கௌரி லங்கேஷ், கல்புர்கி கொலைக் குற்றவாளிகள் கர்நாடக காங்கிரசு ஆட்சியில் ‘பொது வெளியில் பாராட்டப்படுகிறார்கள்’, ‘இந்துப் புலிகள்’ என பட்டம் சூட்டப்படுகிறார்கள்
தமிழில்: விஜயன்

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், பகுத்தறிவு சிந்தனையாளர் எம்.எம். கல்புர்கி ஆகியோரைக் கொலை செய்த குற்றவாளிகளான அமித் பட்டி, கணேஷ் மிஸ்கின் ஆகியோருக்கு, அவர்களின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் 2025, பிப்ரவரி 2 அன்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்னட நாளிதழான விஜயா கர்நாடகாவின் செய்தியின்படி, பட்டி மற்றும் மிஸ்கின் ஆகியோருக்கு மலர் மாலைகளும் சால்வைகளும் அணிவிக்கப்பட்டன. அவர்களின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து ஆரவாரம் செய்ததுடன், அவர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பெரிய வெள்ளை பூசணிக்காய்களை உடைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொலைக் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் பட்டியும், மிஸ்கினும் வலதுசாரி இந்து அமைப்புகளுடன் தங்களுக்குள்ள தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக, சித்தாரூடா மடம், மூருசாவிரா மடம் ஆகிய இரண்டு முக்கியமான இந்து மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றனர். செல்வாக்குடைய அமைப்புகளின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, துலாஜா பவானி கோயில் உட்பட ஹூப்பள்ளியின் பல்வேறு பகுதிகளில், அவர்களை "இந்துப் புலிகள்" என்று புகழ்ந்து பதாகைகள் வைக்கப்பட்டன. பின்னர், கோயில் நிர்வாகத்தினரே அந்த பதாகைகளை அகற்றினர்.
இதுபோன்ற குற்றவாளிகளுக்கு பகிரங்கமாக வரவேற்பு அளிப்பது என்பது எப்போதாவது நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இது தீவிர இந்துத்துவா கும்பல்களிடையே பெருகி வரும் ஒரு கவலைக்குரிய போக்காகும். இந்தக் கும்பல்கள், கொலை, பாலியல் வன்கொடுமை, கும்பல் வன்முறை போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களைக் கண்டித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களை போராளிகள் போலக் கொண்டாடுகின்றன.
கதா நாயகர்களாக மாறும் கொலைகாரர்கள்
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களாகக் கருதப்படும் பரசுராம் வாக்மோர், மனோகர் யாதவ் ஆகியோர் சிறையிலிருந்து விடுதலையானபோது வீரர்கள் போலவே கொண்டாடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, பாடி, மிஸ்கின் ஆகியோரும், அக்டோபர் 2024-இல் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு பொது மக்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர். 2024 அக்டோபர் 9 ஆம் தேதி, பெங்களூரு நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. அவர்கள் விஜயபுராவை அடைந்ததும், ஸ்ரீ ராம் சேனா என்னும் தீவிர வலதுசாரி அமைப்பு அவர்களுக்கு பூ மாலைகள் அணிவித்து, வெற்றி முழக்கங்களை எழுப்பி, பிரம்மாண்டமான தெரு ஊர்வலத்துடன் வரவேற்றது.
இந்த தெரு ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய உமேஷ் வண்டல், வாக்மோர் மற்றும் யாதவ் ஆகிய இருவரையும் காவி நிற சால்வைகளால் போர்த்தி, போர் வீரர்களைப் போல கௌரவித்தார். குற்றம் செய்ததற்காக வருந்துவதற்குப் பதிலாக, அவர்கள் இருவரும் சிவாஜி மகாராஜாவின் சிலை முன்பு பகிரங்கமாக தலைவணங்கி, தங்களை இந்துத்துவா கொள்கைக்காக போராடும் வீரர்கள் போலக் காட்டிக்கொண்டனர். இந்த நிகழ்வின் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. இது சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏஙறபடுத்தியது. ஆனால், அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்தை கண்டிப்பதற்குகூடத் முன்வரவில்லை.
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர், 2024 அக்டோபர் 19 அன்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பங்கர்கர், இதற்கு முன்னர் மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி மன்ற உறுப்பினராக இருந்துள்ளார், மேலும் 2018-ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலையைத் திட்டமிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்னர், கர்நாடக உயர் நீதிமன்றம் 2024 செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக பங்கர்கரை சிவசேனா கட்சியில் சேர்த்துக் கொண்டது பல தரப்பினரையும் கொந்தளிப்படையச் செய்த்து. பொதுமக்களின் எதிர்ப்பின் விளைவாக, முதல்வர் ஷிண்டே உடனடியாக பங்கர்கரின் அடிப்படை உறுப்பினர் நிலையை ரத்து செய்வதாக அறிவித்தார். இருப்பினும், இந்த நடவடிக்கை வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான உண்மையான அர்ப்பணிப்பைக் காட்டுவதை விட, சிவசேனா கட்சியின் நற்பெயரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
பில்கிஸ் பானோ வழக்கு, கௌரி லங்கேஷ் கொலை வழக்கு போன்ற துயரமான சம்பவங்களில், குற்றவாளிகளை பொதுவெளியில் கொண்டாடுவதும், குறிப்பாக பெண்களுக்கு எதிராக ஈவிரக்கமின்றி கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களைப் போற்றிப் புகழ்வதும் ஒரு கவலைக்குரிய, ஆபத்தான போக்காகும். பில்கிஸ் பானோ வழக்கில் நடந்த கொடூரம் என்னவென்றால், 2002 குஜராத் கலவரத்தின்போது கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கும்பல் படுகொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகள் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதோடு, சில வலதுசாரி அமைப்புகள் அவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தன. இது பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடிய குற்றங்களுக்கு எல்லாம் தண்டனையே கிடையாது என்ற ஒரு தவறான எண்ணத்தை சமூகத்தில் விதைத்தது. அதேபோல, இந்துத்துவ கும்பல்களின் தவறான செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக, துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக அறியப்பட்ட கௌரி லங்கேஷை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் பொதுவெளியில் கௌரவிக்கப்பட்டனர். இது அவர்கள் செய்த கொடூரமான குற்றம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியது. இந்த இரண்டு சம்பவங்களுமே பெண்களுக்கு எதிரான வன்முறையை - அது பாலியல் வன்கொடுமை ஆகட்டும் அல்லது திட்டமிட்ட கொலைகளாக இருக்கட்டும் - தீவிரவாதக் குழுக்கள் வெறுப்புணர்வைத் தூண்டி, தங்கள் எண்ணங்களைச் சமூகத்தில் பரப்புவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. மேலும், இந்த குற்றவாளிகளுக்கு அரசாங்கம் சரியான தண்டனை வழங்கத் தவறிவிட்டது என்பது மட்டுமல்ல பெண்கள் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக இல்லை என்பதும், நீதியின் கரங்கள் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு வலுவாக இல்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. இப்படிப்பட்ட கொடிய குற்றவாளிகளைப் போற்றுவது, பாதிக்கப்பட்டவர்களின் சொல்லொணாத் துயரத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், வருங்காலத்தில் பெண்கள் மீதான வன்முறை, அரசியல் உள்நோக்கம் கொண்ட கொலைகள் போன்ற பாதகமான சம்பவங்கள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கமளிப்பதாக அமையும்.
கொலைபாதக வெறுப்புக் கும்பல்களின் வலைப்பின்னலை வெளிச்சத்திற்கு கொண்ட வந்த கௌரி லங்கேஷ் கொலை வழக்கு
சரியாகச் சொன்னால், 2017ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது ஒரு சாதாரண வன்முறைச் செயல் அல்ல. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதிச் செயல். குறிப்பாக, இந்துத்துவ சித்தாந்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், அறிவியல் சிந்தனையை ஆதரித்தவர்கள், சமூகத்தில் முற்போக்கான மாற்றங்களை விரும்பியவர்கள் ஆகியோரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. கௌரி லங்கேஷ் ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளராகத் திகழ்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் 2017 செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடூரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மேற்கொண்ட விசாரணையின் முடிவில், 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சனாதன் சன்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உடையவர்கள் என்பது தெரியவந்தது. இதன் மூலம், இந்துத்துவ தீவிரவாதிகள் ஒரு பெரிய குழுவாக பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், கௌரி லங்கேஷை சுட்டுக் கொன்றது வாகமோரே என்றும், அவருக்கு மிஸ்கின் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல உதவி செய்தார் என்றும் தெரியவந்தது. அரசியல் காரணங்களுக்காக நடந்த கொலைகள் தொடர்பான மற்ற வழக்குகளைப் போலவே, இந்த வழக்கிலும் நீதிமன்றத்தில் விசாரணை தாமதமாகிக் கொண்டே வருகிறது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் சட்ட வழியில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர்.
கௌரி லங்கேஷ் கொலைக்கும், பகுத்தறிவாளர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மற்ற வழக்குகளுக்கும் இடையே அதிகப்படியான தொடர்புகள் இருப்பதை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக, எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரின் கொலைகளுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்துத்துவ தீவிரவாதிகள், தங்களது தீவிர இந்து இராஜ்ஜியக் கருத்துகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை குறிவைத்துத் தாக்குவது, ஒரு திட்டமிட்ட சதியின் வெளிப்பாடு என்று கண்டறியப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பொதுவெளியில் தரப்படும் கௌரவம், அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கவில்லை என்பதை உணர்த்துகிறது. மாறாக, மதச்சார்பின்மை கொள்கைக்கும், பகுத்தறிவு சிந்தனைகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களாகவே அவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
தண்டனைப் பெற்ற குற்றவாளிகளை இந்துத்துவ கதாநாயகர்களாக வழிபடுவது ஓர் அமைப்புமுறை வடிவம்
கர்நாடகாவில் கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் உருவாக்கப்படும் சமூக ஆதரவு என்பது ஏதோவொரு விதிவிலக்கான நிகழ்வு அல்ல. இது ஒரு திட்டமிட்ட போக்கின் வெளிப்பாடு. அதாவது, மதக்கலவரம், பாலியல் வன்முறை, வகுப்புவாத, சாதியவாத, இனவாத காழ்ப்புணர்வால் நடத்தப்படும் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைத் தொடர்ச்சியாக இந்துத்துவா அமைப்புகள் புகழ்ந்து வருகின்றன.
இதற்கான சில உதாரணங்கள் பின்வருமாறு:
• 2022: பில்கிஸ் பானு வழக்கு (குஜராத்) - கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பல உயிர்களைக் கொன்ற குற்றவாளிகள் 11 பேர், தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அரவிந்த் சிசோடியா என்பவர், கோத்ராவில் அவர்களுக்குப் பூ மாலை அணிவித்து வரவேற்றார். இது, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு வெளிப்படையான ஆதரவு வழங்கப்படுவதைக் காட்டியது.
• 2020: புலந்த்சாஹர் வன்முறை (உத்தரப் பிரதேசம்) - காவல் அதிகாரி சுபோத் குமார் சிங் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அந்தக் கும்பலுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷிகார் அகர்வால் என்பவருக்கு, புலந்த்சாஹர் மாவட்டத்தின் பாஜக தலைவர் அனில் சிசோடியா பாராட்டு தெரிவித்தார். இதன் மூலம், அரசியல்வாதிகள் வன்முறையாளர்களைப் பாதுகாப்பது வெட்ட வெளிச்சமானது.
• 2019: புலந்த்சாஹர் கும்பல் வன்முறை வழக்கு (உத்தர பிரதேசம்) காவல் அதிகாரி சிங் என்பவரை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரை, பஜ்ரங் தளம், விஎச்பி போன்ற வலதுசாரி அமைப்புகள் கதாநாயகர்களைப் போல கொண்டாடினார்கள். இது, கும்பல் வன்முறைக்கு சமூக ஆதரவு இருப்பது போன்ற மனநிலையை உருவாக்கியது.
• 2018: குஜராத் கலவரத்தை திட்டமிட்டவருக்குப் கௌரவ விழா (குஜராத்) - 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தைத் திட்டமிட்டதில் தனக்கு பங்கு இருப்பதாகச் சொன்ன விஎச்பி தலைவர் கேகா சாஸ்திரி என்பவரை, பாஜக தலைவர்கள் புகழ்ந்து பேசினர். மத வன்முறைக்கு பாஜக வெளிப்படையான ஆதரவு அளிப்பதை காட்டுகிறது.
• 2018: அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு வரவேற்பு (குஜராத்) - 2007ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாவேஷ் படேலுக்கு, பாஜகவும், விஎச்பியும் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தன. இதன் மூலம், இந்துத்துவா பயங்கரவாதத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க மனநிலை உருவாக்கப்படுகிறது.
• 2018: கும்பல் கொலைக் குற்றவாளிக்கு பாராட்டு விழா நடத்திய அமைச்சர்(ஜார்க்கண்ட்) - ஜார்க்கண்ட் மாநிலத்தில், நிலக்கரி வணிகர் அலிமுதீன் அன்சாரியைக் கொடூரமாக அடித்துக் கொன்ற குற்றவாளிகளுக்கு ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அவர்கள் மாலை அணிவித்து கௌரவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம், வன்முறைக் கும்பல்களுக்கு அரசின் ஆதரவு இருப்பதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
• 2018: கத்துவா பாலியல் வல்லுறவு வழக்கு(ஜம்மு) - ஜம்முவில், எட்டு வயது நிரம்பிய சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக பாஜகவின் முக்கிய தலைவர்களும், இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினரும் சேர்ந்து பேரணி நடத்தினர். இதன் மூலம், மத அரசியலைப் பயன்படுத்தி கொடூரமான பாலியல் வன்முறையை நியாயப்படுத்த அவர்கள் முயன்றனர்.
• 2013: முசாபர்நகர் கலவரக் குற்றவாளிகளுக்கு பாராட்டு விழா(உத்தர பிரதேசம்) - முசாபர்நகர் கலவரத்தில் முக்கிய குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட சங்கீத் சோம், சுரேஷ் ராணா ஆகியோரை பாஜகவின் மனித உரிமைப் பிரிவு பாராட்டியது. இந்த கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து நிர்கதியாக நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
• 2018: கலவரக் குற்றவாளிகளுக்கு அமைச்சரின் நேரடி ஆதரவு (பீகார்) - பீகார் மாநில அமைச்சர் கிரிராஜ் சிங், கலவரக் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து, அவர்கள் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
• 2014: கொலைக் குற்றவாளிகளுக்கு இந்துத்துவ வீரதீர விருது வழங்கப்பட்டது(மகாராஷ்டிரா) - புனே நகரைச் சேர்ந்த ஐடி ஊழியர் மொஹ்சின் ஷேக்கைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்து ராஷ்ட்ர சேனா அமைப்பின் தலைவர் தனஞ்சய் தேசாய்க்கு இந்துத்துவா அமைப்புகள் விருது வழங்க திட்டமிட்டன. இதன் மூலம் வன்முறைக் குற்றவாளிகளை வெளிப்படையாக வணக்கத்திற்கு உரியவர்களாக மாற்றியுள்ளனர்.
சிறுபான்மையினர், ஊடகவியலாளர்கள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அரசியல் ஆதரவு வழங்குவது, சமூக ஊடகங்களில் புகழாரம் சூட்டுவது உட்பட, இந்துத்துவா கும்பல்கள் அவர்களை வீரர்கள் போலக் கொண்டாடுகின்றன. இத்தகைய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்களை வெளிப்படையாகக் கௌரவிப்பது வெறும் சட்டப்பிரச்னை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கே ஒரு பாரிய அச்சுறுத்தலாகும்.
இந்தியாவில் நடைபெறும் வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கையை ஒரு வரைபடம் மூலம் காட்சிப்படுத்தலாம்.
கொலை பாதக வெறுப்புணர்வை இயல்பாக்குவதன் ஆபத்து
இன்றைய இந்தியாவில், இந்துத்துவா எனும் சித்தாந்தத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவோர் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பெருமளவில் மதிக்கப்படுகிறார்கள் என்பதை இத்தகைய பொதுவெளி கொண்டாட்டங்கள் அப்பட்டமாக உணர்த்துகின்றன. குற்றவாளிகளை வெளிப்படையாகக் கொண்டாடுவதன் மூலம், இத்தகைய கொடூர செயல்கள் எவ்விதத் தடையும், தண்டனையும் இன்றித் தொடர வேண்டும் என்பதில் இந்துத்துவா ஆதரவாளர்கள் விடாப்பிடியாக உள்ளனர்.
வெறுப்பைப் பரப்புவோரைக் அரசாங்கம் அடக்கத் தவறுவது, தீவிரவாத வன்முறைக் கலாச்சாரத்தை மறைமுகமாக ஆதரிப்பதாகவே கருதப்படும். வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்பும் குற்றவாளிகள் ஒவ்வொரு முறை கொண்டாடப் படும்போதும், இந்துத்துவா கும்பல்கள் மேன்மேலும் துணிச்சலுடன், இந்தியாவின் மதச் சார்பின்மை, கலாச்சாரப் பன்முகத்தன்மை, ஜனநாயகம் போன்ற நாட்டின் அடிப்படை விழுமியங்களையே தகர்க்கத் துணிகின்றன. தற்போது கேள்வி என்னவென்றால், ஒவ்வொரு வழக்குகளில் நீதி கிடைக்குமா என்பதல்ல; மாறாக, இந்தியா தன்னைச் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடாக இன்னும் சொல்லிக்கொள்ள முடியுமா, அல்லது இந்துத்துவா என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை கும்பல் ஆட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டதா என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வியாகும்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://theaidem.com/en-gauri-lankesh-kalburgi-murder-accused-felicitated-and-celebrated-in-karnataka/