அணுசக்தி துறையை அதானி துரைக்கு தாரை வார்க்கும் சட்டம்!
அறம இணைய இதழ்
நாட்டின் பொது துறையை முற்றிலுமாக சீர்குலைத்து, பொது சொத்துக்களான விமான தளங்கள், துறைமுகங்கள், கனிம சுரங்கங்கள் ஆகியவற்றை அதானிக்கு தாரை வார்த்த மோடி அரசு, இப்பொழுது அணுசக்தி துறையிலும் தனியாரை – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளை – அனுமதிக்க சட்டம் கொண்டு வந்துள்ளது குறித்த முழுமையான அலசல்;
இந்தியாவின் சுதந்திரத்திற்கும், சுயசார்பிற்கும் ஆணிவேராக திகழ்ந்த 1962-ம் ஆண்டு இந்திய அணுசக்தி சட்டத்தையும், 2010ம் ஆண்டு அணுசக்தி சேதங்களுக்கான சமூக பொறுப்பு சட்டத்தையும் நீக்கிவிட்டு , – இந்திய அரசின் – கையிலிருக்கும் அணுசக்தி துறையிலும் தனியார் ஏகபோகம் செலுத்த வகை செய்யும் சட்டத்திற்கு “சாந்தி” – SHANTI என பெயரிட்டு அச்சட்டத்தை பலத்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் அவசர கோலத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்திய நாட்டின் எரி ஆற்றல் உற்பத்தியில் அணுசக்தி மூலம் உற்பத்தியாகும் ஆற்றலின் அளவு 2024-2025ல் 3% தான். தேவைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் 2047க்குள் இந்தியா 100 கிகா வாட் அளவிற்கு அணுமின் உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளது என்றும், 2033ம் ஆண்டிற்குள் ஐந்து சிறிய மாடுலர் ரீஆக்டர் (SMR) மூலம் இதை சாதிப்போம் என அரசு கூறுகிறது.
இந்தச் சூழலில் யார் யார் இத்தகைய அணுமின் உற்பத்தி கூடங்களை நிறுவலாம், அணுமின் சக்தியை வினியோகம் செய்யலாம் என்று நெறிப்படுத்த சாந்தி என்ற புதுசட்டத்தை மோடி அரசு இயற்றியுள்ளது.
கடந்த காலங்களில் இந்தியா அணு தொழில் நுட்பத்தில் முன்னேறுவதற்கு மேலை நாடுகள் – குறிப்பாக முதலாளித்துவ நாடுகள் – தடைபோட்டன. அவற்றை எல்லாம் மீறி இந்தியா அணுசக்தி துறையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்மூலமாக பெரும் முன்னேற்றம் அடைந்தது. இதற்கு வித்திட்டு வளர்த்தவர்கள் பிரதமர் ஜவகர்லால் நேருவும் , பிரதமர் இந்திரா காந்தியும் தான் என்பதை சிறு பிள்ளைகளும் அறிவர்.
# 1969 ல் தாராப்பூர் அணுசக்தி நிலையம் (மகராஷ்டிரம்)
# ராஜஸ்தானில் அணுமின் உற்பத்தி நிலையம் 1973ல் தொடங்கப்பட்டது.
# 1984ல் தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் முற்றிலும் சுதேசியான அணுமின்உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டது,
# 1991ல் உத்திர பிரதேசத்தின் நரோராவிலும்
# 1993 ல் காக்ரபூர் குஜராத் மாநிலத்திலும்
# 2000 த்தில் கைகா – கர்நாடகா மாநிலத்திலும்
# 2004 ல் தமிழ்நாட்டில் கூடங்குளத்திலும் அணுமின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டன.
இவையனைத்தும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களே.
இவற்றினால் ஏற்பட்ட சூழல் பின்னடைவுகள் மற்றும் காற்று மாசுபடுதலை எதிர்த்து மக்கள்போராடிய வேளைகளில் , அப்போராட்டங்கள் அரசை எதிர்த்து அமைந்தன என்றாலும் அணுசக்தி இந்தியாவின் பொது சொத்தாக, இந்திய மக்களின் நலனை பேணுவதாக – அமைய வேண்டும் என மக்கள் போராடினர். இத்தகைய போராட்டங்களில், முன்னெடுப்புகளில் பாஜக என்றுமே பங்கேற்றதில்லை.
முதலில் தாராப்பூர் அணுமின்நிலையத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் உதவினாலும் , ராஜஸ்தானில் உருவான அணுமின் நிலையத்திற்கு கனடா நாடு உதவியது, பிறகு கல்பாக்கத்தில் இந்தியா தனது சொந்தக்காலில் நின்று கல்பாக்கம் அணுமின்நிலையத்தை கட்டி எழுப்பியது.
இந்த நிலையில் இந்தியா 1974 ல் நடத்திய அணு சோதனையில் வெற்றி பெற்றது.இதை காரணங்காட்டி கனடாவும் ஏனைய மேலை நாடுகளும் இந்திய அணுமின் உற்பத்திக்கு உதவ மறுத்து, தடைகளை (sanctions) ஏற்படுத்தினர். இத்தடைகளினூடே பயணித்து தான் இந்தியா கல்பாக்கத்தில் யாருடைய உதவியும் இன்றி அணுமின் உற்பத்தியை தொடங்கியது.
கல்பாக்கம் அணுமின் நிலையம்
ஏற்கனவே 1974ல் இந்தியாவின் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்திய பிறகும் 1998ல் வாஜ்பாய் மீண்டும் அதை வெடித்து “ நாங்கள் அணுகுண்டு தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டோம்“ என உலகிற்கு பறைசாற்றினார் , விளைவு ? கடுமையான பொருளாதார தடைகள் இந்தியா மீது போடப்பட்டன.
வீண் பெருமை பேசி முன்னேற்றத்திற்கு அன்று வேட்டு வைத்தனர் பாஜ கவினர் . பிறகு காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் அரசு 2005ல் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போட்டது. அப்பொழுதும் அதற்கெதிராக “குறுக்குசால் “ ஓட்டிய கட்சி தான் பாஜக.
2005 ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அணு மின் உற்பத்தி மிக அதிகமாகும் என பேசப்பட்டாலும் , அணுத் தாதுவான யுரேனியம் அளிக்கும் நாடுகள் – Nuclear Suppliers Group- இந்தியா மீதான தங்களது தடைகளை நீக்கினாலும், இந்தியாவில்
ரஷ்ய உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட கூடங்குளத்தை தவிர வேறு அணு உற்பத்தி ஆலைகள் வரவில்லை!
இதற்கான காரணங்களை தேடுமுன்னர் இரு விடயங்களை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
முதலாவது இந்தியாவில் அணுசக்தி துறை என்பது எப்பொழுதுமே பொதுத் துறையில் தான் இருந்து வந்துள்ளது. இதற்கு அடிப்படை காரணிகள் மூலதனமும், அறிவாற்றலும் தான். இவை இரண்டும் தனியார் வசம் இல்லை. இன்று தனியார் வசம் மூலதன வசதி இருந்தாலும் தொழில்நுட்ப அறிவு இல்லை!
இந்தியாவின் அணு உற்பத்தி அறிவாற்றலை , மேம்படுத்துவதற்கு கல்வியும், ஆராய்ச்சியும் முக்கியம், இம்முயற்சியில் நெடுங்காலமாக தொடர்ச்சியாக முதலீடுகள் செய்து வளர்த்தெடுக்க வேண்டியதை இதுவரை இந்திய அரசுகள் செய்தன. இந்தியாவின் அணு சக்தி முன்னேற்றத்தை மேலை நாடுகளை ஆத்திரமூட்டும் அளவிற்கு வளர்த்து எடுத்தது காங்கிரஸ் அரசு.
அணுமின் நிலையங்களை இந்தியாவில் நிறுவி வளர்த்தெடுக்க இடையூறாக இருப்பது இந்திய அரசின் சிவில் நீயூக்கிளியர் லையபிலிட்டி சட்டம் தான் 2010, என மேலைநாட்டு நிறுவன முதலாளிகள் ( வெஸ்டிங் ஹவுஸ்- யு எஸ் ஏ., அரேவா- பிரான்சு, ஜி இ , மற்றும் டாயச்சி – ஜப்பான்) கூறுகின்றனர். மேலைநாட்டு அரசுகளும் அதைத் தான் கூறுகின்றன.
2008 ல், இந்தோ -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து, இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அளித்த ஆதரவை விலக்கிய போது
காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட அரசு கவிழும் என மனப்பால் குடித்த பா ஜ க வினர் மன்மோகன் சிங்கையும், இடதுசாரிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர். கொள்கையளவில் அமெரிக்காவை எதிர்க்க துணியாத பா ஜ க , அரசியலுக்காக மன்மோகன் சிங் அரசை சாடியது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தது.
2010-ல் இயற்றப்பட்ட இழப்பீடு சட்டத்தை மன்மோகன் சிங் அரசு நீண்ட விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றியது. அப்பொழுதும் மன்மோகன்சிங் அரசு இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று பாஜ க நாடாளுமன்றத்தில் கூவியது.
அதே பாஜக இன்று விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு சப்ளையருக்கு பொறுப்பு உண்டு என்ற நிபந்தனையை முற்றிலும் கைவிட்டுவிட்டது. இதுகாறும் தனியார் நுழைந்திராத அணுமின்உற்பத்தியில், அரசு அனுமதிக்கும் தனியாரும், வெளிநாட்டினரும் நுழைந்து கொள்ளலாம் என சட்டத்தை திருத்தி அமைத்துள்ளனர்.
இவ்வாறு முன்னுக்குபின் முரணாக பாஜக செயல்படுவதை ஒத்துக்கொண்ட அமைச்சர் ஜிதேந்திர சிங், “காலம் மாறியுள்ளது, தொழில்நுட்பமும் மாறியுள்ளது, எனவே எங்கள் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது “ என்று கூறியிருக்கிறார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால், உற்பத்தி அளவின் மாற்றத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை இப்பொழுது குறைந்துவிட்டது என்கிறார். அப்படியானால் சேதாரங்களும் அதற்கான இழப்பீடு அளவும் குறையத்தானே வேண்டும் , அதில் சப்ளையரின் பங்கும் குறைந்துதானே போகும் ?அந்த குறைவான இழப்பீட்டையும் கொடுக்க சப்ளையர்கள் மறுப்பதேன்? அதற்கு அரசு ஆதரவளித்து சட்டத்தை திருத்துவது ஏன்?
அன்று 2010 சட்டத்த்தில் சப்ளையர்கள், ஒப்பந்தக்கார்ர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது என்ற நிலையை நிராகரித்து , முழு பொறுப்பும் ஆப்ரேட்டர் என்று கூறக் கூடிய உற்பத்தியாளர்களையே சாரும் என்று புது சட்டம் ‘சாந்தி’ கூறுகிறது.
2010ம் ஆண்டு ஆகஸ்டு 25ல் நாடாளுமன்றத்தில் அன்றைய மன்மோகன் அரசு கொண்டு வந்த
இழப்பீட்டு சட்டத்தை – எதிர்த்தது பா ஜ க. எதிர்த்து பேசியவர் அன்றைய பாஜ க தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்.
இப்பொழுது மோடி அரசு அணுசக்தி சிவில் உற்பத்தியை தனியாருக்கு – உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு- திறந்து விட முடிவு செய்துள்ளது யாருக்காக?
கடந்த நவம்பர் 25 அன்று அதானி குழுமம் இந்திய அணு சக்தி (சிவில் ) துறையில் பங்கு கொள்ள தங்களது விருப்பத்தை தெரிவித்தனர் . அவ்வறிவிப்பு வந்து ஒரு ஒரு மாதம் கூட ஆகவில்லை, மோடி அரசு அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க சட்டமே கொண்டுவந்து விட்டது. என்ன வேகம் , என்ன வேகம் ?
முன்பு அதானி குழும அதிகாரியின் பரிந்துரையின் பேரால் தான் மூன்று வேளாண்மைசட்டங்களும் எவ்வித கலந்தாலோசனையின்றி, சட்டமாக்கப்பட்டதை , அது ஏற்படுத்திய போராட்டங்களை, உயிர்ப்பலிகளை, மோடி அரசின் முரட்டு எதிர்வினைகளை நாம் மறக்கவில்லை.
தனியாரை அணுசக்தி உற்பத்தியில் அனுமதிக்க அரசு முடிவு எடுத்துள்ள வேளையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க ஒழுங்குபடுத்த ஒழுங்குமுறை ஆணையம் பற்றி இச்சட்டத்தில் எந்த தெளிவும் இல்லை. இன்றிருக்கும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (Atomic Energy Regulatory Authority) உண்மையில் அரசின் அணுசக்தி துறையில் இருந்து சுதந்திரமாக செயல்படும் அமைப்பா என்ற கேள்வி எழுப்ப படுகிறது. அரசின் அனைத்து துறைகளுமே பிரதம மந்திரியின் அலுவலகத்தினால் (PMO) ஆட்டுவிக்கப்படும் பொழுது சுதந்திரமான ஆணையம் என்பது கேலிக்கூத்தே ஆகும்.
இழப்பீடு கொடுப்பதில் இருந்து சப்ளையர்களை விடுவித்துவிட்டது மோடி அரசு . ஆபரேட்டர்கள் கொடுக்கவேண்டிய இழப்பீட்டு தொகைக்கும் ஒரு உச்ச வரம்பு வைத்துள்ளது உங்களை ஆச்சரியப்படுத்தும்.
ஆம் , பெரிய ரீஆக்டர் உள்ள நிறுவனத்தில் விபத்து நடந்தால் ரூ. 3000 கோடியும், நடுத்தர ரீஆக்டர் நிறுவனத்தில் விபத்து என்றால் 1500 கோடியும், சிறிய ரீஆக்டர் உள்ள நிறுவனமென்றால் வெறும் 100 கோடிதான் என வரம்பை அரசு நிர்ணயித்து உள்ளது.
அரசு இப்பொழுது அதானிக்காக தீவிரமாக முன்னெடுப்பது சிறிய மாடுலர் ரீஆக்டர் கொண்ட அமைப்புகளை தான்(Small Modular Reactors) என்கின்ற பொழுது மோடி சட்டத்தின் உண்மையான நோக்கம் புரிய வரும்.
1984ல் நடந்த போபால் விஷ வாயு கசிவு விபத்தில் கூட , 475 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று (2025க்கு பிறகு) இழப்பீட்டை வரம்பிற்குள் அடைப்பதை என்னவென்று கூறுவது?
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல், அரசு இயக்கத்தில் இருக்கும் அணு உற்பத்தி நிலையங்களின் ஊழியர்களுக்கு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு கிடையாது, என்று இச்சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் அணுசக்தி தொழில்நுட்பம் இன்று யுரேனியத்தை தாண்டி தோரியத்தை பயன்படுத்தும் அளவில் வளர்ந்துள்ளது, மூன்றாவது தலைமுறை வளர்ச்சி எனக் கூறப்படும்
மால்ட்டன் சால்ட் ரெகுலேட்டர் தொழில் நுடபம் வரை வளர்ந்துள்ளது. அணுவை பிளப்பதில் (fission) இருந்து முன்னேறி, இணைப்பு அல்லது சேர்ப்பின் (fusion) தொழில்நுட்பம் வரை வளர்ந்துள்ளது. இதில் இந்தியா சொந்தக் கால்களில் நிற்கிறது.
இப்பொழுது முன்னிலை படுத்தப்படும் இச்சட்டம் யுரேனியத்தை அடிப்படையாக கொண்டமுனைப்பாக இருக்கும் வேளையில் இதுவரை நாம் கட்டி காத்துவந்த சுதந்திரமான எரி ஆற்றல், சுத்தமான எரி ஆற்றல் போன்ற ( Energy Independence and promoting Clean Energy) கொள்கைகளுக்கு விடை கொடுக்கப்படும் அபாயம் உள்ளது.
புதிய தொழில்நுட்பமான மால்ட்டன் ஸால்ட் ரீஆக்டர் போன்றவை பயன்பாட்டிற்கு வராமல் கைவிடப்படும் அபாயமும் உள்ளது.
இச்சட்டத்தில் அணுக்கழிவுகளை கையாளுவதை பற்றியோ, கதிர்வீச்சுக் கழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது பற்றியோ, எந்த தெளிவுமில்லை. அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் குளறுபடிகளை இனிதான் மக்கள் அறிந்து கொள்வர்.
ஏற்கனவே சுயசார்புடன் திகழ்ந்துவந்த இந்திய அணுசகதிதுறை மோடி அரசின் சாந்தி சட்டத்தால் அந்நிய நாட்டு நிறுவனங்களான வெஸ்டிங் ஹவுஸ் , அரேவா ஆகியவற்றின் ஆணைப்படியே இனி பயணிக்கும்.
இதற்கு பெயர் ஆத்மநிருபர பாரத் என்பதைவிட அதானி நிருபர பாரத் என அழைப்பதில் தவறுண்டோ?
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
அறம இணைய இதழ்
https://aramonline.in/23579/shanti-indias-nuclear-energy-bill/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு