. செயல்முறைகள் வெறுமனே தடுமாறவில்லை – அவை துரோகம் செய்கின்றன. முடிவுகள் வெறுமனே ஆச்சரியப்படுத்தவில்லை – அவை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்ற கருத்தையே அவமதிக்கின்றன.

பீகாரில் நடந்தது விதிவிலக்கு அல்ல. இது ஒரு முன்மாதிரி. அதாவது, தேர்தல் சர்வாதிகாரம் எப்படி ஆணையைத் தயாரிக்கிறது, நிறுவனங்களைக் கையாளுகிறது, அதிகார வர்க்கத்தையும் குடிமக்களையும் தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கானதொரு மூல முன்மாதிரி ஆகும். பீகார் 2025 ஐ உடற்கூறியல் செய்வது போல ஆழ்ந்து படிக்கப்பட வேண்டும் — அதாவது, புள்ளிவிவர ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், வெளிப்படையாக ஒரு ஜனநாயகம் எவ்வாறு கொல்லப்படுகிறது என்பதன் படிப்படியான ஆய்வு இதுவாகும்.

சிறப்பு தீவிர திருத்தம் (SIR): கையாளுதல் தொடங்கிய இடம்

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) என்பது, இந்திய தேர்தல் ஆணையத்தால் உன்னிப்பான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட செயல்முறையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் உண்மையில், இந்த SIR தான் சிதைவுக்கான  தளமாக மாறியது.

இது ராகுல் காந்தியை வலியுறுத்தத் தூண்டியது: “பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது". “ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற தேர்தல்களில் எங்களால் வெற்றியை அடைய முடியவில்லை…”. “இந்த போராட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது". “காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து, ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தங்கள் முயற்சிகளை இன்னும் பயனுள்ளதாக்கும்” என்றும் அவர் கூறினார்.

சாதனை வாக்காளர் பதிவா அல்லது உருவாக்கப்பட்ட வாக்காளர் பதிவா?

67.13% வாக்காளர் பதிவை ECI, சுதந்திரத்திற்குப் பிறகு பீகாரின் அதிகபட்ச பதிவு என்று கொண்டாடியது. ஆனால், நம்பகமான பட்டியல்கள் இல்லாமல், வாக்காளர் பதிவுச் சாதனைகள் அர்த்தமற்றவை. கையாளப்பட்ட பட்டியல்களினால் ஏற்படும் வாக்காளர் பதிவு அதிகரிப்புகள், பெரும்பாலும் உயர்த்தப்பட்ட எண்ணிக்கையையோ அல்லது EVM-களுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலையோ சுட்டிக்காட்டுகின்றன.

கட்டம் கட்டமாக நடத்தப்படும் வாக்காளர் பதிவு முறையும் சந்தேகத்தை எழுப்புகிறது: 

கட்டம் 1: 65.08% 

கட்டம் 2: 68.82% 

பெண் வாக்காளர் பதிவு: 71.78% 

ஆண் வாக்காளர் பதிவு: 62.98% 

ECI அனைத்து 243 தொகுதிகளிலும் மறுதேர்தல்களே இல்லை  (zero repolls) என அறிவித்தது — இது, சாவடி கைப்பற்றல், நடைமுறைப் பிழைகள் மற்றும் நிர்வாக முரண்பாடுகளால் வரலாற்றில் குறிக்கப்பட்டதொரு மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாததொரு நடவடிக்கையாகும். பொதுவாக தேர்தலில் மறுதேர்தல்களே இல்லை என்பதானது, அற்புதமான நிர்வாகத்தையோ – அல்லது மேற்பார்வை வழிமுறைகளுடன் தவறுகளைக் கண்டறிந்து நீக்கியதையோ குறிக்கிறது. ஆனால், தேர்தல் மிகச் சரியாக நடைபெற்றிருந்தால், அங்கு மறுதேர்தல்களே என்பது  உண்மையானதல்ல.

பெண்மயமாக்கல் கதை மற்றும் லஞ்ச உண்மை

அதிகாரப்பூர்வக் கதைகள் பெண் வாக்காளர்களின் “அசாதாரண எழுச்சியை” கொண்டாடின. அதை தார்மீக வெற்றியாகவும், ஜனநாயகத்தின் பெண்மயமாக்கலாகவும், அதிகாரமளிக்கும் மைல்கல்லாகவும் சித்தரித்தன. உண்மையில், பெண்களின் வாக்காளர் பதிவு கதை சிக்கலானதொரு உண்மையை மறைக்கிறது: தோராயமாக 25 லட்சம் பெண்கள், தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, நலத்திட்ட புதுப்பித்தல் என்ற சாக்கில் நேரடிப் பணப் பரிமாற்றங்கள் மூலம் பணத்தைப் பெற்றனர். ஆனால், நேரம் முக்கியம். தேர்தல் நடத்தை விதிகள் முக்கியம். நெறிமுறைகள் முக்கியம். SIR மூலம், அவர்கள் 47 லட்சம் வாக்காளர்களைச் சேர்த்தனர், மேலும் லட்சக்கணக்கான முஸ்லிம் வாக்காளர்களை நீக்கினர்.

இந்த வழங்கல்கள் — பிரம்மாண்டமானவை, இலக்கு வைக்கப்பட்டவை, அரசியல் ரீதியாக கருவியாக்கப்பட்டவை — புதிய பணப்புழக்கங்கள், புதிய சலுகைகள் மற்றும் புதிய நிதி சலுகைகள் தடைசெய்யப்பட்ட தேர்தல் காலத்திற்குள் செய்யப்பட்டன. தேர்தலின் தார்மீக ரீதியாக உணர்வுப்பூர்வமான பகுதியில் இந்த அளவில் நிதியை விநியோகிப்பது, மனதளவில் லஞ்சமாகவும், எழுத்துப்பூர்வமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் அமைகிறது.

இது அதிகாரமளித்தல் அல்ல. இது பெண்மயமாக்கல் அல்ல. இது கருவியாக்கப்பட்ட நலத்திட்டம் (Weaponised Welfare).

வாக்குச் சாவடிகளில் வரலாற்று ரீதியாக கண்காணிப்பு, அச்சுறுத்தல், அல்லது கூர்ந்து கவனித்தலுக்கு குறைவாக உட்படுத்தப்பட்ட மக்கள் பிரிவை அரசு இலக்கு வைத்தது. பொருளாதார விரக்தியை மையப்படுத்தி பெண்களின் வாக்குகளைக் கையாளுவது அவர்களை உள்ளடக்குவதல்ல — அது சுரண்டல் ஆகும். அரசியல் வர்க்கம் பாலின ரீதியிலான பாதிப்புகளை தேர்தல் கணக்காக மாற்றியது, அவ்வாறு செய்வதன் மூலம் உண்மையான குடிமக்கள் பங்கேற்பாக இருந்திருக்க வேண்டிய ஒன்றைக் களங்கப்படுத்தியது.

தவறான நிர்வாகத்திற்கு அப்பால்: அரசியல் நோக்கம்

பீகார் 2025 முடிவுகள் சாதாரணமாக தோன்றவில்லை. அவை ஒரு தேசிய வடிவத்தைப் பிரதிபலிக்கின்றன: 

ECI-யின் நிறுவன ரீதியிலான கைப்பற்றல்.

வாக்காளர் பட்டியல்களின் அல்காரிதம் ரீதியிலான கையாளுதல்.

சாவடி, தொகுதி, மற்றும் மாவட்ட அளவில் நிர்வாக கட்டமைப்புகள்.

EVM-வாக்காளர்-சரிபார்ப்பு செயல்முறைகளில் டிஜிட்டல் வெளிப்படைத்தன்மை இல்லாமை.

துல்லியமாக திட்டமிடப்பட்ட நலத்திட்ட லஞ்சங்கள்.

புள்ளிவிவர நிகழ்தகவை மீறும் தேர்தல் நடத்தை.

நோக்கம் எளிமையானது: சட்டபூர்வமான தன்மையை உருவாக்குதல். சட்டபூர்வமான தன்மை உருவாக்கப்பட்டவுடன், அரசியல் கேள்விகள் இல்லாமல், கட்டுப்பாடுகள் இல்லாமல், ஜனநாயகப் பொறுப்புக்கூறல் ஏதுமின்றி விரைவாக அமல்படுத்துவது.

இது பீகார் பிரச்சனை அல்ல – இது மற்றுமொரு இந்திய எமர்ஜென்சி

7.42 கோடி வாக்காளர்களைக் கொண்ட ஒரு மாநிலத் தேர்தல் இவ்வளவு வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் கையாளப்பட்டால், எந்த மாநிலமும் பாதுகாப்பானது அல்ல. பீகாரில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி வெறும் நிர்வாக ரீதியானது அல்ல. தேர்தலை ஜனநாயகப்பூர்வமாக மாற்றும் மூன்று தூண்களின் வீழ்ச்சியை இது வெளிப்படுத்துகிறது: 

துல்லியமான மற்றும் தணிக்கை செய்யக்கூடிய வாக்காளர் பட்டியல்கள்.

சுதந்திரமான மற்றும் வெளிப்படையான வாக்களிப்பு செயல்முறைகள்.

வாக்காளர் பதிவு மற்றும் மக்கள் தொகைப் புள்ளிவிவரங்களுடன் பொருந்தக்கூடிய முடிவுகள்.

பீகார் இந்த மூன்று அம்சங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

ஜனநாயகத்தை மீட்டெடுத்தல்: விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கான வாதம்

இந்தியாவில் முதலில்-வருபவர்-வெற்றியாளர் (First-Past-the-Post - FPTP) முறை நீண்ட காலமாகச் சிதைவுகளைதான் உருவாக்கியுள்ளது. இப்போது சிறுபான்மை வாக்குகளை சர்வாதிகார பெரும்பான்மையாக மாற்றுமொரு கருவியாகவும் மாறியுள்ளது. இடங்களுக்குச் சமமாக இல்லாத - வாக்காளர்கள் பட்டியல்களுக்குச் சமமாக இல்லாத வாக்குகள் மற்றும் வாக்காளர் பதிவுக்குச் சமமாக இல்லாத முடிவுகள். கற்பனையின் தூர எல்லையில்கூட ஜனநாயகம் இல்லை. முடிவுகள் தர்க்கத்தை மீறுகின்றன, மறுக்கின்றன.

தேர்தல் நேர்மையை மீட்பதற்குத் திறன் கொண்ட ஒரே கட்டமைப்புச் சீர்திருத்தம், FPTP-க்கு பதிலாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை (Proportional Representation - PR) மாற்றுவது மட்டுமே. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ்: இடங்கள் வாக்களிப்புப் பங்குடன் ஒத்துப்போகும், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களின் வாக்குகள் அழிக்கப்பட முடியாது. போலியான மகத்தான வெற்றிகள் சாத்தியமற்றதாகின்றன, கையாளுதல் மூலம் உருவாக்கப்பட்ட பெரும்பான்மைகளை பெற முடியாது. PR ஆனது, மோசடியான கணக்கீட்டின் ஏகபோகத்தை உடைத்து, பிரதிநிதித்துவத்தை மீட்டெடுக்கிறது.

பீகார் ஒரு நிகழ்வு அல்ல, எச்சரிக்கை

2025 பீகார் தேர்தல் வழக்கமான அரசியலின் மூடுபனிக்குள் மறைய அனுமதிக்கப்படக்கூடாது. இது குடியரசுக்கு முந்தைய காலக்கண்ணாடி. இதில் நிறுவனங்கள் சிதைந்துபோன, ஜனநாயகம் சூதாடப்பட்ட, தேர்தல் இறையாண்மை மக்களிடமிருந்து திருடப்பட்டதொரு இந்தியாவை அது பிரதிபலிக்கிறது. வாக்குகள் அளிக்கப்படுவதற்கு முன்பே தேர்தல்கள் எப்படி வெல்லப்படுகின்றன? தரவு கையாளுதல் மற்றும் பொருளாதார நிர்பந்தம் மூலம் ஜனநாயக ஒப்புதல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? மேலும் வாக்காளரைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு அரசியல் அனுகூலத்திற்கான கருவிகளாக மாறிவிட்டன? என்பதை பீகார் தேர்தலை குறுக்கு நெடுக்காக போஸ்ட்மார்டம் செய்து ஆராயும்போது   நமக்குக் கிடைகிறது.

இந்த வீழ்ச்சியை நாம் இப்போது — அச்சமின்றி, பொதுவெளியில், கட்டமைப்பு ரீதியாக — எதிர்கொள்ளாவிட்டால், தேர்தல்கள் இருக்கும், ஆனால் ஜனநாயகம் இல்லாத ஒரு அமைப்பிற்குள் நாம் மேலும் ஆழமாக மூழ்கிவிடுவோம். பீகார் ஒரு தேர்தல் அல்ல. அது ஒரு எச்சரிக்கை. ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே உள்ளது – அது விழிப்பான சுறுசுறுப்பானதொரு சிவில் சமூகம்.

https://countercurrents.org/2025/11/bihar-2025-the-anatomy-of-a-stolen-election/

பீகார் 2025: பாஜக-வின் பலவீனத்தை ஒப்புக்கொள்ளும் வெற்றி

2025 பீகார் சட்டமன்றத் தேர்தல், ஜனநாயகத்தின் வெற்றியாக அல்லாமல், நவீன இந்திய அரசியலின் அரசியல்ரீதியாகத் தன்னைத்தானே அழித்துக்கொண்ட "வெற்றிகளில்" ஒன்றாக இந்திய வரலாற்றில் இடம்பிடிக்கும். ஆட்சிக்கெதிரான மனநிலை ஆழமாக வேரூன்றியிருந்த ஒரு மாநிலத்தின் பதவியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில், ஆளும் பாஜக ஒருவித அரசியல் தற்கொலையைச் செய்த தருணமாக இது நினைவுகூரப்படும்; இது எண்களில் வென்றாலும், எதிர்காலத்தில் வெற்றிபெறுவதற்குத் தேவையான நம்பகத்தன்மைக்கு சமாதிகட்டும் வேலைகளில் இறங்கியுள்ளது.

முடிவானது அசாதாரணமானது: பல ஆண்டுகளாகப் பொதுமக்களின் கோபம் கொதித்தெழுந்த ஒரு மாநிலத்தில், பாஜக-ஜேடியு கூட்டணிக்கு கிட்டத்தட்ட 90% வெற்றி விகிதம் கிடைத்தது. இருப்பினும், இந்த அசாதாரண நிலை உடனடியாக நம்பமுடியாத ஒன்றாக மாறியது. வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியதிலிருந்து, பீகாரின் முடிவானது தேர்தல் தீர்ப்பைப் போலத் தெரியாமல் — மிகவும் துல்லியமான, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் இயற்கையாக நடந்திருக்க முடியாத அளவிற்கு ஒரு கணித முரண்பாட்டைப் போலத் தோன்றியது. அதனால்தான் 2025 பீகார் தேர்தல், பாஜக-வின் ஆதிக்கத்தை நிரூபிப்பதற்குப் பதிலாக, விசித்திரமாக மாறியுள்ளது: ஒரு மாபெரும் வெற்றிதான், ஆனால் அது சந்தேகத்திற்கிடமின்றி பலவீனத்தை ஒப்புக்கொள்வதைப் போல் தெரிகிறது.

ஆபத்து: பீகார் ஏன் பாஜக-வை அச்சுறுத்தியது

பீகார் ஒரு மிக முக்கியமான தேர்தல் என்பதைப் புரிந்துகொள்ளக் குறிப்புகள் தேவையில்லை. அதை ஆளும் கட்சி அவற்றை நாடகமாக மாற்றியது. மிகவும் வெளிப்படையானது என்னவென்றால், தேர்தலுக்கு சற்றுமுன் பல நாட்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பாட்னாவில் தங்கியிருந்ததுதான். கடந்த காலங்களில் இந்திய உள்துறை அமைச்சர்கள் மாநிலத் தேர்தல்களின்போது மாநிலத் தலைநகரங்களில் இதுபோன்று தங்கியதில்லை. அவர் தங்கியிருந்த மற்றும் கூட்டங்கள் நடத்திய இடங்களில் இருந்த சிசிடிவிக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இதை காங்கிரஸ் ஊடகங்களுக்குக் கோடிட்டுக் காட்டியபோது, இது இன்னும் மோசமான நிலையை எடுத்தது.

ஷாவின் இந்த இருப்பு மிகவும் தெளிவான சமிக்ஞையாக இருந்தது, அதை விளக்க வேண்டிய அவசியமே இல்லை: பீகாரில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியாதது, எந்தவிலை கொடுத்தாவது வெல்ல வேண்டும். இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை: பீகார் முக்கியமான இந்தி மொழி பேசும் மாநிலமாகும்; "இந்து ஹிருதய சாம்ராட்" என்ற பாஜக-வின் தேசியக் கதையையும், தாங்கள்தான் இந்துக்களின் ஒரே பாதுகாவலர்கள் என்ற பிம்பத்தையும் நிலைநிறுத்துவதற்கு இது இன்றியமையாதது. நிதிஷ் குமாரின் கீழ் இருந்த ஜேடியு, சோர்வடைந்து சிதைந்து கொண்டிருந்தது; என்.டி.ஏ. வின் தோல்வி தேசிய அளவில் அவரது எஞ்சிய அரசியல் பயணத்தை முற்றிலும் தகர்த்திருக்கும்.

குறிப்பிடத்தக்க ஆட்சி எதிர்ப்பு அலை இருந்தும் பீகாரில் தோல்வியானது, 2029 தேர்தலை நோக்கிய எதிர்க்கட்சிக்கு உளவியல் ரீதியான பாதிப்பை உருவாக்கியிருக்கும். பீகாரைத் தக்கவைப்பது ஒரு உத்தி மட்டுமல்ல, அது முற்றிலும் அரசியல்ரீதியான வாழ்வா சாவா போராட்டத்தைப் பற்றியது. அந்த மனப்பான்மையே இந்தத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் நடந்த அனைத்தையும் வடிவமைத்தது.

தேர்தலுக்கு முந்தைய "தயாரிப்பு": SIR மற்றும் வாக்காளர் பட்டியலை திருத்தியமைத்தல்

வாக்குப்பதிவுக்கு சில மாதங்களுக்கு முன்பே, 2025 ஜூன் மாதத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision - SIR) போர்க்களத்தை மறுவடிவமைக்கத் தொடங்கியது. SIR-கள் அசாதாரணமானவை அல்ல, ஆனால் இதனுடைய அளவு, தாக்கம், நேரம் ஆகியவை உடனடியாக அபாய எச்சரிக்கைகளை எழுப்பின. இந்த SIR, ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன; அத்தியாவசியத் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலையிட வேண்டியிருந்தது—ஏனெனில், படிக்க முடியாத தன்மை, செயல்பாட்டுத் தாமதங்கள், மற்றும் வேடிக்கையான குழப்பங்களின் மூலம் தேர்தல் ஆணையம் அந்தத் தரவுகளை வேண்டுமென்றே அணுக முடியாததாக ஆக்கியிருந்தது.

எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகக் குழுக்களும் புறக்கணிக்க முடியாதவற்றை பதிவு செய்தன:

தொகுதிகள் முழுவதும் மொத்தமாக நீக்கங்கள், குறிப்பாக தொடர்ச்சியாக NDA-க்கு எதிராக வாக்களித்தவற்றில் இது அதிகமாக இருந்தது

பாஜக-ஜேடியு கூட்டணி வலுவாக இருந்த தொகுதிகளில் திடீர் சேர்த்தல்கள்

வாக்காளர்களின் விவரிக்க முடியாத மறு வகைப்பாடு மற்றும் வாக்குச் சாவடி ஒதுக்கீடுகளில் மாற்றங்கள்

உயிருடன் இருப்பவர்களை இறந்த வாக்காளர்களாக அறிவித்தல், மற்றும் இதற்கு நேர்மாறாக, இறந்தவர்கள் வாக்காளர்களாக ஏட்டில் இருப்பது

முழு குடும்பங்களிலும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் மட்டுமே அல்லது யாருமே பட்டியலில் இல்லை என்று கண்டுபிடித்தல்

இவை சாதாரண பிழைகள் அல்ல. அவை தெளிவாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை சார்ந்த திரிபுகளாகும். தேர்தல் ஆணையம் இந்த செயல்முறை வழக்கமானது என்று வலியுறுத்தியது, இதை நியாயப்படுத்த, 'ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை' என பாஜக வின் குரலில் பேசியது. இருப்பினும், விமர்சகர்கள் SIR 2025 ஆனது ஆட்சிக்கு எதிரான வாக்காளர் தளத்தை முன்கூட்டியே அழிப்பது மற்றும் எதிர்காலக் கண்டறிதலைத் தடுக்கும் வகையில் தரவுகளைக் குலைப்பதாகும் என்று வாதிட்டனர்.

வேண்டுமென்றே செய்யப்பட்டதோ இல்லையோ, SIR-இன் விளைவுகள் மறுக்க முடியாதவை: எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே அதன் வாக்காளர் தளம் குறைக்கப்பட்ட நிலையிலும், அதைத் தொடர்ந்த குழப்பத்துடனுமே அவை தேர்தலை எதிர்கொண்டன.

ஏட்டில் பார்வையாளர்கள், உண்மையில் அரசியல் செயல்பாட்டாளர்களா?

தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளில் குறிப்பிடத்தக்க விகிதத்தினர் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வந்தனர். இந்தியா முழுவதும் இருந்து பார்வையாளர்களை நியமிக்க இந்திய அரசுக்கு உரிமை உள்ளது, ஆனால் இந்த நியமனங்களின் ஒருதலைப்பட்சத்தன்மை சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது. நவம்பர் 3 தேதியிட்ட 'ஸ்க்ரோல்' கட்டுரையின்படி, 243 ஐஏஎஸ் அதிகாரிகள் பீகாருக்கு அனுப்பப்பட்டனர்; இந்த அதிகாரிகளில் பதினான்கு பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மொத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் சதவிகிதம் 57% மட்டுமே. இருந்தபோதிலும் மொத்த பொதுப் பார்வையாளர்களில் 68% ஈடுபட்டுள்ளனர்.

பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மகத்தான அதிகாரத்தைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைகளை அணுகுவது, வாக்கு எண்ணிக்கைத் தகராறுகளைத் தீர்ப்பது போன்றவற்றைச் செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், அரசியல் சார்புக்கான தோற்றம் கூட பொது நம்பிக்கையைச் சிதைக்கிறது, இந்தத் தேர்தலில், அந்தத் தோற்றமே மையக் கதையாக மாறியது.

பாஜக ஆளும் மாநிலங்களின் காவல்துறைப் பிரிவுகள்

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படைகள் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து மட்டுமே பெறப்பட்டன. ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற எல்லை மாநிலங்கள் —வழமையாகப் பங்களிப்பவை— முழுவதுமாக விலக்கப்பட்டன.

அரசியல் சார்புடைய மாநிலங்களிலிருந்து படைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது, வடிவமைக்கப்பட்ட தேர்தல் என்ற கருத்தை ஆழப்படுத்தியது. தேர்தலின் நம்பகத்தன்மை சட்டபூர்வமான தன்மையை மட்டுமல்ல, நிறுவனரீதியான நடுநிலைமையையும் சார்ந்துள்ளது, அது வெளிப்படையாக இல்லை. சமமான போட்டிச் சூழல் என்பதற்கு எந்தத் தோற்றமும் இல்லை.

தேர்தல் நாள்: புறக்கணிக்க முடியாத பல முரண்பாடுகள்

வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியவுடன், முரண்பாடுகளையும் வடிவங்களையும் வெறும் தற்செயல் நிகழ்வாக நிராகரிப்பது சாத்தியமற்றதாக மாறியது. எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கான ஆரம்ப முன்னிலைகள் தலைகீழாக மாறி மறைந்து போயின. நெருக்கமான போட்டி நிலவிய் தொகுதிகளில் அஞ்சல் வாக்குச் சீட்டு நிராகரிப்புகள் அதிகரித்தன, கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இருந்தன. படிவம் 20 தரவு தாமதமாக அல்லது முழுமையற்றதாகத் தோன்றியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) செயலிழப்புகளும் எதிர்க்கட்சிக்குச் சார்பான சாவடிகளில் மட்டும் நிலவியது. இறுதி வித்தியாசங்கள் நிகழ்தகவு கணிதம் போல அமைந்தது.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிர்வாக ரீதியான விளக்கம் அளிக்கப்படலாம், ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்து, கைதேர்ந்த திரைக்கதையைப் போல இருந்தன. ஆய்வாளர்கள், முற்றிலும் மாறுபட்ட மக்கள் மற்றும் அரசியல் சார்புகள் இருந்தபோதிலும், மாவட்டங்கள் முழுவதும் வாக்கு மாற்றங்கள் ஒரே மாதிரியாக நகர்ந்துள்ளதை கண்டறிந்தனர். இது தேர்தலைப் போல செயல்படவில்லை, மாறாக கட்டுப்படுத்தப்பட்ட செயல்முறையைப் போல செயல்பட்டது.

ஜனநாயக பாதுகாப்பின்மையைக் காட்டும் வெற்றி

இங்கிருந்துதான் அரசியல் விசித்திரம் முழுமையாகத் தெரியவருகிறது. பாஜக மற்றும் ஜேடியு மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றன. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கான வழிகள், அவர்கள் ஆரம்பத்திலிருந்தே தங்கள் பக்கம் இல்லாததொரு இயல்பான ஜனநாயக முடிவைக் கண்டு அஞ்சினர் என்பதைக் குறிக்கிறது.

பின்வரும் கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

ஆட்சி எதிர்ப்பு அலையில் மூழ்கியதொரு மாநிலம்.

தேர்தல் நடைபெறுவதற்கு சற்று முன்பு தீவிரமாகத் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்.

பெரும்பான்மையாக பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து, சந்தேகத்திற்குரிய - தேர்ந்தெடுத்த பாணியில் பயன்படுத்தப்பட்ட காவல்துறைப் பிரிவுகள்.

உள்துறை அமைச்சர் சதி நோக்குடன் (சிசிடிவிக்கள் மொத்தமாக மூடப்பட்டன) மாநிலத் தலைநகரில் முகாமிட்டிருந்தது.

இறுதியாக, புள்ளிவிவரப்படி நம்பமுடியாததொரு வாக்கு எண்ணிக்கை.

ஆளும் கூட்டணி உண்மையிலேயே மக்களைத் தங்களுடன் வைத்திருந்தால், இவை எதுவும் தேவைப்பட்டிருக்காது. அவர்களின் செயல்கள் அவர்களின் மனநிலையைக் காட்டிக் கொடுக்கின்றன —அவர்கள் வாக்காளர்களை நம்பவில்லை. இங்கிருந்துதான் பாஜக-வின் அவநம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது. பொதுமக்களின் நம்பிக்கை இல்லாமல் பெறப்பட்ட வெற்றி ஒரு கட்சியை வலுப்படுத்தாது; அது அதைக் கொடிய விதத்தில் பலவீனப்படுத்துகிறது.

தவறவிட்ட மகத்தான நகர்வு: பாஜக ஏன் தன்னைத் தோற்க அனுமதித்திருக்க வேண்டும்

இங்கே ஒரு வியத்தகு மூலோபாய முரண் உள்ளது, இது வரவிருக்கும் பல ஆண்டுகளுக்குத் தேசிய அரசியலை வடிவமைக்கலாம். கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக, பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) முறைகேடு, தேர்தல் மோசடி மற்றும் நிர்வாகக் கைப்பற்றல் போன்ற குற்றச்சாட்டுகளை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராடி வருகிறது. அவர்கள் ஒரு மாநிலத்தில் தோற்ற ஒவ்வொரு முறையும், "நாங்கள் அமைப்பைக் கட்டுப்படுத்துவது உண்மையென்றால், நாங்கள் எவ்வாறு தோல்வியடைந்தோம்?" என்று வாதிட்டார்கள். பீகார் அவர்களுக்கு இந்த வாதத்தைத் தொடர ஒரு பொன்னான வாய்ப்பை அளித்தது.

எனவே, பீகாரில் பாஜக-வுக்கு ஒரு நியாயமான, தர்க்கரீதியான தேர்தல் தோல்வியானது பின்வருவனவற்றைச் செய்திருக்க முடியும்:

பல ஆண்டுகால விமர்சனங்களை போக்குதல்

நிறுவனரீதியான நடுநிலைமையை நிரூபித்தல்

அவர்கள் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுத்தல் மற்றும் வலுப்படுத்துதல்

முறையான மோசடி மற்றும் ரகசிய சூழ்ச்சி குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து பாஜக-வைப் பாதுகாத்தல்

நிதிஷ் குமாரின் செல்வாக்கின்மையைக் குறை கூறுதல்

மாறாக, அவர்கள் மிகவும் செயற்கையாகவும், முன்னரே வடிவமைக்கப்பட்டதாகவும் தோற்றமளிக்கும் முடிவை வழங்கினர். இது பல ஆண்டுகளாக அவர்கள் முறியடிக்க முயன்ற அதே குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது. ஒரு முக்கிய மாநிலத் தேர்தலில் தோற்பதால் ஏற்படும் குறுகிய கால சங்கடத்தைத் தவிர்க்கும் முயற்சியில், பாஜக அதன் மிகப் பெரிய மூலோபாய சொத்தான —அதன் தேர்தல் வெற்றிகளின் நம்பகத்தன்மைக்கு— நீண்ட கால சேதத்தை விளைவித்துள்ளது.

*எதிர்கால வெற்றிகளும் இப்போது சந்தேகக் குறியுடனேயே வரும். எதிர்காலத் தோல்விகள்கூட இனி விமர்சகர்களை அமைதிப்படுத்தாது. இதன் விளைவாக, இனி ஒவ்வொரு தேர்தலும் வாக்குச் சீட்டுக்குச் சீட்டு எனப் போட்டியிடப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராகப் போட்டியிடப்படும். பீகாரில் பாஜக-வின் வெற்றி, அதன் வெற்றிகளின் சட்டபூர்வமான தன்மையை எல்லா இடங்களிலும் பலவீனப்படுத்தியுள்ளது.

வெற்றி உரை: மறைந்திருக்கும் கொண்டாட்டம்

இது பொதுமக்களின் அங்கீகாரத்தின் வெற்றி என்று பாஜக தலைமை நம்பியிருந்தால், வெற்றி உரை அதைப் பிரதிபலித்திருக்கும். அதற்குப் பதிலாக, அந்த உரை கிட்டத்தட்ட வெறித்தனமாக காங்கிரஸின் தோல்வியில் கவனம் செலுத்தியது, உண்மையில் பீகாரில் காங்கிரஸ் முதன்மை சவாலாக இல்லை.

உரையின் அம்சங்கள் மூலோபாய ரீதியானது:

பீகாரின் எண்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்தல் (ஏனெனில் அவை பல கேள்விகளை எழுப்புகின்றன).

ஆட்சியின் மூலம் வெற்றியைப் பெற்றதாகக் கூறுவதைத் தவிர்த்தல் (ஏனெனில் அதை யாரும் நம்ப மாட்டார்கள்).

தேசிய அரசியலுக்கு கவனத்தைத் திருப்புதல், அங்கு சித்தாந்தப் போராட்டங்கள் நிர்வாகத் தோல்விகளை மறைக்கின்றன.

அந்த உரை சொல்லாதது மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வாகும். அது அரசாங்கத்தின் சாதனைகளைக் கொண்டாடவில்லை. அது பீகார் மக்களுக்கு அவர்களின் அபரிமிதமான ஆணைக்காக நன்றி தெரிவிக்கவில்லை. அது புதுப்பிக்கப்பட்ட வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

அது நம்பிக்கையின் உரையாக இல்லாமல், பாதுகாப்பின்மையின் உரையாக இருந்தது. தெளிவாக, அது எண்களும் முரண்பாடுகளும் உருவாக்கிய வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்டதொரு உரையாகும்.

நீண்ட கால விளைவுகள்: எதிரில் மிகப்பெரிய சரிவு

பாஜக 2025-ல் பீகாரை வென்றிருக்கலாம், ஆனால் அவர்கள் பல வழிகளில் தங்கள் நீண்ட கால அரசியல் நிலையை பலவீனப்படுத்தியுள்ளனர்.

நம்பகத்தன்மை சிதைக்கப்பட்டது

ஒவ்வொரு எதிர்காலத் தேர்தலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும். வெற்றிகள்  கேள்விக்குள்ளாக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் இப்போது வலிமையான காரணத்தைக் கொண்டுள்ளன. பீகார், அதற்கு முதன்மை சான்றாகிறது.

பீகார் 2025 பாஜகவின் வலிமையைக் குறிக்காமல் பலவீனத்தைக் குறிக்கிறது. அவர்கள் நேர்மையான போட்டியையும் மக்களின் உண்மையான தீர்ப்பையும் கண்டு அஞ்சினர்.

2029-க்கான தங்கள் அத்தியாவசிய வாதத்தை பாஜக கைவிட்டுவிட்டது. அதற்குப் பதிலாக, அவர்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை நம்புவதற்கு எளிதாக்கிவிட்டனர்.

இதனால்தான் 2025 பீகார் வெற்றி, பாஜகவின் அரசியல் தற்கொலையாகும் என்று எவரொருவர் தெளிவாகக் கூறலாம். இது ஒரு குறுகிய கால வெற்றியாகும், இது அவர்களுக்கு நீண்ட கால சட்டபூர்வமான தன்மையை இழக்கச் செய்யலாம்.

முடிவுரை: நம்புவதற்கு மிகவும் பரிபூரணமான ஒரு வெற்றி

2025 பீகார் தேர்தல் அரசியல் ஆதிக்கத்தின் கதை அல்ல, மாறாக அரசியல் பாதுகாப்பின்மையின் கதை. சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) முதல் பார்வையாளர்கள் பயன்படுத்தப்பட்டது வரை, அமித் ஷாவின் பாட்னாவில் நீண்டகால இருப்பு முதல் நம்ப முடியாத இறுதிக் கணக்கு வரை, இவை அனைத்தும் ஒரு ஜனநாயகத் தீர்ப்பைத் தவிர்க்க ஆளும் கட்சி அவசரமாக முயற்சித்ததைக் காட்டுகின்றன.

பாஜக பீகாரில் சட்டமன்றத்தைக் கைப்பற்றியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்ததன் மூலம், அது அதன் மீதான நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தியுள்ளது, அதன் விமர்சகர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளித்துள்ளது, மேலும் தேர்தல் ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருக்கும் வாக்காளர்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. வரலாற்றாசிரியர்கள் ஒருநாள் இந்தத் தேர்தலை ஒரு திருப்புமுனையாக விவரிக்கலாம்: பாஜக அதன் மீதான நம்பிக்கைக்கும், அரசியல் வாழ்வுக்கும் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட சிதைவின் ஆரம்பம்.

இந்த சாகச வெற்றி  அவர்களின் எதிர்கால சரிவிற்கு கொடுக்கப்பட்ட விலையாகும்.

https://countercurrents.org/2025/11/bihar-2025-the-landslide-that-bolstered-bjps-weakness/

பீகார் 2025: வாக்காளர் நீக்கங்களும் ஜனநாயக ஒழித்துக்கட்டலும்

2025ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்தியாவின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), 243 இடங்களில் 202 இடங்களைப் பெற்றுப் பெரும் வெற்றி ஈட்டியது. வெளிப்படையாகப் பார்க்கும்போது, இது ஒரு அரசியல் வெற்றி. ஆனால், சற்று ஆழமாகப் பார்க்கையில் கவலைக்குரிய போக்கொன்று வெளிப்படுகிறது: சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) என்ற பெயரில் நடந்த வாக்காளர் நீக்க நடவடிக்கைகள் முக்கியமான தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகத் தெரிகிறது. இது இந்தியாவின் ஜனநாயகம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

SIR என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியல்களைத் சீர்செய்வதற்காக – அதாவது, இரட்டை பதிவுகள், இறந்த வாக்காளர்கள் மற்றும் இடமாறியவர்களை நீக்குவதற்காக – வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்டது. எழுதப்பட்ட விதிகளின்படி, இது ஒரு வழக்கமான, ஏன், அவசியமான நடவடிக்கைகூட. இருப்பினும், பீகாரின் சூழலில், இந்த நீக்கங்களின் காலமும், அளவும் கடுமையான எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது.

தி குயிண்ட் (The Quint) நடத்திய விசாரணையின்படி, 174 சட்டமன்றத் தொகுதிகளில், SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வெற்றியாளர்களின் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாக இருந்தது. 2020 மற்றும் 2025-க்கு இடையே பார்க்கையில், கைமாறிய 91 தொகுதிகளில் 75 இடங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்றன. இவை மிக சிறிய வாக்கு வித்தியாசமுள்ள தொகுதிகள் மட்டுல்ல; ஒப்பீட்டளவில் சொற்ப அளவிலான வாக்காளர் நீக்கம்கூட முடிவைத் தலைகீழாக மாற்றக்கூடிய போர்க்களங்கள் அவை.

எதிர்க்கட்சிகளின் கோட்டைகளில் ஒருசார்பான தாக்குதல்

குறிப்பிட்ட தொகுதிகளில் இது எவ்வாறு செயல்பட்டது? தி குயிண்ட் சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டுகிறது:

குர்ஹனி (முசாபர்பூர்) தொகுதியில், பாஜக 9,718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அதேசமயம் SIR-ன் கீழ் 24,000க்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.

சந்தேஷ் (போஜ்பூர்) தொகுதியில், ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு தொகுதியைக் கைப்பற்றியது; ஆனால் அங்கே 25,682 நீக்கங்கள் நடந்திருந்தன.

மாறாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) வெற்றி பெற்ற மத்திஹானி (பெகுசராய்) தொகுதியில், RJD-யின் வெற்றி வித்தியாசம் 5,290 வாக்குகளாக இருந்தாலும், சுமார் 33,700 நீக்கங்கள் பதிவாகியிருந்தன.

இந்த உதாரணங்கள் ஒரு போக்கைக் குறிக்கின்றன: SIR நடவடிக்கை எதிர்க்கட்சிகள் - குறிப்பாக RJD மற்றும் காங்கிரஸின் மகாகத்பந்தன்  (MGB) - வலுவான தளத்தைக் கொண்டிருந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை ஒருசார்பாக நீக்கியுள்ளது.

நீக்கத்தின் அளவு: ஓர் அரசியல் சுத்திகரிப்பா?

நீக்கங்களின் அளவு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. SIR செயல்பாட்டின்போது சுமார் 65 இலட்சம் (6.5 மில்லியன்) பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. படிவம் 6 (தகுதியுள்ள வாக்காளர்களுக்கானது) மூலம் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் முந்தைய அளவானன 7.89 கோடியிலிருந்து தோராயமாக 7.42 கோடியாக (74.2 மில்லியன்) நின்றது.

இந்த எண்ணிக்கைகளைத் தாண்டி, நீக்கங்களின் புவியியல் அமைப்பே மிகவும் கவலை அளிக்கிறது. அறிக்கைகளின்படி, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியும், எதிர்க்கட்சிகளின் பாரம்பரிய கோட்டையுமான சீமாஞ்சல் பிராந்தியம், கிட்டத்தட்ட 7.7% என்ற மிக உயர்ந்த நீக்கல் விகிதத்தைக் கண்டது. இதற்கு நேர்மாறாக, வாக்காளர் சேர்த்தல்கள் மிக அதிகமாக இருந்த பகுதிகளில் மகத் (நிதிஷ் குமாரின் கோட்டையான பாட்னாவை உள்ளடக்கியது) இருந்தது. இத்தகைய ஒருசார்பான நிலை, துல்லிய வாக்குரிமை பறிப்பு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

தன்னிச்சையான, அரசியல் நோக்கம் கொண்ட நீக்கங்கள்

எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகமும் இந்த நீக்கங்களை இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகள் SIR வாக்காளர் நீக்கங்களால் மட்டுமே அமைந்தது என்று காங்கிரஸின் கேரளப் பிரிவு குற்றம் சாட்டியது. உண்மையான, வாழும் வாக்காளர்கள் – குறிப்பாக விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் – முறையான சரிபார்ப்பு இல்லாமல் நீக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் வாதிட்டனர். கவலையை அதிகப்படுத்த: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) வெளியிடப்பட்ட தரவுத்தொகுப்பில், வெளிநாட்டவர்களை நீக்கும் கருவியாக SIR முன்வைக்கப்பட்டபோதிலும், சட்டவிரோதக் குடியேறிய ஒருவர் கூட அடையாளம் காணப்படவில்லை.

இது குடிமைத் தூய்மைப்படுத்தல் போலத் தெரியவில்லை, மாறாக ஒட்டுமொத்த சுத்திகரிப்பு போலத் தெரிகிறது — எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்களிக்கும் தாக்கத்தைக் குறைப்பதற்காகத் தேர்தலுக்கு சற்றுமுன் தந்திரமாக செய்யப்பட்ட ஒன்று.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தற்காப்பும் ஜனநாயகத்தின் இக்கட்டான நிலையும்

எதிர்பார்த்தபடி, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) SIR நடவடிக்கையைத் தற்காத்து, இந்த நீக்கங்களை “வழக்கமான மற்றும் நடைமுறை சார்ந்தவை” என்று அழைத்துள்ளது. வாக்காளர் பட்டியல்களின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும், நகல் மற்றும் தகுதியற்ற பதிவுகளை நீக்குவதற்கும், செல்லுபடியாகும் தற்போதைய வாக்காளர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்தத் திருத்தம் அவசியம் என்று அது வாதிடுகிறது.

தி குயிண்ட் குறிப்பிடுவது போல, நீக்கம் மட்டுமே மோசடியை நிரூபிக்காது. பல எச்சரிக்கைகள் பொருந்தும்:

நீக்கப்பட்டவர்களில் சிலர் நகல் பதிவுகளாகவோ அல்லது செயலற்றவர்களாகவோ (இடமாறியவர்கள் அல்லது இறந்தவர்கள்) இருக்கலாம்.

நீக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் 2020இல் வாக்களித்தார்களா, அல்லது முந்தைய போட்டிகளில் கணக்கிடப்பட்டார்களா என்பதை வெளியிடப்பட்ட தரவு உறுதிப்படுத்தவில்லை.

தேர்தல் முடிவுகள் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன: வேட்பாளர் தேர்வு, சாதி அரசியல், கூட்டணி சமன்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு — வெறும் வாக்காளர்களின் எண்ணிக்கையால் மட்டுமல்ல.

இருப்பினும், இந்தத் தற்காப்புகள் நடைமுறை ரீதியாக நியாயமானதாகத் தோன்றினாலும், நீக்கங்களின் அளவும், முறையும் பக்கச்சார்பற்ற தன்மையைக் குலைக்கின்றன. நூற்றுக்கணக்கான தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை விட நீக்கங்கள் அதிகமாக இருக்கும்போது, வழக்கமான நடவடிக்கைகள்கூட ஆழமான அரசியல் சாயத்தைப் பெறுகின்றன.

இந்திய ஜனநாயகத்திற்கு இது ஏன் முக்கியமானது

இந்தக் கவலையின் மையம் எளிமையானது, ஆனால் ஆழமானது: வாக்காளர் பட்டியல்கள் மாறுபட்ட கருத்துடைய வாக்காளர்களை நீக்குவதற்காக வடிவமைக்கப்பட முடிந்தால், ஜனநாயகம் வெற்றுத்தன்மை அடையும்.

வாக்குரிமை பறிப்பு: வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் குடிமக்கள் வாக்களிக்கும் மிக அடிப்படயான ஜனநாயக உரிமையை இழக்கிறார்கள். இது எதிர்க்கட்சிகளைச் சார்ந்திருக்கும் பகுதிகளில் சமநிலையற்று நடந்தால், அது நியாயமான பிரதிநிதித்துவத்தைச் சிதைக்கிறது.

நம்பிக்கை குறைவு: பெரிய அளவிலான நீக்கங்கள் முக்கிய தேர்தல்களுக்கு முன்னதாக நடக்கும்போது, அது ஐயப்பாட்டிற்கு வழிவகுக்கிறது. மக்கள் கட்சிகளை மட்டுமல்ல, தேர்தல் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்காக ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்களையே நம்புவதை நிறுத்தத் துவங்குகிறார்கள்.

துஷ்பிரயோகத்திற்கான முன்மாதிரி: SIR பீகாரில் ஆயுதமாகப் பயன்படுத்த முடிந்தால், மற்ற மாநிலங்களில் அது நகலெடுக்கப்படுவதை எது தடுக்கும்? இது திருத்தம் என்ற போர்வையின் கீழ் வாக்காளர் பட்டியல்களைத் திட்டமிட்டு மோசடி செய்வதற்கானதொரு முன்மாதிரியாக மாறக்கூடும்.

அதிகார சமத்துவமின்மை: வாக்காளர் பட்டியல் மோசடி விளிம்புநிலை சமூகங்களைப் பாதிக்கின்றது. வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய மற்றும் சிறுபான்மைக் குழுக்களுக்கு இத்தகைய நீக்கங்களை எதிர்த்துப் போராட அமைப்புத் திறன் இல்லாமல் போகலாம்.

"ஜனநாயகம் நீக்கப்படுகிறதா"?

பீகாரில் நடந்ததை முழுமையான “ஜனநாயகத் திருட்டு” என்று அழைப்பது முன்கூட்டிய முடிவாக இருக்கலாம் — ஆனால் அது ஏற்படுத்தும் கட்டமைப்பு அச்சுறுத்தலை நிராகரிக்க முடியாது. SIR நடவடிக்கை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும், சங்கடமான கேள்விகளை எழுப்புகிறது:

இது உண்மையில் நிர்வாக நடவடிக்கையா, அல்லது அரசியல் தந்திரமா?

தன்னிச்சையான நீக்கங்களைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் போதுமான பாதுகாப்புகளைச் செயல்படுத்தியதா?

நீக்கப்பட்டவர்கள் எளிதில் முறையிட்டு மீண்டும் பதிவு செய்யக்கூடிய வழிமுறைகள் கிடைக்கின்றனவா (அல்லது பயன்படுத்தப்படுகிறதா)?

சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இதை தனிப்பட்ட சர்ச்சையாகக் கருதுமா — அல்லது ஆழமான ஜனநாயகச் சிதைவின் எச்சரிக்கை அறிகுறியாகக் கருதுமா?

முன்னோக்கிய பாதை: பாதுகாப்புகளும் சீர்திருத்தங்களும்

இந்தியாவின் ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாக்க, பின்வரும் சீர்திருத்தங்கள் தீவிரமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்:

SIR தரவுகளில் வெளிப்படைத்தன்மை: இந்தியத் தேர்தல் ஆணையம் பூத் வாரியான, நுண்ணிய நீக்கத் தரவை, மக்கள்தொகையியல் விவரங்களுடன் அட்டவணைப்படுத்தப்பட்ட நிலையில் வெளியிட வேண்டும். இதன் மூலம் இந்தச் செயல்முறை சமச்சீரானதாக இருந்ததா என்பதைச் சிவில் சமூகம் தணிக்கை செய்து சரிபார்க்க முடியும்.

சுதந்திரமான மேற்பார்வை: ஒரு சுயாதீன அமைப்பு – நீதித்துறை அல்லது சிவில் சமூக ஆணையம் – எதிர்கால வாக்காளர் பட்டியல் திருத்தங்களை மேற்பார்வையிட வேண்டும், குறிப்பாக அவை தேர்தல்களுக்கு அருகில் செய்யப்பட்டால்.

எளிதான மறு பதிவு: நீக்கப்பட்டவர்கள் நெறிப்படுத்தப்பட்ட, அணுகக்கூடிய வழிமுறை மூலம் மீண்டும் விண்ணப்பிக்க முடிய வேண்டும். தடைகள் (அலுவலக ரீதியான அல்லது நிதி ரீதியான) குறைக்கப்பட வேண்டும்.

சட்டப்பூர்வ தீர்வு: தவறாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் தேர்தல் தீர்ப்பாயங்கள் அல்லது நீதிமன்றங்களில் முடிவுகளை எதிர்த்து, சரியான நேரத்தில் நிவாரணம் பெறக்கூடிய வகையில் சட்டக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

பொது விழிப்புணர்வும் அணிதிரட்டலும்: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வாக்களிப்பது எப்படி என்பதை மட்டும் கூறாமல் — பட்டியலில் ஒருவரின் பெயரைப் பாதுகாப்பது எப்படி என்பதையும் கற்பிக்க வேண்டும். சாளரம் இல்லாத உதவி மையங்கள், சட்ட உதவி மற்றும் கட்டணமில்லா ஆதரவு ஆகியவை முக்கியமானதாக இருக்க முடியும்.

முடிவுரை

2025 பீகார் தேர்தல்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த அரசியல் வெற்றி மட்டுமல்ல — அவை இந்திய ஜனநாயகத்திற்கும் ஒரு திருப்புமுனையாக அமையலாம். SIR செயல்பாட்டின் மூலம், பாஜக அரசு, தொழில்நுட்பத் தேர்தல் நடவடிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கைமாறும் தொகுதிகளில், இது கணிசமான சாதகத்தை அளித்ததாகத் தெரிகிறது. இது “ஜனநாயக நீக்கத்திற்கு” ஒப்பானதா என்பது விவாதத்திற்குரிய விஷயம் — ஆனால் அது வெளிப்படுத்தும் ஆபத்து மிகவும் உண்மையானது. நிர்வாகத் தந்திரங்களால் குடிமக்களின் வாக்குரிமை கட்டுப்படுத்தப்பட்டால், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு முற்றுகையிடப்படும்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில், தேர்தல் வெற்றிகளைக் கொண்டாடுவது மட்டும் போதாது; அந்த வெற்றிகளை வடிவமைக்கும் செயல்முறைகளைச் சல்லடை போட்டு ஆராய்வதும் முக்கியமானது. பீகார் 2025 இந்த கதையின் முடிவாக இருக்காது — ஆனால் ஒரு பெரிய கணக்குத் தீர்ப்பின் தொடக்கமாக இருக்கலாம்.

https://countercurrents.org/2025/11/deleting-democracy-in-india-one-vote-after-another/

வெண்பா (தமிழில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு