அநீதி NEET! - ரூ.300 கோடி வினாத்தாள் கசிவு மாஃபியா, காசிருந்தால் கருணை மதிப்பெண், 0 எடுத்தாலும் சீட்
விகடன் இணையதளம்
திறமையான மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேர்வதை உறுதிசெய்யவில்லை இந்த நீட். மாறாக, திறனில்லை என்றாலும் பணமிருந்தால் போதும்... நீங்கள் டாக்டராகிவிடலாம் என்பதைத்தான் நிதர்சனமாக்கி வருகிறது என்டிஏ. | Voice Of Aval
அந்தப் பெண் குழந்தை, கடந்த மே 5-ம் தேதி, கோயம்புத்தூர், எஸ்.எஸ்.குளம் பகுதியிலிருக்கும் நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளிக்கூட வாயிலில் நின்று அழுத காட்சி... கூடியிருந்தவர்களை மட்டுமல்ல, அதைக் காணொலியாகக் கண்டவர்களையும் கண்ணீர் கசிய வைத்தது.
அது நீட் தேர்வு மையம். அந்த மையத்துக்குள் நுழைய நான்கு வாயில்கள். ஒவ்வோர் இடமாக அலைந்ததில், 5 நிமிடங்கள் தாமதமாகிவிட்டன அந்தக் குழந்தைக்கு. முறைப்படி தேர்வு தொடங்க இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன. ஆனாலும், கொஞ்சம்கூட கருணையே காட்டாமல் அந்தக் குழந்தையை விரட்டி அடித்தனர், நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் நிறுவனமான என்டிஏ-வின் (தேசிய தேர்வு முகமை) தேர்வு அலுவலர்கள்.
கருணையே காட்டாத என்டிஏ!
குழந்தைகளை தேர்வெழுதுவதற்காக உள்ளே அனுப்பிவிட்டு, வாயிலில் காத்திருந்த பெற்றோர் பலரும் இதைக் கண்டு கொதித்தெழுந்து, போலீஸாரிடமும் அதிகாரிகளிடமும் போராடினர். `குழந்தைக்கு ஓராண்டு பாழாகிவிடும்... உள்ளேவிடுங்கள்’ என்று கதறினர். இந்தக் காட்சி, அங்கிருந்த தாயுள்ளம் கொண்ட பெண் போலீஸ் அதிகாரியையும் கலங்கடித்தது. அவரும் உள்ளே சென்று பேசிப் பார்த்தார். ஆனால், இரக்கமே காட்டவில்லை நீட் தேர்வை நடத்தும் என்டிஏ.
சில நாள்களுக்கு முன்னரோ... `1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் கொடுத்துள்ளோம்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தற்போது வாக்குமூலம் கொடுத்துள்ளது அதே என்டிஏ. இதற்குச் சொல்லியிருக்கும் காரணம் என்ன தெரியுமா? `நேரம் போதவில்லை என்று வழக்கு தொடுத்துள்ளனர் அந்த மாணவர்கள். அதனால்தான் கருணை காட்டியுள்ளோம்’ என்று கூறியிருக்கிறது.
அன்று, சில நிமிடங்கள் தாமதமாக வந்த அந்தப் பெண் குழந்தைக்கு (நமக்குத் தெரிந்து ஒரு குழந்தை... நாடு முழுக்க இன்னும் எத்தனை எத்தனை குழந்தைகள் இப்படி தேர்வெழுதவிடாமல் விரட்டியடிக்கப்பட்டனவோ...) கருணை காட்ட மனமில்லாமல் வாசலிலேயே விரட்டியடித்த என்டிஏ, இன்றைக்கு கருணை மதிப்பெண்களை அள்ளிப்போட்டு, அவர்களில் பலரையும் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுக்க வைத்து, `மெரிட்’டில் தேர்ந்தெடுத்துள்ளது.
பாவப்பட்ட ஜென்மங்களாகப் பெற்றோர்!
நீட்... இந்தியக் குழந்தைகளை ஆட்டி வைக்கும் பேயாக மாறிவிட்டது. ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியபோதும், விடாப்பிடியாக அதை மத்திய அரசு நடத்திவருகிறது, உச்ச நீதிமன்றத்தின் பாதுகாப்போடு.
அரசியல்ரீதியில் பலவித எதிர்ப்புகள் காட்டப்படுவது ஒருபுறமிருக்க... பெற்றோர்களாக படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது. ஏற்கெனவே, ப்ரிகேஜி தொடங்கி, ப்ளஸ் டூ வரைக்கும் ஒரு குழந்தையைப் படிக்க வைப்பதே இந்த நாட்டில் `பிரம்மபிரயத்தன’மாகத்தான் இருக்கிறது. காரணம்... எல்லோருக்கும் சமமான கல்வி என்பது இங்கே இல்லவே இல்லை என்பதுதான்.
பணம் இருந்தால் மட்டுமே படிப்பு என்கிற சூழலில், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தால் ப்ளஸ் டூ வரைக்கும் படிக்க வைப்பதற்குள்ளேயே பல லட்சங்கள் கரைந்துவிடுகின்றன. அரசுப் பள்ளிக்கூடங்களில் சேர்த்தாலும்கூட, மற்றவர்களைப்போல இன்ஜினீயர், டாக்டர் எனப் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர்... டியூஷன், கோச்சிங் என்று பல்லாயிரங்கள்... பல லட்சங்கள்... எனச் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நீட் என்கிற பெயரில் கோச்சிங் சென்டர்களுக்கும் கொட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இத்தனைக்கு பிறகும், அந்தத் தேர்வில் நடந்தேறிக் கொண்டிருக்கும் விதவிதமான மோசடிகள், நியாயப்படி படித்து முன்னேற நினைக்கும் குழந்தைகளையும் பெற்றோரையும் பெரும் விரக்தி மனநிலைக்குத் தள்ளியிருக்கிறது.
தேர்தல் நிதியாகாவும் பாய்ந்ததா நீட் பணம்?
ஒரு வினாத்தாளுக்கு 38 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி தேர்வெழுதியிருக்கும் நபர்கள்தான், இந்திய மருத்துவத்தை நாளைக்குக் கட்டிக் காப்பாற்றப் போகிற `மெரிட்' நபர்கள். இப்படி வினாத்தாள் கசியும் அளவுக்கு என்டிஏ மெத்தனமாக இருந்ததெப்படி? அந்தத் துறையில் உள்ள எத்தனை பேருக்கு கமிஷன் கிடைத்தது? இந்தக் கமிஷன் அவர்களோடு நின்றதா... அல்லது இதற்கு முட்டுக் கொடுப்பவர்களின் தேர்தல் செலவுகளுக்கெல்லாம் கூட பாய்ந்ததா?
20 லட்சம் ரூபாய்க்கு ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய 8 பேர் கைது; நீட் தேர்வில் ‘0’ மதிப்பெண் பெற்றவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க விதிகள் தளர்த்தப்பட்ட கூத்து; கோச்சிங் சென்டர்களின் லட்சங்கள் கொள்ளை உள்ளிட்ட பழைய குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒரேயடியாக ஓரங்கட்டி நாட்டையே அலறவிட்டுக் கொண்டுள்ளது, தற்போது நடந்திருக்கும் மாபெரும் நீட் மோசடி!
கடந்த மே மாதம் நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக ஜூன் 4-ம் தேதியே வெளியிடப்பட்டன. அன்றைய தினம் நாடே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மூழ்கிக் கிடந்த வேளையில்தான் நீட் முடிவுகள் வெளியிடப்பட்டன. அது என்ன கணக்கோ?
கருணைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் மோசடி!
சரி, வழக்கமாக ஒன்றிரண்டு மாணவர்களே நீட் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறும் நிலையில், இவ்வருடம் 67 பேர் முழு மதிப்பெண்களான 720/720 பெற்றனர். ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றனர். இதையெல்லாம்விட கேலிக்கூத்து... இரண்டு மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் எடுத்திருந்ததுதான். நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இப்படி மதிப்பெண்கள் பெறுவதற்கு சாத்தியமே இல்லை. அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட பிறகுதான், உண்மை உலகத்துக்கே தெரிய வந்ததது. `நேரம் குறைவாக இருந்தது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்த மாணவர்களில் 1,563 பேருக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன’ என்று பெருமையோடு பதிலளித்தது என்டிஏ.
ஆனால், இதிலும் மாபெரும் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வான சி.எல்.ஏ.டி தொடர்பான வழக்கில், கருணை மதிப்பெண் வழங்கலாம் என்று அந்தத் தேர்வுக்கு மட்டும் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, திருட்டுத்தனமாக நீட் தேர்விலும் கருணை மதிப்பெண்களைப் போட்டதன் விளைவே, இருவர் 718, 719 பெற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப் படிப்புக்கு மட்டுமே பொருந்தும் என்பது, என்டிஏ எனும் தேசிய அளவிலான அமைப்பில் அமர்ந்திருக்கும் அதிமேதாவிகளுக்குத் தெரியாதா? கல்வி அமைச்சர் எனும் மாபெரும் பொறுப்பில் இருப்பவருக்கும் தெரியாதா? ஆனால், இந்த மோசடி தொடர்பாக, இதுவரை ஒருவர் மீதுகூட வழக்குப்பதிவு செய்யவில்லை... சுத்தம் சுயம்பிரகாச பா.ஜ.க அரசு.
உச்ச நீதியின் அனுமதியோடு ஓர் அநீதி!
உச்ச நீதிமன்ற விசாரணையில், 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, அந்த மாணவர்கள் மறுதேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் சுமார் 800 பேர் தேர்வை எழுதவில்லை. அந்த மர்மம் என்னவென்று தெரியவில்லை. மீதமுள்ளவர்கள் எழுதியுள்ளனர். இவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் பட்சத்தில், ஏற்கெனவே 23 லட்சம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ரேங்கில் மாற்றத்தை கொண்டுவரும். இது அவர்களுக்கெல்லாம் இழைக்கப்படும் அநீதி இல்லையா? இதைவிட, ஒட்டுமொத்தமாகத் தேர்வையே ரத்து செய்வதுதானே சரியாக இருந்திருக்கும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் துணையோடு இந்தக் கொடுமையையும் செய்து முடித்திருக்கிறது என்டிஏ.
பீகாரில் சில சென்டர்களில் தேர்வுக்கு முதல் நாளே தேர்வுத்தாள் கசிந்த குற்றச்சாட்டில், பாட்னா காவல்துறை, பொருளாதார குற்றவியல் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழு ஆகியவற்றின் விசாரணையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் ஒரு நீட் தேர்வு மையத்தில் நடந்த தேர்வுத்தாள் ஊழல் தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 4 பேரும், டெல்லியில் 3 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிந்தது உண்மையே என்று பீகார் போலீஸ் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு வினாத்தாளுக்கு குறைந்தபட்சம் 38 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது மத்திய பா.ஜ.க அரசு.
மேலும், பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவுக்குக் காரணமாக இருந்த முக்கியக் குற்றவாளி பிஜேந்திர குப்தா, `இவ்வருட நீட் இளநிலை தேர்வுகளில் வினாத்தாளை 700 பேருக்கு விற்க இலக்கு நிர்ணயித்து, ரூ.200 கோடியிலிருந்து 300 கோடிவரை வருமானம் எதிர்பார்த்து வேலைபார்த்தோம்’ எனக் குறிப்பிட்டிருப்பது, பேரதிர்ச்சி, வெட்கக்கேடு.
திறனில்லாவிட்டாலும், பணமிருந்தால் போதும்!
நீட் தேர்வில், பல முறை தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்பவர்களே அதிகமாக உள்ளனர். அதாவது, கோச்சிங் சென்டர்களுக்கு லட்சக்கணக்கில் செலவு, இரண்டு, மூன்று முறை தேர்வெழுதும் வசதிகளும் வாய்ப்பும் உள்ள பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்குமான தேர்வுதான் நீட் தேர்வு என்பதுதான் தற்போது நிதர்சனமாகி வருகிறது. மற்றவர்களையெல்லாம், `போட்டியிலிருந்து நீயாக விலகிக்கொள்’ என்று மறைமுகமாகப் பண்ணையார்தனம் செய்கிறது என்.டி.ஏ.
மொத்தத்தில், என்.டி.ஏ கூறிக்கொள்வது போல, எந்தப் போட்டியாளருக்கும் எந்தவித சலுகையும் இன்றி, அனைத்து தரப்பினரும் சம வாய்ப்புடன் போட்டியில் பங்கேற்கும் வகையிலான தேர்வாக இல்லை, இந்த நீட். திறமையான மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேர்வதை உறுதிசெய்யவில்லை இந்த நீட். மாறாக, திறனில்லை என்றாலும் பணமிருந்தால் போதும்... நீங்கள் டாக்டராகிவிடலாம் என்பதைத்தான் நிதர்சனமாக்கி வருகிறது என்டிஏ.
மேல்நிலை நீட் தேர்வும் அதிரடியாக ரத்து?
ஆரம்பத்தில் நாங்கெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பது போல பேசி வந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வினாத்தாள் கசியவே இல்லை என்றார். அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்தார். இப்போது, மேல்நிலைக் கல்விக்கான நீட் தேர்வை, முதல் நாள் மாலையில் அவசர அவசரமாக ரத்து செய்திருக்கிறார்கள். தேர்வெழுதுவதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து தேர்வு மையம் இருக்கும் இடங்களுக்குக் கிட்டத்தட்ட பலரும் சென்று சேர்ந்துவிட்ட நிலையில்... அதிரடியாக ரத்து செய்துள்ளனர்.
இளநிலை மற்றும் முதுநிலைக்கான கேள்வித்தாள் களையெல்லாம் ஏற்கெனவே விற்பனை செய்து காசு பார்த்தாகிவிட்டது. இளநிலைத் தேர்வு பல்லிளிக்கும் நிலையில், மேல்நிலைத்தேர்விலும் மோசடி அம்பலமாகிவிட்டால் என்னாவது என அவசர அவசரமாக ஒட்டுமொத்தமாகத் தேர்வையே ரத்து செய்துவிட்டார்கள் போல!
முட்டுச்சாமிகளே... கொஞ்சம் சிந்தியுங்கள்!
எங்கோ... யாரோ செய்த சில தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக நீட் தேர்வே மோசடி என்றால் எப்படி? பா.ஜ.க அரசாங்கத்தின் மீது கறைபூசினால் எப்படி என்று முட்டுக்கொடுக்க ஒரு கூட்டம் உடனே கிளம்பிவிடும்.
ஐயா முட்டுச்சாமிகளே... கொஞ்சம் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட்டு முட்டுக்கொடுங்கள்.
`எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'
என்று அய்யன் திருவள்ளுவர் சொல்லியிருப்பதை இங்கேயாவது... நாட்டின் குழந்தைகளுடைய எதிர்காலத்தை நினைத்தாவது கொஞ்சம் நேர்மையுடன் சிந்தித்துப் பாருங்கள்.
இதைச் சொல்வது தி.மு.க-வின் ஸ்டாலினாக இருந்தாலும் சரி... பா.ஜ.க-வின் மோடியாக இருந்தாலும் சரி... சொல்லப்பட்டிருப்பதில் உண்மை இருக்கிறதா என்று மட்டும் முதலில் பாருங்கள். `ஸ்டாலின் மோடியை எதிர்க்கிறார்... நாமும் மோடியை எதிர்க்க வேண்டும்'. 'மோடி, ஸ்டாலினை எதிர்க்கிறார் நாமும் ஸ்டாலினை எதிர்க்க வேண்டும்' என்று கட்சிகட்ட இது ஒன்றும் அரசியல் இல்லை.
ஸ்டாலின் இல்லையென்றால்... வேறொரு தலைவர். மோடி இல்லை என்றால் மற்றொரு தலைவர். ஆனால், லட்சோப லட்சம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை? நம் கையில்தான். நீங்கள் முட்டுக் கொடுக்கும் யாரும் வந்து நிற்கப் போவதில்லை.
- அவள்
(VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச் சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!)
- விகடன் இணையதளம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு