முதலாளிகளுக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சலுகைகள், மக்கள் நலத் திட்டச் செலவுகளில் வெட்டு - இதுதான் இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை
செந்தழல்

பிப்ரவரி 1 ஆம் தேதியன்று விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) எனும் கவர்ச்சிகரமான முழக்கதுடன் 2025 - 26 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய அரசின் பட்ஜெட் என்பது உத்தேசமான ஒதுக்கீடுகள் தானே தவிர அவை அப்படியே நடைமுறையில் நிறைவேற்றப்படுவதில்லை. இவற்றில் சில வகையினங்களுக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை, சிலவற்றில் ஒதுக்கீடு செய்ததைக் கூடப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலானவற்றில் இந்தத் திட்ட மதிப்பீடுகள் மீண்டும் மறுமதிப்பீடு செய்யபட்டு மாற்றியமைக்கப்படுகின்றன. எனினும், வரும் நிதியாண்டில் இந்திய அரசின் பாதை எத்தகைய திசை வழியை நோக்கிச் செல்கின்றது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அனைவருக்குமான வளர்ச்சி என்ற பெயரில் சில சில்லறைச் சீர்த்திருத்தங்களைப் பட்ஜெட்டில் அறிவிக்கும் அரசு, எப்பொழுதும் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில்தான் நிதி நிலை அறிக்கையைத் தயார் செய்கின்றது. ஆட்சியிலிருக்கும் கட்சி இது எளிய மக்களுக்கான பட்ஜெட் எனப் பீற்றிக் கொள்ளும், எதிர்க் கட்சிகள் இது முதலாளிகளுக்கான, பணக்காரர்களுக்கான பட்ஜெட் எனக் குற்றம் சாட்டும். எதிர்க் கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளும் கட்சியாக மாறியவுடன் அவர்கள் தாக்கல் செய்யும் அறிக்கையை சாமான்ய மக்களுக்கான பட்ஜெட் எனக் கூறுவார்கள். இது நாள் வரை ஆட்சியிலிருந்து தற்பொழுது எதிர்க் கட்சி வரிசையில் இருப்பவர்கள் இது பணக்காரர்களுக்கானது, முதலாளிகளுக்கானது என்று கூறுவர்.
எதிர்க் கட்சி வரிசையில் இருக்கும் வரை மக்கள் நலன் மேல் அக்கறை உள்ளது போன்று காட்டிக் கொள்ளும் முதலாளித்துவக் கட்சிகள், ஆளும் கட்சியாக மாறியவுடன் தம்முடைய வர்க்கச் சார்பை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொள்கின்றன.
வருமான வரி விலக்கு - பயன் பெறுவது யார்?
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி வரம்பை ரூ.7 இலட்சத்திலிருந்து ரூ.12 இலட்சமாக உயர்த்தியதன் மூலம் தாம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் நலன் விரும்பி என்பதைப் போன்று பாஜக அரசு தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றது. முதலாளித்துவ ஊடகங்களும், அரசின் இந்த அறிவிப்பை வானாளவப் புகழ்ந்து துதி பாடி வருகின்றன. ஆனால், இந்த வரி விலக்கினால் பயன் பெறப்போவது இரண்டு கோடி பேர் மட்டுமே.
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த நாளுக்கு முந்தைய நாள் (ஜனவரி 31) கடந்த நிதியாண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதில், மாத வருமானம் ஈட்டக் கூடியவர்களுடைய சராசரி மாத ஊதியம் 2023-24 இல் 13,279 ரூபாய் என அரசு தெரிவிக்கின்றது. அதாவது வருடத்திற்கு சுமார் 1.6 இலட்சம் ரூபாய். ஆனால் அரசோ, 12 இலட்சம் வரை வருமான வரி இல்லை என்கின்றது. ஏற்கனவே இருந்த 7 இலட்ச ரூபாய் வரை வரி இல்லை என்ற அறிவிப்பின் பயனையே பெரும்பான்மையான தொழிலாளர்கள் எட்டாத நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பானது மத்திய தர வகுப்பினரின் உயர் பிரிவிற்கும், உயர் அதிகார வர்க்கத்தினருக்கும் மட்டுமே பயன்படக் கூடியதாக இருக்கும். அதே போன்று ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களின் நாள் ஊதியம் 2023 - 24 இல் நாளொன்றுக்கு ரூ.418 அதாவது வருடத்திற்கு (வருடம் முழுவதும் வேலை கிடைத்தால்) ரூ 1.25 இலட்சம் ஆகும். இவர்களுக்கும் இந்த அறிவிப்பு எந்தவிதத்திலும் பயனளிக்கப் போவதில்லை.
பெரும்பான்மையான ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடுமையான ஜிஎஸ்டி வரியை விதித்து அவர்களிடமிருந்து பெரும் அளவில் வரியைக் கசக்கிப் பிழிந்து வருகிறது இந்த அரசு. அதில் எந்தவித வரிக் குறைப்பையும் செய்யவில்லை. கடுமையாக உயர்ந்துள்ள எரிவாயு உருளைகளின் விலையைக் குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் மீதுள்ள வரிகளைக் குறைக்கவில்லை.
அதே போல, எழுத, படிக்கத் தெரியாதவர்கள் மத்தியில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை விட உயர்பள்ளிக் கல்வியைப் பெற்றவர்கள் மத்தியில் ஆறு மடங்கும், பட்டதாரிகள் மத்தியில் ஒன்பது மடங்கும் வேலை இல்லாத் திண்டாட்டம் நிலவி வருகிறது. மிகப் பெரும்பான்மையான மக்களின் சராசரி மாத ஊதியம் ரூ.13279 மட்டுமே. வருமானமே இல்லாமலும், மிகக் குறைவான வருமானமே பெற்றும் மிகப் பெரும்பான்மையான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் சுமார் 2 கோடி பேர் பயன் பெறும் வகையில் வருமான வரிச் சலுகையை இந்த அரசு வழங்கி விட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் சலுகை அளித்தது போன்ற பிரமையை உருவாக்கியுள்ளது.
வருமான வரிச் சலுகையின் பொருளாதார, அரசியல் நோக்கங்கள்!
நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கப்பட்ட இந்த வருமான வரிச் சலுகையால் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சலுகையால் நடுத்தர வர்க்க மக்களின் கைகளில் பணம் புரளும். நிறையப் பொருட்களை வாங்குவார்கள். அதன் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கம் உடையும். மேலும் சேமிப்பு அதிகரிக்கும். முதலீடு அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும் என்கிறார் நிதியமைச்சர். ஆனால் அது நிறைவேறப் போவதில்லை. ஏனென்றால் முதலாவது காரணம், இதனால் பயன் பெறுவோர் சில கோடிப் பேர்களே. இவர்களின் நுகர்வு இங்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்கத்தை உடைக்கும் அளவுக்குப் பெரிய அளவில் இருக்கப் போவதில்லை. இரண்டாவது காரணம் இந்த வர்க்கம் தனது கையிலுள்ள பணத்தை தங்க நகைகளையும், வீட்டு மனைகளையும், வீடுகளையும் வாங்குவதில் தான் அதிகம் செலவிடும். எஞ்சியுள்ள சேமிப்பை கார் மற்றும் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்படும் நுகர்வுப் பொருட்களை மட்டும் வாங்கும். அதனால் நிதியமைச்சர் கருதுவது போல அனைத்துப் பொருட்களுக்குமான நுகர்வு அதிகரிக்காது. முதலீடும் அதிகரிக்காது.
கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஓரளவு ஆதாரமாக இருந்து வருவது மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (100 நாள் வேலை திட்டம்) ஆகும். வறுமையில் வாடும் கிராமப்புற மக்களின் கைகளில் பணப் புழக்கத்தை உருவாக்குவதன் மூலம் சந்தையில் உள்ள தேக்கத்தை உடைக்கலாம் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் அந்தத் திட்டம். ஆனால் அந்தத் திட்டத்திற்குத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 86,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவானது ரூ.2.5 இலட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், இந்திய அரசு மூன்று ஆண்டுகளாக அதன் அளவை மாற்றவேயில்லை. மேலும், இதற்கான தொகையும் முழுமயாகச் செலவிடப்படுவதில்லை. இந்த அரசுக்கு கிராமப்புறங்களில் வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் மீது சிறிதும் அக்கறையில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ. 12 இலட்சம் வரை சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கங்களின் மீதுதான் அதிக அக்கறை உள்ளது.
நடுத்தர வர்க்கத்திற்குச் சலுகை அளிப்பதன் மூலம் அந்த வர்க்கத்தின் ஆதரவைத் தனக்குச் சாதகமாக மாற்றித் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்கிறது பாஜக அரசு. மேலும், ஊடகங்கள் மூலம் சமூகத்தில் பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றி வரும் வர்க்கம் நடுத்தர வர்க்கம்; அந்த வர்க்கத்தின் ஆதரவு பாஜக அரசுக்குத் தேவை. அந்த வர்க்கத்தைத் தன் கீழ் அணி சேர்த்துக் கொள்வதன் மூலம் தனது இந்துத்துவாப் பாசிச, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அந்த வர்க்கத்திடமிருந்து ஆதரவு பெற்றுத் தனக்குக் சாதகமான கருத்துகளை மக்கள் மத்தியில் உருவாக்க முடியும். அந்த அரசியல் நோக்கத்துடன்தான் பாஜக அரசு இந்தச் சலுகையை வழங்கியுள்ளது.
அதிகரித்து வரும் முதலாளிகளின் இலாபங்களும் குறைந்துவரும் தொழிலாளர்களின் ஊதியமும்!
2024 நிதியாண்டில் பெரிய கார்ப்பரேட்டுகளின் இலாபம் 22.3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அதே வேளையில், தொழிலாளர்களின் ஊதியமோ வெறும் 1.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. வேகமாக அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுடன் ஒப்பிடுகையில் அதை வீழ்ச்சி என்றே கூற வேண்டும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 4000 நிறுவனத்தின் வருவாய் சராசரியாக கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களுக்கான செலவினங்கள் 17 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உற்பத்தி செய்யபட்ட பொருட்களின் விற்பனை தேக்கமடைந்து வரும் நிலையில் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் ஊதியத்தின் அளவு சரிந்து கொண்டு செல்வதைச் சுட்டிக் காட்டி, தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதன் மூலமே இந்த நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்று எச்சரித்தனர். ஆனால், ஊதியத்தை உயர்த்துவது பற்றி முதலாளிகள் வாய் திறப்பதில்லை. இதற்கிடையில் நிரந்தர வருவாய் பெறக்கூடிய பிரிவினருக்கு வரிச்சலுகை அளிப்பதன் மூலம் அவர்களிடையே செல்வாக்கு செலுத்தவும், மற்றும் இந்தப் பலனால் கிடைக்க கூடிய பணத்தைக் கொண்டு தேங்கி இருக்கும் சந்தையை மீண்டும் பழைய இயக்கத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும் இந்திய அரசு நினைக்கின்றது.
புதிய முதலீடுகள், வேலை வாய்ப்புகள், ஊதிய அதிகரிப்பு ஆகியவை வரும் எனக் கூறி கார்ப்பரேட்டுகளுக்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வரிச் சலுகைகளாக பாஜக அரசு அளித்தது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூ.14.5 இலட்சம் கோடி வராக் கடன்கள் தள்ளுபடி செய்யபட்டுள்ளது. இதில் ஆகப் பெரும்பான்மையான பகுதி விரல் விட்டு எண்ணக் கூடிய சில முதலாளிகளுக்கானது ஆகும். ஆனால், முதலாளிகள் இலாபத்தை அள்ளிக் குவித்தார்களே தவிர அவர்கள் தங்களுடைய முதலீடுகளை அதிகரிக்கவில்லை. புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. கிடைத்த இலாபத்தை எல்லாம் தங்களுடைய நிறுவனங்களின் பங்குகளை அவர்களே வாங்கி பங்களின் விலைகளை உயர்த்தி மேலும் இலாபம் சம்பாதித்தனர். மேலும் வீட்டு மனை இடங்களில் (Real Estate) முதலீடு செய்து அதன் விலையை உயர்த்தினர்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தார். அப்பொழுது ‘தரமான வேலைகள் உருவாக்கப்படுவதில்லை என அரசின் மீது குற்றம் சாட்டப்படுகின்றதே’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘முதலாளிகள் எதிர்பார்க்கும் திறன் பெற்ற தொழிலாளர்கள் சந்தையில் இல்லை. வேலைகள் சந்தையில் உள்ளது. ஆனால், பொருத்தமான திறன் பெற்ற தொழிலாளர்கள் இல்லை. இருக்க கூடிய திறன் பெற்ற தொழிலாளர்களும் சந்தையில் இருக்கும் வேலையை பெற முடியாமல் உள்ளனர். இதற்கான இணைப்பை உருவாக்க அரசு முயற்சி செய்து வருகின்றது. அதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக’ நிதியமைச்சர் கூறுகிறார்.
ஆனால், கடந்த ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேலை மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் இரண்டு இலட்சம் கோடி மதிப்பீட்டில் 4.1 கோடி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஐந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொடர்ச்சி ஆகியன குறித்து இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை. அந்தத் திட்டம் வெறும் அறிவிப்பாக மட்டுமே நின்று போனது. இந்த நிலையில் இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வருடத்திற்கு 78.5 இலட்சம் விவசாயம் சாராத வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது.
தொழிலாளர் விரோதச் சட்டங்கள்!
தொழில்துறை முன்னேற்றம் அடையவும், தொழிலை இலகுவாக நடத்தவும், உழைப்புச் சந்தையில் முதலாளிகளுக்கு ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கவும் தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்துள்ளதாகவும், பெரும்பான்மையான மாநிலங்கள் அதற்கான விதிமுறைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் ஜனவரி 31 ந்தேதி நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இந்திய அரசின் பொருளாதார அறிக்கை கூறுகின்றது. மேலும், இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் பெரும்பாலான மாநிலங்கள் ஏற்கனவே பழைய தொழிலாளர் சட்டங்களிலேயே சில திருத்தங்களைச் செய்து உடனடியாக நடைமுறைக்கு கொணடு வந்துள்ளன என அந்த அறிக்கை பாராட்டியுள்ளது.
100 தொழிலாளர்களுக்கு மேல் பணி புரியும் எந்த ஒரு தொழிற்சாலையிலும் ஆட்குறைப்பு, தற்காலிக மூடல், அல்லது நிரந்தரமாக மூடுவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற வரம்பை 300 என்று உயர்த்தி ‘தொழிற்தகராறு சட்டத்தில்’ திருத்தம் செய்து 14 மாநில அரசுகள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.
குறித்த கால வேலை முறை என்னும் திட்டத்தை (Fixed Term Emplyment) ‘நிலையாணைகள் சட்டத்தை’ திருத்தம் செய்ததன் மூலம் ஆறு மாநில அரசுகள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.
15 மாநில அரசுகள் பெண்கள் இரவு நேரத்தில் பணியமர்த்துவதற்கான சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன.
12 மாநில அரசுகள் ‘ஒப்பந்தத் தொழிலாளர் சட்டங்களுக்கான’ குறைந்தபட்ச தொழிலாளர்களின் எண்ணிக்கையை 20 லிருந்து 50 ஆக உயர்த்தியுள்ளன. இதன் மூலம், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 49 அல்லது அதற்கு கீழே இருந்தால் அவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.
‘தொழிற்சாலைகள் சட்டம்’, 10 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்பதை 20 தொழிலாளர்கள் என 14 மாநிலங்கள் மாற்றியமைத்துள்ளன.
மிகை நேர பணியின் அதிகபட்ச வரம்பானது காலாண்டிற்கு 75 மணி நேரம் என்றிருந்ததை 144 மணி நேரம் என்று 7 மாநில அரசுகள் அதிகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் கூடுதல் வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவர். தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிவதற்கு ஏதுவாக சட்டவகைகளைத் திருத்தம் செய்து நடைமுறைக்குக் கொண்டு வருவதில் எந்த முதலாளித்துவக் கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதை மாநில அரசுகளின் இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்குகள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
மக்களின் நலன்களுக்கான செலவுகளில் வெட்டு!
இவை மட்டுமல்லாது, அடித்தட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதற்கான எந்த திட்டமும் இந்த அறிக்கையில் இல்லை. கல்வித்துறைக்கு 1.28 இலட்சம் கோடி (2.3%), சுகாதாரத் துறைக்கு 98,311 கோடி (1.8%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. உரத்திற்கான மானியத்தை கடந்த ஆண்டை காட்டிலும் 3400 கோடி ரூபாயைக் குறைத்தும், சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை 2700 கோடி ரூபாயைக் குறைத்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சந்தையின் நிச்சயமற்ற தன்மையில் விவசாயிகள் பெரும் இழப்புக்குள்ளாவதை பற்றி எந்தவித அக்கறையுமற்ற அரசு, அவர்களின் துயர் துடைக்க கடன் அட்டைகள் மூலம் வழங்கப்படும் கடன் அளவை ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் உழைப்பின் ஒரு பகுதியை வட்டியாக வங்கி மூலதனம் சுரண்டுவதற்கு வழி வகை செய்யுமே தவிர, அவர்களின் துயர் துடைக்க எவ்விதத்திலும் உதவப் போவதில்லை.
ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்பது ஒழிக்கப்பட்டு, பொது நிதி நிலை அறிக்கையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்பொழுது இரயில்வே துறைக்கு செய்யபடும் ஒதுக்கீடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டு ரூ. 2.62 இலட்சம் கோடியிலிருந்து இந்த ஆண்டு ரூ. 2.35 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் பல இலட்சம் வேலை இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அதன் காரணமாகவே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காலி இடங்களை நிரப்பவோ இரயில்வே பாதுகாப்பிற்கான திட்டத்திற்கோ போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.
ஒட்டு மொத்தத்தில் பெரும்பான்மையாய் இருக்க கூடிய சாதாரண மக்களின் மீது சுமைகளை ஏற்றி, வரிகளை அதிகப்படுத்தி, இதனால் கிடைக்கக் கூடிய வருவாய்களை சிறுபான்மையாக உள்ள முதலாளிகள் மற்றும் உயர் நடுத்தவர்க்கங்களின் நலன்களுக்காகச் சலுகைகளாக வழங்கி வருகின்றது இந்திய அரசு. இதில் தற்போதைய ஆளும் கட்சிக்கும், ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இவர்கள் மேடையில் மட்டுமே மக்களின் நண்பர்களாக முழங்குவார்கள், ஆனால், இவர்களின் விசுவாசமும், செயல்பாடுகளும் ஆளும் வர்க்கமான முதலாளி வர்க்கத்தின் நலனையே சுற்றி இருக்கும். கடந்த 80 ஆண்டுகால இந்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன.
(குமணன்)
- செந்தழல் இணையதளம்
https://senthazhalmagazine.blogspot.com/2025/02/blog-post_10.html
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு