தொழிலாளர் துறை: மோடியின் வழியில் முந்திச் செல்லும் ஸ்டாலின்!

அறம் இணைய இதழ்

தொழிலாளர் துறை:  மோடியின் வழியில் முந்திச் செல்லும் ஸ்டாலின்!

இந்தியாவில் பாஜக அல்லாத வேறெந்த மாநிலமும் அமல்படுத்த துணியாத பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்தம் 65ஏ –வை திமுக அரசு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்குதல், தனியார் மயம் உள்ளிட்ட மோசமான அம்சங்களை எதிர்கொள்ள வேண்டும்!

மத்திய அரசின் தொழிலாளர்  விரோத சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தொழிற்சாலை நிர்வாகங்களின்  சுரண்டலுக்கு தோதாகச் செய்யப்பட்ட சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் போராட்டங்கள் நடத்திக் கொண்டுள்ள நிலையில் எந்தவித முனறிவிப்போ. விவாதங்களோ இன்றி தமிழ்நாட்டின் திமுக அரசு  தொழிலாளர் சட்டங்களில் கடுமையான மாற்றங்கள் மேற்கொண்டிருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை!

# வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை அதிகரிப்பது,

# வாழமுடியாத அளவுக்கு ஊதியங்களை குறைந்தபட்சமாக நிர்ணயிப்பது,

# தொழிலாளர்களுக்காக இருக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது,

# நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது..

போன்ற ஏற்கமுடியாத மாற்றங்களை தொழிற்சாலை திருத்த சட்டத்தில் கொண்டு வந்துள்ளது திமுக அரசு!

மேலும் இந்த திருத்தம் எந்தவொரு வேலையிலிருந்தும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கான விதிமுறைகளை தளர்த்துகிறது, தொழிற்சங்க உரிமைகளை மிகவும் மட்டுப்படுத்துகிறது. எந்த முக்கிய பணியாக இருந்தாலும் சரி, இனி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது! எனவே, ‘எந்த நேரமும் தான் வெளியேற்றப்படலாம்’ என்ற அச்சத்தை தொழிலாளர்களிடம் ஏற்படுத்துகிறது. மேலும், இது வரையிலும் ஒரளவுக்குகேனும் செயல்பட்டு வந்த தொழிலாளர் நலத் துறையின் ஆய்வுப் பணிகளை முடக்கி, முதலாளிகள் – தொழிலாளர்கள் விவகாரத்தில் தலையிடாமல் செய்கிறது!

இவ்வளவு மோசமான தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களின் அவசியம் தான் என்ன? இது மட்டுமில்லை, மேலும் சிலவற்றை கேட்டால், அதிர்ந்து தான் போவர், தொழிலாளர்கள்!

முதலாளிகள் கட்டற்ற முறையில் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும் விதத்தில் பழைய நிலப்பிரபுத்துவ நடைமுறைகளை மீட்டெடுக்க, பாஜக அரசு செய்யும் துரோக சட்ட திருத்தங்களுக்கு திமுக அரசு ஏன் துணை போக வேண்டும்?

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைத் தவிர போனஸோ, ஊக்கத் தொகையோ ஏன் தேனீர் போன்ற சாதாரண சலுகையைக் கூட கொடுக்க வேண்டியதில்லை. தற்போது இருப்பதைப் போல தொழிலாளர் நல ஆணையர் – முதலாளி – தொழிற்சங்கம் போன்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இனி வழி கிடையாது. இனி முதலாளிகள் தங்கள் லாபத்தை தவிர தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக் கடமைகளில் கவனம் செலுத்த அவசியமில்லை. தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் உடனடியாக பணி நீக்கம் செய்யலாம்.  அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை. எந்தவொரு வேலைக்கும் அதில் அனுபவமில்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தலாம். இதனால், தொழிலாளர்கள் சந்திக்க நேரும் விபத்துகளுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை. தொழிற் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க  வேண்டும் என்பது கட்டாயமில்லை. எவ்வளவு பாதிப்புகள், இழப்புகள் நேர்ந்தாலும் தொழிலாளர்கள் தங்கள்  தொழிற்சங்கங்களை நாட முடியாது!

இதையெல்லாம் பார்க்கும் போது, நம் நாடு நவீன சமுதாய நிலையில் இருந்து தன்னை பின்னோக்கி தள்ளிக் கொண்டு, பழைய ஆண்டை அடிமை நிலைக்கு கொண்டு செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இது தொடர்பாக கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருத்ததுடன் எழுதியுள்ள கடிதம் வருமாறு;

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12 அன்று தொழிற்சாலைகள் சட்டத்தில் பிரிவு 65 ஏ திருத்தமாக அறிமுகப்படுத்தபட்டு உள்ளது. இது தொழிலாளர்களது உரிமைகளுக்கு எதிராக உள்ளது. தினசரி வேலை நேரம் தொடர்பான தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த சட்டத் திருத்தம் இல்லாமல் செய்துவிடும். ஏற்கனவே, தொழிற்சாலைகள் சட்டத்தில் அவசர நேரங்களில் சில விதிவிலக்குகளை பெறுவதற்கு தொழிற்சாலைகள் சட்டம் வழிவகை செய்திருக்கும் நிலையில், எவ்வித கேள்வியுமின்றி முதலாளிகள் விருப்பம்  போல, தொழிலாளர்களை சுரண்டுவதற்கு தங்கு தடையற்ற அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் முதலாளிகளுக்கு வழங்குகிறது.

சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தத்திற்கான நோக்கங்கள் குறித்த விளக்கங்களின்படி, தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று தொழிலாளர்களின் நலச் சட்டங்களை திருத்துவது, தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கும் என்பதை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில், இத்தகைய சட்டத்திருத்தத்தை முன்மொழிந்திருக்கும் பாஜக அல்லாத ஒரு மாநிலம்  தமிழ்நாடு மட்டும் தான்! விவாதமோ, வாக்கெடுப்போ இல்லாமல் முற்றிலும் சர்வாதிகாரமாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம் நிறைவேற்றுவது எந்த வகையிலும் நியாயமற்றது’’ என தெரிவித்து உள்ளார்.

மற்றொருபுறத்தில் திமுக அரசானது தமிழக போக்குவரத்து துறையின் தொழிலாளர் பணி இடங்களை தனியார்மயமாக்கி வருவது கண்டு கொந்தளித்து வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளது சி.ஐ.டி.யு. தமிழக போக்குவரத்து துறையில் ஓட்டுனர், நடத்துனர்  பணிகளுக்கு பல ஆயிரம் பணி இடங்கள் காலியாக உள்ளன! அவற்றை ஒப்பந்தக் கூலி முறையில் நிரப்ப தமிழக அரசு முயற்சிப்பதை எதிர்த்தும், அதிலும் ஒரு நாளைய ஊதியமாக நடைமுறையில் உள்ள ரூ 930 க்கு மாற்றாக 553 என்று குறைத்திருப்பதையும் கண்டித்து இந்த சட்ட விரோத ஒப்பந்த நடவடிக்கைகளை கைவிடக் கோரி போராட்டம் அறிவித்துள்ளது சிஐடியு.

”எட்டு மணி நேர வேலை பறிப்பு: தமிழ்நாடு அரசின் மே தின பரிசா?” என ஆவேசமாக கேள்வி கேட்டு, ஏஐடியுசி சங்கம் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 21 ல் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களில் இருந்து தமிழக அரசு தங்களை பாதுகாக்கும் என நம்பிய காலங்களில் நடத்திய போராட்டங்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில்  தொழிற்சாலைகள் சட்டத்தைத் திருத்தி மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகள் சட்டம் ஒரு மத்திய சட்டமாகும். இந்த மசோதாவை சட்டப்பேரவையில் விவாதிக்க விட்டிருந்தால், மாற்றுக்கருத்தை சொல்லவாவது வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தொழிலாளர் அமைச்சர் இதை முன்வைத்த உடனேயே குரல் வாக்கெடுப்பில் சில வினாடிகளில் இது நிறைவேற்றப்பட்டு விட்டது. சட்ட மசோதாக்களை  விவாதிக்க விடாமல் அவசர கதிப்போக்கில் நிறைவேற்றுவது ஜனநாயக அரசியல் அமைப்பின் உள்ளடக்கத்திற்கு எதிரானதாகும்.150 ஆண்டுகால உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை 40 வினாடிகளில் மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக கொண்டு வந்துள்ள சட்டத் தொகுப்புகளில், தொழில், பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பும் ஒன்றாகும். இதனை ஒன்றிய ஆளுங்கட்சியின் பிஎம்எஸ், தமிழ்நாடு ஆளும்கட்சியின் எல்பிஎப் ஆகிய சங்கங்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் அவற்றை இன்னும் செயல்படுத்த முடியாமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

அது தாமதமாவதால், அந்தச் சட்டங்களில் சொல்லப்பட்டு இருப்பவற்றை இப்போதே தமிழ்நாட்டில் அமுலாக்குவதற்காகவே இந்தச் சட்ட திருத்தம் என ஐயத்துக்கிடமில்லாமல் மசோதா தெளிவுபடுத்துகிறது. மோடியின் வழியில் அவரை விட முந்திக்கொண்டு செல்ல முயற்சிப்பது தமிழ்நாடு அரசுக்கு அழகல்ல. தமிழக அரசு தொழிலாளர் விஷயத்தில்  தொடர்ந்து முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் சொற்படி நடந்து தொழிலாளர் உரிமைகளை பறிப்பதற்கு வழிவகை செய்து தருகிறது. பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.

எட்டு மணி நேர வேலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் நினைவாக மேதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில், சென்னை கடற்கரையில் தான் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் முதல் முறையாக மேதினத்தை 1923ல் கொண்டாடினார். அதன் நூறாண்டு நிறைவு இந்த மே தினம். அதே கடற்கரையில் அமைந்திருக்கும் சட்டப்பேரவையில் 8 மணி நேர வேலையை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்படுவது பாதை மாறுகிறது என்பதன் அடையாளமாகவே உணர்த்தப்படுகிறது” என ஏஐடியுசி காட்டமாக அறிக்கை தந்துள்ளது.

திமுக அரசு செயல்படுத்தும் இவை எல்லாம் முழுக்க, முழுக்க பாஜக ஆட்சி செய்யும் குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற மாநில அரசுகள் கடைபிடிக்கும் அணுகுமுறைகள் என்பது தான் கவலையளிப்பதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/13197/65a-workers-act-dmk-govt/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு