ஆயுஷ்மான் பாரத்: தாக்குப்பிடிக்குமா இந்திய சுகாதாரத் திட்டம்?
ப்ரண்ட்லைன் - தமிழில்: விஜயன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவை (AB-PMJAY) வெகுவாகப் பாராட்டியதோடு, அதை மோடி அரசாங்கத்தின் “பெரும் மாற்றத்திற்கான நலத்திட்டம்” என்று புகழாரம் சூட்டினார். தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடியும், இத்திட்டம் மக்கள் வேறுவழியின்றி நோயாளியாக வாழ்ந்து மடியும் வழக்கத்திலிருந்து விடுதலை அளித்தது என்றும், சிறந்த மருத்துவ சேவையைப் பெற அவர்களுக்கு உதவியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இத்திட்டம், அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒரு முக்கியப் படிக்கல்லாக, 2018 ஆம் ஆண்டில் மோடியால் துவங்கப்பட்டது. இதன் கீழ், ஒவ்வொரு அட்டைதாரரும் அவரது குடும்பத்தினரும் இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறும் வாய்ப்பைப் பெறலாம். இது, பிரதானமாக மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 40 சதவிகிதத்தினரை, அதாவது சுமார் 55 கோடி மக்களை இலக்காகக் கொண்டது. தொடக்கம் முதலே, இது ஒரு மகத்தான சமூக நலச் சீர்திருத்தம் என்று வர்ணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், கடந்த ஏழு ஆண்டுகளாக நோயாளிகளின் கள அனுபவம் ஒரு கசப்பான எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, செப்டம்பர் 2019 இல், காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட பரேலியைச் சேர்ந்த மாத்லூப் ஹுசைன் என்பவருக்கு, அவரிடம் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை இருந்தபோதிலும், நான்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க மறுத்தன. இத்திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு விழா கொண்டாடிய மறுநாளே அவர் மரணமடைந்தார். மிகச் சமீபமாக, டிசம்பர் 2024 இல், பெங்களூருவில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 72 வயது முதியவர் ஒருவர் ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் சிகிச்சை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற சம்பவங்கள், இத்திட்டத்தால் உண்மையிலேயே அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்க இயலுமா என்பது குறித்து வலுவான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
குவிந்து வரும் புகார்களும், கட்டண நிலுவைகளும்
இத்தகைய புகார்கள் சமீப மாதங்களாக பெருகி வருகின்றன. தேசிய சுகாதார ஆணையத்திடமிருந்து (NHA), ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) விண்ணப்பத்திற்கு அளித்த பதிலின் வழி பெறப்பட்ட தரவுகள், செலுத்தப்படாத கட்டணங்களின் மொத்தத் தொகை இந்த ஆண்டு பிப்ரவரிக்குள் ரூ.1.21 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டதைக் காட்டுகின்றன. ஹரியானாவில் மட்டும், இத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த 774 தனியார் மருத்துவமனைகளில் 650க்கும் மேற்பட்டவை, முக்கியமாக கட்டணங்கள் நிலுவையில் இருந்த காரணத்தால், திட்டத்திலிருந்து விலகிச் சென்றுள்ளன. பிற மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் இதேபோன்ற முடிவுகளை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 30 நாட்களுக்குள் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த பின்னரே சில மருத்துவமனைகள் மீண்டும் இணைவதற்கு இசைவு தெரிவித்தன.
“ஆரம்பத்தில், இத்திட்டம் ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான காப்பீட்டுத் திட்டமாகவே இருந்தது. ஆண்டுக்கு ரூ.1.2 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டும் குடும்பங்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆரம்பகாலப் பயனாளிகளாக இருந்தனர்,” என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ.) ஹரியானா பிரிவின் தலைவர் அஜய் மகாஜன் விவரித்தார்.
நிதியளிப்பு வழிமுறை அமைக்கப்பட்டதன் படி, 60 சதவிகித நிதி மத்திய அரசிடமிருந்தும், 40 சதவிகிதம் மாநிலங்களிடமிருந்தும் கிடைக்கப் பெறும் நிலை இருந்தது. அரசு மருத்துவமனைகளில், கட்டணப் பட்டியல்கள் மாநில சுகாதார ஆணையத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டன, நோயாளிகளுக்கு அல்ல. ஆனால் ஹரியானாவில், செலுத்தப்படாத கோரிக்கைகள் ரூ.490 கோடியைத் தொட்டன. இது சிறிய மருத்துவமனைகள் நிதி ரீதியாக தாக்குப் பிடிப்பதை மிகவும் சிக்கலுக்குரியதாக்கியது.
தனியார் மருத்துவமனைகள் விலகுதல்
தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தை விட்டு வெளியேறத் தொடங்கியபோது, பெரும்பாலான சிகிச்சை உத்திரவாதங்களை நிறைவேற்ற வசதிகளற்ற அரசு மருத்துவமனைகளுக்கு அழுத்தம் அதிகமானது. அஜய் மகாஜனின் கூற்றுப்படி, “சிகிச்சைத் தொகுப்புக்கான கட்டணங்கள் மிகவும் குறைவாக இருந்ததால் தனியார் மருத்துவமனைகள் ஆரம்பத்திலிருந்தே தடுமாறின. பணவீக்கத்திற்கு ஏற்ப கட்டணங்களை ஆண்டுதோறும் திருத்தி அமைப்பதாக அரசாங்கம் உறுதி அளித்திருந்ததுடன், 15 நாட்களுக்குள் பணம் செலுத்துவதாகவும் உறுதியளித்தது. இந்த இரண்டு உறுதிமொழிகளும் காற்றில் பறக்க விடப்பட்டன”.
ஒரு தண்டனைக் கூறும் (அபராத விதிமுறை) இருந்தது: பணம் செலுத்துவது 15 நாட்களுக்கு மேல் தாமதமானால், ஒவ்வொரு கூடுதல் வாரத்திற்கும் அரசாங்கம் 1 சதவிகித அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் நடைமுறையில், எந்த மருத்துவமனைக்கும் அத்தகைய அபராதத் தொகை கிடைத்ததில்லை.
செப்டம்பர் 2022 இல், ஹரியானா அரசு தனது சொந்த சுகாதாரத் திட்டமான சிராயு யோஜனாவைத் தொடங்கியது. இத்திட்டம் ஆயுஷ்மான் திட்டத்துடன் இணைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1.8 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கான திட்டமாக தகுதி வரம்பை அதிகரித்தது. ஹரியானாவில் பயனாளிகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் உயர்வைக் கண்டது: 35–40 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் என்ற நிலையிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான சிராயு பயனாளிகள் வரை அதிகரித்தது.
இதன் விளைவாக, தனிப்பட்ட மருத்துவர்கள் அல்லது குடும்பங்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள் போன்ற சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளுக்கு பல நோயாளிகள் வரத் தொடங்கினர். இந்த மருத்துவமனைகள் சிலவற்றில், சுமார் 80 சதவிகித நோயாளிகள் சிராயு அட்டைதாரர்களாக இருந்தனர். ஒரே ஒரு மாதத்திற்குள், திட்டத்தின் நிதிநிலை பெரும் நெருக்கடிக்கு ஆளானது. பணம் செலுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டன, மேலும் 2023 இன் ஆரம்பத்தில் இந்த மருத்துவமனைகள் ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கவும், உபகரணங்கள் வாங்கவும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
மற்ற மாநிலங்களும் ஆயுஷ்மான் திட்டத்தை தங்கள் சொந்த சுகாதாரத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கத் துவங்கின. உதாரணமாக, மகாராஷ்டிராவில், அது மகாத்மா ஜோதிராவ் பூலே ஜன் ஆரோக்கிய யோஜனாவுடன் இணைக்கப்பட்டது.
ஜூலை 2023-ல் ஹரியானா அரசாங்கத்திடம் இத்திட்டதிலுள்ள பல சிக்கல்கள் குறித்து முறையாகப் புகாரளிக்கப்பட்டன. இதற்கிடையில், புதிய சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. 2024-ல், தேசிய சுகாதார ஆணையம்(NHA) ஒரு புதிய உரிமைக்கோரல்களுக்கான வலைவாசலை (claims portal) அறிமுகப்படுத்தியது, ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பல மருத்துவமனைகள் நோயாளிகளின் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ய இயலவில்லை. மாநிலங்கள் அவசரகால நிதியை வெளியிடும் வரை, மருத்துவமனைகள் சிகிச்சைகளைத் திரும்பத் திரும்ப நிறுத்தி வைக்கும் நிலைக்கு இந்த நெருக்கடி தள்ளியது. மார்ச் 2025-ல், ஹரியானா அரசாங்கம் ரூ.560 கோடியை வழங்கியது, மேலும் ஆகஸ்ட் மாதத்தில், மேலும் சில பகுதி அளவிலான சிகிச்சைக் கட்டணங்களையும் வழங்கியது. ஆயினும், சிகிச்சைக்கான உண்மையான செலவுக்கும் அதிகாரப்பூர்வ நிதிநிலைக்கும் (பட்ஜெட்டிற்கும்) இடையேயான இடைவெளி தொடர்ந்து நீடிக்கவே செய்தது.
அஜய் மகாஜனின் கூற்றுப்படி, அரசாங்கமும் காலப்போக்கில் தனது விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்தது. ஹரியானா சுகாதார ஆணையத்தின் குழுவில் நீடிக்க விரும்பினால், மருத்துவமனைகள் ஆயுஷ்மான் குழுவில் சேர கட்டாயப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில், மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ் எந்த சிறப்பு சிகிச்சைகளை வழங்குவது என்பதை சுதந்திரமாக தேர்வு செய்யலாம் என்றிருந்தது. பின்னர், அவர்கள் அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் வழங்க வேண்டிய தேவை ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, ஓரளவிற்கு குறைந்த வருமானத்தைக் கொண்டு வந்த சிகிச்சைப் பிரிவுகள் கூட, குறிப்பாக பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டபோது, நஷ்டத்தை ஏற்படுத்தும் பிரிவுகளாகவே மாறின.
எம்.எஸ்.எம்.இ (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) மேம்பாட்டுச் சட்டத்திலிருந்து மற்றொரு சிக்கல் வருகிறது. இந்தச் சட்டம் விற்பனையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது; அவ்வாறு இல்லையெனில், செலவினங்களை வரிச் சலுகைகளுக்காகக் காட்ட இயலாது. ஆனால் ஆயுஷ்மான் திட்டத்தில், மருத்துவமனைகள் பெரும்பாலும் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகே பணம் பெறுகின்றன. இதன் காரணமாக, மருத்துவமனைகள் தங்கள் சப்ளையர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த முடிவதில்லை, மேலும் அவை வரிச் சலுகைகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பல மருத்துவமனைகளும் எம்.எஸ்.எம்.இகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் அப்போதும் கூட, அரசாங்கம் மூன்று மாத கால கட்டண விதியைப் பின்பற்றுவதில்லை. அரசாங்கத்தின் மீது அபராதம் விதிக்க மருத்துவமனைகளுக்கு எந்த வழியும் இல்லை.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மருத்துவமனைகள், மருத்துவர்களால் நடத்துப்படும் சிறு மருத்துவமனைகள் அல்லது மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உள்ள மருத்துவக் கல்லூரிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக, மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ்(Fortis) போன்ற பெரிய தனியார் மருத்துவமனைக் கார்ப்பரேட்டுகள் ஆயுஷ்மான் அல்லது சிராயு திட்டங்களில் இணையவில்லை, முக்கியமாக சிகிச்சைத் தொகுப்புக் கட்டணங்கள் அவற்றுக்கு மிகவும் குறைவாக இருப்பதால்தான் இணையவில்லை.
சவால்களும் சீரமைப்பின் அவசியமும்
மருத்துவமனைகளுக்கு, பணம் செலுத்துவதில் தாமதமாவது மட்டுமே இடர்ப்பாடாக இல்லை. “சில தருணங்களில், கட்டணப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட தொகையில் 80 முதல் 90 சதவீதம் வரையில், எவ்விதத் தெளிவான விளக்கமும் இன்றி, நிராகரிக்கப்படுகின்றன. நாங்கள் ₹20,000-க்கு ஒரு பட்டியலைச் சமர்ப்பித்தால், எங்களுக்கு ₹3,000 அல்லது ₹4,000 மட்டுமே கிடைக்கக்கூடும்,” என்று ஹரியானா ஆயுஷ்மான் சமிதியின் தலைவரும், ஃபரிதாபாத்தில் உள்ள சூர்யா எலும்பு முறிவு மற்றும் அதிர்ச்சி வைத்திய மையத்தின் (Surya Ortho and Trauma Centre) மூத்த ஆலோசகருமான டாக்டர் சுரேஷ் அரோரா தெரிவித்தார். "இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள சிகிச்சைக் கட்டண விகிதங்கள் (Package rates) நடைமுறைக்கு ஒவ்வாதவையாக உள்ளன. சிறிய மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் செய்யும் பணி ஏறக்குறையத் தருமம் செய்வது போன்றதொரு நிலைதான் நிலவுகிறது. மேக்ஸ் (Max) அல்லது ஃபோர்டிஸ் (Fortis) போன்ற பெரிய பெருநிறுவன மருத்துவமனைகள் இக்காரணங்களால்தான் இத்திட்டத்தில் இணைவதே இல்லை," என்று அவர் மேலும் கூறுகிறார்.
டாக்டர் அரோரா உடனடியாகச் செய்யப்பட வேண்டிய இரண்டு அவசரச் சீர்திருத்தங்களைக் முன்வைத்தார்:
1. நிதி ஒதுக்கீடு, உண்மைச் செலவினங்களுக்கு இணையாக இருக்க வேண்டும். "கடந்த ஆண்டு, ஹரியானாவில் செலவுகள் சுமார் ₹1,600 கோடியாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு ₹700 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது".
2. விலைவாசி உயர்வைச் சரிக்கட்ட, ஒதுக்கீட்டுக் கட்டண விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டும் திருத்தியமைக்கப்பட வேண்டும். "மருந்துகள், ஊதியங்கள் மற்றும் உபகரணங்களின் செலவுகள் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன, ஆனால் ஆயுஷ்மான் திட்டத்தின் விகிதங்கள் 2021 முதல் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே உள்ளன".
நிலுவையில் உள்ள பற்றுச்சீட்டுகள்(பில்கள்) காரணமாகச் சிறிய மருத்துவமனைகள் இத்திட்டத்திலிருந்து விலகிச் செல்வதால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுமை படுவேகமாக அதிகரிக்கிறது.
ஆயுஷ்மான் பாரத் 2021-இல் திருத்தப்பட்டபோதிலும், ஏறக்குறைய 80 சதவீத ஒதுக்கீட்டுக் கட்டண விகிதங்கள் எவ்வித மாற்றமுமில்லாமல் நிலைத்திருந்தன, மேலும், சில கட்டண விகிதங்கள் உயர்த்துவதற்கு பதிலாக குறைக்கக்கூடப்பட்டன. ஏற்கனவே இருந்த ஒதுக்கீடுகளில் 10 சதவீதம் மட்டுமே அதிகரிக்கப்பட்ட நிலையில், மேலும் 10 சதவீதம் புதிதாகச் சேர்க்கப்பட்ட சிகிச்சை தொகுப்புகளுக்காகவே உயர்த்தப்பட்டன. "கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களும் இதேபோல மிகக் குறைவானவையே," என்று சத்தீஸ்கர் இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) செயலாளரான டாக்டர் நிதின் ஜுனேஜா தெரிவித்தார். "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சராசரி மருத்துவமனைச் செலவை அரசாங்கம் ₹13,000–15,000 என மதிப்பிடுகிறது.
ஆனால், அரசாங்கத்தின் சொந்த தேசிய மாதிரி ஆய்வின் (National Sample Survey) தரவுகளின்படி, 2015-இலேயே தனியார் மருத்துவமனை சிகிச்சையின் சராசரி செலவு சுமார் ரூ.40,000 ஆக இருந்தது".
இத்திட்டம் தவறான விலை நிர்ணயத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் ஜுனேஜா வலியுறுத்தினார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இரண்டிற்கும் தொகுப்பு விகிதங்கள் (package rates) ஒரே மாதிரியாக இருப்பதால், சிக்கல் மேலும் அதிகரிக்கிறது. அரசு மருத்துவமனைகள் மானியம் பெறுவதால் (subsidised) இந்த நிதியைக் கொண்டு சமாளித்து விடுகின்றன. ஆனால் தனியார் மருத்துவமனைகளால் இந்தச் செலவைச் சுமக்க முடிவதில்லை.
கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் மூலம் தற்காலிக நிவாரணம்
கூடுதல் நிதிநிலை ஒதுக்கீடுகள் மூலம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் முயன்று வருகிறது. ஆகஸ்ட் மாதம், ஹரியானா அதிகாரிகள், கூடுதல் தொகையாக ரூ.800 கோடி சட்டசபையின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும், ரூ.291 கோடி விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், பெரும்பாலான மருத்துவமனைகள் இன்னமும் கலக்கத்துடனேயே இருக்கின்றன. "வெறும் வாக்குறுதிகளை நம்பி மருத்துவமனைகள் நடத்த முடியாது. உரிய நேரத்தில் கட்டணங்கள் வழங்கப்படாமலும், நியாயமான விகிதங்கள் இல்லாமலும் போனால், சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகள் திவாலடையும்—ஹரியானாவில் உள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டமும் அதனுடன் சேர்ந்து சீர்குலையும்," என்று அஜய் மகாஜன் சுட்டிக்காட்டினார்.
சத்தீஸ்கரிலும் நிலைமை இதேபோலத்தான். அங்குள்ள மருத்துவமனைகள், சுமார் 1,000 தனியார் மருத்துவமனைகளுக்குச் சேர வேண்டிய ரூ.900 கோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகக் கூறுகின்றன. "இத்திட்டம் தனியார் காப்பீட்டு மாதிரியாகத் (private insurance model) தொடங்கி, பின்னர் ஒரு கலப்பினக் கட்டமைப்பிற்குள் (hybrid framework) உருமாறி, இறுதியில் தொண்டு நிறுவன அடிப்படையிலான மாதிரியாக (trust-based model) மாறி நிற்கிறது. தற்போது, தொண்டு நிறுவன அமைப்பின் (trust system) கீழ், கோரிக்கைகளைச் செயல்படுத்த (process claims) ஒரு செயலாக்க ஆதரவு முகமையை (Implementation Support Agency) மாநில சுகாதார ஆணையம் நியமிக்க வேண்டும். ஆனால், இந்த நியமனத்திற்கான டெண்டர் ஆறு மாதங்களாக வெளியிடப்படாமல் தாமதமாகியுள்ளது. இருப்பினும், சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு சுமார் 15 லட்சம் நோயாளிகள் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றனர். மேலும், சத்தீஸ்கரில் ஆயுஷ்மான் திட்டம் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களையும் உள்ளடக்குகிறது, இதனால் ஏறக்குறைய அனைத்து மக்களுக்கும் மருத்துவ பாதுகாப்பு கிடைக்கிறது," என்று டாக்டர் ஜுனேஜா விளக்கமளித்தார்.
மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் போன்ற பல மாநிலங்களும் நிலுவையில் உள்ள கட்டணக் கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றன. மணிப்பூரில், 43 மருத்துவமனைகளுக்குச் சேர வேண்டிய ரூ.80 கோடியை வழங்காவிட்டால் சேவைகளை நிறுத்தி வைப்போம் என்று இந்திய சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் சங்கம் (Association of Healthcare Providers of India) சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
"ஒவ்வொரு மாநிலமும் ஏதோவொரு வடிவத்தில் இதே சிக்கலைத்தான் எதிர்கொள்கிறது" என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன் தெரிவித்தார். அவர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை 'சாத்தியமற்ற திட்டம்' (an impossible scheme) என்று விவரித்ததுடன், உறுப்பினர்கள் இதிலுள்ள இடர்களை ஏற்றுக்கொண்டதன் பேரிலேயே இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் முறைப்படி ஆலோசனை வழங்குவதாகவும் கூறினார். இத்திட்டம் சுகாதாரப் பராமரிப்பை விட அரசியல் காரணங்களுக்காகவே அதிகம் முன்னிறுத்தப்படுவதாக அசோகன் குற்றம் சாட்டினார். ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 70 சதவீத சிகிச்சை செலவுகள் அரசு மருத்துவமனைகளுக்கே செல்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். "ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள ஏழை நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை இலவசமாகத்தான் இருந்தது. அப்படியிருக்க, முன்பே இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கு ஏன் ஆயுஷ்மான் நிதியைச் செலவு செய்ய வேண்டும்?" என்றும் அவர் வினவினார்.
பற்றாக்குறையான நிதி ஒதுக்கீடு
இத்திட்டம் முறையாகச் செயல்பட ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1.6 இலட்சம் கோடி தேவைப்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், 2018–19-ல் இது வெறும் ரூ.2,400 கோடியுடன் மட்டுமே தொடங்கப்பட்டது. மார்ச் 2025-இல் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2024–25-க்கு ரூ.7,299 கோடியையும், 2025–26-க்கு ரூ.9,406 கோடியையும் ஒதுக்கியுள்ளது.
இந்தச் சிக்கல்கள் மருத்துவ சேவை எளிதாகவும் குறைந்த செலவிலும் கிடைப்பதை (affordability) பாதிக்கின்றன என்று டாக்டர் அசோகன் எச்சரித்தார். "சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளே சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற சுகாதார சேவையின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் மூடப்பட்ட கேரளாவில் நிகழ்ந்தது போல—இவையும் மூடப்பட்டால், அந்த இடத்தை பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் (corporate chains) கைப்பற்றிவிடும். பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை உயரலாம், ஆனால் குறைந்த விலையில் அதிகப்படியானோருக்கான சேவை (accessibility) குறைந்து, செலவுகள் அதிகரிக்கும். இது தனியார் துறை மீதான மறைமுக விலை கட்டுப்பாடாகவும் செயல்பட்டு வந்த நிலையும் மறைந்துவிடும்".
அவரது கூற்றுப்படி, ஏழைக் குடும்பங்கள் தங்கள் கைக்காசைச் செலவிடும் நிலையைத் தவிர்ப்பதுதான் (out-of-pocket expenses) ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறி வருகிறார்கள். ஆனால், குறைந்த நிதி ஒதுக்கீடு, அதிகார வர்க்க நடைமுறைகள், மட்டுமல்லாது குறைபாடான திட்ட வடிவமைப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த நோக்கமே அடிபட்டுப்போனது. "இத்திட்டம் இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்களுக்கு பயனளிப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. உண்மையில், இந்த மக்களில் பலர் ஏற்கெனவே இலவச அல்லது மானிய விலையிலான சிகிச்சையைப் பெற்றிருந்தனர். எனவே, இதன் தாக்கம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது," என்கிறார் அசோகன்.
பிரச்சினைகள் இருந்தபோதும் விரிவாக்கம்
இந்த பலவீனங்கள் இருந்தபோதிலும், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2025-இல், டெல்லி இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட 35வது மாநிலம்/யூனியன் பிரதேசமாக மாறியதோடு, 4.55 லட்சம் அட்டைகளையும் வழங்கியது. 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி, டெல்லியில் 6.54 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்களானார்கள். மத்திய மற்றும் டெல்லி அரசுகளால் கூட்டாக நிதியளிக்கப்படும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ₹5–10 லட்சம் வரை சிகிச்சைக்கான பாதுகாப்பையும், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்ஸில் புறநோயாளிகள் துறை (OPD) சேவைகளையும் பயனாளிகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, 151 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தின் சேவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அப்பல்லோ, மேக்ஸ், ஃபோர்டிஸ் போன்ற பெரிய பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் இதில் இடம்பெறாத நிலையே நீடிக்கிறது.
ஆம் ஆத்மி அரசாங்கத்தை தேர்தலில் வீழ்த்திய பா.ஜ.க.-வின் வெற்றியைத் தொடர்ந்தே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர், ஆம் ஆத்மியின் டெல்லி ஆரோக்கிய கோஷ் (DAK) ₹5 லட்சம் வரை மருத்துவ உதவியை வழங்கியது. ஆயுஷ்மான் பாரத் 12–15 சதவீத மக்களை மட்டுமே சென்றடையும் என்றும், DAK பரந்த பாதுகாப்பைக் கொண்டிருந்தது என்றும் கூறி ஆம் ஆத்மி ஆயுஷ்மான் திட்டத்தை எதிர்த்தது. “பணியாளர் பற்றாக்குறை ஒரு பெரும் சவாலாக உள்ளது. முன்னர் ஒரு நாளைக்கு 10–12 ஆயுஷ்மான் பயனாளிகள் எங்களிடம் வந்தனர்; இப்போது அது 30–35 ஆக உயர்ந்துள்ளது. தேசிய தலைநகர் (NCR) யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், டெல்லி அருகிலுள்ள மாநிலங்களிலிருந்தும் பல நோயாளிகள் வருகின்றனர்," என்று புது டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மூத்த மருத்துவ அலுவலரும், ஆயுஷ்மான் திட்டத்தின் தலைமைக் கோரிக்கை அதிகாரியுமான டாக்டர் உமேஷ் திவாரி கூறினார்.
ஆனால் இங்கேயும், உரிமைகோரல்கள் சரியான காலத்தில் தீர்க்கப்படுவதில்லை. “கொள்கையளவில், உரிமைகோரல்கள் 15 நாட்களில் தீர்க்கப்பட வேண்டும், ஆனால் பல்வேறு கோரிக்கைகள் தாமதமாகின்றன, சில கோரிக்கைகள் திருத்தம் செய்யக்கோரி திருப்பி அனுப்பப்படுகின்றன, மேலும் சில தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன,” என்று டாக்டர் உமேஷ் திவாரி கூறினார். மேலும் பல நோயாளிகளை பதிவு செய்ய முடியவில்லை என்றும் அவர் விளக்கினார், ஏனெனில் தரவுத்தளம் 2011 பதிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது, எத்தனை முறை முயன்றாலும் அட்டைதாரர்களை பதிவு செய்வது பெரும் சிரமமாகவே உள்ளது என்றார். எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மட்டுமல்லாது தேசிய சுகாதார ஆணையத்தையும் (NHA) Frontline சார்பாக தொர்பு கொண்டபோது எந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை.
மோசடிகளும், முறைகேடுகளும் மற்றொரு முக்கியமான குறைபாடாக உள்ளது. பிப்ரவரி 2025-ல், சத்தீஸ்கர் அரசாங்கம் 28 தனியார் மருத்துவமனைகள் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டது. போலியான உரிமைக் கோரல், இரட்டிப்புக் கட்டணம் விதித்தல், தவறான நோயாளிகளை பதிவு செய்தது, அநாவசியமாக சிக்கலான சிகிச்சைகள் வழங்கியதாக கணக்குக்காட்டியது, வேண்டத்தகாத நடைமுறைகளுக்காக நோயாளிகள் மருத்துவ முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டது ஆகியவை அந்த விசாரணையில் கண்டறியப்பட்டன. மாநிலங்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பதிலின்படி, செயலாக்கப்பட்ட 6.66 கோடி உரிமைகோரல்களில், தனியார் மருத்துவமனைகளின் 2.7 லட்சம் உரிமைகோரல்கள் முறைகேடு அல்லது தவறான தகவலுக்காக நிராகரிக்கப்பட்டன.
ஜே.என்.யு பேராசிரியர் ராஜீப் தாஸ்குப்தா, ஆயுஷ்மானின் தற்போதைய வடிவமைப்பு நீடித்து இயங்க முடியாததாக (unsustainable) உள்ளது என்று கூறினார். இத்திட்டத்தின் காப்பீட்டுப் பகுதி அதிக அளவில் விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் மற்றொரு தூணான—சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள்—இன்னமும் பலவீனமாகவே உள்ளன என்று அவர் எச்சரித்தார். வலிமையான முதன்மை சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பு இல்லாததால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகள் தொடர்ந்து அதிக சுமையுடன் இயங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதுபோன்ற பெரும் குறைபாடுகள் இருந்தபோதிலும், காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2024 இல், 10.34 லட்சம் ஆஷா பணியாளர்கள், 13.96 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் 12.89 லட்சம் அங்கன்வாடி உதவியாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். சமீபத்தில், வருமான வரம்பு பார்க்காமல், 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6 கோடி மூத்த குடிமக்களும் இதில் சேர்க்கப்பட்டனர். போதுமான நிதி மற்றும் உள்கட்டமைப்பு இல்லாமல் இத்தகைய கட்டுப்பாடற்ற அதிவேக விரிவாக்கம், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கும் தள்ளுகிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அரசாங்கம் போதுமான நிதியை வழங்கி, தான் வாக்குறுதியளித்த விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், "பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய திட்டம்" என்று புகழாரம் சூட்டப்படும் இந்தத் திட்டம், அதன் தற்போதைய நோக்கத்தில் ஒருபோதும் வெற்றி காண இயலாது.
- விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு